சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை அ.தி.மு.க.
தொண்டர்கள் எத்தனை உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்களோ கிட்டத்தட்ட அதே
மனநிலையில்தான் பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும்
இருக்கின்றனர்..

இதனால்தான் ஜெயலலிதாவை வரிசை கட்டிக் கொண்டு அவர்கள்
அனைவரும் வாழ்த்தினார்கள்... இப்படி ஜெயலலலிதாவுடன் பாரதிய ஜனதா தலைவர்கள்
நெருக்கம் காட்டுவதால் சொத்துக் குவிப்பு வழக்கை கையிலெடுத்துக் கொண்டு
நீதிமன்றப் படிகளேறும் சுப்பிரமணியன் சுவாமி அக்கட்சிக்குள்ளேயே தண்ணி
தெளித்துவிடப்படுகிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
லோக்சபாவில் பெரும்பான்மையாக இருந்தாலும் ராஜ்யசபாவில் சிறுபான்மையாக இருக்கும் தங்களுக்கு அ.தி.மு.க. ஆதரவு தேவை என்பதை பாரதிய ஜனதா மேலிடம் உணர்ந்தே செயல்பட்டு வருகிறது. இதனால்தான் அ.தி.மு.க.வை விமர்சிப்பதை விட நெருக்கம் பாராட்டுவதில் மும்முரமாக இருக்கிறது பா.ஜ.க. தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் என்னதான் விமர்சித்தாலும் அதை அண்ணா தி.மு.க. மேலிடமும் கண்டுகொள்வதில்லை.. பா.ஜ.க.வும் கவலைப்படுவதில்லை..
இதனை பகிரங்கப்படுத்தும் வகையில்தான் ஜெயலலிதா விடுதலையான உடன் பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் ஜெயலலிதாவை வாழ்த்தினர். அதே நேரத்தில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்குக்கு காரணமாக இருந்த சுப்பிரமணியன்சுவாமியோ, நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என்று சொல்லியிருந்தார்..
உண்மையில் அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்ததுதான் அதிர்ச்சியாக இருந்திருக்க முடியும்.. அதனால்தான் ஜெயலலிதாவை விடுதலை செய்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதில் அப்படி ஒரு பம்மோ பம்மென பதுங்கினார் சுவாமி.
ஏனெனில் ஜெயலலிதாவை எதிர்த்து முன்னைப் போல தீவிரமாக போராடினால் இப்போது பாரதிய ஜனதாவில் இருக்கும் நண்பர்கள் பலரும் எதிரிகளாகிவிடக் கூடும்.. அப்படியே தன்னை தண்ணிதெளித்து அனாதையாக்கிவிடுவார்கள் என்ற அச்சம் சுப்பிரமணியன் சுவாமிக்கு இருக்கவே செய்யும்... இதனாலேயே மிகவும் உஷாராக ஜெயலலிதா விவகாரத்தில் பதுங்கிக் கொண்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
No comments:
Post a Comment