Sunday 9 August 2015

தூயவர்கள் ஒன்று சேர்ந்திருந்தால் மக்கள் குழம்ப வேண்டி இருக்காது

நடைபெறப்போகும் பாராளுமன்றத் தேர்தலையொட்டி தென்பகுதியில் பெரும் குழப்பம் நடந்து கொண்டிருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ பாராளுமன்றத் தேர்தலில் இறங்கியதோடு இக்குழப்பம் எழுந்துள்ளது.பொய்யான பிரசாரங்கள், இனவாதக் கோ­ங்கள், மக்களைக் குழப்புகின்ற நடவடிக்கைகள் என ஏகப்பட்ட கூத்துக்கள் தென்பகுதியில் நடந்து வருகின்றன.

இதனிடையே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி விடாதபிடி என்றவாறு தேர்தலில் குதித்துள்ளது.மகிந்தவா? ரணிலா? அடுத்த பிரதமர் என்ற முடிவு வரும்வரை தென்பகுதித் தேர்தல் களத்தில் பலத்த வன்முறைகள் எழலாம் என்ற ஐயப்பாடுகளும் உண்டு.

இந்நிலையில் வடக்கின் தேர்தல் களத்தில் வேறு விதமான பிரச்சினைகள் இல்லாமல் இல்லை.ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள்ளேயே பிடுங்குப்படுகின்றனர்.விருப்பு வாக்குத் தேர்தல் முறைமை ஒரு கட்சியின் உறவை - கூட்டை அடியோடு உடைத்துவிடும்போல் தெரிகிறது.

தமக்கே அதிக விருப்பு வாக்குகள் கிடைக்கவேண்டும் என்ற நினைப்பில், தாம் சார்ந்த கட்சியின் அல்லது சுயேட்சைக் குழுவின் சின்னத்தை சொல்ல மறந்து தமது விருப்பு இலக்கத்தை மட்டும் தெரியப்படுத்துகின்ற அளவில் தேர்தல் மறதி நம் வேட்பாளர்களை கடுமையாகத் தாக்கியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, ஒரே கட்சிக்குள் இருக்கும் வேட்பாளர்கள் செய்கின்ற தேர்தல் பிரசாரங்களிடையே முரண்பாடுகள் இருப்பதையும் கண்டு கொள்ளலாம்.ஒரு கட்சியைச் சார்ந்த வேட்பாளர்களின் பிரசாரங்கள் வேறுபட்டவையாக இருப்பதைக் காணும்போது அங்கு கட்சி ஒற்றுமை  கேள்விக்குறியாகிறது.

இவை ஒருபுறம் இருக்க கட்சிகள், சுயேட்சைக் குழுக்களை எடுத்தால்;இதில் இவர் நல்லவர், அதில் அவர் நல்லவர் என்ற பார்வை தமிழ் மக்களிடம் உள்ளது.ஒரு கட்சியில் அனைவரும் புனிதமான வேட்பாளர்கள் என்ற நிலைமை இல்லாததன் காரணமாக யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வி எழுகிறது.

ஒரு கட்சிக்கு அல்லது சுயேட்சைக் குழுவுக்கு வாக்களித்து விட்டால், அந்தக் கட்சியில் இருப்பவர்கள் தான் தெரிவு செய்யப்படுவர்.இதனால் மக்கள் வெறுக்கின்ற வேட்பாளர்களும் வெல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.

வெவ்வேறுபட்ட கட்சிகளில் உள்ள நல்ல வேட்பாளர்களை தெரிவு செய்கின்ற தேர்தல் முறைமை இருக்குமாயின், மக்கள் எந்தவித குழப்பமும் அடையாமல் தமக்கு இருக்கக்கூடிய விருப்பு வாக்குகளை வெவ்வேறு கட்சிகளுக்கும் அந்தக் கட்சிகளில் போட்டியிடும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வேட்பாளர்களுக்கும் அளிப்பர்.

இதனால் தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும்பாலும் மக்கள் மனங்களை வென்றவர்களாகவே இருப்பர்.ஆனால் நடை முறையில் இருக்கின்ற தேர்தல் அமைப்பில் இத்தகைய சந்தர்ப்பம் இல்லாமல்  போய்விடுகிறது.

எது எப்படியாயினும் நல்லவர்களை, நேர்மையானவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யும்போதுதான் மக்கள் நன்மை பெறுவதற்கான வாய்ப்பு உண்டு.

தமிழ் இனம் ஒன்றுபட்டிருந்தால் ஒரு கட்சியில் அனைத்து நேர்மையான வேட்பாளர்களும் களமிறங்கியிருக்க முடியும் என்ற உண்மையையும் இவ்விடத்தில் கூறித்தானாக வேண்டும்.

எனினும் இத்தகையதொரு ஒற்றுமை எங்களிடம் இருந்திருக்குமாயின், நாங்கள் என்றோ உரிமை பெற்ற இனமாக இருந்திருப்போம். பரவாயில்லை எங்கள் விதி இதுதான் என்பதற்காக நாங்கள் தெரிவு செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராகவும் இருக்கலாம் என்று நினைப்பது மிக மோசமானது.

எனவே எங்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்கின்ற கடமைப் பொறுப்பு விரும்பி யோ விரும்பாமலோ மக்களிடம் தரப்பட்டுள்ளதால் அந்தக் கடமையை அப்பழுக்கற்ற முறையில் செம்மையாக நிறைவேற்ற வேண்டும்.

இதற்காக நாங்கள் நடந்துவந்த அரசியலில் சாதித்தது என்ன? சாதிக்க முடிந்தும் சாதிக்க முடியாமல் போனது யாருடைய தவறு என்பன பற்றிச் சிந்தித்து எங்களின் கடமையைப் பூர்த்தி செய்வோம்.

நன்றி  வலம்புரி 

No comments:

Post a Comment