Friday 25 December 2015

மங்குணி அரசியும், லகுடபாண்டியும்.

பெருமழை வெள்ளம், தமிழகத்தை புரட்டிப் போட்டிருக்கிறதோ இல்லையோ, ஜெயலலிதாவையும் அதிமுகவையும் தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறது. எப்போதும் ஆணவமும் அதிகாரமும் கொண்டு பேசும் ஜெயலலிதா முதன் முதலாக “எனக்கென்று யாருமே கிடையாது” என்று கழிவிறக்கத்தோடு புலம்புகிறார்.   தலைமறைவான குற்றவாளி யுவராஜ் வாட்ஸப்பில் ஆடியோ வெளியிடுவது போல, வாட்ஸப்பில் ஆடியோ வெளியிட்டு அதில் “எனக்கு சுயநலமே கிடையாது” என்று பச்சையாக பொய்யை பரப்புகிறார்.

IN21_JAYA_1296f

தமிழகமே வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது போயஸ் தோட்டத்தில் ஓய்வெடுத்தவர், மக்கள் சாக்கடை நீரில் நீந்திக் கொண்டிருந்தபோது ஹெலிகாப்டரில் ஒய்யாரமாக பார்வையிட்டவர், “உங்கள் துன்பங்களை நான் சுமக்கிறேன்” என்று பசப்புகிறார்.    ஆட்சி செய்யவும், தமிழகத்தின் நலனை பேணவும் மக்கள் வாக்களித்தால், வருடத்தில் நான்கு முறை, கொடநாட்டில் ஓய்வெடுக்கும் கோமலவள்ளி, “என் இல்லமும் உள்ளமும் தமிழகம்தான்” என்று பொய்யுரைக்கிறார்.

1991 முதல், மன்னார்குடி மாபியா தமிழகத்தை அடித்த கொள்ளை நாடறியும்.    அந்தக் கொள்ளை சற்றும் குறையாமல், தற்போதும் ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அந்த மன்னார்குடி குடும்பம் பல்வேறு தியேட்டர்களை வாங்கிக் குவித்த வண்ணம் இருக்கிறது.   மன்னார்குடி குடும்பம் நூற்றுக்கணக்கான புதிய நிறுவனங்களை தொடங்கி அந்த நிறுவனங்கள் பெயரில் சொத்துக்களை குவித்து வருவது குறித்து சவுக்கு தளம் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.   சசிகலா இளவரசி, சுதாகரன், சிவக்குமார், கார்த்திகேயன் என்று தற்போதும் மன்னார்குடி குடும்பம் வளைத்துச் சேகரிக்கும் சொத்துக்களின் பட்டியல்கள் வெளியானபடியே உள்ளன.

இந்தச் சொத்துக்களையெல்லாம்  அள்ளிக் குவிக்கும் இந்த மன்னார்குடி கும்பல் இன்றளவிலும் ஜெயலலிதாவோடு போயஸ் தோட்டத்திலேதான் வசித்து வருகிறது.   1996ல் ஒரு முறையும், டிசம்பர் 2011ல் ஒரு முறையும் இந்தக் கொள்ளைக் கூட்டத்தை வெளியேற்றிய ஜெயலலிதா, மீண்டும் இந்தக் கொள்ளைக் கூட்டத்தை போயஸ் தோட்டத்தில் அனுமதித்து, இந்தக் கொள்ளையை தொடரச் செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.  இப்படி இருக்கையில் எனக்கென்று யாருமே இல்லை என்று ஜெயலலிதா வடிக்கும் முதலைக் கண்ணீரை மக்கள் யாரும் நம்பத் தயாராக இல்லை.

மேலும் ஜெயலலிதா வாட்ஸப்பில் ஆடியோ வெளியிட்டுள்ளது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.   ஜெயா குழும தொலைக்காட்சிகள் ஜெயலலிதா கட்டுப்பாட்டிலேதான் உள்ளது.  அது தவிரவும், அவர் முதல்வர் என்பதால், அவருக்கு சொம்படிக்கும் கூடகங்களை உள்ளிட்ட அனைத்து ஊடகங்களும் அவர் உரையை வெளியிடும் என்பதில் சந்தேகம் இல்லை.  அப்படி இருக்கையில், மிக எளிதாக ஒரு வீடியோ பதிவை உருக்கமாக வெளியிட்டிருந்தால், அது மக்களை இன்னமும் அதிகமாக சென்றடைந்திருக்கும்.   ஆனால், அப்படிச் செய்யாமல், ஆடியோ பதிவாக வெளியிட்டது ஏன் என்று கேள்விகள் எழுகின்றன.  இதற்கு ஒரே விடை, வீடியோ பதிவில், அரசு செய்தித் துறை புகைப்படங்களில் செய்வது போல போட்டோ ஷாப் செய்ய முடியாது என்பதே காரணமாக இருக்க முடியும்.

இப்படி போட்டோ ஷாப் செய்யாமல், ஒரு வீடியோவைக் கூட வெளியிட முடியாத நிலையில்தான் ஜெயலலிதா இருக்கிறார்.   வெள்ளத்தை பார்வையிட பிரதமர் ஹெலிகாப்டரில் வருகை தருகிறார் என்ற தகவல் வராமல் இருந்திருந்தால், ஜெயலலிதா நிச்சயமாக வெள்ளத்தை பார்வையிட வந்திருக்கவே மாட்டார்.  அந்த அளவுக்கு எதிலும் ஆர்வமில்லாமல், சொத்துக் குவிப்பு வழக்கின் அடுத்த கட்டத்தை நினைத்து மன உளைச்சலில் இருக்கிறார்.   ஒரு மணி நேரம் தலைமைச் செயலகத்தில் செலவிட்டு அலுவலகப் பணிகளை தினந்தோறும் பார்க்க முடியாத ஒரு நபருக்கு, வரலாறு காணாத வெள்ளத்தில் மக்களை சந்திக்க முடியாத ஒரு நபருக்கு, பத்திரிக்கையாளர்களை சந்திக்க திராணியில்லாத ஒரு நபருக்கு,  மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை மட்டும் எதற்கு என்பதுதான் புரியவில்லை.    மீண்டும் ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடிப்பதற்பதைத் தவிர்த்து வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?

செம்பரம்பாக்கம் ஏரியை டிசம்பர் 1 அன்று இரவு திறந்து  விட்டதன் காரணமாகவே சென்னை தத்தளித்தது என்ற உண்மை சமூக வலைத்தளங்கள் மற்றும் நேர்மையான சில ஊடகங்கள்  மூலமாக அனைவரிடத்திலும் பரவியதையடுத்து, வேறு வழியேயின்றி, மங்குணி அரசியின் லகுடபாண்டியான தலைமைச் செயலாளர் ஞானதேசிகனை வைத்து ஒரு நீண்ட விளக்க அறிக்கையை அளித்துள்ளார்.

K__Gnanadesikan_2230438e

அணையைத் திறந்து விடுவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.   சம்பந்தப்பட்ட அதிகாரிகளே திறந்து விடுவார்கள் என்பது எவ்வளவு பெரிய பொய் என்பதை கடந்த நாண்காண்டுகளாக வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக் குறிப்பை பார்த்தாலே தெரியும்.   “மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவின் ஆணைக்கிணங்க” என்ற வார்த்தைகள் இல்லாமல் ஒரே ஒரு செய்திக் குறிப்பு கூட வெளியானது கிடையாது.   இப்படி ஒரு நிலையில், எந்த அதிகாரிக்கு தன்னிச்சையாக ஏரியைத் திறந்து விட துணிவு வரும் ?

தமிழக பொதுப்பணித்துறையின் விதிகளின் படி, ஏரிகள் மற்றும் அணைகளைத் திறந்து விடுவதற்கான அதிகாரம், பொதுப் பணித் துறையின் தலைமைப் பொறியாளர் வசம் உள்ளது.   ஆனால் 2011ல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நடைமுறையில் தலைமைப் பொறியாளர் உத்தரவு பிறப்பித்ததே கிடையாது.  அனைத்தும் மாண்புமிகு அம்மாவின் ஆணைதான்.

29 நவம்பர் 2015 அன்று, செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விட அனுமதி கோரி பொதுப்பணித் துறை தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியதாகவும், ஆனால், யாருடைய உத்தரவுக்காகவோ காத்திருந்த தலைமைச் செயலாளர் டிசம்பர் 1 இரவு வரை அனுமதி அளிக்கவில்லை என்றும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.    வழக்கமாக இப்படி ஒரு செய்தி வெளியிட்டால், தமிழக அரசு உடனடியாக எடுக்கும் நடவடிக்கை அவதூறு வழக்கு பதிவு செய்வதே.   ஆனால், இந்தச் செய்திகள் தொடர்ச்சியாக வெளி வந்து பல நாட்கள் ஆகியும், எந்த ஊடகத்தின் மீதும் அவதூறு வழக்கு பதிவு செய்யப்படவில்லை.    200க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை பதிவு செய்த தமிழக அரசுக்கு, கூடுதலாக ஒன்றிரண்டு வழக்குகள் பதிவு செய்வது ஒன்றும் சிரமமே அல்ல.   ஆனால், அவ்வாறு செய்யாமல், பத்து நாட்கள் கழித்து லகுடபாண்டியை வைத்து விளக்கம் அளித்திருப்பதே இதில் உள்ள உண்மைக்கு சான்று.

லகுடபாண்டியின்  விளக்க அறிக்கையின்படியே, நவம்பர் 17 அன்று செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 22.3 அடியாக இருந்தபோது 18 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.   நவம்பர் 30 அன்று ஏரியின் நீர் மட்டம் 22.05 என்றும், அப்போது 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார்.   அடுத்த இரு நாட்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையங்கள் குறிப்பிட்டும், வெளிநாட்டு வானிலை ஆய்வு மையங்கள் 50 சென்டி மீட்டர் மழை என்று குறிப்பிட்டிருந்தும், நவம்பர் 30 அன்று வெறும் 800 கன அடி நீரை வெளியேற்றியது பச்சை அயோக்கியத்தனமா இல்லையா ?

எத்தனையோ  எச்சரிக்கைகள் இருந்தும், தமிழக அரசின் தவறான நடவடிக்கையினால்தான் சென்னை நகரம் மூழ்க நேர்ந்தது என்பது அப்பட்டமாக தெரிய வந்துள்ளது.
இதற்கு பொறுப்பாக்கப் படுவது யார் என்பதுதான் தற்போது எழும் கேள்வி.   நவம்பர் 2011ல், டேம் 999 என்ற திரைப்படம் கேரளாவில் வெளியானது.     முல்லைப் பெரியாறு அணை குறித்து அத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.  அணை உடைவது போல காண்பித்தால், இரு மாநில மக்களுக்கிடையே பகையுணர்வு உருவாகும்.  அதனால் திரைப்படத்தை தடை செய்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளது.  இந்தத் தடையை நியாயப்படுத்தி உச்சநீதிமன்றம் வரை சென்றது தமிழக அரசு.

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியின் நீச்சல் குளத்தில், ஒரு சிறுவன் தவறுதலாக விழுந்து இறந்து விட்டான்.   அது விபத்துதான் என்றாலும், பள்ளித் தாளாளர் மீதும், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.   பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகத்தின் பார்ப்பன செல்வாக்கு காரணமாக அப்போது கைது செய்யப்பட்டவர்கள், கைது செய்யப்பட்ட அன்றே விடுவிக்கப்பட்டனர்.

ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த கட்டுமானப் பணிகளின்போது, நடந்த இடிபாட்டில் 10 கட்டுமானத் தொழிலாளர்கள் மரணமடைந்தனர்.   இதையொட்டி சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்ததோடு, ஜேப்பியார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.  பின்னாளில் 25 கோடி மன்னார்குடி மாபியாவுக்கு செலவு செய்து, சிறையிலிருந்து வெளியேறினார் ஜேப்பியார்.
இந்த இரண்டு வழக்குகளுக்கும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து டிசம்பர் 1 அன்று இரவு முன்னறிவிப்பின்றி 29 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட்டதற்கும் என்ன வேறுபாடு ?  முந்தைய இரு வழக்குகளையும் விட, இது இன்னமும் தீவிரமானது.

பொதுப்பணித் துறை ஏரியை திறந்து விடலாம் என்று 29ம் தேதியே கடிதம் எழுதியும், கடுமையான மழை பெய்யும் என்று சர்வதேச வானிலை மையங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தும், டிசம்பர் 1 அன்று இரவு 10 மணி வரை காத்திருந்து திடீரென்று 29 ஆயிரம் கன அடியை திறந்து விட்டதற்கு ஒரே பொறுப்பு லகுடபாண்டி ஞானதேசிகன் மட்டுமே.    ஒரு அரசில் தலைமைச் செயலாளர் பதவிக்கு முதலமைச்சரை விட கூடுதலான பொறுப்பு உண்டு.  ஒரு மாநிலத்தின் அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் அவரே தலைவர்.   ஒரு நிர்வாகத்தின் தலைவராக கருதப்படுவது தலைமைச் செயலாளரின் பதவி மட்டுமே.   உச்சநீதிமன்ற உத்தரவாகட்டும், மத்திய அரசின் கடிதங்களாகட்டும், அனைத்தும், தலைமைச் செயலாளருக்கே வரும்.    அந்த வகையில் நிர்வாகத் தலைமையாக இருக்கும் ஞானதேசிகன், முதலமைச்சரை கலந்தாலோசித்தோ, ஆலோசிக்காமலேயோ செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து உரிய நேரத்தில் முடிவெடுத்திருந்தால், பல நூற்றுக்கணக்கான உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டிருப்பதோடு, பல கோடிக்கணக்கான பொருள் இழப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களை கேட்காமல் ஏரியைத் திறக்க உத்தரவிட்டிருந்தால் அதிகபட்சம் என்ன நடந்திருக்கும் ?    யாரைக் கேட்டு எரி திறக்கப்பட்டது என்று கோபப்பட்டு, மீசை நட்ராஜ் ஐபிஎஸ் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டது போல, ஞானதேசிகனும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்.  மன்னிக்கவும்.  தலைமைச் செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்.  அவ்வளவுதானே ?  தூக்கிலா போடப்பட்டிருப்பார் ?


ஆனால், கேவலம் தன் தலைமைச் செயலாளர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, செம்பரம்பாக்கம் ஏரி உடையும் நிலை வரை தாமதித்து, மிகத் தாமதமாக திறக்க உத்தரவிட்டு, லட்சக்கணக்கான உயிர்களை ஆபத்துக்குள்ளாக்கிய பதவி வெறி பிடித்த ஞானதேசிகனை கழுவில் ஏற்ற வேண்டுமா வேண்டாமா ?     தற்போது தமிழக மின் வாரியம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடனில் மூழ்கி இருப்பதற்கும் ஒரே காரணம் இந்த லகுட பாண்டி மட்டுமே.

இப்படிப்பட்ட இந்த அதிகாரி மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டுமா வேண்டாமா ?

தவறான நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறப்புக்கு காரணமான தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்துள்ளது.

மங்குணி அரசியும், லகுடபாண்டியும் கோடிக்கணக்கில் ஊழல் செய்து கொள்ளையடிப்பது ஒரு புறம் இருக்கட்டும்.   இப்படி கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடும் இவர்கள் தமிழகத்துக்கு எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.

அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.

மரணத் தருவாயில் அலெக்ஸாண்டரின் மூன்று விருப்பங்கள்

மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார்.1)என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் !

2)நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.!

3)என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.!

தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார். அதற்கு அலெக்ஸாண்டரின் பதில்கள்தான் மிகவும் முக்கியமானவை.!!

*தலைசிறந்த மருத்துவர்களால்கூட என்னை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது, சாவை தடுக்க முடியாது என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்காக !

*நான் இந்த பூமியில் சேகரித்த. கைப்பற்றிய பொருட்கள் பூமிக்கே சொந்தமானவை என்பதை தெரியப்படுத்துவதற்காக.!

*எனது கைகள் காற்றில் அசையும்போது, மக்கள் வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் போவதை உணர்ந்து கொள்வார்கள்.!!

நாம் இந்த பூமியில் பிறக்கும்போது கொண்டு வருவதெல்லாம் நாம் இந்த பூமியில் வாழும் காலமாகிய “நேரம் மட்டுமே:”

உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு உங்களின் நேரம் மட்டுமே.!!

Thursday 3 December 2015

பெருவெள்ளம்...பேரவலம் சுமக்கும் மக்கள்... இனியேனும் உரைக்குமா இந்த பாடம்?

சுனாமியையே நேரடியாக எதிர்கொண்ட பகுதிகள் தான் சென்னையும் கடலூரும் நமது மாநிலமான தமிழகமும். ஆனால், திடீரென ஏற்பட்ட அந்த பாதிப்பால் ஏராளமான உயிர் சேதம். அரசு நிர்வாகம் உள்பட யாரும் எதிர்பாராத அந்த சீற்றத்தின் வடுக்கள் இன்னும் கூட நம் மனதை விட்டு அகலவில்லை. ஆனால், இப்போதைய மழை வெள்ளம் அந்த சுனாமி பாதிப்பையே மிஞ்சி நிற்கிற கோரக் காட்சிகளைப் பார்க்கிறோம். தெருக்களில் வெள்ளம், வீட்டுக்குள் தண்ணீர், மாடிகளில் தஞ்சம். குடி நீர்- பால்- அடிப்படை உணவு - மருந்துகளுக்காக அலைபாயும் மக்கள். 
 
 
 
வீடுகளில் தங்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் குடும்பத்தினரை எப்படி பாதுகாப்போம் என்ற திக் திக் பயம் ஒரு பக்கம், அம்மா பசிக்குது என குழந்தை கேட்டுவிடுமோ.. என்ன பதில் சொல்வது என்ற அச்சம் மறு பக்கம், பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு மருந்து மாத்திரைகள் கூட வாங்கித் தர முடியாத நிலையில் இருக்கிறோமே என்ற மனதை நொறுங்க வைக்கும் வேதனை இன்னொரு பக்கம், இத்தனை காலம் குருவி சேர்த்தது மாதிரி சேர்த்த பாத்திரம், பண்டம், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பைக், கார் என எல்லாமே கண் முன்னே தண்ணீரில் மூழ்கி வீணாகிப் போய்விட்டதை நினைத்து, இதையெல்லாம் மறுபடியும் சீர் செய்வதையும் முழுவதும் வீணானதை மீண்டும் எப்படி வாங்குவோம் என்ற பெரும் பீதியான நினைவுகளுடனும் வினாடிகளைக் கழிக்கும் சென்னை, கடலூர், திருவள்ளூரின் குடும்பத் தலைவர், குடும்பத் தலைவிகள், வீட்டை நிர்வகிக்கும் மகன்கள், மகள்கள். 
 
 
அன்று உழைத்தால் தான் சாப்பாடு என்ற நிலையில் இருக்கும் குடும்பங்கள், வேலைகளுக்குப் போக முடியாமல், வேலைகளே கிடைக்காமல் அடுத்த வேலை உணவுக்குக் கூட கந்து வட்டிக்கு வரிசையில் நின்று காசு வாங்கும் அவலம். ரேசன் கார்டுகள், படித்த படிப்பின் அடையாளங்களான சான்றிதழ்கள், காப்பீட்டு பாலிசிகள், வீட்டுப் பத்திரங்கள், வங்கி பரிவர்த்தனை சான்றுகள் என வாழ்க்கையை நடத்திச் செல்லும் அடையாளங்கள் தண்ணீரோடு போய்விட்ட நிலையில், இதையெல்லாம் எப்படி மீண்டும் பெறுவது என்ற தவிப்பு ஒரு பக்கம். மொட்டை மாடிகளில் நின்று கொண்டு வானத்திலிருந்து தண்ணீரையோ, பாலையோ, உணவுப் பொட்டலங்களையோ போட மாட்டார்களா என ஹெலிகாப்டர் சத்தத்துக்காகவும், தெரு வழியே படகோ, அல்லது யாராவதோ வர மாட்டார்களா என கண்களின் கண்ணீருடன் எட்டிப் பார்க்கும் அவலம்.
 
 
 
  இப்படி அவரவரர் கண் முன்னே வாழ்க்கையை அப்படியே வாரி எடுத்துக் கொண்டு போய்விட்டது மழையும் வெள்ளமும். பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பல பாலங்கள் வெள்ளத்தை தாங்கி நிற்க, பாலாற்றில் சமீபத்தில் கட்டப்பட்ட பாலங்கள் வெள்ளத்தில் உடைந்து போய் அரசியல்வாதிகளின் கமிஷன், காண்ட்ராக்டர்களின் பேராசை அசிங்கத்தை நேரடியாக பார்த்து நொந்து கொள்ள வேண்டிய சூழல். டவுன் பிளானிங் ஆக்ட் போன்ற சட்டங்களை ஓட்டுக்காக திருத்தி, திருத்தி.. நீங்கள் முதலில் நிலத்தை ஆக்கிரமிக்கலாம், இத்தனை ஆண்டுகள் இங்கே இருந்தற்காக ஆதாரத்தைத் தந்தால் (அதாவது விஏஓவுக்கு லஞ்சம் தந்து சான்றிதழ் வாங்கி) பட்டா தந்துவிடுவோம் என்ற ஓட்டு அரசியல். இதனால் ஆக்கிரமிக்கப்பட்ட கண்மாய்கள், ஏரிகள், ஓடைகள், கால்வாய்கள். வெள்ளம் எங்கே போகும்? 
 
எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க அதிகாரம் இல்லாத அமைச்சர்கள், அதிகாரிகள். டிவி கேமரா ஓட ஆரம்பித்து ஸ்டார்ட் சொன்னவுடன் வேட்டியை லேசாக மேலே தூக்கியபடி கரை வேட்டிகளுடன் லைனாக நடந்து வந்து போஸ் தரும் அமைச்சர்கள். பின்னால் முதல்வர் ஜெயலலிதா படத்தை தூக்கிப் பிடித்தபடி ஒருவர். கடும் வெள்ளத்தில் அமைச்சரின் ஒவ்வொரு நொடியும் முக்கியம் என்ற நிலையில், வாிக்கு வரி, மாண்புமிகு புரட்சித் தலைவி, இதய தெய்வம் அம்மா அவர்களின் உத்தரவுப்படி இந்தப் பகுதியில் மீட்பு நடவடிக்கை நடக்கிறது என்ற நீட்டி முழக்கும் அம்மா புராணம். அமைச்சர்கள் மட்டுமல்லாமல் அதிகாரிகளும் அம்மாவின் ஆணைப்படி இதைச் செய்கிறோம், அதை செய்கிறோம் என்று உளறும் நிலை. உங்களது ஒவ்வொரு வேலைக்கும் அம்மா உத்தரவு வர வேண்டுமா? ஜெயலலிதா தான் வெள்ளப் பகுதிகளை பார்க்க வரவில்லை என்ற கேள்விக்கு, அதையெல்லாம் நீங்க கேட்கக் கூடாது என பதில் தரும் ஆளும்கட்சிப் பிரமுகர். ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்திய மக்கள் இதைத் கூட கேட்கக் கூடாதா?. உங்களை பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டுமா?. 
 
  புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா என்று நீட்டி முழக்கி நீங்கள், பதவிகளைப் பிடித்து சம்பாதித்துக் கொண்டு இருக்க, உங்களை இந்த மழை வெள்ளத்தில் கூட கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை இல்லையா? தொடர் மழை என்பது தெரியும். பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை தந்து அங்கு பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க வேண்டியது தானே.. அதை விட்டுவிட்டு தினந்தோறும் நாளை விடுமுறை, நாளை விடுமுறை என நீட்டித்துக் கொண்டு இருக்கிறது கல்வித்துறை. காரணம், அந்தத் துறைக்கான அமைச்சர்களிடம் எந்த முன் யோசனையும் இல்லை, அதை விட முக்கியம் அவர்களால் எந்த முடிவும் தானாக எடுக்க முடியாது என்பதும் தான்.
 
 தலைமைச் செயலாளர் கூட முடிவு செய்வது மாதிரி தெரியவில்லை. அவருக்கு மேல் தான் அரசு ஆலோசகர்கள் இருக்கிறார்களே. ஒரு சாதாரண விஷயத்தைக் கூட மேலிடத்துக்குக் கொண்டு செல்ல இடையில் எத்தனை பூசாரிகள்... இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உயிர்கள் எத்தனையோ. நாம் காவல் துறை கணக்கை வைத்துக் கொண்டு முடிவுக்கு வர முடியாது. 
 
அதே போல வெள்ளத்தோடு போன கார்கள், ஆட்டோக்கள், பைக்குகள் எத்தனையோ. பழுதாகி நிற்கும் இந்த வாகனங்களுக்கு மீண்டும் உயிர் தர ஆயிரக்கணக்கான மெக்கானிக்குகள் இரவு- பகலாக உழைத்தாலும் பல மாதங்கள் ஆகும். வீட்டுக்குள் வெள்ளம் வராத மக்கள் தப்பிவிட்டதாக அர்த்தம் இல்லை. அவர்கள் எதையும் வாங்க வெளியே செல்ல முடியாத நிலை. செப்டிக் டாங்குகள் எல்லாம் நிரம்பி, டாய்லெட்களில் இருந்து எல்லாமே ரிவர்சில் மேலே ஏறி வீடுகளுக்குள் கழிவும் வாசனையும். குழந்தைகள் மருத்துவமனைகள் உள்பட பல மருத்துவமனைகளுக்குள் நீர் புகுந்து பச்சிளம் பிஞ்சுகளையும், நோயாளிகளையும் கொட்டு மழையில் நனைய நனைய வெளியேற்றிய காட்சிகளை பார்த்தபோது நெஞ்சு வெடித்துவிட்டது. அந்த மருத்துவமனை ஊழியர்களையும், பெரும் வெள்ளத்தில் டாக்சிகள், ஆட்டோக்கள் வர முடியாத சூழலில், பஸ்களை இயக்கும் போக்குவரத்துக் கழக டிரைவர்கள், கண்டக்டர்கள், டெப்போ ஊழியர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்கலாம்.
 
 எங்க வீட்டுல 3 பேர் தங்கலாம், நான் ப்ரீயா ரீசார்ஜ் செய்றேன், என்கிட்ட எக்ஸ்ட்ரா கேஸ் சிலிண்டர் இருக்கு, என் வீட்டில் 30 பேருக்கு சாப்பாடு ரெடி.. என்னை தொடர்பு கொள்ளுங்கள் என அழைக்கும் உள்ளங்கள், தெருத் தெருவாய் உணவுப் பொட்டலம் ஏந்தியபடி சென்று மக்களுக்கு தரும் இதயங்கள், தனது உயிரை ஒரு கயிற்றிடம் ஒப்படைத்துவிட்டு மற்றவர்களை வலிந்து சென்று மீட்டு வரும் கடவுள்கள்... என சென்னையின் வெள்ளம் மனித நேயத்தையும் வெள்ளமாய் ஓட விட்டிருக்கிறது. மக்களுக்காக திறக்கப்பட்ட திருமண மண்டபங்கள், திரையரங்குகள் ஒரு பக்கம் என்றால் மக்கள் வந்து தங்கலாம் என அறிவித்த கோவில் கூடங்கள், மசூதிகள் என எல்லா புறமும் மதம் வென்ற நிகழ்வுகள். ட்விட்டர், பேஸ்புக்கை ஒரு சமுதாயம் எப்படி உண்மையிலேயே உருப்படியாக உபயோகிக்கலாம் என செல்ஃபி புள்ளைகளுக்கு பாடம் கற்பித்துள்ளது இந்த மழை. அங்கே மாடியில் ஒரு கர்ப்பிணி சிக்கியுள்ளார், இதோ இங்கே ஒரு குழந்தைக்கு பால் தேவை.. தர முடியுமா?. என்னிடம் உள்ள இந்த உணவை யாராவது எடுத்துச் சென்று மற்றவர்களுக்குத் தர முடியுமா என்ற கோரிக்கைகள், ஏக்கங்களை ஏந்திச் சென்று வருகின்றன சமூக வலைத்தளங்கள். 
 
கண்மாய்களை அந்ததந்த கிராம மக்களே தூர் வாரி வந்த விதியை மாற்றி, இனி அதை அரசே செய்யும் என அறிவித்து, தூர் வாராமல், அப்படியே தூர் வாரினாலும் அதையும் அரைகுறையாக செய்து, அதில் 45 சதவீதம் கமிஷன் அடித்துத் தின்று, உடம்பை வளர்த்து, தங்கள் குடும்பப் பெண்களுக்கு நகை, சொத்துக்களை வாங்கிக் குவித்துக் கொண்ட ஒன்றியச் செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், கட்சியின் பிற பிரிவுகளின் கரைவேட்டிகள், கூடவே சேர்ந்து கொள்ளையடித்த காண்ட்ராக்டர்கள் ஆகியோரை சகித்துக் கொண்டதால் மக்களுக்கு இந்த தண்டனை. தூர் வாரப்படாத கண்மாய்கள், ஏரிகள் அதிக நீரை தேக்கி வைக்க முடியாமல் அதை வெளியேற்ற, அந்த நீர் செல்லும் வழிகளான ஓடைகள், கால்வாய்களை கமிஷன் வாங்கிக் கொண்டு, பட்டா போட்டுத் தந்து வீடு கட்ட வைத்த அரசியல்வாதிகளால், ஒழுங்காக- நேர்மையாக வீடு கட்டியவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர். இவ்வளவு பிரச்சனையில் சென்னையில் ஒருவர் மட்டும் தான் மிக அதிகமாக பேசியிருக்க வேண்டும். அவர் பெயர் சைதை துரைசாமி. இவர் தான் இந்த மாநகரத் தந்தை எனப்படும் மேயர். ஆனால், அவர் கடைசியாக பேசிய வெள்ளத்துக்கு முன்பு தான். காரணம், அவரை அம்மா ஓரம் கட்டி வைத்திருக்கிறாராம். இது தெரியவந்ததால் அவரை அதிகாரிகள் முதல் அடிமட்டம் வரை யாரும் மதிக்காமல் போக, அவரும் உத்தரவு போடுவதை நிறுத்திவிட்டார். 
 
மேயர் ஏன் வெளியே வரவில்லை என எதிர்க்கட்சிகள் கூச்சல் போடும் என்பதால் மழை, வெள்ளப் பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிடும்போது (கேமரா.. ஆக்ஷன்) கூடவே ரெயின்கோட் அணிந்தபடி உலா வருகிறார். யாராவது கேள்வி கேட்டால் அவர் படும்பாடு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைவிட பரிதாபம்... அமைச்சர்களின் வாயில் எப்போதும், இதய தெய்வம், புரட்சித் தலைவி அம்மாவின் ஆணைப்படி நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன என்ற ஓட்டை ரெக்கார்ட் பாட்டு. வெள்ளம் பாதித்த பகுதியில் வேனில் இருந்தபடி வாக்காளப் பெருமக்களே என்று அழைத்தவர் தான் இவர்களது தலைவியான ஜெயலலிதா. அப்புறம் இவர்கள் மட்டும் எப்படி இருப்பார்கள்..? இப்படி ஒரு பக்கம் மழை கொடுமை என்றால், இன்னொரு பக்கம் கேடுகெட்ட நிர்வாகத்தின் கொடுமை.. பாவம் வாக்காள பெருமக்கள்!