Sunday 7 February 2016

நாம் செய்த தியாகம் எல்லாம் தமிழில் தேசிய கீதம் பாடவோ?

இலங்கைத் திருநாட்டின் 68ஆவது சுதந்திர தின வைபவம் நேற்று முன்தினம் காலி முகத்திடலில் நட ந்தது.
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
சுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டது சரியா? தவறா? என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும்.
 
காணாமல் போனவர்கள் பற்றி இன்னமும் ஒரு முடிவில்லாதபோது; தமிழ் மக்களின் வாழ்விடங்களை இப்போதும் படையினர் தம்வசம் கையகப்படுத்தி வைத்திருக்கின்ற நேரத்தில்; தமிழ் அரசியல் கைதிகளை இன்னமும் விடுதலை செய்யாத நிலையில்; போரினால் பாதிக்கப்பட்டு அங்கவீனமானவர்கள்; குடும்பத் தலைவரை இழந்த பெண்கள்; 
பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்; பிள்ளைகளைப் பறி கொடுத்த பெற்றோர்கள்; வீடற்றவர்கள்; அனைத்து உடைமைகளையும் இழந்தவர்கள் என பெரியதொரு துன்பப்பட்டியல் எங்களிடம் இருக்கும் போது, தமிழ் அரசியல் தலைவர்கள் சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டிய தேவை என்ன? என்ற கேள்வி எழுவதில் நிறைந்த நியாயம் உண்டு.
 
இதேநேரம் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி கட்டப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது என்ற விடயமும் இங்கு நோக்குதற்குரியது.
இவை ஒருபுறம் இருக்க, சுதந்திர தின நிகழ்வின் நிறைவில் தமிழில் தேசியகீதம் இசைக்கப்பட்டது.
 
தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரின் கண்கள் கலங்கியதாகத் தகவல். இத்தகவலை அறியும் போது, இலங்கையில் இது காறும் இருந்த பிரச்சினை தமிழில் தேசிய கீதம் இசைக்காததுதான்.
 
இதற்காகவே தமிழ் இளைஞர்கள் போராளிகளா கப் புறப்பட்டு வீர மரணத்தை தழுவிக் கொண்டனர். யுத்தம் நடந்த போதெல்லாம் தமிழ் மக்கள் ஊர் ஊராகச் இடம் பெயர்ந்தனர் என்று பொருள் கொள்ளத் தோன்றும்.
 
1948களில் முதுபெரும் புலவர் மு.நல்லதம்பி அவர்களால் தேசிய கீதம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.
 
அன்றில் இருந்து தமிழர்  பகுதிகளில் நடக்கும் பொது நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் இசைக் கப்பட்டது. போராட்ட காலத்தில் இது தடைப்பட்டிருக்கலாம்.
 
எதுவாயினும் தமிழில் தேசிய கீதம் இசைப்பதால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. எனவே சம்பந்தரின் கண்கள் கலங்கியமை, தமிழர்களின் கண்களில் இருக்கின்ற கண்ணீர் காலம் எல்லாம் அழுவதற்கு என்று நினைத்ததால் ஏற்பட்டதாக இருக்கலாம்.
 
அல்லது தமிழர்கள் தமக்கொரு தேசிய கீதத்தைப் பாட நினைத்து எத்தனையோ இழப்புகளைச் சந்தித்தனர். அவை எல்லாம் கைக்குக் கிட்டாமல் இன்று இந்த நாட்டின் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டதுதான் மிச்சம் என்று நினைத்து அவர் கண் கலங்கி இருந்தாலன்றி, வேறு எந்த விதத்திலும் சம்பந்தரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் முகிழ்ப்பது அர்த்தமற்றது; பொருத்தமற்றது.

No comments:

Post a Comment