Sunday 12 July 2015

நல்லிணக்கம் சிறிலங்காவின் போர்க்காயங்களை குணப்படுத்துமா?

25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக கடந்த மாதம் தனது சொந்தக் காணிக்குச் சென்ற பரமேஸ்வரி உதயகுமாரன் மிகவும் அதிர்ச்சியுற்றார். பரமேஸ்வரியின் சொந்த இடம் பளை வீமன்காமம். இவரது வீட்டில் எவ்வித தளபாடங்களும் காணப்படவில்லை.
ஓடுகள் அனைத்தும் சேதமடைந்து விட்டன. அத்துடன் கதவுகளும் காணப்படவில்லை. 1990 நவம்பரில் பரமேஸ்வரி தனது வீட்டை விட்டு வேறிடத்திற்கு குடிபெயர வேண்டியநிலை ஏற்பட்டது. இவர் மட்டுமல்ல இவர் போன்ற பல ஆயிரக்கணக்கான மக்கள் போர்ச் சூழல் காரணமாக தமது சொந்த வீடுகளை விட்டு இடம்பெயர வேண்டியேற்பட்டது.

சிறிலங்கா இராணுவத்தினரின் போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் போன்ற மும்முனைத் தாக்குதல்களிலிருந்தும் தமது உயிரைக் காப்பாற்றுவதற்காக மக்கள் தமது கைகளுக்கு அகப்பட்ட பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறினர். இதற்கு பரமேஸ்வரியின் குடும்பம் மட்டும் விதிவிலக்கல்ல.
இதன் பின்னர் பரமேஸ்வரியின் சொந்த ஊர் சிறிலங்கா இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயம் எனப் பெயரிடப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஏப்ரல் மாதமே மீண்டும் இந்த மக்கள் தமது சொந்த இடத்திற்குச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. 80,000 வரையான மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்ட உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த பின்னரே தற்போது உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
‘நான் எனது வீட்டை 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது பார்க்கும் போது என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனது வீட்டைச் சூழப் பற்றைகள் வளர்ந்து விட்டன. காட்டைப் போல் மாறிவிட்டது’ என பரமேஸ்வரி கூறுகிறார்.
சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனவரியில் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட போது, நாட்டின் வடக்கு கிழக்கில் மீளிணக்கப்பாடு ஏற்படுத்தப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தார். மைத்திரியின் முன்னுரிமைகளில் வடக்கு கிழக்கில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதும் ஒன்றாகும்.
போரின் போது சிதைக்கப்பட்ட, அழிக்கப்பட்ட மற்றும் சேதமாக்கப்பட்ட கட்டடங்கள் மற்றும் வீதிகள் மீளவும் நிர்மாணிக்கப்பட்டாலும் கூட, போரின் தாக்கத்தால் உடைந்துள்ள மனங்களையும் இதயங்களையும் மீளவும் ஒட்டவைப்பதற்கான எவ்வித மீளிணக்கப்பாடும் மேற்கொள்ளப்படவில்லை என கடந்த மாதம் சிறிலங்கா இராணுவ வீரர்களின் சேவையைப் பாராட்டி இடம்பெற்ற நிகழ்வொன்றில் அதிபர் சிறிசேன தெரிவித்திருந்தார்.
சிறிலங்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட மற்றும் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் மற்றும் சொத்துக்கள் தற்போது சிறிசேன அரசாங்கத்தால் மெது மெதுவாக உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுகின்றன. இருப்பினும் இன்னமும் 13,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்தோர் முகாங்களில் அல்லது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாக தரவுகள் சுட்டிநிற்கின்றன.
சிறிலங்கா இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரப்பட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை மேற்கொள்வேன் என சிறிசேன உறுதியளித்திருந்தார்.
சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் தொடர்பான விசாரணை அறிக்கை ஒன்றை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைப்பதற்கான காலஅவகாசத்தை செப்ரெம்பர் மாதம் வரை தந்துதவுமாறு சிறிசேன கோரியிருந்தார். இதற்கு அமெரிக்காவும் தனது ஆதரவை வழங்கியிருந்தது.
பரமேஸ்வரி போன்று கணவன்மாரை இழந்த பெண்களுக்கு உதவுவதற்கென சிறிசேன அரசாங்கம் வடக்கில் அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளது. ஆனால் இவ்வாறான முயற்சிகள் மட்டும் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்துவதற்குப் போதாது என தமிழ்த் தலைவர்கள் வாதிடுகின்றனர்.
சிறிசேனவின் நகர்வு வரவேற்கத்தக்கது எனவும் ஆனாலும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழர் தாயகப் பிரதேசங்களிலிருந்து இராணுவ வீரர்களை அகற்றுதல் போன்ற முக்கிய பிரச்சினைகளை சிறிசேன அரசாங்கம் முன்னெடுக்கத் தவறியுள்ளதாகவும் தமிழ்த் தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
‘இவ்வாறான பிரச்சினைகள் முன்னுரிமைப்படுத்தப்படாவிட்டால், மீளிணக்கப்பாட்டில் எவ்வித உண்மையான முன்னேற்றமும் ஏற்படாது’ என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள வரலாற்று முக்கியத்துவம் மிக்க கோட்டையின் சுவர்கள் தற்போது செப்பனிடப்பட்டுள்ளன. ஆனால் போரின் போது குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட நீர்த்தாங்கி இன்னமும் அகற்றப்படவில்லை. தென்னிலங்கையிலிருந்து சிறிலங்காவின் வடபகுதி நோக்கி ‘போர்ச் சுற்றுலாப் பயணிகள்’ வருகை தருகின்றனர். இவர்கள் பேருந்துகளில் பெருமளவில் வடக்கைப் பார்வையிடச் செல்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் போர்க் காலத்தில் அழிவுற்றிருந்த தொடருந்து நிலையம் தற்போது மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது. இது போன்ற பல்வேறு இடங்கள் போர்ச் சுற்றுலாப் பயணிகளால் பார்வையிடப்படுகின்றன. 1990ல் தனது பயணிகள் சேவையை நிறுத்தியிருந்த யாழ்தேவி மீண்டும் தற்போது தனது பணியை ஆரம்பித்துள்ளது. வடக்கு கிழக்கின் மீள்கட்டுமாணங்களுக்காக முன்னால் அதிபர் மகிந்த ராஜபக்ச பல மில்லியன்களை செலவிட்டுள்ளார்.
அத்துடன் 2013ல் முதற் தடவையாக வடக்கு மாகாணசபை தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவதற்கான அனுமதியையும் மகிந்த வழங்கியிருந்தார். இவ்வாறான பல மீள்கட்டுமாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மக்களின் மனங்களிலிருக்கும் ஆழமான வடுக்களைக் களைவதற்கு ராஜபக்ச எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும் பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், இறுதிக்கட்டப் போரின் போது 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் ஐ.நா வல்லுனர் குழு 2011ல் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.
பாதுகாப்பு வலயங்கள், வைத்தியசாலைகள், வழங்கல் பாதைகள் போன்ற முக்கிய பல இடங்களைக் குறிவைத்து சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டதாக வல்லுனர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர்களை படையில் இணைத்தமை, பொது மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியமை போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதை வல்லுனர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைக்கவுள்ளதாக சிறிசேன அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தது. இதற்கான ‘தொழினுட்ப உதவிகளை’ ஐ.நா விடமிருந்து பெற்றுக்கொள்வதாகவும் சிறிசேன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சிறுபான்மைத் தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை எனவும் இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்களின் அரச சார் செயற்பாடுகளே இதற்குக் காரணம் எனவும் விரிவுரையாளர் குருபரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளையில், போரின் போது காணாமற்போன பல ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. போரின் போது கணவன்மாரை இழந்த பெண்களின் நலன்களில் அக்கறை செலுத்த சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கிறது. இதற்கான வழிவகைகள் ஆராயப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் மட்டும் 31,000 வரையான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளதாக பெண்கள் விவகாரத்திற்கான யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் நவரட்ணம் உதயாணி தெரிவித்துள்ளார். இவர்களில் பெரும்பாலானவர்கள் பொருத்தமான தொழில் வாய்ப்பைப் பெற முடியாது தவிக்கின்றனர். இவர்கள் மீள்திருமணம் செய்வதற்கு தமிழ்க் கலாசாரம் தடையாகக் காணப்படுகிறது.
யாழ்ப்பாணத்தின் புறநகரில் சிறிய வீடொன்றில் வாழும் 57 வயதான சிவபாலு லேவதியம்மாவின் கணவர் போரின் போது கொல்லப்பட்டார். இதனால் இவர் தனது பிள்ளைகளை வளர்ப்பதற்கு பெரிதும் சிரமப்படுகிறார். போரின் போது இவரது கணவர் கொல்லப்பட்ட பின்னர், குடும்பத்தைப் பராமரிப்பதற்காக மீன்களைக் கருவாடாக்கி விற்கும் பணியில் இவர் ஈடுபடுகிறார்.
இவரது மகனான சிவநேசன் 2009ல் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட போதும் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை என லேவதியம்மா கூறுகிறார். ‘எனது மகன் என்னிடம் வருவான் என நான் கனவு கண்டேன். அவன் என்னிடம் வந்து என்னைக் கட்டியணைத்து சாப்பாடு தருமாறு கேட்பதாக நான் கனவு கண்டேன். இந்தக் கனவை நான் மாதத்தில் இரண்டு தடவைகளாவது காண்கிறேன்’ என லேவதியம்மா தெரிவித்தார்.
இதுவரையில் சிறிலங்கா அரசாங்கத்தால் 1000 ஏக்கர் நிலங்கள் மட்டுமே மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் சிறிலங்கா இராணுவத்தால் 10,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் றஞ்சினி நடராஜபிள்ளை தெரிவித்தார். ஆனாலும் இதை விட அதிகளவிலான காணி சிறிலங்கா இராணுவத்தினர் வசம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலங்களில் சிறிலங்காவின் முன்னாள் அரசாங்கம் புதிய முகாங்களை, கடற்கரையோர விடுதிகள் எனப் பல்வேறு களியாட்ட சார் கட்டடங்களை அமைத்திருந்தது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் பரமேஸ்வரி மற்றும் அவரது அயலவர்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களைச் சென்று பார்வையிட அனுமதிக்கப்பட்டதானது இவர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனினும் காடுகளால் சூழப்பட்ட தமது வீடுகள் மற்றும் காணிகளை சுத்தப்படுத்துவதற்கு இவர்கள் பல மைல் தூரத்திலிருந்து நாள்தோறும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தால் 280 டொலர்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் தாம் இதுவரையில் 100 டொலர்கள் மட்டுமே பெற்றுள்ளதாகவும் நிலங்களைத் துப்பரவு செய்வதற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது இராணுவத்தினரால் கையளிக்கப்பட்ட இடங்களில் ஆங்காங்கே மிதிவெடிகள் தொடர்பான எச்சரிக்கைப் பதாகைகள் காணப்படுகின்றன. ஏதாவது வெடிபொருட்களைக் கண்டால் உடனடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டுள்ளது.
தனது அயலவர்களும் விரைவில் சொந்த இடத்தில் குடியேற வருவார்கள் என பரமேஸ்வரி நம்புகிறார். தான் இப்போது மகிழ்வாக இருப்பதாகவும் நான் எனது சொந்த வீட்டிற்குத் திரும்பி வந்தமை தன்னை உற்சாகப்படுத்தியுள்ளதாகவும் பரமேஸ்வரி தெரிவித்தார்.
ஒவ்வொரு நாளும் பூசகர் ஒருவர் பரமேஸ்வரியின் சொந்த ஊரிலுள்ள சிறிய கோயிலில் பூசை செய்வதற்கு வருகை தருகிறார். இது ஒரு பிள்ளையார் கோயிலாகும். இக்கோயிலில் பூசை செய்யும் பூசகரான கணேசமூர்த்தி சர்மாவிற்குத் தற்போது 70 வயது. இவர் முதன் முதலாக ஏப்ரல் 21 அன்று இந்த இடத்தைப் பார்வையிடச் சென்றார். ஆனால் கோயிலிருந்த காணி பற்றையால் சூழப்பட்டிருந்தது.
தன்னால் இதனை முதலில் அடையாளங் காணமுடியவில்லை என இவர் தெரிவித்தார். இவரது கோயிற் காணியில் 350 ஆண்டுகால ஆலமரம் ஒன்று இப்போதும் நிற்பதைக் கண்டபோது பூசகர் மிகவும் மகிழ்ச்சியும் மனநிம்மதியும் அடைந்தார். தற்போது இங்கு பூசைகள் இடம்பெறுகின்றன. மக்கள் பூசகரிடம் ஆசிர்வாதம் பெறுகின்றனர்.
தமது சமூகத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான முதலாவது நகர்வாக மக்கள் இங்கு மீளவும் வருகை தருகின்றனர். நீர் மற்றும் மின்சார வசதியை ஏற்படுத்தித் தருவதாக வாக்குறுதி அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ளதால் ‘மக்கள் நம்பிக்கையுடன் உள்ளதாக’ பூசகர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment