Sunday 4 October 2015

குறுக்கு வழியில் போகிறதா ஐ.நா.?

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரிக்க உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த ஐ.நாவும், இலங்கை அரசாங்கமும் இரகசியமான இணக்கமொன்றுக்கு வந்துள்ளதா என்ற சந்தேகம் ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக எழுந்திருக்கிறது.
 
இறுதிப் போர்க்காலத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சி தான் இந்த இரகசியத் திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டிருக்கிறது.
 
சனல்4 க்கு கிடைத்திருந்த இரகசிய ஆவணம் ஒன்றில் இலங்கை அரசாங்கத்தினால் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஐநாவின் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கும் திட்டம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
 
இந்த விசாரணையை பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டலில் வெளிவிவகார அமைச்சு நெறிப்படுத்தும் என்றும் ஐநாவின் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
வடக்கு மாகாண சபையும் இலங்கை அரசாங்கமும் இதனை பங்காளர்களாக இருந்து செயற்படுத்துவதென அந்த இரகசிய ஆவணம் கூறுவதாக சனல்4 குறிப்பிட்டுள்ளது.
 
இந்த இரகசிய ஆவணம் இப்போதைய சூழலில் கசிய விடப்பட்டுள்ள நோக்கம் இதனைத் தயாரித்தமைக்கான நோக்கம் எல்லாமே குழப்பங்களையும் சந்தேகங்களையும் எழுப்ப வைக்கின்றன.
 
குறிப்பாக எதிர்வரும் செப்படம்பர் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இந்த இரகசிய ஆவணம் கசிந்திருக்கிறது.
 
இது ஐநா விசாரணை அறிக்கையின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மையின் மீது கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது.  அதைவிட இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் நடக்கப் போகின்ற வேளை இது இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தல், பொறுப்புக்கூறல், சர்வதேச விசாரணையை எதிர்கொள்ளல் என்பன இருதரப்பிலும் தாக்கம் செலுத்தும் விடயங்களாக உள்ளன.
 
ஏற்கனவே ஐநா விசாரணை அறிக்கையின் பிரதி இலங்கை அரசாங்கத்துக்கு ஓகஸ்ட் 21ம் திகதி அனுப்பி வைக்கப்படும் என்று தகவல் கிடைத்த நிலையில் தான் அதற்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டுமென்று அவசரமாக பாராளுமன்றைக் கலைத்திருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அப்படியிருக்கையில் ஐநா அறிக்கை வெளிவருவதற்கு முன்னதாகவும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவும் இந்த ஆவணம் கசிந்திருப்பது சற்று நெருடலான விடயமாகவே தெரிகிறது.
 
இன்னொரு பக்கத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஐநா அறிக்கை போன்ற போலி விசாரணை அறிக்கையை வெளியிட்டு சிங்கள மக்களை திசைதிருப்ப மகிந்த ராஜபக்ச தரப்பு முயற்சிகளை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
 
மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட 42  பேரை போர்க்குற்றவாளிகளாக அந்த அறிக்கையில் கூறப்படவுள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. ஐநா அறிக்கையை வைத்து சிங்கள வாக்காளர்களைக் கவரும் உத்தியை முன்னரே எதிர்த்தரப்பு வகுத்திருப்பதாக தகவல்கள் உலாவின.
 
இந்த பின்னணியில் ஐநாவும் இலங்கை அரசும் இணங்கியிருப்பதாக ஓர் ஆவணம் கசிந்திருப்பதும் அது எந்தளவுக்கு உண்மைத்தன்மை வாயந்தது என்பதுவும் கேள்விக்குரியது.
 
கடந்த மார்ச் மாதம் இலங்கை வந்திருந்த, ஐநா உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தான் இலங்கை அரசுடன் இந்தத் திட்டம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. அதேவேளை சனல் 4 வெளியிட்ட ஆவணம் குறித்து கருத்து வெளியிட மறுத்த வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே, எனினும் இது பெரும்பாலும் உண்மையாக இருக்காது என்று கூறியிருக்கிறார். அத்தகைய எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
 
அதுபோலவே ஐநா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக்கும் இதுபற்றிய தகவல்கள் தன்னிடம் இல்லையெனத் தெரிவித்திருக்கிறார்.
 
இருந்தாலும் இந்த இரகசிய ஆவணக்குறிப்பில் இடம்பெற்றிருந்த உள்நாட்டு விசாரணையின் பங்காளர்களாக குறிப்பிடப்பட்டிருந்த வடக்கு மாகாண சபையின் முதல்வர் விக்னேஸ்வரன் இதுபற்றித் தன்னுடன் கலந்துரையாடப்படவில்லை என்று நிராகரித்திருக்கிறார்.
 
இந்தநிலையில் ஒருவேளை இத்தகைய இரகசிய ஆவணங்களின் மூலம் அரசியல் நலன்களை அடையும் முயற்சிகள் ஏதும் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 
தற்போதைய அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்காகவும் உள்நாட்டு விசாரணையே மேற்கொள்ளப்படும் என்று நம்ப வைப்பபதற்காகவும் இந்த ஆவணம் கசிய விடப்பட்டிருக்கலாம்.
 
இதன்மூலம் மகிந்த ராஜபக்சவின் பிரசாரங்களை பலவீனப்படுத்த முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.
 
ஆனால் கொழும்பில் இது சூடு பிடிக்க முன்னரே வடக்கில் இது எதிர்மறையான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த ஆவணம் கசிந்த மறுநாளே ஐநா விசாரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பே, உள்நாட்டு விசாரணையாக குறுக்கி விட்டதாக குற்றச்சாட்டை வீசியிருக்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருகின்ற நிலையிலும் உள்நாட்டு விசாரணைக்கு கூட்டமைப்பு இணங்கியுள்ளதான ஒரு குற்றச்சாட்டை கஜேந்திரகுமார் சுமத்தியிருக்கிறார்.
 
எவ்வாறாயினும் உள்நாட்டு விசாரணை என்ற விடயம் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தினால் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த இரகசிய ஆவணத்தின் உள்ளடக்கம் அதிகம் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை.
 
ஐநாவின் தொழில்நுட்ப உதவிகளுடன் உள்நாட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று அந்த ஆவணம் கூறியிருக்கிறது. இலங்கை அரசாங்கம் அமைப்பதாகக் கூறிய உள்நாட்டு விசாரணை மே, யூன், யூலை என்றும் இப்போது செப்படம்பர் என இழுபறிக்குள்ளாகி நிற்கிறது. அதுகூட ஜெனிவா அமர்வு செப்படம்பரில் நடக்காது என்று உறுதியானால் பிற்போடப்பட்டு விடும்.
 
ஏனென்றால் ஜெனிவா அமர்வுக்கு முன்னர் உள்நாட்டு விசாரணை ஆரம்பிக்கப்படும் என்று கூறிய அரசாங்கம் இப்போது ஐநா அறிக்கையை பார்வையிட்ட பின்னரே அதை அமைப்போம் என்று கூறியிருக்கிறது.
 
இலங்கையில் ஆட்சியில் அமரும் எந்த அரசாங்கமுமே, போர்க்குற்றங்கள் குறித்து எந்தவொரு விசாரணையிலும் அக்கறையின்றியெ உள்ளது.
 
முன்னைய அரசாங்கமானாலும் சரி, தற்போதைய அரசாங்கமானாலும் சரி அதுதான் நிலைமை.
 
இன்னமும் ஐநா அறிக்கை வெளியாகாத நிலையில் எதற்காக இந்த உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கான இரகசியக் கலந்தாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
 
ஐநா அறிக்கையில் ஒருவேளை, சர்வதேச விசாரணைகள் வலியுறுத்தப்பட்டால் இந்த உள்நாட்டு விசாரணை அதனைப் பலவீனப்படுத்திவிடும்.
 
இந்த அச்சம் தான் தமிழர் தரப்புக்கு ஏற்பட்டிருக்கிறது. உள்நாட்டு விசாரணை மீது தமிழர்கள் தமக்கு நம்பிக்கை இல்லை என்று உறுதியாக கூறிவரும் நிலையில் அதனைக் கருத்தில் எடுக்காமல் ஐநா ஒருதலைப்பட்சமான தீர்மானங்களை எடுக்கத் துணிந்திருக்கிறதா என்ற சந்தேகம் மனித உரிமை அமைப்புகளிடையே எழுந்திருக்கிறது.
 
போரில் பாதிக்கப்பட்டவர்களில் அனேகமானவர்கள் தமிழர்கள். அவர்களின் நியாயத்தையோ அவர்களின் ஒப்புதலையோ பெறாமல் தன்னிச்சையாக நடத்தும் உள்நாட்டு விசாரணையால் ஐநா எதைச் சாதிக்க நினைக்கிறது என்று தெரியவில்லை.
 
பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஒத்துழைக்காத எந்த விசாரணையும் முழுமை பெறாது.
 
அத்தகையதொரு கட்டத்திற்குள் தமிழர்களைத் தள்ளுவதற்குத்தான் இலங்கை அரசு முனைவதாகத் தெரிகிறது. அதற்கு ஐநாவும் துணை போகிறதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
 
உள்நாட்டு விசாரணை என்று இதுவரை எத்தனையோ மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் உருப்படியான நன்மைகளும் கிட்டவில்லை.
 
உதாரணத்திற்கு ஏற்கனவே மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு ஒன்று இருக்கிறது.
 
அது பேருக்கு அமர்வுகளை நடத்தியது. ஒரு இடைக்கால அறிக்கையையும் கொடுத்ததாக கூறியது.
 
இப்போது சில சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட புதிய அதிகாரிகளை அந்தக் குழு நியமித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது காணாமற்போனோருக்கு என்ன நடந்தது என்று கண்டறிவதற்கான மேல் விசாரணை நடத்துவதற்கான ஒரு நடவடிக்கை.
 
இந்தநிலையில் கடந்த வாரம் யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் முடிந்த பின்னர் காணாமற்போனவர்களை கண்டறிவதற்கான செயலணி ஒன்றை அமைக்கவுள்ளதாக கூறியிருந்தார்.
 
தனது மேற்பார்வையில் இது செயற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எதற்காக இந்தச் செயலணி? அவ்வாறாயின் முன்னைய விசாரணைகளில் அவருக்கு நம்பிக்கை இல்லையா? நம்பிக்கையில்லா விசாரணையை எதற்காகத் தொடரவேண்டும்? இது போல எத்தனை ஆணைக்குழுக்கள், செயலணிகள் நியமிக்கப்படவுள்ளனவோ தெரியவில்லை. ஆனால் ஒன்றில்கூட உண்மைகள் வெளிவரவில்லை.
 
காணாமற்போனவர்களில் ஒருவர் தானும் கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது அவருக்கு என்ன நேரிட்டது என்று உறுதிப்படுத்தப்படவில்லை.
 
அடுக்கடுக்கான விசாரணைக் குழுக்களை அமைத்து மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதே இலங்கை அரசின் வாடிக்கையாகி விட்டது. அதற்கு சந்திரிக்கா, ரணில், மகிந்த, மைத்திரிபால சிறிசேன என்று எந்த சிங்கள தலைமையுமே விதிவிலக்கானவர்களல்ல.
 
அனைவருமே தமிழர்களுக்கு எதிரான அநீதிகளை வேடிக்கை பார்த்தவர்கள். அதற்கெதிராக நடவடிக்கை எடுக்காதவர்கள் தான்.
 
இப்படியான நிலையில் தான் தமிழர்கள் சர்வதேச விசாரணையின் மூலமே தமக்கு நீதி கிடைக்கும் என்று அசையாத நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றனர் இந்த நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் தான் ஐநாவின் இரகசிய ஆவணத்தின் தகவல்கள் அமைந்திருக்கின்றன.
 
போரில் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழர்களை கருத்தில் கொள்ளாமல் ஐநாவோ அல்லது அமெரிக்காவோ தன்னிச்சையாக உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்வதற்கு இணங்கினாலும் கூட இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடப் போவதில்லை.
 
ஏனென்றால் இந்த விசாரணைகள் உண்மையானதாக, நேர்மையானதாக, நம்பகமானதாக, நடுநிலையானதாக அமைய வேண்டும். அதற்குப் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவு அவசியம்.
 
தமிழர்களின் நம்பகத் தன்மையை சோதனைக்குள்ளாக்கி நடத்தப்படும் எந்த விசாரணையும் போலியானதொன்றாக பேருக்கு நடத்தப்படும் ஒன்றாகவே இருக்கும்.
 
அமெரிக்கா, இந்தியா அல்லது ஐநா, எந்த நாடாகவோ, எந்த அமைப்பாகவோ இருந்தாலும் நியாயமான பொறுப்புக்கூறல் மூலம் இலங்கைத் தீவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எண்ணினால் பாதிக்கப்படவர்களின் பக்கம் அவர்கள் நிற்க வேண்டியிருக்கும்.
 
இவ்வாறு இலங்கை அரசுடன் செய்யும் இரகசிய உடன்பாடுகளின் மூலம் அந்த நல்லிணக்கம் ஒருபோதும் சாத்தியப்படாது.
 
சுபத்ரா

No comments:

Post a Comment