Tuesday 15 May 2012

வெற்றி மாதமா? அல்லது மீண்டும் ஒரு கலவரத்திற்கு வித்திடும் மாதமா?உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத அரசியலமைப்பினைத் தன்னகத்தே கொண்டுள்ள நாடாக விளங்குகின்றது சிறீலங்கா. சிறீலங்காவின் இப்புதிய அரசியலமைப்பானது அரசியலில் ‘நரி’ என எல்லோராலும் வர்ணிக்கப்பட்டவரான காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனாவினால் கொண்டுவரப்பட்டதொன்றாகும். இவ்வரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் ஜனாதிபதிக்கு சர்வ அதிகாரங்களும் உள்ளது. அதற்கேற்ப தற்போது ஆட்சியிலிருக்கும் மகிந்த ராஜபக்சவிற்குச் சர்வ அதிகாரங்களும் உண்டு. அதனை விட நாடாளுமன்றில் மூன்றில் இரண்டுக்கும் மேலான பெரும்பான்மையான பலமும் உள்ளது.
அவர்கள் நினைப்பதை நிறைவேற்றக் கூடிய பெரும்பான்மை பலமும் உள்ளது.

இந்நிலையில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து மூன்றாண்டுகள் முடிவடைந்த நிலையில் கூட தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் முயற்சியில் முழுமனதுடன் ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையில் இன்னமும் அரசு இறங்கியதாகத் தெரியவில்லை. வீண் சாக்குப் போக்குகளைக் கூறிக் கொண்டு காலத்தை இழுத்தடித்துக் கொண்டு வெளிநாடுகளையும், உரிமைகளுக்காக வாதிடும் தமிழ் மக்களையும் ஏமாற்றி வருகின்றது.

தமிழர் பிர்சசினைகளுக்கு ஓர் தீர்வினைக் காணும்படி வெளிநாடுகள் சிறீலங்கா அரசின் மீது அழுத்தம் கொடுக்கும் போதிலெல்லாம் அந்நாடுகளைச் சமாளிக்கும் விதத்தில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கிவிட்டு பின்னர் அவை குறித்துச் சற்றும் கவனம் செலுத்தாது வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டுத் தனக்கேயுரிய பாணியில் பயணிக்கின்றது மகிந்த அரசு.

நாட்டில் விலைவாசிகள் அதிகரித்துவிட்டன. நாளாந்தம் இரவோடிரவாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுகின்றன. நாட்டிலுள்ள சகல இன மக்களும் இவ்விலையுயர்வுகளினால் கொதிப்படைந்துள்ளனர். தெற்கில் ஆர்ப்பாட்டங்கள் வலுக்கின்றன. பெரும்பான்மையின மக்களின் எதிர்ப்பலைகளைத் திசை திருப்பும் விதத்தில் அவர்களின் உணர்ச்சிகளுக்கு வேறுவகையில் உருவேற்றும் அடுத்ததொரு முயற்சியில் இறங்கியுள்ளது மகிந்த ஆட்சித்தரப்பு.


அதாவது, மே மாதம் முழுவதையும் புலிகளைக் கொன்றொழித்து (மக்களையும் சேர்த்துத்தான்) வெற்றிவாகை சூடியதன் மூன்றாவதாண்டு நினைவு தினமாகக் கொண்டாடும் முகமாக இராணுவ வீரர்களின் வெற்றி மாதமாக மிக எழுச்சியாகக் கொண்டாடுவதாக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 18ஆம் திகதி காலிமுகத்திடலில் வழமை போல வெற்றியீட்டித் தந்த படையணிகளின் அணிவகுப்பும் அவைகளின் நவீன கனரக ஆயுதங்களின் காட்சியும் இடம்பெறும். அதனையடுத்து மறுநாள் போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் வைபவமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானம்; நிறைவேற்றப்பட்டுள்ள குழப்பமான நிலையிலும்இ விலைவாசி உயர்வுகளால் புரையோடியிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஓர் சுமுகமான அரசியல் தீர்வினை வழங்குவதற்கான முழுமுயற்சியில் ஈடுபடாது பேரினவாத அரசு தனது சிங்கள மக்களின் மத்தியில் போரின் வெற்றியை மீண்டும் நினைவுபடுத்தி அதன் மூலமாக அவர்களின் நெஞ்சங்களினால் தன்னை ஓர் நாட்டை மீட்ட மகிந்த மன்னன் (துட்டகைமுணு) எனும் ஓர் தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமாக வெற்றிக்களிப்பின் மேலாதிக்கத்தை ஊட்டி உருவேற்றும் விதத்தில் போரின் வெற்றி மாதமாக மே மாதம் முழுவதையும் பிரகடனப்படுத்தியுள்ளார் மகிந்த அரசு.

போரினாலும,உயிரிழப்புக்களாலும் ஏற்பட்ட உடல, உள ரணங்கள் தமிழ் மக்கள் உள்ளங்களில் இருந்து இன்னமும் ஆறாத நிலையிலும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்குக் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக மீளத் திரும்பிச் செல்ல முடியாமல் செல்ல அனுமதி வழங்கப்படாமல் செட்டிக்குளம் முகாமில் ஏக்கப் பெருமூச்சுடன், கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் நிலையிலும், காணாமற்போனோரின் நிலை குறித்து ஏதுமறியாமல் உறவுகள் ஏங்கித் தவிக்கும் நிலையிலும், தாமாகவே சரணடைந்தும் இன்னமும் விடுவிக்கப்படாமல் கடந்த மூன்றாண்டுகளாகப் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைத்திருப்பவர்களின் உறவுகள் ஏங்கியழும் நிலையிலும் நாட்டின் மக்களில் ஒரு பகுதியினர் துன்பங்கள் மத்தியில் உழன்று கொண்டிருக்கையில் வெற்றியின் மமதையை எழுச்சி போட்டுக் காட்டும் விதத்தில் ஒரு விழாவை மாதக் கணக்கில் நீடித்து பெருவிழாவாக எடுப்பது தன்னாட்டுக் குடிமக்களின் மீது அக்கறையோ அன்றிக் கரிசனையோ கொண்ட ஓர் மனித நேயமுடைய அரசினால் மேற்கொள்ளப்படும் நன்னோக்குடைய செயலாக ஒரு போதுமே இருக்க முடியாது. இருக்கவும் மாட்டாது.

ரோம் நகரம் பற்றியெரியும் நேரத்தில் நீரோ மன்னன் பிடில் வாசித்தற்கொப்பாகும் இச்செயல்.

அதுமட்டும்தான் எனில் பரவாயில்லை. கடந்த மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற உள்நாட்டுப்போரில் மரணித்த போராளிகள் ஒன்றும் வேற்று நாட்டவர்களல்ல. அவர்களும் இந்நாட்டின் மைந்தர்களே. அவர்கள் ஒன்றும் பயங்கரவாதிகளல்லர். அவர்தம் படையினராலும் அன்றுதொட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள, வன்செயல்களையெல்லாம் நேரில் கண்டும் கேட்டும் அனுபவித்தும் வெறுப்படைந்து விரக்தியடைந்து தம்மவர்க்கு ஏற்பட்ட உயிரழிவுகள் சொத்தழிவுகளை உணர்ந்து நெஞ்சம் கனலாகி இனியும் பொறுக்கமுடியாததென்ற நிலையில் போராடித்தான் தம் உரிமைகளைப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லையென்ற முடிவுடன் ஆயுதங்களைக் கையில் ஏந்திப் போராடியவர்களே தவிர அவர்கள் நாட்டின் துரோகிகள் அல்லர்.

அந்நாட்களில் தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களது உரிமைகளை ஓரளவாவது வழங்க முன்வந்திருந்தால், அவர்களில் எவருமே ஆயுதத்தை ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்.

சரி, அவற்றையெல்லாம் தடந்த காலக் கெட்ட கனவுகளாக எண்ணி மறந்து விட்டாலும் தமது இளவயதுக்குரிய ஆசாபாசங்களையெல்லாம் துறந்து தம் மண்ணின் விடுதலைக்காகச் சமராடி மண்ணில் சாய்ந்த பல பல்லாயிரக் கணக்கான ஆண், பெண் போராளிகளினதும் அத்துடன் உயிராயுதத்தை உடலில் காவிச் சென்று காற்றோடு காற்றாய்ப் போனவர்களின் நினைவாக அவர்களின் தியாகத்தை என்றென்றும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் வண்ணமும் வரலாற்றுச் சான்றுகளாக எதிர்காலத்தில் தமிழர் வீரத்தைப் பறைசாற்றும் விதத்தில் அவர்களுக்காகப் பல இடங்களிலும் துயிலும் இல்லங்களில் நிர்மாணிக்கப்பட்டு ஆண்டுதோறும் அவர்தம் நினைவு நாளாக வருடந்தோறும் கார்த்திகை 26ஆம் திகதி அனுஷ;டிக்கப்பட்டு வந்தது.
தம்பிள்ளைகளை ஈந்த பெற்றோர்கள், கணவனை இழந்த மனைவி, பிள்ளைகள் எனப் பலப்பலதரப்பட்டவர்களும் அந்நாளில் துயிலும் இல்லங்களில் ஒன்று கூடி தம்மவரின் சமாதிகளில் ஈகைச் சுடரினை ஏற்றி அவர்களை நினைவு கூர்ந்து தம் ஆறாத் துயரினை ஓரளவாகிலும் தேற்றிக் கொண்டு வந்தனர்.

இது கண்டு மனம் பொறுக்க முடியாத கொடிய இனவாத அரசு போர் முடிவடைந்த கையோடு தனது முதல் நடவடிக்கையாக படையினரைக் கொண்டு வடக்குக் கிழக்கிலிருந்த அத்தனை துயிலும் இல்லங்களையும் துவம்சம் செய்வித்து அவை இருந்த இடமே தெரியாதபடி நிர்மூலமாக்கிவிட்டது ஹிட்லர் பாணியில்.

தம் பிள்ளைகளை உறவுகளை இழந்தவர்கள் அவர்களது நினைவாகச் சமாதிகளாவது இருக்கின்றன. நாம் நினைத்த வேளைகளில் அங்கு சென்று அவர்களுக்கு அஞ்சலி மற்றும் கிரிகைகள் செய்வது மூலமாகவேனும் சற்று ஆறுதலடையலாம் என்ற எண்ணங்களில் இருந்தவர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிப் போட்டது மனித நேயம் சற்றும் இல்லாத அரசு. அத்தோடு நின்றுவிடாமல் மாவீரர் நாளாம் கார்த்திகைத் திங்கள் 26ஆம் நாளன்று எவரும் அஞ்சலி செலுத்தவோ அன்றி அஞ்சலி நிகழ்த்தவோ கூடாது எனத் தடை விதித்துவிட்டது அரச படைகள்.

இவ்விதமாகத் தமிழ் மக்கள் ஆறாத்துயரில் உழன்று கொண்டிருக்கையில் பேரினவாத அரசு அவர்தம் உணர்வுகளுக்குச் சற்றேனும் மதிப்பளிக்காது மக்களுக்கு மென்மேலும் வெறுப்பினை ஊட்டும் விதத்தில் தமிழினத்தின் மீதான ஒட்டுமொத்தமான தனது பேரினவாத வெறியை வெளிக்காட்டும் விதத்தில் செயற்பட்டு வருகின்றது.

இது நாட்டில் சமாதானத்தையோ அன்றி நல்லிணக்கத்தையோ என்றுமே ஏற்படுத்தப்போவதில்லை. மாறாக மென்மேலும் இனங்களுக்கிடையேயான பிரிவினைக்கும் காழ்ப்புணர்விற்குமே வழிவகுக்கும். இதுவே சிறீலங்கா அரசின் உள் நோக்கமாகவும் இருக்கலாம்.


-தமிழீழத்திலிருந்து நீலவண்ணன்-

No comments:

Post a Comment