Friday 6 April 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் அரசியல் முன்மொழிவுகளை அமுல்படுத்த முடியாது: - இனப்பிரச்சினைக்கு தீர்வு காண புதிய யோசனை முன்வைப்பு! கோத்தபாய



கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அரசியல் ரீதியான முன்மொழிவுகளை அமுல்படுத்த முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் சில முன்மொழிவுகளையும் அமுல்படுத்த முடியும். அவற்றுக்கான நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிலர் மாகாணசபைகள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை கோரி நிற்கின்றனர். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

தேசிய கீதத்தை தமிழில் இசைக்கும் முன்மொழிவானது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண புதிய யோசனை முன்வைப்பு!

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்காக வடபகுதி மக்களை தேசிய அரசியல் கட்சிகளூடாக அரசியலில் பிரவேசிக்கச் செய்ய வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ச தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் என்பன சர்வதேச சமூகத்திற்கு பொய்யான சித்திரம் ஒன்றை வடிவமைத்துக் காட்டுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பிரதான கட்சிகள் வடபகுதிக்குச் செல்ல வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் வடிவமைக்கும் போலிச் சித்திரங்களை வடபகுதி மக்களாலேயே பொய்ப்பிக்க முடியும்.

தேசிய பட்டியல் மூலம் வட பிரதேசத்திற்கு அதிக இடம் ஒதுக்கப்படல் வேண்டும்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்காக வட பகுதி மக்களை தேசிய அரசியல் கட்சிகளின் ஊடாக அரசியலில் பிரவேசிக்கச் செய்தல் வேண்டும்.

தமிழ் மக்கள் சார்பாக பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் என்பன சர்வதேசத்திற்கு பொய்யான சித்திரம் ஒன்றை வடிவமைத்துக் காட்டுகின்றன.

இத்தகைய போலிப் பரப்புரைகளை வட பகுதியில் வாழும் மக்களால் மாத்திரமே முறியடிக்க முடியும். அதற்காக தேசிய அரசியல் கட்சிகள் சார்பாக அவர்கள் அரசியலில் பிரவேசிக்க இடமளிக்கப்பட வேண்டும்.

வடக்கிலே அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்தகைய அபிவிருத்தி திட்டங்கள் தற்போதும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.இதன்மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலாபம் தேடி வருகின்றது.

தமிழ் மக்கள் போரை விரும்பவில்லை.சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன வடபகுதி மக்களிடம் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இது குறித்து நாட்டின் மீது பற்றும் அன்பும் கொண்ட அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.

இதனூடாக சர்வதேச ரீதியில் நாட்டிற்கு எதிராக போலிப் பரப்புரைகளை மேற்கொண்டு வருவோரின் முயற்சிகளை செயலிழக்கச் செய்ய முடியும்.

தேசிய பட்டியல் மூலம் உறுப்பினர்களை நியமிக்கும்போது வட பிரதேசத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் தேசிய பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காணமுடியும் என கோத்தபாய ராஜபக்ச­ மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment