Tuesday 28 July 2015

சரித்திர நாயகன் அப்துல் கலாம்

“விதைத்தவன் உறங்கலாம் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை.”- இந்திய இளைஞர்களின், அவர்களது கனவுகளின் அடையாளமாகத் திகழ்ந்த அப்துல் கலாம் காலமான செய்தியைக் கேட்டதும் இதுதான் தோன்றியது.


எப்போதும் மாணவர்கள் புடைசூழ இருப்பதையே விரும்பும் அப்துல் கலாம், அதே மாணவர்கள் முன்னால் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, மேடையிலிருந்து சரிந்து விழுந்த புகைப்படத்தை பார்க்கையில், கண்களின் வழியும் கண்ணீர்த்துளிகளை மட்டுமே அவருக்கு காணிக்கையாக்க முடிகிறது.
நம் மனதில், கனவுகளை விதைத்தவர் விதைகளை நம்முடனே விட்டுச் சென்றிருக்கிறார்.
ராமேஸ்வரத்தில் பிறந்து வறுமையிலும் செம்மையாக படித்து விஞ்ஞானியாக வாழ்க்கையைத் தொடங்கி நாட்டின் குடியரசுத்தலைவராக உயர்ந்த பெருமைக்குரிய டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாமின் மரணம் நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு அகவை 83 ஆகும்.
மேகாலயா ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த அவர், நேற்று மாலை 6.30 மணியளவில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவரை அனுமதிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பதவி வகித்தார்.
இராமேஸ்வரத்தில் அக்டோபர் 15,1931-ம் ஆண்டு அப்துல் கலாம் பிறந்தார்.
1998-ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்கு வகித்தவர் அப்துல் கலாம். இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்றும் அப்துல் கலாம் அழைக்கப்பட்டார்.
அப்துல் கலாம் பத்ம பூஷன், பாரத ரத்னா ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.
அவர் தமிழகத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 3-வது குடியரசுத் தலைவராவர்.
ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன் ஆகியோருக்கு அடுத்தபடியாக அப்துல் கலாம் தமிழகத்திலிருந்து குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்துல் கலாம் மறைவையடுத்து இன்று இந்தியாவில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
7 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிப்புக்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று காலை அவரது உடல், டெல்லிக்குக் கொண்டு செல்லப்படும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்துல் கலாம் தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜெனுலாபுதீன் ஒரு படகுக்குச் சொந்தக்காரர்.
அப்துல் கலாமின் தாயார் அஷியம்மா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம், சிறுவயதிலேயே குடும்ப வருவாய்க்காக வேலைக்குச் சென்றார்.
பள்ளிப் படிப்பை முடித்த அவர் செய்தித்தாள்களை வீடுவீடாக விநியோகிக்கும் வேலையில் ஈடுபட்டார்.
படிக்கும் காலங்களில் கணிதம் அவருடைய விருப்பமான பாடமாக இருந்தது.
இந்திய வான்படையின் போர் வானூர்தி ஓட்டுநராக வேண்டும் என்ற அப்துல் கலாமின் கனவு நிறைவேறவில்லை.
1960-ம் ஆண்டு மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பட்டம் வென்ற அப்துல் கலாம் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் விஞ்ஞானியாக இணைந்தார்.
பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.
1980 ஆம் ஆண்டு SLV -III உந்துகணைனையை பயன்படுத்தி ரோகினி-ஐ என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார்.
இது அவருக்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.
இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.
1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர் 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார்.
அவர் அனைவராலும் இந்திய இராணுவ உந்துகணை படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார்.
குடியரசு தலைவராவதற்கு முன் இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது.
மேலும் “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.
2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.
2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம் பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்து விலகினார்.
அவரது நூல்களில் அக்னி சிறகுகள், இந்தியா 2012,எழுச்சி தீபங்கள் ஆகியன குறிப்பிடத் தகுந்தவை.
கலாமின் இறுதிச் சடங்கு ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
மக்களுக்காவே இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது.
உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
கனவு காணுங்கள் எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில் என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்”
என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.
அப்துல் கலாம் பெற்ற விருதுகள்:-
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 -தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது 2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 -பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
தன்னுடைய வாழ்நாளில் எண்ணற்ற விருதுகளைப் பெற்றாலும் அவருக்கு வழங்கப்பட்டதனால் இந்த விருதுகள்தான் பெருமை பெருகின்றன என்பதை ஒவ்வொரு இந்தியரும் அறிவார்கள்.

Sunday 12 July 2015

60 வருட காலப்போராட்டமும் தடுமாறும் தலைமைகளும்!

தமிழின அழிப்பு நடந்து 6 வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலை நாட்டப்படுவதற்கான எந்தவித அறிகுறிகளும் தென்படுவதாகத் தெரியவில்லை. உறவுகளைத் தொலைத்தவர்களினதும், அவயவங்களை இழந்து அங்கவீனமானவர்களினதும்,
வதை முகாம்களில் காலங்களைத் தொலைக்கின்றவர்களினதும் துன்பங்களோ விடிவில்லாத் தொடர்கதையாகவே உள்ளன. மாற்றத்திற்காக வாக்களித்து விட்டு எந்த வித மாற்றமும் காணாச் சமூகமாக தமிழினம் சிக்கித்தவிக்கின்றது. ஆனாலும் மாற்றங்களை எமது தமிழ் தலைமைகளிடம் மட்டுமே காணக்கூடியதாகவுள்ளது.





அவர்கள் கடந்த 60 வருடகாலத்தை மறந்தவர்களாக மீண்டும் சிங்களத் தலைமைகளின் வாய்வார்த்தைகளை நம்பியவர்களாக அதை தமிழ் மக்களிடத்திலும் சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துச் செல்பவர்களாக செயற்படத் தொடங்கியுள்ளனர்.
இவர்கள் ஒன்றை மட்டும் நினைவில் நிறுத்தி கொள்ளவேண்டும். அதாவது தமிழ் மக்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பினூடாக சர்வதேச ரீதியில் சிறிலங்காவுக்கெதிராக கட்டப்பட்டுள்ள சர்வதேச ரீதியிலான பொறிமுறை சார் நடவடிக்கை ஒன்றேயாகும். அப்பொறிமுறை சிதைக்கப்படுமானால் தமிழ் மக்களின் போராட்டம் மிகப்பெரும் பின்னடைவை சந்திக்கும் ஆபத்து இருக்கிறது.
மாறியுள்ள ஆட்சியை சமயோசிதமாக பயன்படுத்தி தமிழ் மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினைகளைத் தீர்க்க முயல்வதை ஒருவரும் குறை சொல்ல முடியாத அதேநேரத்தில் புதிய சிங்கள ஆட்சியாளர்களை தமிழ் மக்களின் விடிவெள்ளியாக காட்ட முற்படுவதே மிகவும் பாரதூரமானதும் அபாயகரமானதுமான ஒரு நடவடிக்கையாகவுள்ளது. இவ்வணுகுமுறையானது மேற்சொன்ன சர்வதேச பொறிமுறை சார் நடவடிக்கைகளில் பாரிய பாதிப்புக்களை உண்டு பண்ணும் என்பதை நினைவில் நிறுத்தி எம்மவர்கள் சிந்தித்து செயலாற்றுதல் வேண்டும்.
ஆரம்பத்தில் சந்திரிகா அம்மையாரும் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் தேவதைபோலவே வந்தார். ஆனால் நாளடைவில் நவாலி தேவாலயம், நாகர்கோயில் பாடசாலை, செம்மணி புதைகுழி, இடி முழக்கம், ரிவிரச, சத்ஜெய, ஜெயசிக்குறு என அவர் ஆடிய ஆட்டங்களை மறந்தவர்களாக எமது தலைமைகளின் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அமைந்து காணப்படுகின்றன. இவரின் சமாதானத் தேவதை வேடமே உலக லாவியரீதியில் எமது விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக முத்திரை குத்த உதவியது.
தற்போதைய ஆட்சியாளர்களும் தமது ஆட்சியை தக்க வைப்பதற்கான நடவடிக்கைகைளயே எடுக்கின்றார்களேயொழிய உண்மையில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் சிறிதும் எடுக்க முன்வரவில்லை.
சந்திரிகாவும் சிங்கள மக்கள் மத்தியில் ஆட்சிபீடத்தைக் கைப்பற்றும் வரை தமிழ் மக்களுக்கு பிரச்சனையுள்ளது என்பதை கூறியிருந்தார். ரணில் விக்கிரமசிங்கவும் 2001 ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றும் போது கூறியிருந்தார். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஆட்சிபீடம் ஏறுவதற்காக கூறினார். இதைவைத்து எப்படி தமிழ்மக்களின் இனப்பிர்சினைக்கான தீர்வை இவர்கள் தருவார்களென உவகைப்படுத்த முடியும். உண்மையில் தற்போதைய ஆட்சியாளர்களின் முழுக்கவனமும் இனப்பிரச்சினையை எப்படித் தீர்ப்பதென்பதல்ல, மாறாக அவர்களின் முழுக்கவனமும் எப்படி சிறிலங்காவுக்கெதிரான இந்த சர்வதேச பொறிமுறையை உடைப்பதென்பதேயாகும்.
அதை நோக்கிய செயற்பாடுகளாகவே உயர்பாதுகாப்பு வலயங்களில் உள்ள சிறுகாணித்துண்டுகளின் விடுவிப்பும் வெற்றிவிழாவின் பெயர் மாற்றமும் அமைந்துள்ளதேயொழிய இவை தமிழ் மக்களின் நலன்சார் நடவடிக்கையாக நோக்கப்படுமானால் அது நம்மை நாமே ஏமாற்றுவதற்கு ஒப்பானதாகும்.
மறுபுறத்தே போர் குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான முயற்சிகள் புதிய ஆட்சியாளர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இறுதிப் போரில் 57வது படைப்பிரிவிற்கு தலைமை வகித்து பல போர்குற்றங்களைச் செய்தவரான மேஜர் ஜெனரல் ஜெகத் டயசுக்கு 46வது சிறிலங்கா இராணுவ கூட்டுப்படைத் தலைமை அதிகாரியாக பதவியுயவர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா பிரேசிலுக்கான வெளிநாட்டு தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவே சிங்கள தேசம் தமிழருக்கு காட்டும் நல்லெண்ண சமிக்கை ஆகும்.
எமது தலைவர்களோ நல்லிணக்கத்துக்காக சுதந்திரதின விழாவில் பங்கேற்பு, தேசிய நிறைவேற்று சபையில் பங்கேற்பு, கிழக்கு மாகாண ஆட்சியமைப்பில் பங்கேற்பு, தந்தை செல்வா நினைவுபேருரையாற்ற சிங்களத் தலைமைக்கு அழைப்பு என வாயால் கூறாது நல்லெண்ண சமிக்ஞைகளை செயலில் காட்டிவருகின்றனர். ஆனால் சிங்களத் தலைமைகளோ உதட்டளவில் நல்லிணக்கம் பற்றி சொல்லிக்கொண்டு செய்வதெல்லாம் இனப்படுகொலையாளிகளுக்கு பதவியுயர்வுகள், பட்டங்கள், சலுகைகள் என அள்ளி வழங்கிவருகின்றனர்.
இதேவேளை சிங்களதேசத்தின் ஒரு சாரார் ராஜபக்சக்கள் முற்றிலும் முடக்கப்படாமல் வைத்திருப்பதற்கு முயன்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகவே கோதபாய ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுப்பதற்கான அடிப்படை உரிமை வழக்கின் ஊடாக உயர் நீதிமன்றத்திடம் பெற்றுக்கொண்ட இடைக்கால தீர்ப்பும், அண்மைய மகிந்தராஜபக்சவின் கூட்டங்களும் காணப்படுகின்றன. இதன் மூலம் சிறிலங்கா தொடர்பிலான சர்வதேச நெருக்குவாரங்களை இவர்களுடைய மக்கள் செல்வாக்கைக் காட்டிக் குறைக்க முடியுமென்றும் தமிழ் தலைமைகளின் ஆதரவுகளை இவர்களைக் காட்டி தொடர்ந்து தக்கவைப்பதுடன் அவர்களை ஆகக் குறைந்தபட்ச தீர்வு ஒன்றுக்கு இணங்கவைக்க முடியுமென இந்த ஒரு சாரார் நம்புகின்றனர்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவில் உயர்தர வகுப்பில் கல்வி கற்றுவந்த பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமையானது தாயகத்திலும் புலம்பெயர் தமிழ் மக்களிடையேயும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையில் கட்டமைப்பு சார் இனவழிப்பின் ஒரு வடிவமாகவே வெளிப்பட்டுள்ளது. யாழ்.தீவுப்பகுதியானது இதைப் போன்ற பல பாலியல் வன்கொடுமைகளையும், படுகொலைகளையும் ஈ.பி.டி.பி துணை ஆயுதக்குழுக்கள் கோலோச்சிய காலத்தில் சந்தித்து வந்துள்ளது.
அக்காலத்தில் அக்குற்றங்களுக்கான நீதிவிசாரணைகளோ, தண்டனைகளோ வழங்கப்பட்டிருக்கவில்லை. அதன் அறுவடையே தற்போது புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையாக வந்துள்ளது. ஆனாலும், பலவருடங்களாக அடக்கி வைத்திருந்த உள்ளக் குமுறல்களின் வெளிப்பாடாக தமிழர் தாயகமெங்கும் மாணவியின் படுகெலைக்கு நீதி வேண்டி மக்கள் போராட்டங்கள் வெடித்தன.
எங்கே குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம் என காத்திருந்த சில புல்லுருவிகள் இந்த போராட்டங்களை தமது நலன்நோக்கிப் பாவிக்கத் தொடங்கினர். இதன் வெளிப்பாடாக நீதிமன்றமும், பொலிஸ் காவல் நிலையமும் தாக்கப்பட்டதும் பிரபல சட்டத்துறை விரிவுரையாளரை மையப்படுத்தி தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டதும் நிகழ்தேறியுள்ளன. இவற்றை கட்டுக்கடங்காத வன்முறைபோல் காட்டி இராணுவம் வடகிழக்கில் நிலை நிறுத்தப்பட்டிருப்பதை நியாயப்படுத்த சில தரப்புக்கள் முயன்றன.
அதேவேளை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தீவுப்பகுதியில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட சட்டத்துறைசார் விரிவுரையாளர் மீது களங்கம் கற்பிப்பதனூடாக கடந்த காலங்களில் அடக்கு முறையுடாக இதே தொகுதியில் பாராளுமன்ற அங்கத்தவராக தெரிவாகிய துணை ஆயுதக்குழுவின் தலைவருக்கு எதிர்வரும் தேர்தலில் வரவிருந்த நெருக்கடியை இதன் மூலம் தவிர்க்க அக்குழுவினர் முயன்றுள்னர். இதற்கு சில ஊடகங்களும் அனுசரணை வழங்கியருந்தன.
இவற்றுக்கு மிக முக்கிய காரணமாக அமைவது என்னவென்றால் மக்கள் போராட்டங்களுக்கு அமைப்புகள் அல்லது கட்சிகள் தலைமையேற்று போராட முன்வராமையே ஆகும். புல்லுருவிகள் அச்சந்தர்ப்பத்தை தமக்குச் சாதகமாக மாற்றப்பார்க்கிறார்கள். இது தொடர்ச்சியாக தண்ணீர் பிரச்சினை முதல் வித்தியா கொலை வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இவற்றுக்கிடையே யாழ்பபாணத்தில் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும், திரு.சுமந்திரனுக்குமிடையிலான விவாத மாநாடானது தமிழ் மக்களிடையே மூடிக்கிடக்கின்ற அரசியல் சிந்தனையை வெளிக்கொண்டுவரக்கூடிய கருத்தியல் ரீதியிலான கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய திறனாய்வுக் கூட்டமாக அமைந்திருந்தது. இவர்களுக்கிடையேயான கருத்துப் பரிமாற்றங்கள் பொதுவாக கடந்தகால நிகழ்கால தமிழர் போராட்டம் சார் பூகோள அரசியல் களநிலவரங்களை மையப்படுத்தி அமைந்திருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது. இருப்பினும் அவர்கள் எதிர்காலத்தில் எப்படியான செயன்முறைகளுக்கூடாக எவ்வகையான தீர்வை நோக்கிச் செல்ல முடியும் என்பதை தெளிவாக முன்வைக்கத் தவறியிருந்தனர். இதுவே தமிழ்மக்களின் இன்றைய அரசியல் யதார்த்தமாகவும் உள்ளது.
இவற்றை நிவர்த்தி செய்வதற்கு இதுபோன்ற பல கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய கருத்தரங்குகள் துறைசார் வல்லுநர்களுக்கிடையே தாயகத்திலும் புலத்திலும் தொடர்ந்து நடைபெறவேண்டும். இதன் மூலம் மக்களை அரசியல் தெளிவூட்டலுக்கூடாக வலுப்படுத்த முடியும்.
விடுதலைப் புலிகள் இல்லாத சுழலில் தாயாக தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரு கவசம் புலம்பெயர் தமிழ் மக்கள் ஆவார்கள். இதை உடைப்பதற்கான வேலைத்திட்டங்களை சிறிலங்கா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து முன்னெடுத்து வருக்கின்றது. இதற்கு எம்மில் சிலரும் உடந்தையாகவுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அண்மைய ஜேர்மன் நாட்டுக்கான விஜயத்தின் போது அவர் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சரிடம் பின்வருமாறு தெரிவித்திருந்தார். அதாவது புலம்பெயர் தமிழ் மக்களின் முக்கியத்துவத்தை தமது அரசு உணர்ந்துள்ளதாகவும் அவர்களுக்கான விழா ஒன்றை தாம் நடாத்த உத்தேசித்துள்ளதாகவும் கூறியிருந்தார். இதன் மூலம் சிறிலங்காவானது புலம்பெயர் தமிழ் மக்கள்விடயத்தில் எவ்வளவு சிரத்தையுடன் செயற்படுகின்றது என்பது தெளிவாகின்றது.
இதேவேளை தமிழ் தலைமைகளும் புண்ணுக்கு மருந்து போடுவதைத் தவிர்த்து மூலப்பிரச்சினைக்கு தீர்வு காணமுன்வரவேண்டும். தாயகத்திலும் புலத்திலும் தமிழ் தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் இறுதித்தீர்வின் அவசியத்தை உணர்த்தி அதனை விரைவாக அடைவதற்கான நெருக்குவாரங்களை சிறிலங்காவுக்கு பிரயோகிக்குமாறு தாம் சந்திக்கும் வெளிநாட்டுத் தலைவர்களிடத்திலும் தூதுவர்களிடத்திலும் தொடர்ச்சியாக முன்வைக்க வேண்டும். 13வது திருத்தமானது ஒருபோதும் இனப்பிரச்சினைக்காண தீர்வாக அமையாது என்பதை உறுதியாக வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
சிலர் 13வது திருத்தச்சட்டமானது இந்திய நலன்சார் ஒன்று என்றும் அதை விடுத்து வேறொன்றை தீர்வாக ஏற்க இந்தியா அனுமதிக்காது என்றும் வாதத்தை முன்வைக்கிறார்கள். 13வது திருத்தச்சட்டமானது இலங்கையில் இந்திய நலனை பாதுகாக்கின்ற ஒரு சட்ட மூலமாகவே கொண்டுவரப்பட்தே அன்றி தமிழருக்கான தீர்வாக அது கொண்டுவரப்பட்டிருக்கவில்லை. அச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு சுமார் 25 வருடங்கள் கழிந்த நிலையிலும் விடுதலைப் புலிகள் இல்லாத சூழலிலும் அச்சட்ட மூலத்தினால் இலங்கைத் தீவில் இந்திய நலன் பாதுகாக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பும் போது, இலையென்பதே பதிலாகவுள்ளது.
அச்சட்ட மூலத்தினால் அமெரிக்க- சிறிலங்கா பாதுகாப்பு உடன்படிக்கைகளையோ அல்லது பாகிஸ்தான்- சிறிலங்கா இராணுவ நெருக்கங்களையோ அல்லது இலங்கைத் தீவில் சீனாவின் ஆதீக்கத்தையோ கட்டுப்படுத்த முடிந்திருக்கவில்லை. இதற்குக் காரணம் இலங்கையின் ஒற்றையாட்சி கட்டமைப்பும் அதற்கூடாக மத்தியில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களும் ஆகும். இவை நிவர்த்தி செய்யப்பட்டு தமிழ்மக்களுக்கு சுயாட்சியுடன் கூடிய இறுதித் தீர்வு முன்வைக்கப்படும் வரை இலங்கைத் தீவில் இந்திய நலனானது தொடர்ந்து கேள்விக்குறியாகவேயிருக்கும்.

நல்லிணக்கம் சிறிலங்காவின் போர்க்காயங்களை குணப்படுத்துமா?

25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக கடந்த மாதம் தனது சொந்தக் காணிக்குச் சென்ற பரமேஸ்வரி உதயகுமாரன் மிகவும் அதிர்ச்சியுற்றார். பரமேஸ்வரியின் சொந்த இடம் பளை வீமன்காமம். இவரது வீட்டில் எவ்வித தளபாடங்களும் காணப்படவில்லை.
ஓடுகள் அனைத்தும் சேதமடைந்து விட்டன. அத்துடன் கதவுகளும் காணப்படவில்லை. 1990 நவம்பரில் பரமேஸ்வரி தனது வீட்டை விட்டு வேறிடத்திற்கு குடிபெயர வேண்டியநிலை ஏற்பட்டது. இவர் மட்டுமல்ல இவர் போன்ற பல ஆயிரக்கணக்கான மக்கள் போர்ச் சூழல் காரணமாக தமது சொந்த வீடுகளை விட்டு இடம்பெயர வேண்டியேற்பட்டது.

சிறிலங்கா இராணுவத்தினரின் போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் போன்ற மும்முனைத் தாக்குதல்களிலிருந்தும் தமது உயிரைக் காப்பாற்றுவதற்காக மக்கள் தமது கைகளுக்கு அகப்பட்ட பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறினர். இதற்கு பரமேஸ்வரியின் குடும்பம் மட்டும் விதிவிலக்கல்ல.
இதன் பின்னர் பரமேஸ்வரியின் சொந்த ஊர் சிறிலங்கா இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயம் எனப் பெயரிடப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஏப்ரல் மாதமே மீண்டும் இந்த மக்கள் தமது சொந்த இடத்திற்குச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. 80,000 வரையான மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்ட உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த பின்னரே தற்போது உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
‘நான் எனது வீட்டை 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது பார்க்கும் போது என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனது வீட்டைச் சூழப் பற்றைகள் வளர்ந்து விட்டன. காட்டைப் போல் மாறிவிட்டது’ என பரமேஸ்வரி கூறுகிறார்.
சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனவரியில் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட போது, நாட்டின் வடக்கு கிழக்கில் மீளிணக்கப்பாடு ஏற்படுத்தப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தார். மைத்திரியின் முன்னுரிமைகளில் வடக்கு கிழக்கில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதும் ஒன்றாகும்.
போரின் போது சிதைக்கப்பட்ட, அழிக்கப்பட்ட மற்றும் சேதமாக்கப்பட்ட கட்டடங்கள் மற்றும் வீதிகள் மீளவும் நிர்மாணிக்கப்பட்டாலும் கூட, போரின் தாக்கத்தால் உடைந்துள்ள மனங்களையும் இதயங்களையும் மீளவும் ஒட்டவைப்பதற்கான எவ்வித மீளிணக்கப்பாடும் மேற்கொள்ளப்படவில்லை என கடந்த மாதம் சிறிலங்கா இராணுவ வீரர்களின் சேவையைப் பாராட்டி இடம்பெற்ற நிகழ்வொன்றில் அதிபர் சிறிசேன தெரிவித்திருந்தார்.
சிறிலங்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட மற்றும் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் மற்றும் சொத்துக்கள் தற்போது சிறிசேன அரசாங்கத்தால் மெது மெதுவாக உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுகின்றன. இருப்பினும் இன்னமும் 13,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்தோர் முகாங்களில் அல்லது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாக தரவுகள் சுட்டிநிற்கின்றன.
சிறிலங்கா இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரப்பட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை மேற்கொள்வேன் என சிறிசேன உறுதியளித்திருந்தார்.
சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் தொடர்பான விசாரணை அறிக்கை ஒன்றை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைப்பதற்கான காலஅவகாசத்தை செப்ரெம்பர் மாதம் வரை தந்துதவுமாறு சிறிசேன கோரியிருந்தார். இதற்கு அமெரிக்காவும் தனது ஆதரவை வழங்கியிருந்தது.
பரமேஸ்வரி போன்று கணவன்மாரை இழந்த பெண்களுக்கு உதவுவதற்கென சிறிசேன அரசாங்கம் வடக்கில் அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளது. ஆனால் இவ்வாறான முயற்சிகள் மட்டும் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்துவதற்குப் போதாது என தமிழ்த் தலைவர்கள் வாதிடுகின்றனர்.
சிறிசேனவின் நகர்வு வரவேற்கத்தக்கது எனவும் ஆனாலும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழர் தாயகப் பிரதேசங்களிலிருந்து இராணுவ வீரர்களை அகற்றுதல் போன்ற முக்கிய பிரச்சினைகளை சிறிசேன அரசாங்கம் முன்னெடுக்கத் தவறியுள்ளதாகவும் தமிழ்த் தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
‘இவ்வாறான பிரச்சினைகள் முன்னுரிமைப்படுத்தப்படாவிட்டால், மீளிணக்கப்பாட்டில் எவ்வித உண்மையான முன்னேற்றமும் ஏற்படாது’ என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள வரலாற்று முக்கியத்துவம் மிக்க கோட்டையின் சுவர்கள் தற்போது செப்பனிடப்பட்டுள்ளன. ஆனால் போரின் போது குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட நீர்த்தாங்கி இன்னமும் அகற்றப்படவில்லை. தென்னிலங்கையிலிருந்து சிறிலங்காவின் வடபகுதி நோக்கி ‘போர்ச் சுற்றுலாப் பயணிகள்’ வருகை தருகின்றனர். இவர்கள் பேருந்துகளில் பெருமளவில் வடக்கைப் பார்வையிடச் செல்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் போர்க் காலத்தில் அழிவுற்றிருந்த தொடருந்து நிலையம் தற்போது மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது. இது போன்ற பல்வேறு இடங்கள் போர்ச் சுற்றுலாப் பயணிகளால் பார்வையிடப்படுகின்றன. 1990ல் தனது பயணிகள் சேவையை நிறுத்தியிருந்த யாழ்தேவி மீண்டும் தற்போது தனது பணியை ஆரம்பித்துள்ளது. வடக்கு கிழக்கின் மீள்கட்டுமாணங்களுக்காக முன்னால் அதிபர் மகிந்த ராஜபக்ச பல மில்லியன்களை செலவிட்டுள்ளார்.
அத்துடன் 2013ல் முதற் தடவையாக வடக்கு மாகாணசபை தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவதற்கான அனுமதியையும் மகிந்த வழங்கியிருந்தார். இவ்வாறான பல மீள்கட்டுமாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மக்களின் மனங்களிலிருக்கும் ஆழமான வடுக்களைக் களைவதற்கு ராஜபக்ச எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும் பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், இறுதிக்கட்டப் போரின் போது 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் ஐ.நா வல்லுனர் குழு 2011ல் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.
பாதுகாப்பு வலயங்கள், வைத்தியசாலைகள், வழங்கல் பாதைகள் போன்ற முக்கிய பல இடங்களைக் குறிவைத்து சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டதாக வல்லுனர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர்களை படையில் இணைத்தமை, பொது மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியமை போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதை வல்லுனர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைக்கவுள்ளதாக சிறிசேன அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தது. இதற்கான ‘தொழினுட்ப உதவிகளை’ ஐ.நா விடமிருந்து பெற்றுக்கொள்வதாகவும் சிறிசேன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சிறுபான்மைத் தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை எனவும் இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்களின் அரச சார் செயற்பாடுகளே இதற்குக் காரணம் எனவும் விரிவுரையாளர் குருபரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளையில், போரின் போது காணாமற்போன பல ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. போரின் போது கணவன்மாரை இழந்த பெண்களின் நலன்களில் அக்கறை செலுத்த சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கிறது. இதற்கான வழிவகைகள் ஆராயப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் மட்டும் 31,000 வரையான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளதாக பெண்கள் விவகாரத்திற்கான யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் நவரட்ணம் உதயாணி தெரிவித்துள்ளார். இவர்களில் பெரும்பாலானவர்கள் பொருத்தமான தொழில் வாய்ப்பைப் பெற முடியாது தவிக்கின்றனர். இவர்கள் மீள்திருமணம் செய்வதற்கு தமிழ்க் கலாசாரம் தடையாகக் காணப்படுகிறது.
யாழ்ப்பாணத்தின் புறநகரில் சிறிய வீடொன்றில் வாழும் 57 வயதான சிவபாலு லேவதியம்மாவின் கணவர் போரின் போது கொல்லப்பட்டார். இதனால் இவர் தனது பிள்ளைகளை வளர்ப்பதற்கு பெரிதும் சிரமப்படுகிறார். போரின் போது இவரது கணவர் கொல்லப்பட்ட பின்னர், குடும்பத்தைப் பராமரிப்பதற்காக மீன்களைக் கருவாடாக்கி விற்கும் பணியில் இவர் ஈடுபடுகிறார்.
இவரது மகனான சிவநேசன் 2009ல் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட போதும் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை என லேவதியம்மா கூறுகிறார். ‘எனது மகன் என்னிடம் வருவான் என நான் கனவு கண்டேன். அவன் என்னிடம் வந்து என்னைக் கட்டியணைத்து சாப்பாடு தருமாறு கேட்பதாக நான் கனவு கண்டேன். இந்தக் கனவை நான் மாதத்தில் இரண்டு தடவைகளாவது காண்கிறேன்’ என லேவதியம்மா தெரிவித்தார்.
இதுவரையில் சிறிலங்கா அரசாங்கத்தால் 1000 ஏக்கர் நிலங்கள் மட்டுமே மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் சிறிலங்கா இராணுவத்தால் 10,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் றஞ்சினி நடராஜபிள்ளை தெரிவித்தார். ஆனாலும் இதை விட அதிகளவிலான காணி சிறிலங்கா இராணுவத்தினர் வசம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலங்களில் சிறிலங்காவின் முன்னாள் அரசாங்கம் புதிய முகாங்களை, கடற்கரையோர விடுதிகள் எனப் பல்வேறு களியாட்ட சார் கட்டடங்களை அமைத்திருந்தது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் பரமேஸ்வரி மற்றும் அவரது அயலவர்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களைச் சென்று பார்வையிட அனுமதிக்கப்பட்டதானது இவர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனினும் காடுகளால் சூழப்பட்ட தமது வீடுகள் மற்றும் காணிகளை சுத்தப்படுத்துவதற்கு இவர்கள் பல மைல் தூரத்திலிருந்து நாள்தோறும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தால் 280 டொலர்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் தாம் இதுவரையில் 100 டொலர்கள் மட்டுமே பெற்றுள்ளதாகவும் நிலங்களைத் துப்பரவு செய்வதற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது இராணுவத்தினரால் கையளிக்கப்பட்ட இடங்களில் ஆங்காங்கே மிதிவெடிகள் தொடர்பான எச்சரிக்கைப் பதாகைகள் காணப்படுகின்றன. ஏதாவது வெடிபொருட்களைக் கண்டால் உடனடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டுள்ளது.
தனது அயலவர்களும் விரைவில் சொந்த இடத்தில் குடியேற வருவார்கள் என பரமேஸ்வரி நம்புகிறார். தான் இப்போது மகிழ்வாக இருப்பதாகவும் நான் எனது சொந்த வீட்டிற்குத் திரும்பி வந்தமை தன்னை உற்சாகப்படுத்தியுள்ளதாகவும் பரமேஸ்வரி தெரிவித்தார்.
ஒவ்வொரு நாளும் பூசகர் ஒருவர் பரமேஸ்வரியின் சொந்த ஊரிலுள்ள சிறிய கோயிலில் பூசை செய்வதற்கு வருகை தருகிறார். இது ஒரு பிள்ளையார் கோயிலாகும். இக்கோயிலில் பூசை செய்யும் பூசகரான கணேசமூர்த்தி சர்மாவிற்குத் தற்போது 70 வயது. இவர் முதன் முதலாக ஏப்ரல் 21 அன்று இந்த இடத்தைப் பார்வையிடச் சென்றார். ஆனால் கோயிலிருந்த காணி பற்றையால் சூழப்பட்டிருந்தது.
தன்னால் இதனை முதலில் அடையாளங் காணமுடியவில்லை என இவர் தெரிவித்தார். இவரது கோயிற் காணியில் 350 ஆண்டுகால ஆலமரம் ஒன்று இப்போதும் நிற்பதைக் கண்டபோது பூசகர் மிகவும் மகிழ்ச்சியும் மனநிம்மதியும் அடைந்தார். தற்போது இங்கு பூசைகள் இடம்பெறுகின்றன. மக்கள் பூசகரிடம் ஆசிர்வாதம் பெறுகின்றனர்.
தமது சமூகத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான முதலாவது நகர்வாக மக்கள் இங்கு மீளவும் வருகை தருகின்றனர். நீர் மற்றும் மின்சார வசதியை ஏற்படுத்தித் தருவதாக வாக்குறுதி அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ளதால் ‘மக்கள் நம்பிக்கையுடன் உள்ளதாக’ பூசகர் தெரிவித்தார்.

போருக்குப் பின் போதை எனும் பேரழிவு!

ஆயுதப் போராட்டங்கள் வடக்கு- கிழக்கில் முடிவுக்கு வந்தாலும், சமூக ரீதியிலான சீரழிப்பு நடவடிக்கைகள் பெருமெடுப்பில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன. மூப்பது வருடங்களாக போர் தின்ற சமூகத்தை கடந்த ஆறு ஆண்டுகளாக போதையும், சமூக ஒழுக்க மீறலும், மனித விரோத சிந்தனையும் ஆட்கொண்டிருக்கின்றது.


“வடக்கு (கிழக்கு) இளைஞர்களை இலக்கு வைத்து தீய சக்திகள் இயங்குகின்றன. அவை, போதைப் பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்றன.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்தும் ஆதங்கம் வெளியிட்டு வருகின்றார். இந்த நடவடிக்கைகளின் பின்னால் ஆளும் தரப்பு இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டி வந்திருக்கின்றார்.

இப்படியான நிலையில், கடந்த வாரம் யாழ் மாவட்ட செயலகம் வெளியிட்ட அறிக்கையொன்றில் யாழ் முன்னணி பாடசாலைகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விநியோகம் இடம்பெறுவதை சுட்டிக்காட்டியிருந்தது. இது, யாழ் மாவட்டத்துடன் நின்றுவிடவில்லை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனைத்து பாகங்களிலும் இடம்பெறுகின்றன.  (நாடு பூராவும் இந்தப் பிரச்சினை குறிப்பிட்டளவு இருப்பது உண்மை.)

கற்றறிந்தவர்கள், சமூக ஒழுக்கத்தில் முதன்மையானவர்கள் என்று கூறப்பட்ட வடக்கு, கிழக்கு சமூகத்தை நோக்கி இன்றைக்கு ஏவப்படும் போதைப்பொருள் உள்ளிட்ட ஏவல்களுக்குள் அகப்பட்டு ஈசல்கள் மாதிரி தங்களுடைய வாழ்க்கையை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அது, மெல்ல மெல்ல சமூகத்துக்கான பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றது.

மதுபாவனை, சட்டவிரோதச் செயற்பாடுகள் வடக்கு, கிழக்கில் முன்னரும் இடம்பெற்று வந்திருக்கின்றன. ஆனால், அவற்றின் விகிதம் பெருமளவு குறைவு. இன்றைக்கு, மாணவர்கள் போதை தலைக்கேறிய நிலையில் பாடசாலைக்கு வருகின்றார்கள் என்று ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டும் அளவுக்கான அவலநிலை உருவாகியிருக்கின்றது.

எம்முடைய கல்வியறிவு, பொருளாதாரம், சமூக ஒழுக்கம், மனிதம் மீதான நம்பிக்கை, சட்ட நெறிமுறைகள் மீதான மதிப்பு என்பன தொடர்ந்தும் காப்பாற்றப்பட வேண்டிய தேவையுள்ளது. அதுவே, இலங்கையில் தொடர் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வரும் தமிழ் மக்களை தக்க வைப்பதற்கு உதவியாக இருக்கும். தொடர்ச்சியான அழிவும், இழப்பும் சமூகமொன்றை முற்றுமுழுதாக அனாதையாக்கி விடக்கூடியது.

போதைப் பொருள் மற்றும் மதுப் பொருட்களின் பாவனை அதிகரிப்பும், சமூக ஒழுக்க மீறல்களும் வடக்கு, கிழக்கில் நாளாந்தம் குற்றங்கள் பெருகி வருவதைக் காட்டுகின்றது. புங்குதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட பின்னணியில் இவையும் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. அந்த கொடூர குற்றத்தோடு சம்பந்தப்பட்டுள்ளவர்களின் அதிகமானோர் 20வயதுகளில் இருக்கும் இளைஞர்கள். அவர்கள் போதை தலைக்கேறிய நிலையில் குற்றச்செயலில் ஈடுபட்டிருக்கின்றார்கள். (அது மாத்திரம் காரணம் என்பதல்ல)

கட்டுக்கோப்பற்ற வாழ்வு என்பது தனி மனித விரோதங்களை மாத்திரமல்ல, சமூக விரோதத்தையும் ஆற்ற வைத்து விடுகின்றன. அதிலிருந்து சமூகத்தை மீட்க வேண்டிய அவசர தேவை தற்போது ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு, கல்வியாளர்கள், சட்டவாளர்கள், மனநல ஆலோசகர்கள், மதகுருமார்கள்  உள்ளிட்ட சமூக முன்னேற்றத்தைக் கருத்தில் கொள்ளும் அனைத்துப் தரப்பினரும் சிறந்த திட்டங்களை முன்வைத்து நீண்ட கால அடிப்படையில் பணியாற்ற வேண்டும். அதுதான், போதை அரக்கனை விரட்டுவதற்கும், சமூகத்தின் ஆணி வேர் அறுபடாமல் காப்பாற்றுவதற்கும் அவசியமானதாக இருக்கும்!

Thursday 2 July 2015

நேருவை முஸ்லிமாக காட்ட மத்திய அரசு முயற்சி?

புதுடில்லி: நாட்டின் முதல் பிரதமர் நேருவை, முஸ்லிம் என காட்டும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டது என்றும், அந்த முயற்சியை, 'விக்கிபீடியா' இணையதளத்தின் ஆசிரியர்கள் முறியடித்தனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

விக்கிபீடியா இணைய தளத்தில், எந்த தகவல் குறித்தும் விளக்கமான தகவல்களை பெற முடியும். அதுபோல, அதில் இடம்பெற்றுள்ள தகவல்களை, யார் வேண்டுமானாலும் மாற்றியமைக்க முடியும். விக்கிபீடியா இணைய தளத்தில், பண்டித ஜவகர்லால் நேரு பற்றிய தகவல் இடம் பெற்றுள்ளது. அதில், நேரு பற்றிய சில தகவல்கள், கடந்த மாதம், 26ல், மத்திய அரசின் கம்ப்யூட்டர் முகவரி ஒன்றிலிருந்து மாற்றப்பட்டுள்ளன. அதை அறிந்த, விக்கிபீடியா இணையதள ஆசிரியர்கள், மாற்றியமைக்கப்பட்ட தகவல்களை நீக்கி, நேரு குறித்து இதற்கு முன் என்ன தகவல் இருந்ததோ, அதையே மீண்டும் பராமரித்துள்ளனர்.

மாற்றப்பட்டது என்ன?

நேருவின் தந்தை பெயர், மோதிலால் நேரு. அவரின் தந்தை பெயர், கங்காதர் என, விக்கிபீடியாவில் இருந்தது. அதை, கங்காதரின் உண்மையான பெயர், கைசுதீன் காசி; அவர் ஒரு முஸ்லிம். பிரிட்டிஷ் ஆட்சி யாளர்களின் கெடுபிடிகளுக்கு பயந்து, தன் பெயரை அவர், கங்காதர் என மாற்றிக் கொண்டார் என, திருத்தப்பட்டது. இதன் மூலம், நேரு இந்து மதத்தைச் சேர்ந்தவர் இல்லை; முஸ்லிம் என, மாற்ற முயற்சி மேற்கொண்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

உண்மை தெரிஞ்சாகணும்!

நேருவையும், அவரின் தந்தையையும், முஸ்லிமாக காட்ட முயற்சி நடந்துள்ளது. நேரு முஸ்லிமா, இந்துவா என்பது பிரச்னையில்லை. அவர் இந்தியன் என்பது மட்டும் உறுதி. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, என்.ஐ.சி., எனப்படும், தேசிய தகவல் தொகுப்பக ஊழியர்கள் தான், இந்த முறைகேட்டை செய்துள்ளனர். எனினும், இதுகுறித்து அரசு நியாயமான விசாரணை நடத்த வேண்டும். பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ரன்தீப் சுர்ஜவாலா
காங்., செய்தித் தொடர்பாளர்

மோடியின் மௌனம்! திணறும் பா.ஜ.க.!



‘ஊழல் எதிர்ப்பு’ என்பதை உரக்கச் சொல்லி பதவிக்கு வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘ஐ.பி.எல். கிரிக்கெட்’ உருவத்தில் ஆபத்து பறந்து வந்திருக்கிறது. 



காங்கிரஸ் கட்சியின் பிரதமர் மன்மோகன்சிங்கை ‘மவுன் சிங்’ என்று கேலி செய்த பா.ஜ.க. வினர், இப்போது பிரதமர் மோடியின் மௌனத்தைப் பார்த்து எதிர்கட்சிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள்.

இருபது நாட்களாக டெல்லியில் அரசு நடக்கிறதோ இல்லையோ ‘கிரிக்கெட்’ அரசியல் தூள் பறக்கிறது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ‘ஐ.பி. எல் கிரிக்கெட்’ கிங் லலித் மோடிக்கு உதவிய விவகாரம் ஓய்வு எடுக்கும் நேரத்தில், ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ‘லலித் மோடிக்கு ஆதரவாக வாக்கு மூலமே கொடுத்தது’ ஏக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது போதாது என்று மத்திய கல்வி அமைச்சர் ஸ்மிரிதி இராணி தேர்தலில் போட்டியிடும் போது கல்வித் தகுதி பற்றி வேட்பு மனுவில் முன்னுக்குப் பின் முரணாகக் கூறியது ‘கோர்ட் விசாரணைக்கு உகந்தது’ என்று தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது.

மொத்தத்தில் மோடி அமை ச்சரவையில் இருக்கும் இரு பெண் அமைச்சர்கள் (சுஸ்மா சுவராஜ், ஸ்மிரிதி இராணி), அவரது கட்சியைச் சார்ந்த மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோரின் ‘ராஜினாமாக்கள்’ எதிர்கட்சிகளால் கோரப்படுகின்றன.

ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் இப்படி மூன்று பெண்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற இடியப்பச் சிக்கலைச் சந்தித்த முதல் பிரதமர் நரேந்திரமோடியாகிறார். ‘லலித் கேட்’ இன்றைக்கு ‘டெல்லி கேட்டை’ அனல் பறக்க வைக்கிறது.

இம்மூவர் தவிர வசுந்தரா ராஜே மகனும், பா.ஜ.க. எம்.பி.யுமான துஷ்யந்தின் நிறுவனத்துக்கு லலித் மோடி நிறுவனத்திலிருந்து ‘மாறியிருக்கும் பணம்’ ஊழல் தீபத்தை ஏற்றியிருக்கிறது.

இந்த ‘பண பரிவர்த்தனை’ ஏறக்குறைய 2 ஜி வழக்கில் கலைஞர் டி.வி.க்கு 200 கோடி ரூபாய் கைமாறியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு இணையானது.  

ஏனென்றால், துஷ்யந்தின் நிறுவனம் 2 இலட்சம் ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய நிறுவனம். அதன் பங்கு பத்து ரூபாய் மதிப்பில் இருந்திருக்கிறது. பத்து ரூபாய் உள்ள ஒரு பங்கை லலித் மோடியின் நிறுவனம் 96,000 ரூபாய் கொடுத்து வாங்கியதில் 11 கோடி ரூபாய் கைமாறியிருக்கிறது.

‘கலைஞர் டி.வி. லோன் வாங்கி திருப்பிக் கொடுத்தது ‘வாலா’ என்று அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கும் போது துஷ்யந்த் நிறுவனத்தின் பண பரிவர்த்தனையை மட்டும் ‘வர்த்தக ரீதியான நடவடிக்கை’ என்றும், “வங்கி மூலம் நடைபெற்றுள்ளது. 

வருமான வரிக் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசாங்கம் எங்கிருந்து வந்தது?’ என்றும் நாட்டின் நிதி அமைச்சரே பதில் சொல்லி சமாளிக்க வேண்டிய நிலை வந்திருப்பது ஏன் என் பதுதான் அனைவரின் கேள்வி.

சரவெடி போல் கிளம்பியுள்ள இந்த சர்ச்சை களை சமாளிக்கும் தூதுவர்களாக மூவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். முதலாமவர் நிதிய மைச்சர் அருண்ஜேட்லி.

இரண்டாவதாக உள்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங். மூன் றாமவர் பா.ஜ.க.வின் தலைவராக இருக்கும் அமித்ஷா. இம்மூவரில் ஜேட்லியும், அமித்ஷாவும் பிரதமர் நரேந்திரமோடியின் வலது கரமும் இடது கரமுமாக இருப்பவர்கள்.

ஆனால், உள்துறை அமைச்ர் ராஜ்நாத் சிங் அப்படியில்லை. மோடியின் நிழலிலிருந்து சற்று விலகி நிற்பவர்.

ஆனால் ‘சுஷ்மா உள்ளிட்டவர்களின் பிரச்சினையை தீர்க்க ராஜ்நாத் சிங் முன்னிறுத்தப்படுவதி லேயே ஓர் அரசியல் இருக்கிறது’ என்று கூறும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ‘பா.ஜ.க.வுக்குள் இப்போதைக்கு பிரதமர் மோடிக்கு போட்டியாக இருப்பவர் ராஜ்நாத் சிங்தான். அவருக்கு வசுந்தரா ராஜே, அத்வானி ஆதரவளிப்பார்கள். 

ஆகவே, இந்த புகார்களை அவரை விட்டே சமாளிக்க விடுவோம். கெட்ட பெயர் வந்தால் ராஜ் நாத் சிங்கின் இமேஜ்தானே போகும் என்பதே ஒளிந்திருக்கும் வியூகம்’ என்கிறார்கள். 

அந்த வகையில்தான் இந்த ‘மூன்று பெண்கள் அமைச்சர்கள் மீதான புகார்கள்’ பற்றி பதில் சொல்ல ‘மூன்று தூதுவர்களில்’ ஒருவராக ராஜ்நாத் சிங் களத்துக்கு வந்துள்ளார் என்கிறார்கள்.

‘துணிச்சல் மிக்க தலைவர்’, ‘உறுதியாக முடிவு எடுப்பவர்’ போன்ற கருத்துக்கள்தான் பிரதமர் நரேந்திரமோடியை மையப்படுத்தி செய்யப்படும் பிரசாரங்கள்.

ஆனால், இன்றைக்கு இந்த மூன்று பெண் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் அவர் திணறுவது அப்பிரசாரத்துக்கு சோதனையை ஏற்படுத்திவிடடது.

அதற்கு காரணம் சுஸ்மாவை விலக்கினால், வசுந்தரா ராஜேயை விலக்கச் சொல்வார்கள். இந்த இருவரையும் விலக்கினால், ஸ்மிரிதி இராணியை விலக்கக் கோருவார்கள்.

இப்படி அடுத்தடுத்து அமைச்சர்களை விடுவித்துக் கொண்டிருந்தால் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திலேயே பா.ஜ.க. அரசு ஊழல் அரசு என்ற முத்திரை மக்கள் மத்தியில் சென்றுவிடும் என்று கருதுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதுவும் குறிப்பாக அடுத்து வரப்போகும் பீஹார் சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமானது.

அந்தத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால்தான் ராஜ்ய சபையில் அரசுதான் விரும்பும் மசோதாக்களைக் கொண்டு வருவதற்கு வசதியாக இருக்கும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. பிரதமர் நரேந்திரமோடியும் நினைக்கிறார்.

ஆனால் இப்போது வந்துள்ள அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் அதற்கு உலை வைத்து விடுமோ என்ற அச்சம் பா.ஜ.க.வில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் வந்திருக்கிறது.

அதனால்தான் பிரதமரும் தவிக்கிறார். நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ‘அரசாங்கத்தில் அழுக்குப் படிந்த அமைச்சர்கள் யாரும் இல்லை’ என்று அடித்துச் சொல்கிறார்.

‘மூன்று அமைச்சர்களுமே ராஜினாமா செய்ய மாட்டார்கள். அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை’ என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சொல்கிறார்.

ஆனால், இப்படி அனைவரும் ‘ஊழல் இல்லை’ ‘யாரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள்’ என்று கூறியிருக்கின்ற நேரத்தில், ‘என் மீது ‘வாலா’ புகார்’ தெரிவிக்கப்பட்டவுடன் ராஜினாமா செய்தேன். 

மக்கள் நம்பிக்கையை அரசில் இருப்பவர்கள் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறி நெருக்கடி கொடுத் திருக்கிறார் முன்னாள் துணை பிரதமர் அத்வானி. 

அதுமட்டுமின்றி, மோடி பதவி யேற்ற தினத்திலேயே ‘75 வயதிற்கு மேற்பட்டவர்கள் மூளைச் சாவு அடைந்தவர்கள் என்று மோடி கருதிவிட்டார்’ என்று முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் கடுமையாக மோடியை தாக்கிப் பேசியுள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக மோடிக்கு நம்பிக்கையாக இருக்கும் மஹாராஷ்டிரா பா.ஜ.க. சட்ட மன்ற உறுப்பினர் ஒருவரே, ‘நரே ந்திரமோடி சர்வாதிகாரியாக செயற் படுகிறார்’ என்ற ரீதியில் வேறு ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த ‘டேப்’ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படி ‘மோடி எதிர்ப்பு’ எல்லாப் பக்கத்திலிருந்தும் பா.ஜ.க.விற்குள் மையம்கொண்டிருக்கிறது. அது என்றைக்கு எரிமலை போல் வெடிக்கும் என்பதுதான் இப்போதைய கேள்வி.

இது மாதிரி பிரச்சினையை ஆட்சிக்கு வந்தவுடன் சந்தித்தவர்களில் முக்கியமான பிரதமர்கள் என்று எடுத்துக் கொண்டால் ஒருவர் சந்திரசேகர். அவர் ஊழல் பிரச்சினையை சந்திக்கவில்லை.

‘ராஜீவ் காந்தி இல்லத்தை வேவு பார்த்தார்’ என்ற புகாருக்கு உள்ளானார். ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பதவியிழந்தார்.

அதேபோல் இன்னொருவர் வி.பி.சிங். ‘ராமர் கோயில் பிரச்சினை’ ‘மண்டல் கமிஷன் பிரச்சினைகளில்’ பிரதமராக இருந்த வி.பி. சிங் சிக்கினார். அவரும் ஒன்றைரை வருடத்தில் ஆட்சியை இழந்தார்.

இதேபோன்ற சிக்கல்களை பிரதமராக இருந்த தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் போன்றோரும் சந்தித்தார்கள். அவர்களும் குறுகிய காலத்தில் பதவியிழந்தார்கள். 

வாஜ்பாயோ, டாக்டர் மன்மோகன்சிங்கோ ஆட்சிக்கு வந்த முதல் ஐந்து வருடத்தில் இப்படிப்பட்ட சோதனைகள் எதையும் சந்திக்கவில்லை.

ஆனால், இப்போது பிரதம ராகியிருக்கும் நரேந்திரமோடி ஒரு வருடம் முடிந்த கையோடு இவ்வளவு பெரிய பிரச்சினையை சந்தித்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் ஓரங்கட்டப்பட்ட தலைவர்கள் எல்லாம் ஓரணியில் சேருகிறார்கள்.

அதுதான் மோடி எதிர்ப்பு அணி. அவர்கள் வெளிப்படையாக வெளியில் வந்து மோடிக்கு எதிராக போராடவில்லை என்றாலும், கட்சிக்குள்ளிருந்து கொண்டு அன்று இந்திரா காந்திக்கு தொல்லை கொடுத்தது போல் இன்றைக்கு பா.ஜ.க. தலைவர்கள் மோடிக்கு தொல்லை கொடுக்கிறார்கள்.

இதிலிருந்து மீண்டு வர இந்திய பிரதமர் நரேந்திரமோடி கையில் வைத்திருக்கும் ஒரே ஆயுதம் ‘மௌனம்’! அந்த மௌனம் எவ்வளவு காலம் கைகொடுக்கும்?