Tuesday 3 April 2012

கொழும்பில் எந்த நேரமும் இனக் கலவரம் வெடிக்கலாம்



தென் பகுதித் தமிழர்கள் நிம்மதி இல்லாத இரவுகளைக் கழிக்கின்றனர். கடந்த சில நாட்களாக நிலவும் அசாத்திய சூழல் அவர்களுடைய அமைதியைக் கெடுக்கின்றது. இராணுவ வாகனங்கள் தெருக்களில் இரவு பகலாகச் சுற்றுகின்றன. இப்படித் தான் 1983 இனக் கலவரம் தொடங்கியது.

முதலில் இராணுவ வாகனங்கள் ஒடித்திரியும். அடுத்ததாகப் புத்த பிக்குகள் விகாரைகளில் அமர்ந்தவாறு மக்களுக்கு தர்ம உபதேம் செய்வார்கள். புத்த மதத்தினர் அல்லாதோரைப் படுகொலை செய்வது பாபச் செயல் அல்லவாம். இது மகாவம்ச இதிகாசத்தில் வழங்கப்பட்ட உத்தரவாதம் என்று பிக்குகள் உபதேசிக்கிறார்கள்.

இரவில் தமிழர்கள் வாழும் வீட்டுச் சுவர்களில் இரகசிய அடையாளங்களைச் சிங்களக் காடையர்கள் வண்ணக் கட்டிகளால் போடுகிறார்கள். தமிழர்களின் இருப்பிடங்களையும் எண்ணிக்கைகளையும் மக்கள் கணக்கெடுப்புப் பதிவேடுகளில் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.

தமிழர்கள் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தங்கள் சுய விபரம், குடும்பத்தினர் சுய விபரம், எண்ணிக்கை, முகவரி, அடையாள அட்டை இலக்கம் போன்றவற்றைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும்.


இந்தப் பதிவுகளும் தமிழர்கள் வாழ்விடங்களை அடையாளம் காண உதவுகின்றன. வீடு வீடாகச் சென்று பொருள்களை விற்பனை செய்யும் வர்த்தகப் பிரதிநிதிகளும் தமிழர்களை அடையாளம் காண உதவுகிறார்கள். தமிழர்களுக்கு பொருள்களை விற்பனை செய்வதாலும் இலாபம் இனக் கலவரத்தின் போது கொள்ளை அடிப்பதாலும் இலாபம்.

இந்த மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்ட இனக் கலவரத்தை படு வேகமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. அரசு இனக் கலவரத்தைத் தொடக்கி அதை முடித்து வைக்கும். குறுகிய காலத்திற்குள் படுகொலைகளையும் தீ வைத்தலையும், சூறையாடல்களையும் நடத்தி முடிப்பதற்கு ஏன் திட்டமிடுகிறார்கள்.?

காலம் நீடித்தால் வெளி நாடுகள் தலையிடலாம். குறுகிய காலத்திற்குள் முடித்து விட்டால் தலையீடுகளைத் தவிர்க்கலாம். இழப்புக்கள் பெரிதாக இல்லை என்றும் பிரசாரம் செய்யலாம். 2009ம் ஆண்டில் நடந்த வன்னிப் படுகொலைகளை நடத்தியதைப் போல் சாட்சிகள் இல்லாமலும் நடத்தி முடித்து விடலாம்.

அரசுடன் இணைந்து செயற்படும் ஜாதிக ஹெல உறுமைய என்று சிங்கள இனவாத அமைப்பின் தலைவர் சம்பிக்க றணவக்க அமைச்சரவையில் முக்கிய பதவி வகிக்கிறார். ஜாதிக விமுக்தி பெரமுன என்ற ஜேவீபி கட்சிப்  பிரமுகர் விமல் வீரவன்ச பாதுகாப்புச் செயலர் கொத்தபாய ராஜபக்சவின் உயிர் நண்பர்.

சம்பிக்க றணவக்கவும் விமல் வீரவன்சவும் மீண்டுமொரு இரத்தக் களரியை நடத்தித் தமிழர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று மேடை போட்டுப் பேசுகிறார்கள். இப்படியான அமைதியைக் குலைக்கும் பேச்சுக்களைத் தடை செய்யச் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அரசு ஆதரவு பெற்ற இனவாதிகளைப் பாதிப்பதில்லை.

1983ம் ஆண்டில் இனக் கலவரத்தை நடத்திய ஜக்கிய தேசிய கட்சி இப்போது ஆட்சி நடத்த வலுவில்லாத எதிர் கட்சியாகச் சுருங்கி விட்டது. இலங்கையில் எதிர் கட்சிகள் நல்ல பிள்ளை வேடம் போடுவதும் அரசுரிமையைப் பெற்றவுடன் இனக் கலவரங்களை நடத்துவதும் அரசியல் சாசனத்தில் இடம்பெறாத வழமை.

இப்போது ஜக்கிய தேசிய கட்சி அரசுக்கு உபதேசம் செய்கிறது. அதனுடைய மூத்த உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இனக் கலவரத்தைத் தூண்டாதீர் என்று அரசை எச்சரிக்கிறார். வெளி நாட்டுத் தலையீட்டுக்கு அது வழிவிட்டு விடும் என்பது அவர் வாதம். அவர் சொன்னால்  என்ன  சொல்லாவிட்டால் என்ன மீண்டுமொரு தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் வெடிக்கத் தான் போகிறது.

இலங்கைத்தீவில் வாழும் தமிழர்கள் ஏற்கனவே உயிராகவும் உடமையாகவும் பெருவிலை கொடுத்து விட்டார்கள். இன்னுமொரு இரத்தப் போக்கிற்கு அவர்களால் முகங் கொடுக்க இயலாது. இதற்கு முடிவே இல்லையா என்று முதியோரும் இளையோரும் தவிக்கின்றனர்.

முடிவில்லாத பயணங்கள் போல் இலங்கைத் தமிழர்களின் துன்ப துயரம் நீண்டு செல்கிறது. இலங்கையில் இனக் கலவரங்கள்  1956ம் ஆண்டு தொடக்கம் விட்டு விட்டுத் தொடர்கின்றன. இலங்கை இனக் கலவரங்கள் தீடீர் விபத்துக்கள் அல்ல. அவை அரசும் இராணுவமும் இணைந்து செயற்படுத்தும் உயிர்ப் பலி அடங்கிய வேள்வி.

No comments:

Post a Comment