Sunday 7 June 2015

ராஜபக்ச குடும்பத்தின் குற்றங்களை பட்டியலிடும் ஜே.வி.பியின் தலைவர்

திவிநெகும விசாரணையில் இறுதி வரைக்கும் சென்றால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவே சிக்குவார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவிததுள்ளார்.



மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அதேபோல் அவன்கார்ட் மற்றும் மிக் விமானங்கள் கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் உட்பட பல கொடுக்கல் வாங்கல்கள் குறித்த விசாரணைகள் முடிவு வரைக்கு சென்றால் கோத்தபாய ராஜபக்சவே குற்றவாளியாவார்.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அந்த விசாரணை முடிவு வரை மேற்கொள்ளப்பட்ட யோஷித்த ராஜபக்சவே சிக்குவார்.

கெத்தாராம விளையாட்டு மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள இரவு நேர விளையாட்டுக்கான மின் விளக்குகளை கழற்றி அவற்றை கண்டிக்கு கொண்டு சென்று இரவு நேர கார் ஓட்டப் பந்தய போட்டி நடத்தியுள்ளனர்.

கழற்றிச் செல்லப்பட்ட 78 மில்லியன் பெறுமதியான மின் விளக்குகள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் மீள கையளிக்கப்படவில்லை. அது குறித்த விசாரணைகளை முடிவு வரைக்கும் மேற்கொண்டால் நாமல் ராஜபக்சவே சிக்குவார்.

சிரிலிய வங்கி கணக்கு தொடர்பான விசாரணை முற்றாக மேற்கொள்ளப்பட்டால், ஷராந்தி ராஜபக்சவே குற்றவாளியாவார்.

புஷ்பா ராஜபக்ச நிதியம் தொடர்பான விசாரணைகள் முற்றாக நடத்தப்பட்டால், பசில் ராஜபக்சவின் மனைவியே குற்றவாளியாவார்.

எயர் லங்கா கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விசாரணைகள் முடிவு வரைக்கும் சென்றால், மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷராந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்கவே சிக்குவார்.

உக்ரைன் போராளிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்தமை தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் இறுதி வரை மேற்கொள்ளப்பட்டால்,மகிந்த ராஜபக்சவின் உறவினரான உதயங்க வீரதுங்கவே சிக்குவார்.

அதேபோல் விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியமை தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு அது முடிவு வரைக்கும் சென்றால் மகிந்த ராஜபக்சவே குற்றவாளியாவார்.

இதனால், இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணகளை நடத்தி முன்னாள் ஜனாதிபதி உட்பட அவரது குடும்பத்தினருக்கு தண்டனை வழங்க வேண்டியுள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment