இலங்கையின் அரசியல் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மதிக்கப்படும் தலைவர்களைத் தண்டிக்கிறது. அவர்கள் அவர்களின் அரசியல் எதிரிகளால் கூட கௌரவமாக நோக்கப்படுமளவுக்கு ஆளுமையும் உறுதியும் கொண்டவர்களாக விளங்கினர்.
சேர்.பொன்னம்பலம் இராமநாதன் சிங்கள முஸ்லிம் மக்களால் மட்டுமன்றி பிரிட்டிஸ் அரசினாலேயே மிகவும் மதிக்கப்படும் ஒரு தலைவராக விளங்கினார். எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா இலங்கை மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு தலைவராகவும் நடுநிலைமை நாடுகளால் மதிக்கப்பட்ட தலைவராகவும் அவரை விரும்பாத மேற்குலகத்தால் கூட மதிக்கப்படும் ஒரு தலைவராக விளங்கினார். திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா சாதாரண விவசாயிகள் தொழிலாளர்களின் அன்பைப் பெற்றவராகவும் மூன்றாம் உலக நாடுகளை வழிநடத்தும் ஆளுமையுள்ள தலைவியாகவும் விளங்கினார். ஜ.ஜி.பொன்னம்பலம் தனது விவாதத் திறனாலும் அரசியல் சாணக்கியத்தாலும் உலகப் புகழ் பெற்றிருந்தார். நேர்மைக்கும் சத்தியத்துக்கும் அஹிம்சைக்கும் உலகமே மதிக்கும் ஒரு தலைவராக விளங்கினார் தந்தை செல்வா. மேற்குலகின் விசுவாசியாக இருந்த போதிலும் அவர்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் அரசியல் சாணக்கியராக விளங்கினார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா.
இவ்வாறு இலங்கையின் பாராளுமன்ற அரசியல் காலம் காலமாக ஏதோ ஒரு விதத்தில் ஆளுமை கொண்ட அரசியல் சாணக்கியம் மிக்க அரசியல்வாதிகளால் வழிநடத்தப்பட்டது. இன்று இலங்கை அரசியலில் தலைமை தாங்கும் சக்திகளாகவும் எதையும் தீர்மானிக்கும் வல்லமை பெற்றவர்களாகவும் ஏனைய அரசியல் வாதிகளை மடக்கி தம்பின்னால் வரவைப்பது மறுப்பவர்களைச் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தி பலவீனப்படுத்துவது போன்ற கைங்கரியங்களில் ராஜபக்ச சகோதர்கள் திறமை பெற்று விளங்குகின்றனர். பாதுகாப்பு, நிதி, பொருளாதாரம் ஆகிய துறைகளைத் தமது அதிகாரத்தின் கீழ் வைத்து ஒரு சர்வாதிகாரப் பாணியிலான ஆட்சியை நடத்தி வருகின்றனர். ஏனைய அமைச்சர்களும் அரச சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவர்களுக்குத் துதிபாடும், திருப்திப்படுத்தும் பாரிய பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னைய தலைவர்களைப் போன்று இவர்களிடம் அரசியல் தலைமைக்குரிய தனித்துவங்கள் இல்லாத போதும், அவர்களிடம் இல்லாத பிரத்தியேக ஆற்றல் ஒன்று இவர்களிடம் உண்டு.
அதாவது தமக்குப் பாதகமாக எழும் பிரச்சினைகளை வெகு லாவகமாக தமக்குச் சாதகமாக மாற்றியமைப்பது. இதற்கென இவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதங்கள் தேசப்பற்று, இனவாதம், மதவெறி போன்ற இலகுவில் மக்களை உணர்வேற்றக் கூடிய அம்சங்களையே! ஆனால் இவை அனைத்தும் உண்மையான அடிப்படையில் கையாளப்படாமல் வெறியூட்டப்பட்டு தம்மைப் பாதுகாக்கும் கவசங்களாக மாற்றப்படுகின்றன.
‘இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும். அரசின் கடந்த கால நடவடிக்கைகள் தான் இந்த விசாரணைகள் கவனம் செலுத்தும் கருப்பொருள். எனவே அவர்கள் புதிய முயற்சிகளுக்கு அதாவது விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். எனவே இந்த அரசு மாறும் வரை நாம் பொறுத்திருக்க வேண்டும்.
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ரஸ்யா, சீனா போன்ற நாடுகள் ஒத்துழைக்காத நிலையில் ஐ.நா. சபையில் நடவடிக்கை எடுக்க முடியாது’
இப்படிக் கூறியவர் மனிதாபிமான விவகாரங்களுக்கான முன்னாள் உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் அவர்கள். இவர் இலங்கை அரசு தரப்பு பற்றியும் இலங்கை விவகாரங்கள் தொடர்பாகவும் நீண்ட அனுபவங்களைக் கொண்டவர்.
அவர் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போர்க் குற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட முடியாது என்பதும் அவரால் இதற்குக் கூறப்பட்ட காரணங்களும் முக்கியமானவை.
இதே விசயத்தை அதாவது ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை போர்க்குற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகளைச் சரியான முறையில் முன்னெடுக்க முடியாது என்ற விசயத்தை இலங்கை அரசு ஏற்கனவே புரிந்து கொண்டு நடவடிக்கையில் இறங்கிவிட்டது.
அதாவது தான் இறுதிக் காலம் வரை ஆட்சியில் இருக்கும் வரையில் அரசியலமைப்புச் சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்தும் மக்களின் மனநிலையை மாற்றியும் சகல தயாரிப்புகளையும் மேற்கொண்டு வருகிறனர். அதாவது தன்குப் பாதகமாக எழும் விசயங்களைச் சிங்கள மக்களை ஏமாற்றி தனக்குச் சாதகமாக மாற்றுவதில் அவர்கள் பெரும் வெற்றி பெற்று வருகின்றனர்.
போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்பு அதன் வெற்றி விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்போவதாகவும் இனங்களுக்கிடையே ஒரு நல்லிணக்கத்தை உருவாக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் இங்கு விஜயம் செய்த இந்திய அரசு தரப்பினரிடம் 13வது திருத்தச் சட்டமுமஇ; அதற்கு மேலதிகமாகவும் இனப்பிரச்சினைத் தீர்வாக முன்வைக்கப் போவதாக வாக்குறுதி வழங்கினார்.
ஆமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சாத்தியப்பட முடியாத கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்துடன் மேலதிகமாக வழங்கப் போவதாகவும் ஜனாதிபதி தனக்கு வாக்குறுதி தந்ததாகவும் முழங்கினார். இன்றுவரை இந்தியாவுக்கோ டக்ளஸ் தேவானந்தாவுக்கோ வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
ஆனால் 18வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் பொதுநிர்வாகம் பொலிஸ் அதிகாரம் என்பன தொடர்பாக மாகாண சபைகளுக்கு 13வது திருத்தச் சட்டம் மூலம் வழங்கப்பட்ட அதிகாரம் பறிக்கப்பட்டது. அதேவேளையில் ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் மாற்றப்பட்டது. அதாவது சிங்கள மக்கள் மத்தியில் சிங்களக் கடும் போக்காளர்கள், மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் பொது நிர்வாக சேவை அதிகாரம் என்பவற்றை வழங்கினால் தமிழர்களுக்கு எதையோ உரிமைகளை வழங்கி விட்டதாக எதிர்ப்பைக் கிளப்புவார்கள். ஏன்பதைப் புரிந்து கொண்டு 13வது திருத்தச் சட்டத்திலிருந்து அவற்றை நீக்கும் வகையில் இன்னொரு சட்டம் கொண்டு வந்தர் மகிந்தராஜபக்ச ஒருபுறம் தமிழ் மக்களின் உரிமையைப் பறித்துக் கொண்டு சிங்களக் கடும் போக்காளரைத் திருப்திப்படுத்திக் கொண்டு இதே சட்டத்தின் மூலம் தான் உயிருள்ள வரை ஜனாதிபதியாகும் ஏற்பாட்டை செய்து கொண்டார்.
அன்றோ ஒரு நாள் போர்க்குற்றங்கள் தன் கழுத்தை நெரிக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த மஹிந்த ராஜபக்ச அதிலிருந்து தப்பிக்கொள்ள தான் என்றுமே ஜனாதிபதியாகும் ஏற்பாட்டை செய்து கொண்டார்.
இதே போன்று இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்து ஐ.நா. செயலருக்கு அறிக்கை சமர்;ப்பிக்க ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. உடனடியாகவே அந்நியத் தலையீடு எனவும் இலங்கையின் இறைமை, சுயாதிபத்தியம் என்பன மேல் தொடுக்கப்படும் அகௌரவம் எனவும் கூச்சல் எழுந்தது. ஐ.நா.வுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முற்றுகைப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அமைச்சர் விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டத்தையும ;நடத்தினார். எனினும் நிபுணர்குழு தன் பணியைத் தொடர்ந்து தனது விசாரணை அறிக்கையை ஐ.நா. செயலரிடம் சமர்ப்பித்தது. சில நாட்களில் அது பகிரங்கப்படுத்தப்பட்டது.
அவ்வறிக்கையை நிராகரித்த அரசாங்கம் உள்ளுரிலேயே விசாரணை நடத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவை நியமித்தது. அதுவும் ஒன்றரை வருடங்கள் கடந்து ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அதுவும் இன்றுவரை அமுல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் தான் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் அமெரிக்க நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு கோரி ஒரு பிரேரணையை முன்வைத்தது. இப்பிரேரணைக்கு எதிராக உறுப்பு நாடுகளை அணிதிரட்ட இலங்கை உச்ச கட்ட பிரயத்தனங்களில் ஈடுபட்டது அதுமட்டுமன்றி இப்பிரேரணை கொண்டு வரப்படுவது இலங்கையின் இறைமை மீதும் இ சுயாதிபத்தியம் மீதும் அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்தும் ஒரு முயற்சி என்பனவும் இலங்கயால் வர்ணிக்கப்பட்டது.
இலங்கை அதிபரால் நியமிக்கப்பட்ட ஒரு ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசையே நடைமுறைப்படுத்தும் படி கேட்பது எவ்விதத்தில் அந்நியத் தலையீடு என்பது இலங்கையின் கொள்கை விடுப்பாளர்களுக்கு மட்டும் விளங்கக் கூடிய இரகசியமாகும். சில சமயங்களில் இப்பரப்புரைகளை சுமந்து உலகெங்கும் செல்லும் டக்ளஸ் தேவானந்தா, ரிசாத்; பதியுதீன் போன்ற சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு விளங்கக் கூடும்.
எப்பிடியிருப்பினும் தனக்கு எதிராக எழும் போர்க்குற்ற விவகாரங்களைத் தனக்குச் சாதகமாகப் பாவிப்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெரும் வெற்றி பெற்று வருகிறார் என்பது மட்டும் உண்மை. இதில் இரண்டு விசயங்களில் அவர் வெற்றியடைந்து வருகிறார்.
ஒன்று எரிபொருள் விலையுயர்வு, போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு, மின்சாரக் கட்டண உயர்வு, பாவனைப் பொருட்களின் விலையுயர்வு, ஊதிய உயர்வு கோரி பல்வேறு தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டங்கள் என்பன காரணமாக அரசாங்கத்தின் மீது மக்கள் எதிர்ப்பு ஆரம்பமாகியது. அவற்றை திசை திருப்ப அமெரிக்க எதிர்ப்பு என்ற மாயையைக் காட்டி மக்கள் கவனம் திசை திருப்பப்படுகிறது. நாட்டைக் காப்பதற்காக பிரார்த்தனை அமெரிக்கத் தலையீட்டுக்கு எதிரான போராட்டங்கள் என மக்கள் வீதியில் இறக்கப்படுகின்றனர். எனவே வாழ்க்கைச் செலவு உயர்வு காரணமாக எழக்கூடிய நெருக்கடிகள் அரசாங்க எதிர்ப்புணர்வு அனைத்தும் மழுங்கடிக்கப்பட்டு விட்டன.
அடுத்தது நாடு என்றால் மஹிந்த ராஜபக்ச. மஹிந்தராஜபக்ச என்றால் நாடு என்ற ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. புயங்கரவாதத்தை ஒழித்த மாபெரும் வீரராக அவர் காட்டப்படுகிறார். மீண்டும் பயங்கரவாதம் எழுச்சி பெறாமல் தடுக்கும் ஆற்றல் அவருக்கே உண்டு எனவும் கற்பிக்கப்படுகிறது. எனவே என்றும் நாட்டின் தலைவராக அவரே இருக்க வேண்டும் என்பது மக்கள் மத்தியில் பதிய வைக்கப்படுகிறது.
அதாவது 18வது திருத்தச் சட்டத்தின் மூலம் மஹிந்த ராஜபக்ச எத்தனை தரமும் ஜனாதிபதியாக வரும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது. புலி எதிர்ப்பு தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் சிங்கள மக்களை இனவெறி சிந்தனைப் போக்கில் வைத்துக் கொண்டு தான் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு வாதியாகக் காட்டி என்றும் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறும் வகையில் திட்டமிட்டு காய்கள் நகர்த்தப்படுகின்றன.
தனது இறுதி காலம் வரை ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு போர்க்குற்றங்களிலிருந்து தப்பும் வகையில் மஹிந்த ராஜபக்ச அவர்கள் தனக்குப் பாதகமான அம்சங்களையே சாதகமாக மாற்றி காய்களை நகர்த்தி வருகிறார்.
இப்படியான நயவஞ்சக நோக்கத்தில் எந்த ஒரு சர்வாதிகாரியும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை என்பதே உண்மை. வேட்ட வரும் வாளை தற்காலிகமாக மாலையாக்கிப் போடலாம். ஆனால் வாள் வாள் தான். மாயை மாயை தான்.
-அக்கினீஸ்வரன்-
No comments:
Post a Comment