Sunday, 4 October 2015

சிரியாவில் அமெரிக்க-ரஷ்ய மோதலும், போர் அபாயமும்

வாஷிங்டனின் போர்வெறியூட்டும் கண்டனங்களை அடுத்து, ரஷ்யா சிரியாவினுள் உள்ள இஸ்லாமிய போராளிகளது இலக்குகளுக்கு எதிராக அதன் வான்வழி தாக்குதல்களைத் தொடங்கியிருப்பது, சிரியாவில் தாக்குதல் தீவிரமடைவதை மட்டும் அச்சுறுத்தவில்லை, மாறாக உலகின் இரண்டு மிகப்பெரிய அணுஆயுத சக்திகளுக்கு இடையே இன்னும் மிகவும் அபாயகரமான இராணுவ மோதல் ஏற்படுவதற்கான நிலைமைகளை உருவாக்குகிறது.

ஒபாமா நிர்வாகமும் சரி புட்டின் அரசாங்கமும் சரி இரண்டுமே பயங்கரவாதத்திற்கு எதிரான பரந்த சண்டையின் பாகமாக ISISக்கு (ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு) எதிராக போர் நடத்தவே, தங்களின் இராணுவங்களைச் சிரியாவிற்குள் அனுப்பி இருப்பதாக வாதிடுகின்றன. இரண்டுமே பொய்யுரைக்கின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் முக்கிய பிராந்திய கூட்டாளிகளான சவூதி அரேபியா, துருக்கி, பாரசீக வளைகுடா எண்ணெய் முடியாட்சிகள் மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றின் மேலதிக நோக்கங்களுக்காக, ISIS வளர்த்து முன்கொண்டுவந்ததுடன், சிரியாவினுள்ளும் வாஷிங்டன் தலையீடு செய்துள்ளது. அவர்கள் சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தைப் பதவியிலிருந்து இறக்கி அவர்களது நலன்களுக்கு அடிபணியும் ஒரு கைப்பாவை அரசாங்கத்தைக் கொண்டு அவரை பிரதியீடு செய்ய முயல்கின்றன.

சிரியாவில் மாஸ்கோவின் பிரதான நோக்கம் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக அல்ல, மாறாக அசாத் ஜனாதிபதியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அசாத் அரசாங்கத்தை அதிகாரத்தில் வைத்திருப்பதும் மற்றும் அதன்மூலமாக மத்திய கிழக்கில் அதன் ஒரேயொரு கூட்டாளியை பேணுவதும் மற்றும் அங்கே காலூன்றி இருப்பதுமே ஆகும். முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு வெளியே இருக்கும் ஒரு கடற்படை துறைமுக தளமாக சிரியா விளங்குகிறது.
ஒரே எதிரியை எதிர்த்து சண்டையிடுவதாக தனித்தனியே வாதிட்டுக்கொண்டிருக்கும் இரண்டு பிரதான அந்நிய இராணுவ சக்திகள், உண்மையில், நேரெதிரான நோக்கங்களுக்காக சண்டையிட்டு கொண்டிருக்கின்றன. இந்த எதிர்விரோத சக்திகளின் பல போர்விமானங்கள், அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தை விட சற்றே பெரிதாக இருக்கும் ஒரு நாட்டில் இராணுவ நடவடிக்கைகளை நடத்தி வருகின்றன. அவற்றிற்கு இடையிலேயே ஆயுத மோதல்கள் வெடிக்கக்கூடிய சாத்தியக்கூறை மறுக்கவியலாது.

சிரியாவில் புட்டின் அரசாங்கத்தினது தலையீட்டுக்கான காரணங்கள் தெளிவானவை. அசாத்தைத் தூக்கியெறியும் அதன் நடவடிக்கையில் வாஷிங்டன் வெற்றியடைந்தால், அது ரஷ்யாவைச் சுற்றி வளைக்க, பலவீனப்படுத்த மற்றும் இறுதியில் அதை உடைப்பதற்கான அமெரிக்க முனைவைத் தீவிரப்படுத்துவதற்கு மட்டுமே சேவையாற்றுமென அது அஞ்சுகிறது. செசென்யா மற்றும் காகசஸின் ஏனைய பகுதிகளிலிருந்து சிரியாவிற்குள் வெள்ளமென பாய்ந்துள்ள ஆயிரக் கணக்கான இஸ்லாமிய போராளிகள், ஐயத்திற்கிடமின்றி அமெரிக்கா, சவுதிஅரேபியா, கடார் இதர பிறவற்றின் ஆதரவோடு மாஸ்கோவிற்கு எதிராக பிரிவினைவாத கிளர்ச்சிகளுக்குத் தலைமை கொடுக்க உள்நாட்டிற்குள் அனுப்பப்படுவார்கள். இரண்டு போர்களின் போக்கில் செசென் மக்கள் மீதான மாஸ்கோவின் மூர்க்கமான ஒடுக்குமுறை அதுபோன்றவொரு நடவடிக்கைக்கு வளமான களத்தை உருவாக்கியுள்ளது.

அனைத்திற்கும் மேலாக அசாத் ஆட்சியைப் பதவியிலிருந்து நீக்குவதென்பது, எண்ணெய் வளம்மிக்க ஒட்டுமொத்த மத்திய கிழக்கு எங்கிலும் அமெரிக்க மேலாதிக்கத்தைப் பலப்படுத்துவதற்கான வாஷிங்டனின் முனைவை மேற்கொண்டும் தீவிரப்படுத்தும், அதேவேளையில் ரஷ்யாவின் எண்ணெய் பெருநிறுவனங்களின் நலன்களுக்கு குழிபறிக்கும் விதமாக மேற்கத்திய ஐரோப்பிய சந்தைகளை மிகவும் நேரடியாக அணுகுவதற்கு கட்டாருக்கு வழிவகை செய்யக்கூடிய ஒரு புதிய எரிவாயுக்குழாய் பாதைக்கு வழிவகுக்கும்.

சிரியாவில் ரஷ்யாவின் இராணுவ தலையீட்டுக்கு அங்கே ஒரு தற்காப்பு குணாம்சம் இருக்கிறதென்ற போதினும், அது முற்றிலும் பிற்போக்குத்தனமாக உள்ளது. அது சிரியாவின் மக்களைக் காப்பாற்றுவதை நோக்கியோ, அல்லது உண்மையில் ரஷ்யாவின் உழைக்கும் மக்களைப் பாதுகாப்பதை நோக்கியோ திரும்பி இருக்கவில்லை. அதற்கு மாறாக, அது புட்டின் ஆட்சி பிரதிநிதித்துவம் செய்கிற ரஷ்ய ஆளும் உயரடுக்கின் நலன்களைத் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

சோவியத் ஒன்றியத்தைக் கலைத்ததிலிருந்து மற்றும் அரசு சொத்துக்களைக் களவாடியதிலிருந்து மற்றும் சோவியத் தொழிலாள வர்க்கத்தை வறுமைக்குட்படுத்தியதிலிருந்து தங்களைத்தாங்களே செழிப்பாக்கி கொண்டுள்ள இந்த குற்றகரமான செல்வந்தர்களின் வர்க்கம், உலக அரங்கில் எந்த முற்போக்கான நடவடிக்கையும் எடுக்க அமைப்புரீதியில் இலாயகற்றது. ஒரு தரகு முதலாளித்துவ ஆட்சியாக உள்ள அந்த ஆட்சியால் ஏகாதிபத்தியத்திலிருந்து எந்தவித உண்மையான சுதந்திரமும் பெறவியலாது.

மாஸ்கோ தலையீட்டின் பிற்போக்குத்தனமான குணாம்சம் ரஷ்யாவின் பழமைவாத தேவாலயத்தால் புதனன்று கச்சிதமாக தொகுத்தளிக்கப்பட்டது, அது அதையொரு "புனித போர்" என்று பிரகடனப்படுத்தியது.

அது ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் குறித்த வாஷிங்டனின் கண்டனங்கள் பாசாங்குத்தனத்திற்கும் மேலானது என்று கூறுகிறது. அதன் [ரஷ்யாவின்] வான்வழி தாக்குதல்கள் "எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கின்றன" என்று கூறி அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஆஷ்டன் கார்ட்டர் புதனன்று ரஷ்யாவை கண்டித்தார்.

வாஷிங்டன், சவூதி முடியாட்சி மற்றும் அப்பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான கூட்டாளிகளாக உள்ள ஏனைய பிற்போக்குத்தனமான எண்ணெய் ஷேக் ஆட்சிகளால் தான் அந்நெருப்பு பற்ற வைக்கப்பட்டது. சண்டையிட்டு வருவதாக அமெரிக்கா கூறும் அந்த இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் அதன் சொந்த உருவாக்கங்களாகும். லிபியாவில் செய்ததைப் போலவே சிரியாவிலும் ஆட்சி மாற்றத்திற்கான போரில் பினாமி தரைப்படை துருப்புகளாக சேவையாற்றுவதற்காக, அது தான் அவர்களை ஆயுதமேந்த செய்து, நிதியுதவி வழங்கி ஆதரித்தது.

ரஷ்யா அதன் வான் தாக்குதல்களை ISIS இலக்குகளோடு நிறுத்திக்கொள்ளாமல், மாறாக அசாத் ஆட்சிக்கு எதிராக சண்டையிட்டுவரும் ஏனைய போராளிகள் குழுக்களையும் தாக்குகிறதென கார்ட்டரும் ஏனைய அமெரிக்க அதிகாரிகளும் குற்றஞ்சாட்டியுள்ளனர். “அது (ISIS) இல்லாத பகுதிகளிலும் அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்,” கார்ட்டர் தெரிவித்தார். அவரது அந்த கடுமையான வாசகம், அமெரிக்காவிற்காக அங்கே பிரசன்னமாகவிருக்கும் அல் கொய்தாவின் இணைப்பான சிரியாவில் உள்ள அல் நுஸ்ரா முன்னணி மீதான அதன் கவலைகளை மூடிமறைப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. அமெரிக்க இராணுவம் பயிற்சியளித்து, ஆயுதமேந்த செய்து, சிரியாவிற்குள் திரும்ப அனுப்பியுள்ள "விழிப்பான" போராளிகள் என்றழைக்கப்படுபவர்கள் திரும்பி வந்தவுடனேயே மீண்டும் மீண்டும் அவர்களது ஆயுதங்களைப் போட்டுவிட்டு, அல்-நுஸ்ரா உடன் இணைந்துள்ளனர். இதுதான் "பயங்கரவாதத்திற்கு எதிரான போராகும்".

அமெரிக்கா உலகளவில் ஒரு முடிவில்லா போர் கொள்கையில் ஈடுபட்டுள்ளது, அது ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டை அழித்துள்ளது, இந்த உண்மை அமெரிக்கா முதன்முதலில் படையெடுத்து 14 ஆண்டுகளுக்குப் பின்னரும், அங்கே சுமார் 10,000 அமெரிக்க துருப்புகள் தங்கியிருப்பார்கள் என்ற அறிவிப்புடன் சேர்ந்து, ஆப்கான் நகரமான குண்டூஸை இவ்வாரம் தாலிபான் கைப்பற்றியுள்ளது.

உலகளாவிய இந்த இராணுவவாத கொள்கையின் சாத்தியத்திறன் ரஷ்யாவுடனான ஒரு நேரடி மோதலில் செறிந்தெழுகிறது என்பது நிஜமானதும், தற்போது நடந்து கொண்டிருப்பதுமாகும். அமெரிக்க ஆதரவிலான "போராளிகளைத்" தாக்கும் எந்தவொரு படைக்கு எதிராகவும் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்காக, பெண்டகன் நடவடிக்கைகளுக்கான அமெரிக்க கொள்கைகளை சிரியாவில் மாற்றிவிட்டிருப்பதாக அறிவித்தது. இதற்கிடையே வாஷிங்டனின் கூட்டாளிகளும் அதேபோன்ற அச்சுறுத்தல்களை வெளியிட்டுள்ளனர், சவூதி அரேபியா நேரடியான இராணுவ தலையீட்டைக்கு அச்சுறுத்தி வருகிறது, பிரான்ஸ் இவ்வாரம் அதன் சொந்த குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதுடன், அதன் வான் தாக்குதல்கள் வெறுமனே ISIS மட்டுமல்ல, மாறாக சிரிய ஆட்சியையும் இலக்கில் கொண்டிருக்கும் என்று அறிவித்துள்ளது, இவ்விதத்தில் இருக்கையில் தான் ரஷ்யர்கள் சண்டையிட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே கடந்த ஆண்டின் மேற்கத்திய-ஆதரவிலான உக்ரேனிய ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர், அமெரிக்காவும் நேட்டோவும் கிழக்கு ஐரோப்பாவெங்கிலும் அவற்றினது இராணுவ பிரசன்னத்தை மற்றும் சண்டைக்குரிய ஆயத்தநிலையைத் துரிதமாக தீவிரப்படுத்தி உள்ளன. ரஷ்யாவும் அந்நாடுகளது மேற்கத்திய எல்லைகளுக்கு அருகே அதன் படைகளைக் குவித்துள்ளது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின்னர், ஓர் அணுஆயுத போரைத் தூண்டிவிடக்கூடிய ஓர் இராணுவ மோதல் அச்சுறுத்தல் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதளவில் அதிகரித்துள்ளது.

சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வழிவகைகளைக் கொண்டு சிரியா மீதான தாக்குதலையும் உலக போர் அச்சுறுத்தலையும் எதிர்க்க வேண்டும். அது ரஷ்ய தலையீட்டுக்கோ அல்லது மற்ற எந்தவொரு முதலாளித்துவ அதிகாரத்திற்கோ ஒரு சிறிய ஆதரவைக் கூட வழங்கக்கூடாது. டிரொட்ஸ்கியின் வார்த்தைகளில் கூறுவதானால், “போர் வரைபடத்தை அல்ல, மாறாக வர்க்க போராட்ட வரைபடத்தைப் பின்தொடர்வது" அவசியமாகும்.

தொழிலாளர்கள், ஈராக், சிரியா மற்றும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலிருந்தும் அன்னிய இராணுவ படைகள் அனைத்தையும் திரும்பப்பெற போராட வேண்டும். சர்வதேச சோசலிச புரட்சிக்கான ஒரு பொதுவான போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தை மத, இன, தேசிய எல்லைகளைக் கடந்து ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் அமெரிக்காவால் நடத்தப்பட்டதைப் போன்ற ஏகாதிபத்திய தலையீடுகளின் தோற்கடிப்பைப் பாதுகாக்க முடியும்.

Bill Van Auken

No comments:

Post a Comment