Wednesday 2 May 2012

அரசியல் வானில் மிதக்க மீளவும் தமிழீழ பலூனை கையிலெடுக்கும் கருணாநிதி





2006 தொடக்கம் 2011 வரையான காலப்பகுதியில், அதாவது புலிகளுக்கு ஆதரவான கட்சிகள் சிறிலங்காத் தமிழர்கள் நிலைப்பாட்டில் இந்தியா தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த போது அந்தக் காலப்பகுதியில் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழ்ப் புலிகளை அழிப்பதில் சிறிலங்காவுக்கு ஆதரவாக இருந்த இந்திய மத்திய அரசின் செயற்பாடுகளை தட்டிக் கேட்காது அமைதி காத்திருந்தார்.

இவ்வாறு இந்தியாவின் கல்கத்தாவை தளமாகக்கொண்ட The Telegraph ஆங்கில ஊடகத்தில் அதன் சிறப்பு செய்தியாளர் G.C. SHEKHAR எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி, சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஈழத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கின்ற தனது பழைய ஆயுதத்தை மீளவும் கையில் எடுக்கும் முயற்சியில் முழுமூச்சுடன் செயற்படுகின்றார். அரசியலில் நீடித்து நிற்பதற்கும், தனது மகன்களான ஸ்ராலின் மற்றும் அழகிரி ஆகியோருக்கிடையில் காணப்படும் முறுகல் நிலையை வேறு பக்கம் திசை திருப்புவதற்காகவே தி.மு.க தலைவர் இவ்வாறான தனது ஈழ இலட்சியத்தை முன்வைத்துள்ளார் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது.

இந்நிலையில், திங்களன்று தமிழீழ ஆதரவாளர்களின் அமைப்புடன் [TESO] தி.மு.க தலைவர் கருணாநிதி சந்திப்பொன்றை மேற்கொண்டு இது தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளார். ரெசோ அமைப்பானது 1980 களில் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட போதிலும், 1991 இல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் தனது ஈழக் கோரிக்கையை கருணாநிதி கைவிட்டிருந்தார். இதன் பின்னர் ரெசோ அமைப்பின் செயற்பாடுகளும் தடைப்பட்டன.

ஏப்ரல் மாதத்தில் கருணாநிதி தான் கலந்து கொண்ட இரு பொதுக் கூட்டங்களிலும், கடந்த ஆண்டில் வட சூடானிலிருந்து தென் சூடான் வாக்கெடுப்பு மூலம் பிரிக்கப்பட்டு தனி நாடாக அறிவிக்கப்பட்டது போன்று, சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கும் தனி ஈழம் அமைத்துக் கொடுப்பதற்கான கருத்து வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவித்திருந்தார்.

கருணாநிதி தற்போது புதிதாக ஈழ ஆதரவுக் கொள்கையை தருணம் பார்த்து ஆதரிப்பதற்கு ஏதோவொரு திட்டம் உள்ளது என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். சிறிலங்காவில் உள்ள தமிழ்க் கட்சிகள் தமது நாட்டு அரசியலமைப்பின் கீழ் தமக்கு மாகாண ரீதியாக அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கின்றனர். அத்துடன் தமிழ்நாட்டில் செயற்படும் அமைப்புக்கள், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் தொடர்பில் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை வழங்கி வருகின்றனர்.

"எங்களைப் போன்றவர்களுக்கு ஈழக் கோரிக்கை என்பது நீண்ட கால இலட்சியமாக உள்ளது. ...ஆனால் கருணாநிதியைப் பொறுத்தளவில் அவர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது மட்டுமே ஈழம் அவரது கண்களுக்கு புலப்படுகின்றது. 2009ல் சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் அங்கிருந்த தமிழ் மக்களை கொலை செய்து, பல மீறல்களை மேற்கொண்ட போது தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி இந்திய மத்திய அரசின் விருப்பத்துக்கு இசைந்து நடந்ததுடன், தமிழ் மக்கள் அவலப்பட்ட போது அது தொடர்பில் அமைதி காத்திருந்தார். தற்போதைய கருணாநிதியின் ஈழ ஆதரவு, தமிழ் மக்கள் அழிக்கப்பட்ட போது எங்கு போனது?" என ஈழம் தொடர்பாக தனது கருத்தை உரத்து ஒலிக்கும் வைகோவின் கட்சியான ம.தி.மு.க வைச் சேர்ந்த மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

2006 தொடக்கம் 2011 வரையான காலப்பகுதியில், அதாவது புலிகளுக்கு ஆதரவான கட்சிகள் சிறிலங்காத் தமிழர்கள் நிலைப்பாட்டில் இந்தியா தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த போது அந்தக் காலப்பகுதியில் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழ்ப் புலிகளை அழிப்பதில் சிறிலங்காவுக்கு ஆதரவாக இருந்த இந்திய மத்திய அரசின் செயற்பாடுகளை தட்டிக் கேட்காது அமைதி காத்திருந்தார்.

மத்திய அரசுடன் கூட்டுச் சேர்ந்துள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி, சிறிலங்காவில் வாழ்ந்த தமிழ்மக்களை எதிர்த்த சிங்கள அதிகார வர்க்கத்தை எதிர்த்து தமது கருத்துக்களை முன்வைத்து தமிழ் மக்களுக்காக பாடுபட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தைக் கூட வழங்கவில்லை.

"2009ல் தழிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா லோக்சபா பரப்புரையின் போது தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தை எதிர்த்ததுடன், யுத்தப் பாதிப்புக்களைத் தாங்கிய தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கு இந்திய இராணுவத்தை சிறிலங்காவுக்கு அனுப்ப வேண்டும் என குரல் கொடுத்த போது இதே கருணாநிதி, ஜெயலலிதா சிறிலங்கா விவகாரத்தை அரசியலாக்குகின்றார் எனக் குற்றம் சாட்டியிருந்தார். கருணாநிதியின் திடீர் ஈழ ஆதரவு என்பதற்கு குறிப்பிடத்தக்க வேறு காரணங்கள் எதுவுமில்லை. தனது மகன்மாருக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை வேறு பக்கம் திசைதிருப்புவதற்காகவே இவ்வாறான தனது ஈழக் ஆதரவை முன்வைத்துள்ளார்" என நாம் தமிழர் இயக்கத்தின் நிறுவனரான சீமான் தெரிவித்துள்ளார்.

"2014ல் நடைபெறவுள்ள தமிழ்நாட்டு சட்ட சபைத் தேர்தலில் மத்தியில் ஆட்சி நடாத்தும் கூட்டணியுடன் ஒன்று சேராது வைகோ, விஜயகாந்த் போன்று தனித்துப் போட்டியிடுவதையே கருணாநிதி விரும்புகின்றார். இதற்காகவே அரசியல் ஆதரவைத் தன் பக்கம் திசைதிருப்புவதற்காக தற்போது தனது ஈழக் கோரிக்கைக்கு புத்துயிர் அளித்துள்ளார்" என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்படும் தேர்தல்களில் ஈழத் தமிழர்களின் விவகாரம் ஒருபோதும் பாதிப்பை உண்டுபண்ண மாட்டாது.

No comments:

Post a Comment