Sunday 8 April 2012

ஈழத் தமிழரின் காலை வாரிய "கம்யூனிச நாடுகள்" - ஓர் ஆய்வுஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்களை, கியூபா, சீனா போன்ற "கம்யூனிச நாடுகள்" எதிர்த்து வந்துள்ளன. தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப் படும் பொழுது, இந்த நாடுகள் எதிர்த்து வாக்களித்து வந்துள்ளன. கம்யூனிஸ்ட் நாடுகள் என்று அறியப்பட்டிருக்கும் சீனாவும் கியூபாவும் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதற்கு என்ன காரணம்? உலகில் எங்கு மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகள், ஏன் இன்று ஆதிக்கச் சக்திகளுக்குத் துணை போகின்றன? இலங்கை அரசின் போர்க் குற்றங்களை கியூபா அறிந்திருக்கவில்லையா? குறிப்பாக, வலதுசாரித் தமிழ்தேசியவாதிகள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, "கம்யூனிச நாடுகள் தமிழ் மக்களின் விரோதிகள்" என்ற தொனியில் பிரச்சாரம் செய்கின்றனர். தமிழ் கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பிரச்சாரம் ஒரு புறமிருக்க; ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் எதிர்த்து வாக்களிக்கும் நாடுகளின் நோக்கம் என்ன? இந்தக் கட்டுரை, அந்த நாடுகளின் அரசியல் நிலைப்பாட்டை புரிந்து கொள்ளும் முயற்சியே அன்றி, அவர்களின் செயலை நியாயப் படுத்தும் நோக்கம் கிடையாது என்பதை, முதலிலேயே தெளிவு படுத்த விரும்புகின்றேன்.

இலங்கையில் இனப்படுகொலை, நீதிக்கு புறம்பான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள்... இவை எல்லாம் ஈழப்போரில் மட்டுமே முதல் தடவையாக நடந்துள்ளன என்று நினைப்பது எமது அறியாமை. ஏற்கனவே, 1971 ம் ஆண்டு தெற்கில் எழுந்த ஜேவிபி கிளர்ச்சி அடக்கப் பட்ட பொழுதே இவை எல்லாம் நடந்திருக்கின்றன. அப்பொழுதெல்லாம், யாரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், அது பற்றி கேள்வி எழுப்பவில்லை. இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப் படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சோஷலிச நாடுகள் எல்லாம் ஓரணியில் நின்று, இலங்கையில் சோஷலிசத்திற்காக எழுச்சி பெற்ற மக்களை அழிக்க உதவி செய்தன. அன்று, உலகில் எந்தவொரு நாடுமே, ஜேவிபியின் கிளர்ச்சியை ஆதரிக்கவில்லை. முதலாளித்துவ மேற்குலக நாடுகளைப் பொறுத்த வரையில், அவர்களின் நிலைப்பாடு தெளிவானது. உலகில் எங்கெல்லாம் சோஷலிசத்தின் பெயரில் கிளர்ச்சி நடக்கின்றதோ, அவற்றை அழித்தொழிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், சோஷலிச நாடுகள் அப்படி நடந்து கொள்ளலாமா?

அன்று, "ஆயுதப் போராட்டம் மூலமே சோஷலிசம் சாத்தியம்." என்று ஜேவிபி கூறி வந்தது. சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்த இளைஞர் அணி என்பதால், மார்க்ஸ் முதல் ஸ்டாலின் வரையிலான உருவப் படங்களை வைத்திருந்தது. சேகுவேராவின் தத்துவங்களை நடைமுறைப் படுத்துவதாகவும் கூறிக் கொண்டது. நாட்டுப்புற மக்கள் அவர்களை "சேகுவேரா காரர்கள்" என்றும் அழைத்தனர். இவ்வளவும் இருந்தும், சோவியத் யூனியன், மாவோவின் சீனா, காஸ்ட்ரோவின் கியூபா போன்ற கம்யூனிச நாடுகள் எல்லாம், இலங்கை அரசை தான் ஆதரித்தன! ஜேவிபி உறுப்பினர்களை தேடி அழித்த, அரச படைகளுக்கு ஆயுதங்கள் வழங்கின. இந்தியப் படைகள் நேரடியாக களத்தில் இறங்கி, அழித்தொழிப்பில் ஈடுபட்டன.

அந்த வருடம் மட்டும், எண்பதாயிரம் பேர் அளவில் கொல்லப் பட்டதாக தெரிய வருகின்றது. இத்தனைக்கும் இலங்கை ஒரு போதும் சோஷலிச நாடாக இருக்கவில்லை. உள்நாட்டு முதலாளித்துவ சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டிய கம்யூனிச நாடுகள், ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கத்தை அடக்க துணை போனார்கள். ஜேவிபி யின் தலைமையும், அதன் கொள்கைகளும் எமக்கு ஏற்புடையதல்ல என்பது வேறு விடயம். ஆனால், அந்த இயக்கம், இலங்கையின் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரை பிரதிநிதித்துவப் படுத்தியது என்ற உண்மையை எவராவது மறுக்க முடியுமா? ஒரு உயர்சாதியினரின் அரசு, தாழ்த்தப்பட்ட சாதி மக்களை கொன்று குவித்தது இனப்படுகொலை ஆகாதா?

எழுபதுகளில் நடந்த இனப்படுகொலையில், இலங்கை அரசுக்கு உறுதுணையாக நின்ற இந்தியாவும், கம்யூனிச நாடுகளும், 2009 ம் ஆண்டு, முள்ளிவாய்க்காலில் மீண்டும் ஒன்று சேர்ந்தன. "கம்யூனிச நாடுகளை தமிழர்களுக்கு மட்டுமே எதிரானதாக" காட்டுவது, குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ் இனவாதிகள் மட்டுமே. அவர்களுக்கு எழுபதுகளில் நடந்த சம்பவங்கள் எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் கிடையாது. தெரிந்தாலும் புறக்கணிப்பார்கள். ஆனால், தமிழ் மக்கள் மீது உண்மையான பரிவு கொண்டோர், அப்படி நடக்க முடியாது. எல்லாவற்றையும் அலசி ஆராய்வது அவசியம். உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்பட்டாலும், அதற்கு உறுதுணையாக நிற்க வேண்டிய கம்யூனிச நாடுகள், ஏன் இன்று ஆதிக்க சக்திகளுக்கு துணை போகின்றன? அது "இன்று" மட்டும் நடக்கவில்லை. ஐம்பதுகளில், கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றத்தின் விளைவு. ஸ்டாலினின் மறைவு, இரண்டாவது கம்யூனிச அகிலத்தின் சீர்குலைவு, இவற்றின் பின்னர் ஆரம்பமாகியது. சோவியத் யூனியனுடன் பகை முரண்பாடுகள் ஏற்பட்ட பின்னர், டிட்டோவின் யூகோஸ்லேவியாவும், மாவோவின் சீனாவும் மூன்றாமுலக முதலாளித்துவ நாடுகளுடன் நட்புறவை புதுப்பித்துக் கொண்டன.

ஸ்டாலின் காலத்தில், உலகில் எந்த நாட்டில் கம்யூனிஸ்டுகளின் போராட்டம் நடந்தாலும், அதற்கு உதவ வேண்டும் என்ற கொள்கை பின்பற்றப் பட்டது. (அப்பொழுதும் கிரேக்கத்தில் போராடிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உதவவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.) ஆனால், குருஷேவின் பதவிக் காலத்தில் அந்தக் கொள்கை மாற்றப் பட்டது. "சமாதான சகவாழ்வு", "முதலாளித்துவ நாடுகளுடன் நட்புறவு", "அனைத்து பிரஜைகளுக்குமான அரசு" போன்ற கொள்கைகள் பின்பற்றப் பட்டன. ஸ்டாலினின் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் நிராகரிக்கப் பட்டது. கம்யூனிச இயக்க வழக்கத்திற்கு மாறாக, ஒரு முதலாளித்துவ நாடான இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவு ஏற்பட்டது. உலகம் இரண்டு முகாம்களாக பிரிந்து நின்றன. ஒவ்வொரு நாடும், ஒன்றில் அமெரிக்க முகாமில், அல்லது சோவியத் முகாமில் சேர்ந்து கொண்டன. அப்படிச் சேரும் நாடுகள், கொள்கை அடிப்படையில் ஒத்துப் போக வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அன்று இந்திரா காந்தியின் இந்தியாவும், சிறிமாவோவின் சிறிலங்காவும் சோவியத் முகாமில் தான் சேர்ந்திருந்தன.

மனித உரிமைகள், போர்க்குற்ற விசாரணை, இவை எல்லாம் எண்பதுகளுக்கு பின்னர் தான் சூடு பிடித்தன. இன்னும் சொல்லப் போனால், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் தான், அதைப் பற்றி உலகம் அக்கறைப் பட்டது. பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், இதைப் பற்றி யாரும், ஐ.நா. சபை உட்பட, கவலைப் படவில்லை. இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இவை எந்த நாட்டில் நடந்தாலும், அந்த நாட்டின் மேல் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. அந்த நாடு, அமெரிக்க முகாமை சேர்ந்தது என்றால், அமெரிக்கா வீட்டோ பிரயோகிக்கும். சோவியத் முகாமை சேர்ந்த நாடென்றால், சோவியத் யூனியன் வீட்டோ பிரயோகிக்கும். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர், பாதுகாப்புச் சபையில் நடந்து வந்த பலப்பரீட்சை ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால், அமெரிக்காவின் ஏக வல்லரசு அபிலாஷைக்கு எதிரான நாடுகள் உதிரிகளாக நின்று எதிர்ப்புக் காட்டின. எப்போதெல்லாம் ஐ.நா. அவையில், ஒரு நாட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப் படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் ஒருமித்த கருத்து ஏற்படுவது அரிதாகவே நடந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் கூடும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில், கொண்டு வரப் படும் தீர்மானங்கள் எல்லாமே, அரசியல் சார்புத் தன்மை கொண்டிராதவை என்று கூற முடியாது. குறிப்பாக, சர்வதேச கவனம் பெற்ற, யூகோஸ்லேவியா, ஆப்கானிஸ்தான், ஆகிய நாடுகளுக்கு எதிரான தீர்மானங்கள், அமெரிக்காவின் நலன்களுக்காக கொண்டு வரப்பட்டவை என்ற விமர்சனங்கள் எழுந்தன. ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகள் அவற்றை எதிர்த்து வந்துள்ளன. உலகெங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும், பிற இடதுசாரி அமைப்புகளும், அமெரிக்காவின் மனிதாபிமான இராணுவ நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தன. "அந்த நாடுகளில் அடக்கப்படும் சிறுபான்மை இனங்களை பாதுகாப்பதற்காகவே," இந்த தீர்மானங்களை கொண்டு வருவதாக அமெரிக்கா கூறிக் கொண்டது.

யூகோஸ்லேவியாவில் ஒடுக்கப்பட்ட கொசோவோ அல்பேனியர்களும், ஈராக்கில் ஒடுக்கப்பட்ட குர்தியர்களும், அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானங்களை வரவேற்றார்கள். அதே நேரம், "தமக்கு எதிராக வாக்களித்த" ரஷ்யா, சீனா, கியூபா, போன்ற நாடுகளை மிகவும் வெறுத்திருப்பார்கள். ஆனால், இதற்கு மறுபக்கம் ஒன்றுண்டு. கொசோவோ அல்பேனிய மக்களுக்கு ஆதரவான ஐ.நா. தீர்மானத்தை, அல்பேனிய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. ஈராக் குர்து மக்களுக்கு ஆதரவான ஐ.நா. தீர்மானத்தை, துருக்கி குர்திய விடுதலை இயக்கமான பி.கே.கே. எதிர்த்தது. இந்த முரண்பாட்டை எப்படி விளக்குவீர்கள்?

"கம்யூனிச நாடுகள், ஐ.நா.வில் தமிழர்களுக்கு எதிராக வாக்களித்ததாக," நமது வலதுசாரித் தமிழ் தேசியவாதிகள் கூறி வருகின்றனர். அதே மாதிரியான பிரச்சாரங்கள் கொசோவோவிலும், குர்திஸ்தானிலும் நடந்துள்ளன. "கம்யூனிச கொள்கைக்கு விரோதமாக, ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எதிராக, சர்வாதிகாரிகளின் கொடுங்கோல் ஆட்சிக்கு ஆதரவாக துணை போன கம்யூனிச நாடுகள்," என்றெல்லாம் மேற்கத்திய நாடுகளில் பிரச்சாரம் செய்யப் பட்டது. அப்பொழுதெல்லாம், நமது தமிழ் தேசியவாதிகள் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதாக பிரகடனம் செய்தார்கள். மிகவும் நல்லது. இதேயளவு ஆர்வம் பாலஸ்தீனப் பிரச்சினையில் காணப்படவில்லையே? அது ஏன்?

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும் போதெல்லாம், அமெரிக்கா எதிர்த்து வாக்களித்ததே, அது ஏன்? "உலகமெல்லாம் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு ஆதரவளிக்கும்," தேசியவாதிகள் எங்கே போய் ஒளிந்தார்கள்? அறுபதாண்டுகளாக ஒடுக்கப்படும் பாலஸ்தீன சிறுபான்மை இனம் அவர்கள் கண்களுக்கு அகப்படாமல் போனது எப்படி? மேற்கத்திய நாடுகளின் ஆசீர்வாதம் பெற்ற அரசுகள், சிறுபான்மை இனங்களை ஒடுக்கினால், நாம் கண்டுகொள்ளக் கூடாதா? ஈழத் தமிழர்களை அழித்த ராஜபக்சே அரசுக்கும் மேற்கத்திய நாடுகளின் ஆசீர்வாதம் கிடைத்தை, தமிழ்த் தேசியவாதிகள் எப்படி மறந்தார்கள்? இதையே காரணமாகக் காட்டி, மேற்கத்திய நாடுகளை தமிழர்களின் விரோதியாக சித்தரிக்காத மர்மம் என்ன? டாலர்களும், பவுன்களும் வாயடைக்க வைத்து விட்டனவா?

கியூபாவின் நிலைப்பாடு சம்பந்தமாக எனக்கும், எல்லோருக்கும் விமர்சனங்கள் உண்டு. என்ன காரணம் இருந்தாலும், சிறிலங்கா பேரினவாத அரசின் பக்கம் நின்றது தவறு தான். "இரண்டு பக்கமும் கண்டித்து விட்டு நடுநிலை வகிக்கும் தெரிவும்", அவர்களுக்கு இருந்தது. தமிழ் மக்களின் வலதுசாரித் தலைமையை நிராகரிக்கும் உரிமை அவர்களுக்குண்டு. அதே நேரம், தமிழ் மக்கள் பாதிக்கப் பட்டதையும் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். "உலகில் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாக் கொள்கையை" பின்பற்றும் சீனாவுக்கும் இது பொருந்தும். அவர்களது செயற்பாடுகள், தமிழ் மக்களை மென்மேலும் மேலைத்தேய விசுவாசிகளாக மாற்றி வருவதை கவனத்தில் எடுக்க வேண்டும்.

சேகுவேரா கியூபாவை விட்டு வெளியேறியவுடன், தூய்மையான கம்யூனிசக் கொள்கையும் அவரோடு விடை பெற்றுச் சென்று விட்டது. பிடல் காஸ்ட்ரோ, குருஷோவின் உலக அரசியலுக்கேற்ப ஆடத் தொடங்கினார். தமது அதிகாரத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஆப்பிரிக்க தலைவர்களை பாதுகாக்கும் பொறுப்பை, குருஷோவ் கியூபாவிடம் ஒப்படைத்தார். அங்கோலாவில் கியூபாப் படைகள் சென்றதால், நிறவெறி தென்னாபிரிக்காவின் படையெடுப்பு முறியடிக்கப் பட்டது. அதே நேரம், அங்கோலாவில் சில சிறுபான்மை இனங்களின் பிரதிநிதியான யுனிட்டா கிளர்ச்சிப் படையையும் எதிர்த்துப் போரிட்டது. அங்கோலா அரசை சோவியத் யூனியனும், யுனிட்டாவை சீனாவும் ஆதரித்தன. அதாவது, ஒடுக்குபவனின் பக்கம் நின்றதும் ஒரு கம்யூனிச நாடு. ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நின்றதும் இன்னொரு கம்யூனிச நாடு. இந்த முரண்பாடு எதனால் ஏற்பட்டது? இந்தக் கேள்விக்கு தமிழ் தேசியவாதிகளிடம் பதில் உண்டா?

"எத்தியோப்பியா விவகாரம்", தனது வெளிவிவகாரக் கொள்கையில் ஏற்பட்ட மாபெரும் தவறு என்று, கியூப அரசு பிற்காலத்தில் ஒத்துக் கொண்டது. எத்தியோப்பியாவில் கியூபாப் படைகளின் பிரசன்னத்தால், நன்மையை விட தீமையே அதிகமாக விளைந்தது. எத்தியோப்பியாவின் ஒகடான் பிரதேசத்தில் வாழும் சோமாலிய சிறுபான்மையினரின் எழுச்சியை அடக்குவதற்காகத் தான், கியூபப் படைகள் தருவிக்கப் பட்டன. அயல்நாடான சோமாலியாவில் இருந்து படையெடுப்பு நடத்தப் பட்டதை மறுப்பதற்கில்லை. என்ன இருந்தாலும், ஒரு சிறுபான்மையினத்தை ஒடுக்குவதற்கு, கியூபா ஏன் துணை போனது? ஆப்பிரிக்காவில் எங்கேயும், கம்யூனிச நாடு என்ற ஒன்று இருக்கவில்லை. பனிப்போர் காலத்தில், ஒரு பக்கம் அமெரிக்காவையும், மறுபக்கம் ரஷ்யாவையும் ஏமாற்றி பிழைத்தவர்கள் பலர். ஒரு காலத்தில் சோவியத் முகாமில் இருந்த சோமாலியா, அமெரிக்க முகாமுக்குள் போய்ச் சேர்ந்து கொண்டது. செங்கடல் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த சோவியத் யூனியன், எத்தியோப்பியாவை கைக்குள் போட்டுக் கொண்டது.

அன்று எத்தியோப்பியாவை ஆண்ட மெங்கிஸ்டுவும் ஒரு "கம்யூனிஸ்ட்" தான். அவரின் ஆட்சிக் காலத்தில் தான், தனி நாடு கோரிய எரித்திரியர்களின் போராட்டம் கடுமையாக அடக்கப் பட்டது. அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஒராமோ சிறுபான்மையினரை அடக்குவதற்கு, பஞ்சம் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப் பட்டது. இந்தப் பிரச்சினைகள் நடந்து கொண்டிருந்த போதெல்லாம், கியூபப் படைகள் எத்தியோப்பியாவில் நிலை கொண்டிருந்தன. சிறுபான்மை இனங்களை ஒடுக்கிய மெங்கிஸ்டுவின் சர்வாதிகார ஆட்சிக்கு, சோவியத் யூனியன் ஆயுதங்கள் கொடுத்து ஆதரித்தது. அப்பொழுதெல்லாம், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து நிற்க வேண்டிய கம்யூனிசக் கடமை பற்றி, யாரும் சோவியத் யூனியனுக்கு பாடம் எடுக்கவில்லை. அது ஏன்?

"ஐ.நா. அவையில், கியூபா இலங்கை அரசுக்கு சார்பாக வாக்களித்தது," என்ற ஒரே காரணத்திற்காக, நமது வலதுசாரித் தமிழ் தேசியவாதிகள் இந்தக் குதி குதிக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், சோமாலிய, ஒரோமோ, எரித்திரிய சிறுபான்மையின மக்கள், கியூபாவை எந்தளவுக்கு வெறுத்திருக்க வேண்டும்? அது போகட்டும். தமிழர்களின் அயலில் வாழும் சிங்கள இன மக்கள், 1971 கிளர்ச்சியை ஒடுக்க உதவிய கம்யூனிச நாடுகள் மீது எந்தளவு வெறுப்புக் கொண்டிருக்க வேண்டும்? மேற்குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் எவரும், சில "கம்யூனிச" நாடுகளின் தவறான முடிவுகளுக்காக, கம்யூனிசத்தை வெறுக்கவில்லை. ஜேவிபி யை ஆதரிக்கும் சிங்களவர்கள், கணிசமான தொகை உறுப்பினர்களும், இப்பொழுதும் சோஷலிசத்தில் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் இன்று சோஷலிசப் புரட்சிக்கான புதிய கட்சியை (Progressive Socialist Party) ஸ்தாபித்துள்ளனர். எரித்திரியாவின் விடுதலைக்காக போராடிய EPLF உறுப்பினர்கள், மார்க்சியத்தை மறக்கவில்லை. ஒரோமோ, சோமாலிய சிறுபான்மையின மக்கள் யாரும் சோஷலிசத்தில் குறை காணவில்லை. ஆனால், தமிழர்கள் மட்டும் ஏன் இப்படி தடுமாறுகிறார்கள்? தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம், எந்த வர்க்கத்தின் நலன்களுக்காக முன்னெடுக்கப் படுகின்றது என்பதில் தான், இந்தக் கேள்விக்கான விடை மறைந்துள்ளது. அவர்களது எஜமானர்களை திருப்திப் படுத்துவதற்காக, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்கின்றனர்.

அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பால் பூகோள அரசியல் என்ற ஒன்றுண்டு. ரஷ்யப் புரட்சி நடந்த காலத்தில், குரோன்ஸ்டாத் (Kronstadt) சோவியத் அமைப்பை நிர்மூலமாக்கிய செம்படையின் இராணுவ நடவடிக்கையை எப்படி நியாயப் படுத்துவீர்கள்? சோவியத் யூனியனும், சீனாவும் எல்லைகளில் படைகளை குவிக்கவில்லையா? ஹங்கேரி, செக்கோஸ்லோவாக்கியா ஆகிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மிதவாத கம்யூனிஸ்ட் தலைவர்களின் ஆட்சியைக் கவிழ்க்க, சோவியத் படைகளை அனுப்பவில்லையா? கம்யூனிச சீனாவுக்கும், கம்யூனிச வியட்நாமுக்கும் இடையில், எதற்காக எல்லைத் தகராறு காரணமாக போர் மூண்டது? கம்போடியாவில் பொல்பொட்டின் கம்யூனிச அரசை கவிழ்ப்பதற்காக, கம்யூனிச வியட்னாம் படையெடுத்த காரணம் என்ன? அத்தகைய சந்தர்ப்பங்களில், கம்யூனிச சகோதரத்துவம் எங்கே காணாமல் போனது?

ஒரு கம்யூனிஸ்ட் நாட்டினால் தாக்கப் பட்டோம் என்பதற்காக, அந்த நாடுகளின் மக்கள் யாரும் கம்யூனிசத்தை வெறுக்கவில்லை. போர் முடிந்த பின்னரும், அந்த நாடுகளில் சோஷலிசம் தொடர்ந்து இருந்தது. பூகோள அரசியல் வேறு, கம்யூனிச சித்தாந்தம் வேறு என்ற அரசியல் தெளிவு அந்த மக்களுக்கு இருந்தது. மேற்குறிப்பிட்ட சம்பவங்களைப் பற்றி, சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தினுள் விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்த காலங்களில், முதலாளித்துவ நாடுகள் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டன. உணர்ச்சிகரமான பேச்சுகளால் இனவாதத்தை தூண்டி விட்டு, கம்யூனிச வெறுப்பை விதைத்தார்கள். வலதுசாரித் தமிழ்த் தேசியவாதிகளும், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் செய்கின்றனர். தமிழ் மக்கள் விழிப்பாக இருந்து, மக்கள் விரோதிகளின் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும்.

சில கேள்விகளுக்கு விடை தேடினால், உங்களுக்கு குழப்பமே மிஞ்சும். சோவியத் யூனியனால் ஆதரிக்கப் பட்ட சியாட் பாரெயின் சோமாலியா, எவ்வாறு அமெரிக்காவினால் அரவணைக்கப் பட்டது? கம்யூனிச அங்கோலா, சோவியத் ஆயுதங்கள் வாங்கவும், கியூபா படைகளை பராமரிக்கவும் பணம் எங்கிருந்து வந்தது? அமெரிக்க கம்பனிகளுக்கு எண்ணை விற்ற வருமானத்தில் இருந்து செலவிடப் பட்டது! அங்கோலாவின் கம்யூனிச அரசை வீழ்த்த போராடிய கிளர்ச்சிப் படையான யுனிட்டாவுக்கு அமெரிக்கா தாராளமாக உதவி வந்தது. பின்னர் அதே அமெரிக்கா, யுனிட்டாவை அழிக்கும் இராணுவ நடவடிக்கையில், அங்கோலா அரசுக்கு உதவியது. அமெரிக்கா ஒரு காலத்தில், யூகோஸ்லேவியா, ரொமேனியா, சீனா போன்ற கம்யூனிச நாடுகளுடன் உறவு வைத்திருந்தது. கம்போடியாவில் இருந்து விரட்டப்பட்ட பொல்பொட்டின் படைகளுக்கு உதவியது. அதே போன்று, சோவியத் யூனியனும் இந்தியா, இந்தோனேசியா, எகிப்து, ஈராக் போன்ற நாடுகளுடன் எல்லாம் சிறந்த நட்புறவைப் பேணியது. இதெல்லாம் அவர்களின் கொள்கைகளுக்கு விரோதமாகத் தெரியவில்லையா? ஐயா பெரியவர்களே, கம்யூனிசம், முதலாளித்துவம் போன்ற தத்துவங்களை விட, எண்ணை, இயற்கை வளங்கள், பிராந்திய பாதுகாப்பு போன்றவை முக்கியமாக கருதப்படும் காலம் இது. எல்லாவற்றிகும் மேலே பூகோள அரசியல் என்ற ஒன்றுண்டு.

ரஷ்யாவும், சீனாவும், கியூபாவும், இலங்கையுடன் நெருங்கி வர வைத்த காரணி எது? ஐ.நா. அவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற விடாமல் தடுக்கும் நோக்கம் என்ன? ஐரோப்பிய காலனியாதிக்கம் முடிவுக்கு வந்த பின்னர், அமெரிக்க முகாம், சோவியத் முகாம், இரண்டிலும் சேர விரும்பாத நாடுகள் பல இருந்தன. சில நாடுகள் வெளிப்படையாக அப்படிக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அவை எல்லாம் ஒன்று சேர்ந்து, மூன்றாவது அணியை உருவாக்கின. அவை தம்மை "அணிசேரா நாடுகள்" என்று அழைத்துக் கொண்டன. மார்ஷல் டிட்டோ (யூகோஸ்லேவியா), ஜவஹர்லால் நேரு (இந்தியா), சுகார்னோ (இந்தோனேசியா), பிடல் காஸ்ட்ரோ (கியூபா), இவர்களுடன் சிறிமாவோ (இலங்கை) போன்ற முக்கிய தலைவர்கள், அந்த சர்வதேச அமைப்பை உருவாக்க முன் நின்று பாடுபட்டார்கள். சோவியத் யூனியனும், சீனாவும் வெளியில் இருந்து கொண்டு ஆதரவு வழங்கின.

அணி சேரா நாடுகளும், ரஷ்யா, சீனா ஆகிய வல்லரசுகளும், மேற்கத்திய நாடுகளின் ஒவ்வொரு அசைவையும் சந்தேகக் கண் கொண்டு நோக்கினார்கள். மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகள் பற்றிப் பேசும் பொழுதெல்லாம், தமது நாட்டின் இறையாண்மையில் தலையிடுவதாக சந்தேகப் பட்டார்கள். அந்த நாட்டின் அரசு மிகத் தீவிரமான அமெரிக்க விசுவாசியாக இருந்தாலும், அவர்கள் மனதில் எச்சரிக்கை உணர்வு ஓடிக் கொண்டிருக்கும். ஏனென்றால், இந்த நாடுகள் எல்லாம், ஏதோவொரு உள்நாட்டுப் பிரச்சினையை தீர்க்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. மறு பக்கத்தில், மேற்கத்திய நாடுகள், "எந்தவொரு உள்நாட்டுப் பிரச்சினையுமற்ற" அமைதியான நாடுகளாக காட்சியளிக்கின்றன. அந்த நாடுகளிலும் பிரச்சினை இருந்தாலும், போர் வெடிக்குமளவிற்கு கொந்தளிப்பான நிலைமை காணப்படவில்லை. அவர்கள், பிற நாடுகளின் இனப்பிரச்சினைகளை தீர்க்கும் மத்தியஸ்தர்களாக, தம்மை நியமித்துக் கொள்கின்றனர். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். மூன்றாமுலக நாடுகளின் இனங்கள் பிளவு பட்டு மோதிக் கொண்டிருக்கும் வரையில், மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டாட்டம்.

எது எப்படி இருப்பினும், மூன்றாம் உலக நாடுகளின் மனித உரிமைகள் விவகாரம், மேற்கத்திய நாடுகளால் அளவுக்கு அதிகமாகவே கவனிக்கப் படுகின்றது. நாங்கள் அதனை ஒரு நல்ல விடயம் என்று வரவேற்கலாம். ஆனால், இன்னொரு பக்கத்தில் விரும்பத் தகாத எதிர் விளைவுகளையும் உண்டாக்குகின்றது. நேரெதிர் கொள்கைகளை கொண்ட அரசுகளைக் கூட, பொது எதிரிக்கு எதிராக ஒன்று சேர வைக்கின்றது. ஈரானுக்கும், வெனிசுவேலாவுக்கும் இடையில் எந்தக் கொள்கையில் உடன்பாடு? சீனாவுக்கும், சூடானுக்கும் இடையில் எந்த விடயத்தில் ஒற்றுமை காணப்படுகின்றது? ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக நிற்பதற்கு காரணமும் அது தான். அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த பொழுது, இஸ்லாமிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், சில ஆசிய நாடுகளும் எதிர்த்து வாக்களித்தன. அமெரிக்காவின் தீவிர விசுவாசிகளான சவூதி அரேபியா, உகண்டா போன்ற நாடுகளும் எதிர்த்து தான் வாக்களித்தன.

ஐரோப்பிய நாடுகள் தமது பிரச்சினைகளை தாமே தீர்த்துக் கொண்டது போல, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. ஆயினும் குறுகிய கால நலன்களை மட்டுமே சிந்திக்கும் அரசியல் தலைவர்கள், அத்தகைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு, இலங்கை ஆட்சியாளர்கள், இன்னமும் சிங்கள-தமிழ் இனப்பிரச்சினை நீடிப்பது தமது நலன்களுக்கு சாதகமானது என்று நினைக்கிறார்கள். மறு பக்கத்தில் தமிழ்த் தேசியவாதிகளும் அதையே விரும்புகின்றனர். இனப்பிரச்சினை தீர்க்கப் பட்டு விட்டால், அவர்களின் பிழைப்புக்கு வழியேது? இலங்கையில் மட்டுமல்ல, வேறு பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் இது தான் நிலைமை.

"ஆப்பிரிக்க நாடுகளுக்கு தமிழரின் பிரச்சினை பற்றிய போதுமான அறிவு கிடையாது. அதனால் தான் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தார்கள், அல்லது வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை." என்று சிலர் சப்பைக் கட்டு கட்டலாம். தமிழ் தேசியவாதிகள் பலருக்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள இனப்பிரச்சினைகள் குறிந்து எந்த அறிவும் கிடையாது. சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெற்ற, நைஜீரியா, எத்தியோப்பியா, மாலி ஆகிய நாடுகளில் நடந்த இன ஒடுக்குமுறை போர்களைப் பற்றி, நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கின்றனர்? அது சம்பந்தமான பிரச்சினை ஐ.நா. அவையில் விவாதிக்கப் பட்டால், யாருக்கு ஆதரவளிப்பார்கள்? ஏற்கனவே, பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகள், பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்த இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசி வருவது எமக்குத் தெரிந்தது தானே? வட அயர்லாந்தை ஒடுக்கும் பிரிட்டன் குறித்து அவர்களது நிலைப்பாடு என்ன?

இன்றைய உலகமயமாக்கப் பட்ட உலகில், ஒரு நாட்டின் பிரச்சினை பற்றிய தகவல்களை இணையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். அந்த வகையில், தமிழர் பிரச்சினை தெரியாமல் தான் இலங்கை அரசை ஆதரித்தாக கூறுவது ஏற்கத் தக்கதல்ல. முதலில், "இலங்கையை எதிர்த்த நாடுகள் அல்லது ஆதரித்த நாடுகள்" என்று கூறுவது சரியாகுமா? ஐ.நா. போன்ற சர்வதேச அரங்கில் விவாதிக்கப் படும் பொருளானது, சர்வதேசத்தின் பொறுப்புணர்வை வேண்டி நிற்கின்றது. அந்த இடத்தில், வல்லரசுப் போட்டிகள், ஆதிக்க அரசியல், பொருளாதார நலன்கள், இவை யாவும் கருத்தில் எடுத்துக் கொள்ளப் படும். எந்தவொரு நாடும், அமெரிக்கா உட்பட, தமிழர் சார்பாகவோ, அல்லது சிங்களவர் சார்பாகவோ நடந்து கொள்வதில்லை. அப்படி நாங்கள் தான் நினைத்துக் கொள்கிறோம். நியாயம் என்று பார்த்தாலும், "பொது நியாயம்" என்ற ஒன்று உலகில் கிடையாது. ஒவ்வொரு குழுவும், தமக்கு சார்பான நியாயம் பேசுவதில் தான் முனைப்புக் காட்டுகின்றனர்.

பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் உலக மேலாதிக்கத்திற்காக போட்டி போட்டன. ஐ.நா. சபையில் தமக்கு ஆதரவான தேசங்களை பாதுகாத்தன. இன்று மீண்டும் புதியதொரு வல்லரசுப் போட்டி, புதியதொரு பனிப்போர். "ஐ.நா. விலும் உங்கள் நலன்கள் பாதுகாத்து தரப்படும்" என்ற வாக்குறுதி கொடுத்து ஆதரவாளர்களை சேர்க்கிறார்கள். முன்னொரு காலத்தில், ஒரு கொள்கைக்காக போராடிய காலம் இன்று இல்லை. இப்பொழுது சொந்த தேசம், சொந்த இனம் ஆகியவற்றின் நலன்கள் மட்டுமே முக்கியமாக கருதப் படுகின்றன. அதிலிருந்து தான் உலகத்தைப் பார்க்கிறார்கள். அது அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, இலங்கை, கியூபா எந்த நாடாகவிருந்தாலும், தமது தேச நலனை தான் முதன்மையாக கருதுகின்றனர். இரண்டு நாடுகளின் நலன்கள் ஒன்று சேரும் பொழுது, கூட்டாகச் செயற்படுகின்றனர். "தேசியம்" நமக்குத் தேவையா?

ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகளைப் பார்த்து, "கம்யூனிச நாடுகள்" என்று விளிப்பதும் காலத்திற்கு ஒவ்வாதது. "தமிழர்கள் எல்லோரும் இன அடிப்படையில் ஒன்று சேர வேண்டும்," என்று தேசியம் பேசும் தமிழ் தேசியவாதிகள், வெளி உலகத்தை, "கம்யூனிச நாடுகள்", "இஸ்லாமிய நாடுகள்" என்று பிரித்துப் பார்ப்பதன் தார்ப்பரியம் என்ன? அந்த நாடுகளுக்கென்று "தேச நலன்" இருக்க முடியாதா? முதலில் "கம்யூனிச நாடு" என்று அழைப்பது சரியாகுமா? மார்க்சிய சித்தாந்தத்தின் படி, கம்யூனிச நாடு இன்னும் உலகில் தோன்றவில்லை. இதுவரை இருந்தவை எல்லாம் சோஷலிச நாடுகள். அதன் அர்த்தம், அவற்றிற்கென்று தேசியம், இறைமை எல்லாம் உண்டு. தனது உரையின் முடிவில் பிடல் காஸ்ட்ரோ முழங்கும், "தந்தையர் நாடு இன்றேல் மரணம்" என்பது ஒரு கம்யூனிச சுலோகமா? "பாட்டாளிகளுக்கு தாய்நாடு கிடையாது" என்ற மார்க்சின் கூற்றோடு முரண்படவில்லையா?

நுணுக்கமாகப் பார்த்தால் தான், இங்கேயுள்ள தேசியங்களுக்கு இடையிலான முரண்பாடு வெளித் தெரியும். தேசியம் என்ற கோட்பாட்டின் குறைபாடும், அதற்குள் தான் மறைந்திருக்கின்றது. அதனால் தான் மீண்டும் மீண்டும் ஒன்றை ஞாபகப் படுத்த வேண்டியுள்ளது. உழைக்கும் மக்களுக்கு தேசியம் கிடையாது. தேசங்களுக்கு இடையிலான எல்லைகளை உடைத்து, அனைத்துலக உழைக்கும் மக்களை ஒன்று சேர்ப்போம்.

No comments:

Post a Comment