Sunday 25 December 2016

தமிழனைச் சுடலாம்! கொல்லலாம்! சுட்டவருக்கு விடுதலை நிச்சயம்!

பொற்கைப் பாண்டியன் என்ற மன்னன் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. தனது கரத்தை துண்டாக்கி மக்களுக்கு நீதி வழங்கியவன் அவன். 



நீதி என்று வந்துவிட்டால் அவர், இவர், நமர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை நிரூபித்தவன் பொற்கைப் பாண்டியன்.

அறம், தர்மம், நீதி என்பன ஒத்த கருத்தை எடுத்துரைக்கும் சொற்பதங்கள். அறத்தை தர்மத்தை நீதியை யாரெல்லாம் மீறுகிறார்களோ அவர்களுக்கு அறமே கூற்றாகும்.

எனினும் இவற்றையெல்லாம் இன்று ஏற்பதற்கும் ஆளில்லை. எடுத்துரைப்பதற்கும் ஆளில்லை என்பதாக நிலைமை மாறிவிட்டது.

இதில் எங்கள் நாட்டில் நடக்கின்ற தீர்ப்புக்களை நினைத்தால் நெஞ்சம் வெடித்து விடும். அந்தளவுக்கு நீதியை அநீதி மேலாடி நிற்கிறது.

அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக பெரும்பான்மை இனம் சார்ந்தவர்கள் எக்குற்றம் இழைத்தாலும் அவர்களுக்குத் தண்டனை இல்லை என்பதை உறுதிபடக் கூற முடியும்.

குறிப்பாக போர்க்கால சூழ்நிலையில் எத்தனையோ கொலைகள், குற்றங்கள் நடந்துள்ளதாயினும் தமிழர்களுக்கு தீங்கிழைக்கின்ற பெரும்பான்மை இனத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பெளத்த சிங்கள நாட்டின் விசுவாசிகள் என்பதாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலைமைதான் இலங்கையில் உள்ளது. 

சர்வதேச நாட்டுப் பிரதிநிதிகள் இலங்கைக்கும் தமிழர் பகுதிக்கும் வருகின்ற போது அவர்கள் தமிழ் மக்களைப் பார்த்து போர் முடிந்து விட்டது. நீங்கள் நிம்மதியாக வாழ்கிறீர்கள். இனிப் பிரச்சினை இல்லைத் தானே என்று கூறுவதைக் காணமுடிகிறது.

வெளிநாட்டுப் பிரதிநிதிகளைப் பொறுத்தவரை அவர்கள் யுத்தம் முடிந்ததால் தமிழ் மக்கள் நிம்மதியாக சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்று கருதுகிறார்கள்.

உண்மையில் இலங்கையில் நடந்த மண் மீட்புப் போர் என்பது தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்பட்டதால் ஏற்பட்டதுதான்.

எனவே தமிழ் மக்களுக்கான உரிமை, அவர்களுக்கான அதிகாரங்கள் என்று வழங்கப்படுகின்றதோ அன்றுதான் இலங்கையில் அமைதி ஏற்பட முடியும். இருந்தும் இந்த உண்மையை அறிவதற்கு எவரும் தயாரில்லை. 
 
தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற நிலைமை ஏற்பட வேண்டுமாயின் நீதி சரியாக வழங்கப்பட வேண்டும்.

சிங்கள இனம் என்றால் அதற்கொரு நீதி தமிழ் மக்கள் என்றால் அதற்கு இன்னொரு நீதி என்ற நீதிப்பாடு இருக்கும் வரை இலங்கை ஆட்சி மீதோ, சட்டங்கள் மீதோ தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள முடியாது என்பதே யதார்த்தம்.

2009ம் ஆண்டில் வன்னியில் நடந்த யுத்தம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்தது.

தமிழின அழிப்பு என்று சொல்லுமளவுக்கு தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.
ஆனால் இன்று வரை எந்த நீதியும் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை.

சர்வதேச போர்க்குற்ற விசாரணை இடம்பெறும் என்று நம்பினோம். இருந்தும் அதனைச் வெட்டிச் சரித்து உள்நாட்டில் விசாரணை என்று மாற்றீடு கூறுகிறது நல்லாட்சி.

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று ஆட்சியாளர்கள் நினைத்தால் சர்வதேச விசாரணையை அவர்களே வலிந்து கேட்டிருக்க வேண்டும்.

மாறாக சர்வதேச விசாரணைக்கு அறவே இடமில்லை. அதற்கு அனுமதிக்க முடியாது என்று நல்லாட்சி தடுக்கிறது என்றால் தமிழர்களுக்கு நீதி கிடைக்க விடமாட்டோம் என்பதே அதன் பொருளாகும்.

இந்தவகையில் 2009ல் வன்னி பெரு நிலப்பரப்பில் தமிழ் மக்களுக்கு நடந்த மிகக் கொடூரமான அழிவுகள் எதற்கும் நீதி கிடைக்கப் போவதில்லை என்பதற்கு அப்பால், யுத்த காலத்தில் நடந்த கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போகச் செய்தல்கள் இவை தொடர்பில் எந்த நீதியும் கிடைக்காது.

மாறாக குற்றவாளிகள் தப்பிக்கச் செய்யப்படுவர் அல்லது விடுதலை செய்யப்படுவர் என்பதே யதார்த்தம்.

என்ன செய்வது நாம் தமிழர்கள் என்பதால் தரப்படுகின்ற தீர்ப்பை ஏற்பதுவே எங்கள் தலைவிதியாக இருக்கிறது.

- Valampuri

Monday 17 October 2016

அமெரிக்க நகரங்களை ஆண்டுதோறும் நரகம் ஆக்கும் அசுர வல்லமைப் பேய்மழைச் சூறாவளிகள்

அழுதாலும் பயனில்லை!
தொழுதாலும் பயனில்லை!
கரைமதில் உடைந்து விட்டால்,
காத தூரம் ஓட வேண்டும் அம்மா !
குடியிருக்க இடம் ஏதம்மா ,
கடல் தடுப்பு முறிந்து போனால்!
உடைந்து போகும் பழைய மதில்
ஓலமிட்டு மக்கள்
துயர்ப்படவே  வைக்குதம்மா!
++++++++++
லெட் ஸெப்பெளின் இசைப்பாடல் [Led Zeppelin Lyrics (1929)]
hurricale-buildup-1
பூம்புகார் சூறாவளிச் சுனாமி அடித்துக்
கடல் மூழ்கிப் போன தம்மா!
சுனாமிப் பேயலை மீண்டும்
கடந்து போன ஆண்டில்,
கடும் புயலாய் அடித்து
மீனவர் குடிசைகளை விழுங்கிய தம்மா!
ஒருநாட் பொழுதில் அடித்த
சூறாவளி  பூதப் பேய்மழை
நியூ ஆர்லீன்ஸ்
பெருநகரை நரக மாக்கிய தம்மா!
+++++++++++++++
hurricane-flooding
ஆண்டுதோறும் அமெரிக்காவை அடிக்கும் சூறாவளிப் பேய்மழைகள். 
ஹர்ரிக்கேன் எனப்படும் அசுரச் சூறாவளி பேய்மழை அடிப்புகள் பருவக் காலம் தவறாது, ஆண்டுதோறும் அமெரிக்கத் தென்னக மாநில நகரங்களைத் தாக்கி, நரகப் புழுதியாக்கி பேரளவு நிதிச் செலவை உண்டாக்கி வருகின்றன. அவற்றுக்கு விஞ்ஞானப் பின்புலமாய் உள்ள காரணங்கள் என்ன ?  ஒவ்வோர் ஆண்டிலும் அவற்றின் தாக்குதல்கள் தவிர்க்க முடியாததாய், எதிர்பார்க்க முடியாததாய், தடுக்க இயலாததாய் மக்களுக்குத் துயர் அளிப்பதாய்த் தெரிகின்றன.  மானிடர் வல்லவராய், அறிவுள்ளவராய், பொறிநுணுக்கத் திறமையாளராய் இருப்பினும், 21 ஆம் நூற்றாண்டில், சிறியவராய், அவற்றின் முன்னே ஆற்றலின்றிப் பின்வாங்கிப் போகும் மனித இயலாமை தெளிவாய்ப் புரிகின்றது.  சரி நமக்குப் பருவக் காலப் பேரிடர்களான சூறாவளிப் பேய்மழைத் தடுப்புகள் பற்றி என்ன தெரியும் ?
seawater-surging
2004 அக்டோபரில் கூடிய அமெரிக்க விஞ்ஞானிகள் ஹர்ரிக்கேன் இடர்களை எப்படித் தவிப்பது, தடுப்பது என்று ஆய்வுகள் செய்ய முயன்ற போதிலும், 2016 இல் இதுவரை இந்தக் குறிக்கோள் நெருங்க முடியாதபடித் தூரமாய்ப் போய்விட்டது !  அடுத்த கேள்வி, எங்கே இந்த ஹர்ரிக்கேன்கள் உருவாகின்றன ?  1851 ஆண்டுமுதல் 2012 வரைப் பதிவு செய்தவை ஆக்டபஸ்போல் சுழிவடிவில் உருவானவையே.  2016 ஜூன் வரை அறிந்த விளைவுகளின்படி அவற்றைத் தவிர்க்க முடியாது, தடுக்கவும் முடியாது, திசை மாற்றவும் இயலாது என்பதே !  2016 அக்டோபரில் உருவான பூதச் சூறாவளிப் பேய்மழை “மாத்தியூ” அமெரிக்கத் தென்னக மாநிலங்களைத் [பிளாரிடா, அட்லாண்டா, தென் கரோலினா] தாக்கிப் பல நகரங்கள் நீரோடத்தில் மூழ்கின.  ஐந்தாம் தகுதியில் [Category : 5] அடித்து ஹெய்தித் தீவில் பேரளவு சேதாரம் விளைவித்தது, மாத்தியூ ஹர்ரிக்கேன்.
+++++++++++++
‘ஹரிக்கேன் கேட்ரினா நியூ ஆர்லியன்ஸ் நகர்ப் புறங்களில் பேரளவு சூழ்நிலைச் சீர்கேட்டை விளைவிக்கப் போகிறது. நகர்ப் பாதுகாப்புக் கரைமதில் ஏற்பாடுகளைத் [The City Levee System] தகர்த்துக் கொண்டு நீர் வெள்ளம் கடல் கீழ்மட்டப் பகுதிகளை நிரப்பி, தெருக்களில் நீர்க்குளங்களை உண்டாகிக் குப்பை, நரகல் கழிவுகளுடன் சேர்ந்து, அபாய இரசாயனத் திரவங்களுடன் கலந்து மக்கள் தப்பி வெளியேற முடியாதபடி அடைத்து விடலாம். ‘
இவார் வான் ஹீர்டென் [Ivor Van Heerden, Marine Scientist, Louisiana State University]
hurricane-flooding-4
‘பொஞ்சாட்ர்டிரைன் ஏரியுடன் [Lake Pontchartrain] இணைக்கப்பட்ட கால்வாய் கரை மதில்களில் ஏற்பட்டுள்ள இரண்டு உடைப்புகளைச் செம்மைப் படுத்த முயல்கிறோம். அதற்காக வேண்டிய கல், பாறைகள், மணல் போன்றவையும், கட்டுவதற்குத் தேவையான மணல் மூட்டைகள், தூக்கி யந்திரங்கள், டிரக்குகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றையும் தயாரித்து வருகிறோம். ‘
வால்டர் பெளமி [Walter Baumy, Manager, Army Corps of Engineers (Aug 31, 2005)]
‘தேசீயப் பாதுகாப்பாளர் எண்ணற்ற மணற் சாக்குகளை இட்டு மதில் உடைப்பை மூட முயன்றார்கள். ஆனால் அவை யாவும் இருட்குழியில் விழுந்து மறைவன போல் காணாமல் போகின்றன. ‘
காதிலீன் பிளான்கோ [Louisiana Governor (Aug 31, 2005)]
hurricane-flooding-1
உலகிலே நீளமான ஹரிக்கேன் பாதுகாப்புக் கரைமதில்கள்
2300 ஆண்டுகளுக்கு முன்பு மலைப் பாம்புபோல் கற்களால் கட்டப்பட்ட, உலக விந்தைகளில் ஒன்றான சைனாவின் பெரும் நெட்டை மதில்சுவர் [The Great Wall of China] 1500 மைல் தூரம் நீண்டு செல்பவை. ஆனால் அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடாக் கரையில் இருக்கும் நியூ ஆர்லியன்ஸ் நகரைச் சுற்றிலும் எழுப்பியுள்ள குட்டைக் கரை மதில்கள் [Levees] 340 மைல் [560 மி.மீ] தூரம் கட்டப்பட்டு, கடல் மட்டத்துக்குத் கீழாக இருக்கும் பெரும்பான்மையான பகுதிகளை நீர் பாய்ந்து நிரப்பாமல் பாதுகாத்து வருகின்றன. நீளத்திலே சைனாவின் பெரு மதிலுக்கு குறைந்த தாயினும், உலகிலே குட்டை மதில்களில் மிக நீண்டதாக இந்த கரை மதில்களைக் கூறலாம். நியூ ஆர்லியன்ஸ் நகரத்தின் வடக்கே பொஞ்சார்ட்டிரைன் ஏரி [Lake Pontchartrain], கிழக்கே போர்ன் ஏரி [Lake Borgne], தெற்கில் ஊடே செல்லும் மிஸ்ஸிஸிப்பி நதி, பிறகு சிதறிக் கிடக்கும் மெக்ஸிகோ வளைகுடாப் பகுதிகளால் சூழப்பட்டது! கால மாறுபாட்டாலும், எப்போதும் ஹரிக்கேன் சூறாவளிகள் படையெடுக்கும் பாதையில் இருப்பதாலும், அந்த பகுதிகளின் நீர் மட்டம் அடிக்கடி உயர்ந்து நகரின் கீழ்த்தளப் பரப்புகளில் பாய்ந்து நிரப்பா வண்ணம் பாதுகாப்பு மதில்கள் கட்டப் பட்டிருக்கின்றன.
hurricane-flooding-2
சென்ற நூற்றாண்டில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 1965 செப்டம்பரில் தீவிரம்: 3-4 [Category: 3-4] கொண்ட ஹரிக்கேன் பெட்ஸி [Hurricane Betsy] கடைசியாக அடித்த சூறாவளிப் பேய்மழையில் நியூ ஆர்லியன்ஸ் நகரம் அதிர்ஷ்ட வசமாகப் பெருஞ் சேதத்திலிருந்து தப்பியது. ஆனால் பாதுகாப்பு மதில் தடுப்புகளிலும், சில உள்ளக நகராட்சிப் பகுதிகளிலும் [St. Charles, St. Bernard, Plaquemines Parishes] நீர் மட்டம் 23 அடி வரை உயர்ந்து விட்டது. மிகக் கடுமையான தீவிரம்: (4-5) கொண்டு நியூ ஆர்லியன்ஸ் நகரை மோதப் போகும் ஹரிக்கேன் கேட்ரினாவைப் பாதுகாப்பு மதில்கள் தாங்கிக் கொள்ள மாட்டா வென்று கேட்ரினா தாக்குவதற்கு முன்பே பல நிபுணர்கள் மீண்டும், மீண்டும் தமது எச்சரிக்கையை வெளிட்டனர். மதில்கள் சில மண் மேட்டாலும், சில இரும்புத் தட்டுகளாலும், சில காங்கிரீட் சுவர்களாலும் கட்டப் பட்டவை. ஆனால் அவை யாவும் தீவிரம்: 3 தாக்குதலுக்கே கட்டப் பட்டதால், கேட்ரினாவின் வேங்கை அடியைத் தடுத்துக் கொள்ள ஆற்றல் இல்லாதவை என்று முன்னெச்சரிக்கை செய்தது மெய்யாகவே இம்முறை நிகழ்ந்து விட்டது! புகழ் பெற்ற நியூ ஆர்லியன்ஸ் நகரைக் கடல் வெள்ளமும், புயலும் அடித்துக் கடல் நீரால் மூழ்க்கிப் பேரளவு நாசத்தை விளைவித்து விட்டது!
hurricane-flooding-3
நியூ ஆர்லியன்ஸ் கரைமதில்கள் சொல்லும் கதை
சூறாவளிக் காற்று அடித்த ஒருநாள் கழித்து, 2005 ஆகஸ்டு 30 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று இரண்டு மதில் அணைகள் உடைக்கப்பட்டு, நகரின் 80% கடல் மட்டம் தாழ்ந்த பகுதிகளில், கடல் வெள்ளம் நிரம்பியது. முதலில் பேய்க்காற்று மணிக்கு 150 மைல் உச்ச வேகத்தில் தாக்கிக் கடல் வெள்ளத்தால் அடித்து, கரைமதிலில் 200 அடி அகலத்தைப் பெயர்த்து கடலே நகருக்குள் நுழைந்தது! அடுத்து காற்றின் வேகம் மணிக்கு 100 மைலாகத் தணிந்தாலும், கடல் நீரின் வலுவில் மதில் உடைப்பு 500 அடியாக அகன்று கடல்நீர் திமுதிமுவென நகருக்குள் அலை அலையாய் நுழைந்து தெருவெல்லாம் 20 அடி உயரத்துக்கு மேலாக நீர் நிரம்பியது. நாகரீகப் புராண நகரமான நியூ ஆர்லியன்ஸில் உள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், வாணிபக் கட்டடங்கள், வீடுகள், குடில்கள் யாவும் ஒருநாளில் மூழ்கிப் போயின!
hurricane-matthew-mapping
ஹரிக்கேன் மாத்தியூவின் போக்கு
2003 ஆண்டு முதல் ஈராக் போருக்குப் பிறகு கரைமதில் புதுப்பிப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க நிதித்தொகை [Federal Fund] குறைந்து கொண்டே வந்தது. அரசாங்க நிதிவளம் ஈராக் போரைத் தொடரவும், உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், வரிக் குறைப்பு ஈடுக்கும் பங்கிடவே பற்றாமல் குழி விழுந்தது. 2004 ஆம் ஆண்டில் பொஞ்சார்டிரைன் ஏரிக் கரைமதில்களை மேம்படுத்த புஷ் அதிகார வர்க்கம் 20% குறைந்த அளவு தொகையைத் தருவதாகச் சொன்னது.
1. 2004 ஆண்டில் பொஞ்சார்டிரைன் ஏரிப் பகுதி ஹரிக்கேன் பாதுகாப்புக்கு ஒதுக்கிய நிதி யில்லாமையால் 20% [750 மில்லியன் டாலர்] மதிப்பளவே புஷ் அதிகார வர்க்கம் அளிப்பதாய் வாக்களித்தது.
2. 2005 ஆண்டில் மேற்கண்ட திட்டத்துக்கு 20 மில்லியன் டாலர் தேவைப்பட்ட போது, புஷ் அரசாங்கம், பட்ஜெட்டில் 3.9 மில்லியன் டாலரே ஒதுக்க முன்வந்தது.
3. காத்திருக்கும் காலம் நீடிக்க நீடிக்க, பிரச்சனைகள் பெருகி நிதிச் செலவை மிகையாக்கும். சில கரைமதில் செப்பனிடும் திட்டங்களை முடித்த கான்டிராக்டருக்கு, இன்னும் 5 மில்லியன் டாலர் தொகை கொடுக்கப் படாமலே இருக்கிறது.
sheltered-people
நிரம்பிய வெள்ளத்தை வெளியேற்றுவதில் பிரச்சனைகள்
அமெரிக்க இராணுவப் படையினர் கரைமதில்களில் உடைபட்ட பகுதிகளைச் செப்பனிட அரும்பாடு பட்டனர். இரட்டைச் சுழலிகள் சுழலும் CH-53 ஹெலிகாப்டர்களில் பறந்து கொண்டு 1360 கிலோ கிராம் சாக்கு மண் பைகளைத் தொப்பென இறக்கி உடைப்பை அடைக்க முயன்றார்கள். அது பலன் அளிக்கவில்லை! அடுத்து பெரும் இரும்புத் தொட்டிகளில் கற்களை நிரப்பி இடைவெளியை மூட முற்பட்டார்கள். அம்முறையும் பலன் தரவில்லை! நகரின் கடல்மட்டத் தணிவுப் பகுதிகளின் தேக்கு வெள்ளத்தை வெளியேற்ற ஆற்றல் மிக்க 22 பூத பம்பு நிலையங்கள் இருந்தாலும், அவை யாவும் நீரில் மூழ்கிப் போனதால் அவற்றை நீர்ப் பாதிப்பிலிருந்து முதலில் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தற்போது மூன்று பம்பு நிலையங்கள் செம்மை யாக்கப்பட்டு நீரை வெளியேற்றி வருகின்றன. அத்துடன் அபாய கால தற்காலிய பம்புகளை நிறுவி, நீர்
நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. கடல் மட்டத்துக்குத் தணிவான பூதத் தொட்டி போல் நீர் கட்டிக் கிடக்கும் நியூ ஆர்லியன்ஸ் வெள்ளத்தையும், மற்றுமுள்ள சுற்றுப்புறப் பகுதிகளின் தேக்க நீரையும் வெளியேற்ற 24 முதல் 80 நாட்கள் ஆகலாம் என்று ஊகிப்படுகிறது.
katrina-flooding
கரைமதில்களைச் செப்பனிடும் பணிகள்
நியூ ஆர்லியன்ஸ் நகரின் பெரும்பகுதிகள் கடல் மட்டத்திற்குச் சராசரி 6 அடித் தணிவாக உள்ளன. எல்லாவற்றிலும் கீழான தளம் 20 அடி தணிவாகவும், மேலான தளம் ஓரடி தணிவாகவும் இருப்பதாக அறியப்படுகிறது. ஏறக்குறைய நகரின் பாதிப்பகுதி [907 சதுர கி.மீடர்] நீர் மயமாகவும், மீதிப் பாகம் மட்டுமே நில மயமாகவும் இருக்கின்றது. இயற்கையாகவே உண்டாகும் நீர் வெள்ளத் தாக்குதலை நியூ ஆர்லியன்ஸ் தவிர்க்க முடியாததால், எஞ்சினியர்கள், கால்வாய்கள், கரை மதில்கள், நீர் வெளியேற்றுப் பம்புகள் கொண்ட மிகவும் சிக்கலான சில முறைகளை அமைத்து, நகரின் வெள்ளத் தேக்கங்களைக் கையாள கட்டி யுள்ளனர். குறைந்த அளவு [2.5 செ.மீ] மழைகூட சில பகுதிகளில் சிறிது நீர்த் தேக்கத்தை உண்டாக்கித் தொல்லை கொடுத்து விடும். நகரின் சராசரி ஆண்டு மழைப் பொழிவு 90 செ.மீ.
new-orleans-1
நியூ ஆர்லியன்ஸ் நகரை உருவாக்கிய பிரெஞ்ச் நிபுணர்கள் 1718 ஆம் ஆண்டு முதல் கரை மதில்களைக் கட்டி நகரின் கடல் மட்டத் தணிவுப் பகுதிகளைப் பாதுகாத்தனர். அதுமுதல் பிற்காலச் சந்ததிகளும் நகரின் கரை மதில்களைச் செம்மைப் படுத்தி அவற்றின் நீளம், உயரம், வலு போன்றவற்றைத் தொடர்ந்து விருத்தி செய்து வந்துள்ளனர். 1965 இல் ஹரிக்கேன் பெட்ஸி நியூ ஆர்லியன்ஸ் கடற்கரைப் பகுதியைத் தாக்கி நீர் வெள்ளம் தேங்கிப் பாதகம் விளைந்த போது, கரைமதில்களின் உயரம் பல மீடர்கள் அதிகமாக்கப் பட்டன. ஆயினும் தீவிரம்: (4-5) கொண்ட ஹரிக்கேன்களின் அடியைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் அம்மதில்களுக்கு அறவே இல்லை. நியூ ஆர்லியன்ஸ் நகரைச் சுற்றியுள்ள குட்டைக் கரைமதிகள், நாளுக்கு நாள் புதைந்து போய் அவற்றின் உயரங்கள் குன்றி வருகின்றன. அவற்றைத் தொடர்ந்து கண்காணித்து எஞ்சினியர்கள் செம்மைப் படுத்தினாலும், எடுத்த பணிகள் முழுவதும் இதுவரை முடிவடைய வில்லை.
new-orleans-city-1
பெருநகரைப் பெருநரக மாக்கிய ஹரிக்கேன் கேட்ரினா
நியூ ஆர்லியன்ஸ் நகரம் சுமார் 480,000 பேர் வாழ்வதற்குரிய இல்லங்களைக் கொண்டது. ஆனால் அதன் வாணிபத் தொழில் துறைகளுக்கு வந்து போகும் மக்கள் தொகையையும் சேர்த்தால் 1.3 மில்லியனுக்கு மேற்பட்டது என்று யூகிக்கப் படுகிறது. இப்போது ( செப் 7, 2005) அடித்த கேட்ரினாவில் 10,000 பேருக்கு மேலாக இறந்திருக்கலாம் என்று அறியப் படுகிறது. ஆரம்பத்தில் 80% பரப்பாக இருந்து ஒரு வாரம் கழித்து நீர் மட்டம் குறைந்து தற்போது நகரின் 60% பரப்பில் மாசுகள் படிந்த வெள்ளம் சூழ்ந்து, விஷப் பண்டங்கள் கலந்து, பாக்டாரியா பெருகிப் பாதுகாப்புக்குப் மேல் 45,000 மடங்கு கூடி விட்டது என்று அறிவிக்கப் படுகிறது. நீர் வெளியேற்றிப் பம்புகள் நகரின் அசுத்த வெள்ளத்தை நீக்க இன்னும் பல வாரங்கள் ஆகலாம் என்று எஞ்சினியர்கள் கூறுகிறார்கள்.
new-orleans-3
நியூ ஆர்லியன்ஸ் நகர் முழுவதும் நாசமாகிப் பெரும்பான்மையான நகர மக்கள் வெளியேறி விட்டதால், 400,000 பேர்கள் உழைப்பும், ஊதியமும் இழந்து, மாநில அரசாங்கத்தின் வருமானம் பெருத்த அளவில் சிறுத்து விட்டது. நீர்த் தேக்கங்களை வெளியேற்றி, கழிவு நீர் ஏற்பாடுகளைச் சீராக்கி, நகரத்தைச் சுத்தீகரித்துப் புத்துயிர் உண்டாக்கவும் குடிநீர், மின்சாரம், எரிவாயு, போக்குவரத்து, தகவல், வசதிகளைச் செப்பனிடவும் நிதித்தொகை (50-60) பில்லியன் டாலர் ஆகலாம் என்று தற்போது எதிர்பார்க்கப் படுகிறது. இனிவரும் அடுத்த 10 ஆண்டுகளில் எஞ்சினியர்கள் [Army Corps of Engineers] ஸேலா நீர் தேக்கக் கட்டுப்பாடுத் [Southeast Louisiana Urban Flood Control Unit (SELA)] திட்டத்தில் 430 மில்லியன் டாலர் செலவு செய்து, கரைமதில்களின் உயரம், ஆற்றலை அதிகரிக்கவும், புது பம்பு நிலையங்கள் கட்டவும் நகராட்சியில் வழிகள் வகுக்கப் பட்டுள்ளன. ஆயினும் உயிரில்லாத நியூ ஆர்லியன்ஸ் நகரம், நகர நடப்பு உள்ளமைப்புகளை [Infrastructure] மீண்டும் உருவாக்கி ஓரளவு இயங்க மூன்று அல்லது ஐந்தாண்டுகள் கூட ஆகலாம்.
sheltered-people



சி. ஜெயபாரதன், கனடா

Sunday 16 October 2016

கடன் வாங்கவில்லை என்றாலும் கிரெடிட் ஸ்கோர் முக்கியம் என்று தெரியுமா..?

நீங்கள் கடன் வாங்கவில்லை என்றாலும் உங்களுக்கு கிரெடிட் ஸ்கோர் முக்கியம் என்று கூறப்படுகிறது. எனவே நாம் இங்கு கிரெடிட் ஸ்கோர் எதற்கெல்லாம் நமக்குத் தேவைப்படுகிறது என்று இங்குப் பார்ப்போம். 
 
 
 
துல்லியம் உறுதிசெய்தல் கிரெடிட் தகவல் அறிக்கையில் நீங்கள் வாங்கிய கடனிற்கான வரலாறு மற்றும் கடன் பெற்ற வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடம் நீங்கள் சரியான முறையில் அதைச் செலுத்தி உள்ளீர்களா என்று அனைத்தையும் அதில் சரிபார்க்க இயலும். வருடத்திற்கு ஒரு முறை அதை நீங்கள் சரிபார்ப்பதன் மூலம் உங்களது கடன் அறிக்கை சரியாக புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்ள இயலும். 
 
மேலும் ஏதேனும் தவறு நடந்து இருந்தால் இணைய வழியாக விவாதம் செய்து அதைச் சரி செய்யலாம். மோசடிக்கான சாத்திய கூறுகள் தனி நபர் ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் அவ்வளவு எளிதாக மோசடிகளைச் சந்திக்க கூடியது அல்ல. ஆனால் சில நேரங்களில் தவறான தகவல்கள் அல்லது ஏதேனும் பிழைகள் நேர்வதை வாடிக்கையாளர்கள் சரிபார்ப்பதன் மூலம் திருத்திக் கொள்ளலாம். கடன் கணக்கை கண்காணித்தல் கிரெடிட் அறிக்கையில் நீங்கள் வாங்கியதற்கான கடன் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டு இருக்கும். 
 
இதைப் பயன்படுத்தி உங்கள் கடன் கணக்கை எளிதாகக் கண்காணிக்க இயலும். இதில் நீங்கல் வைத்துள்ள கிரெடிட் கார்டு, உங்கள் மனைவி அல்லது குழந்தைகள் வைத்துள்ள கார்டுகளின் விவரங்களையும் பார்க்க இயலும். பிழை நேர வாய்ப்பு நீங்கள் கடன் ஏதும் பெறவில்லை, ஆனால் உங்கள் பெயரில் கடன் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இவ்வாறு ஏதேனும் பிழை நேர்ந்திருந்தால் உடனடியாக இதன் மேல் நடவடிக்கை எடுத்துச் சரி செய்ய முயலவும். 
 
கிரெடிட் ஹெல்த்தை பாராமரிப்பது எப்படி? 
 
உங்கள் கிரெடிட் அறிக்கையை ஆராய்வதன் மூலம் உங்களுடைய நிதி ஆரோக்கியம் எந்த அளவில் இருக்கிறது என்பதைப் பார்க்க இயலும். மேலும் அதில் நீங்கள் எவ்வளவு கடன் வாங்கி உள்ளீர்கள் இன்னும் அதைச் சரியாக திருப்பிச் செலுத்தி வருகிறீர்களா எவ்வளவு தவனை இன்னும் உள்ளது என்று அனைத்தையும் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். 
 
கிரெடிட் வரலாற்றை எப்படி உருவாக்குவது? 
 
நீங்கள் புதிய கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் புதிய கிரெடிட் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பித்து அதைப் பெற்றவுடன் அதில் நீங்கள் ஏதேனும் கடன் பெற்று அதைச் சரியான முறையில் திருப்பி செலுத்தி உங்களது கிரெடிட் வரலாற்றை உருவாக்கலாம். இந்தக் கடன் வரலாற்றை உருவாக்க நீங்கள் புதிய வாடிக்கையாளராக இருக்கும் போது குறைந்தது 6 மாத காலம் தேவைப்படும். தனி நபர்கள் தங்களது கிரெடிட் ஸ்கோரை அவ்வப்போது கண்காணித்து வருவது நல்லது. உங்கள் உடல் ஆரோக்கியத்தை எப்படி நீங்கள் சரிபார்த்துக் கொள்கிறீர்களோ அவ்வாறு நிதி ஆரோக்கியத்தையும் சரிபார்க்க வேண்டும். 
 
கிரெடிட் ஸ்கோர் அட்டவணை 
 
கிரெடிட் ஸ்கோர் 300 முதல் 500 வரை உள்ள போது மிக அதிக ரிஸ்க்கில் இருக்கிறீர்கள் அதாவது முக்கியமாக சில கடன் தவணைகளை உடனே நீங்கள் செலுத்த வேண்டும் என்பதைக் குறிப்பதாகும். 
 
500 - 650க்கு இடையில் கிரெடிட் ஸ்கோர் இருக்கிறது என்றால் அதிக ரிஸ்க்கில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். 
 
650 -750க்கு இடையில் உங்களது கிரெடிட் ஸ்கோர் இருக்கிறது என்றால் மிதமான ரிஸ்க்கில் உள்ளீர்கள் என்பதாகும். 
 
750-850க்கு இடையில் உங்களது கிரெடிட் ஸ்கோர் இருக்கிறது என்றால் குறைவான ரிஸ்க் ஸ்கோர் அளவு ஆகும். 850க்கும் கூடுதலாக இருந்தால் உங்களது கிரெடிட் ஸ்கோர் மிகவும் குறைவான ரிஸ்க் நிலையில் உள்ளது என்பதைக் குறிக்கும்.

Thursday 1 September 2016

சம்பந்தர் சிந்திப்பது சரியா?

அரசியல் அமைப்பு எனப்படுவது சாதாரண சனங்களைப் பொறுத்தவரை ஒரு கடினமான வறண்ட பாடப்பரப்பு. அரசறிவியல் மாணவர்களால் அல்லது ஆய்வாளர்களால் நுணுகி ஆராயப்படும் இவ் விடயப்பரப்பை சாதாரண வாசகர்கள் விரும்பிப் படிப்பது குறைவு.

ஈழத்தமிழர்கள் மத்தியில் அரசியலமைப்பு விவகாரங்களைப் பற்றி இதுவரையிலும் வெளிவந்திருக்கக் கூடிய பெரும்பாலான நூல்கள் ஒன்றில் பரீட்சை மைய நோக்குநிலையிலிருந்து எழுதப்பட்டவை அல்லது ஆய்வு நோக்கு நிலையிலிருந்து எழுதப்பட்டவை. அரசியலமைப்பை சாதாரண சனங்களும் விளங்கத்தக்க விதத்தில் எளிமையாகவும் சுவாரசியமாகவும் எழுதத்தக்க விமர்சகர்கள் தமிழ்த்தேசியப் பரப்பில் மிகச்சிலரே உண்டு. அவர்களில் ஒருவரே மு.திருநாவுக்கரசு. அவருடைய அரசியலமைப்பைப் பற்றிய ஒரு நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. வவுனியாவிலும், லண்டனிலும் ஒரே நாளில் வெளியிடப்பட்ட இவ் நூலானது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான காலகட்டத்தில் வெளிவந்திருக்கிறது.

அரசியலமைப்பு விவகாரங்கள் கடினமானவைதான் என்ற போதிலும் அவை பற்றி கற்றகவும், தெளியவும் வேண்டிய ஒரு காலகட்டத்தில் இப்பொழுது ஈழத்தமிழர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு ஒன்று விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முதலில் இப் புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறவேண்டி இருக்கும். அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தில் இப்புதிய அரசியலமைப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்க வேண்டும். அவ்வாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்குவதற்கு ஆறு வாக்குகள் தேவைப்படுகின்றன. அந்த ஆறு வாக்குகளை அரசாங்கம் இரண்டு வழிகளில் பெறமுடியும். ஒன்று கூட்டமைப்பிடம் இருந்து பெறுவது, இரண்டு மகிந்த அணிக்குள் இருந்து மேலும் ஒரு தொகுதியினரை உருவி எடுப்பது. கூட்டமைப்பிடம் தங்கியிருந்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்தவரை கூட்டமைப்போடு ஏதோ ஓர் இணக்கத்திற்கு வரவேண்டியிருக்கும் அல்லது மகிந்த அணிக்குள் இருந்து ஆட்களைக் கழட்டுவதாக இருந்தால் சாம, பேத, தான,தண்டம் என்று ஏதாவது ஒரு வழியில் முயற்சிக்க வேண்டியிருக்கும்.

கிடைக்கப்பெறும் தகவல்களின்படி எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்திடமிருந்து ஒர் அறிவித்தல் வந்துள்ளது. அதன்படி இப்போது அவர்களிடமுள்ள வாகனத்தைத் தவிர மேலும் ஒரு புதிய வாகனம் அவர்களுக்கு வழங்ப்படக்கூடும். அது மிகவும் விலையுயர்ந்த சொகுசு வாகனமாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வாகனத்திற்கு வேண்டிய ஒரு சாரதிக்குரிய விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சலுகைகளை வழங்குவதன் மூலம் மகிந்த அணியை மேலும் பிளவுபடுத்தலாம். அதற்குள்ளிருந்து உருவக்கூடிய ஆட்களை உருவி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை உருவாக்கலாம். அப்படிப்பட்ட ஒரு பெரும்பாண்மை உருவாக்குமிடத்து தமிழ் உறுப்பினர்களின் வாக்குகளில் தங்கியிருக்கும் தேவை ஏற்படாது. இதுவும் சிலசமயம் தீர்வின் அடர்த்தியை குறைத்து விடலாம்.

எப்படியோ மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுமிடத்து புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படும். அதன்பின் அது பொதுசன வாக்கெடுப்பு ஒன்றிற்கு விடப்படும். இப்போது உள்ள நிலமைகளின்படி இரண்டு விடயங்கள் அந்த வாக்கெடுப்பின் முடிவை தீர்மானிக்ககூடும். முதலாவது மகிந்த அணி எவ்வளவு தூரத்திற்கு அதைக் குழப்ப முடியும் என்பது, இரண்டாவது தமிழ் மக்கள் எடுக்கப்போதும் முடிவு எத்தகையது என்பது. தமிழ் மக்கள் அந்த வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் புதிய அரசியலமைப்பு மக்களாணையைப் பெற்று விடும். மாறாக தமிழ் மக்கள் வாக்களிப்பை பகிஷ;கரித்தாலோ அல்லது எதிராக வாக்களிக்க நினைத்தாலோ என்ன நடக்கும்?

சில சமயம் நாட்டில் இப்பொழுது நிலவும் ஸ்திரத்தன்மை குலைந்து போய்விடும். இலங்கைத்தீவு தொடர்பிலான மேற்கைத்தேய மற்றும் பிராந்திய வியூகங்கள் குழப்பப்படலாம். தமிழ் மக்களின் கேந்திர முக்கியத்துவம் மறுபடியும் உலக சமூகத்திற்கு உணர்த்தப்படலாம். நாடு மீண்டும் ஒருமுறை நிச்சயமற்றதோர் அரசியல் சூழலுக்குள் தள்ளப்படலாம். அதாவது தமிழ் மக்கள் எடுக்கப்போகும் முடிவு இந்த இடத்தில் நிர்ணயகரமானதாக இருக்கும்.

சில சமயம் தமிழ் மக்கள் மகிந்தவைப் பழி வாங்கவேண்டும் என்று இதற்கு முந்தைய இரண்டு தேர்தல்களிலும் சிந்தித்ததைப் போன்று சிந்திப்பார்களாக இருந்தால் இப்போது இருக்கும் ஸ்திரத்தன்மை தொடர்ந்தும் பெலப்படுத்தப்படும். எனவே தமிழ் மக்கள் எடுக்கப் போகும் முடிவுகளே இப் பிராந்தியத்தின் வலுச்சமநிலையை தீர்மானிக்கக் கூடிய ஓர் அரசியல் சூழல் இன்னும் சில மாதங்களில் இலங்கைத் தீவில் ஏற்படக்கூடும்.

ஆனால் வவுனியாவில் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியிட்டு வைக்கப்பட்ட பொழுது அதில் உரையாற்றிய புளட் இயக்க தலைவர் சித்தார்த்தன் கூறியவற்றின் அடிப்படையில் பார்த்தால் புதிய அரசியலமைப்பானது எதிர்பார்க்கப்படும் கால எல்லைக்குள் நாளாளுமன்றத்தில் சமர்;ப்பிக்கப்படுமா? என்ற ஐயமும் எழுகின்றது. சித்தார்த்தன் புதிய அரசியலமைப்பிற்கான உபகுழு ஒன்றில் அங்கம் வகிக்கின்றார். அந்த உபகுழுவைக் கூட்டுவதில் உள்ள கஷ;டங்களை அவர் அந்த உரையின் போது சுட்டிக் காட்டினார். ஆகக்குறைந்தது மூன்று உறுப்பினர்களாவது வருகை தந்தால்தான் ஓர் உபகுழுவைக் கூட்டமுடியுமாம். அவ்வாறு மூன்று உறுப்பினர்களைச் சேர்த்து தமது உபகுழுவைக் கூட்டுவதற்கு தாம் மிகவும் கஷ;டப்படுவதாகவும் அவர் அதில் சொன்னார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை மாற்றுவது, தேர்தல் முறையை மாற்றுவது ஆகிய மூன்று பிரதான அம்சங்களிலும் உடன்பாடு எட்டப்படாத வரையிலும் புதிய அரசியலமைப்பு அதன் இறுதி வடிவத்தை பெறமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே எதிர்பார்க்கப்படும் ஒரு கால எல்லைக்குள் புதிய அரசியலமைப்பு வாக்கெடுப்பிற்கு விடப்படுமா என்ற கேள்வி எழக்கூடிய விதத்தில் அவருடைய உரை அமைந்திருந்தது.

இப்படியாக புதிய அரசியலமைப்பானது எப்பொழுது வாக்கெடுப்பிற்கு விடப்படும் என்பது தொடர்பில் சந்தேகங்கள் உண்டென்ற போதிலும் எதிர் காலத்தில் என்றைக்கோ ஒரு நாள் அப்படியொரு வாக்கெடுப்பை தமிழ் மக்கள் எதிர் கொள்ள வேண்டி வரலாம். அப்படியொரு நிலமை வரும் பொழுது கேந்திர முக்கியத்துவம் மிக்க தமது வாக்குகளை எவ்வாறு பிரயோகிப்பது என்பது தொடர்பில் அதாவது தமது அரசியல் பேரத்தை எப்படி மிக உயர்வாக வைத்துக் கொள்வது என்பது தொடர்பில் தமிழ் மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டிய ஒரு காலகட்டம் இதுவாகும். இப்படியொரு காலச்சூழலில்தான் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளிவந்திருக்கிறது. அந்நூலின் உள்ளடக்கத்தை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்.
இலங்கைத் தீவின் யாப்பு வரலாறு எனப்படுவதே இனஒடுக்கு முறையின் வரலாறுதான்.

சிங்கள, பௌத்த மேலாண்மை வாதமானது யாப்பை ஓர் ஒடுக்கும் கருவியாகவே கையாண்டு வந்திருக்கிறது. இவ்வாறு தமிழ் மக்களை ஒடுக்கும் ஒரு யாப்பு மரபெனப்படுவது பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரத்தின் ஒரு தொடர்ச்சியே என்று மு.திருநாவுக்கரசு கூறுகின்றார். பிரித்தானியர் இச் சிறிய தீவை ஆண்ட போது முதலில் தமிழ்த் தலைவர்களை அரவணைத்து அதன் மூலம் சிங்களத் தலைவர்களைக் கையாண்டார்கள்; என்றும் ஆனால் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் விளைவாக தமிழ் மக்கள் காந்தியத்தின்பால் ஈர்க்கப்பட்டதை அடுத்து இந்தப் பிரித்தாளும் பொறிமுறையில் பிரித்தானியர் மாற்றத்தை ஏற்படுத்தினர் என்றும் மு.திருநாவுக்கரசு கூறுகின்றார்.

அதாவது ஹன்டி பேரின்பநாயகம் போன்ற தமிழ் தலைவர்கள் காந்தியின் அபிமானிகளாக மாறிய ஒரு பிராந்தியச் சூழலில் ஈழத்தமிழர்கள் இந்;தியச் சுதந்திரப் போராட்டத்தின் ஆதரவாளர்களாக காணப்பட்டனர். இதைக் கண்டு அஞ்சிய பிரித்தானியா சிங்களத் தலைவர்களை அரவணைக்கும் ஒரு போக்கை கடைப்பிடிக்கலாயிற்று. இதனால் பெரும்பாண்மையினரின் கையை ஓங்கச் செய்யும் ஓர் அரசியலமைப்பு பாரம்பரியத்தை அவர்கள் தொடக்கி வைத்தனர் என்றும் அதையே பின்வந்த சிங்களத் தலைவர்களும் மேலும் விஸ்தரித்துச் சென்றனர் என்றும் மு.திருநாவுக்கரசு கூறுகின்றார். அதாவது இந்தியாவிற்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையிலான புவிசார் அரசியல் நெருக்கத்தை முன் வைத்தே பிரித்தானியர் அந்த முடிவை எடுத்ததாக மு.தி கூறுகின்றார். அங்கிருந்து தொடங்கி இன்றுவரையிலும் ஈழத்தமிழர்கள் பலியிடப்படுவதற்கு இதுவே காரணம் என்றும் அவர் வாதிடுகிறார்.
இந்தியாவின் பின்னணிக்குள் வைத்து ஈழத்தமிழர்களைப் பார்ப்பதால் தான் எல்;லாப் பெரிய நாடுகளும் ஈழத்தமிழர்களை பலியிட்டு வருகின்றன என்று அவர் கூறுகிறார்.

‘இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தையே சிங்கள மக்கள், தமிழ் மக்கள் மீது காலம் காலமாகப் புரிகின்றனர். தமிழ் மக்களை மொழி, பண்பாடு, இந்துமதம் சார்ந்து இந்தியாவுடன் இணைத்துப் பார்ப்பதினாலும், இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தை பரவவிடாமல் தடுப்பதற்கு தமிழினத்தை அழிப்பது அவசியம் என்ற மேற்படி புவிசார் அரசியல் பார்வையின் விளைவாகவும் தமிழ் மக்கள் மீதான தமது இன அழிப்பு அரசியலை ஈவிரக்கம் இன்றியும், சமரசம் இன்றியும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு வரலாற்று ரீதியாக இந்தியா மீது சிங்கள-பௌத்தர்களுக்கு இருக்கும் அச்சமும் அதன் அடிப்படையிலான இந்திய எதிர்ப்புவாதமும், தமிழருக்கு எதிரான இன அழிப்பு அரசியலாய் வடிவம் பெற்ற நிலையில் ஈழத் தமிழ் மக்கள் புவிசார் அரசியலின் கைதிகளாய் அதற்குள் சிக்குண்டு அல்லல்படுகின்றனர்’ என்று மு.தி கூறுகிறார்.

‘சிங்கள-பௌத்தர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள வரலாற்றுப் பகைமையை முதலீடாக்கி அதன் மூலம் இலங்கையின் நவீன வரலாற்றில் சிங்கள-பௌத்தர்களுக்கும், இந்தியாவிற்கும் இடையான பகைமையைத் தூண்டி வளர்த்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் இந்தியாவிற்கு எதிரான தமது கேந்திர நலன்களை அடைவதில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர். இந்த அரசியற் சதியில் சிங்களவரை தம்பக்கம் வென்றெடுப்பதற்காக தமிழரைப் பலியிடும் அரசியல் யாப்பு மரபை பிரித்தானியர் இலங்கையில் தோற்றுவித்தனர். பிரித்தானியர் சட்டபூர்வமாகத் தோற்றுவித்த அந்த அழிவுப் பாதையின் தொடர் வளர்ச்சியே இற்றை வரையான அரசியல் யாப்புக்களாகும்’ என்று கூறும் மு.தி இலங்கைத் தீவின் யாப்பு மரபை அதன் புவிசார் அரசியல் பின்னணிகளுக்கூடாக ஆராய்கிறார்.

அதாவது இலங்கைத் தீவின் இனப்பிரச்சினை எனப்படுவதே ஒரு புவிசார் அரசியற் பிரச்சினைதான் என்பது அவருடைய வாதமாகும். எனவே அதற்குரிய தீர்வும் ஒரு புவிசார் அரசியல் தீர்மானத்திற்கூடாகவே கண்டடையப்பட வேண்டும் என்ற ஒரு முடிவிற்கு அவர் வருகிறார். இதில் யாப்பானது இன ஒடுக்கு முறையின் கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு காரணத்தினால் அதில் இனி நிகழப்போகும் மாற்றங்களும் முன்னைய யாப்புக்களின் தொடர்ச்சியாகவே அமையக்கூடும் என்ற ஒரு முடிவிற்கு வாசகரை இந்நூல் நகர்த்திச் செல்கிறது. அதாவது இலங்கைத் தீவின் யாப்புப் பாரம்பரியம் எனப்படுவது தமிழ் மக்களுக்கு எதிரானது. அந்தப் பாரம்பரியத்தை மாற்றாமல் யாப்பின் இதயத்தில் மாற்றம் ஏற்படப் போவதில்லை என்ற ஒரு தெளிவிற்கு இந்நூல் இட்டுச்செல்கிறது.

rajavarothiam-sampanthan-60

ஆனால் மன்னாரில் நடந்த ‘தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்?’ என்ற கருத்தரங்கில் உரையாற்றிய சம்பந்தர் வேறு விதமாகச் சிந்திப்பது தெரிகிறது. அங்கு தன்னை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் கூறாது மறைமுகமான ஒரு தொகுப்புரையை அவர் வழங்கியிருந்தார். அத் தொகுப்புரையில் அவர் சந்திரிக்காவை, ரணிலை, மைத்திரியை தான் நம்புவதாகக் கூறியிருந்தார். சிங்களத் தலைவர்கள் தீர்வைத் தரமாட்டார்கள் என்ற வாதம் வறட்டுத்தனமானது என்றும் அவர் கூறினார்.அதைச் சொல்லும் போது அவருடைய குரலை உயர்த்தி அழுத்தி தீர்மானகரமாகக் கூறினார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இதுவரையிலும் உருவாக்கப்பட்ட எல்லா அரசியலமைப்புக்களும் தமிழ் மக்களின் பங்களிப்பின்றியே உருவாக்கப்பட்டன என்றும் ஆனால் இம்முறை தமிழ் மக்களின் பங்களிப்போடு ஓர் அரசியலமைப்பு உருவாக்கப்படுகிறது என்றும் அதில் கூட்டமைப்பானது வழிநடத்தும் குழுவில் அங்கம் வகிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். எனவே சம்பந்தர் மன்னாரில் வைத்து கூறியவற்றை தொகுத்து நோக்கின் அவர் சிங்களத் தலைவர்களை நம்புகிறார் என்பது தெரிகிறது. சிங்களத் தலைவர்களின் மனோநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் நம்புவது தெரிகிறது. இது மு.திருநாவுக்கரசுவின் நூலில் கட்டியெழுப்பப்படும் தர்க்கத்திற்கு எதிரானது.

இந்நூல் வெளியீட்டு விழாவில் சித்தார்த்தன் மேலும் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.அண்மையில் தந்தி தொலைக்காட்சிக்கு திருமதி சந்திரிகா வழங்கிய பேட்டியில் அவரிடம் பின்வரும் தொனிப்பட கேட்கப்பட்டதாம்…… ‘நீங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழிந்த தீர்வு யோசனைகள் இப்பொழுதும் பொருத்தமானவை என்று நம்புகிறீர்களா?’ என்று. அதற்கு அவர் சொன்னாராம்…..’அநேகமாக இல்லை…..ஏனெனில் இப்பொழுது புலிகள் இயக்கம் இல்லை’ என்ற தொனிப்பட.

இந்நிகழ்வில் உரையாற்றிய அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்; இந்நூல் சிங்கள பௌத்த பேரினவாதத்தை; மிகவும் துலக்கமாகவும், விரிவாகவும் தோலுரித்துக் காட்டுகின்றது என்று கூறினார். ஆனால் சம்பந்தர் கூறுகிறார் தான் இப்போதுள்ள அரசாங்கத்தின் தலைவர்களை நம்புவதாக. அதாவது தமிழ் தேசியப் பரப்பில் அதிகம் எழுதிக் கொண்டிருக்கும் அறிஞர்கள், ஆய்வாளர்கள் போன்றோரின் கருத்துக்களும் ஈழத்தமிழர்களின் அரசியலுக்கு தலைமை தாங்கும் சம்பந்தரின் கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரணாகக் காணப்படுகின்றன. இதில் எது சரி? இன்னும் சில மாதங்களில் தமிழ் மக்கள் அதைக் கண்டு பிடித்து விடுவார்கள்.

அமெரிக்க அரசியலும், ஆலிவுட் அல்லக்கைகளும்…


media
 
ஒரு முக்கியமான பிரச்சனை மக்களின் பார்வைக்கு வருகிறபோதெல்லாம், அதிலிருந்து தப்பித்துக்கொள்ள வேறு ஏதாவது பிரச்சனையைக் கெளப்புவது அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு கைவந்தகலை. அப்படியான திசைதிருப்பலை செய்வதற்கென்றே சிறப்பு நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு “SpinDoctors” என்று பெயர். ஒவ்வொரு முறையும் அமெரிக்காவில் தேர்தல் வருகிறபோதும், “தீவிர்வாதம்” என்கிற வார்த்தை எதற்காக ஊடகங்களில் அதிகமுறை பயன்படுத்தப்படுகிறது?
 
1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த மோனிகா லீவின்ஸ்கி என்கிற பெண்ணுடன் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தகாதமுறையில் உறவுகொண்டார் என்று அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அக்குற்றச்சாட்டுகளை அவர் தொடர்ந்து மருத்துவந்தார். கிளிண்டனின் மனைவியான ஹிலாரி கிளிண்டனும் தன்னுடைய கணவனுக்கு ஆதரவாகவே பேசிவந்தார். ஒரு அப்பாவி மேல் இப்படி பழி சுமத்துகிறார்களே என்கிற அளவில் மக்களிடம் பில் கிளிண்டன் செல்வாக்குடன்தான் இருந்தார். ஆனால் நாளாக நாளாக அவருக்கு எதிரான சாட்சியங்களும் ஆதாரங்களும் கூடிக்கொண்டே போக, ஒரு கட்டத்திற்குமேல் உண்மையை சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு பில் கிளிண்டன் தள்ளப்பட்டார். அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி நீதிபதியிடம், “நான் மோனிகா லீவின்ஸ்கியுடன் முறையற்ற உடலுறவு கொண்டிருந்தேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அன்று மாலையே வானொலியிலும் தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டார் பில் கிளிண்டன். ஆகஸ்ட் 17 முதல் மக்களிடத்தில் கிளிண்டனின் செல்வாக்கு தடாலடியாக குறையத்துவங்கியது.

bill-clinton-ff 
செய்த தவறுக்கு அதிபராகவே இருந்தாலும் அதற்கேற்ற தண்டனையைப் பெறுவதுதானே முறையானது. ஆனால் பில் கிளிண்டன் அதிபராக இருப்பது அமெரிக்காவிற்கு அல்லவா. அதனால் சரிந்துகொண்டிருக்கும் தன்னுடைய மக்கள் செல்வாக்கை உயர்த்திப்பிடிக்க ஒரு யுத்தி கையாளப்பட்டது. அதுதான் திசைதிருப்பல். ஆகஸ்ட் 17 ஆம் தேதியில் உண்மையை ஒப்புக்கொண்டதன் பின்னர், உடனடியாகவே சூடான் என்கிற நாட்டில் அல்கொய்தா பதுங்கியிருப்பதாகவும், அந்நாட்டிலிருந்த அல்-ஷிஃபா என்கிற மிகப்பெரிய மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் இரசாயன வெடிகுண்டுகள் தயாரிப்பதாகவும் செயதிகள் பரப்பப்பட்டன. அல்-ஷிஃபா வை விட்டுவைத்தால், இரசாயன குண்டுகள் வீசி உலகையே அல்கொய்தா அழித்துவிடும் என்று அமெரிக்க ஊடகங்கள் அச்சுறுத்தின. சூடானுக்கோ இவையெல்லாம் அதிர்ச்சிகரமான செயதியாக இருந்தது.

சூடானின் ஒட்டுமொத்த மருந்து தேவையின் 50% அளவிற்கு அல்-ஷிஃபா தொழிற்சாலையிலிருந்துதான் தயாராகிறது. அங்கே இரசாயன குண்டுகள் தயாரிக்கிறார்கள் என்பதை அமெரிக்கா எதை வைத்து முடிவுசெய்தது என்று சூடான் அரசு கேட்டது. ஆனால், அமெரிக்காவோ அதற்கு சரியான பதிலளிக்கவில்லை. அல்-ஷிஃபாநிறுவனத்திற்கு சற்று தொலைவில் மண்ணெடுத்து பரிசோதித்ததாகவும் அதில் எம்ப்டா எனப்படுகிற “ஓ-ஈத்தைல் மெத்தைல்போஸ்போனோதியோக்” என்கிற அமிலத்தின் கலப்பு இருப்பதாகவும், அது தடைசெய்யப்பட்ட மருந்து எனவும் அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் உண்மையிலேயே சர்வதேச சட்டங்களின்படி எம்ப்டா தடைசெய்யப்பட்ட அமிலமல்ல. அதோடு அல்-ஷிஃபாவில் அது தயாரிக்கப்பட்டதாகவோ பயன்படுத்தப்பட்டதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை. இதனை எதையும் அமெரிக்கா செவிமடுக்கவில்லை. ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி (கிளிண்டன் தன்னுடைய தவறை ஒப்புக்கொண்ட மூன்றாவது நாளில்) ஆளில்லாத ஏவுகணைகள் வீசி அல்-ஷிஃபா மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை தாக்கி அழித்தது அமெரிக்கா.
அல்கொய்தாவின் திட்டத்தை முறியடித்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தொடர்ந்து செயதிகள் சொல்லி, அமெரிக்க அதிபரின் செல்வாக்கை உயர்த்த முயற்சித்தன. இறுதியில் வெற்றியும் கண்டன. ஆனால் எவ்விதத் தொடர்புமே இல்லாத சூடான்தான் இதற்கு மிகப்பெரிய விலையினை கொடுக்கவேண்டியிருந்தது. ஏவுகணைத் தாக்குதலில் முழுவதும் சேதமடைந்த மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையை புனரமைக்காமல் அப்படியே விட்டுவைத்தது சூடான் அரசு. அமெரிக்கா சொன்னபடி, இராசயன வெடிகுண்டு தயாரித்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கிறதாவென பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று வெளிப்படையாக அறிவித்தது சூடான் அரசு. ஆனால், அமெரிக்க அரசோ அதற்கெல்லாம் தயாராக இல்லை. இத்தாக்குதலுக்கு அமெரிக்கா மன்னிப்பாவது கோரவேண்டுமென்று சூடான் அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், தான் செய்தது சரிதான் என்றும் மறுவிசாரணைக்கோ மன்னிப்பிற்கோ இடமில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது அமெரிக்கா.

ஐ.நா.வோ அல்லது சர்வதேச விசாரணைக்கு குழுவொன்றோ சூடான் வந்து விசாரிக்கவேண்டும் என்று மடியில் கனமில்லாத சூடான், ஐ.நா.சபையின் பாதுகாப்புக்கு கவுன்சில் வரை சென்று முறையிட்டது சூடான். ஆனால் எவ்வித விசாரணையும் இதில் நடத்தக்கூடாது என்றும் அமெரிக்கா சொன்னால் சொன்னதுதான் என்றும் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லாவற்றையும் தடுத்தது அமெரிக்கா. இன்னும் ஒரு படிமேலே போய், alshifaமுற்றிலும் சேதமடைந்திருக்கும் அல்-ஷிஃபா மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை சீரமைக்க எந்த நாடும் உதவக்கூடாது என்றும் பல நாடுகளை நிர்ப்பந்தித்தது. அதனால்தான் மருந்து நிறுவனத்தை சரிசெய்வதற்கு சூடான் விடுத்த வேண்டுகோளையும் பிரிட்டன் நிராகரித்தது. ஏற்கனவே ஏழை நாடான சூடானுக்கு, தன்னுடைய உள்நாட்டு மருந்து உற்பத்தியில் 50%த்திற்கும் மேற்பட்ட அளவிற்கு மருந்து தயாரித்துக் கொண்டிருந்த அல்-ஷிஃபா நிறுவனம் அழிக்கப்பட்ட பின்னர் பெரியளவிற்கு இழப்பினை சந்திக்கவேண்டியிருந்தது. அடுத்த சில ஆண்டுகளில் இலட்சக்கணக்கானோர் மருந்து பற்றாக்குறையினால் மட்டுமே உயிரிழந்தனர். அவர்கள் வெறுமனே மரணித்தார்கள் என்று சொல்வதைவிட, ஆகஸ்ட் 20 ஆம் தேதி அமெரிக்கா வீசிய ஏவுகணைகளால் மறைமுகமாகக் கொல்லப்பட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

“Wag the dog” திரைப்படம்:

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அப்போதைய அதிபரே மீண்டும் இரண்டாவது முறையாக போட்டியில் களமிறங்குகிறார். அவருக்கும் எதிர்க்கட்சி வேட்பாளருக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.
“பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் குதிரையை
பாதியிலேயே நிறுத்தவேண்டாமே!
தொடர்ந்து ஓடவைப்போமே!
தற்போதைய அதிபருக்கவே வாக்களியுங்கள்”
என்பன போன்ற விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தன.

wagதேர்தலுக்கு இரண்டே வாரங்கள் இருக்கையில், தன்னிடம் பணிபுரிந்த பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக செய்திகள் வெளியாகின்றன. அப்பெண் ஆதாரங்களோடு அதிபர் மீதான குற்றச்சாட்டை பொதுவில் நிரூபிக்கிறார். இதனைப் பயன்படுத்திக்கொள்கிற எதிர்க்கட்சிகள், அதிபர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து எல்லா ஊடகங்களிலும் பேசுகின்றனர். இப்படியே போனால், தேர்தலில் தோற்பது உறுதி என்பதையறிந்து அதிபர், ஒரு திட்டம் தீட்டுகிறார். ஒருவரின் மதிப்பை ஊடகங்கள் வழியாக உயர்த்தவோ தாழ்த்தவோ மறைவுக ஏஜெண்டுகள் அமெரிக்காவில் நிறைய இருக்கின்றனர். திடீரென யாரோ ஒருவர் அதிகளவிலான புகழ்பெற்று பல பதவிகளை பெறுவார். அப்படியான நிகழ்வுகள் தற்செயலாக நடப்பவைபோன்று தோன்றினால், உண்மை அதுவல்ல. இதுபோன்ற மறைமுக பிரச்சார ஏஜென்டுகள் மூலமாகத்தான் சாத்தியமாகிறது. மக்கள் மத்தியில் சரிந்துகொண்டிருக்கும் தன்னுடைய மதிப்பை உயர்த்துவதற்கு ஒரு மறைமுக பிரச்சார ஏஜென்டைத் தொடர்பு கொள்கிறார் அதிபர்.

அதிபர் குறித்தே எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் மக்களும் பேசிக்கொண்டேயிருப்பதை, எப்படியாவது திசைதிருப்பவேண்டும். அப்படிச்செய்வதை யாரும் கண்டுபிடித்துவிடவும் கூடாது என்பதில் கவனமாகத் திட்டமிடுகிறார் பிரேன்.

“செயற்கையாக ஒரு போர்ப்பதற்றத்தை உருவாக்கினால், பயத்தில் அமெரிக்க மக்கள் உண்மையான பிரச்சனையை மறந்துவிடுவார்கள். இது போன்று திசை திருப்புவது நமக்கு ஒன்றும் புதிதில்லை. ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்தபோது, லெபனானில் நம்முடைய இராணுவ படையினர் தங்கியிருந்த வீடுகள் தாக்கப்பட்டு 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அமெரிக்க மக்களிடைய செல்வாக்கை இழந்துவிடக்கூடாது என்பதற்காக, அடுத்த இரண்டே நாளில் கிரானடா என்கிற நாட்டுடன் அமெரிக்கா தேவையேயில்லாமல் போருக்கு சென்றது. ஊடகங்கள் அனைத்தும் அந்த செய்திக்கு தாவியது. அதேபோலத்தான் இதுவும்”
என்கிறார் பிரேன்.
“தேவையே இல்லாமல் எதற்கு இப்போது ஒரு போர்? போரெல்லாம் நமக்கு இப்போது கட்டுப்படியாகாது”
என்கிறார் அதிபரின் உதவியாளர்.
“போருக்கெல்லாம் நாம் போகப்போவதில்லை. போர் வருவதைப்போன்ற தோற்றத்தைத்தான் உருவாக்கப்போகிறோம்”
என்கிறார் பிரேன்.
பிரேனும் அதிபரின் உதவியாளரான அமெசும் லாஸ் ஏஞ்சல்சுக்கு சென்று, ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான ஸ்டான்லி மோட்ஸை சந்திக்கின்றனர்.
அல்பேனியா என்கிற நாட்டில் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்வதாகவும் அவர்கள் மீது போர்தொடுத்து அமெரிக்காதான் அம்மக்களை காப்பாற்றவேண்டும் என்று அமெரிக்க மக்களை நம்பவைக்கும்படி ஒரு வீடியோ தயாரித்துத் தரச்சொல்கிறார் பிரேன்.
ஹாலிவுட் தயாரிப்பாளர்: “ஏன் குறிப்பாக அல்பேனியா?”
பிரேன்: “ஏன் அல்பேனியாவாக இருக்கக்கூடாது?”
ஹாலிவுட் தயாரிப்பாளர்: “ஒரு நாட்டின் மீது குற்றம் சொல்கிறோமென்றால் ஏதாவது காரணம் இருக்கனுமில்லையா? கேள்வி கேட்கமாட்டார்களா?”
பிரேன்: “பொதுமக்கள்.”
ஹாலிவுட் தயாரிப்பாளர்: “பொதுமக்களா? அவங்களுக்கு தெரியவாப் போகுது? நம்முடைய முன்னாள் அதிபர் ஜான்.எஃப்.கென்னடியை யார் கொன்றார்கள்? யாரோ குடிகார ஓட்டுனரால் கொல்லப்பட்டார்னு அடுத்தநாளே சொல்லப்பட்டது. இறுதியில் என்னாச்சு? யாரோ ஒருத்தரை கைதுசெய்தார்கள். அவனையே இன்னொருத்தன் கொலை செய்திட்டான். கடைசிவரையும் கென்னடியைக் கொன்றவன் யாருன்னே நமக்கு தெரியாது.”
அல்பேனியா தயாரிப்பாளர் மோட்சை சம்மதிக்கவைக்கிறார். தயாரிப்பாளர் உடனே திரைக்கதை குறித்து பல யோசனைகள் தெரிவிக்கிறார். அல்பேனிய தீவிரவாதிகள் கனடா வழியாக சூட்கேஸ் வெடிகுண்டுகளை அமெரிக்காவிற்கு கொண்டுவந்து வெடிக்கவைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று கற்பனையை விரித்துத் திரைக்கதையமைக்கிறார். அல்பேனிய தோற்றம் கொண்ட ஒரு துணைநடிகையை அழைத்துவந்து ப்ளூ மேட்டின் முன்னே கையில் எதோ ஒரு பொருளை வைத்துக்கொண்டு ஓடிவரும்படி சொல்கிறார் தயாரிப்பாளர். அக்காட்சியினை படம்பிடித்து, அப்பெண் தன்னுடைய கையில் ஒரு பூனையை எடுத்துக்கொண்டு ஓடிவருவதாக கிராபிக்சில் மாற்றியமைக்கின்றனர். அப்பெண்ணின் பின்னனியில், அல்பேனியாவின் குடிசை இருப்பது போலவும், அது எரிந்துகொண்டிருப்பது போலவும், தீவிரவாதிகள் குண்டுவீசியதாலேயே அவள் தப்பித்து ஓடுவதாகவும், பின்னனியில் குண்டுவெடுப்பு சத்தம் மற்றும் அப்பெண்ணின் அழுகுரல் என எல்லாமுமாக இணைத்து, ஒரு வீடியோவை தயாரித்துமுடிக்கின்றனர்.

அல்பேனிய தீவிரவாதம் குறித்து போலியாகத் தயாரிக்கப்பட்ட வீடியோவினை அனைத்துத் தொலைக்காட்சிகளுக்கும் கிடைக்கும்படி செய்கின்றனர். அதனைத் தொடர்ந்து அதிபரின் பாலியல் குற்றத்தைலிருந்து தாவி, ஒட்டுமொத்த ஊடகங்களும் அல்பேனியத் தீவிரவாதம் குறித்தே பேச ஆரம்பித்தன. அல்பேனியர்களின் பேட்டிகள், விவாத நிகழ்ச்சிகள், அதிபரின் அனுதாபப் பேச்சு என்று அல்பேனியா தான் முக்கிய பேசுபொருளாக ஆனது. எல்லாம் திட்டமிட்டபடி செல்வதாக நினைத்துக்கொண்டிருந்த பிரேனுக்கு, சிஐஏ மூலமாக பிரச்சனை வந்தது. அல்பேனியாவில் போரே இல்லை என்று சிஐஏ வுக்கு தெரியாமலா இருக்கும். அவர்கள் பிரேனை மடக்கி இதுகுறித்து கேட்கின்றனர்.
“போரே இல்லையென்றால் என்ன? 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் வியட்னாமிலும் மத்தியகிழக்கிலும் போரை நடத்தவில்லையா? அது உங்கள் வேலை, இது என்னுடைய வேலை”
என்கிறார் பிரேன். சிஐஏவோ, லாபியிஸ்டுகளோ, பிரச்சார ஏஜென்டுகளோ எல்லோரும் ஒரே நோக்கத்திற்காகத்தானே வேலை செய்கிறார்கள். அதனால் இதனை பெரிய பிரச்சனையாக்காமல் பிரேனை விட்டுவிடுகிறது சிஐஏ. இதுவரை செய்த பிரச்சாரம் குறித்தெல்லாம் விசாரணை நடத்தப்படமாட்டாது என்றாலும், அல்பேனியப் போர் குறித்த் பிரச்சாரத்தை இத்தோடுமுடித்துவிட சிஐஏ தீர்மானித்தது. அதனால், அல்பேனியப் போரை சிஐஏ தலையிட்டு முடித்துவிட்டதாக தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்பட்டது.
அல்பேனியத் தீவிரவாதம், போர் குறித்து விவாதிப்பதை ஊடகங்கள் நிறுத்திக்கொண்டன. மீண்டும் அதிபரின் பாலியல் குற்றத்தைக் கையிலெடுத்தன. அதிபர் தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், அதிபரின் செல்வாக்கை மீட்டெடுப்பது எப்படி என்று குழம்பிக்கொண்டிருந்தார் பிரேன். ஹாலிவுட் தயாரிப்பாளர் மொட்சுக்கோ இது கௌரவப் பிரச்சனையாக மாறியது.
“நான் உருவாக்கிய போரை முடித்துவைக்க சிஐஏ வுக்கு என்ன அதிகாரம் இருக்கு? நான் தான் இந்த போரின் தயாரிப்பாளர். அதனால் இதனை இப்படியே முடியவிடமாட்டேன். முதலில் போரை உருவாக்கினோம். இப்போது அதற்கான நாயகனை உருவாக்குவோம். நாயகன் இல்லாத போரா?”
என்கிறார் தயாரிப்பாளர் மோட்ஸ்.
அல்பேனியத் தீவிரவாதிகள் கனடா வழியாக சூட்கேஸ் பாமை அமெரிக்காவிற்குள் கொண்டுவந்து வெடிக்கவிருப்பதாக முன்னர் கதை உருவாக்கியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக அமெரிக்க படையினர் சில கனடா சென்று தீவிரவாதிகளுடன் சண்டையிட்டதாகவும், அவர்களில் ஒரு அமெரிக்க வீரரை தீவிரவாதிகள் பிடித்துவிட்டதாகவும், அப்படிப்பட்ட நாயகனை மக்கள் மறந்துவிட்டார்களே என்று சொல்லி மக்களின் உணர்வைத் தூண்டினால், எல்லாம் மாறும் என்று கருதினார் மோட்ஸ்.
“பழைய ஷூவை தூக்கி எறிவதைப்போல தேசத்தை ஹீரோவை மக்கள் மறந்துவிட்டார்களே”
என்று ஒரு பாடலையும் இசையமைத்து குறுந்தகடாகவும் தொலைக்காட்சிகளிலும் வெளியிடுகின்றனன். அது மிகப்பெரியளவிற்கு மக்களிடம் வரவேற்பைப் பெறுகிறது. பாடலில் இடம்பெறும் “ஷூ” என்கிற வார்த்தை முக்கியமான இடத்தை மக்கள் மனதில் பிடிக்கிறது. அதனால் ஷூ என்று தொடங்கும் பெயரையுடைய பழைய இராணுவ வீரர் யாராவது கிடைப்பார்களா என்று பென்டகனிடம் விசாரிக்கிறார் பிரேன். “வில்லியம் ஷூமன்” என்கிற பெயரைத் தருகின்றது பென்டகன். பலத்த காயங்களோடு இருக்கும் ஷூமனின் புகைப்படமும் ஊடகங்களுக்கு தரப்படுகிறது. நாடே ஷூமனை ஹீராவாக ஏற்றுக்கொள்ளத்துவங்கிவிட்டது. எங்கு திரும்பினாலும், “ஷூமன்” “ஷூமன்” என்று மக்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.

“ஷூமன்” என்கிற வார்த்தைக்கு காப்புரிமை எல்லாம் வாங்கி, பெரும்தொகைக்கு பல பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஷூமனுக்கு ஆதரவாகவும் அல்பேனியாவுக்கு எதிராகவும் வாசகங்களுடன் டீ-சர்ட்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனைக்குவந்துவிட்டன. பழைய ஷூக்களை பொது இடங்களில் இருக்கும் மரங்களின் கிளைகளில் தொங்கவிடும் பழக்கத்தையும் துவங்கிவிட்டனர். எந்த மரத்தைப்பார்த்தாலும் ஒன்றிரண்டு ஷூக்களாவது தொங்கிக்கொண்டிருந்தன. தங்களது தேசப்பற்றை பல்வேறு விதங்களில் அமெரிக்க மக்கள் வெளிக்காட்டத்துவங்கினர்.

ஷூமனை மீட்டுவரவேண்டும் என்று மக்கள் மத்தியில் கோரிக்கை எழ ஆரம்பித்துவிட்டது. பென்டகனுடன் பேசி, ஷூமனை தயார் செய்து ஒரு மறைமுகமான இடத்திற்கு அழைத்துவரச் சொல்கிறார் பிரேன். அங்கிருந்து தனிவிமானத்தில் ஷூமனை வாஷிங்க்டனுக்கு கொண்டுவந்து மக்கள் மத்தியில் நிறுத்தினால், அது பெரியளவில் வரவேற்பைப் பெறும் என்பது பிரேனின் கணிப்பு. அதன்படி, பென்டகனிடமிருந்து ஷூமனைப் பெறுகிறார்கள் பிரேமனும், மோட்சும், அமெசும். ஆனால், அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஷூமன் என்பவர் ஒரு முன்னாள் இராணுவவீரரெல்லாம் இல்லை. ஒரு கிருத்துவ கன்னியாஸ்திரியை பாலியல் வன்புணர்வு செய்ததால் கடந்த 12 ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் ஒரு சிறைக்கைதிதான் ஷூமன். ஒரு குற்றவாளியை தேசிய நாயகனாக்கிவிட்டோம் என்பது அப்போதுதான் பிரேனுக்கு தெரிந்தது. இருப்பினும் வாஷிங்க்டன் நோக்கி தனிவிமானம் புறப்பட்டது.

விமானம் வரும்வழியில் விபத்துக்குள்ளாகி ஒரு தொலைதூர கிராமத்தில் விழகிறது. ஷூமன் உள்ளிட்ட அனைவரும் உயிர்பிழைக்கின்றனர். தப்பித்து வரும்வழியில் அக்கிராமத்தின் ஒரு விவசாயியின் மகளை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சிக்கிறான் ஷூமன். அதனைத் தடுக்க அப்பெண்ணின் தந்தை, ஷூமனை துப்பாக்கியால் சுட்டுக்கொல்கிறார். ஷூமனை இழந்துவிட்டோமே, இனி என்ன செய்வது என்று பிரேனும் அமெசும் கவலைகொள்கின்றனர். ஆனால், ஹாலிவுட் தயாரிப்பாளர் மோட்சோ தன்னுடைய திரைக்கதையை கொஞ்சம் மாற்றம் செய்கிறார். அல்பேனிய தீவிரவாதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதால் ஷூமன் இறந்துவிட்டதாகச் சொன்னால், மக்களின் தேசபக்தி உச்சிக்குப்போகும் என்கிறார். வெற்றியுடன் திரும்பிவரும் வரும் போர்வீரனைவிட, உயிர்த்தியாகத்தை செய்பவனைத்தான் மக்கள் அதிகமாகக் கொண்டாடுவார்கள்.

ஷூமனின் உடல் வாஷிங்க்டன் கொண்டுவரப்படுகிறது. அதற்கு அரச மரியாதை கொடுக்கப்படுகிறது. கருத்துக்கணிப்புகளில் அதிபருக்கு ஆதரவான நிலை ஏற்படுகிறது. 89% சதவிகித மக்கள் தற்போதைய அதிபருக்கே வாக்களிப்போம் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கின்றனர். “அதிபரின் செல்வாக்கு உயர்ந்ததற்கு எது காரணம்?” என்று தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. ஒரு விவாதத்தில், பல அரசியல் வல்லுனர்களும், “தொலைக்காட்சிகளில் வந்த அதிபரின் விளம்பரங்கள்தான் அவரின் செல்வாக்கு உயர்ந்ததற்குக் காரணம்” என்கின்றனர். தொலைக்காட்சி விவாதத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் மோட்சுக்கு கடுமையாகக் கோபம் வருகிறது.

“நான் எவ்வளவு முயற்சி செய்து இவ்வளவையும் செய்து அதிபரின் செல்வாக்கை உயர்த்தியிருக்கிறேன். ஆனால் ஒன்றுக்கும் உதவாத ‘பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் குதிரையை பாதியிலேயே மாற்றாதீர்கள்’ என்ற விளம்பரத்திற்கு அந்த பெருமையெல்லாம் போகிறதே. இதை நான்விடமாட்டேன்.”
என்கிறார் மோட்ஸ்.
நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியான அதற்கு நேயர்களும் தொலைபேசியில் அழைக்கலாம் என்று சொல்லி ஒரு எண்ணை தெரிவிக்கிறார்கள் தொலைக்காட்சியில். அந்த எண்ணுக்கு அழைத்து, தன்னுடைய உழைப்பினால்தான் அதிபருக்கு மக்களின் செல்வாக்கு கிடைத்திருப்பதாக சொல்லப்போவதாகச் சொல்கிறார் மோட்ஸ்.
“ஒட்டுமொத்த மக்களும் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றை நான்தான் உருவாக்கினேன் என்பதில் எனக்கு பெருமை இருக்காதா? அதற்கு நான் உரிமை கோரக்கூடாதா?”
என்று கேட்கிறார் மோட்ஸ்.
ஆனால் அப்படிச் செய்ய மோட்சுக்கு உரிமையில்லை என்றும், இந்த ஒட்டுமொத்த திட்டமும் காலங்காலமாக மறைமுகமாகவே வைக்கப்படவேண்டும் என்கிறார். இதனை மீறி எதையாவது செய்யமுற்பட்டால், உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று மோட்சை எச்சரிக்கிறார்.
பிரேன் சொல்வதைக் கேட்காமல், ஷூமனின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தைநோக்கி வேகமாக நடக்கிறார் மோட்ஸ். அவரை பாதியிலேயே மடக்கி ஒரு காரில் ஏற்றிக்கொண்டு செல்கின்றனர் காவல்துறையினர்.
தேசியநாயகனாக மாற்றப்பட்ட ஷூமனின் இறுதி ஊர்வலம், அமெரிக்க மக்களின் கண்ணீரோடு நடக்கிறது.
மறுநாள் தொலைக்காட்சிகளில் இரண்டு செய்திகள் சொல்லப்படுகின்றன:
ஒன்று: “பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரான ஸ்டான்லி மோட்ஸ், கடற்கரையில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும்போது மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 62.”
இரண்டு: “ஷூமனின் கொலைக்கும் அல்பேனியாவில் நடக்கும் தீவிரவாதச் செயலுக்கும் அல்பேனியாவிலிருந்து இயங்கும் ‘அல்பேனிய ஒற்றுமை’ என்கிற தீவிரவாத அமைப்பு பொருப்பேற்றிருக்கிறது. அமெரிக்காவின் படைகள் விரைவில் அல்பேனியாவுக்கு செல்லும் என்று அமெரிக்காவின் அயல்துறை செயலாளர் அறிவித்திருக்கிறார்”
“Wag the dog” என்கிற இத்திரைப்படம் வெளியாகிய அடுத்த ஒரே மாதத்தில் அதிபர் பில் கிளிண்டன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வெளியானது. அதனை திசைதிருப்பும்விதமாகத்தான் சூடானின் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை குண்டு வைத்து தகர்த்தது அமெரிக்கா. பொய்ப்பிரச்சாரங்களால் தான் அமெரிக்காவின் அரசியலே ஓடிக்கொண்டிருக்கிறத என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும். அடுத்தமுறை  அமெரிக்க அரசோ, சிஐஏவோ, பென்டகனோ, அமெரிக்க ஊடகங்களோ தீவிரவாதம் குறித்து எதைச்சொன்னாலும் உலகின் குடிமக்களாகிய நாம் கவனமாக இருக்கவேண்டும்.

-இ.பா.சிந்தன்

வீதிகளில் திரண்ட தீப்பொறிகள் – அழகன் ஆறுமுகம்

குஜராத் மாநிலத்தில், இறந்த பசுவின் தோலை உரித்ததற்காக தலித் இளைஞர்களை இரும்பு பைப், இரும்புக் கம்பிகள் கொண்டு காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினார்கள் சாதிவெறியர்கள். அதைக்கண்டு அங்கு, ஒட்டுமொத்த தலித் சமூகமும் வீதிக்கு வந்து கொந்தளித்தது.

மும்பையில் மிகமுக்கிய வரலாற்றுச் சின்னமாக விளங்கிய அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அம்பேத்கர் பவன் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்ட அக்கிரமம் அரங்கேறியது. அதைக்கண்டித்து நடைபெற்ற பேரணியில் லட்சம் பேர் ஆவேசத்துடன் திரண்டார்கள்.

பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் வீதிகளில் திரண்டு தங்களின் கோபாவேசத்தை வெளிப்படுத்தியதைக் கண்டு குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் மத்தியிலும் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அச்சத்தில் ஆடிப்போயிருக்கிறது.

குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா பிராந்தியத்தில் உனா என்ற இடத்தில்தான், இறந்த பசுவின் தோலை உரித்ததற்காக, கடந்த ஜூலை 11-ம் தேதி தலித் இளைஞர்கள் நான்கு பேரை பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு பொது இடத்தில் வைத்து காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய கொடூரத்தை பசு பாதுகாப்பு கமிட்டி என்ற போர்வையில் சாதிவெறியர்கள் அரங்கேற்றினார்கள். தலித் இளைஞர்களை அரை நிர்வாணமாக்கி கார் ஒன்றில் கட்டி வைத்துத் தாக்கியதுடன், அதை செல்போனில் படம் பிடித்து, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு இதுதான் கதி என்று எச்சரிக்கும் வகையில் சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். வைரலாகப் பரவிய அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்துவிட்டுத்தான் தலித் மக்கள் வெகுண்டு எழுந்தனர். உடனடியாக, தலித் அமைப்புகள் பந்த் போராட்டத்தை அறிவித்தன. அந்தப் பகுதி முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தலித் மக்கள் வீதிகளில் இறங்கி தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். நெடுஞ்சாலைகள் மறிக்கப்பட்டன. கூட்டத்தினரை கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். சௌராஷ்டிரா பிராந்தியமே போர்க்கலம் போல காட்சியளித்தது.

பாதிக்கப்பட்ட இளைஞர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவர்கள் உடனடியாகச் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் வாயைத் திறக்கவில்லை என்று பிருந்தா காரத் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களும் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்தனர். இந்த குஜராத் கொடூரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அரங்கேற்றி, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொடூரமாகக் கொன்றுகுவித்த மோடி அரசு, தன் கோரப்பற்களின் மீதான ரத்தக்கரையைக் ‘குஜராத் மாடல்’ என்ற ஜிகினாவின் மூலம் மறைக்க முயன்றது. ‘வளர்ச்சியின் நாயகன்’ என்று கார்ப்பரேட் ஊடகங்களால் மோடி முன்னிறுத்தப்பட்டார். மோடியின் ஆட்சியில் குஜராத்தின் முன்னேற்றத்தைப் பாருங்கள் என சில பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அறிவுஜீவிகள் புளகாங்கிதம் அடைந்தார்கள். அவர்கள் சொன்னது எந்தளவுக்கு ஹம்பக் என்பது ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான், தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் தலித் மக்கள் எந்தளவுக்கு இழிநிலையில் வாழ்கிறார்கள் என்பது அம்பலப்பட்டுள்ளது.

குஜராத்தில் தலித் மக்களின் நிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார், நவ்சர்ஜன் அறக்கட்டளை என்ற அமைப்பைச் சேர்ந்தவரும், குஜராத்தில் தலித் உரிமைகளுக்காக நீண்டகாலமாகச் செயல்பட்டு வருபவருமான மார்டின் மக்வான்.

“இப்போது நடந்திருப்பது முதல் சம்பவம் அல்ல. குஜராத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல்களும், தீண்டாமைக் கொடுமைகளும் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றன. ஆனால், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே இல்லை. தங்கத் என்ற இடத்தில் 2012-ம் ஆண்டு போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 4 தலித்துகள் கொல்லப்பட்டனர். அதற்குக் காரணமானவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. தலித் மக்கள் கொலை செய்யப்படுவது, தாக்கப்படுவது போன்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது வெறும் 4 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருந்தது. பல முயற்சிகளுக்குப் பிறகு அது தற்போது 28-29 சதவிகிதம் என்ற அளவுக்கு வந்திருக்கிறது. 1569 கிராமங்களில் கள ஆய்வு நடத்தினோம். கோவிலுக்குள் நுழையத்தடை, மதிய உணவுத் திட்டத்தில் தீண்டாமை உட்பட 98 வகையான தீண்டாமை அங்கு நிலவுவது கண்டுபிடிக்கப்பட்டது.

குஜராத்தில் 90 சதவிகித கோவில்களில் தலித் மக்கள் நுழைய அனுமதி கிடையாது. எல்லா இடங்களிலும் தலித்களுக்குத் தனிச்சுடுகாடுதான். 54 சதவிகிதப் பள்ளிகளில் தலித் குழந்தைகள் தனியாகவே அமரவைக்கப்படுகிறார்கள். 2010-ம் ஆண்டு, அகமதாபாத்தில் தலித் குழந்தைகள் 1500 பேர் கழிப்பறைகளை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர்.

அதுகுறித்து, ஓய்வுபெற்ற குஜராத் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பொதுவிசாரணையில் தெரிவித்தபோது, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், குஜராத் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளிக்கூடங்களில் நிலவும் சாதிப்பாகுபாடுகளால் தலித் குழந்தைகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

அரசுத் துறைகளில் தலித் மக்களுக்கான 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பபடாமலே உள்ளன. கல்வியும்,


cow
வேலைவாய்ப்பும் இல்லாததால் துப்புரவுப்பணி, இறந்த மனிதர்களின் மற்றும் விலங்குகளின் சடலங்களை அப்புறப்படுத்துதல் போன்ற சாதி அடிப்படையான தொழில்களையே தலித் மக்கள் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் கடந்தும் செத்த மாடுகளின் தோலை உரித்து உயிர்பிழைக்கும் நிலைதான் இருக்கிறது” என்று கவலையோடு சொல்கிறார் மார்டின் மக்வான். இதனால்தான், இவ்வளவு காலம் ஒடுக்கப்பட்டு வந்த தலித் சமூகம் ஒட்டுமொத்தமாக வீதியில் திரண்டு ஆவேசத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

மும்பை நகரின் சமீபகால வரலாற்றில் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் திரண்டது இப்போதுதான். மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் பவன் இடிக்கப்பட்டதைக் கண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வெகுண்டெழுந்தனர். 1940-களில் மும்பை தாதர் பகுதியில் அம்பேத்கரால் நிலம் வாங்கிக் கட்டப்பட்டதுதான் அம்பேத்கர் பவன். அந்த இடத்தில் இருந்துதான் அம்பேத்கர் நிறைய எழுதினார். அங்குதான், பாரத் பூஷன் என்ற அச்சகம் இயங்கியது. இந்து மதத்தை விமர்சித்து அம்பேத்கர் எழுதிய புத்தகங்களை அச்சிட பிற அச்சங்கள் மறுத்தபோது, இங்குதான் அந்தப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அம்பேத்கரால் கொண்டுவரப்பட்ட 2 பத்திரிகைகள் இங்கிருந்துதான் அச்சடிக்கப்பட்டு வெளியாகின. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கட்டடத்தை அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை ஒன்று நிர்வகித்து வந்தது. அங்குதான், அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சி அலுவலகமும் செயல்பட்டு வந்தது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இந்துத்துவா வெறியர்களால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாவின் தாயாரும் சகோதரும் அம்பேத்கர் பவனில்தான் கடந்த ஏப்ரலில் புத்த மதத்தைத் தழுவினர்.

protests-ambedkar-demonstration-demolition-ambedkar-supporters-bhavan_eb1fd72a-41c4-11e6-b0f4-7520104944f672 ஆண்டுகள் பழமையான, தலித் மற்றும் முற்போக்கு செயற்பாட்டாளர்களின் களமாக விளங்கிய அம்பேத்கர் பவன், கடந்த ஜூன் மாதம் ஒரு நள்ளிரவில், அந்த அறக்கட்டளையைச் சேர்ந்த சுயநலக்காரர்கள் சிலரின் சதியால் தரைமட்டமாக்கப்பட்டது. மும்பை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு 17 மாடியில் வர்த்தக நோக்கத்துடன் ஆடம்பரமான கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்குத் திட்டமிட்டனர். சர்ச்சைக்குரிய அந்த முடிவுக்கு ஆளும் பா.ஜ.க அரசும் துணைபோனது.

அம்பேத்கர் பவன் இடிக்கப்பட்டதற்கான கண்டனத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளும், தலித் இயக்கங்களும் ஒரே குரலில் வெளிப்படுத்தின. இதுதான், ஆளும் மாநில பா.ஜ.க அரசை மட்டுமின்றி, மத்திய மோடி அரசுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஜூலை 19-ம் தேதி அன்று, 5 கி.மீ. தொலைவுக்கு கடல் போல மக்கள் திரண்டனர். அந்தக் கண்டனப் பேரணியில் அண்ணல் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் கன்னையாகுமார் உட்பட பல தலைவர்கள் பங்கேற்றனர்.

அடக்குமுறைகளைக் கண்டு அஞ்சமாட்டோம், ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஓயமாட்டோம் என்ற செய்தியை குஜராத், மகாராஷ்டிரா போராட்டங்கள் உரக்கச் சொல்லி இருக்கின்றன.

Monday 11 July 2016

ஈராக் மீதான சில்கோட் இன் ஆய்வு தீர்ப்பு: பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு போர் குற்றம்

அமெரிக்க தலைமையிலான 2003 ஈராக் படையெடுப்பில் பிரிட்டிஷ் அரசாங்கம் வகித்த பாத்திரம் பற்றி புதனன்று வெளியிடப்பட்ட சில்கோட் விசாரணை அறிக்கை, அதை ஒழுங்கமைத்து தலைமை கொடுத்த பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா இரண்டினது அதிகாரிகளின் குற்றகரமான பாத்திரம் மற்றும் போரின் சட்டவிரோத குணாம்சத்தை மிகஅழிவுகரமாக நிரூபிக்கிறது.

சேர் ஜோன் சில்கோட் தலைமையிலான இந்த விசாரணை முடிவுகள், அது தொடங்கி ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்டன. 2.6 மில்லியன் வார்த்தைகள், 13 தொகுதிகளைக் கொண்ட இந்த அறிக்கை, 2001 மற்றும் 2009 க்கு இடையே பிரிட்டிஷ் அரசாங்கம், இராணுவம் மற்றும் உளவுத்துறை சேவைகள் எடுத்த கொள்கை முடிவுகளைக் கையாண்டுள்ளது. இந்த விசாரணைக்கு சட்டபூர்வ அதிகாரங்கள் கிடையாது என்பதுடன், அந்த படையெடுப்பின் சட்டபூர்வதன்மை மீதான எந்தவொரு கண்டுபிடிப்பையும் குறிப்பாக அதை ஸ்தாபித்த கோர்டன் பிரௌன் இன் தொழிற் கட்சி அரசாங்கம் நிராகரித்திருந்தது.

எவ்வாறிருந்த போதினும் அந்த போருக்குப் பொறுப்பானவர்கள், மில்லியன் கணக்கானவர்கள் இல்லையென்றாலும், நூறாயிரக் கணக்கானவர்களின் இரத்தத்தை அவர்களின் கரங்களில் கொண்டுள்ளனர் என்பதை அந்த அறிக்கை தீர்க்கமாக நிரூபிக்கிறது.

இது, உள்ளபடியே அந்த அறிக்கையில் அதிகளவில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளவாறு, அப்படையெடுப்பிற்கு பிரிட்டனின் தலைமை-பொய்யராக செயல்பட்ட அப்போதைய தொழிற் கட்சி பிரதம மந்திரி டோனி பிளேயருக்கு மட்டும் பொருந்தும் என்பதல்ல. அதன் தொடர்ச்சியாக, அது அப்போரில் அமெரிக்காவின் பிரதான வடிவமைப்பாளர்களான முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு. புஷ், துணை ஜனாதிபதி டிக் ஷென்னி, பாதுகாப்புத்துறை செயலர் டோனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் மற்றும் ஏனையவர்கள் மீதும், அத்துடன் இப்போதைய நிலையில் ஜனநாயக கட்சியின் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் உட்பட அதை ஆதரித்த அனைத்து முன்னணி அதிகாரிகள் மீதும் வைக்கப்படும் ஒரு குற்றப்பத்திரிக்கையாக உள்ளது.

ஈராக்கிற்கு எதிராக போர் திட்டங்கள் எதுவும் இல்லையென வெளியில் பகிரங்கமாக கூறிக்கொண்டே, குறைந்தபட்சம் 2002 இன் ஆரம்பத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க-போரை பிளேயர் ஆதரித்திருந்தார் என்பதை அந்த அறிக்கையின் தனிநபர் சாட்சியங்களும், இரகசிய ஆவணங்களும் மற்றும் பிரத்தியேக குறிப்புரைகளும் உறுதிப்படுத்துகின்றன.

மார்ச் 20, 2003 இல் தொடங்கிய படையெடுப்பு, "ஆயுதக்குறைப்புக்கான சமாதான விருப்புரிமைகள்" காலாவதியாகும் முன்னரே நடந்ததாக சில்கோட் குறிப்பிடுகிறார். “அச்சமயத்தில் இராணுவ நடவடிக்கை கடைசியாக நாடப்படவில்லை,” என்றவர் அதிர்ச்சியூட்டும் விதத்தில் குறிப்பிடுகிறார்.
அச்சமயத்தில் ஈராக்கின் சதாம் ஹூசைன் ஓர் "உடனடி" அச்சுறுத்தலாக இருக்கவில்லை, ஈராக் பேரழிவுகரமான ஆயுதங்களை வைத்திருந்தது என்ற வாதங்கள் "நிரூபிக்கப்படவில்லை". “பிழையான" உளவுத்துறை மதிப்பீடுகள் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் ஆனால் கேள்விக்கு உட்படுத்தப்படாத அவற்றின் அடித்தளத்தில் அந்த படையெடுப்பு தொடங்கப்பட்டதாக சில்கோட் குறிப்பிடுகிறார்.

இத்தகைய உண்மைகளே, அந்த படையெடுப்பு ஒரு அப்பட்டமான சர்வதேச சட்ட மீறல் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் யதார்த்தம் இதை விட அதிகமான குற்றங்களை உள்ளடக்கி உள்ளது.

பிளேயர் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு இடையிலான ஜூலை 2002 கூட்டத்தை நினைவூட்டி, இரகசியமாக வைத்திருப்பதிலிருந்து விடுவிக்கப்பட்ட டவுனிங் வீதி குறிப்புரை என்றழைக்கப்படும் ஒன்றும் சில்கோட் அறிக்கையில் உள்ளடங்கி உள்ளது, “பயங்கரவாதம் மற்றும் பேரழிவுகரமான ஆயுதங்களின் கலவையைக் கொண்டு நியாயப்படுத்தி, இராணுவ நடவடிக்கை மூலமாக, புஷ் சதாமை நீக்க விரும்பினார். ஆகவே உளவுத்தகவல்களும் உண்மைகளும் அக்கொள்கையைச் சுற்றி ஒழுங்கு செய்யப்பட்டன,” என்பதை அந்த குறிப்புரையில் பிரிட்டிஷ் உளவுத்துறையின் தலைவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருந்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் அனைவருக்கும் தெரிந்திருந்த, ஒரு ஆத்திரமூட்டலற்ற போரை நியாயப்படுத்த பொய்யான சாக்குபோக்கு ஒன்று தயாரிக்கப்பட்டு வந்தது.

ஐக்கிய இராஜ்ஜிய இராணுவ நடவடிக்கைக்கான சட்டபூர்வ விடயம் "திருப்திகரமாக இல்லை" என்று சில்கோட் குறிப்பிடுகிறார். அனைத்திற்கும் மேலாக இராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் இரண்டாவது தீர்மானத்தை பிரான்ஸ் ஆதரிக்கவில்லையென அதை பிளேயர் தாக்கி வந்த போதினும், “உண்மையில் ஐக்கிய இராஜ்ஜியம் தான் பாதுகாப்பு அவையின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்தி வந்ததாக நாங்கள் [விசாரணை] கருதுகிறோம்.”

அப்படையெடுப்பு, அதன் அறிவித்திருந்த நோக்கங்களில் தவறி இருந்ததாக அவ்வறிக்கை காண்கிறது. “ஈராக்கிய உள்நாட்டு குழப்பத்தின் அபாயங்கள், ஈராக் அதன் நலன்களை செயலூக்கத்துடன் பின்தொடர்ந்தமை, பிராந்திய ஸ்திரமின்மை, மற்றும் ஈராக்கில் அல் கொய்தா ஆகிய ஒவ்வொன்றும் படையெடுப்புக்கு முன்னதாகவே வெளிப்படையாக அடையாளம் காணப்பட்டது,” என்று அது குறிப்பிடுகிறது.

(4,491 அமெரிக்க துருப்புகளுடன் சேர்ந்து) 176 பிரிட்டிஷ் படையினர் கொல்லப்பட்டனர் என்பது மட்டுமல்ல மற்றும் பல ஆயிரக் கணக்கானவர்கள் கொடூரமாக காயமடைந்தார்கள். “ஈராக்கிய மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.” மிகவும் நம்பகமான மதிப்பீடுகளின்படி, போரின் விளைவாக உயிரிழந்த ஈராக்கியர்களின் எண்ணிக்கை அண்ணளவாக 1 மில்லியனாகும். ஒரு மதிப்பீட்டின்படி 5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அவர்களது வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டிருந்தார்கள். அந்நாடு இரத்தக்களரியான பிரிவினைவாத மற்றும் அதீத பொருளாதார குழப்பத்திலும் மற்றும் கடுமையான சமூக நிலைமைகளிலும் சிக்க வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் ஹேக் இன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்கொண்டுவரப்பட்ட ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி லோரண்ட் ஹபக்போ மற்றும் சூடான் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் போன்றவர்கள் உட்பட வேறு யாருமே பிளேயர் மற்றும் புஷ் ஆல் கொல்லப்பட்டவர்களில் அளவிற்கு ஒரு சிறு பகுதியினரை கொன்றதற்கு கூட பொறுப்பாக இருக்கவில்லை.

சில்கோட் விசாரணையானது கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பின்பற்றிய கொள்கை மீதான ஒரு குற்றப்பத்திரிகையாகும். அதன் படுகொலை பரிமாணங்கள், பிரிவினைவாத மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பலப்படுத்துவதற்கு மட்டுமே சேவையாற்றி உள்ள ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியா மீது நடத்தப்பட்ட பேரழிவுகளில் வெளிப்படையாக உள்ளன.

இந்த விசாரணை முடிவை போதுமானளவிற்கு தெளிவுபடுத்துவதாயின், பிளேயர், புஷ் மற்றும் இன்னும் பலரும் போர் குற்றவாளிகளாவர் என்றுதான் தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள், அவர்களது சக-சூழ்ச்சியாளர்களுடன் சேர்ந்து, உடனடியாக விசாரணையை முகங்கொடுக்க வேண்டும்.

இரண்டாம் உலக போரைத் தொடர்ந்து, கொண்டு வரப்பட்ட நூரெம்பேர்க் விசாரணைகள், அவற்றின் முக்கிய தீர்மானத்தில் தெளிவாகவும், ஐயப்பாட்டிற்கு இடமின்றியும் இருந்தன: அதாவது உடனடியாக நிகழவிருந்த ஆபத்து தொடர்பான அச்சம் இல்லாமல் அரசியல் இலக்கை அடைவதற்கு ஒரு யுத்தத்தை பயன்படுத்துவது ஒரு போர்க்குற்றமாகும். தூக்கிலிடப்பட்ட 12 நாஜி குற்றவாளிகளைப் போலவே புஷ் மற்றும் பிளேயரும் அதேயளவிற்கு குற்றவாளிகளாவர்.

போருக்குப் பின்னால் இருந்த நிஜமான நோக்கம் பேரழிவுகரமான ஆயுதங்கள் அல்லது பயங்கரவாதம் பற்றிய அச்சம் கிடையாது, மாறாக மூன்றாம் குடியரசின் தலைவர்களுடன் சம்பந்தப்பட்டிருந்ததைப் போலவே, உலகளாவிய மேலாதிக்கமாக இருந்தது என்பதை மிகத் தெளிவாக தெளிவாக்கும் வகையில் பிளேயரிடம் இருந்து புஷ் க்கு அனுப்பப்பட்ட முந்தைய இரகசிய குறிப்புரைகளை சில்கோட் கண்டுபிடிப்புகள் உள்ளடக்கி உள்ளன. புஷ்ஷிடம் இருந்து பிளேயருக்கு அனுப்பப்பட்டவை வாஷிங்டனின் வேண்டுகோளின் பேரில் இரகசியமாக வைக்கப்பட்டன. அப்படையெடுப்பின் ஒருசில நாட்களுக்குள், பிளேயர், இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையை “பனிப்போர் காலத்திற்குப் பிந்தைய நிஜமான உலக ஒழுங்கை" ஸ்தாபிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அறிவித்து, ஆர்ப்பரித்தார்.

இவ்வறிக்கை தொடர்பான ஈராக் சண்டையில் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய்களின் குடும்பங்களில் பலரது பிரதிபலிப்புகள் குறிப்பிட்டு கூறும்படியானதாக உள்ளது. 2005 இல் ஈராக்கில் தனது சகோதரரை இழந்த சரா ஓ'கொன்னொர் கூறுகையில், “இந்த உலகின் ஒரு பயங்கரவாதியை உலகம் அறிந்து கொள்ள வேண்டும், அவரின் பெயர்தான் டோனி பிளேயர், உலகின் மிக மோசமான பயங்கரவாதி,” என்றார்.

பாஸ்ராவில் தன் மகன் மாத்தீவை இழந்த ரோஜர் பேகன் கூறுகையில், “பிரிட்டிஷ் மக்கள் கொல்லப்படுவதை அனுமதிக்கும் வகையில் மற்றும் சாதகமான முடிவுகள் இன்றி ஒரு நாடே நாசமாவதற்கு இட்டுச் செல்லும் வகையில் மீண்டும் ஒருபோதும் இந்தளவிற்கு தவறுகள் செய்யக் கூடாது,” என்றார்.

2007 இல் கொல்லப்பட்ட கெவின் இன் தந்தை மார்க் தொம்சன் கூறினார், பிளேயர் "என்ன செய்தாரோ அவை ஒவ்வொன்றுக்காகவும் தோலுரித்துக் காட்டப்பட வேண்டும். அதுவொரு சட்டவிரோதமான போர். என் மகன் வீணாக கொல்லப்பட்டார். அவர் காரணமின்றி கொல்லப்பட்டார்.”

உளவுத்தகவல்களை "அவர் தனக்கு சாதகமாக்கி, திரித்துக் கொண்டிருந்தார்" என்பது பிளேயருக்குத் தெரியும் என்று ரெக் கீஸ் தெரிவித்தார், இவரது மகன் தோமஸ் உம் கொல்லப்பட்டிருந்தார். அதேவேளையில் எடி ஹான்கோக், இவரின் மகன் ஜேமி உம் கொல்லப்பட்டிருந்த நிலையில், “மிகக் குறைந்தபட்சம்" "வாழ்க்கை முழுவதிற்கும் பொது பதவிகள் வகிப்பதை எந்தவொரு வடிவத்திலும்" பிளேயருக்கு "தடைவிதிக்க வேண்டும்" என்று அழைப்புவிட்டார்.

அத்தகைய நேர்மையான மற்றும் மற்றும் இதயப்பூர்வமான கருத்துக்கள், அதிகாரத்தில் இருப்பவர்களின் விடையிறுப்புடன் கூர்மையாக முரண்படுகின்றன, இவர்கள் விசாரணையின் முடிவுகளை மூடிமறைத்து, எதிர்காலத்தில் இன்னும் நிறைய திறன்மிகுந்த போர்களை நடத்துவதற்கான ஒரு கட்டமைப்புக்குள் அதை திருப்ப முயற்சித்து வருகிறார்கள்.

ஈராக் விளைவு என்னவாக இருந்தாலும், “அந்த தலையீடு எப்போதுமே பிழையானது தான் என்று முடிவெடுப்பது தவறானது” என்று பிரதம மந்திரி டேவிட் கேமரூன் வாதிட்டார்.

தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் இவர்கள் அனைவருக்கும் மிகவும் கோழைத்தனமான அனுதாபியாக இருந்தார். ஈராக் மீது படையெடுக்கும் "நாசகரமான முடிவைக்" குறித்து புலம்பிய அவர், அது தொழிற் கட்சியின் மீது ஒரு "கரும்புள்ளியை" ஏற்படுத்திவிட்டதாக தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் பிளேயரை தொழிற் கட்சியிலிருந்து நீக்குவதை விவாதிக்க வேண்டுமென்பது ஒருபுறம் இருக்கட்டும், பிளேயரின் பெயரைக் கூட கோர்பின் குறிப்பிட விரும்பவில்லை.

இது, அந்த அறிக்கைக்கு பிளேயரின் திமிரான மற்றும் ஆக்ரோஷமான விடையிறுப்புக்குப் பாதை அமைத்து கொடுத்தது, அதில் அவர் கடந்தகால குற்றங்களை மட்டும் நியாயப்படுத்த முயலவில்லை, மாறாக புதிய குற்றங்களையும் நியாயப்படுத்த முனைந்தார். “என்னுடைய மதிப்பீட்டில், சதாம் ஹூசைன் இல்லாத இந்த உலகம் ஒரு சிறந்த இடமாக இருந்தது, இருக்கிறது" என்றார்.

அவரது டெக்சாஸ் பண்ணையில் இருந்து வெளியிட்ட ஓர் அறிக்கையில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் பிளேயரின் கருத்துக்களையே எதிரொலித்தார். “சதாம் ஹூசைன் இல்லாமல் முழு உலகமும் சிறப்பாக இருக்கிறது" என்று அறிவித்தார்.

இத்தகைய வெறிபிடித்த சமூகவிரோத கொலைகாரர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், அவர்களின் போரால் உயிரிழந்த 1 மில்லியன் மக்கள் இல்லாமல் "உலகம் சிறப்பாக" இருக்கிறதாம்.

இந்த விசாரணை கண்டுபிடிப்புகளுக்கு புஷ் மற்றும் பிளேயரின் விடையிறுப்பு மட்டுமின்றி, மாறாக அட்லாண்டிக் இன் இரண்டு தரப்புகளிலும் உள்ள ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் விடையிறுப்பும் என்ன வெளிப்படையாக தெளிவாக்குகிறது என்றால், உண்மை மற்றும் நீதிக்கான போராட்டமும் மற்றும் ஈராக்கிய மக்களுக்கான நஷ்டஈடும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் மட்டுமே தொடர முடியும் என்பதாகும்.

சில்கோட் அறிக்கை, மத்திய கிழக்கில் மட்டுமல்ல, மாறாக அத்துடன் ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராகவும் அதிகரித்தளவில் தீவிரப்படுத்தப்பட்டு வரும் ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் பின்புலத்திற்கு எதிராகவும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவினது ஆராய்ச்சிகளின் கடந்த ஏழு ஆண்டுகளின் போது ஒரு மூன்றாம் உலக போருக்கான தயாரிப்புகள் வேகமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

“போருக்கு எதிரான போராட்டம், சமூகத்தின் மிகப் பெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தின் பின்னால் மக்களின் சகல முற்போக்கான கூறுபாடுகளையும் ஐக்கியப்படுத்துவதன் அடிப்படையில் அமைக்க வேண்டும்,” என்று பெப்ரவரி 18, 2016 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் பிரசுரிக்கப்பட்ட"சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்" என்ற அதன் அறிக்கையின் இன்றியமையாத தீர்மானத்தையே இந்த விசாரணையின் படிப்பினைகள் உறுதிப்படுத்துகின்றன.

நேட்டோ உச்சிமாநாடு கூடவிருக்கும் நிலையில் ஜேர்மன் மறுஆயுதபாணியாவதற்கு மேர்க்கெல் அழைப்பு விடுக்கிறார்

இந்த வார இறுதியில் வார்சோவில் நேட்டோ உச்சிமாநாடு நடைபெறவிருப்பதை ஒட்டி, சான்சலர் அங்கேலா மேர்கெல் (கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்) நாடாளுமன்றத்திற்கு அளித்த ஒரு அரசாங்க அறிக்கையில் ஜேர்மனி மறுஆயுதபணியாகலை முடுக்கி விடக் கோரினார். அடுத்த ஆண்டில் சுமார் இரண்டு பில்லியன் யூரோக்கள் வரை இராணுவ நிதி ஒதுக்கீடை விரிவுபடுத்துவது, அத்துடன் 2018க்குப் பின்னர் “கூடுதலாய் 2.5 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான” தொகையை ஒதுக்குவது ஆகியவை தவிர, ஜேர்மன் முப்படைகளும் (Bundeswehr) நேட்டோவுக்கு இணையாக ஈராக், சிரியா, லிபியா, மத்திய தரைக்கடல் மற்றும் ஆப்கானிஸ்தானில் செயலூக்கத்துடன் ஈடுபாடு காட்டும் என்று மேர்கெல் அறிவித்தார்.

வார்சோவில் அறிவிப்பதற்கு நேட்டோ திட்டமிட்டுக் கொண்டிருக்கின்ற ரஷ்யாவுக்கு எதிரான போர்த் தயாரிப்புகளுக்கான நியாயப்படுத்தல் சான்சலரின் உரையின் மையத்தானத்தில் இடம்பிடித்திருந்தது. வேல்ஸில் 2014 இல் நடந்த சென்ற உச்சிமாநாட்டில் நேட்டோ ஏற்கனவே ஏற்றுக் கொண்டிருந்த “ஆயத்த நடவடிக்கை திட்டம்” என்று அழைக்கப்படுகின்ற ஒன்றை ஆரம்பத்தில் இருந்தே மேர்க்கெல் புகழ்ந்து தள்ளினார். குறிப்பாக மேர்க்கெல், “கூட்டணிப் பிராந்தியமெங்கிலும் நிலைநிறுத்தப்படத்தக்க ஒன்பது நேட்டோ அதிவேக தலையீட்டுப் படைகள், அதிஉயர் ஆயத்த கூட்டுச் செயல் படை என்பதான ஒன்று மற்றும் நமது கிழக்கத்திய நேட்டோ கூட்டாளிகளின் படை ஒருங்கிணைப்பு அலகுகளைக் கட்டியெழுப்புவது” ஆகியவற்றை புகழ்ந்தார்.

“இந்த நடவடிக்கைகளுக்கு ஜேர்மனி “கணிசமான ஒரு பங்களிப்பை செய்துகொண்டிருக்கிறது” என்றார். வார்சோவில் “வேல்ஸில் ஒப்புக்கொள்ளப்பட்ட கூட்டணியின் தகவமைவு நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட இருக்கின்றன”. அடிப்படையாக, “நேட்டோ பால்டிக் அரசுகளிலும் போலந்திலும் தனது பிரசன்னத்தை அதிகரிக்க வழி செய்துதருவது” இதில் இடம்பெற்றிருக்கும். “துருப்புகளை விரைவாக நகர்த்தும் திறன் பெற்றிருப்பது மட்டுமே” போதுமானதல்ல என்பதால் இந்த “மேம்பட்ட முன்னோக்கிய பிரசன்னம்” என்று அழைக்கப்படுவது முக்கியமாகிறது. மாறாக “அங்கு ஏற்கனவே போதுமான உள்ளூர் பிரசன்னம்” இருந்தாக வேண்டும்.

இத்திட்டங்கள் “ஒரு பலபரிமாண பல இணைப்புக்கொண்ட பிரசன்னத்தை” எதிர்நோக்குவதாக மேர்கெல் கூறினார். “பால்டிக் நாடுகள் ஒவ்வொன்றுக்கும் அத்துடன் போலந்திற்கும்...அங்கு நேட்டோ பிரசன்னம் தொடர்வதை உறுதிசெய்வதில் ஒரு கூட்டணி நாடு முன்னிலை வகிக்கும்”. அநேகமாக லித்துவேனியா தான் ஜேர்மனிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அந்தக் கூட்டாளி நாடாக இருக்கலாம்.

அவசியப்பட்டால் புதிய படையணிகள் பயன்படுத்தப்படும் என்பதை மேர்க்கெல் தெளிவாக்கினார். “கலப்பு அச்சுறுத்தல்கள் என்று அழைக்கப்படுகின்ற, அதாவது, உக்ரேனில் ரஷ்யா பின்பற்றியதையொத்த சூழல்களுக்கான பதிலிறுப்பையும்” இந்த அணுகுமுறை விருப்பத்துடன் உள்ளடக்கியிருந்ததாக அவர் வலியுறுத்தினார்.

உக்ரேனில் ரஷ்ய-ஆதரவு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சிற்கு எதிராக ஒரு ஆட்சிக்கவிழ்ப்பிற்கு ஜேர்மனியும் அமெரிக்காவும் ஆதரவளித்தது முதலாகவே, ஜேர்மன் அரசியல்வாதிகளும் மற்றும் ஊடகப் பிரதிநிதிகளும் கிழக்கில் ஒரு இராணுவ பலவந்தத்தையும் அத்துடன் ரஷ்யாவைச் சுற்றிவளைப்பதையும் நியாயப்படுத்துவதற்காக “ரஷ்ய மூர்க்கத்தனத்தில்” இருந்து பாதுகாப்பதற்கான நேட்டோவின் பொறுப்பு என்ற மந்திரத்தை தொடர்ந்து சிரத்தையாக உச்சாடனம் செய்து வருகின்றனர்.

நேட்டோவில் 29வது உறுப்புநாடாக மொண்டெநெக்ரோ விரைவில் இணையவிருப்பதை மேர்கெல் தனது உரையில் முகமலர வரவேற்றார். மேலும் ஏற்கனவே ரஷ்யாவுடன் ஒரு அறிவிக்கப்படாத இராணுவ மோதலில் இருக்கக் கூடியதும் நேட்டோவில் இணைவதற்கு அறிவிக்கப்பட்ட நோக்கத்தையும் கொண்டிருக்கின்ற ஜோர்ஜியா மற்றும் உக்ரேன் ஆகிய இரண்டு அரசுகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து “நேட்டோ-ஜோர்ஜியா குழு மற்றும் நேட்டோ-உக்ரேன் குழுவின் சந்திப்புகள்” வார்சோவில் நடைபெறவிருக்கின்றன.

போலந்திலும், ரோமானியாவிலும் அமெரிக்கா இப்போது கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் புதிய ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புக்கு மேர்க்கெல் ஆதரவை வெளிப்படுத்தினார். “கூட்டணிப் பகுதியில் மக்களை மேம்பட்ட வகையில் பாதுகாப்பதற்கு...மேலதிகமான முக்கியமான நடவடிக்கை” என்று அவர் இதனை அழைத்தார்.

அபத்தமான வகையில், நேட்டோவின் தற்காப்பு இராணுவப்பெருக்க மூலோபாயத்தை “ஆழமான தற்காப்பு கருத்தாக்கம்” என்று மேர்கெல் வருணித்தார். “தற்காப்பு இராணுவப்பெருக்கமும் பேச்சுவார்த்தையும்” ஒன்றுக்கொன்று எதிரெதிரானவை அல்ல, மாறாக “பிரிக்கமுடியாதவை” ஆகும் என்று அவர் கூறிக் கொண்டார். நேட்டோவுக்குள்ளாக இதில் “உடன்பாடு” நிலவுவதாக அவர் கூறினார். இதுதவிர, “ஐரோப்பாவில் நீடித்த பாதுகாப்பு என்பது, ரஷ்யாவுடன் இணைந்து மட்டுமே சாதிக்கப்பட முடியும், எதிராக செயல்பட்டு அல்ல” என்றார் அவர்.

உண்மையில், நேட்டோ ஸ்தாபகத்தின் பிரிவுகள் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு மூர்க்கமான போரின் சாத்தியத்தைக் குறித்து ஏற்கனவே விவாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக, அமெரிக்க இராணுவ மூலோபாயவாதியான ஹார்லன் உல்மான், “ரஷ்யாவுக்கு எதிரான ஒரு போருக்கு அமெரிக்கா திட்டமிடுகிறதா?” என்ற தலைப்பில் UPI செய்தி நிறுவனத்திற்கு எழுதிய ஒரு சமீபத்திய கட்டுரையில், பிரிட்டனில் நடந்த ஒரு இராணுவக் கருத்தரங்கில் அமெரிக்காவின் தளபதி ஒருவர் “தற்காப்புக்காக இராணுவத்தைப் பெருக்குவதும் அவசியமானால் ரஷ்யாவைப் போரில் தோற்கடிப்பதும்” அமெரிக்க இராணுவத்தின் உயர்மட்ட முன்னுரிமையாக இருந்தது என்று கூறியிருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

Die Zeit இன் சமீபத்திய பதிப்பில், நேட்டோவின் உள்ளக ஆவணங்களின் அடிப்படையிலான ஒரு கட்டுரையில், மத்தியாஸ் நாஸ், இராணுவக் கூட்டணியானது “தற்காப்பு அணுஆயுதப் பெருக்கத்திற்கு” திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அது “பால்டிக் அரசுகளில் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு அணுஆயுத வெடிதிரியை அமைக்க” விரும்புவதாகவும் எழுதுகிறார். ”வார்சோ முடிவுகள் ரஷ்யாவில் வன்முறையான எதிர்வினைகளை — அணுஆயுத சக்திபடைத்த Iskander ஏவுகணைகளை Kaliningrad பகுதியில் நிறுத்துவதில் தொடங்கி மத்திய-தூர அணு சக்திகள் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது வரையிலும் — தூண்டும்” என்பது ஏற்கனவே தெளிவாக இருக்கிறது.

நேட்டோவின் போர்க் கொள்கைகளுக்குப் பின்னால் மேர்க்கெல் முழுமையாக ஆதரித்து நிற்கின்றார் என்கிற அதேவேளையில், பெருங்கூட்டணிக்கு இடையிலான வேறுபாடுகளும் நாடாளுமன்ற விவாதத்தில் காணக்கிடைக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேல், சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் மூர்க்க நடவடிக்கைகள் கிழக்கு ஐரோப்பாவிலும் மற்றும் உலகின் மற்ற பிராந்தியங்களிலும் ஜேர்மனியின் புவிமூலோபாய மற்றும் பொருளாதார நலன்களுக்கான ஒரு அச்சுறுத்தலாக இருப்பதாகவே பெருமளவில் கருதுகின்றனர்.

“100,000 படைவீரர்கள் வரையான பெருமளவு ரஷ்ய இராணுவ உத்திகள்” குறித்து “தெளிவான பதில்கள்” வேண்டும் என்று SPD இன் நாடாளுமன்றத் தலைவரான தோமஸ் ஓப்பர்மான் கோரினார். அதேசமயத்தில் “மீண்டும் பனிப்போரின் பொறிமுறைக்குள் விழுந்து விடுவதற்கு” எதிராகவும் அவர் எச்சரித்தார். “இந்த நாசகரமான சுற்றில் நாம் மீண்டும் விழுந்து விடாமல் இருப்பதை” உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அவர் அறிவித்தார். ஆயுதப் போட்டி என்பது “ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும், தேவைகளில் கடைசியாகத் தான் இருக்க முடியும்” என்றார் அவர்.

“ரஷ்யாவை நோக்கிய படிப்படியான அணுகுமுறை”க்கு ஓப்பர்மான் விண்ணப்பித்தார். “விளாடிமிர் புட்டின் தரப்பில் உண்மையான விட்டுக்கொடுப்புகள்” இருந்தால், தடைகளை அகற்றுவதற்கான வாய்ப்பிருப்பதை - சென்ற வாரத்தில் தான் ஐரோப்பிய ஒன்றியம் அதனை நீட்டித்திருந்தது - ஓப்பர்மான் உறுதிசெய்தார். தன்னளவில் “அவற்றோடு முடிந்து விடுவதல்ல” என்றார் அவர். தவிரவும் வெளியுறவு அமைச்சர் ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் “இராணுவ அணிவகுப்புகளையும் இராணுவ உத்திகளையும் மட்டும் கொண்டு நீங்கள் பாதுகாப்பை வென்றுவிட முடியாது” என்று கூறியது ”முற்றிலும் சரியானது” என்றார். “அமைதி என்பது வெறுமனே இராணுவ வலிமையால் மட்டும் அடைந்து விடக் கூடியது அல்ல என்று சுட்டிக்காட்டியதற்காக அவருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளதாக” தெரிவித்தார்.

ஸ்ரைன்மையர் ஆலோசனையளிப்பது ஒரு “அமைதிக் கொள்கை”யை அல்ல என்பது ஓப்பர்மானுக்கு நன்றாகவே தெரியும். ஒரு அகன்ற வெளியுறவுக் கொள்கைக்கும் உலகெங்கிலும் ஜேர்மனிக்கான இராணுவப் பாத்திரத்திற்கும் அவர் பல வருடங்களாய் வலியுறுத்தி வந்து கொண்டிருக்கிறார். ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஜூன் 13 அன்று வெளியுறவு விவகாரங்கள் இதழில் “ஜேர்மனியின் புதிய உலகளாவிய பாத்திரம்” என்ற ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். ஜேர்மனியை ஒரு “பெரும் ஐரோப்பிய சக்தி”யாக வருணிக்கும் அக்கட்டுரை அமெரிக்காவிடம் இருந்து ஜேர்மனியை தள்ளி நிறுத்திக் கொண்டதோடு உலக அரசியலில் ஒட்டுமொத்த தலைமைக்கும் அமெரிக்கா உரிமை கோருகின்ற நிலையை சவால்செய்தது.

நாங்கள் அச்சமயம் கருத்திட்டோம், “மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவை மறுபங்கிடுவதற்கான போர்களுடன் ரஷ்யா மற்றும் சீனா மீதான சுற்றிவளைப்பும் சேர்ந்து ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலேயே மோதல்களுக்கு இட்டுச் செல்கிறது என்பதை ஸ்ரைன்மையரின் இந்தத் திடீர் பாய்ச்சல் தெளிவாக்குகிறது. கூட்டாளிகளாய் இருந்தபோதும் அமெரிக்காவும், ஜேர்மனியும் போட்டியான பொருளாதார மற்றும் அரசியல் நலன்களைக் கொண்டவையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் சிதறலும் - பிரிட்டன் விலகினால் இது இன்னும் வேகம்பிடிக்கும் - அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் எழுச்சியும் இந்த மோதல்களை இன்னும் உக்கிரமாக்கும்.”
இடது கட்சியின் நாடாளுமன்றத் தலைவரான சாரா வாகன்கினெக்ட், அமெரிக்காவிடம் இருந்து மிக அதிக தூரம் விலகி வந்ததோடு ரஷ்யாவுடன் கூட்டணி வைக்கவும் ஆலோசனையளித்தார். எதிர்க்கட்சித் தலைவராக மேர்க்கெலை தொடர்ந்து அவர் பேசினார்.

ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர்த் தயாரிப்புகளை கடுமையாக விமர்சனம் செய்த சாரா வாகன்கினெக்ட், ஜேர்மனி அமெரிக்காவையே சாத்தியமான எதிரியாகக் கருத வேண்டும் என்று வேண்டினார். 2015 நவம்பரில் காலமான முன்னாள் சான்சலர் ஹெல்முட் ஸ்மித் (SPD), “இன்று அதிகமான அபாயம் ரஷ்யாவைக் காட்டிலும் அமெரிக்காவிடம் இருந்தே வருகிறது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரும் விடயங்களில் அதிக வித்தியாசம் இருக்கப் போவதில்லை, வெள்ளை மாளிகை ஒரு அரைக் கிறுக்கராலோ அல்லது அமெரிக்க இராணுவ ஆயுத செல்வாக்கு குழுவின் கைப்பாவையாலோ தான் கைப்பற்றப்பட்டிருக்கும்” என்ற கண்ணோட்டத்தைக் கொண்டிருந்ததாக சாரா வாகன்கினெக்ட் அப்போது கூறினார்.

Friday 24 June 2016

ஐரோப்பியன் யூனியனில் பிரிட்டன் விலகல்: தலைவர்கள் கருத்து

ஐரோப்பியன் யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதா வேண்டாமா என்பது குறித்த மக்கள் கருத்து ஓட்டெடுப்பு நடந்தது. இதில் விலகுவது என 51 சதவீத மக்கள் ஓட்டளித்தனர். இதையடுத்து ஐரோப்பியன் யூனியன் அமைப்பில் இருந்த பிரிட்டன் வெளியேறியது. மக்களின் முடிவுக்கு மதிப்பளித்த பிரதமர் டேவிட் கேமரூன் தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து உலக தலைவர்களின் கருத்து வருமாறு:

பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலாண்டே:
பிரிட்டன் வெளியேறியதன் மூலம் ஐரோப்பியன் யூனியன் அமைப்பு கடினமான சவால்களை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இருப்பினும் பிரிட்டன் மக்களின் முடிவை நான் மதிக்கிறேன்.

அமெரிக்க அதிபர் ஒபாமா: பிரிட்டன் மக்களின் முடிவுக்கு அமெரிக்க மதிப்பளிக்கிறது. பிரிட்டன் வெளியேறினாலும், ஐரோப்பியன் யூனியன் அமைப்பு, பிரிட்டன் ஆகியவற்றுடனான அமெரிக்காவின் நட்புறவு என்றுமே தொடரும்.

ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைவரும், பிரிட்டனின் பிரதான அமைச்சருமான நிக்கோலா ஸ்டர்ஜியன்:
பிரிட்டனில் வரலாற்று சிறப்புமிக்க ஓட்டெடுப்பு நடந்துள்ளது. இனி ஸ்காட்லாந்து தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது முறையாக மக்கள் வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐரோப்பியன் யூனியன் அமைப்பின் தலைவர் டெனால்டு டஸ்
க்: பிரிட்டன் வெளியேறியது வருத்தமளிக்கிறது. எவ்வளவு சீக்கிரம் வெளியேற வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேற வேண்டும் என பிரிட்டன் மக்கள் தங்களின் முடிவை அந்நாட்டு அரசுக்கு வலியுறுத்தியுள்ளது எதிர்பார்த்த ஒன்று தான்.


ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கெல்:
பிரிட்டன் மக்களின் இந்த முடிவு அந்நாட்டு அரசுக்கு பின்னடைவு. இதன் மூலம் மக்களின் முடிவுக்கு அந்நாட்டு அரசு மதிப்பளித்துள்ளது.

சைவ சமயத்தைத் தாக்கினால் அது எம் தமிழைக் கொன்று விடும்

எமது தமிழ் மக்களின் வாழ்வில் காத்திரம் என்பது படிப்படியாகக் குறைந்து வருகிறது.
போர்க்காலச் சூழல் எம் இனத்தின் கட்டுமானத்தை மிகமோசமாகப் பாதித்துள்ளதால் எங்கள் பண்பாடுகள், கலாசார விழுமியங்கள் என்பன கட்டறுந்து சின்னாபின்னமாகிப் போனது என்ற வேதனை நம் அனைவரிடமும் இருக்கவே செய்கிறது. 

நிலைமை இதுவாக இருக்கையில், தமிழ்  மண்ணில் மதம் பரப்பும்  பயங்கரவாதமும் மதத்தின் பெயரால் ஆக்கிரமிப்புச்செய்கின்ற நாசகாரச் செயல்களும் மெல்லமெல்ல வளர்ச்சி கண்டு எங்களிடையே மோதலை ஏற்படுத்தி விடக்கூடியதான சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றது.

இத்தகையதொரு நிலைமைக்கு யார் சந்தர்ப்பம் அளித்தாலும் அது பேரழிவைத் தரும் என்பதே உண்மை.
மண் மீட்புப் போராட்டத்தை நடத்திய விடுதலைப் புலிகள் ஒருபோதும் மதவாதத்திற்கு இடம் கொடுக்கவில்லை. விடுதலைப் புலிகளின் எந்த முகாம்களிலும் கடவுள் படங்களோ சொரூபங்களோ அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதான வரலாறு எதுவும் இல்லை.

அவர்களின் முழு நினைப்பும் எம் தமிழ்மொழியாகிய  தமிழும் தமிழினமும்தான். 
ஆனால் தமிழர் தாயகத்தில் அமைக்கப்பட்ட இராணுவ முகாம்கள் அனைத்திலும் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டிருப்பதை நாம் கண்டிருக்கிறோம். 

இராணுவத்தில் பெளத்தர்கள் மட்டுமன்றி கத்தோலிக்கர்களும் ஏனைய கிறிஸ்தவ அமைப்புகளைச் சார்ந்தவர்களும் பணியாற்றுகின்ற  இலங்கையில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களிலும் புத்தர் சிலைகள் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும். 

இராணுவ முகாம்கள் எங்காவது யேசுபிரானின் சுருவம் அல்லது திருச்சிலுவை அமைக்கப்பட்டிருப்பதை காணவே முடியாது. எனினும் சிங்களக் கத்தோலிக்கர்கள் இதனை எதிர்க்கவில்லை ஏனெனில் தமது தாய்ச் சமயம் பெளத்தம் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்-இருக்கின்றனர்.

 இலங்கை ஒரு பெளத்த சிங்கள நாடு என்று சிங்களக் கத்தோலிக்கர்களும் சொல்லுகின்ற மனநிலையைக் கொண்டிருப்பதால்தான் இன்னமும் இலங்கையில் பெளத்த சிங்கள ஆட்சி என்ற உத்வேகம் தென்பகுதியில் உரம் பெற்றுள்ளது. 

ஆனால் தமிழர்கள் என்றாலே அவர்கள் சைவம் தான் என்றிருந்த நிலைமை அந்நியர் ஆட்சியில் குலைந்து கட்டாயத்தின் அடிப்படையிலும் கல்வி, உத்தியோகம் என்ற தேவையின் காரணமாகவும் மதமாற்றம் என்பது நடந்தேறியது. 

எனினும் எதனையும் ஏற்றுக் கொள்கின்ற சைவ சமயம், கத்தோலிக்கத்தை அனுசரித்தது. கத்தோலிக்க சமயம் சார்ந்தவர்களுக்கும் தாய்ச் சமயம் சைவம்  என்பதால் நம் முன்னவர்கள் சைவத்திற்கு எத்தீங்கும் இழைக்கலாகாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

ஏனெனில் சைவ சமயத்திற்கு தீங்கு இழைக்கப்படுமாயின் அதன் விளைவு தமிழ்மொழியை பாதிப்பதாக அமையும் என்ற உண்மையை அவர்கள் உறுதியாக அறிந்திருந்தனர். 

ஆனால் இன்றைய நிலைமை அதுவன்று. எனவே இந்நிலைமை தமிழை அழித்துவிடுமே என்ற அச்சத்தை தருகிறது. 

சைவ சமயத்தவர்களும்  கத்தோலிக்கர்களும் இதர கிறிஸ்தவ அமைப்புச் சார்ந்தவர்களும் உற வினர்களாக இருக்கின்ற எங்கள் தமிழர் தாயகத்தில் நம் எல்லோருக்கும் தாய்ச் சமயமாக இருக்கக் கூடிய சைவ சமயத்தைப் பாதுகாப்பது தமிழைப் பாதுகாப்பதற்கு ஒப்பானது என்பதால், எந்த விதமான மத பேதமும் இன்றி எம் தமிழை  வளர்க்கப் பாடுபடுவோம். அதுவே இன்றைய தேவை. 

valampuri