Tuesday 12 May 2015

மயூரனின் மரண தண்டனையும் மனிதாபிமான வேடதாரிகளும்

"மனிதாபிமான உணர்வு இனம் பார்த்துத் தான் வரும்" என்பதை, மீண்டும் பல "தமிழர்கள்" நிரூபித்து வருகின்றனர். போதைவஸ்து கடத்திய குற்றத்திற்காக மயூரன் என்ற, அவுஸ்திரேலிய பிரஜையான தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை வழங்கியதை நியாயப் படுத்த முடியாது. ஆனால், இந்த விடயத்தில் நிறையப் பேர் இரட்டை வேடம் போடுகின்றனர். 
 
பல தசாப்த காலமாகவே மரண தண்டனை ஒழிப்பிற்காக குரல் கொடுத்து வரும் மனிதநேய ஆர்வலர்கள் இந்தோனேசிய அரசை விமர்சிப்பது நியாயமானது. ஆனால், அமெரிக்கா முதல் இந்தோனேசியா வரையில் போதைவஸ்து கடத்தும் கிரிமினல்களுக்கு மரண தண்டனை வழங்குவதை, நேற்று வரையில் வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த பலர், இன்று திடீர் மனிதாபிமானவாதிகளாக மாறியுள்ளனர்.
ஒரு தமிழரும், சீனரும், தனது நாட்டு பிரஜைகள் என்பதால், மரண தண்டனையை தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசு பாடுபட்டுள்ளது. தனது வேண்டுகோள் புறக்கணிக்கப் பட்ட படியால், தூதுவரை திரும்பப் பெற்றுள்ளது. இதற்குப் பின்னால் உள்ள இராஜதந்திர பிரச்சினைகளையும் மறைக்க முடியாது.
ஏற்கனவே மலேசியா, சிங்கப்பூரில் இதே போதைவஸ்து கடத்தல் குற்றத்திற்காக அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டது. அப்போது இந்தளவு கண்டனங்களும், ஊடக கவனமும் அவற்றிக்கு கிடைக்கவில்லை.
மரண தண்டனையை வைத்து அரசியல் இலாபம் பெற நினைக்கும், தமிழ் தேசியவாதிகள் உதிர்க்கும் கருத்துக்கள் அரைவேக்காட்டுத் தனமானவை. "தமிழனுக்கு என்றொரு நாடு இருந்திருந்தால் பிரச்சினை இந்தளவு தூரம் வந்திருக்காது" என்று காமெடி பண்ணுகின்றனர்.
உலகில் மிகவும் செல்வாக்குள்ள, ஒரு பணக்கார மேற்கத்திய நாடான அவுஸ்திரேலியா, தனது பிரஜைகளை காப்பாற்ற முயற்சித்தும், மரண தண்டனையை தடுக்க முடியவில்லை. இந்த இலட்சணத்தில், தமிழ் தேசியவாதிகள் தனி நாடு கண்டிருந்தால் கிழித்திருப்பார்கள்.
முன்பு ஈழப்போர் நடந்த காலங்களில், வட மாகாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், அல்லது கெரில்லாப் போர் நடத்திய பிரதேசங்களில், பல சமூகவிரோதிகளுக்கு மரண தண்டனை வழங்கினார்கள். தந்திக் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த சடலங்களுக்கு அருகில், அவர்கள் செய்த குற்றமும் எழுதப் பட்டிருக்கும். சில பத்துப் பேருக்காவது, போதைவஸ்து கடத்திய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதித்திருப்பார்கள்.
அப்போதெல்லாம், மரண தண்டனை விதிக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல்காரர்களுக்காக, "தமிழர்கள்" யாரும் இரக்கப் படவில்லை. இன மான உணர்வு பீறிட்டுக் கிளம்பவில்லை. இத்தனைக்கும் கொல்லப் பட்டவர்களும் தமிழர்கள் தான். ஆனால், "வித்தியாசமான" தமிழர்கள். அவர்கள் ஒரு பின்தங்கிய மாவட்டத்தை சேர்ந்த ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்திருப்பார்கள். அல்லது சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வறுமையில் வாழும், தாழ்த்தப் பட்ட சாதியினராக இருந்திருப்பார்கள். அதனால், அன்று அவர்களுக்காக யாரும் அழவில்லை.
ஓர் அவுஸ்திரேலிய பிரஜையான மயூரன், தனது வயிற்றுப் பசியை, அல்லது குடும்பக் கஷ்டத்தை போக்குவதற்காக போதைவஸ்து கடத்தியதாக தெரியவில்லை. அப்படி அவரும் வாக்குமூலம் கொடுக்கவில்லை. அவுஸ்திரேலியா "ஒரு வறிய நாடு, வேலையில்லாப் பிரச்சினை அதிகம், அதனால் மயூரன் வேறு வழியின்றி போதைவஸ்து கடத்தினான்..." என்று திடீர் மனிதநேயவாதிகள் யாரும் சொல்லவும் மாட்டார்கள். இங்கே பல "தமிழர்களுக்கு" மனிதாபிமான உணர்வு இனம் பார்த்து மட்டும் வருவதில்லை. அது வர்க்கம் பார்த்தும் வரும்.


மயூரன் சுகுமாரனின் மரண தண்டனையை கடுமையான வார்த்தைகளில் கண்டித்த, அவுஸ்திரேலிய அரசையும், ஊடகங்களையும் பற்றி, இன்று வரையில் பல தமிழர்கள் சிலாகித்துப் பேசியுள்ளனர். உண்மையில் அவர்களுக்கு அவுஸ்திரேலிய அரசு, மற்றும் ஊடகங்களின் இரட்டை வேடம் பற்றி எதுவும் தெரியாதா? அல்லது தெரிந்து கொள்ள விருப்பமில்லையா? 
இதே அவுஸ்திரேலிய அரசு தான், தமிழ் அகதிகளை நாட்டுக்குள் நுளைய விடாமல், தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்திருந்தது. அப்போது எங்கே போனது மனிதாபிமானம்? அவுஸ்திரேலிய விபச்சார ஊடகங்கள் என்ன குறைந்தவையா? 
போதைப்பொருள் கடத்தி பிடிபட்ட, மயூரனின், ஷான் ஆகிய இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகளின் மரண தண்டனை காரணமாக, இந்தோனேசியா அரசின் கரங்களில் இரத்தக்கறை படிந்துள்ளது என்று தலையங்கம் தீட்டிய Daily Telegraph பத்திரிகை, சில வருடங்களுக்கு முன்பு என்ன எழுதியது? 
அதே Daily Telegraph பத்திரிகை, மரண தண்டனைக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கியது. ஆயிரக் கணக்கான உயிர்களை பலி கொண்ட போதைப்பொருளை கடத்தியவர்களின் உயிரைப் பறிப்பதற்கு கருணை காட்டக் கூடாது என்று தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது. இவங்களை இன்னுமா இந்த உலகம் நம்புது? 

No comments:

Post a Comment