Tuesday 20 March 2012

மோசமாகச் சரியும் சிறிலங்கா நாணய மதிப்பு – தூக்கிநிறுத்தும் முயற்சி தோல்வி!



சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு இரண்டாவது வாரமாகச் சரிந்து வரும் நிலையில், நாணய மதிப்பிறக்கத்தைத் தடுக்க சிறிலங்கா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 125.50 ரூபாவாக இருந்தது. வாரஇறுதி விடுமுறையின் பின்னர் நேற்றுக்காலை வங்கிகள் திறக்கப்பட்டபோது, திடீரென டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு 127 ரூபாவாகச் சரிந்தது.

நேற்று மாலை இது 130.99 ரூபாவாக வீழ்ச்சியடைந்தது. டொலருக்கு நிகராக சிறிலங்கா ரூபாவின் மதிப்பு முன்னெப்போதும் இந்தளவுக்கு சரிந்தது கிடையாது. சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு குறைந்துள்ளதால், ஸ்ரேலிங் பவுண்ட்டின் மதிப்பு நேற்றுமாலை 207.82 ரூபா ஆகவும், யூரோவின் மதிப்பு 172.33 ரூபா ஆகவும் அதிகரித்தது.

தொடர்ந்து சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு குறைந்து வருவதால், சிறிலங்காவின் அரச மற்றும் தனியார் வங்கிகள் கையிருப்பில் உள்ள டொலரை விற்கத் தொடங்கியுள்ள போதும் நாணயப் பெறுமதி வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை. நாணய மதிப்பிறக்கத்தினால், பெரும்பாலான இறக்குமதிப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் ஆபத்து எழுந்துள்ளது.

அதேவேளை, நாணய மதிப்பிறக்கத்தினால், நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்று சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment