Sunday, 8 April 2012

அமெரிக்காவின் மிகச்சிறிய நகரை கைப்பற்றிய இரு வியட்நாம் குறு நில மன்னர்கள்?



ஒரே ஒரு நபர் வசித்து வந்த அமெரிக்காவின் மிகச்சிறிய நகரத்தை இரு வியட்நாம் வர்த்தகர்கள் ஏலத்தில் எடுத்துள்ள விவகாரம் ஊடகங்களில் இப்போது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் வுயோமிங் மாநிலத்தில் உள்ள புஃபோர்ட் (Buford) எனும் குறித்த  நகரம் மூன்று படுக்கை அறைகள் கொண்ட ஓர் வீடு, எரிபொருள் நிரப்பு நிலையத்துடன் கூடிய ஓர் வர்த்தக நிலையம், மேலும் சில அனாதரவான சிறிய கட்டிட தொகுதிகளை கொண்ட சிறிய நகரமாக இருந்துள்ளது. இங்கு வசித்தவர்கள் பெருநகரங்களை நோக்கி இடம்பெயர்ந்ததை அடுத்து,  தனது மனைவி மற்றும் மகனுடன், டோன் சமொன்ஸ் எனும் நபர் மட்டும் இறுதியாக வாழ்ந்துவந்தார்.
  இந்நிலையில் அவருடைய மனைவி 15 வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்ததை அடுத்து மகனும் தனது 18 வயதில் தந்தையைவிட்டு தனியாக சென்றுவிட்டான். இறுதியாக சாமொன்ஸ் மட்டுமே அக்கிராமத்தில் வாழ்ந்துவந்ததால் அவருக்கெனெ அமெரிக்க அரசினால் தனியான தபாள் அடையாள அட்டை இலக்கம்  கூட கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது அவரும்  அந்நகரத்தை விட்டு செல்ல முடிவெடுக்கவே புஃபோர்ட் நகரம் ஏலத்தில் விடப்படுவதாக ஆன்லைன் மூலம் அறிவிக்கப்பட்டது. இதை கேள்விப்பட்ட இரு வியட்நாமிய செல்வந்த வர்த்தகர்கள் அங்கு சென்று ஏலத்தில் பங்கெடுத்ததுடன், 900,000 அமெரிக்க டாலர்களுக்கு அக்கிராமத்தை வாங்கிக்கொண்டனர். எனினும் அவ்வர்த்தகர்களின் பெயர், விபரங்கள் ஏதும் வெளிவிடப்படவில்லை. அவர்கள் அக்கிராமத்தை வைத்து என்ன செய்ய போகிறார்கள் என்பதும் தெரியவில்லை.

அமெரிக்காவின் மிகச்சிறிய நகரமாக இதுவரை வரலாற்றில் பதியப்பட்டிருந்த புஃபோர்ட் நகரம் இந்த ஏலத்தின் மூலம் தனது பெருமையை இழந்துள்ளதாக கருதும் டான் சாமொன்ஸ், தனது வாழ்நாளில் பாதியை இங்கு வாழ்ந்திருந்ததால் இக்கிராமத்தை விட்டு தன்னால் பிரிய முடியாதுள்ளதாக உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

தனியொரு நகரத்தையே ஏலத்திற்கு விடும் இப்புதிய வர்த்தக முறை வருங்காலத்தில் பிரபலமாக தொடங்கினால், அவற்றை வாங்கும் நபர்கள், குறு நில மன்னர்கள் போல தனி ஆட்சியே நடத்த முடியும் நிலை தோன்றக்கூடும் என்கிறார்கள் விமர்சகர்கள்.

No comments:

Post a Comment