Monday 21 May 2012

சாவில் எழுதப்பட்ட சரித்திரம்!



“அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரமடைந்ததால் அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்த போது தான் வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது”

இது 2008ம் ஆண்டு கார்த்திகை 27, மாவீரர் தினத்தன்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய உரையில் மீண்டும் ஒருமுறை உலகுக்குத் தெரியப்படுத்தி இருந்தார்.

ஏனென்றால் எம்மவர்களில் சிலர் “உந்தப்பெடியள் தேவையில்லாத வேலை பார்த்துத் தான் ஆமி தமிழனை கலைச்சுக் கலைச்சு அடிக்கிறான்” என்று தம்மைப் படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் கூட கதைத்ததுண்டு.அந்தவகையில் அவ்வாறானவர்களுக்கு ஏன் இந்த விடுதலை அமைப்பு உருவானது என்று தனது 20 நிமிட உரையில் இதற்கு முக்கியத்துவத்தினைக் கொடுத்துள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அத்துடன் அவர்களைப் போன்றவர்களுக்கு மேலும் “சிங்கள அரச ஆயுத பயங்கரவாதத்தில் இருந்து எம் மக்களைக் காக்கவே நாம் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப் பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை வரலாறு தான் எம்மிடம் கையளித்தது” என்றும் சொல்லியிருந்தார்.

இவ்வாறான தெளிவுபடுத்தல்களை யாருக்காகச் செய்ய வேண்டும்? 30 வருடங்களாக போராட்டம் ஆரம்பித்து நடாத்தி வரும் ஒரு அமைப்பு, மூன்றாவது தசாப்தத்தின் பின்னர் இதனைச் சொல்ல வேண்டிய தேவை ஏன் இருந்தது?

இங்கு தான் எமது கண்கள் அகல விரிந்து பல கேள்விகளைக் கேட்டு நிற்கின்றது. ஒரு சீரான நெறிப்படுத்தலில் காலாட்படையணிகள் கொண்ட இராணுவக் கட்டமைப்பு, புலனாய்வு அமைப்பு, விமானப்படை, கடற்படை, நீதிநிர்வாகம்,காவல்துறை, வைப்பகம்,என ஒரு நிழல் அரசாங்கத்தையே ஒரு தசாப்தத்திற்கு மேலாக நடாத்திவந்த அமைப்பின் தலைவர் கூறியதற்கு காரணமிருக்கத் தான் செய்தது.

கிட்டத்தட்ட போராட்டத்தின் இரண்டாம் கட்ட எழுச்சிகளில் இருந்து போராட்டத்தில் பங்கு பற்றி இராணுவக் கட்டமைப்பின் கட்டளைத் தளபதியாக இரந்த ஒரு தளபதியின் தூர நோக்கற்ற துரோகத்தனம், அவரை பாதுகாப்பதற்காக தம்மையே தியாகம் செய்து மோதிவெடித்த கரும்புலிகள், அவரது கட்டளையின் கீழ் சென்று வீரச்சாவடைந்த போராளிகள் என அனைவரது தியாகங்களையும் மறந்து, தன் ஒருவரினுடைய சுயநலத்திற்காக, தனது பிழையை மறைப்பதற்காக, பிரதேசவாதத்தை மக்களிடையே தூண்டி தனது துரோகத்தனத்தை மறைப்பதற்கு முயற்சி செய்து முடியாததால் அரசாங்கத்துடன் இணைந்து போராட்ட அமைப்பின் தந்திரோபாயங்களைக் காட்டிக் கொடுத்து அரச இராணுவ இயந்திரத்தால் மக்களைக் கொன்று தமிழர் பிரதேசங்களை கையகப்படுத்திக் கொள்வதற்கு காரணமாக இருக்கும் போது, மற்றவர்களால் ஏன் கடைசியா போராட்டத்தில் இணைந்த போராளிகளுக்குக் கூட எப்படி இந்தப் போராட்டத்தினைப் பற்றி விளங்கப் போகின்றது என்ற சந்தேகத்திலோ அல்லது ஏக்கத்திலோ சொல்லியிருக்கலாம்.

அந்த ஒருவர் செய்த துரோகம் தமிழனை ஓடி ஓரிடத்தில் ஒடுங்க வைத்து பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து இன்றும் பல தமிழர்களைச் சிறையில் வைத்து பல தமிழச்சிகளை விதவைகளாக்கி, பல குழந்தைகளை அநாதைகளாக்கி, தமிழனது பேசும் சக்தியை, தாயக நிலத்தை,சுயநிர்ணய உரிமையை, தன் தனித்துவத்தை என அனைத்தையும் இழந்து “மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக” தமிழனின் அடிமை வாழ்வு முப்பது வருடங்களின் பின்னர் மீண்டும் மலைபோல் எழுந்து நிற்கின்றது.

இன்று எந்த இணையச் செய்தியைத் திறந்தாலும் கொலை,கொள்ளை, கற்பழிப்பு, விபச்சாரம், புதிதாக முளைக்கும் புத்தர் சிலைகள், காணிகள் பறிமுதல் என பார்க்கவே முடியவில்லை. இவ்வாறான நிகழ்வுகள் அந்த தமிழனின் பேசும் சக்தி இருக்கும் போது நடந்ததில்லை. அதைவிட சில அந்த படித்தவர்கள் தம்பியாக்கள் இருந்த போது எங்கட பிள்ளையள் பயமில்லாமல் பள்ளிக்கூடம் போட்டு வந்தார்கள். ஆனால் இப்போ, போன பிள்ளை திரும்பி வருமோ,வரும் போது ஒரு பிரச்சனையுமின்றி வந்து சேருமா, என்று ஒரே ஏக்கமாக இருக்கின்றது” என்று தமது படித்த வட்டாரங்களுக்குள்ளேயே இப்போது பேசிக்கொள்கிறார்களாம். இவை எல்லாம் காலம் கடந்த ஞானங்களாகவே ஏற்பட்டிருக்கின்றன.

இன்று தமிழர், விடுதலை என்ற பெயர் கொண்ட பல அமைப்புக்கள் இருந்த போதும் அனைத்தும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. ஏனென்றால், அவர்கள் இவ்வாறான விடயங்களைக் கேட்பதுமில்லை, அப்படி அவர்கள் கேட்டாலும், அரசாங்கம் அதனை கருத்தில் எடுக்கப் போவதுமில்லை. அப்படியான ஒரு நிலையை அங்கு உருவாக்கி விட்டார்கள்.

நாம் எமது குறைபாடுகளையும் இங்கே சொல்லியாக வேண்டும். சிங்கள பயங்கரவாத அரசு தமிழனை கொடுங்கரம் கொண்டு அடக்கியொடுக்க முனைந்த போது சிங்களக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஒரே குரலில் பேராதரவை வழங்கி ஊக்கத்தைக் கொடுத்தன. ஆனால் எமது தமிழமைப்புக்கள் என்ன செய்தன?

தமிழர்களுக்கென உள்ள தமிழ் அமைப்புக்கள் ஏராளம்… அவர்களுடைய கட்சியோ… அமைப்புக்களுடைய பெயர்களோ தமிழர் என்றோ, விடுதலை என்ற சொற்பதங்கள் இல்லாமல் அமைக்கப் படவில்லை. ஆனால் அவர்கள் ஒன்றுபட்டு தமிழர்களுக்காக ஒரே குரல் கொடுக்கத் தயங்குகிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் அரச பயங்கரவாதத்தின் வஞ்சக சூழ்ச்சியால், உலகமே திரண்டு வந்து தமிழர்களை முடக்கிக் கொன்ற போது தமது கட்சி பேதங்கள் மறந்து ஒரு எதிர்ப்பு அறிக்கை விடவில்லை.

ஏன் இலங்கையில் உள்ள எந்த தமிழ்க் கட்சிகளாவது, இதுவரை 40000 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு இரங்கல் நிகழ்வு நடாத்தவில்லை.. ஏன் இரங்கல் அறிக்கை கூட விடவில்லை… இப்போதும் பதவியாசையின் பிடியில் அரசாங்கத்தின் காலைப் பிடித்துக் கொண்டு, அவர்கள் சொன்னதயே கிளிப்பிள்ளை போன்று உலகுக்குச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவை தான் எம் தமிழர்களுக்கிடையில் உள்ள சாபக் கேடுகள். அது தான் பெரியவர்கள் சொல்வார்கள் சுயபுத்தி இருக்க வேண்டும் அல்லது சொல்புத்தியாவது இருக்க வேண்டும்” என்று. தேசியத்தலைவர் அவர்களும் இது விடயமாக சில வரிகளை அதே மாவீரர் தினத்தில் சொல்லியிருக்கின்றார்.

“மனித துயரங்களுக்கெல்லாம் அடங்காத,அருவருப்பான ஆசைகளில் இருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசைகளின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது”

இன்று அமெரிக்கா ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை கையிலெடுத்து வந்து ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் முன்வைத்து விவாதிக்கின்றது. இதனை எதிர்த்து எம் தமிழர்களே எமக்கெதிராக வாதிடுவது எவ்வளவு கேவலம்…? யானை சேற்றை அள்ளி தன் தலையிலேயே கொட்டிக்கொண்டது போல் தானே உள்ளது?

உதவி செய்யாது விட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கலாம் தானே? 40000 தமிழர்களை, எமது சொந்த இரத்தங்களை, கர்ப்பிணித் தாய்மார்களை, அக்கா தங்கச்சிகளை, அண்ணா தம்பிகளை,பிஞ்சுப்பாலகர்களை ஈவிரக்கம் பார்க்காது, சாப்பாடு கொடுக்காது கொத்தணிக் குண்டுகளை போட்டு அழிச்சது உங்களுக்குத் தெரியாதா?

வெள்ளைக்கொடியுடன் சமாதானம் பேச வந்த போராளிகளை அதே இடத்தில் சித்திரவதை செய்து உடுப்புக்கள் எல்லாவற்றையும் கழற்றிவிட்டு கொலை செய்தது உங்களுக்குத் தெரியாதா?

யாரோ ஒரு வெள்ளையன், லண்டனில் இருந்து கொண்டு சிங்கள அரசின் கொடுமைகளை, சித்திரவதைக் கொலைகளை வெளிக்கொண்டு வருவதற்கு அந்த ஆதாரங்களை எல்லாம் ஒன்று திரட்டி ஆவணப்படமாகத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.

எங்கோ உள்ள வெள்ளையனின் மனத்தில் உள்ள ஈரம், ஏன் எம் தமிழர்களின் மனங்களில் ஊறவில்லை? அவ்வளது கல்நெஞ்சம் கொண்டவர்களா தமிழர்கள்? மனிதாபிமானத்துக்கான யுத்தம் என்று பெயர் சூட்டி வந்து அவ்வளவு தமிழர்களைக் கொன்ற போது சிங்கள அரசு சொன்னது யுத்தம் முடிந்த பின்னர தான் தமிழர்களுக்கான தீர்வு முன்வைக்கப்படும் என்று.

ஆனால் இன்று வரை ஒன்றையும் கொடுப்பதற்கு அரசு தயாரில்லை என்பதை ஏன் எங்களால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை? பல தடவைகள் இது தொடர்பாகப் பேசுவதற்கு இந்திய அரச குழுக்கள், இலங்கை வந்து சென்ற போதும், ஒன்றையும் சாதித்துவிட முடியவில்லை. அவர்கள் இலங்கை வரும் போது ஒருகதையைச் சொல்லும் அரச இராஜதந்திரிகள், அவர்கள் நாடு திரும்பியதும் அவற்றை மறுத்து அறிக்கை விடுவதும் யாவரும் அறிந்ததே…

ஒரு மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். தமிழர்களே சிந்தியுங்கள். தாயகத்தில் உள்ள தமிழர்களை, எமது சொந்தங்களை இன்றும் கஷ்டப்பட்டு, மீண்டும் அடிமைத்தளைகளினுள் சிக்கியுள்ளார்கள். அவர்களை புலம்பெயர்ந்து வாழும் நாம் தானே மீட்டெடுக்க முன்வர வேண்டும்.. இந்த நேரத்தில் நாம் யூதர்களின் வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தோமானால் அனைவருக்கும் அனைத்தும் விளங்கும்.

யூதர்களை, நாசிகள் தமது இருப்பிடங்களை விட்டுத் துரத்திக் கொன்ற போது, அவர்கள் தப்பியோடி, பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் அவர்கள் எங்கு போன போதும் அவர்கள் தமது மொழி, கலாச்சாரத்தினை மறக்கவேயில்லை. அத்துடன் அவர்கள் தமக்கிடையே என்ன பிணக்குகள் இருந்த போதும் யூதர்கள், தமது தாயகம் என்று வந்தபோது, தமது பேதங்களை மறந்து ஒன்றுகூடி ஒற்றுமையாக குரல் கொடுத்தார்கள்.

தமது யூதர்கள் தொடர்பான செய்திகளை அறிந்த போது அங்கிருந்த அனைத்து யூதர்களுக்கும் பரப்பினார்கள். அத்துடன் அவர்கள் தமது கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டு உச்ச நிலையை அடைந்தார்கள். இன்று அவர்களது எண்ணம் ஈடேறி ஒற்றுமையாக ஒருநாட்டை உருவாக்கி சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார்கள். அது தான் இஸ்ரேல் தேசம்.

இன்று யூதர்களுக்கு எங்கு பிரச்சனையாக இருந்தாலும் குரல் கொடுக்கிறார்கள். அண்மையில் 2 யூதர்கள் பிரான்சில் யாரோ ஒருவரால் கொலை செய்யப்ப்பட்ட போது, அந்த யூதர்கள் பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவராக இருந்த போதும், இஸ்ரேல் பிரதம மந்திரியால் அவர்களின் கொலையைக் கண்டித்து கண்டன அறிக்கை விட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இதிலிருந்து நாம் எம்மை மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். இஸ்ரேலிய அரசு, ஏதோ ஒரு நாட்டில் குடியுரிமை பெற்ற 2 யூதர்களின் சாவுக்காக கண்டன அறிக்கை விட்டு தமது மக்களுக்கு ஒரு ஆணித்தரமான பாதுகாப்பை கொடுக்கின்றது.

ஆனால் எமது அமைப்புக்கள், தமது சுயநலனிலும் பதவியாசையிலும் மயங்கி தம் கண்முன்னாலேயே சித்திரவதை செய்து கொல்லப்பட்ட தமிழர்களுக்கு இரங்கல் அறிக்கை கூட வெளியிட மனமற்ற நிலைக்குத் தள்ளி வைத்துள்ளது. இலங்கை அரசின் கோரத்தனத்தை, இனவாதத்தை, இறந்த மாவீரர் துயிலும் இல்லங்களை இடித்ததில் இருந்தே புரிந்து கொள்ள முடியும். ஒரு சரியான வீரனால் தான் ஒரு மாவீரனை மதிக்க முடியும்.

யூதர்கள் போன்று எமது தமிழினமும் உலகெங்கும் பரம்பியிருந்த போதும் எமது மொழி கலாச்சாரத்தை மறந்தவர்களாக, ஒற்றுமையற்றவர்களாக, காணப்படுகின்றோம். எமது கட்சி பிரதேச வாதங்களுக்கு அப்பால் தமிழினம் என்ற ஒரு நிலையான ஒற்றுமையில் இருந்து எமது சுதந்திர ஈழத்தை அமைக்க பாடுபட வேண்டும்.

எதிரியின் நயவஞ்சகத் திட்டங்களுக்கு துணை போகாது அர்ப்பத்தனமான ஆசைகளுக்குச் சோராம் போகாது உலகம் எங்கிலும் உள்ள தமிழர்கள் எம்மிடையே உள்ள பேதங்கள் மறந்து ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும்.

இது வரை நாம் இழந்த உயிர்களுக்கு அவர்களது ஆத்ம சாந்திக்கு அவர்கள் என்ன இலட்சியத்துக்காக மரணித்தார்களோ அந்த இலட்சியக் கனவுகள் நனவாவதற்கு ஒற்றுமையாகக் குரல் கொடுப்போம்… சுதந்திரத் தமிழீழம் பெற்று சுதந்திரமாக வாழ்வோம். வாழவைப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

கே.பி.எஸ் நாதன்

No comments:

Post a Comment