Friday 30 March 2012

வட கடலில் சிங்கள தேசத்தால் திறக்கப்படும் புதிய போர்க் களம்!முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தி முடிக்கப்பட்ட தமிழின சங்காரம் தொடர்பாக ஜெனிவா ஐ.நா. மன்றத்தில் அமெரிக்கா முன்மொழிந்த குற்றப் பிரேரணை சிங்கள தேசத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் குற்றப் பிரேரணை தொடர்பான அறிவித்தல் வெளியானதைத் தொடர்ந்து, சிங்கள ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அத்தனை பிரயத்தனங்களும் அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலகினால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஈழத் தமிழர்களது அவல வாழ்வுக்கு இந்தத் தீர்மானத்தால் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்து விடாது என்றாலும், ஒரு சிறு நம்பிக்கைக் கீற்று தென்படுவதை யாரும் நிராகரித்து விட முடியாது.

அமெரிக்காவின் குற்றப் பிரேரணையை முறியடிக்க சிங்கள ஆட்சியாளர்கள் அத்தனை பிரயத்தனப்பட்டார்கள் என்பதிலிருந்தே அவர்களது நிகழ்ச்சிநிரலில் எங்கோ தடுப்பரண்; விழுந்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம். தட்டிக் கேட்க முடியாத தமிழினத்தின்மீதான சிங்கள ஆட்சியாளர்களின் வன் கொடுமையைத் தன் போக்கில் தொடர முடியாத அமெரிக்கக் கடிவாளத்தை அறுத்தெறியும் முயற்சியில் சிங்கள தேசம் தீவிரமாக இறங்கியுள்ளதைப் பார்க்க முடிகின்றது.

மிருக வதைச் சட்டம் நடைமுறையில் உள்ள நாகரிக உலகில் சிங்கள தேசத்தின் மனித வதை கேள்விக்குள்ளாக்கப்படவது சிங்களப் பெருந்தேசியவாதத்திற்கு உவப்பானதாக இருக்க முடியாது. தமிழின அழிப்பின் பங்காளனாக இறுதிவரை இணைந்து பயணித்த இந்திய ஆட்சியாளர்கள் இந்தத் தடவை அமெரிக்காவை மீறுவது ஆபத்தானது என்று உணர்ந்தார்களோ, அல்லது தமிழகத்தில் குமுறிய எரிமலைகளின் வெடிப்புக்கு முந்தய எச்சரிக்கையை உணர்ந்தார்களோ, எதுவாயிருந்தாலும் சிங்கள தேசத்தின் தண்டிக்கப்படாத போர்க் குற்றங்களிலிருந்து விடுபட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவின் தர்மசங்கடமான நிலையை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மிகப் பணிவாக விளக்கிக் கண்ணீர்க் கடிதம் எழுதிய பின்னர் சிங்களத்தின் கோபம் தமிழகத்தை நோக்கித் திரும்பியுள்ளது. இதனால், சற்றுக் கொந்தளிப்பான நிலையில் உள்ள வட கடலில் ஒரு போர்க் களத்தைத் திறந்து இரு கரை மீனவர்களையும் மோத விடும் முயற்சியில் சிங்கள தேசம் இறங்கியுள்ளது.

தமிழக மீனவர்கள் தடை செய்யப்பட்ட மடி வலைகளைப் பயன்படுத்துவதுடன், எல்லை கடந்து வந்து மீன் வளங்களை அள்ளிச் செல்வது என்ற குற்றச்சாட்டு மோதலுக்குரிய விடயம் அல்ல. அது புரிந்து கொள்ளப்பட வேண்டிய கலந்துரையாடல்களாலும், அவரவர் பிரதேச அதிகாரிகளின் கட்டுப்படுத்தல்களாலும் முடிவுக்கு வரவேண்டியவை. இதனைப் பூதாகரமாக்கிப் புயலைக் கிளப்பிவிட சிங்கள ஆட்சியாளர்கள் வட கடல் தொழிலாளர்களுக்கு கொம்பு சீவிவிட முயல்கின்றது. தமிழக மீன்வர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கும், போராட்டங்களுக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் ஊக்கம் கொடுத்து வருகின்றார்கள்.

எதிர்வரும் நாட்களில் வட கடலில் இரு நாட்டு மீனவர்களுக்குமிடையே மோதல்கள் உருவாகினாலும் ஆச்சரியப்பட முடியாது. இந்த விடயத்தில் இரு கரைத் தமிழர்களுக்கும் அதிக அளவிலான பொறுமைகள் தேவைப்படுகின்றது. ஏனென்றால், சிங்கள தேசத்தின் கரங்களில் ஏராளமான டக்ளஸ்களும், கருணாக்களும் கைவசம் உள்ளார்கள். எப்போது, எங்கே வேண்டுமானாலும் கடலிலும் போர்க் களத்தைத் திறக்க அவர்களால் முடியும்.

இதுவரை காலமும் சிங்களப் படைகள் நேரடியாகச் செய்த தமிழக மீனவர் மீதான படு கொலைகளையும், தாக்குதல்களையும் மீனவர்களாகத் தயார் படுத்தப்பட்ட ஒட்டுக் குழுக்கள் மூலம் தொடர்வதற்கு சிங்களப் படைகள் முயலும் என்பதை இரு கரை மீனவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். புலிகளின் காலம் மீண்டும் வரும்வரை பொறுமையும் எச்சரிக்கையும் நமக்கு வேண்டும்.

- இசைப்பிரியா

No comments:

Post a Comment