Monday, 21 May 2012

30 ஆண்டுகளாக யுத்த பூமி… 3 ஆண்டுகளுக்கு முன் மரண பூமி… இன்று ஈழம்… மயான பூமி!



எத்தனை பூச்செடிகள் வைத்து மறைத்தாலும், மயானக் கரை நாற்றம் மறையாது. 30 ஆண்டுகளாக யுத்த பூமி… 3 ஆண்டுகளுக்கு முன் மரண பூமி… இன்று ஈழம்… மயான பூமி! சீனத்து சென்ட், ரஷ்ய அத்தர், கியூபா ஜவ்வாது என எதைக் கொண்டுவந்து ராஜபக்சாக்கள் தெளித்தாலும்… நள்ளிரவில் எழும் இரத்த ஓலங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அரண்டுகிடக்கும் அரசாங்கத்துக்கு இருண்டதெல்லாம் புலியாகத் தெரிகிறது. ஒரே ஒரு ஆள் புலிக்கொடியை, மே தின ஊர்வலத்தில் காட்ட… கொழும்பில் வெடி வெடித்த அளவுக்குக் குமுறல்கள். (இதை அரசாங்கத்தின் செட்- அப் என்று சொல்பவர்களும் உண்டு! ) உலக நாடுகளில் எது நண்பன், எது எதிரி என்பதைக் கண்டுபிடிப்பது மட்டுமே இன்றைய இலங்கை அரசாங்கத்தின் வேலையாகிவிட்டது.

சிங்களவர் உட்பட எவரைப் பற்றிய கவலையும் இல்லாமல், தன் குடும்பம் காப்பாற்றப்பட்டால் போதும் என்ற நினைப்புடன் ராஜபக்ச நாட்களைக் கழித்ததால்… கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.

போர் முடிந்து நான்காவது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் ஈழ அரசியல் எப்படி இருக்கிறது?
குடும்ப யுத்தம்! ஜனாதிபதி ராஜபக்சவுக்கு அடுத்த இடத்தை யார் பிடிப்பது என்ற கோஷ்டி யுத்தம் கொழும்பு அலரி மாளிகைக்கு உள்ளே தொடங்கிவிட்டது. அண்ணனுக்கு அடுத்த இடத்துக்கு வர வேண்டும் என்று ஆரம்பத்தில் நினைத்த கோத்தபாய ராஜபக்ச, இன்றைய அதிகார ருசியே போதும் என அமைதியாகிவிட… அடுத்த தம்பியும் அமைச்சருமான பசில் ராஜபக்ச தனது இலக்கைத் தீர்மானித்துவிட்டார்.

ஆனால், இது மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்திக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அப்பாவின் பட்டத்தை மகன்தான் ஏற்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். மகன் நாமல் ராஜபக்ச, எம்.பி. ஆனது இப்படித்தான். சமூக சேவைக் காரியங்களை முன்னின்று செயல்படுத்திவரும் நாமல், இன்னும் இரண்டு மாதங்களில் இலங்கையில் அமைச்சராகவும் பொறுப்பேற்கப் போகிறார். தம்பி பசிலா; மகன் நாமலா என்ற யுத்தத்தில், இருக்கப்போவது யார் என்று இரண்டொரு ஆண்டுகளில் தெரிந்துவிடும்.

சிங்களவர் குடியேற்றம்!
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழர் பெரும்பான்மையாக இருந்தால்தானே ‘தமிழ் ஈழம்’ என்றெல்லாம் பேச முடியும்? இந்தப் பகுதியில் தமிழர்களைச் சிறுபான்மையினர் ஆக்கிவிட்டால் போதாதா? தமிழர்களைக் கொன்றதில் பாதி சதவிகிதம் குறைந்தது. இப்போது இந்தப் பகுதியில் சிங்களவர்களைக் குடியேற்றுவதில் மும்முரமாக உள்ளார்கள். 20 சிங்களக் குடும்பங்கள் இருந்த பகுதிகளில் இப்போது 500 குடும்பங்கள் உள்ளன.

இராணுவ வீரர்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறோம் என்ற பெயரில் சிங்கள வீரர்களுக்கு இடங்கள் தாரை வார்க்கப்படுகின்றன. இதைவைத்துக் குடும்பம் குடும்பமாகக் குடியேறுகிறார்கள். தெற்கு இலங்கையில் இருந்து மீன் பிடிப்பதற்காக வரும் சிங்கள மீனவர்கள்… ஒரு சில மாதங்களில் வட கிழக்குப் பகுதியில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள். தமிழர்கள் தங்களது நிலங்களைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. இடம்பெயர்ந்து கொண்டே இருந்ததால் பலரிடம் நிலப் பத்திரங்களும் இல்லை. மொத்தத்தில் எல்லாமே தொலைந்துபோய் நிற்கிறான் தமிழன்!

சர்வம் புத்தமயம்!
ஈழம் – எப்போதும் சைவத் திருத்தலம். சைவத்துக்கு அவர்கள் அருளிய இலக்கியங்களே அவ்வளவு இருக்கும். யுத்தத்துக்குப் பிறகு புத்த பூமியாக ஆக்க முயற்சித்தார்கள். புதிய புத்த கோயில்கள், விகாரைகள் எழுப்புவதுகூட அவர்கள் உரிமையாக இருக்கலாம். ஆனால், சைவத் தலங்களுக்குப் பக்கத்தில்தான் அமைப்போம் என்று அடம்பிடித்துச் செய்கிறார்கள். பலஆண்டு பழமையான திருக்கேதீச்சரம் திருக்கோயில், சிவபூமி என்று அழைக்கப்படும். இந்தக் கோயிலுக்கு அருகில் 1,500 கிலோ எடை கொண்ட புத்தர் சிலை அமைக்கப்படுகிறது. இந்த கிராமத்தைச் சுற்றி 185 தமிழ்க் குடும்பங்கள் இருந்தன. அவர்களைக் குடியேற விடாமல் தடுத்தார்கள்.

கொக்கிளாய், கொக்குத் தொடுவாய் மட்டும் அல்ல… வன்னிப் பிரதேசம் எங்குமே பௌத்த மதத்தின் ஆக்கிரமிப்பும் புத்த சிலைகளின் பிரதிஷ்டைகளும் தாராளமாக நடக்கின்றன!

முஸ்லிம்களுக்கும் வேட்டு!
தமிழர்களை முடித்த பிறகு, முஸ்லிம்களின் கழுத்து சிங்களவர்களிடம் சிக்கியுள்ளது. புத்த மதத்துக்கு இஸ்லாமும் எதிரானதே என்று சொல்லி, இப்போது அவர்கள் மீது பார்வை பதிந்துள்ளது. தம்புள்ளை பள்ளிவாசல் சமீபத்தில் தாக்கப்பட்டது இதற்கான தொடக்கம். 20 ஆண்டுகளுக்கு முன் பிரேமதாசா பிரதமராக இருந்த காலத்தில், இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் இருக்கக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டது. அதனால், இந்தியாவில் இருந்து இலங்கைக்கான இஸ்ரேல் தூதர் இயங்கினார். இப்போது மறுபடியும் இஸ்ரேல் தூதர் இலங்கையில் இயங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது முஸ்லிம்களை அச்சப்பட வைத்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதற்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்து உள்ளது. ஆனால், அதனை ராஜபக்ச மதித்ததாகத் தெரியவில்லை.

ஆண்கள் இல்லை, விதவைகள் உண்டு!
வீரம் விளைந்த ஈழத்தில் இப்போது விதவைகள் மட்டுமே உண்டு. சுற்றிலும் விளைநிலங்கள் இருக்க… நடுவில் வீடு அமைத்து வாழும் வழக்கம் அந்தப் பகுதி மக்களுக்கு உண்டு. நிலங்கள் தரைமட்டம் ஆனது போலவே மக்கள் வாழ்க்கையும் ஆனது. இளைஞர்கள் புலிகளாகக் கொல்லப்பட… முதியவர்கள் குண்டுகளால் தீர்க்கப்பட… எஞ்சியது பெண்கள் மட்டுமே.

கொஞ்சம் வசதியானவர்கள் இராணுவத்துக்குப் பணம் கொடுத்துத் தப்பிவிட்டார்கள். மிச்சம் இருப்பவர்களுக்கு, அச்சுறுத்தும் சூழ்நிலையும் ஆரோக்கியமற்ற உணவும் மட்டுமே துணையிருப்பதால், உடம்பில் எந்தத் தெம்பும் இல்லாமல் மூச்சுக் குழாய் மட்டுமே இயங்குகிறது. போதிய ஊட்டச் சத்து இல்லாததால், பள்ளிக்கூடத்துக்குப் படிக்கப்போன பிள்ளைகள் உட்கார முடியாமல் மயங்கி விழும் கொடுமையைக் கேட்கவே கசக்கிறது.

அகதிகள் அல்ல, அடிமைகள்!
அகதி என்ற வார்த்தைக்குச் சில உரிமைகளும் பல தேவைகளும் கிடைக்கும். ஆனால், ஈழத் தமிழனுக்கு எதுவும் இல்லை. கொத்தடிமைகளைவிடக் கேவலமான இழி அடிமைகளாக நடத்தப்படுகிறான்.

அகதி முகாமில் இருந்து ஊருக்குள் ‘வாழ’ அனுப்பிவைக்கப்பட்ட மக்களுக்கு 12 கூரைத் தகடுகள், ஒன்றிரண்டு தார்ப்பாய்கள், மரக் கழிகள் வழங்குவோம் என்பது அரசாங்கத்தின் வாக்குறுதி. இதை வாங்குவதற்குள் பலரும் அவஸ்தையின் உச்சத்துக்குச் சென்றுவிடுவார்கள்.

தங்கள் நிலம் எது எனத் தெரியாததால், ஏதாவது கூலி வேலைக்குச் சென்று தினமும் கூலி வாங்கினால்தான் சாப்பாடு என்ற நிலை. கடைகள் போட முடியாது. இராணுவம் மிரட்டுகிறது. சிங்களக் கடைக்கு வேலைக்குப் போகலாம். அல்லது தெருவில் பாய் விரித்து எதையாவது விற்கலாம் என்பதே நிலைமை. பத்தடி தூரத்துக்கு இராணுவக் கண்களும் ‘கன்’களும் இருப்பதால் தமிழனால் எதுவுமே செய்ய முடியாது, படுத்துக் கிடப்பதைத் தவிர.

வளர்ச்சி யாருக்காக?
தமிழ்ப் பகுதிகளை வளர்க்கத் திட்டம் போடுகிறேன்” என்பது ராஜபக்ச சிரிக்காமல் சொல்லிவருவது. ஆனால், இந்த வளர்ச்சிகள் தமிழனுக்குப் பயன்படவில்லை என்பதுதான் உண்மை. எல்லா இடங்களிலும் வீதிகள் போடுகிறார்கள். இதுதான் வளர்ச்சி. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் வி.பி.சிவநாதன், ”அதிகாரத்தினை விரைவாகப் பிரயோகிக்கவே வீதிகள் அமைக்கப்படுகின்றன. இராணுவத் தளபாடங்களை இங்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளும் இதில் உண்டு. தெற்கில் உள்ள பெருமுதலாளிகள் இங்கு வந்து பொருட்களை எடுத்துச் செல்ல இவை பயன்படுகின்றன.

கடல் உணவுகளின் விலை என்னவென்று தெரியாமல், மீனவர்கள் தென்னிலங்கை முதலாளிகளிடம் விற்றுவிட வேண்டி உள்ளது. எனவே, இந்த அபிவிருத்தியால் நாம் இழந்ததே அதிகம்” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

‘அபிவிருத்திக்காக அரசாங் கத்தினால் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுப் பணம் ஏதோ ஒரு வகையில் தென்னிலங்கைக்கே திரும்பிச் செல்கிறது” என்பதும் இவரது குற்றச்சாட்டு. உலகின் பிடியில் சிறு உருண்டை!

உலகத் தண்ணீர்த் தொட்டிக்குள் சிறு உருண்டையாகக் கிடக்கும் ஈழத்தில் நடப்பது உடனுக்குடன் உலக நாடுகளின் கவனத்துக்குச் சென்றுவிடுவதுதான் ஆறுதலான ஒரே விஷயம்.

ஈழக் கொடூரத்தை முழுமையாக விசாரிக்க ஐ.நா. மூவர் குழு அமைக்க முடிவெடுத்தது ராஜபக்சவுக்கு முதல் நெருக்கடி. ‘நாங்களே விசாரணை செய்கிறோம்’ என்று அவரே ஒரு குழு அமைத்து… நல்ல பிள்ளையாக அறிக்கையும் கொடுத்துக்கொண்டார். ‘அந்த அறிக்கையின் மீது என்ன நடவடிக்கை எடுத்தாய்?’ என்று ஜெனீவா கேள்வி கேட்டதும்தான், இப்படி ஒரு விசாரணை கமிஷன் அமைத்திருக்க வேண்டாமோ என்ற சிந்தனையை ராஜபக்சவுக்கு விதைத்தது.

ஐ.நா. மன்றம் அக்டோபர் மாதம் வரை கெடு கொடுத்துள்ளது. தமிழர்களுக்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நலத்திட்டங்கள் செய்யப்பட்டன என்பது முதல்… குற்றவாளிகளுக்கு எந்த மாதிரியான தண்டனை தரப்பட்டது என்பது வரை… பதில் சொல்ல வேண்டிய நெருக்கடி ராஜபக்சவுக்கு உண்டு. அதற்கான அவகாசம் ஐந்து மாதங்கள்தான். இறந்தவர் ஆத்மா சாந்தி அடையும் நடவடிக்கையை அக்டோபரிலாவது ஐ.நா. எடுக்குமா?

ஆனந்த விகடன்

சாவில் எழுதப்பட்ட சரித்திரம்!



“அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரமடைந்ததால் அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்த போது தான் வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது”

இது 2008ம் ஆண்டு கார்த்திகை 27, மாவீரர் தினத்தன்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய உரையில் மீண்டும் ஒருமுறை உலகுக்குத் தெரியப்படுத்தி இருந்தார்.

ஏனென்றால் எம்மவர்களில் சிலர் “உந்தப்பெடியள் தேவையில்லாத வேலை பார்த்துத் தான் ஆமி தமிழனை கலைச்சுக் கலைச்சு அடிக்கிறான்” என்று தம்மைப் படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் கூட கதைத்ததுண்டு.அந்தவகையில் அவ்வாறானவர்களுக்கு ஏன் இந்த விடுதலை அமைப்பு உருவானது என்று தனது 20 நிமிட உரையில் இதற்கு முக்கியத்துவத்தினைக் கொடுத்துள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அத்துடன் அவர்களைப் போன்றவர்களுக்கு மேலும் “சிங்கள அரச ஆயுத பயங்கரவாதத்தில் இருந்து எம் மக்களைக் காக்கவே நாம் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப் பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை வரலாறு தான் எம்மிடம் கையளித்தது” என்றும் சொல்லியிருந்தார்.

இவ்வாறான தெளிவுபடுத்தல்களை யாருக்காகச் செய்ய வேண்டும்? 30 வருடங்களாக போராட்டம் ஆரம்பித்து நடாத்தி வரும் ஒரு அமைப்பு, மூன்றாவது தசாப்தத்தின் பின்னர் இதனைச் சொல்ல வேண்டிய தேவை ஏன் இருந்தது?

இங்கு தான் எமது கண்கள் அகல விரிந்து பல கேள்விகளைக் கேட்டு நிற்கின்றது. ஒரு சீரான நெறிப்படுத்தலில் காலாட்படையணிகள் கொண்ட இராணுவக் கட்டமைப்பு, புலனாய்வு அமைப்பு, விமானப்படை, கடற்படை, நீதிநிர்வாகம்,காவல்துறை, வைப்பகம்,என ஒரு நிழல் அரசாங்கத்தையே ஒரு தசாப்தத்திற்கு மேலாக நடாத்திவந்த அமைப்பின் தலைவர் கூறியதற்கு காரணமிருக்கத் தான் செய்தது.

கிட்டத்தட்ட போராட்டத்தின் இரண்டாம் கட்ட எழுச்சிகளில் இருந்து போராட்டத்தில் பங்கு பற்றி இராணுவக் கட்டமைப்பின் கட்டளைத் தளபதியாக இரந்த ஒரு தளபதியின் தூர நோக்கற்ற துரோகத்தனம், அவரை பாதுகாப்பதற்காக தம்மையே தியாகம் செய்து மோதிவெடித்த கரும்புலிகள், அவரது கட்டளையின் கீழ் சென்று வீரச்சாவடைந்த போராளிகள் என அனைவரது தியாகங்களையும் மறந்து, தன் ஒருவரினுடைய சுயநலத்திற்காக, தனது பிழையை மறைப்பதற்காக, பிரதேசவாதத்தை மக்களிடையே தூண்டி தனது துரோகத்தனத்தை மறைப்பதற்கு முயற்சி செய்து முடியாததால் அரசாங்கத்துடன் இணைந்து போராட்ட அமைப்பின் தந்திரோபாயங்களைக் காட்டிக் கொடுத்து அரச இராணுவ இயந்திரத்தால் மக்களைக் கொன்று தமிழர் பிரதேசங்களை கையகப்படுத்திக் கொள்வதற்கு காரணமாக இருக்கும் போது, மற்றவர்களால் ஏன் கடைசியா போராட்டத்தில் இணைந்த போராளிகளுக்குக் கூட எப்படி இந்தப் போராட்டத்தினைப் பற்றி விளங்கப் போகின்றது என்ற சந்தேகத்திலோ அல்லது ஏக்கத்திலோ சொல்லியிருக்கலாம்.

அந்த ஒருவர் செய்த துரோகம் தமிழனை ஓடி ஓரிடத்தில் ஒடுங்க வைத்து பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து இன்றும் பல தமிழர்களைச் சிறையில் வைத்து பல தமிழச்சிகளை விதவைகளாக்கி, பல குழந்தைகளை அநாதைகளாக்கி, தமிழனது பேசும் சக்தியை, தாயக நிலத்தை,சுயநிர்ணய உரிமையை, தன் தனித்துவத்தை என அனைத்தையும் இழந்து “மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக” தமிழனின் அடிமை வாழ்வு முப்பது வருடங்களின் பின்னர் மீண்டும் மலைபோல் எழுந்து நிற்கின்றது.

இன்று எந்த இணையச் செய்தியைத் திறந்தாலும் கொலை,கொள்ளை, கற்பழிப்பு, விபச்சாரம், புதிதாக முளைக்கும் புத்தர் சிலைகள், காணிகள் பறிமுதல் என பார்க்கவே முடியவில்லை. இவ்வாறான நிகழ்வுகள் அந்த தமிழனின் பேசும் சக்தி இருக்கும் போது நடந்ததில்லை. அதைவிட சில அந்த படித்தவர்கள் தம்பியாக்கள் இருந்த போது எங்கட பிள்ளையள் பயமில்லாமல் பள்ளிக்கூடம் போட்டு வந்தார்கள். ஆனால் இப்போ, போன பிள்ளை திரும்பி வருமோ,வரும் போது ஒரு பிரச்சனையுமின்றி வந்து சேருமா, என்று ஒரே ஏக்கமாக இருக்கின்றது” என்று தமது படித்த வட்டாரங்களுக்குள்ளேயே இப்போது பேசிக்கொள்கிறார்களாம். இவை எல்லாம் காலம் கடந்த ஞானங்களாகவே ஏற்பட்டிருக்கின்றன.

இன்று தமிழர், விடுதலை என்ற பெயர் கொண்ட பல அமைப்புக்கள் இருந்த போதும் அனைத்தும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. ஏனென்றால், அவர்கள் இவ்வாறான விடயங்களைக் கேட்பதுமில்லை, அப்படி அவர்கள் கேட்டாலும், அரசாங்கம் அதனை கருத்தில் எடுக்கப் போவதுமில்லை. அப்படியான ஒரு நிலையை அங்கு உருவாக்கி விட்டார்கள்.

நாம் எமது குறைபாடுகளையும் இங்கே சொல்லியாக வேண்டும். சிங்கள பயங்கரவாத அரசு தமிழனை கொடுங்கரம் கொண்டு அடக்கியொடுக்க முனைந்த போது சிங்களக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஒரே குரலில் பேராதரவை வழங்கி ஊக்கத்தைக் கொடுத்தன. ஆனால் எமது தமிழமைப்புக்கள் என்ன செய்தன?

தமிழர்களுக்கென உள்ள தமிழ் அமைப்புக்கள் ஏராளம்… அவர்களுடைய கட்சியோ… அமைப்புக்களுடைய பெயர்களோ தமிழர் என்றோ, விடுதலை என்ற சொற்பதங்கள் இல்லாமல் அமைக்கப் படவில்லை. ஆனால் அவர்கள் ஒன்றுபட்டு தமிழர்களுக்காக ஒரே குரல் கொடுக்கத் தயங்குகிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் அரச பயங்கரவாதத்தின் வஞ்சக சூழ்ச்சியால், உலகமே திரண்டு வந்து தமிழர்களை முடக்கிக் கொன்ற போது தமது கட்சி பேதங்கள் மறந்து ஒரு எதிர்ப்பு அறிக்கை விடவில்லை.

ஏன் இலங்கையில் உள்ள எந்த தமிழ்க் கட்சிகளாவது, இதுவரை 40000 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு இரங்கல் நிகழ்வு நடாத்தவில்லை.. ஏன் இரங்கல் அறிக்கை கூட விடவில்லை… இப்போதும் பதவியாசையின் பிடியில் அரசாங்கத்தின் காலைப் பிடித்துக் கொண்டு, அவர்கள் சொன்னதயே கிளிப்பிள்ளை போன்று உலகுக்குச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவை தான் எம் தமிழர்களுக்கிடையில் உள்ள சாபக் கேடுகள். அது தான் பெரியவர்கள் சொல்வார்கள் சுயபுத்தி இருக்க வேண்டும் அல்லது சொல்புத்தியாவது இருக்க வேண்டும்” என்று. தேசியத்தலைவர் அவர்களும் இது விடயமாக சில வரிகளை அதே மாவீரர் தினத்தில் சொல்லியிருக்கின்றார்.

“மனித துயரங்களுக்கெல்லாம் அடங்காத,அருவருப்பான ஆசைகளில் இருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசைகளின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது”

இன்று அமெரிக்கா ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை கையிலெடுத்து வந்து ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் முன்வைத்து விவாதிக்கின்றது. இதனை எதிர்த்து எம் தமிழர்களே எமக்கெதிராக வாதிடுவது எவ்வளவு கேவலம்…? யானை சேற்றை அள்ளி தன் தலையிலேயே கொட்டிக்கொண்டது போல் தானே உள்ளது?

உதவி செய்யாது விட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கலாம் தானே? 40000 தமிழர்களை, எமது சொந்த இரத்தங்களை, கர்ப்பிணித் தாய்மார்களை, அக்கா தங்கச்சிகளை, அண்ணா தம்பிகளை,பிஞ்சுப்பாலகர்களை ஈவிரக்கம் பார்க்காது, சாப்பாடு கொடுக்காது கொத்தணிக் குண்டுகளை போட்டு அழிச்சது உங்களுக்குத் தெரியாதா?

வெள்ளைக்கொடியுடன் சமாதானம் பேச வந்த போராளிகளை அதே இடத்தில் சித்திரவதை செய்து உடுப்புக்கள் எல்லாவற்றையும் கழற்றிவிட்டு கொலை செய்தது உங்களுக்குத் தெரியாதா?

யாரோ ஒரு வெள்ளையன், லண்டனில் இருந்து கொண்டு சிங்கள அரசின் கொடுமைகளை, சித்திரவதைக் கொலைகளை வெளிக்கொண்டு வருவதற்கு அந்த ஆதாரங்களை எல்லாம் ஒன்று திரட்டி ஆவணப்படமாகத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.

எங்கோ உள்ள வெள்ளையனின் மனத்தில் உள்ள ஈரம், ஏன் எம் தமிழர்களின் மனங்களில் ஊறவில்லை? அவ்வளது கல்நெஞ்சம் கொண்டவர்களா தமிழர்கள்? மனிதாபிமானத்துக்கான யுத்தம் என்று பெயர் சூட்டி வந்து அவ்வளவு தமிழர்களைக் கொன்ற போது சிங்கள அரசு சொன்னது யுத்தம் முடிந்த பின்னர தான் தமிழர்களுக்கான தீர்வு முன்வைக்கப்படும் என்று.

ஆனால் இன்று வரை ஒன்றையும் கொடுப்பதற்கு அரசு தயாரில்லை என்பதை ஏன் எங்களால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை? பல தடவைகள் இது தொடர்பாகப் பேசுவதற்கு இந்திய அரச குழுக்கள், இலங்கை வந்து சென்ற போதும், ஒன்றையும் சாதித்துவிட முடியவில்லை. அவர்கள் இலங்கை வரும் போது ஒருகதையைச் சொல்லும் அரச இராஜதந்திரிகள், அவர்கள் நாடு திரும்பியதும் அவற்றை மறுத்து அறிக்கை விடுவதும் யாவரும் அறிந்ததே…

ஒரு மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். தமிழர்களே சிந்தியுங்கள். தாயகத்தில் உள்ள தமிழர்களை, எமது சொந்தங்களை இன்றும் கஷ்டப்பட்டு, மீண்டும் அடிமைத்தளைகளினுள் சிக்கியுள்ளார்கள். அவர்களை புலம்பெயர்ந்து வாழும் நாம் தானே மீட்டெடுக்க முன்வர வேண்டும்.. இந்த நேரத்தில் நாம் யூதர்களின் வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தோமானால் அனைவருக்கும் அனைத்தும் விளங்கும்.

யூதர்களை, நாசிகள் தமது இருப்பிடங்களை விட்டுத் துரத்திக் கொன்ற போது, அவர்கள் தப்பியோடி, பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் அவர்கள் எங்கு போன போதும் அவர்கள் தமது மொழி, கலாச்சாரத்தினை மறக்கவேயில்லை. அத்துடன் அவர்கள் தமக்கிடையே என்ன பிணக்குகள் இருந்த போதும் யூதர்கள், தமது தாயகம் என்று வந்தபோது, தமது பேதங்களை மறந்து ஒன்றுகூடி ஒற்றுமையாக குரல் கொடுத்தார்கள்.

தமது யூதர்கள் தொடர்பான செய்திகளை அறிந்த போது அங்கிருந்த அனைத்து யூதர்களுக்கும் பரப்பினார்கள். அத்துடன் அவர்கள் தமது கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டு உச்ச நிலையை அடைந்தார்கள். இன்று அவர்களது எண்ணம் ஈடேறி ஒற்றுமையாக ஒருநாட்டை உருவாக்கி சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார்கள். அது தான் இஸ்ரேல் தேசம்.

இன்று யூதர்களுக்கு எங்கு பிரச்சனையாக இருந்தாலும் குரல் கொடுக்கிறார்கள். அண்மையில் 2 யூதர்கள் பிரான்சில் யாரோ ஒருவரால் கொலை செய்யப்ப்பட்ட போது, அந்த யூதர்கள் பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவராக இருந்த போதும், இஸ்ரேல் பிரதம மந்திரியால் அவர்களின் கொலையைக் கண்டித்து கண்டன அறிக்கை விட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இதிலிருந்து நாம் எம்மை மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். இஸ்ரேலிய அரசு, ஏதோ ஒரு நாட்டில் குடியுரிமை பெற்ற 2 யூதர்களின் சாவுக்காக கண்டன அறிக்கை விட்டு தமது மக்களுக்கு ஒரு ஆணித்தரமான பாதுகாப்பை கொடுக்கின்றது.

ஆனால் எமது அமைப்புக்கள், தமது சுயநலனிலும் பதவியாசையிலும் மயங்கி தம் கண்முன்னாலேயே சித்திரவதை செய்து கொல்லப்பட்ட தமிழர்களுக்கு இரங்கல் அறிக்கை கூட வெளியிட மனமற்ற நிலைக்குத் தள்ளி வைத்துள்ளது. இலங்கை அரசின் கோரத்தனத்தை, இனவாதத்தை, இறந்த மாவீரர் துயிலும் இல்லங்களை இடித்ததில் இருந்தே புரிந்து கொள்ள முடியும். ஒரு சரியான வீரனால் தான் ஒரு மாவீரனை மதிக்க முடியும்.

யூதர்கள் போன்று எமது தமிழினமும் உலகெங்கும் பரம்பியிருந்த போதும் எமது மொழி கலாச்சாரத்தை மறந்தவர்களாக, ஒற்றுமையற்றவர்களாக, காணப்படுகின்றோம். எமது கட்சி பிரதேச வாதங்களுக்கு அப்பால் தமிழினம் என்ற ஒரு நிலையான ஒற்றுமையில் இருந்து எமது சுதந்திர ஈழத்தை அமைக்க பாடுபட வேண்டும்.

எதிரியின் நயவஞ்சகத் திட்டங்களுக்கு துணை போகாது அர்ப்பத்தனமான ஆசைகளுக்குச் சோராம் போகாது உலகம் எங்கிலும் உள்ள தமிழர்கள் எம்மிடையே உள்ள பேதங்கள் மறந்து ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும்.

இது வரை நாம் இழந்த உயிர்களுக்கு அவர்களது ஆத்ம சாந்திக்கு அவர்கள் என்ன இலட்சியத்துக்காக மரணித்தார்களோ அந்த இலட்சியக் கனவுகள் நனவாவதற்கு ஒற்றுமையாகக் குரல் கொடுப்போம்… சுதந்திரத் தமிழீழம் பெற்று சுதந்திரமாக வாழ்வோம். வாழவைப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

கே.பி.எஸ் நாதன்

Tuesday, 15 May 2012

வெற்றி மாதமா? அல்லது மீண்டும் ஒரு கலவரத்திற்கு வித்திடும் மாதமா?



உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத அரசியலமைப்பினைத் தன்னகத்தே கொண்டுள்ள நாடாக விளங்குகின்றது சிறீலங்கா. சிறீலங்காவின் இப்புதிய அரசியலமைப்பானது அரசியலில் ‘நரி’ என எல்லோராலும் வர்ணிக்கப்பட்டவரான காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனாவினால் கொண்டுவரப்பட்டதொன்றாகும். இவ்வரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் ஜனாதிபதிக்கு சர்வ அதிகாரங்களும் உள்ளது. அதற்கேற்ப தற்போது ஆட்சியிலிருக்கும் மகிந்த ராஜபக்சவிற்குச் சர்வ அதிகாரங்களும் உண்டு. அதனை விட நாடாளுமன்றில் மூன்றில் இரண்டுக்கும் மேலான பெரும்பான்மையான பலமும் உள்ளது.
அவர்கள் நினைப்பதை நிறைவேற்றக் கூடிய பெரும்பான்மை பலமும் உள்ளது.

இந்நிலையில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து மூன்றாண்டுகள் முடிவடைந்த நிலையில் கூட தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் முயற்சியில் முழுமனதுடன் ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையில் இன்னமும் அரசு இறங்கியதாகத் தெரியவில்லை. வீண் சாக்குப் போக்குகளைக் கூறிக் கொண்டு காலத்தை இழுத்தடித்துக் கொண்டு வெளிநாடுகளையும், உரிமைகளுக்காக வாதிடும் தமிழ் மக்களையும் ஏமாற்றி வருகின்றது.

தமிழர் பிர்சசினைகளுக்கு ஓர் தீர்வினைக் காணும்படி வெளிநாடுகள் சிறீலங்கா அரசின் மீது அழுத்தம் கொடுக்கும் போதிலெல்லாம் அந்நாடுகளைச் சமாளிக்கும் விதத்தில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கிவிட்டு பின்னர் அவை குறித்துச் சற்றும் கவனம் செலுத்தாது வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டுத் தனக்கேயுரிய பாணியில் பயணிக்கின்றது மகிந்த அரசு.

நாட்டில் விலைவாசிகள் அதிகரித்துவிட்டன. நாளாந்தம் இரவோடிரவாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுகின்றன. நாட்டிலுள்ள சகல இன மக்களும் இவ்விலையுயர்வுகளினால் கொதிப்படைந்துள்ளனர். தெற்கில் ஆர்ப்பாட்டங்கள் வலுக்கின்றன. பெரும்பான்மையின மக்களின் எதிர்ப்பலைகளைத் திசை திருப்பும் விதத்தில் அவர்களின் உணர்ச்சிகளுக்கு வேறுவகையில் உருவேற்றும் அடுத்ததொரு முயற்சியில் இறங்கியுள்ளது மகிந்த ஆட்சித்தரப்பு.


அதாவது, மே மாதம் முழுவதையும் புலிகளைக் கொன்றொழித்து (மக்களையும் சேர்த்துத்தான்) வெற்றிவாகை சூடியதன் மூன்றாவதாண்டு நினைவு தினமாகக் கொண்டாடும் முகமாக இராணுவ வீரர்களின் வெற்றி மாதமாக மிக எழுச்சியாகக் கொண்டாடுவதாக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 18ஆம் திகதி காலிமுகத்திடலில் வழமை போல வெற்றியீட்டித் தந்த படையணிகளின் அணிவகுப்பும் அவைகளின் நவீன கனரக ஆயுதங்களின் காட்சியும் இடம்பெறும். அதனையடுத்து மறுநாள் போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் வைபவமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானம்; நிறைவேற்றப்பட்டுள்ள குழப்பமான நிலையிலும்இ விலைவாசி உயர்வுகளால் புரையோடியிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஓர் சுமுகமான அரசியல் தீர்வினை வழங்குவதற்கான முழுமுயற்சியில் ஈடுபடாது பேரினவாத அரசு தனது சிங்கள மக்களின் மத்தியில் போரின் வெற்றியை மீண்டும் நினைவுபடுத்தி அதன் மூலமாக அவர்களின் நெஞ்சங்களினால் தன்னை ஓர் நாட்டை மீட்ட மகிந்த மன்னன் (துட்டகைமுணு) எனும் ஓர் தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமாக வெற்றிக்களிப்பின் மேலாதிக்கத்தை ஊட்டி உருவேற்றும் விதத்தில் போரின் வெற்றி மாதமாக மே மாதம் முழுவதையும் பிரகடனப்படுத்தியுள்ளார் மகிந்த அரசு.

போரினாலும,உயிரிழப்புக்களாலும் ஏற்பட்ட உடல, உள ரணங்கள் தமிழ் மக்கள் உள்ளங்களில் இருந்து இன்னமும் ஆறாத நிலையிலும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்குக் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக மீளத் திரும்பிச் செல்ல முடியாமல் செல்ல அனுமதி வழங்கப்படாமல் செட்டிக்குளம் முகாமில் ஏக்கப் பெருமூச்சுடன், கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் நிலையிலும், காணாமற்போனோரின் நிலை குறித்து ஏதுமறியாமல் உறவுகள் ஏங்கித் தவிக்கும் நிலையிலும், தாமாகவே சரணடைந்தும் இன்னமும் விடுவிக்கப்படாமல் கடந்த மூன்றாண்டுகளாகப் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைத்திருப்பவர்களின் உறவுகள் ஏங்கியழும் நிலையிலும் நாட்டின் மக்களில் ஒரு பகுதியினர் துன்பங்கள் மத்தியில் உழன்று கொண்டிருக்கையில் வெற்றியின் மமதையை எழுச்சி போட்டுக் காட்டும் விதத்தில் ஒரு விழாவை மாதக் கணக்கில் நீடித்து பெருவிழாவாக எடுப்பது தன்னாட்டுக் குடிமக்களின் மீது அக்கறையோ அன்றிக் கரிசனையோ கொண்ட ஓர் மனித நேயமுடைய அரசினால் மேற்கொள்ளப்படும் நன்னோக்குடைய செயலாக ஒரு போதுமே இருக்க முடியாது. இருக்கவும் மாட்டாது.

ரோம் நகரம் பற்றியெரியும் நேரத்தில் நீரோ மன்னன் பிடில் வாசித்தற்கொப்பாகும் இச்செயல்.

அதுமட்டும்தான் எனில் பரவாயில்லை. கடந்த மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற உள்நாட்டுப்போரில் மரணித்த போராளிகள் ஒன்றும் வேற்று நாட்டவர்களல்ல. அவர்களும் இந்நாட்டின் மைந்தர்களே. அவர்கள் ஒன்றும் பயங்கரவாதிகளல்லர். அவர்தம் படையினராலும் அன்றுதொட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள, வன்செயல்களையெல்லாம் நேரில் கண்டும் கேட்டும் அனுபவித்தும் வெறுப்படைந்து விரக்தியடைந்து தம்மவர்க்கு ஏற்பட்ட உயிரழிவுகள் சொத்தழிவுகளை உணர்ந்து நெஞ்சம் கனலாகி இனியும் பொறுக்கமுடியாததென்ற நிலையில் போராடித்தான் தம் உரிமைகளைப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லையென்ற முடிவுடன் ஆயுதங்களைக் கையில் ஏந்திப் போராடியவர்களே தவிர அவர்கள் நாட்டின் துரோகிகள் அல்லர்.

அந்நாட்களில் தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களது உரிமைகளை ஓரளவாவது வழங்க முன்வந்திருந்தால், அவர்களில் எவருமே ஆயுதத்தை ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்.

சரி, அவற்றையெல்லாம் தடந்த காலக் கெட்ட கனவுகளாக எண்ணி மறந்து விட்டாலும் தமது இளவயதுக்குரிய ஆசாபாசங்களையெல்லாம் துறந்து தம் மண்ணின் விடுதலைக்காகச் சமராடி மண்ணில் சாய்ந்த பல பல்லாயிரக் கணக்கான ஆண், பெண் போராளிகளினதும் அத்துடன் உயிராயுதத்தை உடலில் காவிச் சென்று காற்றோடு காற்றாய்ப் போனவர்களின் நினைவாக அவர்களின் தியாகத்தை என்றென்றும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் வண்ணமும் வரலாற்றுச் சான்றுகளாக எதிர்காலத்தில் தமிழர் வீரத்தைப் பறைசாற்றும் விதத்தில் அவர்களுக்காகப் பல இடங்களிலும் துயிலும் இல்லங்களில் நிர்மாணிக்கப்பட்டு ஆண்டுதோறும் அவர்தம் நினைவு நாளாக வருடந்தோறும் கார்த்திகை 26ஆம் திகதி அனுஷ;டிக்கப்பட்டு வந்தது.
தம்பிள்ளைகளை ஈந்த பெற்றோர்கள், கணவனை இழந்த மனைவி, பிள்ளைகள் எனப் பலப்பலதரப்பட்டவர்களும் அந்நாளில் துயிலும் இல்லங்களில் ஒன்று கூடி தம்மவரின் சமாதிகளில் ஈகைச் சுடரினை ஏற்றி அவர்களை நினைவு கூர்ந்து தம் ஆறாத் துயரினை ஓரளவாகிலும் தேற்றிக் கொண்டு வந்தனர்.

இது கண்டு மனம் பொறுக்க முடியாத கொடிய இனவாத அரசு போர் முடிவடைந்த கையோடு தனது முதல் நடவடிக்கையாக படையினரைக் கொண்டு வடக்குக் கிழக்கிலிருந்த அத்தனை துயிலும் இல்லங்களையும் துவம்சம் செய்வித்து அவை இருந்த இடமே தெரியாதபடி நிர்மூலமாக்கிவிட்டது ஹிட்லர் பாணியில்.

தம் பிள்ளைகளை உறவுகளை இழந்தவர்கள் அவர்களது நினைவாகச் சமாதிகளாவது இருக்கின்றன. நாம் நினைத்த வேளைகளில் அங்கு சென்று அவர்களுக்கு அஞ்சலி மற்றும் கிரிகைகள் செய்வது மூலமாகவேனும் சற்று ஆறுதலடையலாம் என்ற எண்ணங்களில் இருந்தவர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிப் போட்டது மனித நேயம் சற்றும் இல்லாத அரசு. அத்தோடு நின்றுவிடாமல் மாவீரர் நாளாம் கார்த்திகைத் திங்கள் 26ஆம் நாளன்று எவரும் அஞ்சலி செலுத்தவோ அன்றி அஞ்சலி நிகழ்த்தவோ கூடாது எனத் தடை விதித்துவிட்டது அரச படைகள்.

இவ்விதமாகத் தமிழ் மக்கள் ஆறாத்துயரில் உழன்று கொண்டிருக்கையில் பேரினவாத அரசு அவர்தம் உணர்வுகளுக்குச் சற்றேனும் மதிப்பளிக்காது மக்களுக்கு மென்மேலும் வெறுப்பினை ஊட்டும் விதத்தில் தமிழினத்தின் மீதான ஒட்டுமொத்தமான தனது பேரினவாத வெறியை வெளிக்காட்டும் விதத்தில் செயற்பட்டு வருகின்றது.

இது நாட்டில் சமாதானத்தையோ அன்றி நல்லிணக்கத்தையோ என்றுமே ஏற்படுத்தப்போவதில்லை. மாறாக மென்மேலும் இனங்களுக்கிடையேயான பிரிவினைக்கும் காழ்ப்புணர்விற்குமே வழிவகுக்கும். இதுவே சிறீலங்கா அரசின் உள் நோக்கமாகவும் இருக்கலாம்.


-தமிழீழத்திலிருந்து நீலவண்ணன்-

Friday, 11 May 2012

சிங்கக்கொடியில் சம்பந்தருக்கு காதலாம்; கை(ப்) பிடிப்பேன் – அடம்பிடிக்கிறார்!



சிங்க கொடியை முன்னரும் பல தடவை ஏற்றியிருக்கிறேன். அது எனது விருப்பத்திற்குரிய கொடி அதனை இனியும் ஏற்றுவேன், அதனை யாரும் தடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று கொழும்பில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு கூட்டம் இன்று ஆரம்பமான போது பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு செல்வது தொடர்பாக முதலில் ஆராயப்பட்டது. அந்த விடயம் முடிந்ததும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் சிங்க கொடி பிரச்சினையை எழுப்பினார்.

ஐயா நீங்கள் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா தேசியக்கொடியை பிடித்தது தமிழினத்திற்கு செய்யும் துரோகம், தமிழின தேசவிரோதம் என காரசாரமாக விடயத்தை தொடங்கினார்.

தம்பி அரியம் நீர் என்ன கதைக்கிறீர்… உமக்கு வரலாறு தெரியாது. என்னை சிங்க கொடியை தூக்க கூடாது என்று ஒருவராலும் தடுக்கேலாது.

தேசிய கொடியை நான் தெரியாமல் தூக்கவில்லை. நன்றாக தெரிந்து விருப்பத்தோடுதான் தூக்கினேன். என்னிடம் யாரும் அக்கொடியை திணிக்கவில்லை. சிங்க கொடியை நான் தூக்கினது இதுதான் முதல்தடவையல்ல. நான் தேசியக் கொடிக்கு எதிரானவன் அல்ல. நான் பல தடவை தேசியக் கொடியான சிங்கக் கொடியை திருகோணமலையில் ஏற்றியிருக்கிறேன். நான் நேசிக்கும் ஒரே கொடி சிங்க கொடிதான். இந்த கொடியை வடிவமைத்த குழுவில் தமிழர்களும் இருந்திருக்கிறார்கள். அந்த குழுவில் ஜி.ஜி.பொன்னம்பலம், நடேசன் போன்றவர்கள் இருந்தார்கள். அதில் நடேசன் மட்டுமே இந்த கொடியை எதிர்த்தார். ஆனால் ஜி.ஜி.பொன்னம்பலம் இந்த கொடியை ஏற்றுக்கொண்டிருந்தார். தமிழரசுக்கட்சி இந்த கொடியை எதிர்க்கவில்லை என சம்பந்தன் தெரிவித்தார்.

அதுதவிர இன்னொரு விடயத்தையும் சம்பந்தன் சொன்னார். இந்த கொடி என்னுடைய மிக விருப்பத்திற்குரிய கொடி , சிங்கம்தான் பத்திரகாளி அம்மனின் வாகனம், எனவே சிங்க கொடிக்கு நான் எதிரானவன் அல்ல என சம்பந்தன் தெரிவித்தார். இதற்கு மாவை சேனாதிராசா, அரியநேத்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

சிறிலங்கா கொடியை நீங்கள் தூக்கி பிடித்ததால் நாங்கள் தமிழ் மக்கள் முகத்தில் முழிக்க முடியாமல் இருக்கிறது. மானம் மரியாதை போகிற விடயம். இதனால் தமிழ் மக்கள் எங்கள் மீது வெறுப்படைந்திருக்கிறார்கள் என அரியநேத்திரன் சொன்னார்.

நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள் தமிழ் மக்கள்தான் எங்கள் பலம் என்று. ஆனால் இன்று தமிழ் மக்களின் மனங்களையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளாது நடந்துள்ளீர்கள் என மாவை சேனாதிராசா கோபத்துடன் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சுமந்திரன் தேசியக் கொடியை ஏற்றுவதோ, பிடித்திருப்பதோ என்ன பிழை, ஏன் இதை பெரிதாக எடுக்கிறீர்கள் என சொன்னார்.

கொழும்பில் இருக்கும் உங்களுக்கு தெரியாது. இந்த பிரச்சினையின் தாக்கத்தை யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்புக்கும் வந்து பாருங்கள் அப்போது தெரியும் என உறுப்பினர் ஒருவர் சுமத்திரனை பார்த்து கூறினார்.

நாங்கள் இளைஞர்களாக பாடசாலை மாணவர்களாக இருந்த போது இந்த கொடி எங்களுக்கு எதிரானது என தமிழரசுக்கட்சி தலைவர்களான நீங்கள்தான் சொல்லித்தந்தீர்கள். பாடசாலை காலத்தில் நான் இந்த கொடியை எரித்திருக்கிறேன். தமிழ் மக்களை இந்த அரசியல் யாப்போ, இந்த கொடியோ ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த கொடியை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் எங்களுக்கு இன்னும் வரவில்லை. இந்த கொடிக்கு பெரிய வரலாறு இருக்கிறது. இந்த கொடியை எரித்ததற்காக சிறை சென்ற இளைஞர்கள் பலர். சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பலர். இவ்வாறு நீங்கள் சிறிலங்காவின் தேசியக் கொடியை தூக்கி பிடிப்பதும் அதுதான் என்னுடைய கொடி என்று கூறுவதும் சிங்கள தேசத்திற்கு அடிபணிந்து போவது போல இருக்கிறது என முன்னாள் போராளியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இப்படி நடந்து கொண்டால் தமிழ் மக்களிடமிருந்து நாங்கள் அந்நியப்பட்டு போய்விடுவோம் என்றும் அரியநேத்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிதரன், மாவை சேனாதிராசா ஆகியோர் தெரிவித்தனர்.

தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்படவில்லை என்றால் தலைவர்கள் என்ற அந்தஸ்த்திலிருந்து தூக்கி எறியப்பட்டு விடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறிய போது நான் சரி என்று பட்டதை செய்வேன். எனக்கு ஆலோசனை சொல்ல தேவையில்லை. நான் செய்யும் காரியங்களை யாரும் கேள்வி கேட்ககூடாது என சர்வாதிகார தோரணையில் சம்பந்தன் தெரிவித்தார்.

விவாதம் காரசாரமாக போய் கொண்டிருந்த போது குறுக்கிட்ட மாவை சேனாதிராசா சாம் அண்ணன் ( சாம் அண்ணன் என்றுதான் மாவை சேனாதிராசா சம்பந்தனை அழைப்பார்) இந்த பிரச்சினை தொடர்பாக நான் உங்களோடு தனிய கதைக்க வேணும் என சொல்லி அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இன்று சம்பந்தன் நடந்து கொண்ட விதமும், இறுமாப்பும், மக்களை மதிக்காத தன்மையும் எங்களை வெறுப்படைய வைத்து விட்டது. அவர் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்க தகுதி உடையவராக என நாங்கள் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தினக்கதிருக்கு தெரிவித்தார்.
நன்றி – தினக்கதிர்

Wednesday, 9 May 2012

ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும் – “தினமணி”!



ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர்.லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் பால்பெய்ரிங் குறிப்பிடுகிறார். ஐரோப்பியர் தங்கள் காலனிகளாக நாடுகளைப் பிடிக்கப் பல்வேறு திசையை நோக்கி ஸ்பெயினிலிருந்தும் போர்ச்சுகல்லில் இருந்தும் புறப்பட்டது வரலாற்றுச் செய்தி. வாஸ்கோடகாமா 1495-இல் இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள கள்ளிக்கோட்டையில் இறங்கி அதன்பின் 1519-இல் இலங்கைக்குப் போனார். அங்கு அப்போது தமிழ் மன்னன் சங்கிலியன் ஆட்சி நடந்தது. வாஸ்கோடகாமா இறங்கியவுடன் அங்கு வியாபார ரீதியாகப் பணிகள் செய்ய உரிய அனுமதியும் அந்தத் தமிழ் மன்னன்தான் வழங்கினார் என்பது சரித்திர உண்மை.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவார்கள் என்ற கதைபோலப் போர்ச்சுகீசியர்கள் சிங்களர்களுடன் இணைந்து தமிழருடைய ஆட்சியை வீழ்த்தினார்கள். இந்தக் கலகம் ஏற்பட்டபோதுதான் தஞ்சையை ஆண்ட ரகுநாத மன்னன் சங்கிலி மன்னனுக்குத் துணையாக ஒரு படையை அனுப்பிப் போர்ச்சுகீசியர்கள் மற்றும் சிங்களருடைய தாக்குதலை முறியடிக்க உதவினான்.

அவரது மகன் இரண்டாம் சங்கிலி மன்னனை அவருடைய உடன்பிறந்த சகோதரர் மூலம் சதி செய்து கைது செய்து தமிழ் மன்னனுடைய ஆளுமையை மழுங்கடித்தனர். அந்த மன்னனைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று தங்களது ஆட்சிக்கு உள்பட்டிருந்த கோவாவுக்கு இழுத்துவந்து தூக்கிலிட்டார்கள் போர்ச்சுகீசியர்கள்.
ஐம்பது ஆண்டுகாலம் இலங்கையில் கோலோச்சிய போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று இலங்கையில் நுழைந்தனர். 1833-இல் தமிழர் பகுதியும் சிங்களர் பகுதியும் சேர்த்து ஆங்கிலேயருடைய ஆளுமையான நாடாக மாறியது.

1933-இல் இங்கிலாந்திலிருந்து வந்த சோல்பரி பிரபு ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி இலங்கைத் தீவு என்று அறிவிக்கிறார். அப்போது தமிழர்கள் தங்களுக்கு நியாயமும் சம உரிமையும் கிடைக்கும் என்று நம்பினர். ஆனால், அதற்கு மாறாக 1948 டிசம்பர் 12-ஆம் தேதி குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது மட்டுமல்லாமல் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்கள் பத்து லட்சம் பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் இந்தியாவிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் ஆவார்கள். அவர்கள் அந்த மண்ணைத் தமிழகத்திலிருந்துபோய் வளப்படுத்தி தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களைக் கடும் உழைப்பால் உருவாக்கியதற்கு அளிக்கப்பட்ட வெகுமதிதான் பத்து லட்சம் தமிழர்களின் குடியுரிமை ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது.

1956-இல் சிங்கள மொழிதான் ஆட்சி மொழி, புத்தம் தான் ஆட்சி மதம் என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும், தந்தை செல்வா விட்டுக்கொடுத்து 1957-இல் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு பண்டாரநாயகாவுடன் ஓர் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.

அதில் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச அதிகாரமும் உரிமைகளும் வழங்க வேண்டும் என்பதுதான் அதில் குறிப்பிடப்பட்டது. அதை புத்த பிட்சுகளும் எதிர்த்தனர். அந்த ஒப்பந்தமும் பரிசீலிக்காமல் குப்பைத்தொட்டிக்குப் போனது.

இருப்பினும் செல்வா சமாதானம், காந்தியம் என்ற நிலையில் திரும்பவும் 1965-ல் அன்றைய அதிபர் சேனநாயகாவுடன் ஓர் உடன்பாடுக்கு முன்வந்தார். அந்த உடன்பாட்டு ஒப்பந்தத்தில் மாகாணக் கவுன்சில்கள் ஏற்படுத்தி அதிகாரங்களை ஒதுக்கி தமிழர்கள் உரிமை பாதுகாக்கப்படும் என்ற நிலையில் செல்வாவும் சேனநாயகாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதையும் புத்த பிட்சுகள் எதிர்த்தனர். அதனால் அந்த ஒப்பந்தமும் கிடப்பில் போடப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதையொட்டி தமிழர்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனால் கடுமையாகக் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். நாடாளுமன்றத்திலும் உரிமைக்குரல் எழுப்பினர்.
இந்தக் கொடுமைக்கு இடையில் தமிழர் பகுதியில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் சிங்களர்கள் குடியேற்றப்பட்டனர். வடபகுதியில் சிங்களர்கள் இல்லாத இடத்தில் 1948-லிருந்து இன்று வரை 33 சதவிகிதம் சிங்களவர்கள் தமிழர்கள் பகுதியில் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் யூதர்கள் குடியேறியதைக் கண்டிப்பவர்கள் ஈழத்தில் சிங்களவர்கள் குடியேறியதைக் கண்டிக்காதது மட்டுமல்லாமல் அதை இந்தியா உள்ளிட்ட நாடுகளே பார்த்தும் பார்க்காமல் இருப்பதுதான் வேதனை.

தமிழ் மாணவர்கள் 50 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆனால், சிங்கள மாணவர்கள் வெறும் 29 மதிப்பெண்கள் எடுத்தால் போதும். வேலைவாய்ப்பிலும், ராணுவத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். தேவாலயங்களும், கோயில்களும் தாக்கப்பட்டன. நல்லூர் கோயில் அருகே பல சமயங்களில் தாக்குதல் நடந்தன. அதற்குப் பிறகு செஞ்சோலைச் சம்பவம். இப்படி எல்லையற்ற அத்துமீறல்களும் கொடூரங்களும் முள்ளிவாய்க்கால்வரை நடந்ததை யாரும் மறுக்க முடியாது.

இப்படியெல்லாம் நடக்கும் என்றுதான் தந்தை செல்வா 1976, மே 24-ஆம் தேதி வட்டுக்கோட்டையில் கூடிய தமிழர் விடுதலை முன்னணியின் கூட்டத்தில், இனிமேல் தனி வாழ்வுதான். ஈழம்தான் என்று முடிவெடுத்து அதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம் அங்குள்ள தமிழர்களுடைய வரலாற்று ஆவணமாக இன்னும் திகழ்கின்றது. இதை வைத்துக்கொண்டு 1975-இல் நடந்த இடைத்தேர்தல்களிலும் ஈழம்தான் முக்கியப் பிரச்னையாகக் கொண்டு வாக்காளர்களிடம் சென்றபோது 78.4 சதவிகிதம் பேர் செல்வாவின் ஈழத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

11 பேர் நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது மதச்சார்பற்ற தனி ஈழம் தங்களுக்கு வேண்டும் என்று தன்னுடைய உரிமைக் குரலைத் தெளிவாகப் பதிவு செய்துவிட்டு வெளியே வந்து செல்வா மக்களைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் சிங்கள ராணுவம் உள்ளே புகுந்து தாக்கி ஒன்பது தமிழர்கள் சுட்டு சாகடிக்கப்பட்டனர். இதையெல்லாம் பார்த்துப் பொறுக்க முடியாமல்தான் தமிழ் இளைஞர்கள் 1972-இல் புதிய புலிகள் என்ற இயக்கத்தை பிரபாகரன் தலைமையில் தொடங்கினர். 10 இலக்கத்துக்குக் குறைவான உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் ஆல விருட்சமாக வளர்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

1983-இல் இனப்படுகொலை நடக்கும்போது அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அதைப் பொறுக்க முடியாமல் அது இனப்படுகொலைதான் என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார். மனித உரிமைகளைப் பேசிய உலக சமுதாயம் இந்தக் கொடுமையினைத் தடுக்க வரவில்லை. கிழக்கு வங்கத்தில் பிரச்னை வரும்போது தலையிட்டோம். பாலஸ்தீனிலும், கிழக்கு தைமூரிலும் குரல் கொடுத்தோம்.

ஐரோப்பாவில் பல நாடுகள் இனரீதியாகப் பிரிந்ததை ஆதரித்தோம். யூகோஸ்லோவோகியா இனரீதியாகப் பிரிந்தது. சூடான் பிரிந்தது. இம்மாதிரி பிரிந்த நாடுகளுக்குக் காரணங்கள் இருந்ததைப்போல ஈழம் பிரிந்து செல்லவும் காரணங்கள் உண்டு. அப்படியிருந்தும் இன்னும் அதற்கான வழிவகை தெரியவில்லை.
ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டதுபோல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ் போன்றவர்களுடைய படங்களையும் காணலாம். அந்த அளவில் இந்தியத் தலைவர்களை அங்குள்ள தமிழர்கள் அன்பு காட்டி நேசித்தார்கள்.

இந்தியா, சீனா போர் நடக்கும்போது இந்தியாவுக்கு ஆதரவாகத் தமிழர்கள் வீர சிங்க அரங்கத்தில் கூட்டம் நடத்தியதும்; தந்தை செல்வா, போர் நிதியாக தமிழர் பகுதியிலிருந்து சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பியதும் எல்லாம் வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்ல; நமது நாட்டை ஈழத் தமிழர்கள் எவ்வளவு பாசத்துடன் பார்த்தார்கள் என்பதை உணர்த்துபவை.

வங்க தேசப் பிரச்சனையில் இந்தியாவையும் இந்திரா காந்தியையும் ஆதரித்து இலங்கை நாடாளுமன்றத்தில் மனப்பூர்வமாகக் குரல் கொடுத்தார்கள் தமிழ் உறுப்பினர்கள். ஆனால், சிங்கள அதிகார வர்க்கம் இந்தியா, சீனா போரிலும், இந்தியா பாகிஸ்தான் போரிலும் இந்தியாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தது. வங்க தேசம் பிரியும்போது பாகிஸ்தான் விமானங்கள் இந்தியா வழியாகச் செல்ல முடியாமல் இருந்தபோது இலங்கை வழியாகச் செல்ல அனுமதியும் தந்தது சிங்கள அரசு. எவ்வளவோ உதவிகள் இலங்கைக்கு நாம் செய்தாலும் நன்றி கெட்டத்தனத்துடன்தான் சிங்கள அரசியல் தலைவர்களும், அதிகாரவர்க்கத்தினரும் நடந்து கொண்டார்கள்.

இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் பாதுகாப்பு குறித்தும் இங்கே நாம் பார்க்க வேண்டும். தெற்கே இந்தியப் பெருங்கடலில் உள்ள டீக்கோகர்சியாவில் 1974-75-இல் அமெரிக்கா ராணுவத் தளம் அமைக்க முயன்றபோது இந்திரா காந்தி கண்டித்து உலக நாடுகளுடைய ஆதரவைக் கொண்டு அது தடுக்கப்பட்டது. அமெரிக்கா அதன் பிறகும் விடாமல் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் உள்ள திரிகோணமலை துறைமுகத்தில் வாய்ஸ் ஆப் அமெரிக்காவுடைய ராடர்களை அமைக்கவும், எண்ணெய் கிடங்குகளை அமைக்கவும் ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தியபோது இந்தியாவின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

இன்றைக்கு இந்தியாவைச் சுற்றியுள்ள, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், மியான்மர் ஆகியவற்றுடன் நமக்கு சுமுக உறவு இல்லை. இந்தச் சூழலில் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளோடு சீனா நட்பு பாராட்டி இந்தியாவுக்கு எதிராகத் திருப்பி வருகிறது. இப்போது சீனாவின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலிலும் அதிகரித்துக்கொண்டு வருகிறது. தனது கடற்படைத் தளங்களை அமைப்பது அணுஉலைகளை நிறுவ உதவி செய்வது, ராணுவத் தளவாடங்களைக் கொடுப்பது என்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளோடு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் தென்மேற்குப் பகுதியில் பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அடுத்த 15 ஆண்டுகளில் பாலிமெட்டாலிக் பணியில் ஈடுபடும் என்று சொல்கிறார்கள். செஷல்ஸ் தீவிலும் சீனா ராணுவத் தளம் அமைத்துள்ளது.
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின் தன்னுடைய ஆளுமையைக் காக்க சீனா முயன்று வருகிறது. இந்தியாவோடு பகைமை உணர்வை மனதில் கொண்டு சீனா, இலங்கையைத் தனது நட்பு நாடாக வைத்துக்கொண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆர்வம் காட்டி வருகிறது. ராணுவத் தளவாடங்கள், கெம்பன்கோட்டா துறைமுகத்தை அமைத்துக் கொடுத்து சீனாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது என்று அதன் முயற்சிகள் தொடர்கின்றன. கச்சத்தீவில்கூட சீனர்களின் நடமாட்டம் இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. இலங்கையைச் சுற்றி சீனக் கப்பல் படைகள் வருவதும் போவதும் இந்தியாவின் எல்லைப்பக்கத்தில் அந்தக் கப்பல்கள் ஊடுருவதும் இந்தியாவின் நலனுக்கும் பாதுகாப்புக்கு உகந்ததே அல்ல. எனவே, இந்தியா ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வையோடு ஈழப் பிரச்னையில் முடிவுகள் எடுப்பது காலத்தின் கட்டாயம்.

ஈழப் போராட்ட வரலாறு, அதில் உள்ள நியாயங்கள், இந்தியப் பெருங்கடலில் வல்லரசுகளின் ஆதிக்கம், இலங்கை இந்தியா மீது மறைமுகமாகக் கொண்டுள்ள பகைமை போக்கு இதையெல்லாம் பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் ஆகும். நாம் எவ்வளவுதான் இலங்கைக்கு உதவினாலும் அவை யாவும் தமிழர்களுக்குச் சென்றடைவது இல்லை.

தமிழ்மொழியைப் பாதுகாத்து ஆட்சிமொழியாக அறிவிப்பது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடத்துவது போன்ற உறுதிமொழிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிப்பதாக இந்திய அரசிடம் வாக்குறுதி கொடுத்த ராஜபட்ச இப்போது பல்டி அடித்துவிட்டார். இந்தியா வழங்கிய 500 கோடி ரூபாய்க்கு மேலான தொகையைக் கொண்டு அங்குள்ள தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாகச் சொன்ன வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
இந்தியா கொடுத்த அனைத்து உதவிகளையும் சிங்களப் பகுதியில் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பயணங்கள், அங்கு சென்ற நாடாளுமன்றக் குழுவின் பயணங்களும் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமையவில்லை.

இந்திய மண்ணில் உள்ள நாம் அனைவரும் இந்தப் பிரச்சினையின் நீள அகலத்தை அறிந்து கடந்தகால வரலாற்றை மனதில்கொண்டு பார்த்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஈழம்தான் தீர்வு என்ற விடை நமக்குக் கிடைக்கும்.

ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டதுபோல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ்
போன்றவர்களுடைய படங்களையும் காணலாம்.

- தினமணி -

Saturday, 5 May 2012

பிரபாகரன் உருவாக்கிய சமூக கட்டமைப்புக்கள் இன்று சீர் குலைந்துவிட்டன : குமரன் பத்மநாதன்




பிரபாகரன் உருவாக்கிய சமூக கட்டமைப்பு பல இன்று சீர் குலைந்துவிட்டதாக வி.புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். "சுடர்ஒளி'' பத்திரிகைக்காக அவர் வழங்கியிருந்த செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இச்செவ்வியின் முழுவடிவம், குறித்த ஊடகத்திற்கான நன்றியுடன் இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது.

கேள்வி: தமிழர் விடுதலைப் போராட்டத்தை நீங்கள் இறுதி நேரத்தில் காட்டிக் கொடுத்துவிட்டீர்கள்? நீங்கள் துரோகி என்பது தான் தமிழர்களின் மனநிலை. உங்களின் பதில் என்ன? நீங்கள் குற்றவாளியா, இல்லையா?

பதில்: பிரபாகரன் என்னும் எனது உயிர் நண்பனுடன் சேர்ந்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தவர்களில் நானும் ஒருவன். நானே அந்த இயக்கத்தை ஆரம்பித்து எனது வாழ்நாளில் 30 வருடத்திற்கும் மேலான காலத்தை அதற்காகச் செலவிட்டிருக்கிறேன்.

நான் ஒரு மரக்கொப்பில் இருந்துகொண்டு அந்தக் கொப்பை நானே வெட்டுவேனா?

முதலாவதாக, ஒரு ஆத்மரீதியான உறவு அந்தப் போராளிகளுக்கும், எனக்குமிடையில் இருந்தது. இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டைப் பார்த்தால் நான் எனது தாயைக் காட்டிக்கொடுத்தது போல் தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் எனது வாழ்க்கையில் சந்தித்த ஒரேயொரு உயிர் நண்பன் பிரபாகரன். அவரைக் காட்டிக் கொடுத்ததாக சொல்வது அப்பட்டமான பொய்.

தமிழர்களைப் பொறுத்தவரை போர் ஏன் தோற்றது என்பது புரியாத புதிராக இருக்கிறது. பிரபாகரனை அவர்கள் கடவுளாகப் பார்த்தார்கள். அரசனாகப் பார்த்தார்கள். அவர் தோற்க மாட்டார் என்று அவர்கள் மனதில் வைத்துவிட்டார்கள். திடீரென்று தோற்றுவிட்டார்.

இதற்கு என்ன காரணம். யாரோ பின்னணியில் இருந்து காட்டிக்கொடுத்து விட்டார்களோ என்று சந்தேகம். இதில் புலம்பெயர் சமூகத்தில் இருக்கும் ஒருசில குழப்பவாதிகள் கே.பி. தான் இதற்கு காரணமென இலகுவாகக் கூறிவிட்டனர். அதனை அப்பாவி மக்களின் ஒருசிலரும் நம்பி கே.பி. தான் காட்டிக்கொடுத்து விட்டாரோ என்று நம்புகின்றனர்.

நான் மலேசியாவில் ஒரு அறைக்குள் தனியே இருந்தேன். பிரபாகரன் இங்கு எத்தனை தளபதிகள், எத்தனை ஆயுதங்கள் எத்தனை தாங்கிகளுடன் நின்றிருந்தார். நான் மலேசியாவிலிருந்து காட்டிகொடுத்து அவர் போரில் தோற்றார் என்பது நிஜம் அல்லவே! யதார்த்தமாக நீங்கள் சிந்தியுங்கள்.

கருணா வெளியேறினார். கருணா வெளியேறியவுடன் பிரபாகரன் தோற்றாரா? கருணாவுக்குத் தெரியாத விடயங்கள் எனக்குத் தெரிந்ததா? இல்லையே... கருணா தலைவரின் பக்கத்தில் இருந்தவர். அவர் விலகும்போது அவரால் பிரபாகரனை அழிக்க முடிந்ததா? இல்லையே. இதே குற்றச்சாட்டை முன்வைக்கும் அரசியல்வாதிகள் தான், பிரபாகரன் மீண்டும் வருவார் என்கின்றனர்.

ஒரு பக்கத்தில் கே.பி. காட்டிக்கொடுத்துதான் பிரபாகரன் அழிந்துவிட்டார் என்றும் கூறும் அதே ஆட்கள்தான் மறுபுறம் பிரபாகரன் மீண்டும் வருவார், மீண்டும் போர் வெடிக்கும் என்று கூறுகின்றனர்.

இவர்கள் உண்மையைப் பேசுவதில்லை. அதுதான் முக்கியமான காரணமேயொழிய வேறொன்றுமில்லை. இதை நினைக்கும் போதே மனதுக்கு கவலையாக இருக்கிறது. நான் நேரத்துக்கு நேரம் ஒரு கதை பேசி இருப்பவன் அல்ல. எனது மக்களுக்காக 35 வருடகாலமாக வேலை செய்துகொண்டிருப்பவன்.

இவர்கள் போல் நேரத்துக்கு நேரம் பேசும் மனிதன் அல்ல. அப்படியான சூழலில் நான் வளரவும் இல்லை. அரசியல்வாதிகள் போல் பொய்கூறி நான் மக்களிடம் செல்லவும் இல்லை. இது ஒரு அப்பட்டமான பொய்..

கேள்வி: போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தீர்களா என்று நான் கேட்டபோது நீங்கள் பதிலளிக்கையில் உங்களது கண்கள் கலங்குவதைக் கண்டேன். அந்த கேள்விக்கு பதிலளிக்கும்போது ஏன் அந்த உணர்ச்சிபூர்வம்?

பதில்: (மீண்டும் கண்கலங்குகிறார்) மனித வாழ்க்கை அற்புதமானது. எனது வாழ்க்கையை எனது மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். ஆனால், இவர்கள் கூறும் அப்பட்டமான குற்றச்சாட்டு. எனது நட்பையே வியாபாரமாக பார்க்கிறது. அது வியாபாரம் அல்ல.... அது அரசியல் அல்ல... அவற்றிற்கும் அப்பாற்பட்டது. ஆத்மரீதியான நட்பு. அதனை இவர்கள் கொச்சைப்படுத்துகின்றனர். (நா தழுதழுக்கிறது) இதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கேள்வி: பிரபாகரன் உங்கள் நல்ல நண்பன் என்கிறீர்கள். திரும்பி வரமாட்டார் என்கிறீர்கள். அவரின் மறைவு தமிழர்களின் அரசியல் அல்லது அரசியல் போராட்டத்தில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதா?

பதில்: அந்த பிரபாகரனின் தலைமைத்துவத்தைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது உண்மை. காரணம் இது அரசியல் போராட்டம் மட்டுமல்ல. அவர் உருவாக்கிய சமூக கட்டமைப்பு பல சீர்குலைந்துவிட்டன.

இன்று பார்த்தீர்களானால் யாழ்ப்பாணத்தில் அல்லது வன்னியில் எத்தனையோ சமூக விரோத செயல்கள் மலிந்து போயுள்ளன. ஆனால், அவர் இருக்கும்போது அவை நடக்கவில்லை. தமிழ் மக்களுக்குரிய சரியான தலைமைத்துவம் இல்லாமல் போயிருக்கிறது. அது கவலைக்குரிய விடயம். இதனை நிவர்த்தி செய்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல.

கேள்வி: மக்கள் சேவைக்காக உங்களை அர்ப்பணித்துள்ளதாகக் கூறுகிறீர்கள். அந்தச் சேவையை ஒருபடி மேலே சென்று செய்வதற்காக அரசியலுக்கு வரும் நோக்கம் எதுவும் இருக்கிறதா?

பதில்: என்னைப் பொறுத்தவரை நான் இப்போது செய்வது மனிதாபிமான சேவை. அரசியலில் நான் இறங்கும்போது இவை பாதிக்கப்படும். இது வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கப்படும். என்னைப் பொறுத்தவரை அரசியலில் நான் நாட்டமில்லாதவன். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்பதே எனது இலட்சியம்.

ஆனால், இந்த மக்களைத் தொடர்ந்து தமிழ் அரசியல் தலைமைகளும், தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்களும் ஏமாற்றி, வாட்டி வதைப்பார்களானால் நான் சிலதை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவேன்.

கேள்வி: நீங்கள் நேரடியாக அரசியலுக்கு வரப் போகின்றீர்கள் என நான் எடுத்துக்கொள்ளலாமா?

பதில்: அது நேரடியாகவா, மறைமுகமாகவா என்பதை முடிவாக என்னால் சொல்ல முடியாது. ஆனால், இந்த மக்களைக் காப்பாற்ற வேண்டிய ஒரு கடப்பாடு எனக்குள்ளது. அது அரசியலில் இறங்கித்தான் செய்ய வேண்டுமென்றால் வேறு வழியில்லை. இறங்கித்தான் ஆக வேண்டும். மக்களைத் தொடர்ச்சியாக இப்படியான அவலத்தில் வைத்திருக்க முடியாது.

கேள்வி: தேவைப்பட்டால் நீங்கள் அரசியலுக்கு வருவீர்கள் என்கிறீர்கள். அது வட மாகாணசபைத் தேர்தலாக இருக்குமா?

பதில்: நீங்கள் பெரிய குண்டையே தூக்கிப் போடுகின்றீர்கள். அப்படி எதனையும் இதுவரை என் மனதில் யோசிக்கவில்லை. இன்றுவரை இல்லை. ஆனால், எனது மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை வந்தால், தொடர்ந்தும் எமது மக்களைத் தமிழ்த் தலைவர்கள் ஏமாற்றினால், அதுதான் ஒரே வழியென்றால் நான் மறு பரிசீலனை செய்துதான் ஆகவேண்டும்.

- சுடர் ஒளி

Wednesday, 2 May 2012

அரசியல் வானில் மிதக்க மீளவும் தமிழீழ பலூனை கையிலெடுக்கும் கருணாநிதி





2006 தொடக்கம் 2011 வரையான காலப்பகுதியில், அதாவது புலிகளுக்கு ஆதரவான கட்சிகள் சிறிலங்காத் தமிழர்கள் நிலைப்பாட்டில் இந்தியா தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த போது அந்தக் காலப்பகுதியில் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழ்ப் புலிகளை அழிப்பதில் சிறிலங்காவுக்கு ஆதரவாக இருந்த இந்திய மத்திய அரசின் செயற்பாடுகளை தட்டிக் கேட்காது அமைதி காத்திருந்தார்.

இவ்வாறு இந்தியாவின் கல்கத்தாவை தளமாகக்கொண்ட The Telegraph ஆங்கில ஊடகத்தில் அதன் சிறப்பு செய்தியாளர் G.C. SHEKHAR எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி, சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஈழத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கின்ற தனது பழைய ஆயுதத்தை மீளவும் கையில் எடுக்கும் முயற்சியில் முழுமூச்சுடன் செயற்படுகின்றார். அரசியலில் நீடித்து நிற்பதற்கும், தனது மகன்களான ஸ்ராலின் மற்றும் அழகிரி ஆகியோருக்கிடையில் காணப்படும் முறுகல் நிலையை வேறு பக்கம் திசை திருப்புவதற்காகவே தி.மு.க தலைவர் இவ்வாறான தனது ஈழ இலட்சியத்தை முன்வைத்துள்ளார் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது.

இந்நிலையில், திங்களன்று தமிழீழ ஆதரவாளர்களின் அமைப்புடன் [TESO] தி.மு.க தலைவர் கருணாநிதி சந்திப்பொன்றை மேற்கொண்டு இது தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளார். ரெசோ அமைப்பானது 1980 களில் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட போதிலும், 1991 இல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் தனது ஈழக் கோரிக்கையை கருணாநிதி கைவிட்டிருந்தார். இதன் பின்னர் ரெசோ அமைப்பின் செயற்பாடுகளும் தடைப்பட்டன.

ஏப்ரல் மாதத்தில் கருணாநிதி தான் கலந்து கொண்ட இரு பொதுக் கூட்டங்களிலும், கடந்த ஆண்டில் வட சூடானிலிருந்து தென் சூடான் வாக்கெடுப்பு மூலம் பிரிக்கப்பட்டு தனி நாடாக அறிவிக்கப்பட்டது போன்று, சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கும் தனி ஈழம் அமைத்துக் கொடுப்பதற்கான கருத்து வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவித்திருந்தார்.

கருணாநிதி தற்போது புதிதாக ஈழ ஆதரவுக் கொள்கையை தருணம் பார்த்து ஆதரிப்பதற்கு ஏதோவொரு திட்டம் உள்ளது என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். சிறிலங்காவில் உள்ள தமிழ்க் கட்சிகள் தமது நாட்டு அரசியலமைப்பின் கீழ் தமக்கு மாகாண ரீதியாக அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கின்றனர். அத்துடன் தமிழ்நாட்டில் செயற்படும் அமைப்புக்கள், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் தொடர்பில் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை வழங்கி வருகின்றனர்.

"எங்களைப் போன்றவர்களுக்கு ஈழக் கோரிக்கை என்பது நீண்ட கால இலட்சியமாக உள்ளது. ...ஆனால் கருணாநிதியைப் பொறுத்தளவில் அவர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது மட்டுமே ஈழம் அவரது கண்களுக்கு புலப்படுகின்றது. 2009ல் சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் அங்கிருந்த தமிழ் மக்களை கொலை செய்து, பல மீறல்களை மேற்கொண்ட போது தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி இந்திய மத்திய அரசின் விருப்பத்துக்கு இசைந்து நடந்ததுடன், தமிழ் மக்கள் அவலப்பட்ட போது அது தொடர்பில் அமைதி காத்திருந்தார். தற்போதைய கருணாநிதியின் ஈழ ஆதரவு, தமிழ் மக்கள் அழிக்கப்பட்ட போது எங்கு போனது?" என ஈழம் தொடர்பாக தனது கருத்தை உரத்து ஒலிக்கும் வைகோவின் கட்சியான ம.தி.மு.க வைச் சேர்ந்த மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

2006 தொடக்கம் 2011 வரையான காலப்பகுதியில், அதாவது புலிகளுக்கு ஆதரவான கட்சிகள் சிறிலங்காத் தமிழர்கள் நிலைப்பாட்டில் இந்தியா தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த போது அந்தக் காலப்பகுதியில் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழ்ப் புலிகளை அழிப்பதில் சிறிலங்காவுக்கு ஆதரவாக இருந்த இந்திய மத்திய அரசின் செயற்பாடுகளை தட்டிக் கேட்காது அமைதி காத்திருந்தார்.

மத்திய அரசுடன் கூட்டுச் சேர்ந்துள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி, சிறிலங்காவில் வாழ்ந்த தமிழ்மக்களை எதிர்த்த சிங்கள அதிகார வர்க்கத்தை எதிர்த்து தமது கருத்துக்களை முன்வைத்து தமிழ் மக்களுக்காக பாடுபட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தைக் கூட வழங்கவில்லை.

"2009ல் தழிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா லோக்சபா பரப்புரையின் போது தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தை எதிர்த்ததுடன், யுத்தப் பாதிப்புக்களைத் தாங்கிய தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கு இந்திய இராணுவத்தை சிறிலங்காவுக்கு அனுப்ப வேண்டும் என குரல் கொடுத்த போது இதே கருணாநிதி, ஜெயலலிதா சிறிலங்கா விவகாரத்தை அரசியலாக்குகின்றார் எனக் குற்றம் சாட்டியிருந்தார். கருணாநிதியின் திடீர் ஈழ ஆதரவு என்பதற்கு குறிப்பிடத்தக்க வேறு காரணங்கள் எதுவுமில்லை. தனது மகன்மாருக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை வேறு பக்கம் திசைதிருப்புவதற்காகவே இவ்வாறான தனது ஈழக் ஆதரவை முன்வைத்துள்ளார்" என நாம் தமிழர் இயக்கத்தின் நிறுவனரான சீமான் தெரிவித்துள்ளார்.

"2014ல் நடைபெறவுள்ள தமிழ்நாட்டு சட்ட சபைத் தேர்தலில் மத்தியில் ஆட்சி நடாத்தும் கூட்டணியுடன் ஒன்று சேராது வைகோ, விஜயகாந்த் போன்று தனித்துப் போட்டியிடுவதையே கருணாநிதி விரும்புகின்றார். இதற்காகவே அரசியல் ஆதரவைத் தன் பக்கம் திசைதிருப்புவதற்காக தற்போது தனது ஈழக் கோரிக்கைக்கு புத்துயிர் அளித்துள்ளார்" என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்படும் தேர்தல்களில் ஈழத் தமிழர்களின் விவகாரம் ஒருபோதும் பாதிப்பை உண்டுபண்ண மாட்டாது.