Sunday 9 August 2015

பிரிவினையை நோக்கித் தள்ளப்படும் தமிழர்கள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் பத்து நாட்களே இருக்கின்ற நிலையில், வாக்காளர்கள் மத்தியில், இனவாத – பிரிவினைவாதப் பிரசாரங்களே தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




சில நாட்களுக்கு முன்னர், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மேற்கொண்ட ஆய்வில், இந்தத் தேர்தலில் வேலைவாய்ப்பு, வாழ்க்கைச் செலவு, அபிவிருத்தி ஆகியன தான் முக்கியமான விவகாரங்களாக இருக்கும் என்று மக்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
ஆனால், பொருளாதாரப் பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் பற்றி அரசியல் கட்சிகள் அதிகம் கவனம் செலுத்தவில்லை.

அதுபற்றிப் பேசுவதிலோ, அவற்றுக்காக தாம் முன்வைக்கப்போகும் தீர்வுகள் குறித்தோ பிரசாரத்தில் அவர்கள் ஈடுபடுவதை அரிதாகவே காணமுடிகிறது.
எங்கு பார்த்தாலும், இனவாதம் அல்லது பிரிவினைவாதம் பற்றிய பிரசாரங்களே கோலோச்சுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை முன்வைத்து, விமர்சனம் செய்வதிலேயே தென்னிலங்கையில் உள்ள பெரும்பாலான கட்சிகளின் முழுநேர வேலையாக மாறியிருக்கிறது.

சமஷ்டிக்கான புதிய அர்த்தம் கற்பிப்பதில் சிங்களக் கட்சிகளுக்கு இருக்கின்ற தீவிர ஈடுபாடு, அதன் மீதுள்ள அவர்களின் வெறுப்பைத் தாராளமாகவே பிரதிபலிக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுபட்ட – பிரிக்கப்படாத இலங்கைக்குள், சுயாட்சி அதிகாரங்களைக் கொண்ட சமஷ்டித் தீர்வு ஒன்றையே தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், சமஷ்டி என்பது பிரிவினையே என்று அர்த்தம் கற்பித்து ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜேவிபி போன்ற எல்லாக் கட்சிகளுமே எம்பிக் குதிக்கின்றன. எந்தெவொரு தமிழ்க் கட்சியுமே இன்றைய நிலையில் பிரிவினையை ஆதரிக்கவில்லை.
தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டதாக – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட கூறும் நிலைக்கு வந்திருக்கிறது.

ஆக, வடக்கில் தனிநாட்டுக் கோரிக்கை, அதாவது பிரிவினைக் கோரிக்கை பலவீனப்பட்டுப் போயிருக்கின்ற நிலையில் தான், தெற்கில் அது தீவிரமாகியிருக்கிறது.
பிரிவினைவாதம் என்பது, தனியே தனிநாட்டை வலியுறுத்துவது மட்டும் அல்ல. அதனை நோக்கித் தூண்டி விடுவதும் கூட பிரிவினைவாதம் தான்.

இப்போது, மஹிந்த ராஜபக்ஷவும், ரணில் விக்கிரமசிங்கவும், அநுரகுமார திஸநாயக்கவும் ஏனைய சிங்களத் தலைவர்களும் செய்யும் பிரசாரம், தமிழர்களைப் பிரிவினையை நோக்கித் தள்ளும் வகையிலேயே உள்ளன.

தமிழர்களால் முன்வைக்கப்பட்ட சமஷ்டி என்பது, ஒரு கூட்டு அரசாங்க அமைப்பு முறையாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாக அதனைச் சமஷ்டி அல்லது சுயாட்சி என்கிறது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இதனை ‘ஒரு நாடு இருதேசம்’ என்கிறது. ஜனநாயகப் போராளிகள் – ஒஸ்லோ இணக்கப்பாடு, திம்பு கோட்பாடுகளின் அடிப்படையான தீர்வு என்கின்றனர்.

ஈபிடிபியின் நீண்டகால கோசமே, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது தான். அதனை அவர்கள் இப்போது வைத்திருக்கிறார்களா இல்லையா என்பது சந்தேகம்.
இங்கு தமிழ்க் கட்சிகள் தமிழர்களின் அபிலாஷை விடயத்தில் வேறு வேறு பெயர்களை முன்வைத்து பிரசாரம் செய்தாலும், அவற்றின் அடிப்படை அம்சம் கூட்டுஅரசாங்க முறைமை தான் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், பல்வேறு தமிழ்க் கட்சிகளால் தமது கோசத்தின் அர்த்தம் என்னவென்று சரியாக வெளிப்படுத்த முடியாத நிலையில் இருப்பது வேதனை.

உதாரணத்துக்கு, ஒரு நாடு இருதேசம் என்ற தமது கோட்பாட்டுக்கு பலரும் தவறாக அர்த்தம் கற்பிப்பதாக சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்.

தேசம் என்பது நாடு அல்ல என்றும் அது தனிநாட்டைக் குறிக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்திருந்தார்.

ஆனால், அந்தச் செய்தியில் கடைசி வரையில் அவர் தேசம் என்றால் என்ன- அதன் அர்த்தம் என்னவென்று கூறவில்லை.

தேசம் என்பது எதனைக் குறிக்கிறது என்பதில் அவருக்குக் கூட மயக்கம் இருக்கிறதா என்ற சந்தேகத்தையே அது ஏற்படுத்தியது.

அதுபோலவே ஜனநாயகப் போராளிகள் கட்சி கூறும் ஒஸ்லோ உடன்பாடு, உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி பற்றியே பேசுகிறது.

அது ஒரு பேச்சுக்கான அடிப்படையான இணக்கப்பாடே தவிர, இறுதியான முடிவு அல்லது உடன்பாடு அல்ல.

அவர்களும் கூட, தெளிவாக சமஷ்டி என்பதை வெளிப்படுத்த மறுக்கிறார்கள்.
அவ்வாறு செய்தால் அதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டிக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்று மக்கள் புரிந்து கொண்டு விடுவார்களோ என அச்சம் கொள்கிறார்கள் போலும்.

எவ்வாறாயினும், நாட்டைப் பிரிக்காமல் ஒன்றுபட்ட ஒரு கூட்டரசாங்க முறையை உருவாக்குவது தான் தமிழ் மக்களின் எண்ணமாக இருக்கிறது.

இது, பல ஐரோப்பிய நாடுகளிலும் வெற்றிகரமாக நடைமுறையில் இருக்கின்ற ஓர் ஆட்சி முறையாகும்.

ஆனால், சமஷ்டி என்பது பிரிவினையே என்று குதர்க்கமாக அர்த்தப்படுத்தி சிங்கள வாக்காளர்களை உசுப்பேற்றுவதில் பெரும்பாலான சிங்கள அரசியல்வாதிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்தக் கட்டத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்ன சில உண்மைகளை வெளியிட்டிருக்கிறார். சமஷ்டியை முன்வைத்தவர்கள் தமிழர்கள் இல்லை, சிங்களவர்களே என்று குறிப்பிட்டிருந்தார்.
அது உண்மை, 1928ஆம் ஆண்டில் முதல் முறையாக கண்டியைச் சிங்களவர்களால், டொனமூர் யாப்பு ஆணைக்குழுவிடம் சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆனால், தமிழர்கள் அப்போது அதனை ஏற்கவில்லை. பின்னர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவும் அதனை முன்வைத்தார்.

இப்போது தமிழர்கள் சமஷ்டியைக் கேட்கின்றனர். ஆனால், சிங்களவர்கள் அதனை நிராகரிக்கின்றனர்.

இதனைக் கூறிய ராஜித சேனாரத்ன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டியை முன்வைத்திருப்பது தவறல்ல என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

எப்போதுமே பெரிய கோரிக்கையை முன்வைத்தால் தான், குறைந்தபட்ச தீர்வேனும் கிட்டும் என்றும், எனவே அவர்கள் கூடுதல் அதிகாரப் பகிர்வைக் கோரியதில் தவறில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவது போல சமஷ்டி முறையில் அதிகாரங்கள் பகிரப்படாது என்றும் அவர் கூறியிருந்தார்.

இன்னொரு பக்கத்தில், தற்போது மஹிந்த ராஜபக்ஷவின் வெளிவிவகார ஆலோகராக மாறியுள்ள கலாநிதி தயான் ஜெயதிலகவும், சமஷ்டிக் கோரிக்கையை அடிப்படையாக வைத்து எதிர்காலத்தில் பேச்சுக்களை நடத்தலாம் – ஆனால், சுயநிர்ணய உரிமையை வழங்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

மஹிந்த ராஜபக்ஷவின் வெளிவிகார ஆலோசகரான தயான் ஜெயதிலக தேர்தலில் போட்டியிடவில்லை என்பதால், அதனை அடிப்படையாக வைத்துப் பேசலாம் என்கிறார்.
ஆனால், மஹிந்த ராஜபக்ஷவோ அது பிரிவினை எனக் கூறுகிறார்.

நாடு பிளவுபடப் போகிறது, சமஷ்டியைக் கேட்கிறது கூட்டமைப்பு என்று மஹிந்த ராஜபக்ஷ பிரசாரம் செய்து வருகிறார். அதுமட்டுமன்றி, ரணில் விக்கிரமசிங்க, வடக்கு- கிழக்கைத் துண்டாடி தனிநாட்டை அமைத்துக் கொடுத்து விட்டு, புதிய நாட்டை உருவாக்கப் போகிறார்.
அது தான் ஐதேகவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள புதிய நாடு என்றும் மஹிந்த ராஜபக்ஷவின் பிரசாரம் அமைந்திருக்கிறது.

அவரே இப்படியென்றால், தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களெல்லாம் எப்படி இருப்பார்கள் என்று கூற வேண்டியதில்லை.
இதனை, தமிழர்கள் கேட்காது போனாலும், தனிநாட்டைப் பிரித்துக் கொடுப்பதற்கு சிங்களத் தலைமைகள் தயாராகி விட்டனர் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

பிரிவினை, தனிநாடு பற்றியே சிந்திக்காத தமிழர்களை அத்தகையதொரு நிலைப்பாட்டை நோக்கி தள்ளிச் செல்வது தான் உண்மையான பிரிவினைவாதம்.

சிங்களத் தலைமைகள் இப்போது செய்து கொண்டிருப்பது அதனைத் தான்.
ஆரம்பத்தில் சமஷ்டியை வேண்டாம் என்று நிராகரித்த தமிழர்களை சமஷ்டியையும், அதற்கு அப்பால் சென்று தனிநாட்டையும் கேட்கும் நிலைக்கு கொண்டு சென்றது சிங்களத் தலைமைகள் தான்.

இப்போது தனிநாடு வேண்டாம் சமஷ்டியே போதும் என்று வந்திருக்கிற தமிழர்களையும், தனிநாடு நோக்கித் தள்ளிச் செல்வதும் சிங்களத் தலைமைகள் தான்.
எப்போதும் இனவாதமே, அவர்களின் அரசியல் கோசமாகவும், பிரசார தந்திரமாகவும் மாறியிருக்கிறது.

அதிலிருந்து விலகி அவர்களால், ஆக்கபூர்வமான அரசியலை நடத்த தெரியாதிருந்திருக்கின்றனர்.

இனவாதம் அதிகம் பயனளிக்காது என்ற அச்சம் தோன்றிய கட்டத்தில் தான் அவர்கள் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வைத்து, பிரிவினைவாத அரசியல் நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதனைச் சாதாரண சிங்கள வாக்காளர்களால் புரிந்துகொள்ள முடிகிறதா தெரியவில்லை.
ஆனால், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் போன்றவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
அதனால் தான், பேசுவதற்கு எதுவும் இல்லாததால் தான், நாடு பிளவுபடப் போகிறதாக மஹிந்த ராஜபக்ஷ பிரசாரம் செய்வதாக கூறியிருக்கிறார்.

ஆக சிங்களத் தலைமைகளின் பிரிவினவாத அரசியல் நிகழ்ச்சி நிரலின் சாயம் இப்போது பௌத்த பீடங்களிடம் கூட எடுபடாத நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment