Sunday 2 August 2015

ஐ.நா.வின் அயோக்கியத்தனம்

எந்த சமூகத்தில் அமைதியும் சம உரிமையும் தனி மனித சுதந்திரமும் இருக்கிறதோ, அந்தச் சமூகத்தில் பிறக்கிற குழந்தைகள் உண்மையிலேயே கொடுத்துவைத்தவை. அந்தக் குழந்தைகள் வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்கின்றன, ஆராதிக்கின்றன.


எந்தச் சமூகத்துக்கு சுதந்திரம் இல்லையோ - எந்த சமூகத்துக்கு சம உரிமை மறுக்கப்படுகிறதோ - அந்தச் சமூகத்தில் பிறக்கிற குழந்தைகள் அமைதியையோ ஆனந்தத்தையோ அனுபவிக்க முடிவதில்லை.
தணல் மீது இருக்கும் பால்மாதிரி கொதிநிலை குறையாமலேயே இருக்க வேண்டியிருக்கிறது. இன்றோ நாளையோ நாளை மறுநாளோ - என்றோ ஒருநாள் தம் இனத்தின் சுதந்திரத்துக்காகப் போராட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.
ஈழத்தின் இளம் வேங்கைகள் விஷயத்திலும் இதுதான் நடந்தது. அடிமையாகப் பிறப்பவர்கள் அடிமையாகவேதான் இறக்க வேண்டும் - என்று சட்டவிதி ஏதாவது இருக்கிறதா என்ன!
சிங்கள இனத்தின் மேலாதிக்க வெறியும், அதைத் தட்டிக் கேட்ட தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதும் தான், தமிழ் இளைஞர்களை உஷ்ணப்படுத்தியது.
திருப்பித்தாக்க வேண்டும் - என்கிற எண்ணம் சிறிதுசிறிதாகத்தான் தலை தூக்கியது. இதை, சிங்களத் தலைவர்கள் உணர்ந்து கொள்ளவேயில்லை. திருப்பித் திருப்பித் தாக்கினால் தான் தமிழர்கள் அடிமைகளாகவே வீழ்ந்து கிடப்பார்கள் என்று தப்புக்கணக்குப் போட்டார்கள்.
தமிழர்களை எப்படியாவது நசுக்கி விட வேண்டும் - என்கிற சிங்கள இனவெறி இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அந்த வெறிக்கு, ஏறக்குறைய எழுபது வயது. இந்த வரலாற்றை மறைக்க முயல்வது அயோக்கியத்தனம்.
விடுதலைப்புலிகளைப் பார்த்து பயந்துதான் இலங்கை எதிர் நடவடிக்கையில் இறங்கியது - என்று சொல்வது, கடுகுக்குள்ளே கடப்பாரையை ஒளித்துவைக்கிற முயற்சி. உண்மையில், புலிகளைப் பார்த்து பயப்படுவதற்கு முன்பே, தமிழர்களைப் பார்த்து பயந்தது பௌத்தமும் சிங்களமும்! அந்த தேவையற்ற அச்சம்தான், பிரச்சினையின் ஊற்றுக்கண்.
சிங்கள மக்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, ஈழத் தமிழர்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவானவர்கள். இவர்களைப் பார்த்து, இலங்கைத் தீவின் பெரும்பான்மையினரான பௌத்த சிங்களர்கள் ஏன் பயப்பட்டார்கள் - என்பது விரிவாகப் பேச வேண்டிய தனிக் கதை.
'எங்கே காலை நீட்டுவேன், எங்கே கையை நீட்டுவேன்' என்றெல்லாம் கேட்ட துட்டகைமுனுவிலிருந்தே தொடங்கிவிடுகிறது அது.
சிங்கள இனம் தானாகவே பயந்ததா, அல்லது தங்களது அரசியல் ஆதாயத்துக்காக தமிழர்கள் குறித்த அச்சத்தை அரசியல்வாதிகள் செயற்கையாக ஏற்படுத்தினார்களா என்கிற கேள்வியெல்லாம் பிறகு!
புலிகளைப் பார்த்து பயப்படுவதற்கு முன்பே, தமிழர்களைப் பார்த்து சிங்கள மக்கள் அஞ்சி நடுங்கினார்களா இல்லையா? இது, சுற்றி வளைக்காத நேர்மையான கேள்வி.
தனிச் சிங்களச் சட்டம், கட்டாய பௌத்தச் சின்னம், தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் வேறு வேறு அளவுகோல் - என்பதெல்லாம் சிங்கள மக்களின் தேவையற்ற அச்சத்தின் எச்சங்கள். முள்ளிவாய்க்கால் அந்த அச்சத்தின் உச்சம். இன்றைக்கு தமிழர் தாய்மண்ணின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிற்கிற ராணுவம்... அந்த அச்சத்தின் மிச்சம்.
வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளுக்கு நீதி கேட்டால், 'சிங்கள இனத்தைத் தேவையில்லாமல் உசுப்பி விடாதீர்கள்' என்கிற போதனையோடு நம் குறுக்கே வந்து நின்றார்கள் சமந்தகர்கள்.
கடந்த ஜனவரி எட்டாம் தேதி இலங்கையில் நடந்த ஆட்சிமாற்றம், அத்தனையையும் மாற்றிவிடும் - என்பது அந்த சாமர்த்தியசாலிகளின் வாதமாக இருந்தது. 'மைத்திரி ஆட்சி நல்லாட்சி' என்கிற கோஷ்டி கானத்தில் இணைந்து கொள்ளாதவர்கள் மீது கழுதைப்புலி போல பாய்ந்தார்கள். ராஜதந்திரம் தெரியாதவர்கள் - என்றார்கள்.
இப்படியெல்லாம் கரித்துக் கொட்டியவர்கள் எவ்வளவு ராஜதந்திரிகள் என்பதையும், மைத்திரி ஆட்சியின் லட்சணத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறது, அண்மையில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று.
தமிழின அழிப்புக்காக நீதி கேட்பதில் முன்னணியில் இருக்கிற கறுப்பினச் சகோதரி யாஸ்மின் சூகா தலைமையிலான சர்வதேச அமைப்பின் (The International Truth and Justice Project - Sri Lanka) ஆய்வு, மகிந்த ராஜபக்சே ஆட்சிக்கும் மைத்திரிபாலா ஆட்சிக்கும் அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை, ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தியிருக்கிறது.
(2009ல் நாற்பதாயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்த ஐ.நா. குழுவில் உறுப்பினராக இருந்தாரே, அதே யாஸ்மின்.)
'மைத்திரியின் நல்லாட்சி' என்கிற முழக்கத்தை முன்வைத்து, இனப்படுகொலைக்கு நீதிகேட்பவர்களின் முயற்சிகளை முடக்கப்பார்த்தவர்களுக்கு யாஸ்மின் சூகா அமைப்பின் அறிக்கை, அதிர்ச்சி வைத்தியமாக இருந்திருக்கும்.
யாஸ்மின் குழுவின் அறிக்கைக்கு 'இன்னும் முடிவடையாத யுத்தம்' என்று தலைப்பு. அது, மிக மிகப் பொருத்தமாக இருக்கிறது. 2009 முதல் இன்றுவரை இலங்கையில் தொடரும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் குறித்த விரிவான ஆய்வாக அது இருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் மட்டுமின்றி பாதுகாப்புப் படையினர் கொடுத்திருக்கும் ரகசியத் தகவல்களும் அதில் இடம் பெற்றுள்ளன.
இலங்கையில் இருக்கும் 40 சித்திரவதைக் கூடங்களைப் பட்டியலிட்டிருக்கிறது அந்த அறிக்கை. திருகோணமலை கடற்படை தளத்தை ஒட்டியுள்ள அடர்ந்த காடுகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத தடுப்பு முகாமின் இருப்பிடத்தை ஒரு பறவைப் பார்வையில் காட்டும் வரைபடமும் அந்த அறிக்கைக்கு இடையே இருக்கிறது.
உலகின் நம்பர் ஒன் கொலைக்களம் - என்று கருதப்படும் வவுனியாவின் 'ஜோசாப்' (சுருக்கப் பெயர்) முகாம் குறித்தும் அறிக்கை பேசுகிறது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 40 சித்திரவதைக் கூடங்களில், பெரும்பாலானவை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவை. மற்றவை காவல்துறை கட்டுப்பாட்டிலும், அரசின் புனர்வாழ்வு முகாம் என்கிற பெயரிலும் இயங்குபவை.
40 முகாம்களை அம்பலப்படுத்தியிருப்பதுடன் நில்லாமல், சித்திரவதை மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் 60 அதிகாரிகளின் பெயர்களையும் வெளியிட்டிருக்கிறது யாஸ்மின் குழு அறிக்கை.
'எல்லாப் பெயர்களையும் நாங்கள் வெளியிட்டுவிடவில்லை. தகவல் தந்தவர்கள் மற்றும் சாட்சியமளித்தவர்களுக்கு ஆபத்தும் ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வே அதற்குக் காரணம்' என்கிறார், இந்தக் குழுவின் செய்தித் தொடர்பாளரும் பிரிட்டிஷ் பத்திரிகையாளருமான சகோதரி பிரான்சேஸ் ஹாரிசன். (பிணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன - என்று கண்ணீரால் எழுதினாரே - அதே சகோதரி).
மகிந்த காலத்தில் நடந்த சித்திரவதைகள் மட்டுமின்றி, நல்லாட்சி நாயகர் மைத்திரியின் ஆட்சியில் தொடரும் சித்திரவதை மற்றும் பாலியல் கொடுமைகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறது இந்த அறிக்கை.
சுமார் 180 கொடுமையான நிகழ்வுகளில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களின் மனத்தை உருக்கும் வாக்குமூலங்கள் அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன.
அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். என்ன நடந்தது - என்று பொத்தாம் பொதுவாகக் குறிப்பிடாமல், எந்த முகாமில் நடந்தது, எந்த அதிகாரியின் கைங்கரியம் - என்பதையெல்லாம் தெரிவிக்கிறது அறிக்கை. யாஸ்மின் குழுவுக்குத் தெரிகிற இது பெத்தப் பெரிய அமைப்பான ஐ.நா.வுக்குத் தெரியாதா என்ன?
வாஷிங்டனின் பிரபல செய்தியாளரான டெய்லர் டிப்பட், மறுநாளே 'தி டிப்ளமேட்' பத்திரிகையில், "மிகச் சரியான நேரத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது" என்று எழுதினார்.
 'தமிழர்கள் சித்திரவதை செய்யப்படும் விதம், பாலியல் வன்கொடுமைகள் மூலம் தமிழ்ப் பெண்கள் சீரழிக்கப்படும் விதம் - ஆகியவற்றை விவரிக்கும் பகுதிகளைப் படிக்கவே கஷ்டமாக இருக்கிறது.
இலங்கைப் பாதுகாப்புப் படைகளின் நயவஞ்சக சுபாவம் மாறவே இல்லை என்பது இந்த அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. சிறீ வந்தபிறகும் ஸ்ரீலங்கா மாறவில்லை' என்று வேதனையுடன் எழுதியிருக்கிறார், டிப்பட்.
'இலங்கைத் தீவில் சிங்கள மேலாதிக்கம், பல தலைமுறைகளாக தமிழர்களை நசுக்கி வருகிறது. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டதாகச் சொல்லப்பட்டாலும், பாதிக்கப்பட்ட தமிழர்களின் உடனடித் தேவைகள் நிறைவேற்றப்படவேயில்லை.
நிலைமையை மேலும் மோசமாக்கும் விதத்தில், நுணுக்கமான (மறைமுக) யுத்தம் ஒன்று தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மீதான சித்திரவதை, பாலியல் வன்முறை,
கடுமையான கண்காணிப்பு, ராணுவ மயமாக்கல், பாரபட்சம், மிரட்டல் - ஆகியவை தமிழ்ச் சமூகத்தையும் கலாச்சாரத்தையும் ஆபத்திலேயே வைத்திருக்கின்றன' என்கிறார் டிப்பட்.
வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் இந்த அறிக்கை தொடர்பான வாசகர்களின் வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
'இந்த அறிக்கையை இருட்டடிப்பு செய்துவிட நாம் அனுமதிக்கக் கூடாது. செப்டம்பரில் நடக்க இருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக் கூட்டமும், தமிழின அழிப்புக்கு நீதி தர மறுத்துவிடு என்கிற அச்சம் எழுந்துள்ள நிலையில், அந்தப் பேரவைக்கு இந்த அறிக்கை குறித்து அத்தனைப் பேரும் தெரியப்படுத்துவோம்' என்கிறார் ஒரு வாசகர்.
'ஐ.நா.வை மட்டுமே நம்பி இவ்வளவு நாட்கள் ஏமாந்திருக்கிறோம்' என்று வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார், சகோதரி உஷா ஸ்கந்தராஜா. தமிழினத்தின் துயர வரலாற்றுக்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும் - என்கிற வைராக்கியத்துடன் சர்வதேச ஊடகங்களில் தொடர்ந்து எழுதி வருபவர் அவர்.
"ஐ.நா.செயலர் நாயகமே! உங்களுக்கு சித்திரவதை முகாம்கள் பற்றி தெரியும்..... கற்பழிப்புக் கொடுமை தொடர்வது தெரியும்.... பாலியல் வன்முறைகள் நிகழ்வது தெரியும்.... இதையெல்லாம் தடுக்க நீங்கள் ஒரு துரும்பைக் கூட தூக்கிவைக்கவில்லை.
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றியும், 'இனப்படுகொலை' பற்றியும் அறிந்தே இருக்கிறீர்கள். ஆனால், அதைப்பற்றி கவலைப்பட்டதில்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்துவிடாதபடி பார்த்துக் கொள்வதிலேயே அக்கறை காட்டுகிறீர்கள். ஐ.நா.மீதான நம்பிக்கையை நாங்கள் முழுமையாக இழந்துவிட்டோம்" - என்கிற சகோதரி உஷாவின் மனக்குமுறல், நம் ஒவ்வொருவரின் மனக் குமுறல்.
பின்னூட்டம் ஒன்றில், வவுனியாவின் ஜோசாப் சித்திரவதை முகாமில் என்ன நடக்கிறது என்பதை எழுதியிருக்கும் ஒரு வாசகரின் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
அப்பாவித் தமிழர்களும் போராளிகளும் வாகனங்களின் டயர்களுக்கு இடையில் உயிருடன் செருகப்பட்டு எரித்துக் கொல்லப்படுவது அந்த முகாமில் வழக்கமாக நடைபெறுவதாகக் குறிப்பிட்டிருக்கும் அவர், குவித்துவைக்கப்பட்டிருக்கும் உமி நெருப்பில் போட்டு சாம்பலாக்கிவிடும் கொடுமையும் நிகழ்கிறது என்று எழுதியிருக்கிறார். படிக்கும்போதே உடல் பதறுகிறது.
இவ்வளவுக்குப் பிறகும் தமிழினம் அமைதி காத்தால்,
'விதியே விதியே
என் செய நினைத்திட்டாய்
என் தமிழ்ச் சாதியை....'
என்கிற பாரதியின் குமுறலை நமக்கு நினைவுபடுத்திய நெருப்புப் பிழம்பு முத்துக்குமார் நம்மை மன்னிக்கவே மாட்டான்.
ஐந்து மாதங்களுக்கு முன் மறைந்த எங்கள் இயக்குநர் ஆர்.சி.சக்தி அவர்கள் வேதனையோடு குறிப்பிட்டதுதான் நினைவுக்கு வருகிறது இப்போது! 'தமிழ்நாடும் இந்தியாவும் தான் தமிழர்களைக் கைவிட்டது என்றால், ஐ.நா.வுமா?'
இலங்கையில் ஆட்சி மாற்றம் வந்துவிட்டதால் அதற்கு அவகாசம் கொடுக்க வேண்டும் - என்று வாய்தா கேட்டது பாரதமும் அமெரிக்காவும்தான்!
ஆட்சி மாற்றத்தால் தமிழர் நிலையில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது யாஸ்மின் குழு அறிக்கை. வாய்தா வாங்கிக் கொடுத்தவர்கள் இதற்கு பதில் சொல்வார்கள் என்று நினைக்கிறீர்களா!
இவ்வளவுக்குப் பிறகும், செப்டம்பர் மாத மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்திலும், தமிழர்கள் தலையில் மசாலாவே அரைக்கலாம் என்று ஐ.நா. நினைத்தால், அந்த நேர்மையற்ற அமைப்பை நேரடியாகவே எதிர்த்தாக வேண்டும் நாம். சொந்த இனத்தில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் பேருக்கு நியாயம் கேட்க இயலாத கையாலாகாத இனம் தமிழினம் - என்கிற வரலாற்றுக் களங்கம் நம்மீது படிந்துவிடக்கூடாது.
சுதந்திரமும், சம உரிமையும், நீதியும் மறுக்கப்பட்ட ஓர் இனத்தில் பிறக்க நேர்கிற அவலத்திலிருந்து நமது நாளைய தலைமுறைக் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டுமென்றால், இன்றே இப்போதே நாம் போராடியாக வேண்டும்.
இல்லையேல், அந்தக் குழந்தைகளும் ஆயுதத்தைத்தான ஏந்த வேண்டியிருக்கும். குழந்தைப் போராளிகள் - என்கிற பெயரை அவர்களும் தாங்க வேண்டியிருக்கும். அதற்கு நாம் காரணமாக இருக்கலாமா?
எல்லா நாடுகளிலும் ஐ.நா. அலுவலகங்கள் இருக்கின்றன. 'அயோக்கிய ஐ.நா.வே, நீதி வழங்கு' என்று அந்த அலுவலகங்கள் முன் நின்று போராட நம்மால் முடியாதா என்ன? முருகதாசனின் சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவையைப் போல எழ வேண்டும் நாம்!
நமது எழுச்சி, அநீதிக்குத் துணைபோகும் ஐ.நா.வின் செவுளில் அறைவதாக இருக்க வேண்டும். அதை அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
மனித இனத்துக்கு நீதி கிடைக்க முட்டுக்கட்டையாக இருந்த ஓர் அமைப்பைத் திருத்திய இனம் - என்கிற பெருமையுடன் பிறக்கட்டும், நாளைய தலைமுறை தமிழ்க் குழந்தைகள்!
புகழேந்தி தங்கராஜ் 

No comments:

Post a Comment