Sunday 12 July 2015

போருக்குப் பின் போதை எனும் பேரழிவு!

ஆயுதப் போராட்டங்கள் வடக்கு- கிழக்கில் முடிவுக்கு வந்தாலும், சமூக ரீதியிலான சீரழிப்பு நடவடிக்கைகள் பெருமெடுப்பில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன. மூப்பது வருடங்களாக போர் தின்ற சமூகத்தை கடந்த ஆறு ஆண்டுகளாக போதையும், சமூக ஒழுக்க மீறலும், மனித விரோத சிந்தனையும் ஆட்கொண்டிருக்கின்றது.


“வடக்கு (கிழக்கு) இளைஞர்களை இலக்கு வைத்து தீய சக்திகள் இயங்குகின்றன. அவை, போதைப் பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்றன.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்தும் ஆதங்கம் வெளியிட்டு வருகின்றார். இந்த நடவடிக்கைகளின் பின்னால் ஆளும் தரப்பு இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டி வந்திருக்கின்றார்.

இப்படியான நிலையில், கடந்த வாரம் யாழ் மாவட்ட செயலகம் வெளியிட்ட அறிக்கையொன்றில் யாழ் முன்னணி பாடசாலைகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விநியோகம் இடம்பெறுவதை சுட்டிக்காட்டியிருந்தது. இது, யாழ் மாவட்டத்துடன் நின்றுவிடவில்லை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனைத்து பாகங்களிலும் இடம்பெறுகின்றன.  (நாடு பூராவும் இந்தப் பிரச்சினை குறிப்பிட்டளவு இருப்பது உண்மை.)

கற்றறிந்தவர்கள், சமூக ஒழுக்கத்தில் முதன்மையானவர்கள் என்று கூறப்பட்ட வடக்கு, கிழக்கு சமூகத்தை நோக்கி இன்றைக்கு ஏவப்படும் போதைப்பொருள் உள்ளிட்ட ஏவல்களுக்குள் அகப்பட்டு ஈசல்கள் மாதிரி தங்களுடைய வாழ்க்கையை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அது, மெல்ல மெல்ல சமூகத்துக்கான பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றது.

மதுபாவனை, சட்டவிரோதச் செயற்பாடுகள் வடக்கு, கிழக்கில் முன்னரும் இடம்பெற்று வந்திருக்கின்றன. ஆனால், அவற்றின் விகிதம் பெருமளவு குறைவு. இன்றைக்கு, மாணவர்கள் போதை தலைக்கேறிய நிலையில் பாடசாலைக்கு வருகின்றார்கள் என்று ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டும் அளவுக்கான அவலநிலை உருவாகியிருக்கின்றது.

எம்முடைய கல்வியறிவு, பொருளாதாரம், சமூக ஒழுக்கம், மனிதம் மீதான நம்பிக்கை, சட்ட நெறிமுறைகள் மீதான மதிப்பு என்பன தொடர்ந்தும் காப்பாற்றப்பட வேண்டிய தேவையுள்ளது. அதுவே, இலங்கையில் தொடர் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வரும் தமிழ் மக்களை தக்க வைப்பதற்கு உதவியாக இருக்கும். தொடர்ச்சியான அழிவும், இழப்பும் சமூகமொன்றை முற்றுமுழுதாக அனாதையாக்கி விடக்கூடியது.

போதைப் பொருள் மற்றும் மதுப் பொருட்களின் பாவனை அதிகரிப்பும், சமூக ஒழுக்க மீறல்களும் வடக்கு, கிழக்கில் நாளாந்தம் குற்றங்கள் பெருகி வருவதைக் காட்டுகின்றது. புங்குதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட பின்னணியில் இவையும் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. அந்த கொடூர குற்றத்தோடு சம்பந்தப்பட்டுள்ளவர்களின் அதிகமானோர் 20வயதுகளில் இருக்கும் இளைஞர்கள். அவர்கள் போதை தலைக்கேறிய நிலையில் குற்றச்செயலில் ஈடுபட்டிருக்கின்றார்கள். (அது மாத்திரம் காரணம் என்பதல்ல)

கட்டுக்கோப்பற்ற வாழ்வு என்பது தனி மனித விரோதங்களை மாத்திரமல்ல, சமூக விரோதத்தையும் ஆற்ற வைத்து விடுகின்றன. அதிலிருந்து சமூகத்தை மீட்க வேண்டிய அவசர தேவை தற்போது ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு, கல்வியாளர்கள், சட்டவாளர்கள், மனநல ஆலோசகர்கள், மதகுருமார்கள்  உள்ளிட்ட சமூக முன்னேற்றத்தைக் கருத்தில் கொள்ளும் அனைத்துப் தரப்பினரும் சிறந்த திட்டங்களை முன்வைத்து நீண்ட கால அடிப்படையில் பணியாற்ற வேண்டும். அதுதான், போதை அரக்கனை விரட்டுவதற்கும், சமூகத்தின் ஆணி வேர் அறுபடாமல் காப்பாற்றுவதற்கும் அவசியமானதாக இருக்கும்!

No comments:

Post a Comment