Friday, 14 December 2018

இலங்கையில் நடக்கும் மைத்திரி ரணில் நானா? நீயா? போட்டியின் பின்னணி என்ன?

இலங்கை அரசியலில் திடீர் புயல் ஒன்று மையம் கொண்டது. அதன் விளைவு யாரும் எதிர்பாராத நேரத்தில் இலங்கை உளவு படைக்கும் தெரியாமல் மகிந்தவை பிரதமராக்கும் நிலை வந்தது.


இலங்கை பொலிஸார் தொட்டு உளவுத் துறையும் ரணிலின் கட்டுப்பாட்டில் இருந்தும் இந்த நகர்வை அவர்களால் அறிய முடியாமல் போய் விட்டது.
இவைகள் எல்லாவற்றையும் விட அதிபர் மைத்திரியின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் ஒருவர் உள்ளார்.
அவர் ரணிலின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்து வடக்கில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் ரணிலின் அபிமான விசுவாசி. வெளிநாட்டு பயிற்சி பெற்றவர் இவர் மைத்திரியுடன் இருந்தும் இந்த நகர்வை அவரால் கண்டுப்பிடித்து ரணிலுக்கு அந்த தகவலை கொடுக்க முடியாமல் போய் விட்டது.
ரணிலை நீக்கி மகிந்தவை பிரதமராக்க வேண்டும் என்று அதிபர் விரும்பவில்லை என்பது வேறு கதை. அதனால் ஐக்கிய தேசியக் கட்சி அணியில் இருந்து சஜித் பிரேமதாச, கரு ஜெயசூரிய ஆகியோரை பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு பலமுறை அதிபர் கோரிய போதும் யாரும் அதிபருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று பகிரங்கமாகவே அதிபர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் இருந்து மகிந்தரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஒரு நகர்வு செய்யபட்டது. அந்த நகர்வு என்னும் மையம் கொண்ட புயல் இன்னும் இலங்கையை விட்டு நகரவில்லை.
நானா? நீயா? போட்டியின் உள்நோக்கம் என்ன என்று நாம் உற்று நோக்கினால் அது சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இலாப நோக்கம் கொண்டது.
அதாவது கிழக்காசியாவின் உற்பத்தி மையங்களுக்கும் ஆபிரிக்க மற்றும் கிழக்கு நாடுகளின் கொள்வனவு சந்தைக்கும் இடையிலான கடல்வழிப் பாதையின் முக்கிய கேந்திர தளமாக / நிலையமாக இலங்கை அமைந்துள்ளதால் இலங்கையில் நிரந்தரமாக காலூன்ற வேண்டிய தேவை சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்டுள்ளன.
அதற்காக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஆதரவான நாடாக அல்லது நெருக்கமான அல்லது ஆதிக்கம் செலுத்தக்கூடிய நாடாக இலங்கையை இரண்டு நாடுகளும் மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அந்தப் போட்டியே இன்று இலங்கையில் நானா? நீயா? என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதில் இந்தியாவின் நலன் என்ன? இலங்கையில் தனது பரம எதிரி சீனா ஆதிக்கம் செலுத்துவது என்பதானது அது எப்போதும் தனக்கு ஆபத்து என்பது இந்தியாவின் கணக்கு. அத்துடன் சீனா தனது ஆதிக்கத்தை நேபாளம், மியன்மார், பாகிஸ்தான் வரை தனது அகலக்காலை பதித்து விட்டது. இப்போது எஞ்சி இருப்பது இலங்கை மட்டுமே.
அதனால் அமெரிக்காவோடு இந்தியா ஒத்துப்போக வேண்டிய தேவை வந்துள்ளது. அதனால் சீனாவின் ஆதிக்கம் இல்லாமல் அமெரிக்காவின் ஆதிக்கம் இலங்கையில் அமைவது இந்தியாவுக்கு ஆபத்தில்லை பாதகமில்லை என்று இந்தியா ஒரு கணக்கு போட்டுள்ளது.
இலங்கையில் மிக அதிகளவு சீனா முதலீடு செய்துள்ளன. சீனாவின் யுவான் பணத்துடன் இந்தியப் பணம் ஈடுகொடுக்க முடியாமல் உள்ளன.
இலங்கை அரசியல் புயலில் இந்தியா நேரடியாக சிக்காமல் மிக அமைதியாக நிலைமையை மிக அவதானமாக பார்த்துக்கொண்டுள்ளது.
ஆனால், அமெரிக்கா நேரடியாக இலங்கையில் மூக்கை நுழைத்துள்ளதால் அமெரிக்காவின் நேச நாடுகளும் இலங்கை அரசியல் புயலை கரை கடக்க வைக்க பல முயற்சிகள் எடுத்து வருகின்றன.
அதனால், இலங்கை அரசியல் புயல் என்பது நானா? நீயா? என்ற போட்டியுடன் சீனாவுக்கும் – அமெரிக்காவுக்கும் யுவான் டாலர் போட்டியே ஒழிய இது ரணில் மைத்திரி மோதல் அல்ல. ஆனாலும், இலங்கை அரசியலை பொறுத்த மட்டில் சீனா அமெரிக்கா என்ற மோதல் என்றாலும் ஒரு பதவி ஆசை மோகம் கொண்ட போட்டி தான்.
ஆனால் இங்கு அமைதியான முறையில் சீனா தனது பணத்தைக் கொண்டு இலங்கையில் சாதிக்கும் தனது பலதில் அது நிருபிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ரசிகர்களும் முக்கியமல்ல... மக்களும் முக்கியமல்ல: நியாயமா ரஜினிகாந்த்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வயது  69 ஆகிறது. இந்த வயதில் நடிகர் அமிதாப்பச்சனெல்லாம் தாத்தா வேடம் ஏற்ற நிலையில், இன்றும் இளமை குன்றாமல், கண்ணாடியை ஸ்டைலாக சுழற்றி போட்டபடி பட்டையை கிளப்புகிறார் ரஜினி.


தனது பிறந்தநாளில் வழக்கமாக அவர் சென்னையில் இருப்பதில்லை. இமயமலை வாசத்தை தேடி புறப்பட்டுவிடுவார். ஒருமாறுதலாக, இம்முறை மும்பை பறந்திருக்கிறார். ரசிகர்களை கூட சந்திக்க மறுத்து மும்பை பறந்தது ஏன்? என்கிற கேள்வி ரிலையன்ஸ் நிறுவனத்தின் அழைப்பிதழில் ஒளிந்திருக்கிறது.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் இஷாவிற்கும், பிரமால் நிறுவனத் தலைவர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த்திற்கும் டிசம்பர் 12-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக, டிசம்பர் 8, 9ம் தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமண வீட்டாரின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன், உள்துறை செயலாளர் ஜான் கெர்ரியில் தொடங்கி, நமது ஊர் சல்மான், ஷாருக், அமீர் கான்கள் வரையில் முக்கிய பிரபலங்கள் அனைவரும் படையெடுத்தனர். இரண்டு நாட்கள் உதய்பூரையே குலுக்கிய அம்பானி குடும்ப திருமண விழா, தற்போது மும்பையை மையம் கொண்டுள்ளது. மும்பையிலுள்ள அம்பானியின் ஆண்டிலியா வீட்டில் தான் இஷா – ஆனந்த் ஜோடியின் திருமணம் நடைபெறுகிறது.
மும்பையின் பெடார் சாலையிலுள்ள இந்த 27 மாடி வீடு, இங்கிலாந்து மகாராணி வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்ததாக உலகின் மிக மதிப்புமிக்கதாகும். இதன் முதல் ஆறு தளங்கள் கார்கள் நிறுத்துவதற்காக மட்டுமே பயன்படுகின்றன. ஹெலிகாப்டர் இறங்கும் வசதி, தோட்டம், நீச்சல் குளங்கள் என சகல வசதிகளாலும் நிரம்பிய இவ்வீட்டை பராமரிக்க 600 பணியாளர்கள் 24 மணிநேரமும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இப்பிரம்மாண்ட வீட்டில் தான் அம்பானி குடும்ப திருமணம் நடைபெற்றது.
திருமண விழாவில் பங்கேற்க, தங்களுக்கு மிக மிக நெருக்கமான 600 பேருக்கு மட்டுமே அம்பானி குடும்பத்தார் அழைப்பிதழ் அனுப்பியுள்ளனர். அதில் நடிகர் ரஜினிகாந்தும் ஒருவர். இன்னும் சொல்லப் போனால், தமிழ்நாட்டில் அழைப்பிதழ் பெற்ற ஒரே நபர் ரஜினி மட்டும் தான். இவ்விழாவில் பங்கேற்கத் தான், தனது பிறந்தநாளில் ரசிகர்களை சந்திப்பதையும் தவிர்த்துவிட்டு மும்பை பறந்துள்ளார்.
அரசியலில் இறங்கிவிட்டதாக அறிவிப்பாணை வெளியிட்டு ஒருவருடம் முடியும் தருவாயிலும், இதுவரை தீவிர அரசியலில் ரஜினி ஈடுபடவில்லை. டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பாதித்த பகுதிகளை நடிகர் கமல்ஹாசன் கூட சுற்றி வந்துவிட்டார். ஆனால், சென்னை நகர எல்லையை கூட ரஜினி தாண்டவில்லை. தனது மன்றத்தின் மூலமாக பல்வேறு உதவிகளை ரஜினி வழங்கி வந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க வராதது விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள் என நடிகர் அமிதாப் பச்சனிடம் மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையேற்று, வீடியோ ஒன்றை வெளியிட்ட அமிதாப், கஜா புயல் சேதங்களை பட்டியலிட்டு, சகோதரத்துவத்தை உணர்த்த கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அமிதாப் சொல்லி லட்சம் லட்சமாக குவியப் போவதில்லை என்றாலும், தேசிய அளவில் புகழ்பெற்ற நடிகர் ஒருவர் ஒரு விஷயத்தை கூறும்போது, அவ்விஷயம் தேசிய அளவில் கவனம் பெறும். நடிகர் கமல்ஹாசன் அதற்கான முயற்சியை தான் அமிதாப் மூலமாக செய்தார். இதே முயற்சியை ரஜினி ஏன் செய்யவில்லை? என்பது தான் கேள்வி.
“ஒரு சொட்டு வியர்வைக்கு, ஒருபவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா?”, என பாடி நடித்தவர், டெல்டா மாவட்டங்களில் ஒரு ரவுண்ட் அடித்திருந்தால், தேசிய அளவில் கஜாவின் பாதிப்பு வெளிச்சமாகியிருக்கும் என்பது எதார்த்தம். நிவாரண தொகையை உயர்த்தி வழங்குவதற்கு மத்திய அரசுக்கும் அழுத்தம் ஏற்பட்டிருக்கும். அவர் வெறும் நடிகராக மட்டுமே இருந்திருந்தால், மக்களிடம் இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்காது. அரசியல் களத்திற்கு வந்துவிட்டதாக அறிவித்துவிட்டு, என்ன? ஏது? என்று கூட எட்டிப்பார்க்காதது தான் மக்களிடையே விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
தற்போது, ‘2.0’ படத்திற்காக வீதிக்கு வீதி போஸ்டர் அடித்து, பேனர் கட்டிய தனது ரசிகர்களை தன் பிறந்தநாளன்று கூட சந்திக்காமல், அம்பானி வீட்டு விஷேசத்திற்காக ஓடியது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக கிளம்பியுள்ளது. மக்கள் அல்லல்படும் போது வந்து நிற்காதவர், போர் வரும்போது வருவேன் என்பது எதற்காக? அது ஓட்டு அரசியல் ஆகாதா? இது முறையா என்பது ரஜினிக்கே வெளிச்சம்.

Monday, 3 December 2018

அனல் குரலுடன் மீண்டும் வாருங்கள் விஜயகாந்த்: ஒரு உருக்கப் பதிவு

சட்டமன்றத்திலேயே ஜெயலலிதா முன்பு ‘தில்’ காட்டியவர், மனதில் பட்டதை பட்டென்று பேசுபவர், முன் கோபக்காரர் என பல்வேறு பாராட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் சொந்தக்காரர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். சில ஆண்டுகளாகவே உடல் நலத்தில் தீவிர அக்கறை காட்ட வேண்டியவராக இருக்கிறார்.

2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு போய் வந்தார். அங்கிருந்து வந்த கையோடு தேர்தல் பிரச்சாரத்தில் குதித்தார். எனினும் அந்தத் தேர்தலிலேயே பிரேமலதாதான் அதிக மாவட்டங்களில் சுற்றிச் சுழன்றார்.
அத்தேர்தலில் தேமுதிக தோல்வியை தழுவியிருந்தாலும், விஜய்காந்த் மனம் தளரவில்லை. ஜூலை 9-ம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு, சிறுநீரகம் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேல்சிகிச்சைக்காக அம்மாதமே மீண்டும் சிங்கப்பூர் பறந்தார்.
2016 சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்த பின்னர், அவர் தனது உடல்நலம் மீது மேலும் அக்கறை காட்ட வேண்டியவரானார். 2017 மார்ச் மாதம் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், தொடர்ந்து 10 நாட்கள் சிகிச்சையில் இருந்தார். நவம்பர் இறுதியில் மீண்டும் சிங்கப்பூர் பறந்தார். மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்த போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகின.
இதன் தொடர்ச்சியாக, டிசம்பரில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போது, வேனில் இருந்தபடியே பிரச்சாரம் செய்தார். எனினும் விஜயகாந்தின் உடல் நலம் இன்னமும் மேம்படுத்த வேண்டிய நிலையிலேயே இருக்கிறது. எண்ணத்தில் உள்ளதை வார்த்தையில் வடிக்க முடியாத சிரமமும் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தாண்டு ஜூலையில் குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார். உடல்நலன் ஓரளவு தேறி, மகன் சண்முகபாண்டியன், மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவின. அச்சமயத்தில் கலைஞர் மறைந்த செய்தி கேட்டு, அவர் கண் கலங்கிய வீடியோவும் வைரல் ஆனது. அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன், நேராக கருணாநிதியின் சமாதிக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தியதும் அனைவரது நெஞ்சையும் நெகிழச் செய்தது.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தாலும், பழைய மாதிரி அவரது பேச்சு சரியாக வருவதில்லை. விஜயகாந்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, மகளிரணியை கவனித்து வந்த பிரேமலதாவிற்கு பொருளாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. மகன் விஜயபிரபாகரனும் அரசியல் அரிதாரம் பூசத் தொடங்கிவிட்டார்.
தற்போது விஜயகாந்த் சில பரிசோதனைகளுக்காக ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக தேமுதிக வட்டாரத்தில் கூறுகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் ஆஸ்திரேலியா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டிசம்பர் 2-ம் தேதி கோயம்பேட்டிலுள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிகவின் புதிய இணையதளத்தை விஜயகாந்த் தொடங்கி வைத்தார். பல்வேறு அணிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளும் அவரிடம் வாழ்த்து பெற்றனர்.
அரசியல் ரீதியாக விஜய்காந்த் மீது விமர்சனங்கள் இருக்கலாம். தனிப்பட்ட வகையில் அவர் எப்பேற்பட்ட மனிதர் என்பது பழகியவர்களுக்குத் தெரியும். 90-களில் சினிமாக் கனவுகளுடன் கோடம்பாக்கம் வீதியில் அலைந்து திரிந்தவர்களுக்கு அட்சயப் பாத்திரமாக அமைந்தது அவரது அலுவலகம்! அன்று எதையும் எதிர்பார்த்து அதை அவர் செய்யவில்லை.
அரசியலுக்கு வந்த பிறகும் மனதில் பட்டதை சட்டென்று பேச்சில் உடைத்தெறியும் விஜயகாந்தின் குரலை கேட்க அவரது கட்சியினர் மட்டுமல்ல, தமிழகமே காத்திருக்கிறது. மீண்டும் அனல் தெறிக்கும் சிம்மக் குரலோடு வாருங்கள் கேப்டன்!

Saturday, 1 December 2018

ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ்ஷின் வாழ்க்கை

போர் கதாநாயகனும், அரசியல்வாதியின் மகனுமான ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ், அரசியல் தொழில்முறை வாழ்க்கையில் உயரிய திறமை கொண்டிருந்தவர். 1960களில் பிரதிநிதிகள் அவையில் இருக்கையை வென்று தேசிய அரசியலில் முதல்முறையாக கால் பதித்தார்.தனது அரசியல் பார்வையில் தன்னைவிட முற்போக்கு எண்ணம் கொண்டிருந்த மனைவி பார்பரா, ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷூக்கு ஆதரவாக தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் கீழ் பல்வேறு ராஜிய பதவிகளில் பணிபுரிந்த பின்னர், ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ்ஷின் வளர்ச்சி மிக வேகமாக இருந்தது.

1976ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜெரால்டு ஃபோர்டு இவரை மத்திய உளவுத்துறை இயக்குநராக நியமித்தார்.

1980ம் ஆண்டு குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக முயற்சித்தபோது ரோனால்டு ரீகன், ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ்ஷை தோற்கடித்தார்.

1980கள் முழுவதும் ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ் துணை அதிபராக பணியாற்றினார்.1988ம் ஆண்டு அதிபர் தேர்தலில் பெற்ற வெற்றியால் அவரது அரசியல் வாழ்க்கை உச்சத்தை தொட்டது. இறுதியில் ரீகன்தான் ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ்ஷிடம் ஆட்சி அதிகாரத்தை கையளித்தார்.

ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ்ஷின் ஆட்சிக்காலத்தில் வெளியுறவு கொள்கையில் பெற்ற வெற்றிகள் பெரிதும் குறிப்பிடப்படுபவை.

  • அமெரிக்காவுக்கு சர்வதேச நிலையை, வியட்நாம் போரில் ஏற்பட்ட பாதிப்புகளை மீட்டெடுத்த பெருமையை விமர்சகர்கள் ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷூக்கு வழங்குகின்றனர்.

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்தபோது, ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ் சோவியத் யூனியன் மற்றும் மிகாயில் கார்பச்சேஃவோடு நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டார்.

அவருக்கு முந்தைய அமெரிக்க அதிபரான ரோனால்ட் ரீகன் ரஷ்யாவை "தீய பேரரசு" என்று கூறியிருந்தார்.

ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷின் வெளியுறவு கொள்கை முதலாவது வளைகுடா போரால் வரையறுக்கப்பட்ட மனஉறுதியை அதிகரித்து ஈராக் மீதான வெற்றியோடு நிறைவடைந்தது.

ஆனால், 1992ம் ஆண்டு அதிபர் தேர்தல் பரப்புரை, வரி விதிப்பில் மற்றம் உள்பட அவரது உள்நாட்டு கொள்கைளால் தடம்புரண்டது. இறுதியில் பில் கிளிண்டனுக்கு எதிரான போட்டியில் ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ் தோல்வியை தழுவினார்.

புஷ்ஷின் அரசியல் பாரம்பரியம் ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ் பதவியை விட்டு சென்ற பின்னரும் நீண்டகாலம் தொடர்ந்தது,

2000ம் ஆண்டு அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட அவரது மகனான ஜார்ஜ் டபிள்யூ புஷ் 2 பதவிக்காலம் அதிபராக பணியாற்றினார்.

அமெரிக்க பொது வாழ்வில் சிறந்த பங்களிப்பு வழங்குவதை ஜார்ஜ் புஷ் சீனியர் தொடர்து வந்தார்.

2011ம் ஆண்டு ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷூக்கு சுதந்திர பதக்க விருதை அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வழங்கி கௌரவித்தார்.
2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணியான பார்பரா புஷ் தனது 92வது வயதில் காலமானார்.

இந்த தம்பதியர் 70 ஆண்டுகளுக்கு மேலாக திருமண பந்தத்தில் இணைந்து வாழ்ந்தவர்கள்.

93 வயதான முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ் டெக்ஸாஸின் ஹூஸ்டனில் தனது மனைவிக்கு இறுதி சடங்குகள் நிறைவேறிய அடுத்த நாளே சுகவீனமடைந்தார்.

அங்கு அமெரிக்காவின் முன்னாள் 3 அதிபர்கள் மற்றும் முன்னாள் முதல் பெண்மணிகளோடு ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த புகைப்படத்தில் லௌரா புஷ், ஜார்ஜ் டபிள்யூ புஷ், பில் கிளிண்டன், ஹிலரி கிளிண்டன், பராக் ஒபாமா மற்றும் மிஷேல் ஒபாமா ஆகியோர் உள்ளனர்.

தற்போதைய அமெரிக்க முதல் பெண்மணியான மெலானியா டிரம்பும் இதிலுள்ளார். இந்த இறுதி சடங்கில் அதிபர் டிரம்ப் கலந்துகொள்ளவில்லை.

Tuesday, 27 November 2018

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் சர்வதேச ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தற்போதைய நிலவரம் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
வடபோர்முனைக் கட்டளைத்தளபதி பிரிகேடியர் தீபன், லெப்ரினன் கேணல் கில்மன் ஆகிய இரு மாவீரர்களின் தந்தையாரான கந்தையா வேலாயுதபிள்ளை பிரதான ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தம்மையே ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களிலும், புலம் பெயர் தேசங்களிலும் மிகவும் உணர்வெழுச்சியாக நடைபெற்றுள்ளன.
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். இதில் சர்வதேச ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
கடந்த 2008 தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் தாயகப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனிப்பிற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு நிலப்பரப்பில் வாழ்ந்த தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். பலர் காணாமலும் ஆக்கப்பட்டனர்.

மீள்குடியேற்றப்பட்டதன் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டுவரை தமிழ் மக்கள் தமது உறவுகளான மாவீரர்களை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்தமுடியாத இராணுவ அச்சுறுத்தல்களும் அடாவடிகளும் காணப்பட்டன.
அக்காலப் பகுதிகளிலும் மாவீரர் நாளான நவம்பர் 27 ஆம் திகதி இராணுவ அச்சுறுத்தலை தாண்டி தமது உறவுகளுக்கு சுடரேற்றி உணர்வோடு நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்தி வந்தனர்.
தொடர்ந்து வந்த காலங்களில் தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்த மகிந்தவின் ஆட்சி அகற்றப்பட்டு இலங்கை அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதனையடுத்து இராணுவ அடாவடிகள் ஓரளவுக்கு ஓய்வடைந்தன .

தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவ முகாம் அமைத்துத் தங்கியிருந்த இராணுவத்தினர் சில மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து விலகிச் சென்றனர்.
ஆனாலும், இராணுவ அச்சுறுத்தல்களும் ஒட்டுக்குழுக்களின் அடாவடிகளும் அகலாது தொடர்ந்தன.
இந்நிலையில் தமது உறவுகளை அவர்களுக்குரிய வணக்க இடமான மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாளான நவம்பர் 27 அன்றைய தினம் சுடரேற்றி வணக்கம் செலுத்துவதற்காக, கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்த பற்றைக் காடுகளை அகற்றுவதற்காக சு.பசுபதிப்பிள்ளை தலைமையிலான 15 பேர் அடங்கியோர் பல அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது தற்துணிவுடன் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

அச்செய்தி அனைவருக்கும் தெரியவர தமது உறவுகளை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச் செல்லக் காத்திருந்த மாவீரர்களின் உறவுகள் திரண்டு வந்து மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.
இச்செய்தி பரவியதும் தாயகத்திலுள்ள பல பாகங்களிலும் காணப்படும் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் சிரமதானப் பணிகள் இடம்பெற்று இராணுவத்தினரால் சிதைத்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் மீண்டும் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் உணர்வெழுச்சியாக மாவீரர்களுக்குச் சுடரேற்றி துயிலுமில்ல மரபுகளின்படி வணக்கம் செலுத்திவருகின்றனர்.
இதேவேளை, தமிழ் மக்களின் உள்ளத்து உணர்வுகளிலிருந்து அழிக்க முடியாத நினைவெழுச்சி வணக்க நாளாக தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிறைந்துள்ளது.


Monday, 26 November 2018

யாழ். பல்கலை.யில் பிரபாகரன் பிறந்தநாள் – வல்வையில் காவல்துறை கெடுபிடி

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றுஉலகின் பல்வேறு நாடுகளிலும், தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் பல்வேறு இடங்களிலும், கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

யாழ். பல்கலைக்கழகத்தில் ஆங்காங்கே வே.பிரபாகரனின் கருத்துக்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அத்துடன் நள்ளிரவில் மாணவர்களால் பிரபாகரனின் பாரிய உருவப்படம், வைக்கப்பட்டு, கேக் வெட்டி கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில், அவரது வீடு இருந்த இடத்துக்கு முன்பாக உள்ள வீதியை இன்று காலை துப்புரவு செய்த நான்கு இளைஞர்களின் அடையாள அட்டைகளை சிறிலங்கா காவல்துறையினர் பறித்துச் சென்றனர்.
அத்துடன், அந்தப் பகுதியில் காவல்துறையினர் அதிகளவில் நிறுத்தப்பட்டு வீதியால் சென்றவர்களும் சோதனையிடப்பட்டனர்.
இந்த நிலையில், வல்வெட்டித்துறை தீருவில் திடலில் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, கேக் வெட்டி கொண்டாடத் தயாராக இருந்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கோ.கருணானந்தராசா உள்ளிட்ட 7 பேர்  வல்வெட்டித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
வல்வெட்டித்துறை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட இவர்கள், வழக்குத் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறி விடுவிக்கப்பட்டனர்.


Friday, 23 November 2018

பரபரப்பாக்கும் ‘மறுத்தான்’ ஆட்டங்கள்

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்ட அரசியல் குழப்பங்கள், நாடாளுமன்றத்துக்கு உள்ளே தான், பலமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, நாடாளுமன்றத்தையும் கலைத்து விட்டால், எல்லாத் தடைகளும் நீங்கி விடும், புதிதாகத் தேர்தலை நடத்தி, ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று போடப்பட்ட திட்டம், இப்போது முட்டுச்சந்தியில் வந்து நிற்கிறது.
மஹிந்த - மைத்திரி தரப்புக்கு, அங்குமிங்குமாக எங்கு திரும்பினாலும், ஒரு முட்டுக்கட்டை வந்து விடுகிறது. 

நாடாளுமன்றத்துக்குச் செல்லாமலேயே, வெட்டியாடி விடலாம் என்று போடப்பட்ட கணக்கு, பிசகிப்போனதால், இப்போது நாடாளுமன்றத்துக்குள் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் ஒன்றுக்கு இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையிலும், கீழிறங்க மறுத்து, பிரதமராக நீடித்திருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது அமைச்சரவையும் எப்படியும் தமது நிலையைக் காப்பாற்றி விட வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் நாடகங்களும், இதை முடக்கிப்போட எதிர்க்கட்சிகள் நகர்த்தும் காய்களும், இலங்கை அரசியலை உச்சக்கட்டப் பரபரப்புக்கு  உள்ளாக்கியிருக்கின்றன.
அரசமைப்பிலும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளிலும் உள்ள ஓட்டைகளுக்குள்ளாலும், சந்து பொந்துகளுக்குள்ளாலும் நுழைந்து, தப்பித்துக் கொள்வதற்கு, இரண்டு தரப்பும் முண்டியடித்து முயற்சிக்கின்றன.

மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பு, நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மை பலத்தை, இப்போதைக்கு நிரூபிக்காமல், காலம் கடத்தவே விரும்புகிறது. இதை உணர்ந்து கொண்டே, ஐ.தே.க, எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்தது.

முன்னதாக, மஹிந்த ராஜபக்‌ஷவின் நியமனம் சட்டத்துக்கு முரணானது என்றே வாதிட்டு வந்தது ஐ.தே.கட்சி. அதுபோலவே, சபாநாயகரும் “மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, பிரதமர் ஆசனத்தை வழங்க முடியாது;  அவரது தரப்பினருக்கும் ஆளும்கட்சி ஆசனம் வழங்க முடியாது” என்றே கூறினார்.
ஆனால், நாம் விரும்பிய நேரத்தில், பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று மஹிந்த தரப்புக் கூறியதால், வேறு வழியின்றிப் போராட்டத்தின் போக்கை மாற்ற வேண்டியிருந்தது.

பிரதமரைப் பதவி நீக்கியது செல்லாது, மஹிந்த ராஜபக்‌ஷவின் நியமனம் சட்டத்துக்கு முரணானது என்று முரண்டு பிடித்து வந்த ரணில் விக்கிரமசிங்க தரப்பு, மஹிந்த ராஜபக்‌ஷவின் நியமனத்தை, ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவானது.மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்ததை ஏற்றுக்கொண்டால்தான், நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரமுடியும். 

மஹிந்தவுக்குப் பெரும்பான்மை பலம் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டுமாயின், நம்பிக்கையில்லாப் பிரேரணை முக்கியம். அதைக் கொண்டுவர வேண்டுமாயின்,  மஹிந்தவின் நியமனத்தை ஏற்க வேண்டும்.
இதனால் தான், வேறுவழியின்றி சபாநாயகரும், ரணில் விக்கிரமசிங்கவும் பிரதமர் ஆசனத்தை, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்க இணங்கினர். அதுவே இப்போது, ஐ.தே.கவுக்குத் தலைவலியாக மாறியிருக்கிறது..

“நாங்கள் தான் ஆளும்கட்சி” என்று கூறிக்கொண்டு, தற்போதைய நாடாளுமன்றத்தில், புதிய தெரிவுக்குழுவில் தமக்கு ஏழு ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று, ஒற்றைக்காலில் நிற்கிறது மஹிந்த தரப்பு. இந்தத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டால் தான், நாடாளுமன்ற அமர்வை சுமுகமாகக் கொண்டு நடத்த முடியும். ஆனால்,  ஐ.தே.கவோ இதை விட்டுக்கொடுக்கும் நிலையில் இல்லை.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்காக, பிரதமராக ஏற்றுக்கொண்ட மஹிந்தவை இப்போது, ‘போலி பிரதமர்’ என்கிறது ஐ.தே.க. இந்தநிலையில், அவர்களின் தரப்புக்குத் தெரிவுக்குழுவில் ஏழு பேருக்கு இடமளித்தால், நாடாளுமன்றத்தில் தமது மேலாதிக்கம் இழக்கப்பட்டு விடும், தாம் முன்வைக்கும் பிரேரணைகள் இழுத்தடிக்கப்படவோ, முடக்கப்படவோ வாய்ப்புகள் உள்ளன என்று கருதுகிறது அந்தக் கட்சி.

இதனால் தான், நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரால் பிரதமர், அமைச்சரவை, அவைத்தலைவர், அரசதரப்பு பிரதம கொரடா என்று யாரும் பதவியில் இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் எந்தத் தரப்பும் ஆளும்கட்சி கிடையாது. எனவே, அவர்களுக்கு ஏழு ஆசனங்களைக் கொடுக்க முடியாது என்ற வாதத்தை ஐ.தே.க, முன்வைத்திருக்கிறது.

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் தான் உச்சஅதிகாரம் கொண்டவர். அவர் எடுக்கும் முடிவே இறுதியானது. அதில் யாரும் தலையிட முடியாது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை, சபாநாயகர் அங்கிகரித்திருப்பினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனாலும், சபாநாயகரின் உத்தரவு, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த ஹன்சார்ட் பதிவுகள் எல்லாமே சட்டரீதியானவை என்பதால், மஹிந்த தரப்பு ஆளும்கட்சியாக அங்கிகாரம் கோர முடியாது என்ற வாதம், ஐ.தே.கவால் முன்வைக்கப்படுகிறது.

இதனால், தெரிவுக்குழு நியமனத்தில், நாடாளுமன்றத்தில் மீண்டும் குழப்பங்கள் உருவாகக் கூடிய சூழல், தோன்றி வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ தரப்புக்கு, அடுத்தடுத்து ‘செக்’ வைப்பதில், ஐ.தே.க தரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதி, மஹிந்த ராஜபக்‌ஷவின் பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை நிறுத்தி வைக்கும் பிரேரணையைச் சமர்ப்பித்து, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தது ஐ.தே.க.
அந்தப் பிரேரணை, மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பைக் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஏனென்றால், அரசமைப்புச் சட்டப்படி, அரசாங்க நிதியைக் கையாளும் பொறுப்பு, நாடாளுமன்றத்திடமே உள்ளது. அதன் அடிப்படையில் தான், இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஐ.தே.க, தமக்குப் பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிக்கவே, இந்த நிதிப் பிரேரணையைக் கொண்டு வந்திருக்கிறது. நிதிப் பிரேரணை ஒன்றில் தோல்வியடைந்தால், அமைச்சரவை பதவியிழக்கும் என்பது மரபு.

ஆனால், மஹிந்த தரப்போ, “நிதிப் பிரேரணைகளை அரசாங்கத் தரப்புத் தான் முன்வைக்க முடியும். எதிர்க்கட்சியால் அவற்றை முன்வைக்க முடியாது” என்றும் கூறுகிறது. 

தினேஷ் குணவர்த்தன, ஜோண் செனிவிரத்ன உள்ளிட்டவர்கள், இந்தக் கருத்தை முன்வைத்திருப்பினும், இந்த விடயத்தில், சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட வேண்டியுள்ளது என்றும், மஹிந்த சமரசிங்க போன்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள்  சிலர் கூறியுள்ளனர். ஆனாலும், இந்தப் பிரேரணை, 29ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு ஒழுங்குப்பத்திரத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால், மஹிந்த ராஜபக்‌ஷ பதவி விலக வேண்டுமோ இல்லையோ, அவரால், தொடர்ந்தும் தனது செயலகத்தை, அதிகாரபூர்வமாக நடத்திச் செல்ல முடியாது போகும். இதனால் தான், நாடாளுமன்றத்தில், இந்தப் பிரேரணை முன்வைக்கப்படும் போது, மீண்டும் குழப்பங்கள் வெடிக்கும் ஆபத்து இருக்கிறது.

இந்தச் சூழலில், மஹிந்த தரப்பின் மீது, அடுத்த பந்தை வீசியிருக்கிறது ஐ.தே.க. இது, எல்லா அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கும் வைக்கப்பட்டிருக்கின்ற ‘செக்’. நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அவர்களின் ஆளணியினருக்கான சம்பளம், சலுகைகள், வசதிகள் எதையும் வழங்குவதைத் தடுக்கும் நோக்கில், இந்தப் பிரேரணை, புதன்கிழமை (21) நாடாளுமன்றச் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரசாங்க செலவில் வெளிநாட்டுப் பயணங்களுக்களுக்கும் உள்நாட்டில் ஹெலிகொப்டர்களைப் பெற்றுக் கொள்வதற்கும் கூட, தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

இந்தப் பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, மஹிந்த தரப்பினர்  அமைதியாக இருப்பார்கள் என்று, எதிர்பார்க்க முடியாது.

எப்படியாவது கிடைத்த அதிகாரத்தை விட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் அவர்கள். அவ்வாறு அதிகாரம் கை விட்டுப் போனால், தமது திட்டம் தோல்வியில் முடிந்து விடும் என்பது அவர்களின் நிலைப்பாடு.

அதனால், ஏதோ ஒரு காரணத்தைக் கூறி, இந்தப் பிரேரணைகளில் இருந்து தப்பிக்க முனைகின்ற நிலையிலேயே மஹிந்த தரப்பு இருக்கிறது. ஐ.தே.கவின் ‘மறுத்தான்’ ஆட்டங்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்படும் போது, மஹிந்த தரப்பு வன்முறையை ஆயுதமாகக் கையில் எடுக்கும்.

நாடாளுமன்றத்தைக் குழப்பிக் கூச்சலிட்டு, சபையை நடத்த விடாமல் தடுக்கும் அராஜகம் அரங்கேறும். இதுதான் நடந்து வருகிறது இனியும் நடக்கப் போகிறது. நாடாளுமன்றத்தை பயனுள்ள வகையில் நடத்திச் செல்லும் திட்டம் ஏதும், மைத்திரி- மஹிந்த தரப்புகளுக்கு இருக்கவில்லை என்பது தெளிவாகிறது.

மாறி மாறி, ‘மறுத்தான்’ ஆட்டங்கள் ஆடப்படும் நிலையில், சபையில் குழப்பங்களை ஏற்படுத்தி, காலத்தை இழுத்தடிப்பது தான், அவர்களின் இப்போதைய இலக்காகத் தெரிகிறது.