Tuesday 17 July 2012

இலங்கை பிரச்சனையை 'முடித்துவிட்ட' கருணாநிதிக்கு திடீரென மலேசிய தமிழர்கள் மீது அக்கறை!



சென்னை: தமிழ் கலாசாரம் தொடர்பான நூல்களை மலாய் மொழியில் மொழிபெயர்க்க மலேசிய பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் டெசோ அமைப்பை மீண்டும் தொடங்கிய கருணாநிதி, தனி ஈழத்தை வலியுறுத்தி ஆகஸ்ட் 5ம் தேதி விழுப்புரத்தில் மாநாடு நடைபெறும் என முதலில் அறிவித்தார். தற்போது இந்த மாநாடு, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை உத்தரவிட்டது. ஆதரவு இயக்கங்கள் மூலமாக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஆதரவு திரட்ட புலிகள் முயல்வதாகவும், தமிழீழ கோரிக்கை இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. மேலும் கருணாநிதியை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து தனி ஈழ கோரிக்கை இப்போதைக்கு இல்லை; தனி ஈழத்துக்காகப் போராட்டமோ, கிளர்ச்சிகளோ நடத்தும் எண்ணமும் இல்லை என்று கருணாநிதி அறிவித்துவிட்டார்.

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், மலேசிய தமிழர்கள் தமிழ் கற்பதற்காக புதிதாக குரல் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், மலேசியாவில் சுமார் 20 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். 50 முதல் 60 சதவிகித மலேசிய தமிழ் குழந்தைகள் மலாய் வழி பள்ளிக் கூடங்களில் படித்து வருகின்றனர். வெகு சிலரே தமிழ் வழி பள்ளிக் கூடங்களில் படிக்கின்றனர்.

தமிழ்க் கலாசாரம், பண்பாட்டை மலேசிய தமிழ் குழந்தைகள் அறிந்து கொள்வதற்காக தமிழ் இலக்கியங்களை மலாய் மொழியில் மொழிபெயர்க்கும் பணியில் மலேசிய பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வுத் துறை ஈடுபட்டுள்ளது.

இந்தப் பணிக்கு மலேசிய மதிப்பில் 8 லட்சம் ரிங்கிட்டுகள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்குத் தேவையான நிதியை இந்திய அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

No comments:

Post a Comment