Friday 30 March 2012

சோனியாவை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம் – அதுவே இந்தியாவின் முடிவை மாற்றியதாம்



ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியதாகவும், அவர் அவ்வாறு கூறியதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டுக் கிடந்த ஒளிப்படமே காரணம் என்றும் ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ தகவல் வெளியிட்டுள்ளது.

வாக்கெடுப்புக்கு சில நாட்கள் முன்னதாக சனல்-4 வெளியிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் கொல்லப்பட்டது உள்ளிட்ட தமிழர்களின் அவலங்கள் பற்றிய காட்சிகள் சோனியாகாந்திக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தோன்றுவதாக தம்மை அடையாளம்காட்ட விரும்பாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.

தமிழ் ஊடகங்களில் வெளியான இந்தப் படங்கள் ஒரு புயலையே தோற்றுவித்தன.

வாக்கெடுப்புக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, மார்ச் 22ம் நாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனும், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் தனியொரு நாட்டுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க முடியாது என்று கூறியிருந்தனர்.

இதனால் அதிருப்தியடைந்த சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சோனியாகாந்தியை அணுகி அவரிடம் முறையிட்டனர்.

சிறிலங்காவில் தமிழர்கள் கொல்லப்பட்ட படங்களை அவர்கள் சோனியாகாந்தியிடம் காண்பித்து நியாயம் கேட்டனர்.

குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் மார்பில் சுடப்பட்டுக் கிடக்கும் காட்சி அவரை உறைய வைத்தது.

இதையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தான் நடவடிக்கை எடுப்பதாக சோனியாகாந்தி உறுதி வழங்கினார்.

உடனடியாகவே, அவர் பிரதமர் மன்மோகன்சிங்கிடம், ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என்று கூறினார்.

ஒரு குழந்தையின் மரணம் இந்திய - சிறிலங்கா உறவையே மாற்றி விட்டது என்று ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ மேலும் கூறியுள்ளது

No comments:

Post a Comment