Thursday 2 July 2015

நேருவை முஸ்லிமாக காட்ட மத்திய அரசு முயற்சி?

புதுடில்லி: நாட்டின் முதல் பிரதமர் நேருவை, முஸ்லிம் என காட்டும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டது என்றும், அந்த முயற்சியை, 'விக்கிபீடியா' இணையதளத்தின் ஆசிரியர்கள் முறியடித்தனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

விக்கிபீடியா இணைய தளத்தில், எந்த தகவல் குறித்தும் விளக்கமான தகவல்களை பெற முடியும். அதுபோல, அதில் இடம்பெற்றுள்ள தகவல்களை, யார் வேண்டுமானாலும் மாற்றியமைக்க முடியும். விக்கிபீடியா இணைய தளத்தில், பண்டித ஜவகர்லால் நேரு பற்றிய தகவல் இடம் பெற்றுள்ளது. அதில், நேரு பற்றிய சில தகவல்கள், கடந்த மாதம், 26ல், மத்திய அரசின் கம்ப்யூட்டர் முகவரி ஒன்றிலிருந்து மாற்றப்பட்டுள்ளன. அதை அறிந்த, விக்கிபீடியா இணையதள ஆசிரியர்கள், மாற்றியமைக்கப்பட்ட தகவல்களை நீக்கி, நேரு குறித்து இதற்கு முன் என்ன தகவல் இருந்ததோ, அதையே மீண்டும் பராமரித்துள்ளனர்.

மாற்றப்பட்டது என்ன?

நேருவின் தந்தை பெயர், மோதிலால் நேரு. அவரின் தந்தை பெயர், கங்காதர் என, விக்கிபீடியாவில் இருந்தது. அதை, கங்காதரின் உண்மையான பெயர், கைசுதீன் காசி; அவர் ஒரு முஸ்லிம். பிரிட்டிஷ் ஆட்சி யாளர்களின் கெடுபிடிகளுக்கு பயந்து, தன் பெயரை அவர், கங்காதர் என மாற்றிக் கொண்டார் என, திருத்தப்பட்டது. இதன் மூலம், நேரு இந்து மதத்தைச் சேர்ந்தவர் இல்லை; முஸ்லிம் என, மாற்ற முயற்சி மேற்கொண்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

உண்மை தெரிஞ்சாகணும்!

நேருவையும், அவரின் தந்தையையும், முஸ்லிமாக காட்ட முயற்சி நடந்துள்ளது. நேரு முஸ்லிமா, இந்துவா என்பது பிரச்னையில்லை. அவர் இந்தியன் என்பது மட்டும் உறுதி. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, என்.ஐ.சி., எனப்படும், தேசிய தகவல் தொகுப்பக ஊழியர்கள் தான், இந்த முறைகேட்டை செய்துள்ளனர். எனினும், இதுகுறித்து அரசு நியாயமான விசாரணை நடத்த வேண்டும். பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ரன்தீப் சுர்ஜவாலா
காங்., செய்தித் தொடர்பாளர்

No comments:

Post a Comment