Saturday, 24 March 2012

தவறாக சிக்க வைக்கப்பட்டுள்ளேன்... 2 ஜி வழக்கிலிருந்து விடுவியுங்கள்!- கனிமொழி



2 ஜி வழக்கில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத என்னை விடுவிக்க வேண்டும், என்று கனிமொழி எம்பி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கினை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மகளும் அக்கட்சி எம்.பி.யுமான கனிமொழி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் ஆ.ராசா மற்றும் அவரது உதவியாளர் தவிர மற்றவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். ராசா ஜாமீனுக்கு இன்னும் விண்ணப்பிக்கவே இல்லை. தன் மீது தவறில்லை என்றும், சட்டம் தன்னை விடுவிக்கும் வரை ஜாமீன் கோரப்போவதில்லை என்றும் அவர் கூறி வருகிறார்.

ஜாமீனில் வந்த அனைவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகி வருகின்றனர்.

கலைஞர் தொலைக்காட்சிக்காத ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ஆ.ராசாவுக்கு ரூ. 214 கோடி கொடுத்ததாகவும், அதற்கு பிரதிபலனாக ஸ்வான் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டதாகவும், இதில் கலைஞர் தொலைக்காட்சி இயக்குநரக் என்ற முறையில் கனிமொழிக்கு தொடர்பு உள்ளது என்றும் என சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் வழக்கில் தன்னை தவறாக சிக்கவைத்துள்ளதாகவும் இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கோரி கனிமொழி நேற்று மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "இந்த வழக்கில் நான் தவறாக சிக்கவைக்கப்பட்டுள்ளேன். கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்படும் காலத்தில், நான் கலைஞர் டி.வி.யின் பங்குதாரராக மட்டுமே இருந்தேன். அதன் நிர்வாக முடிவுகளில் நான் எந்த பங்கும் வகிக்கவில்லை. கலைஞர் டி.வி.யின் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவும் இல்லை.

ரூ.214 கோடி பண பரிவர்த்தனை தொடர்பான எந்த ஆவணத்திலும், ஒப்பந்தத்திலும் நான் கையெழுத்திட்டதில்லை. மேலும், கலைஞர் டி.வி.க்கு வந்த பணம், கடனாக பெறப்பட்ட பணம். அது திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது.

நீதிபதி செய்த மாபெரும் தவறு

சதித்திட்டம் தொடர்பான சட்டத்தை தவறாக புரிந்து கொண்டதன் அடிப்படையில், என் மீது சி.பி.ஐ. கோர்ட்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. ஸ்பெக்ட்ரம் லைசென்சை, ஏலத்தில் விற்பது இல்லை என்பது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) சிபாரிசுப்படி எடுக்கப்பட்ட முடிவு. அந்த முடிவில் கூட எனக்கு எந்த தொடர்பும் கிடையாது.

எனவே, என் மீது இ.பி.கோ. 120பி மற்றும் 409 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததன் மூலம், சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி மாபெரும் தவறு இழைத்து விட்டார்.

சதி செய்யவில்லை

ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ், அரசின் கொள்கைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நான் எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, நான் எந்த வகையிலாவது பலன் அடைந்தேன் என்றோ, ஒரு பைசா லஞ்சப் பணமாவது என் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது என்றோ ஒரு குற்றச்சாட்டும் கிடையாது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா உள்ளிட்டோருடன் சேர்ந்து நான் சதி செய்தேன் என்பதை நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. லஞ்சம் பெற்றதாக கூறப்படுவதற்கும் ஆதாரம் இல்லை.

விடுவிக்க வேண்டும்

ஆகவே, என் மீதான குற்றச்சாட்டுகளையும், குற்றப் பத்திரிகையையும் ரத்து செய்வதோடு, அதன் அடிப்படையில் நடைபெற்று வரும் சாட்சிகள் விசாரணையையும் ரத்து செய்ய வேண்டும். என்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு குறித்து கனிமொழியின் வழக்கறிஞர் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாதாடினார்.

இம்மனு, வருகிற 26-ந் தேதி - நாளை மறு நாள்- நீதிபதி எம்.எல்.மேத்தா முன்னிலையில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment