Tuesday, 12 May 2015

நாணல் போல வளைவதுதான்..

இவரை திருமணம் செய்து கொள்ள தினமும் சென்னை வரும் பெண்கள் எண்ணிக்கை அதிகம்.அதிலும் தங்களது ஜமீந்தார் தந்தையுடன் வரும் பெண்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
ரெயில் இவர் எங்காவது செல்கிறார் என்றால் ரெயில்வே அதிகாரிகளுக்கு சிக்கல்தான்.அன்று இவர் செல்லும் ரெயில் பல இடங்களில் நிறுத்தப்பட்டு குறைந்தது ஐந்து மணி நேரமாவது தாமதமாகத்தான் செல்லும்.

இவர் கார் ஓட்டுனர் காரை துடைக்கவே தேவை இல்லை.
காலைதோறும் இவர் காரின் மீது படிந்துள்ள தூசியை எடுத்து நெற்றியில் பக்தியுடன் பூசிக்கொள்ள ஒரு கூட்டமே காத்துக்கிடக்கும்.

இப்படிப்பட்டவர் மீது சுமத்தப்பட்ட கொலை பழி ,வழக்கு தண்டனைக்குப்பின்னர் எல்லாமெ மாறி போனது.
மூன்று தீபாவளிகளை ஒரே திரையரங்கில் கண்ட படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ‘தியாகராஜ பாகவதர் தான் இந்த இரு நிலைகளையும் கண்டவர்.

அதன் பின்னர் இவர் நடித்த படங்கள் சொற்பம்.அனைத்துமே வந்த வேகத்தில் திரையரங்கை விட்டு ஓடியது.
இதற்கெல்லாம் காரணம் திரை உலகத்தினரின் அந்தரங்கங்களை வெளியிட்டு காசு பண்ணிய மஞ்சள் பத்திரிகை இந்து நேசன் ஆசிரியர் லட்சுமி காந்தன் சிலரால் ரிக்‌ஷாவில் செல்லும் போது கொலை செய்யப்பட்டதுதான்.

அதற்கு காரணம் தியாகராஜா பாகவதர்,கலைவாணர் ஆகியோர்தான் என்ற கொலை வழக்குதான்.
அந்த நேரம் இந்து நேசன் பத்திரிகையில் இவர்கள் இருவரையும் பற்றி அசிங்கமாக எழுதப்பட்டிருந்ததுதான் இந்த சந்தேகத்துக்கு காரணம்.

வழக்கின் முடிவில் இருவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

அத்துடன் ஒரு கனவுலக் சக்ரவர்த்தி,சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் திரையுலக சரித்திரமே முடிவு பெற்றது.சிறிது நாளில் அவரது கண் பார்வையும் போய் வாழ்வும் முடிவு பெற்றது.ஆனால் அவர்கள் இருவரும் இந்த கொலையில் சம்பந்தப்படவில்லை என்பதுதான் அவர் கடைசிவரை சொல்லி வந்த உண்மை.ஆனால் சாட்சிகள் இல்லை.
இது அன்றைய நீதித்துறை வரலாறு.

இன்று பலத்த சாட்சிகள்,படுகொலை செய்யப்பயன்படுத்திய கார் ஆகியவை இருந்தும்,குடித்து விட்டு ஓட்டி சாலை ஓரம் படுத்திருந்தவ்ர்களை படுகொலை செய்தது நிருபிக்கப்ப்ட்டும் பிரபலங்கள் குற்றவாளிக்கு ஆதரவாக செய்தி வெளியிடும் அசிங்கம்.

நடிகர் சல்மான் கானின் 'டொயோட்டோ லேண்ட் குரூயிஸர்' கார், நடைபாதையில் படுத்துத் தூங்கிய ஏழைகள் மீது ஏறி ஒருவரைக் கொன்று நால்வரைக் காயப்படுத்தியது, 2002-ல். வெறுமனே விபத்து என்று இதைச் சொல்லிவிட முடியாது.
 
 காரை ஓட்டியபோது சல்மான் கான் குடித்திருந்தார். 
குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்து செய்பவர்களை கொலை குற்றத்தில் கைது செய்ய வேண்டும் என்பது ஒரு நீதிபதியே கூறிய வார்த்தைகள்.
 
அதுதான் சரியானதும் கூட.குடித்து விட்டு காரை ஓட்டுவது தெரிந்தே செய்யும் குற்றம்.கொலை முயற்சிதான்.
 
ஆனால் சல்மான் கான் சம்பவ இடத்திலிருந்து தப்பினார்.
 
 வழக்கை உடைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாவற்றையும் செய்தார்.பணத்தின் மூலம் எத்தனை சாட்சியங்கள் பிறழ்ந்தன? 
 
எத்தனை ஆவணங்கள் காணாமல்போயின? 
 
வழக்கின் முக்கிய சாட்சியம் காவலர் ரவீந்திர பாட்டிலின் வாழ்க்கையே நாசமாக்கப்பட்டதே? வேலை பறிக்கப்பட்டதே.கடைசியில் அவர் இறந்து போனதும் இதே சல்மான் கானின் கொலை பட்டியலில்தானே சேரும்.?
 
 13 ஆண்டுகள் கழித்து, சல்மான் கானின் குற்றத்தை உறுதிசெய்து ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம். அன்றைய தினமே மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்று, கையோடு ஜாமீனையும் அளிக்கிறது.இது போல் எந்த இந்தியக் குடிமகனுக்கும் வழங்கப்படுமா?
 
ஜெயலலிதா,சல்மான் கான்,சஞ்சய் தத் போன்ற சிலர்தானே விலக்கு.
 அடுத்தடுத்த நாட்களில் உயர் நீதிமன்றமும் ஜாமீன் அளித்து, தீர்ப்பை நிறுத்திவைக்கிறது. 
 
என்ன வேகம்! ஜெயலலிதா வழக்கில் காட்டப்பட்ட அதே வேகம்.
 "ஒரு வழக்கை எவ்வளவு மெதுவாக நடத்த முடியும் என்பதை தண்டனைக்கு முன்னும், எவ்வளவு விரைவாக நடத்த முடியும் என்பதை தண்டனைக்குப் பிறகும் அறிந்துகொள்ள ஜெயலலிதா வழக்குக்குப்பின்னர் நமக்கு இன்னொரு வாய்ப்பை இந்திய நீதித்துறை தந்துள்ளது.. " 
 
இந்திய நீதித் துறையின் மிகப் பெரிய சாபக்கேடு அதன் தாமதம் என்றால், இந்திய நீதித் துறை மிகக் கடுமை காட்ட வேண்டியவர்கள் அல்லவா வாய்தா பெறுபவர்கள்.அவர்கள் தானே ஒரு வழக்கை நீர்த்துப்போக செய்கிறார்கள்?
 
 நீதித் துறைக்குச் சவால் விடும் வகையில், வாய்தாக்களால் வழக்கை இழுத்தடிப்பவர்களில் ஆகப் பெரும் பான்மையினர் செல்வாக்குள்ளவர்கள். ஆனால், அப்படி இழுத்தடிப்பவர்களின் வழக்குகளே தண்டனைத் தீர்ப்புக்குப் பின் சீக்கிரமாக மேல்முறையீட்டுக்கு எடுக்கப்படுகின்றன; தீர்க்கப்படுகின்றன.
 
 இங்கே நீதித் துறை சமூகத்துக்குக் கொடுக்கும் செய்தி.உங்களுக்கு ஆதரவாக நீதி கிடைக்க நீங்கள் பிரபலமாக இருந்தாலும் நீதித்துறை மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள் உடன் நட்பு வேண்டும் என்பதுதானே?
அவர்கள் வழக்குகளைல்தான் நீதி தேவதை தன் கண்கட்டை அவிழ்த்து விடுகிறார்.?
 
சாமானிய இந்தியனுக்கு மூன்று வாய்தாக்களுக்கு மேல் பிடிஆணை.
ஆனால் நீதியை வளைப்பவர்களுக்கு 130க்குமேல்.இன்னமும் கொடுத்திருப்பார்கள் அதற்குள் பல ஆண்டுகள் ஆனதால் வழக்கு குன்கா மூலம் முடிவுக்கு வந்து விட்டது.
 
ஆனால் அதன் பின பினை வழங்கியதும்,மேல் முறையீடு விசாரணைக்கு காலக்கெடு நியமனம் செய்ததும்,குற்றவாளியே தன்னை எதிர்த்து வாதாட[?]அரசு வழக்குரைஞரை நியமனம் செய்ததும் நீதித்துறையின் கருப்புப்பக்கங்கள்.
 
 ராஜீவ் காந்தி படுகொலை 1991-ல் நடந்தது. 350-க்கும் மேற்பட்டோர் உயிரைப் பறித்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு 1993-ல் நடந்தது. முன்னதைப் பின்னின்று நடத்தியது புலிகள் என்றால், பின்னதைப் பின்னின்று நடத்தியது பாகிஸ்தான் உளவுத் துறை.
 
 பேரறிவாளன் மீதான முக்கிய  குற்றச்சாட்டு அவர்  குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் வாங்கச்சொன்னதால் என்ன?
 
எதற்கு என்று தெரியாமல் கடையில் இரண்டு பேட்டரிகள் வாங்கிக்கொடுத்தது மட்டும்தான். 
 
ஆனால் சஞ்சய் தத் மீதான பிரதான குற்றச்சாட்டு தாவூத் இப்ராஹிம் ஆட்கள் கொடுத்த துப்பாக்கிகள், எறிகுண்டுகளை வைத்திருந்தது.மும்பையி குண்டு வெடித்து விட்டு வந்த தீவிரவாதிகளை தன் வீட்டில் இரு நாட்கள் பாதுகாப்பாக வைத்திருந்தது.இது தெரிந்தே நடந்தது.
 
  இரண்டுமே 'தடா' வழக்குகள்ஆகத்தான் விசாரிக்கப்பட்டது.
. இன்னும் சொல்லப்போனால், பேரறிவாளன் வழக்கு பல வகைகளில் பலவீனமான வழக்கு. 
 
ஆனால், பேட்டரி வாங்கிக் கொடுத்ததாகச் சொல்லப்படுபவரை, தூக்குக் கயிறு வரை அழைத்துச் சென்றுவிட்டு 24 ஆண்டுகளாகச் சிறைக்குள் வைத்திருக்கிற நீதி. 
 
துப்பாக்கிகளையும் எறிகுண்டுகளையும் வைத்திருந்தவர் 20 ஆண்டு இழுத்தடிப்புக்குப் பின் 5 ஆண்டுகள் மட்டும் சிறைத் தண்டனை.
 
ஆனால் அதிலும் முக்கால்வாசி நாட்கள் பரோல்.படங்களில் நடித்து தனது தொழிலை சிறப்பாக செய்து வருகிறார்.
 
இந்த இருபது ஆண்டுகளில் 50 படங்களுக்கு மேல் நடித்து கோடிகளை குவித்து விட்டார்.
 
ஆனால் பேரறிவாளன்?சிறையில் 24 ஆண்டுகளாக.
தேனை களவாடியவன் சுதந்திரமாக இருக்கிறான்.சிந்திய தேனை என்ன வென்று நக்கிப் பார்த்தவன் தூக்கு மேடையை எதிர்பார்த்து நம் நீதித் துறை தேவதை கண் கருப்புத்துணியை இறுக்கி கட்ட வேண்டும் எனபதைத்தவிர நாம் வேறு என்ன சொல்ல? சொன்னால் அது நீதிமன்ற அவமதிப்பாகி விடுமே?
 

No comments:

Post a Comment