Sunday 7 June 2015

பௌத்தத்தின் இருண்ட பக்கம் – பிபிசியின் ஆய்வு

வன்முறையற்ற கோட்பாடு என்பது புத்த மதத்தின் போதனையாக உள்ளது. ஆனால் சிறிலங்காவில் செயற்படும் சில புத்த பிக்குகள் ஏனைய சிறுபான்மை மதங்கள் மற்றும் அவற்றின் நம்பிக்கைகளுக்கு எதிராகத் தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். இவர்களது கடும்போக்கு நிலைப்பாடானது தற்போது மேலும் அதிகரித்துள்ளது.கொழும்பின் புறநகர்ப் பகுதியிலுள்ள சிறிய தேவாலயம் ஒன்று மிகவும் அமைதியாக உள்ளது. புத்தரின் சிலையைச் சூழ ஊதா மற்றும் வெள்ளை நிறத் தாமரைப் பூக்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த விகாரையின் மேற்புறத்தே பொது பலசேன என்கின்ற பௌத்த கடும்போக்கு அமைப்பின் பிரதான அலுவலகம் காணப்படுகிறது. இந்த அலுவலகம் புத்த பிக்கு ஒருவரால் நிர்வகிக்கப்படுகிறது.

இப் புத்த பிக்குவின் கருத்துக்கள் புத்தமதத்திற்கே உரித்தான அமைதிக் கோட்பாடுகளுக்கு மாறானதாகவே காணப்படுகிறது. பொது பலசேன அலுவலகத்திற்குப் பொறுப்பான பிக்கு கலகொட அத்தே ஞானசார தேரர் இனத்துவேசக் கருத்துக்களைக் கூறினார். இவர் பௌத்தம் என்கின்ற பெயரில் இன எதிர்ப்புக் கருத்துக்களை வலியுறுத்தினார். சிறிலங்காவில் உள்ள புத்த பிக்குகள் அனைவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களாவர். சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையினர் சிங்களவர்கள் ஆவர்.
‘இந்த நாடு சிங்களவர்களுக்குச் சொந்தமானது. நாகரீக மயமாக்கல், கலாசாரம், குடியிருப்புக்கள் போன்றவற்றை அமைத்த சிங்களவர்களுக்கே இந்த நாடு சொந்தமாகும். வெள்ளையினத்தவர்களே எல்லாப் பிரச்சினைகளையும் இந்த நாட்டில் உருவாக்கினார்கள்’ என ஆவேசத்துடன் ஞானசார பிக்கு தெரிவித்தார்.

பிரித்தானிய கொலனித்துவத்தாலேயே இந்த நாடு அழிந்தது எனவும் தற்போது சிறிலங்காவில் வாழும் ‘வெளியினத்தவர்களால்’ அதாவது தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களாலேயே பல்வேறு பிரச்சினைகள் நிலவுவதாகவும் ஞானசார பிக்கு சுட்டிக்காட்டினார்.

சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் போன்றோர் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டனர் எனவும் பிக்கு தெரிவித்தார். ‘சிறிலங்காவை சிங்கள நாடாக மாற்ற நாங்கள் முயற்சிக்கிறோம். இதனைச் சீர்செய்யும் வரை நாங்கள் இதற்காகப் போராடுவோம்’ என பொது பல சேனவின் தலைமைப் பிக்குவான ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

சிறிலங்கா தனித்த ஒரு பௌத்த நாடு என்கின்ற பிரச்சினை புதிதல்ல. ‘ஆரியச் சிங்களவர்கள் இந்த நாட்டை சொர்க்க பூமியாக மாற்றினர். இது பின்னர் கத்தோலிக்கர்களாலும் மற்றும் பல்வேறு மதத்தவர்களாலும் சிதைக்கப்பட்டது’ என 20ம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்த மறுமலர்ச்சியாளரான அநகாரிக தர்மபால தெரிவித்திருந்தார். முஸ்லீம்கள் தம்மை ‘மண்ணின் மைந்தர்கள்’ எனக் கூறித் தமது மதப் பரப்புரைகளைத் தீவிரப்படுத்தியதாகவும் அநகாரிக தர்மபால குற்றம் சுமத்தியிருந்தார்.

1959ல் சிறிலங்காவின் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க பௌத்த பிக்கு ஒருவரால் படுகொலை செய்யப்பட்ட போது அதனை நியாயப்படுத்துவதற்காக, சிங்கள மக்களின் உரிமையை உறுதிப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் தவறிவிட்டதாகக் கூறப்பட்டது.

தமிழ்ப் புலிகளுக்கு எதிரான நீண்ட யுத்தமானது கடும்போக்கு பௌத்தவாதிகள் மேலும் தமது மதவாதக் கருத்துக்களைப் பரப்பச் செய்ய வழிவகுத்தது. சிங்களவர்களையும் பௌத்தத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு யுத்தமாகவே புலிகளுடனான யுத்தம் சித்தரிக்கப்பட்டது. 2004ல் தேசியவாதப் பட்டியல் மூலம் ஒன்பது புத்தபிக்குகள் நாடாளுமன்றிற்குத் தெரிவாகினர்.

இதிலிருந்தே ஞானசார தேரர் வெளியேறித் தற்போது பொது பலசேன என்கின்ற பௌத்த கடும்போக்கு அமைப்பை உருவாக்கியுள்ளார். இதுபோன்ற மதவாத மற்றும் இனவாதக் கருத்துக்களைப் பரப்பும் சில அமைப்புக்களில் பொது பலசேன முதன்மையான இடத்தை வகிக்கிறது.

2012லிருந்து, பொது பலசேன, சிறுபான்மை சமூகத்தவருக்கு எதிராக வெளிப்படையாகச் செயற்படத் தொடங்கியது. முஸ்லீம்களுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டது. அதாவது முஸ்லீம்கள் நாட்டின் சட்டத்திற்கு எதிராகச் செயற்படுவதாகக் குற்றம்சுமத்தியது.

முஸ்லீம்களுக்குச் சார்பாக பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக சிங்கள மாணவர்கள் சட்டக் கல்லூரிக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு பொது பல சேன வழிவகுத்தது.

தற்போது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் தோற்கடிக்கப்பட்டு முஸ்லீம்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று சிறிலங்காவில் வாழும் கிறிஸ்தவர்கள் மீதும் பௌத்த இனவாதிகளால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கிறிஸ்தவர்கள், சிறிலங்கா வாழ் பௌத்தர்களை மதம் மாற்றுவதில் தீவிர ஈடுபாடு காண்பிப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

‘நாங்கள் பிரபலமடைந்துள்ளதால் நாட்டின் எந்தவொரு இடத்தில் மத ரீதியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கு பொது பலசேன மீதே குற்றம் சுமத்தப்படுகிறது’ என இந்த அமைப்பின் பேச்சாளர் டிலந்த விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.

‘பொது பலசேன ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல. எவருக்கு எதிராகவும் இந்த அமைப்பு வன்முறைகளைத் தூண்டவில்லை. ஆனால் சில நிகழ்வுகளை நாங்கள் எதிர்க்கிறோம்’ என, ஆசியா முழுமையும் இஸ்லாமியருக்குச் சொந்தமானது என இஸ்லாமிய நாடு ஒன்றால் பிரகடனம் செய்யப்பட்டமை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போது பொது பலசேனவின் பேச்சாளர் தெரிவித்தார்.

முஸ்லீம்கள், தீவிரவாதிகள் என்பதை பொது பலசேனவின் பேச்சாளரும் அவரது கூட்டாளிகளும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர்.  இருப்பினும் சிறிலங்கா வாழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் வன்முறைத் தீவிரவாதம் ஏற்பட்டுள்ளமைக்கான எவ்வித சாட்சியங்களும் காணப்படவில்லை.

இவர்கள் மற்றைய மதத்தவர்களால் தாக்குதல்களுக்கு உள்ளாகுகின்றனர்.
கடந்த யூனில், அளுத்கம என்கின்ற சிறிய பட்டிணத்தில் ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதாவது பொது பல சேனவும் ஏனைய பௌத்த அமைப்புக்களும் முஸ்லீம் பிரதேசமான அளுத்கமவில் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டதன் விளைவாகவே மூன்று முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த நேரத்தில், இந்த வன்முறையில் தமது வீடுகள் மற்றும் கடைகளை இழந்த முஸ்லீம் குடும்பங்களை நான் சந்தித்தேன். இவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பாடசாலைகளில் தற்காலிகமாகத் தங்கியிருந்தனர்.

நியாயமான கொள்கைகளைக் கொண்ட மென்போக்கு பௌத்தர்களும் பௌத்த கடும்போக்காளர்களால் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, வட்டரகே விஜித தேரர் கடத்தப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்டார். ஏனெனில் இவர் முஸ்லீம்கள் மற்றும் பௌத்தர்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் பணியில் ஈடுபடுவதால் இதனை வெறுக்கும் சிலர் இவ்வாறான மோசமான செயலில் ஈடுபட்டதாக தேரர் பின்னர் தெரிவித்திருந்தார்.

இதற்கு பௌத்த பிக்குகளே காரணம் என தேரர் தெரிவித்துள்ளார். அதாவது இந்தப் பிக்குகள் எவருடனும் அல்லது குறித்த சில குழுக்களுடன் தொடர்புகளைப் பேணுகிறார்களோ இல்லையோ எனினும் பிக்குகளே தன்னைக் கடத்திச் சித்திரவதைப்படுத்தக் காரணம் என தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர், முஸ்லீம் சமூகத்தினரின் அவாக்களை முதன்மைப்படுத்தி விஜித தேரர் ஊடக மாநாட்டை நடாத்தியிருந்தார். இதற்கு பொது பலசேன குழப்பத்தை விளைவித்தது. இதற்காக விஜித தேரர் கடத்தப்பட்டு ஞானசார தேரரால் அச்சுறுத்தப்பட்டார். ‘நீ தொடர்ந்தும் இவ்வாறான முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட்டால் கடத்திச் சென்று மகாவலி கங்கையில் வீசப்படுவாய்’ என விஜித தேரரை, ஞானசார தேரர் அச்சுறுத்தியிருந்தார்.
மகாவலி கங்கை என்பது ஒரு குறியீடாகும். அதாவது சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக இடது சாரியால் கிளர்ச்சி மேற்கொள்ளப்பட்ட போது 60,000 மக்கள் காணாமற் போயினர். இவர்களின் பலரின் உடலங்கள் மகாவலி கங்கையிலேயே வீசப்பட்டன.

மியான்மாரிலும் பௌத்த மதவாதம் தலைவிரித்தாடுகிறது. இங்கு பௌத்த பிரிவினைவாதிகள் 969 அமைப்பு என்கின்ற பெயரில் இயங்குகின்றனர். இவர்கள் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். இந்த அமைப்பின் தலைவர் சின் விராது அண்மையில் பொது பல சேனவால் சிறிலங்காவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இவ்விரு அமைப்புக்களும் தத்தமது நாடுகளில் பௌத்தம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதால் இதனை முறியடிப்பதற்கான திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்தன. ‘நாங்கள் பௌத்தத்தைப் பாதுகாக்க வேண்டும். ஆகவே நாங்கள் ஆசியப் பிராந்தியத்தில் பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கான கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளோம்’ என விதானகே தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் எதிர்பாராத வகையில் மைத்திரிபால சிறிசேன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொது பலசேனவுக்கு உயிர் கொடுத்து ஆதரிப்பது யார் என்பது ‘ஒவ்வொருவருக்கும்’ தெரியும் என அதிபர் மைத்திரிபால சிறிசேன என்னிடம் தெரிவித்திருந்தார். அதாவது மகிந்த ராஜபக்சவின் அரசாங்கமே பொது பலசேனவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளது.

பொது பல சேன பலமாகக் காலூன்றியுள்ளமைக்கு சட்ட ஆட்சி சீர்குலைந்தமையே காரணம் என சிறிலங்காவின் பௌத்த விவகார அமைச்சர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். பொது பலசேன விரைவில் சட்டக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் என்னிடம் தெரிவித்தார்.

அனுமதி வழங்கப்படாத ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியதற்காக ஞானசார தேரர் கைதுசெய்யப்பட்டுப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். சிறிலங்காவின் புதிய அரசாங்கமும் பௌத்த தேசியவாதக் கட்சியைக் கொண்டுள்ளது. இதனால் செம்மஞ்சள் நிற ஆடையணிந்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் பின்னடிக்கிறது.

உயிர்களைக் கொல்லக்கூடாது என்பது பௌத்த மதத்தின் பிரதான கோட்பாடாகும்.

பிற மதங்களை விட பௌத்த மதத்தில் வன்முறையற்ற அமைதிக் கோட்பாடு வலியுறுத்தப்படுகிறது. ஆகவே இவ்வாறான கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டிய பௌத்த பிக்குகள் முஸ்லீம்களுக்கு எதிராகச் செயற்படுவதும், பல மக்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமான காடையர்களுடன் இணைந்து தாக்குதல்களில் ஈடுபடுவதற்குமான காரணம் என்ன?

No comments:

Post a Comment