Friday 14 August 2015

தேர்தல் கால புரளிகளை நம்பி விடாதீர்கள்

ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அதில் ஒருவருக்கு பேய்கள் மீது நம்பிக்கை. மற்றவர் பேய் என்று எதுவும் கிடையாது எல்லாம் பிரமை என்று நினைப்பவர். ஒருநாள் இருவருக்கும் கடுமையான வாதம். பேய் இருக்கிறது; இல்லை என்பதுதான் வாதத் தலைப்பு.
இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். பேய் இல்லை என்று சொல்பவர் நடுச்சாமவேளையில், அந்த ஊரின் எல்லையில் இருக்கும் மயானத்திற்குச் சென்று, அங்குள்ள ஆலமரத்தில் ஏறி, ஆணி அறைந்து விட்டு வரவேண்டும். இதுவே நிபந்தனை.

பேய் இல்லை என்று வாதிட்டவன் அன்று நடுச் சாமத்தில் ஊரின் எல்லையில் உள்ள மயானம் நோக்கிச் சென்றான். தன்னுடன் சுத்தியலும் ஆணியும் எடுத்துக் கொண்டான். இப்போது நேரம் நடுநிசி. மயானத்தின் நடுப்பகுதியை அவன் சென்றடைகிறான்.

ஆந்தைகளின் அலறல், ஆட்காட்டிக் குருவிகளின் ஒலிகள். எந்தப் பயமும் இல்லாது அவன் ஆலமரத்தில் ஏறி, மரத்தில் குந்தி இருந்து கொண்டு தான் எடுத்துச் சென்ற பெரியஇரும்பு ஆணியை மரத்தில் அறைந்தான்.

ஆணி முழுவதும் அறையப்பட்டு விட்டது. இப்போது அவன் மரத்தில் இருந்து இறங்கும் போது, தன்னை யாரோ பின்னால் இழுப்பது போல உணர்ந்தான். அந்த இழுவையிலிருந்து அவனால் விடுபடமுடியவில்லை.

அதுவரை நேரமும் துணிச்சலாக இருந்தவன் பேய்தான் தன்னை இழுப்பதாக நினைத்து ஏக்க முற்றான். அவ்வளவுதான் ஆலமரத்தைப் பிடித்த படியே இறந்து போனான்.
மறுநாள் காலைப்பொழுதில், மயானத்திற்குச் சென்றவனைக் காணாத அவனின் நண்பனும் உறவினர்களும் மயானம் நோக்கிச் சென்றனர்.

அங்கே பேரதிர்ச்சி அவர்களுக்குக் காத்திருந்தது. பேய் இல்லை என்று வாதிட்ட தன் சக நண்பன் ஆலமரத்தில் இறந்து கிடக்கிறான். அவன் அணிந்திருந்த ஆடையின் ஒரு பகுதி ஆணிக்குள் அகப்பட்டிருந்தது.

ஆம், ஆடையின் ஒரு பகுதி ஆணியுடன் அகப்பட்டு மரத்துடன் அறையப்பட்டதால் அவனால் மரத்திலிருந்து இறங்க முடியவில்லை. உண்மையை அறியாத அவன், பேய் தன்னைப் பிடித்து இழுப்பதாக ஏங்கியதால் இறந்தான் என்ற உண்மையை சக நண்பனும் உடன் சென்றவர்களும் உணர்ந்தனர்.

என்ன செய்வது? பேய் இல்லை என்று வாதிட்டவன் பேய் உள்ளது என்ற நினைப்போடு  இறந்தான். பேய் இருக்கிறது என்று நம்பியவன் தன் சக நண்பனின் மரணத்துக்கான காரணத்தை அறிந்தபோது, பேய் இல்லை என்பதை பூரணமாக ஏற்றுக்கொண்டான்.   

பார்த்தீர்களா? மிகத் துணிச்சலோடு சென்ற ஒருவன் நடப்பது; நடந்தது என்ன? என்பதை ஆராயாமல் விட்டதால் அவன் உயிரிழக்க வேண்டிய தாயிற்று.

இது போலத்தான் எல்லா விடயத்திலும் ஆராய்வு அவசியம். இல்லையேல் பேய் இல்லை என்றவன், பேய் இருக்கிறது என்ற நினைப்போடு இறக்கின்ற பரிதாபமே ஏற்படும்.

ஆம், எந்த விடயமாயினும் நாம் ஆராய்வது அவசியம். இது தேர்தல் காலம். மக்களை ஏமாற்றுவதற்காக பல்வேறு திருகுதாளங்கள் செய்யப்படும். இவற்றை நம்பாமல், இப்படி நடக்க முடியுமா? என்று ஒரு தடவை சிந்தியுங்கள். அதன் பின் உங்கள் வாக்குகளை அளியுங்கள்.

தேர்தலின் இறுதிக் காலத்தில் அதிலும் குறிப்பாக தேர்தலுக்கு முதல் நாள் அல்லது தேர்தல் அன்று ஏகப்பட்ட புரளிகள் கட்டி விடப்படும். அதற்கான தயாரிப்புகள் இப்போது ஏற்பாடாகியிருக்கும். எது எப்படியாயினும் நிதானமும் தீர ஆராய்தலும் எங்களிடம் இருக்குமாயின் புரளிவிட்டவர்கள் பொய்த்துப் போவர்.   

No comments:

Post a Comment