Thursday 29 March 2012

ஜேஆரை அடக்கிவைந்த இந்திராவும் மகிந்தவிடம் மன்றாடும் இந்தியாவும்:-ஆகஸ்ட் 22 ஆம் திகதி எழுதப்பட்ட தங்களது கடிதம் கிடைக்கப்பெற்றேன். அக்கடிதத்துடன் இணைக்கப் பட்டிருந்தவைகளைப் பார்த்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன்.

இந்திய ஜனதாக் கட்சி அரசாங்கம் நடப்பு இலங்கை அரசுக்கு ஆதரவாக இருக்கும் முகமாகத் தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் துன்பங்களை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ள அவர்கள் விரும்புவார்கள் என நான் கருதவில்லை. இன்றைய நிலையில் எங்களது எல்லாக் கவனமும் தேர்தலில்தான் இருக்கிறதேனினும் வேறு ஏதேனும் ஒரு வழியில் இப்பிரச்சினையைப் பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கான சாத்தியம் இருக்கிறதா எனப் பார்க்கிறேன்..

இப்படிக்கு உங்கள் உண்மையுள்ள,
இந்திரா காந்தி

1978 ஆம் அண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஐக்கியநாடுகள் சபையில் தன்னை தமிழீழத்தின் பிரதிநிதியாக அறிவித்துத் தமிழீழப் பிரகடனம் செய்து உலகை ஒரு கணம் அதிர வைத்த திரு வைகுந்தவாசனுக்கு மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அனுப்பி வைத்த கடிதம் இது.

இந்திரா காந்தியின் மறைவுக்குப்பிற்பாடு இந்திய அரசியல் கொள்கை வகுப்பாளர்கள் படிப்படியாக ஈழத் தமிழர்களுக்கெதிரான நிலைபாட்டிற்குச் சென்றார்கள். இந்த நிலைப்பாட்டின் வளர்ச்சியும் புலிகளின் அரசியல் முதிர்ச்சியற்ற செயற்பாடும் இராஜீவ்காந்திகொலையில் முடிந்த போது இந்தியாவினது ஈழத்திற்கெதிரான வன்மம் உச்சமடைந்தது.

இன்றைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு தமிழகத்தில் எழுந்த கடுமையான அழுத்தங்கள் காரணமாகவும்; அமெரிக்காவின் மறைமுக அழுத்தம் காரணமாகவும் இந்தியா ஆதரவாக வாக்களித்தது.

ஆனாலும் இந்தியா மகிந்த ராஜபக்ஸவிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரி உடனே கடிதம் எழுதியமை, இந்திய அரசியலிலும் இந்திய மனித உரிமை வட்டங்களிலும் பலத்த விமர்சனங்களைத் தோற்றுவித்திருக்கிறது. அரசியல் கொள்கை வகுப்புக்களிலும் அயல்நாட்டுறவுகளிலும் இந்தியா கொண்டிருக்கிற உறுதியற்ற தொலைநோக்கற்ற தன்மையையே இது வெளிப்படுத்துகிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

1956 ஆம் ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து கண்டிப் பாத யாத்திரையை மேற்கொண்ட ஜே.ஆர் ஜெயவர்த்தனா 1978 ஆண்டுத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்று இலங்கையின் சனாதிபதியானார். அந்தப்பலத்தைப் பயன்படுத்திய ஜே.ஆர் அரசியலமைப்பை மாற்றி நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையைத் தோற்றுவித்து ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதை தவிர மற்ற அனைத்தையும் தன்னால் செய்ய முடியும் என மார்தட்டிய வேளை அவரை அடக்கிவைக்க இந்திராகாந்தி வகுத்துக்கொண்ட கொள்கைக்கும் இன்றைய ஆட்சியாளர்களின் ஊசலாட்டக் கொள்கைக்கும் இடையில் எத்தனை வேறுபாடு....?


குறிப்பாக மன்மோகன் சிங்கின் மன்றாட்டம் இலங்கை அரசாங்கத்தின் 'இறுமாப்பை' அதிகரித்துள்ளதோடு குறைந்த பட்சம் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளையாவது அமுல்படுத்துவதற்கு அழுத்தங்களை வழங்க முடியாத கையாலாகாத தனத்துக்கு இந்தியாவைத் தள்ளிவிட்டுள்ளது என இடது சாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்திருக்கிறார்.

இந்தியா ஆட்சியாளர்களின் நலன்களும் நோக்கமும் முழுக்க முழுக்க ஈழத்தமிழர்களுக்கு சாதகமானவையோ அல்லது ஒடுக்கப்படும் மக்கள் கூட்டத்திற்கு நன்மை பயப்பவையோ அல்ல என்ற போதும் தந்திரோபாய ரீதியில் இந்தியா ஈழத்தமிழர்களை நட்புசக்தியாக கருதுவது இருபக்கத்தினருக்கும் பல தளங்களில் நன்மை பயப்பதாக இருக்கும்.

இதனை உணர்ந்ததால்தான் 1979ல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி எதிர்கட்சியாக இருந்த நிலையிலும் கூட இலங்கை இனப்பிரச்சனையில் சிங்கள அரசாங்கத்திற்கு தலையிடி கொடுக்கும் கொள்கையை கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment