Sunday 1 November 2015

வாஷிங்டனின் தென் சீனக் கடல் ஆத்திரமூட்டலும், மூன்றாம் உலக போர் பேராபத்தும்

சீனா உரிமை கோரும் தென் சீனக் கடல் எல்லை வரம்பிற்குள் 12 கடல்மைல் தூரம் அமெரிக்க கடற்படை நேற்று ஊடுருவியமை ஒரு திட்டமிட்ட மற்றும் பொறுப்பற்ற ஆத்திரமூட்டலாகும், அது அவ்விரு அணு-ஆயுதமேந்திய சக்திகளுக்கிடையே ஒரு பரந்த மோதலைத் தூண்ட அச்சுறுத்துகிறது.

சர்வதேச சட்டத்தின் கீழ் "கடற்போக்குவரத்து சுதந்திரத்திற்கான" அதன் உரிமையைப் பயன்படுத்துவதாக கூறும் வாஷிங்டனின் முறையீட்டிற்கு எந்த மதிப்பும் அளிக்க முடியாது. சீனா, மற்றும் ஏனைய பல நாடுகளைப் போலன்றி, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்ட தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளக்கூட இல்லை, ஆனால் அச்சட்டத்தை நிலைநிறுத்தி வருவதாக அது வலியுறுத்துகிறது. மீண்டுமொருமுறை, அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் இராணுவ நிகழ்ச்சிநிரலைப் பின்தொடர ஒரு போலிக்காரணத்தை இட்டுக் கட்டுகிறது —இவ்விடயத்தில் அது ஆசியாவில் அதன் மேலாதிக்கத்தைப் பேணுவதற்கும், அமெரிக்க பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு சீனாவை அடிபணிய வைப்பதற்கும் ஆகும்.

நேற்று காங்கிரஸ் கேள்வி விசாரணை ஒன்றில் உரையாற்றுகையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்டர், அமெரிக்கா தானே வகுத்த ஒரு சட்டத்தின்படி நடக்கிறது என்றும், சுதந்திர நடவடிக்கை என்றழைக்கப்படும் செயல்பாடுகள் தொடரும் என்பதையும் தெளிவுபடுத்தினார். “எங்கெல்லாம் சர்வதேச சட்டம் அனுமதிக்கிறதோ அங்கெல்லாம் நாம் விமானம் செலுத்தலாம், கடலில் பயணிக்கலாம் மற்றும் நடவடிக்கை எடுக்கலாம்,” என்றவர் அறிவித்தார். “அப்பிராந்தியத்தில் சமீபத்திய நாட்களில் கடற்படை நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன, வரவிருக்கும் வாரங்களிலும் மாதங்களிலும் இன்னும் நிறைய இருக்கும்,” என்றார்.

அந்த போட்டிமிகுந்த கடல்பகுதிக்குள் நுழைவதற்கு ஏவுகணை தாங்கிய USS லாசென் போர்க்கப்பலைப் பெண்டகன் பிரயோகித்தன் தீவிரத்தன்மையைத் தென்கிழக்கு ஆசிய ஆய்வுகளுக்கான சிங்கப்பூர் பயிலகத்தின் ஒரு மூலோபாய பகுப்பாய்வாளர் ஐயன் ஸ்டோரே அடிக்கோடிட்டுக் காட்டினார். “அவர்கள் மிகவும் பலமானதைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒரு விமானந்தாங்கிய போர்கப்பலை விட பலமானது அங்கே வேறெதுவும் இருக்காது,” என்றவர் கார்டியனுக்கு தெரிவித்தார்.

உண்மையில் அங்கிருந்து வெகு தூரத்திலன்றி, அமெரிக்க கடற்படை இரண்டு விமானந்தாங்கிய போர்க்கப்பல்களையும் கொண்டுள்ளது. USS தியோடர் ரூஸ்வெல்ட் தென் சீனக் கடலுக்கு அண்டைப்பகுதியான சிங்கப்பூரில் மீள்வினியோக நடவடிக்கைக்காக மத்திய கிழக்கிலிருந்து சமீபத்தில் சென்றுள்ளது, மற்றும் USS ரோனால்ட் ரீகன் ஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ளது.

சீனாவிற்குச் சவால்விடுப்பதன் மூலமாக போருக்குத் துணியும் முடிவானது, எந்த ஜனநாயக கணக்கிற்கும் உட்படாமல் செயல்படும் அமெரிக்க இராணுவ மற்றும் வெளியுறவுத்துறை கொள்கை ஸ்தாபகத்தினுள் உள்ள ஒரு போர் சதிக்கூட்டத்தால் எடுக்கப்பட்ட முடிவாகும், அரசாங்கத்தின் போர் கொள்கைகளைப் பெருகியளவில் எதிர்க்கும் அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால் இது நடத்தப்படுகிறது. அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் உயர்மட்ட அதிகாரிகள், தென் சீனக் கடலில் சீன நிலச்சீரமைப்பை கண்டிக்கும் ஒரு பகிரங்க பிரச்சாரத்தை மாதக் கணக்காக தொடுத்து வருகின்றனர். இதுவரையில் ஒபாமா சம்பந்தப்பட்டிருந்தார் என்றால், அது அவர் வெறுமனே நடவடிக்கைக்கான இறுதி ஒப்புதல் முத்திரை வழங்குவதேயாகும்.

பைனான்சியல் டைம்ஸிற்கு கூறுகையில், ஓய்வூபெற்ற அமெரிக்க அட்மிரல் ஜேம்ஸ் ஸ்டாவ்ரிடிஸ் பரந்துபட்ட நோக்கங்களைச் சுட்டிக்காட்டினார். “ஒரு பிராந்திய சக்தியாக சீனா எழுச்சி பெறுவதற்கு அதனருகில் உள்ள சர்வதேச கடற்பகுதிகளை விட்டுகொடுக்காது" என்பதில் அமெரிக்கா தீர்மானகரமாக இருப்பதாக அவர் அறிவித்தார். வாஷிங்டன் பெய்ஜிங்கிற்கு ஒரு நுனியளவு விட்டுக்கொடுக்கவும் விரும்பவில்லை என்பது மட்டுமல்ல, அது சீனாவை ஓர் அரை-காலனித்துவ நிலைமைக்குக் குறைக்க நோக்கம் கொண்ட "ஆசியாவை நோக்கிய முன்னிலை" என்றறியப்படும் ஒரு ஆக்ரோஷமான இராஜாங்க, பொருளாதார மற்றும் இராணுவ மூலோபாயத்தில் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்கா, அப்பிராந்தியம் எங்கிலும் அதன் இராணுவ ஆயத்தப்படுத்தலுக்கான ஒரு சாக்குபோக்கை வழங்கவும், கிழக்கு ஆசியாவில் சீனாவிற்கும் ஏனைய கடல்எல்லை உரிமைகோரும் நாடுகளுக்கும் இடையிலான பிளவை அதிகரிக்கவும் தென்சீனக் கடல் போன்ற அபாயகரமான வெடிப்புப்புள்ளிகளைத் திட்டமிட்டு கிளறிவிட்டுள்ளது. தசாப்தகாலமாக அப்பகுதியல் நிலவும் நீண்டகால கடல்சார் பிரச்சினைகளைக் குறிப்பிடாமல், 2010 இன் மத்தியில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் ஆத்திரமூட்டும் வகையில் அறிவிக்கையில், அந்த சர்ச்சைக்குரிய கடல்பகுதியில் "கடல் போக்குவரத்து சுதந்திரத்தைப்" பாதுகாப்பதில் அமெரிக்காவிற்கு ஒரு "தேசிய நலன்" இருப்பதாக அறிவித்தார்.

கடந்த ஐந்தாண்டுகளில் வாஷிங்டன், குறிப்பாக சீனாவின் உரிமைகோரல்களுக்குச் சவால்விடுக்க, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமை ஊக்குவித்தும் அவற்றிற்கு ஒத்துழைத்தும், சிறிய பிராந்திய சர்ச்சைகளாக இருந்ததை சீனாவிற்கு எதிராக போர் அறிவிப்புக்கான ஒரு காரணமாக மாற்றியுள்ளது. இந்த இராஜாங்கரீதியிலான தாக்குதல் ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் உடன் புதிய இராணுவ தளங்கள் அமைப்பது, அப்பிராந்தியம் முழுவதிலும் பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்துவது, மற்றும் 2020க்குள் அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படை ஆயுத-தளவாடங்களில் 60 சதவீதத்தை இந்தோ-பசிபிக்கில் உறுதிப்படுத்தி வைக்க இராணுவ மீள்நிலைநிறுத்தம் செய்வது ஆகியவற்றோடு கைகோர்த்து செல்கிறது.

அணுகுவதற்கு தடைவிதிக்கப்பட்ட/மறுக்கப்பட்ட பகுதி என்ற சீனாவின் தந்திரம் என்று பெண்டகன் எதைக் குறிப்பிடுகிறதோ அதை எதிர்ப்பதற்கான அதன் போர் திட்டங்களின் முதல் கட்டமாகவே, சீனா உரிமைக்கோரும் கடல்பகுதிகளுக்குள் USS லாசென் நேற்று அனுப்பப்பட்டது. அதுபோன்ற நடவடிக்கைகள், ஒருவேளை சீனா பதிலடி கொடுத்தால் சீனப் பெருநிலத்தின் மீது ஒரு பேரழிவுகரமான வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதலைக் கருத்தில் கொண்டுள்ள ஒரு பரந்துபட்ட வான்கடல் போர் மூலோபாயத்தின் பாகமாக உள்ளன.

அமெரிக்க போர் முனைவிற்குப் பின்னால், உலக முதலாளித்துவ நெருக்கடி ஆழமடைந்து வருகிறது. அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் போட்டியாளர்களை பலவீனப்படுத்துவதற்காக முன்பினும் அதிக பொறுப்பற்றத்தன்மையோடு இராணுவ பலத்தை நாடுவதன் மூலமாக, அதன் சொந்த உலகளாவிய அந்தஸ்து பலவீனமடைந்திருப்பதற்கு விடையிறுப்புக் காட்டி வருகிறது, அதேவேளையில் அது உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீது அதன் தாக்குதலை ஆழப்படுத்தி வருகிறது.
தென் சீனக் கடலில் சீனாவிற்கு எதிராக கூடுதல் நடவடிக்கைகள் குறித்து அவர் எச்சரித்ததுடன், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் கார்ட்டர் நேற்று அறிவிக்கையில், தரைப்படை சண்டையில் ஈடுபடுவதற்கு அமெரிக்க துருப்புகளை அனுப்புவதன் மூலமாக அமெரிக்கா அதன் மத்திய கிழக்கு போரையும் விரைவுபடுத்தும் என்றார். அனைத்திற்கும் மேலாக ஆசியாவில் வாஷிங்டனின் ஆத்திரமூட்டல்கள் நடக்கின்ற அதேவேளையில் கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யா உடனான மோதல்களுக்கு நேட்டோ படைகள் தயாரிப்பு செய்கின்றன. உள்நோக்கத்துடனோ அல்லது உள்நோக்கம் இல்லாமலோ, தோற்றப்பாட்டளவில் உலகின் எந்தவொரு பாகத்திலும் நடக்கும் ஒரு சம்பவத்தால் தூண்டிவிடப்படலாம் என்றளவிற்கு ஒட்டுமொத்த உலகமும் ஒரு மயிரிழையில் சுண்டிவிடக்கூடிய நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

சீன ஆட்சியின் விடையிறுப்பு பெரிதும் சுயபாதுகாப்பு குணாம்சத்தில் இருந்தாலும், அதன் நடவடிக்கைகள் முற்றிலும் பிற்போக்குத்தனமானவை ஆகும். சீனாவிலோ அல்லது சர்வதேச அளவிலோ தொழிலாள வர்க்கத்திற்கு எந்த முறையீடும் செய்ய அமைப்புரீதியிலேயே இலாயகற்று, செல்வந்தர்களின் ஒரு சிறிய மிகப்பணக்கார செல்வந்த அடுக்கின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற பெய்ஜிங் அதிகாரத்துவ எந்திரம் இராணுவவாதத்தில் தங்கியுள்ளது, அது சீன தேசியவாதத்தைத் தூண்டிவிட்டு, அவ்விதத்தில் போர் அபாயத்தை உயர்த்தி வருகிறது. அரசுக்கு-சொந்தமான போர்வெறிநாடும் Global Times இல் வெளியான ஒரு தலையங்கம், நேற்று "படுமோசமானதற்கு தயாரிப்பு செய்யுமாறும்" மற்றும் "அப்பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் போர் புரிய அஞ்சவில்லை" என்பதை வெள்ளை மாளிகைக்குக் காட்டுமாறும் சீனத் தலைமைக்கு அழைப்புவிடுத்தது.

மேலும் மேலும், உலக நிலைமையானது முதலாம் உலக போர் மற்றும் இரண்டாம் உலக போருக்கு இட்டுச் சென்ற காலத்தை ஒத்திருக்கிறது. முனீச் மாநாட்டிற்கு முன்னதாக, செப்டம்பர் 1938 இல் ஒரு நேர்காணலில் லியோன் ட்ரொட்ஸ்கி, மோதலுக்கு இட்டுச் செல்லக்கூடிய சம்பவங்களின் புறநிலை தர்க்கத்தை விவரித்தார். “இம்முறையும், இராஜாங்க பேச்சுவார்த்தைகள் ஓர் அழுகிய சமரசத்தை எட்டுவதில் வெற்றியடைவது சாத்தியமாகலாம். ஆனால் அதுவே எப்போதும் தொடர முடியாது. போர் தவிர்க்கவியலாதது, அனைத்திற்கும் மேலாக மிக மிக நெருக்கத்தில் உள்ளது. ஒரு சர்வதேச நெருக்கடி மாறி ஒன்று தொடர்கிறது. இத்தகைய கொந்தளிப்புகள் நெருங்கிவரும் போரின் பிரசவ வேதனைக்கு ஒத்ததாகும். ஒவ்வொரு புதிய வலியும் இன்னும் அதிக கடுமையான மற்றும் அபாயகரமான தன்மையைக் கொண்டிருக்கும்,” என்றார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), ஜூலை 2014 இல் பிரசுரித்த "சோசலிசமும், ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்" என்ற அதன் அறிக்கையில் விளங்கப்படுத்துகையில், ஒருபுறம் பூகோளமயப்பட்ட பொருளாதாரம் மற்றும் காலங்கடந்த தேசிய அரசு அமைப்புமுறைக்கு இடையிலும், மறுபுறம் சமூகமயப்பட்ட உற்பத்தி மற்றும் உற்பத்தி கருவிகளின் தனியுடைமைக்கு இடையிலுமாக, முதலாளித்துவத்தின் அதே அடிப்படை முரண்பாடுகள் தான் உலகைப் போருக்கு உந்திச் செல்கின்றன என்று குறிப்பிட்டது. “மற்றொரு ஏகாதிபத்திய இரத்தஆறு சாத்தியம் என்பது மட்டுமல்ல; அது ஒரு புரட்சிகர மார்க்சிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கம் குறுக்கீடு செய்தால் ஒழிய தவிர்க்கவியலாததும் ஆகும்,” என்றது எச்சரித்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் அறிக்கை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதற்கான அரசியல் அடித்தளத்தை வரைந்தளித்தது. “சமூக ஏற்றத்தாழ்வு பெருகுவது, எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களில் சென்றுமுடிவது என தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற அத்தனை மிகப்பெரும் பிரச்சினைகளுமே இந்தப் போராட்டத்தின் பிரிக்கவியலாத பாகங்களே ஆகும். போருக்கு எதிரானதொரு போராட்டமில்லாமல் சோசலிசத்திற்கான எந்தப் போராட்டமும் இருக்க முடியாது, சோசலிசத்துக்கான போராட்டமில்லாமல் போருக்கு எதிரான எந்தப் போராட்டமும் இருக்க முடியாது. அரசியல் அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கான போராட்டம், வங்கிகள் மற்றும் மிகப்பெரும் பெருநிறுவனங்களைக் கையகப்படுத்துவது, அத்துடன் தொழிலாளர்’ அரசுகளின் ஒரு உலகக் கூட்டமைப்பைக் கட்டியமைக்கின்ற கடமையை ஆரம்பிப்பது என ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், இளைஞர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் தனக்குப் பின்னால் அணிதிரட்டிய தொழிலாள வர்க்கத்தின் மூலமாகவே போர் எதிர்க்கப்பட வேண்டும்.”

ஓராண்டுகளில், அப்பணி புதிய அவசியத்தை கோருகிறது. இப்போராட்டத்தை முன்னெடுக்க அவசியமான புரட்சிகர தலைமையாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் கட்டமைப்பதன் அவசியம் அதன் நடுமையத்தில் தங்கியுள்ளது.

No comments:

Post a Comment