Saturday 22 August 2015

பொறிக்குள் சர்வதேச விசாரணை! வாக்குகள் விடை கொடுக்குமா?

உள்ளகப் பொறிமுறையென்பது, சர்வதேச விசாரணையை இல்லாமற் செய்வதற்கான ஒரு பொறியே தவிர, தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கான பொறிமுறையல்ல என்று கருத்து மேலோங்கி வருகிற சூழலில், ஈழப்  போர் நான்கின் இறுதிக் கட்டங்களில் தமிழ் மக்களை பாதுகாக்க தவறிய ஐக்கிய நாடுகள் சபை, தமிழ் மக்களுக்கு நீதியைத் தன்னிலும் வழங்குமா என்ற கேள்வி வலுவடைந்துள்ளது.

இலங்கைத் தீவில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வெளிவரவிருந்த அறிக்கை செப்டெம்பர் மாதம் வரைக்கும் பிற்போடப்பட்டுள்ளது.
தற்போது, இந்த அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ம் வெளியிடப்படும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிவரவிருக்கும் அறிக்கை, சிறீலங்கா அரசாங்கத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தப் போவதில்லையென்றே மனித உரிமைகள் பேரவையின் நிகழ்வுகளோடு நெருங்கிச் செயற்படுபவர்களால் அறியமுடிகிறது.
முழுமையான சர்வதேச விசாரணையின் ஊடாக நீதியை எதிர்பார்த்திருந்த தமிழ் மக்களுக்கு, உள்ளகப் பொறிமுறையின் ஊடாக பதில் வழங்குவதற்கு ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியும், சிறீலங்கா அரசாங்கமும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தீர்மானம் எடுக்கும் தரப்புகளும் கூட்டாக முயற்சிப்பதாக அறியமுடிகிறது.

உள்ளகப் பொறிமுறையொன்றே உருவாக்கப்படப் போகிறதென எழுந்த சந்தேகங்களுக்கு, பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் 4 வெளியிட்ட கசிந்த ஐ.நா ஆவணமும், கொழும்பிலுள்ள ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி கடந்த யூன் மாதம் 4ம் திகதி கொழும்பில் ஆற்றிய உரையும் பதிலை வழங்கியுள்ளது எனலாம்.

ஐ.நாவும் சிறீலங்கா அரசாங்கமும் இணைந்து உள்ளகப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு இரகசிய திட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளன.
இதனை, ஐ.நாவின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் சிறீலங்காவின் பிரதமர் அலுவலகமும் வெளிநாட்டு அமைச்சும் நெறிப்படுத்தும் என சனல் 4 ன் செய்திகள் தெரிவித்திருந்தன.

ஐ.நாவின் இந்த நகர்வு, போர் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியிலிருந்து இன்று வரை சர்வதேச விசாரணைக்காக அர்ப்பணிப்போடு போராடுகிற மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கும், பெரும்பாலான தமிழ் மக்களுக்கும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் உண்டுபண்ணியுள்ளது.
சனல் 4ற்கு கருத்துரைத்த வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள், இதனை ஐ.நா தமிழ் மக்களுக்கு செய்த துரோகம் என்ற தொனியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும், கூட்டமைப்பின் முக்கியஸ்தரான சுமந்திரன் அவர்கள், சனல் 4 ஆவணத்தை புனையப்பட்ட ஆவணம் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தில் சனல் 4 ஆற்றிய பங்களிப்பு முக்கியத்துவம் மிக்கது. ஆதலாலேயே, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சனல் 4 வெளியிட்ட ஆதாரங்கள் பொய்யானவையென்றும் புனையப்பட்டவை என்றும் கூறி சனல் 4 ஐ மலினப்படுத்தும் செயற்பாடுகளிலும் தீவிரமாக இறங்கியது.

ஆனால், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு ஆதரவாக செயற்படுகின்ற சனல் 4 வெளியிட்ட ஆவணத்தை புனையப்பட்டதெனக் குறிப்பிட்டுள்ளமை பெரும்பாலான தமிழர்களுக்கு மட்டுமின்றி, தமிழர்கள் அல்லாத, தமிழ் மக்களுக்காக செயற்படும் மேற்குலகைச் சார்ந்தோருக்கும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளது.

சிறீலங்காவின் நீதித்துறையாலோ அல்லது உள்ளகப் பொறிமுறைகளாலோ, தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காதென்பது வரலாற்று வழிவந்த அனுபவங்கள் ஊடாக அறியப்பட்டுள்ளது.

அத்துடன், குற்றம் செய்த சிறீலங்கா ஆயுதப் படையினரை சிறீலங்கா நீதியின் முன் நிறுத்தாதென்பதற்கு மைத்திரிபால சிறிசேனவின் சனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனமும், சம்பிக்க ரணவக்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களான ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர உள்ளிட்டவர்கள் வெளியிட்டுவரும் அண்மைக்கால கருத்துக்களும் சாட்சி.

ஆறு வருடங்கள் கழிந்த பின்னரும், இனஅழிப்புப் போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரிய குற்றங்களை சிறீலங்கா ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை.

பிரஜைகளின் உரிமைகள் மீறலில் அரசின் பங்கும் பொறுப்பும் இருப்பதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வது பொறுப்புக்கூறலுக்கு தேவையானது.
சர்வதேச குற்றங்களை இழைத்தலில் அரசுக்கு தொடர்பிருக்குமாயின், நீதி தொடர்பான நிர்வாகத்தில் அரசானது எத்தகைய பங்கையும் வகிக்க முடியாது என 2011 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட நெறிகளின் படி, குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தனது வழக்கில் தான் நீதிபதியாக இருக்க முடியாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவின் ஆயுதப் படைகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களையும் மீறியுள்ளனர் என்ற குற்றச்சாட்டு சர்வதேசரீதியாக உள்ளது.

தண்டனைகளிலிருந்து தப்பித்திருப்பதற்கான சூழல் இன்றும் சிறீலங்காவில் தொடர்கிறது. அதேவேளை, இனஅழிப்புப் போரின் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளோ இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.

இவையாவும் வெற்றியாளர்களின் நீதியை (Victors Justice) எடுத்தியம்பும் செயற்ப்பாடுகள் போலுள்ளது. ‘போர்க்குற்றங்கள் தொடர்பான வரலாற்றை எடுத்துப் பார்த்தால், வெற்றியாளர்கள் தண்டிக்கப்பட்ட ஒரு சம்பவமும் இல்லை.

தீர்ப்பாயங்கள் தோல்வியடைந்தவர்களுக்காகவே உருவாக்கப்பட்டதென்று’, போர்க்குற்றங்களைப் புரிந்த சிறீலங்கா ஆயுதப்படைகளை சர்வதேச நீதியின் முன்னிறுத்துவதை எதிர்த்த சிறீலங்காவின் இராசதந்திரி பாலித கோகன்ன 2009 ஒகஸ்ட்டில் கூறினார்.

அவரது கூற்று தவறானதாயினும், இன்று அவரது கூற்றுக்கு செயல்வடிவம் கொடுப்பது போலவே உள்ளகப் பொறிமுறை தொடர்பான செயற்பாடுகள் இருக்கின்றன.

ஆட்சிகள் மாறிய போதும், சிறீலங்காவையும் அதன் ஆயுதப்படைகளையும் தண்டனைகளிலிருந்து காப்பாற்றுவதற்காக செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.


இதற்கான செயன்முறையே உள்ளகப் பொறிமுறையென்ற நகர்வு. இதில் மகிந்த ஆட்சி, மைத்திரி-ரணில் ஆட்சி என்ற வேறுபாடுகளில்லை. பல வியாக்கியானங்களை முன்வைத்தபடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் எடுக்கும் தரப்புகளும் உள்ளகப் பொறிமுறைக்கு சார்பாக செயற்படுகின்றமை தமிழ் மக்களின் நீதி தேடும் போராட்டத்திற்கு ஒரு பெரும் பின்னடைவு.

வாக்குகளை பெற்றுக்கொள்ளும் முகமாக சர்வதேச விசாரணைக்கு ஆதரவான கருத்துக்களை தேர்தல் மேடைகளிலும், ஏனைய தருணங்களில் உள்ளகப் பொறிமுறைக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிப்பது முன்னுக்குப் பின் முரணானது மட்டுமல்ல. மாறாக படுகொலைசெய்யப்பட்ட ஆன்மாக்களும் தப்பித்து நீதிக்காக காத்திருப்போருக்கும் எதிரான செயற்பாடு.
உள்ளகப் பொறிமுறையூடாக தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதுவும், நேர்மையான உள்ளகப் பொறிமுறையை சிறீலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்க முடியாது என்பதுவும் கற்றறிந்த பாடமாக கண்முன்னெ விரிந்து கிடக்கிறது.

ஆயினும், உள்ளகப் பொறிமுறையென்பதில் சிறீலங்கா அரசாங்கமும் அதற்கு ஆதரவான தரப்புகளும் தீவிரமாக நிற்கின்றன.

சர்வதேச தரத்துக்கு நிகரான விசாரணை என்று கூறுவதனூடாக, நடைபெறப் போவது சர்வதேச விசாரணை அல்ல என்பது புலனாகிறது. அத்துடன், இது சர்வதேச விசாரணையை இல்லாமற் செய்வதற்கான ஒரு நகர்வு என்பதுவும் தெளிவாகிறது.

ஆகவே, சர்வதேச விசாரணை நடந்து முடிந்து விட்டது அல்லது சர்வதேச தரத்துக்கு நிகரான விசாரணை நடக்கப் போகிறது என்று யாராவது சொல்வார்களானால், அது தமது சுயநலன்களுக்காக மக்களை ஏமாற்றுகின்ற ஒரு நடவடிக்கையாகத்தான் இருக்க முடியும். ஆதலால், இத்தகைய நகர்வுகள் தொடர்பாகவும், இதனை கூறுபவர்கள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நன்று.

இதேவேளை, கலப்புப் பொறிமுறை (Hybrid Mechanism) ஊடாகவும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது. இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்குவதற்கான அரசியல் திடசித்தம் உள்ள தரப்புக்களாலேயே கலப்புப் பொறிமுறை ஊடாக நீதியை வழங்க முடியும்.

ஆனால், இழைத்த குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் தன்மையோ அல்லது நீதியை வழங்குவதற்கான திடசித்தமோ சிறீலங்கா அரசிடம் இல்லையென்பது கடந்த காலங்களில் பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கலப்புப் பொறிமுறை அமைக்கப்பட்ட நாடுகளில் அது தோல்வியடைந்து வருகிறது என்ற சர்வதேச ரீதியான விமர்சனங்கள் உண்டு. அதன் அண்மைய உதாரணம் கம்போடிய. இது தொடர்பாக இக்கட்டுரையாளர் கடந்த மார்ச் மாதம் ஞாயிறு தினக்குரலில் எழுதியுமுள்ளார்.

ஆகவே, சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றினூடாவே தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம். சர்வதேச விசாரணையென்ற நிலைப்பாட்டையெடுப்பது தமிழ் மக்களுக்கு நீதியை அடைவதற்கான ஒரு முக்கிய வழிமுறை.

அத்துடன், அது அரசியல் ரீதியான பேரம் பேசலுக்கும் துணைபுரியும். ஆதலால், இனஅழிப்புக்குள்ளாகியுள்ள தமிழ் மக்கள் சுதந்திரமான சர்வதேச விசாரணையொன்றுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

வெளிவரவிருக்கும் அறிக்கையின் நகல் ஒன்று சிறீலங்கா அரசாங்கத்திடம் எதிர்வரும் ஒகஸ்ட் 21ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் பணியகத்தினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும்.

 இறுதி அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் பணியகத்தினால் செம்டெம்பர் 30ம் திகதி வெளியிடப்படும். ஆதலால், இதன் ஒரு முக்கிய நகர்வாக, செப்டெம்பர் மாதம் வெளிவரவிருக்கின்ற அறிக்கையின் பரிந்துரைகளை பலமாக்குவதற்கான வேலைத்திட்டங்களை தமிழர் தரப்பு விரைந்து முன்னெடுக்க வேண்டும்.

அது வெற்றிபெறும் பட்சத்தில் உள்நாட்டுப் பொறிமுறை என்ற பொறியிலிருந்து தப்பி, முழுமையான சர்வதேச விசாரணைக்கான அடித்தளங்களை இடலாம்.


தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கு நடந்தது இனஅழிப்பென்றோ அல்லது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்றோ வலியுறுத்தவில்லை.

தமிழ் மக்களால் சனநாயக ரீதியாக தெரிவு செயப்பட்டவர்கள் என்ற அடிப்படையில், அதனை எடுத்துச் சொல்வதற்கான பொறுப்பும் கடப்பாடும் அவர்களுக்குண்டு. இதனை தனித்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் மட்டுமன்றி எடுத்துச் சொல்ல வேண்டிய பல சூழல்களும் சந்தர்ப்பங்களும் உருவாகின.
அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் எடுக்கும் தலைவர்கள் பயன்படுத்தவில்லை. மாறாக, சிறீலங்கா அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு ஆதரவான கருத்துக்களே தீர்மானம் எடுப்போரால் வெளிப்படுத்தப்பட்டது.
ஆயினும், தற்போது தன்னிலும் தமிழ் மக்கள் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு ஆதரவாக, வெளிவரவிருக்கின்ற அறிக்கையின் பரிந்துரைகளை பலமாக்குவதற்கான செயற்திட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் எடுக்கும் தரப்பினர் பங்கெடுக்க வேண்டும்.

வடமாகாண சபை முதலமைச்சர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் சிவில் சமூக அமையம் மற்றும் முக்கிய புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இந்த செயற்திட்டத்தில் பங்கெடுப்பதற்கான தமது உறுதிப்பாட்டை தமது செயற்பாடுகள், அறிக்கைகள் மற்றும் உரைகள் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனஅழிப்பு என்ற அடிப்படையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று, வடமாகாண சபையின் ‘தமிழர்களுக்கு எதிரான சிறீலங்காவின் இன அழிப்பு’ தீர்மானம் கேட்டுக்கொண்டது.

அதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்த, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்ற ஒரு மில்லியன் கையொப்பங்களை திரட்டும் செயற்திட்டம் அதன் இலக்கை குறுகிய காலத்துக்குள் வெற்றிகரமாக பூர்த்திசெய்துள்ளது.

இதில், அதிகமான கையொப்பங்கள் இட்ட நாடுகள் வரிசையில் இலங்கை இரண்டாவதாக உள்ளதென்று, குறித்த கையொப்பத்தை இடுவதற்கென உருவாக்கப்பட்டிருந்த இணையத்தள இணைப்பினூடாக தெரியவருகிறது.
இவை தமிழ் மக்கள் சுதந்திரமான சர்வதேச விசாரணையிலேயே நம்பிக்கை வைத்துள்ளதோடு, சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டுவதையும் எடுத்துக்காட்டுகிறது.

ஆகவே, சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அல்லது இலங்கைத் தீவில் இடம்பெற்ற இனஅழிப்பை விசாரிப்பதற்கான தனிப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைப்பதனூடாக,

வெளிவரவிருக்கின்ற அறிக்கையின் பரிந்துரைகளை பலமாக்கலாம். இதற்காக தமிழ்த் தரப்புகள் விரைவானதும் ஆக்கபூர்வமானதுமான செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

இந்த செயற்த்திட்டம் தமிழ் மக்களுக்கான நீதியை தாமதித்துக் கொண்டிருக்கிற ஐக்கிய நாடுகள் சபை, சிறீலங்காவின் உள்ளகப் பொறிமுறையை தவிர்த்து, சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தை நோக்கி நகர்வதற்கு அழுத்தம் கொடுப்பதாக இருக்கவேண்டும்.

இது, இலகுவான விடயமல்ல. ஆனால், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில் நிறைவேற்றப்பட வேண்டிய பணி.
ச.பா.நிர்மானுசன்
nirmanusan@gmail.com

No comments:

Post a Comment