Sunday 29 November 2015

ரூ.55 கோடி திருமணம் : யார் இந்த ரவி பிள்ளை?


அண்மையில் கேரளத்தில் ரூ. 55 கோடியில் ஒரு திருமணம் நடைபெற்றது. மகள் திருமணத்தை பிரமாண்டமாக மட்டும் நடத்தவில்லை. இதையொட்டி பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி ரூபாய்க்கு மேல் நிதியுதவி செய்துள்ளதாக ரவி பிள்ளை தெரிவித்துள்ளார்.

                               ravi.jpg


நாட்டில் பல திருமணங்கள் கோடி கணக்கில் செலவழித்து நடத்தப்பட்டாலும் அண்மையில் நடந்த திருமணங்களில் அனைவரையும் ஈர்த்தது, இந்த திருமணம்தான். சரி யார் இந்த ரவி பிள்ளை என்பவர் யார்? 
கேரளத்தில் கொல்லம் அருகேயுள்ள சாவாரா என்ற கிராமத்தில் சாதாரண விவசாயிக்கு மகனாக பிறந்த இவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் டிகிரி படித்தார். பின்னர் கொச்சியில் எம்.பி.ஏ படிப்பு.சேமிப்பில் அக்கறை கொண்ட கேரள மக்களை பார்த்து முதலில் சீட்டு தொழிலில்தான் ரவி பிள்ளை இறங்கினார். தொடர்ந்து கான்டிரக்ட் தொழில், கட்டுமானத் தொழிலில் கால் பதித்த ரவி பிள்ளை, திருவாங்கூர் பெர்டிலைசர், ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் மற்றும் கொச்சின் ரிஃபெரனைரிஸ் நிறுவங்களுக்காக சில பணிகளை மேற்கொண்டார்.

எனினும் தொழிலாளர் பிரச்னை காரணமாக இந்த தொழில்களை கைவிட்டு விட வேண்டிய நிலை.  பின்னர் 1978ஆம் ஆண்டு சவுதிக்கு சென்ற ரவி பிள்ளை, முதலில் சவுதியில் நாஸர் அல் ஹாஜ்ரி என்ற கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து தொழிலை தொடங்கினார். 150 பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் படிப்படியாக வளர்ந்தது. பின்னர்  ஆர்.பி என்று பெயர் மாற்றப்பட்டு, இன்று 70 ஆயிரம் ஊழியர்கள் பணி புரியும் ஆர்.பி குழுமமமாக வளர்ந்து நிற்கிறது. பஹ்ரைன்,கத்தார், அமீரகம் மற்றும் கிழக்காசிய நாடுகளில் 26க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இன்று வளைகுடா நாடுகளிலேயே, இவரது ஆர்.பி குழுமம்தான் முன்னணி கட்டுமான நிறுவனம் ஆகும்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ், உலகின் 988ஆவது பணக்காரராக இவரை தேர்வு செய்தது. இந்தியாவை பொறுத்தவரை 30வது பணக்காரர் ஆவார். வளைகுடா நாடுகளை பொறுத்தவரை மிகவும்  சக்தி வாய்ந்த 4வது இந்திய பிரமுகர் ஆவார். கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. தற்போது 62 வயது நிரம்பிய ரவி பிள்ளை கீதா தம்பதியருக்கு கணேஷ், ஆர்த்தி என இரு குழந்தைகள். இதில் ஆர்த்தி- மருத்துவர் ஆதித்யா விஷ்ணு திருமணம்தான்  கொல்லத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் நடைபெற்றது.

                 
                                            marr.jpg


இந்த திருமணத்திற்காக கொல்லம் ஆஷ்ரம் மைதானத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் 3.50 லட்சம் சதுரடியில் பிரமாண்டமான செட் போடப்பட்டது. 'பாகுபலி 'பட புகழ் ஆர்ட் டரைக்டர் சாபு சிரில், மூன்று மாதங்களாக உழைத்து இந்த பிரமாண்ட செட்டினை வடிவமைத்தார். இதற்காக மும்பையில் முதலில் இந்த செட்கள் அனைத்தும் களிமண்ணால் வார்படமாக உருவாக்கப்பட்டது. பின் ‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ‘மூலம் அவைகள் இணைக்கப்பட்டன. இதற்கே 40 நாட்கள் பிடித்துள்ளது.
திருமண செட் போடுவதற்கு மட்டுமே ரூ.23 கோடி செலவாகியுள்ளது. அதோடு 30 ஆயிரம் விருந்தினர்கள் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தலும் போடப்பட்டிருந்தது. மணமேடை மட்டும் விரிந்த தாமரை இதழ் போல அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

சவுதி, அமீரகம், குவைத்,கத்தார் அரச குடும்பத்தினர் பலர் தனி விமானங்களில் திருமணத்தில் பங்கேற்க வந்திருந்தனர். மற்றும் ஏராளமான வெளிநாட்டு பிரதிநிதிகளும் திருமணத்தில் பங்கேற்றனர். ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் மம்முட்டி உள்ளிட்ட கேரள நட்சத்திரங்களும் திருமணத்தில் பங்கேற்றனர். நடிகைகள் மஞ்சு வாரியார், ஷோபனா ஆகியோரது நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. கர்நாடக இசை புகழ் காயத்ரியின் பக்தி இசை கச்சேரியும் நடைபெற்றது.

திருமணத்திற்காக பாதுகாப்புக்காக மட்டும் கேரள போலீசாருடன் இணைந்து தனியார் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்டிருந்தது. அந்த வகையில் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருமண விருந்தில் உள்நாட்டு உணவுவகைகளுடன் வெளிநாட்டு உணவுகளும் இடம் பெற்றிருந்தன.இந்ததிருமணத்திற்காக மொத்தம் ரூ.55 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. 

இது குறித்து ரவிபிள்ளை கூறுகையில், ''எனது மகள் திருமணத்தை பிரமாண்டமான நடத்தி காட்ட வேண்டுமென்பது மட்டும் எனக்கு நோக்கமில்லை. இந்த திருமணத்தையொட்டி பல்வேறு மக்கள் நலப்பணிகளையும் மேற்கொண்டுள்ளேன். முக்கியமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அறக்கட்டைகள், பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு ரு.10 கோடிக்கு மேல் நிதியுதவி அளித்துள்ளேன்'' என்றார். 

No comments:

Post a Comment