Tuesday 11 August 2015

கூகுள் நிறுவனத் தலைவரானார் தமிழரான சுந்தர் பிச்சை!

தமிழரான சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார். 43 வயதான பிச்சை சென்னையைச் சேர்ந்தவர். சுந்தர்ராஜன் பிச்சை தான் இவரது முழுப் பெயர். சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்த இவர் பின்னர் ஐ.ஐ.டி. கரக்பூரில் பொறியியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் உள்ள வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர். 
 
 
 
கூகுள் நிறுவனத்தில் சேரும் முன் மெக்கென்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். தற்போது தலைமை துணைத்தலைவராக இருக்கும் இவர், ஆண்ட்ராய்ட், கூகுள் குரோம், கூகுள் என்ஜினியரிங், ஆப்ஸ், ஜிமெயில், கூகுள் டாக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளைக் கவனித்து வந்தவர். 
 
2008ம் ஆண்டு பிச்சை தலைமையிலான குழு தான் குரோம் பிரவுசரை உருவாக்கியது. இந் நிலையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த அதன் நிறுவனர் லாரி பேஜ் கவனித்து வந்த கூகுளின் சர்ச். கூகுள் பிளஸ், வர்த்தகம், விளம்பரம், கூகுள் மேப்ஸ், யூடியூப், ஆப்ஸ் மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளை இனி சுந்தர் பிச்சை நிர்வகிப்பார். 
 
இதில் கூகுள் சர்ச் மற்றும் கூகுள் ஆட்ஸ் எனப்படும் விளம்பரம் ஆகியவை தான் கூகுளின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதே நேரத்தில் கூகுளின் எதிர்கால அதி உயர் தொழில்நுட்பப் பிரிவுகளான காலிகோ, எக்ஸ் லேப்ஸ், உயிரியல் தொழில்நுட்பம் ஆகியவை கூகுளில் இருந்து பிரிக்கப்பட்டு ஆல்பபெட் என்ற பெயரில் தனி நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவை இனி லாரி பேஜ் கவனிப்பார். கூகுளின் முதலீட்டு நிறுவனமும் லாரி பேஜ் வசம் இருக்கும். அதே நேரத்தில் நிர்வாகரீதியில் ஆல்பபெட் நிறுவனத்தின் கீழ் கூகுள் இயங்கும். 
 
சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை ஜிஇசி நிறுவனத்தில் எலெக்ட்ரிகல் என்ஜினியராக பணியாற்றியவர். தாயார் ஸ்டெனோகிராபராக இருந்தவர். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பிச்சை தனது புத்திசாலித்தனத்தாலும் கடும் உழைப்பாலும் இந்த நிலையை அடைந்துள்ளார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப்பில் தான் படித்தார். செமிகன்டர்டர்கள் குறித்த கல்விப் பிரிவில் சேர இவருக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தாலும் ஸ்டான்போர்ட் செல்ல விமான டிக்கெட் பணம் இல்லாமல் தவித்துள்ளனர் இவரது பெற்றோர். ஸ்டான்போர்டிலேயே பிஎச்டி சேர திட்டமிட்ட இவர், அதைத் தவிர்த்துவிட்டு கலிபோர்னியாவில் அப்ளைட் மெட்டீரியல்ஸ் என்ற செமி கண்டக்டர் நிறுவனத்தில் சேர்ந்தார். 
 
இதையடுத்து வார்ட்டன் கல்வி மையத்தில் எம்பிஏ படித்துவிட்டு மெக்கின்சேயில் பணியில் சேர்ந்தார். 2004ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி இவர் கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் ஆகிய பிரவுசர்களில் கூகுள் சர்ச்சை எளிமையாக்க உதவும் டூல்பார் உருவாக்கும் ஒரு சிறிய அணியில் தான் பிச்சைக்கு பணி கிடைத்தது. 
 
ஆனால்,, நாம் ஏன் மற்ற பிரவுசர்கள் பின்னால் அலைய வேண்டும், நாமே ஒரு பிரவுசரை உருவாக்கலாமே என தனது அதிகாரிகளிடம் பிச்சை தெரிவித்தார். முதலில் இது தேவையில்லாத வேலை என கூகுள் நினைத்தது. ஆனால், அதன் பலன்களை எடுத்துச் சொல்லி பிரவுசரை உருவாக்கும் திட்டத்துக்கு வலு சேர்த்தார். இவர் மீது நம்பிக்கை வைத்த லாரி பேஜ், அந்த வேலையை பிச்சையிடமே தர, அடுத்த ஓராண்டில் கூகுள் குரோமை வெளியிட்டது பிச்சையின் டீம். இப்போது உலகில் 32 சதவீதம் பயன்படுத்தப்படும் பிரவுசர் குரோம் தான்! 
 
இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பிச்சையின் நியமனம் மூலம் உலகின் டாப் 2 நிறுவனங்களான மைக்ரோசாப்ட், கூகுள் ஆகியவற்றின் தலைமை செயல் அதிகாரிகளாக இந்தியர்கள் பொறுப்பில் உள்ளனர். முன்னதாக மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த சத்யா நடெல்லா நியமிக்கப்பட்டார். 
 
அதே போல பெப்சி நிறுவன தலைமை செயல் அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த இந்திரா நூயி, மாஸ்டர் கார்ட் தலைவராக இந்தியரான அஜித் பங்கா, சான்டிஸ்க் தலைவராக சஞ்சய் ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதே போல வாரன் பபெட்டின் பெர்க்ஸைர் ஹாத்வே முதலீட்டு நிறுவனத்தின் தலைவராக இந்தியரான அஜித் ஜெயின் நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment