Wednesday 4 April 2012

கச்சதீவில் கடற்படைத் தளம். - ஆய்வு



மார்ச்சு31ம் நாளன்று கிடைத்த தகவலின்படி தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற் படையின் தாக்குதல்கள் தொடர்வதாக அறியமுடிகிறது. கச்சதீவுக் கடற் பிராந்தியத்தில்  நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் விரட்டியடிக்கப் பட்டுள்ளனர்.
 
ஊமைக் கோட்டான் போன்ற பிரதமரும், ஆயுதக் கொள்வனவில் ஊழல் தொடர்பான விவகாரத்தில் கவனஞ் செலுத்தும் பாதுகாப்பு அமைச்சரும், தெலுங்கானப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் தவிக்கும் உள்துறை அமைச்சரும் தமிழக மீனவர்கள் பற்றி கவலைப் படுவதாகத் தெரியவில்லை.

வெளிவிவகார அமைச்சரோ இந்த பிரச்சனையைப் பேசித் தீர்க்கப் போவதாக அடிக்கடி கூறுகிறார். ஆனால் கொழும்பு சென்று திரும்பிய பின் இது பற்றிக் கேட்டபோது மீனவர் பிரச்சனை பற்றிப் பேசுவதற்கு அவகாசம் கிடைக்கிவில்லை என்று சொல்கிறார்.

தமிழக அரசு கடிதப் போக்கு வரத்தோடு மீனவர் பிரச்சனையை நிறுத்தியுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் மாத்திரமல்ல தமிழகத்தின் பொருளாதாரமும் பெருமளவில் முடக்கப்பட்டுள்ளது. மீன் உள்நாட்டு நுகர்ச்சிக்கும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் ஆதாரமாக  அமைகிறது.

இந்த விவகாரத்திற்கு தமிழக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த மனக் குறை எமது மீனவர்கள் நெஞ்சில் நெடுகாலமாகக் குடி கொண்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டிய ஊடகங்கள் மீனவர் விவகாரத்ததை வெறும் செய்தியாக மாத்திரம் பார்க்கின்றன.

இந்த விவகாரத்தின் அடிப்படை வேறோர் இடத்தில் இருக்கிறது. கச்சதீவுக் கையளிப்பு தொடர்பான உடன்படிக்கைக்கு முரணான விதத்தில் இலங்கைக் கடற்படை கச்சதீவில் நிரந்தர கடற்படைத் தளம் அமைத்துள்ளது.

கடற்படைத் தளத்தின் ஒரு பகுதி நிழற்படத்தை இதனோடு இணைத்துள்ளோம். அண்மையில் கச்சதீவில் நடந்த அந்தோணியார் திருவிழாவுக்குச் சென்ற தமிழகப் பொது மக்கள் இலங்கைத் கடற்படையின் கட்டிடத் தொகுதிகளைக் கண்டுள்ளனர்.

மக்களோடு மக்களாகச் சென்ற இந்திய உளவுத்துறையினர் சிங்களக் கடற்படையினரின் கட்டுமானங்களையும் படையினரின் பிரசன்னத்தையும் படம் பிடித்துள்ளனர். இதற்கு மேல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது.

கச்சதீவில் நிறுவப்பட்ட சிங்களக் கடற்படையின் கட்டமைப்பு சீன உதவியுடன் செய்யப்பட்டுள்ளது. இதை மறைப்பதற்கு முயற்சி எடுக்கப்படவில்லை. அங்கே பயன்பாட்டில் உள்ள உபகரணங்கள், தளபாடங்களில் சீனமொழி எழுத்துக்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் கச்சதீவில் நிலைகொண்டுள்ள சிங்களக் கடற்படை, அவர்களோடு இணைந்து செயற்படும் சிங்கள மீனவர்கள் அடங்கிய துணைப் படை ஆகியவற்றால் நடத்தப்படுகிறது.

இலங்கை கடற்படையும் இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்களைத் தாக்கிக் காயப்படுத்துகிறார்கள் என்று கூறும் எமது தமிழக ஊடகங்கள் பெரும் தவறிளைக்கின்றன. இலங்கை மீனவர்கள் என்று பொதுப்படையாகக் கூறும் போது ஈழத் தமிழ் மீனவர்களும் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள் என்ற தவறான கற்பிதம் எழ வாய்ப்பு இருக்கிறது.

இலங்கைத் தீவின் தென் பகுதியில் வாழும் சிங்கள மீனவர்கள் கடற்படையின் பாதுகாப்புடன் வடக்கு நோக்கி நகர்த்தப்பட்டுள்ளனர். இளைஞர்களுக்குப் பயிற்சி வழங்கும் கடற்படையினர் “சோமாலியாக் கடற் கொள்ளையர்கள்” என்ற தாக்குதல் அணியை உருவாக்கியுள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசுதல், கற்களால் தாக்குதல், இரும்பு கம்பிகளால் அடித்துக் காயம் விளைவித்தல், பெறுமதியான பொருட்களையும் பிடித்த மீன்களையும் சூறையாடுதல் போன்ற அநாகரிகமான நடவடிக்கைகளை தம்மைத் தாமே கடற் கொள்ளையர்கள் என்று அழைப்பவர்களே செய்கிறார்கள்.

மத்திய மாநில அரசுகளின் அலட்சியப் போக்கைக் கண்டிக்கச் சொற்கள் போதாது. ஒரு கண்ணுக்கு வெண்ணெய்யும் மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் என்று ஓரவஞ்சகத்திற்கு உதாரணம் கூறுவார்கள். இத்தாலிக் கப்பல் கேரள மீனவரைச் சுட்டுக் கொன்ற போது கேரள அரசு உடனடி நடவடிக்கை எடுத்தது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கேரள அரசுடன் இணைந்து அவர்கள் இத்தாலி கப்பலையும் சிப்பந்திகளையும் சிறைப் பிடித்தார்கள்.

ஆனால் இது வரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கைப் போர் முடிந்த பிறகு இயல்பு நிலை திரும்பி விடும் என்ற நம்பிக்கை தகர்ந்து விட்டது.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களைக் கைவிட சிங்களப் படை மறுக்கிறது. அதே போல் இந்திய மத்திய மாநில அரசுகளும் பாதுகாப்பு வழங்க மறுக்கின்றன. இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு கிட்டுமா என்று கேட்கிறோம்.

No comments:

Post a Comment