Thursday 2 July 2015

மோடியின் மௌனம்! திணறும் பா.ஜ.க.!



‘ஊழல் எதிர்ப்பு’ என்பதை உரக்கச் சொல்லி பதவிக்கு வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘ஐ.பி.எல். கிரிக்கெட்’ உருவத்தில் ஆபத்து பறந்து வந்திருக்கிறது. 



காங்கிரஸ் கட்சியின் பிரதமர் மன்மோகன்சிங்கை ‘மவுன் சிங்’ என்று கேலி செய்த பா.ஜ.க. வினர், இப்போது பிரதமர் மோடியின் மௌனத்தைப் பார்த்து எதிர்கட்சிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள்.

இருபது நாட்களாக டெல்லியில் அரசு நடக்கிறதோ இல்லையோ ‘கிரிக்கெட்’ அரசியல் தூள் பறக்கிறது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ‘ஐ.பி. எல் கிரிக்கெட்’ கிங் லலித் மோடிக்கு உதவிய விவகாரம் ஓய்வு எடுக்கும் நேரத்தில், ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ‘லலித் மோடிக்கு ஆதரவாக வாக்கு மூலமே கொடுத்தது’ ஏக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது போதாது என்று மத்திய கல்வி அமைச்சர் ஸ்மிரிதி இராணி தேர்தலில் போட்டியிடும் போது கல்வித் தகுதி பற்றி வேட்பு மனுவில் முன்னுக்குப் பின் முரணாகக் கூறியது ‘கோர்ட் விசாரணைக்கு உகந்தது’ என்று தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது.

மொத்தத்தில் மோடி அமை ச்சரவையில் இருக்கும் இரு பெண் அமைச்சர்கள் (சுஸ்மா சுவராஜ், ஸ்மிரிதி இராணி), அவரது கட்சியைச் சார்ந்த மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோரின் ‘ராஜினாமாக்கள்’ எதிர்கட்சிகளால் கோரப்படுகின்றன.

ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் இப்படி மூன்று பெண்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற இடியப்பச் சிக்கலைச் சந்தித்த முதல் பிரதமர் நரேந்திரமோடியாகிறார். ‘லலித் கேட்’ இன்றைக்கு ‘டெல்லி கேட்டை’ அனல் பறக்க வைக்கிறது.

இம்மூவர் தவிர வசுந்தரா ராஜே மகனும், பா.ஜ.க. எம்.பி.யுமான துஷ்யந்தின் நிறுவனத்துக்கு லலித் மோடி நிறுவனத்திலிருந்து ‘மாறியிருக்கும் பணம்’ ஊழல் தீபத்தை ஏற்றியிருக்கிறது.

இந்த ‘பண பரிவர்த்தனை’ ஏறக்குறைய 2 ஜி வழக்கில் கலைஞர் டி.வி.க்கு 200 கோடி ரூபாய் கைமாறியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு இணையானது.  

ஏனென்றால், துஷ்யந்தின் நிறுவனம் 2 இலட்சம் ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய நிறுவனம். அதன் பங்கு பத்து ரூபாய் மதிப்பில் இருந்திருக்கிறது. பத்து ரூபாய் உள்ள ஒரு பங்கை லலித் மோடியின் நிறுவனம் 96,000 ரூபாய் கொடுத்து வாங்கியதில் 11 கோடி ரூபாய் கைமாறியிருக்கிறது.

‘கலைஞர் டி.வி. லோன் வாங்கி திருப்பிக் கொடுத்தது ‘வாலா’ என்று அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கும் போது துஷ்யந்த் நிறுவனத்தின் பண பரிவர்த்தனையை மட்டும் ‘வர்த்தக ரீதியான நடவடிக்கை’ என்றும், “வங்கி மூலம் நடைபெற்றுள்ளது. 

வருமான வரிக் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசாங்கம் எங்கிருந்து வந்தது?’ என்றும் நாட்டின் நிதி அமைச்சரே பதில் சொல்லி சமாளிக்க வேண்டிய நிலை வந்திருப்பது ஏன் என் பதுதான் அனைவரின் கேள்வி.

சரவெடி போல் கிளம்பியுள்ள இந்த சர்ச்சை களை சமாளிக்கும் தூதுவர்களாக மூவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். முதலாமவர் நிதிய மைச்சர் அருண்ஜேட்லி.

இரண்டாவதாக உள்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங். மூன் றாமவர் பா.ஜ.க.வின் தலைவராக இருக்கும் அமித்ஷா. இம்மூவரில் ஜேட்லியும், அமித்ஷாவும் பிரதமர் நரேந்திரமோடியின் வலது கரமும் இடது கரமுமாக இருப்பவர்கள்.

ஆனால், உள்துறை அமைச்ர் ராஜ்நாத் சிங் அப்படியில்லை. மோடியின் நிழலிலிருந்து சற்று விலகி நிற்பவர்.

ஆனால் ‘சுஷ்மா உள்ளிட்டவர்களின் பிரச்சினையை தீர்க்க ராஜ்நாத் சிங் முன்னிறுத்தப்படுவதி லேயே ஓர் அரசியல் இருக்கிறது’ என்று கூறும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ‘பா.ஜ.க.வுக்குள் இப்போதைக்கு பிரதமர் மோடிக்கு போட்டியாக இருப்பவர் ராஜ்நாத் சிங்தான். அவருக்கு வசுந்தரா ராஜே, அத்வானி ஆதரவளிப்பார்கள். 

ஆகவே, இந்த புகார்களை அவரை விட்டே சமாளிக்க விடுவோம். கெட்ட பெயர் வந்தால் ராஜ் நாத் சிங்கின் இமேஜ்தானே போகும் என்பதே ஒளிந்திருக்கும் வியூகம்’ என்கிறார்கள். 

அந்த வகையில்தான் இந்த ‘மூன்று பெண்கள் அமைச்சர்கள் மீதான புகார்கள்’ பற்றி பதில் சொல்ல ‘மூன்று தூதுவர்களில்’ ஒருவராக ராஜ்நாத் சிங் களத்துக்கு வந்துள்ளார் என்கிறார்கள்.

‘துணிச்சல் மிக்க தலைவர்’, ‘உறுதியாக முடிவு எடுப்பவர்’ போன்ற கருத்துக்கள்தான் பிரதமர் நரேந்திரமோடியை மையப்படுத்தி செய்யப்படும் பிரசாரங்கள்.

ஆனால், இன்றைக்கு இந்த மூன்று பெண் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் அவர் திணறுவது அப்பிரசாரத்துக்கு சோதனையை ஏற்படுத்திவிடடது.

அதற்கு காரணம் சுஸ்மாவை விலக்கினால், வசுந்தரா ராஜேயை விலக்கச் சொல்வார்கள். இந்த இருவரையும் விலக்கினால், ஸ்மிரிதி இராணியை விலக்கக் கோருவார்கள்.

இப்படி அடுத்தடுத்து அமைச்சர்களை விடுவித்துக் கொண்டிருந்தால் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திலேயே பா.ஜ.க. அரசு ஊழல் அரசு என்ற முத்திரை மக்கள் மத்தியில் சென்றுவிடும் என்று கருதுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதுவும் குறிப்பாக அடுத்து வரப்போகும் பீஹார் சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமானது.

அந்தத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால்தான் ராஜ்ய சபையில் அரசுதான் விரும்பும் மசோதாக்களைக் கொண்டு வருவதற்கு வசதியாக இருக்கும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. பிரதமர் நரேந்திரமோடியும் நினைக்கிறார்.

ஆனால் இப்போது வந்துள்ள அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் அதற்கு உலை வைத்து விடுமோ என்ற அச்சம் பா.ஜ.க.வில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் வந்திருக்கிறது.

அதனால்தான் பிரதமரும் தவிக்கிறார். நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ‘அரசாங்கத்தில் அழுக்குப் படிந்த அமைச்சர்கள் யாரும் இல்லை’ என்று அடித்துச் சொல்கிறார்.

‘மூன்று அமைச்சர்களுமே ராஜினாமா செய்ய மாட்டார்கள். அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை’ என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சொல்கிறார்.

ஆனால், இப்படி அனைவரும் ‘ஊழல் இல்லை’ ‘யாரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள்’ என்று கூறியிருக்கின்ற நேரத்தில், ‘என் மீது ‘வாலா’ புகார்’ தெரிவிக்கப்பட்டவுடன் ராஜினாமா செய்தேன். 

மக்கள் நம்பிக்கையை அரசில் இருப்பவர்கள் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறி நெருக்கடி கொடுத் திருக்கிறார் முன்னாள் துணை பிரதமர் அத்வானி. 

அதுமட்டுமின்றி, மோடி பதவி யேற்ற தினத்திலேயே ‘75 வயதிற்கு மேற்பட்டவர்கள் மூளைச் சாவு அடைந்தவர்கள் என்று மோடி கருதிவிட்டார்’ என்று முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் கடுமையாக மோடியை தாக்கிப் பேசியுள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக மோடிக்கு நம்பிக்கையாக இருக்கும் மஹாராஷ்டிரா பா.ஜ.க. சட்ட மன்ற உறுப்பினர் ஒருவரே, ‘நரே ந்திரமோடி சர்வாதிகாரியாக செயற் படுகிறார்’ என்ற ரீதியில் வேறு ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த ‘டேப்’ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படி ‘மோடி எதிர்ப்பு’ எல்லாப் பக்கத்திலிருந்தும் பா.ஜ.க.விற்குள் மையம்கொண்டிருக்கிறது. அது என்றைக்கு எரிமலை போல் வெடிக்கும் என்பதுதான் இப்போதைய கேள்வி.

இது மாதிரி பிரச்சினையை ஆட்சிக்கு வந்தவுடன் சந்தித்தவர்களில் முக்கியமான பிரதமர்கள் என்று எடுத்துக் கொண்டால் ஒருவர் சந்திரசேகர். அவர் ஊழல் பிரச்சினையை சந்திக்கவில்லை.

‘ராஜீவ் காந்தி இல்லத்தை வேவு பார்த்தார்’ என்ற புகாருக்கு உள்ளானார். ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பதவியிழந்தார்.

அதேபோல் இன்னொருவர் வி.பி.சிங். ‘ராமர் கோயில் பிரச்சினை’ ‘மண்டல் கமிஷன் பிரச்சினைகளில்’ பிரதமராக இருந்த வி.பி. சிங் சிக்கினார். அவரும் ஒன்றைரை வருடத்தில் ஆட்சியை இழந்தார்.

இதேபோன்ற சிக்கல்களை பிரதமராக இருந்த தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் போன்றோரும் சந்தித்தார்கள். அவர்களும் குறுகிய காலத்தில் பதவியிழந்தார்கள். 

வாஜ்பாயோ, டாக்டர் மன்மோகன்சிங்கோ ஆட்சிக்கு வந்த முதல் ஐந்து வருடத்தில் இப்படிப்பட்ட சோதனைகள் எதையும் சந்திக்கவில்லை.

ஆனால், இப்போது பிரதம ராகியிருக்கும் நரேந்திரமோடி ஒரு வருடம் முடிந்த கையோடு இவ்வளவு பெரிய பிரச்சினையை சந்தித்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் ஓரங்கட்டப்பட்ட தலைவர்கள் எல்லாம் ஓரணியில் சேருகிறார்கள்.

அதுதான் மோடி எதிர்ப்பு அணி. அவர்கள் வெளிப்படையாக வெளியில் வந்து மோடிக்கு எதிராக போராடவில்லை என்றாலும், கட்சிக்குள்ளிருந்து கொண்டு அன்று இந்திரா காந்திக்கு தொல்லை கொடுத்தது போல் இன்றைக்கு பா.ஜ.க. தலைவர்கள் மோடிக்கு தொல்லை கொடுக்கிறார்கள்.

இதிலிருந்து மீண்டு வர இந்திய பிரதமர் நரேந்திரமோடி கையில் வைத்திருக்கும் ஒரே ஆயுதம் ‘மௌனம்’! அந்த மௌனம் எவ்வளவு காலம் கைகொடுக்கும்?

No comments:

Post a Comment