Thursday, 31 March 2016

மிஸ்டர் ஒபாமா, உங்க சங்காத்தமே வேணாம்! - ஃபிடல் காஸ்ரோ காட்டம்

கடந்த வாரம் க்யூபா சென்று, நேசக்கரம் நீட்டி வந்த அதிபர் ஒபாமாவுக்கு, முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ரோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பரிசுகள் க்யூபாவுக்கு தேவையில்லை என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு காலம் க்யூபாவை ஆட்சி செய்து வந்த ஃபிடல் காஸ்ரோ, உடல் நிலை காரணமாக தனது தம்பி ரவுல் காஸ்ரோவிடம் 2008 ஆம் ஆண்டு அதிகாரத்தை ஒப்படைத்தார். 
 
 
 
அவரது ஐம்பது ஆண்டுகால ஆட்சி முழுவதும், அமெரிக்காவைக் கடுமையாக எதிர்த்து வந்தார். அதிபர் ஜான் கென்னடி விதித்த பொருளாதாரத் தடையினால் ஏற்பட்ட இழப்புகளை, தன்னிறைவு திட்டங்கள் மூலம் முறியடித்து சாதனை படைத்தார். ரவுல் காஸ்ரோ பதவியேற்ற பிறகு, சற்று முதலாளித்துவப் பாதையில் க்யூபாவை திருப்ப முயல்கிறார். அதை உணர்ந்த ஒபாமா இதுதான் சரியான தருணம் என்று கடந்து மூன்று ஆண்டுகளாக திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளை பல்வேறு மட்டத்தில் நடத்தி வந்தார்.
 
உச்சகட்டமாக, க்யூபாவுக்கு சென்று ரவுல் காஸ்ரோவுடன் மிகவும் நெருக்கம் காட்டினார். மக்களுடன் உரையாடினார். 'பழையவற்றை மறப்போம், மாற்றம் காண்போம், நல்லுறுவு பேணுவோம்' என்று க்யூபா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பொருளாதார தடை நீக்க அறிவிப்பும் வெளியிட்டார். க்யூபா மக்களிடையே ஒபாமாவின் அழைப்புக்கு வரவேற்பு கிடைத்த்து. 
 
இந் நிலையில் 89 வயதான ஃபிடல் காஸ்ரோ ( நம்ம ஊர் நல்லகண்ணுவை விட 8 மாதங்கள் இளையவர்!), "ஒபாமாவின் பரிசுகள் தேவையில்லை. பழைய துரோகங்களையும், அவதிகளையும் அத்தனை சுலபத்தில் மறந்துவிட முடியுமா? 
 
1961-ல் அமெரிக்கா தொடுத்த கொடூரத் தாக்குதல் மிகப் பெரிய நம்பிக்கை துரோகம். அந்தத் தாக்குதலில் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான இழப்புகள், கொடூர பலிகளை எப்படி மறக்க முடியும்? இத்தனை ஆண்டுகள் கழித்து அமெரிக்கா அதற்கெல்லாம் என்ன இழப்பீட்டைத் தர முடியும்? 
 
க்யூப மக்களின் அளப்பரிய தியாகத்தின் மேல் எழுப்பப்பட்டதுதான் இன்றைய சமூக வளர்ச்சியும் கலாச்சாரமும். ஒபாமாவுக்கு 10 வயதிருக்கும்போதே அனைத்துக் க்யூப மக்களுக்கும் சம்பளமும் பென்ஷனும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. அந்த அளவு தன் பலத்தை மட்டுமே நம்பி வளர்ந்த நாடு இது. 
 
க்யூபா தன்னிசையாகவே தன் மக்களுக்குத் தேவையான பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வல்லமை உடையது. நீங்கள் தள்ளியே இருங்கள் ஒபாமா," என்று நாளிதழில் அறிக்கை விடுத்துள்ளார். 
 
 பதவியில் இல்லாவிட்டாலும் இன்னும் மக்கள் செல்வாக்குடன் விளங்கும் ஃபிடல் காஸ்ரோவின் இந்த அறிக்கை, இரு தரப்பிலும் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு முயற்சிகள் தொடரும் என்றே நம்பப்படுகிறது.

Tuesday, 29 March 2016

பெல்ஜிய அதிகாரிகளுக்கு புரூசெல்ஸ் குண்டுவெடிப்புகள் குறித்து "துல்லியமான உளவுத்தகவல் எச்சரிக்கைகள்" கிடைத்திருந்தன

புரூசெல்ஸில் 34 பேர் கொல்லப்பட்டு 230 பேர் காயமடைந்த பாரிய குண்டுவெடிப்புகளுக்கு அடுத்த நாள், அத்தாக்குதல்களை குறித்து பெல்ஜிய அதிகாரிகளுக்கு முன்கூட்டியே குறிப்பிட்ட எச்சரிக்கைகள் கிடைத்திருந்தன என்பதும், அத்தாக்குதலை நடத்தியவர்களை அவர்கள் ஏற்கனவே கடந்த ஆண்டே இஸ்லாமிய தீவிரவாதிகளாக அடையாளம் கண்டிருந்தனர் என்பதும் வெளியானது.

இஸ்ரேலிய பத்திரிகை Ha'aretz புதனன்று அறிவிக்கையில், அந்த திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஷாவென்டெம் விமான நிலையம் மற்றும் மெல்பேக் மெட்ரோ நிலையம் இலக்குகளாக ஆக்கப்பட இருந்ததும் தெரிந்தே இருந்ததாக குறிப்பிட்டது. “பெல்ஜியத்தில் செவ்வாய்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து பெல்ஜிய பாதுகாப்பு சேவைகளுக்கும், அத்துடன் ஏனைய மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகளுக்கும், முன்கூட்டியே துல்லியமான உளவுத்தகவல் எச்சரிக்கைகள் கிடைத்திருந்தது என்று Ha'aretz க்குத் தெரிய வந்துள்ளது. அந்த விமான நிலையத்தில் மற்றும், தெளிவாக, அந்த சுரங்க பாதையிலும் வரவிருந்த அண்மித்த நாட்களில் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டிருந்தன என்பதை, அதிகபட்ச நிச்சயத்தன்மையோடு, அந்த பாதுகாப்பு சேவைகள் அறிந்திருந்தன,” என்று அது எழுதியது.

சந்தேகத்திற்குரிய தாக்குதல்தாரிகளை பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்திருந்தது. தற்கொலை குண்டுதாரிகளில் இருவரான, மெட்ரோ நிலையத்தை தாக்கிய காலித் எல் பக்ரவ்வியும் மற்றும் விமான நிலையத்தில் ஒரு குண்டுவெடிக்க செய்த அவரது சகோதரர் இப்ராஹிம் எல் பக்ரவ்வியும் ஆயுதமேந்திய கொள்ளை நடவடிக்கைக்காக குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்கள், மேலும் ISIS ஆல் (ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு) நடத்தப்பட்ட நவம்பர் 13 பாரீஸ் தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களாக அறியப்பட்டவர்கள். இருவருமே பிரேத பரிசோதனையில் அவர்களது கைரேகைகளை கொண்டு அடையாளம் காணப்பட்டார்கள்.

துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கூறுகையில், இப்ராஹிம் எல் பக்ரவ்வி துருக்கியில் கைது செய்யப்பட்டு ஓர் இஸ்லாமிய போராளியாக அடையாளம் காணப்பட்டவர், பின்னர் கடந்த ஆண்டு நெதர்லாந்திற்கு நாடுகடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

“புரூசெல்ஸ் தாக்குதல் குற்றத்திற்கு உடந்தையாய் இருந்த ஒருவர், [தென்கிழக்கு மாகாணமான] Gaziantep இல் ஜூன் 2015 இல் கைது செய்யப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர் ஆவார்… அந்த தாக்குதல்தாரி வெளியேற்றப்பட்ட நடைமுறை குறித்து ஜூலை 14, 2015 இல் புரூசெல்ஸ் தூதரகத்திற்கு ஒரு குறிப்பு நாங்கள் அனுப்பி உள்ளோம். இருந்தும், நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அந்த தாக்குதல்தாரியை பெல்ஜியர்கள் விடுதலை செய்தனர்,” என்று எர்டோகன் தெரிவித்தனர்.

துருக்கியின் எச்சரிக்கைகளுக்கு இடையிலும், அவை "புறக்கணிக்கப்பட்டு", பெல்ஜிய அதிகாரிகளால் எல் பக்ரவ்விக்கும் பயங்கரவாத நடவடிக்கைக்கும் இடையிலான எந்தவித தொடர்புகளையும் நிறுவ முடியவில்லை என்பதையும் எர்டோகன் சேர்த்துக் கொண்டார்.

விமான நிலையத்தில் தன்னைத்தானே வெடித்து சிதறடித்துக் கொண்ட மற்றொரு குண்டுதாரியை அடையாளம் வேண்டியுள்ளது, நஜிம் லாச்ரவ்வி என்று அடையாளம் காணப்பட்ட விமான நிலையத்தின் மூன்றாவது குண்டுதாரி தலைமறைவாக உள்ளார். ஒரு பழைய கருப்பு நிற Audi A4 காரை ஓட்டி வந்த, துருக்கியில் பிறந்த 22 வயதான ஒருவரைத் தேடி வருவதாக பெல்ஜிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தகைய தகவல்கள், பெல்ஜிய மற்றும் அதன் கூட்டு உளவுத்துறை அமைப்புகளும் பெல்ஜியத்தில் குண்டுவெடிப்புகள் நடக்க ஏன், எவ்வாறு அனுமதித்தார்கள் என்ற மிகவும் முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. செப்டம்பர் 11, 2001 குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளால் அறிவிக்கப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" பதினைந்து ஆண்டுகளில், உளவுத்துறை அமைப்புகள் நடைமுறையளவில் எல்லா கைத்தொலைபேசிகள் மற்றும் இணைய நடவடிக்கைகளையும் கண்காணிக்க அவற்றின் மேற்பார்வையில் மிக நவீன உளவு நுட்பங்களை கொண்டுள்ளன. பெல்ஜிய மற்றும் அதனுடன் சேர்ந்த உளவுத்துறை அமைப்புகள் ஏதோவிதத்தில் "விடயங்களை இணைத்துபார்க்க" தவறியதால் தான் அந்த தாக்குதல் நடந்தது என்ற வாதங்கள் முற்றிலும் நம்பத்தகுந்தவையாக இல்லை.

பெல்ஜியம் உயர் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13 பாரிஸ் தாக்குதல்களை தொடர்ந்தும் மற்றும் நவம்பர் 13 தாக்குதல்தாரி சலாஹ் அப்தெஸ்லாம் கடந்த வாரம் அங்கே பிடிக்கப்பட்ட போது மீண்டும் அந்நகரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும், பெரும் எண்ணிக்கையிலான சிப்பாய்கள் மற்றும் பொலிஸ் புரூசெல்ஸில் குவிக்கப்பட்டனர். பெல்ஜிய படைகளுக்கு ஒரு தாக்குதலின் இலக்குகள் குறித்து முன்கூட்டியே தகவல் இருந்தும், தாக்குதல்தாரிகளது அடையாளங்களும் தெரிந்திருந்தும், ISIS குழுவால் தொந்தரவின்றி குண்டு தயாரிக்கும் பொருட்களின் மிகப்பெரிய கையிருப்பைச் சேர்த்து, திட்டமிட்டு, தயாரிப்பு செய்து அந்த நாசகரமான மற்றும் ஒருங்கிணைந்த பயங்கரவாத குண்டுவெடிப்புகளை நடத்த முடிந்திருந்தது.

பாரீஸ் தாக்குதல்களுக்குப் பின்னர் முதலில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட போது, அங்கு 16 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் 22 தேடல்கள் நடத்தப்பட்டன, அதில் எதுவுமே சிக்கவில்லை. அது எல்லாவற்றின் போதும், அப்தெஸ்லாம் அவர் பெற்றோரது வீட்டிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தூரத்தில் தான் இருந்து வந்தார்.

கடந்த வாரம் பொலிஸ் சோதனையில் அப்தெஸ்லாம் பிடிக்கப்பட்டமை, வெளிப்படையாக ISIS பயங்கரவாதிகள் அவர்களது திட்டங்களைச் செயல்படுத்தத் தள்ளியது. இப்ராஹிம் எல் பக்ரவ்வியின் மடிக்கணினி வீதியின் ஒரு குப்பத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது. அதில் பக்ரவ்வியின் ஒரு பதிவைப் பொலிஸ் கண்டிருந்தது, அவர் "எல்லாயிடத்திலும் தேடப்பட்டு, எங்கேயும் பாதுகாப்பாக இருக்க முடியாத" நிலையில், அவர் "அவசரமாக செயல்பட்டதாகவும்" மற்றும் "மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல்" இருந்ததாகவும் பொலிஸ் கூறியது. அவர் "சிக்கிக் கொண்ட" போது அவர் "ஒரு சிறைக்கூடத்தில் சிக்கியதைப்" போல இருந்தார்.

தாக்குதல்தாரிகளை ஷாவென்டம் விமான நிலையத்தில் விட்டுச் சென்ற டாக்சி ஓட்டுனருடன் பேசி எல் பக்ரவ்வியின் அடுக்குமாடி குடியிருப்பைப் பொலிஸ் கண்டறிந்தது. அவர் புரூசெல்ஸில் Schaerbeek பகுதியின் 4 ஆம் வீதி மேக்ஸ் ரூஸ் இல் இருந்து அவர்களை ஏற்றிவந்ததாக பொலிஸிற்குத் தெரிவித்தார். பொலிஸ் அந்த அடுக்குமாடி கட்டிடத்தைச் சோதனை இட்ட போது 15 கிலோ வெடிபொருட்கள், 150 லிட்டர் ஏஸ்டோன், 30 லிட்டர் ஹைட்ரஜன் பெராக்சைடு, வெடிபொருள் இரசாயனங்கள், ஒரு பெட்டி நிறைய ஆணிகள் மற்றும் திருகுஆணிகள் மற்றும் இன்னும் பல குண்டு செய்யும் பொருட்களைக் கைப்பற்றினர்.

இந்தளவிற்கு அதிர்ச்சியூட்டும் பாதுகாப்பு ஓட்டைகளுக்குப் பின்னரும் அங்கே பெல்ஜியத்தில் மற்றும் ஐரோப்பிய உளவுத்துறை வட்டாரங்களில் இதுவரையில் பாரிய வேலைநீக்கங்களுக்கான கோரிக்கை எதுவும் இல்லை. இதற்கு காரணம் ஆளும் உயரடுக்கு மற்றும் அரசுக்குள் இருக்கும் சக்தி வாய்ந்த கன்னைகள், இந்த தாக்குதல்களால் உண்மையில் குழப்பம் அடைவதற்குப் பதிலாக, அவற்றை ஒரு அரசியல் வரமாக பார்க்கின்றன. இத்தாக்குதல்கள் மத்தியக் கிழக்கில் இராணுவத் தலையீட்டை, ஐரோப்பாவில் பொலிஸ்-அரசு உளவுவேலை நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும் மற்றும் முஸ்லீம்-விரோத இனவாதத்தைத் தூண்டுவதற்கும் உரிய கொள்கைகளுக்கு ஆளும் வட்டாரங்களில் பரந்த உடன்பாடு நிலவுகின்ற நிலையில், அவற்றிற்கு அழுத்தமளிக்க அவர்களை அனுமதிக்கின்றன.

நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர்கள் தோமஸ் ஃப்ரெட்மென் மற்றும் ரோஜர் கோஹன் நேற்று பிரசுரித்த கட்டுரைகளில் தோற்றப்பாட்டளவில் ஒரேமாதிரியான வார்த்தைகளில் ISIS க்கு எதிராக சண்டையிடும் வேஷத்தில் சிரியா போரைத் தீவிரப்படுத்த வாதிட்டனர்.

“கலிபாவின் இந்த மரணகதியிலான வெறித்தனத்திற்கு மெதுவாக மேற்கின் அவர்களே வெளியேறும் வரை காத்திருப்போம் என்ற அணுகுமுறை சரணடைந்துவிட்டதைப் போல தெரிகிறது,” என்று கோஹன் அறிவித்தார், அதேவேளையில் ஃப்ரெட்மென் "ஒபாமா அவரது செயல்படாத தன்மையின் அபாயங்கள் மற்றும் அப்பிராந்தியத்தை நமது வழிக்குக் கொண்டு வர அமெரிக்காவின் சக்தியைப் பிரயோகிக்கும் சாத்தியப்பாட்டை கண்டுகொள்ளாமை ஆகிய இரண்டையும் அவர் குறைமதிப்பிடும் வகையில் சிரியா விடயத்தில் அவரது செயல்படாது இருக்கும் அணுகுமுறையை உறுதியாக பாதுகாப்பது தெரியவில்லையா" என்று கேள்வி எழுப்பினார்.

ஐரோப்பிய அதிகாரிகள் ஐரோப்பா எங்கிலும் பொலிஸ் நடவடிக்கைகளை பரந்தளவில் விரிவாக்குவதில் ஒருங்கிணைய இன்று ஒரு மாநாடு நடத்துகிறார்கள், அதேவேளையில் பிரான்சின் நவ-பாசிசவாத தேசிய முன்னணியின் தலைவர் மரீன் லு பென் பிரான்சில் முஸ்லீம் அண்டைஅயலார்களுக்கு எதிராக பெரியளவில் வேட்டையாட அழைப்புவிடுக்கிறார். “நமது குடியரசுக்கு வெளியே இருக்கும் இத்தகைய சகல மாவட்டங்களையும் ஆராய ஒரு பரந்த பொலிஸ் நடவடிக்கையை நாம் உடனடியாக தொடங்க வேண்டும்,” என்றவர் அறிவித்தார்.

இத்தகைய நிலைமைகளின் கீழ், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்காக ISIS சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்காக சண்டையிடும் ஒரு பினாமி சக்தியாக செயற்படுவது மட்டுமல்லாது, மாறாக உள்நாட்டில் ஜனநாயக-விரோத மற்றும் மக்கள்விரோத கொள்கைகளுக்கு அழுத்தம் அளிக்க ஒரு கருவியாகவும் சேவையாற்றுகிறது.

கடந்த ஜனவரியில் மற்றும் மீண்டும் நவம்பரில் பாரீஸில் ISIS தாக்குதல்கள் மற்றும் இந்த வாரம் புரூசெல்ஸில் தாக்குதல்கள் அனைத்தும் ஒரே பயங்கரவாத வலையமைப்பால் நடத்தப்பட்டன. இந்த வலையமைப்பைக் குறித்து பிரெஞ்சு உளவுத்துறை மற்றும் அதன் அமெரிக்க, ஐரோப்பிய சமதரப்புகளுக்கும் நன்கு தெரியும். இந்த சக்திகள் எல்லாமும் நிஜமான அல் கொய்தா வலையமைப்புடன் தொடர்புபட்டுள்ளன, இது 1980 களில் சோவியத் ஒன்றியத்திற்கும் மற்றும் சோவியத்-ஆதரவிலான ஆப்கான் ஆட்சிக்கும் எதிராக இஸ்லாமிய போராளிகளை ஒன்றுதிரட்ட சிஐஏ மற்றும் சவுதி மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பிலிருந்து எழுந்ததாகும்.

காலித் எல் பக்ரவ்வி, நவம்பர் 13 தாக்குதல்களுக்குத் திட்டம் தீட்டியவர்கள் பாரீஸிற்குச் செல்லும் வழியில் தங்குவதற்காக பெல்ஜியத்தின் சார்ல்ரோய் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை, ஒரு போலி அடையாளத்தை காட்டி, வாடகைக்கு அமர்த்தினார். இவர் புரூசெல்ஸின் ஃபாரஸ்ட் பகுதியிலும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தார், அங்கே தான் மார்ச் 15 இல் முதலில் சலாஹ் அப்தெஸ்லாம் கண்டறியப்பட்டார் மற்றும் ஆரம்ப பொலிஸ் சோதனையின் போது அப்தெஸ்லாம் தப்பித்து சென்ற ஒரு துப்பாக்கி சண்டையில் மொஹம்மத் பெல்கைய்ட் கொல்லப்பட்டார்.

பிரெஞ்சு செய்தி வலைத்தளம் Médiapart குறிப்பிடுகையில், நவம்பர் 13 தாக்குதல்களை ஒழுங்கமைத்த அப்தெல்ஹமீத் அபவூத் மற்றும் சார்லி ஹெப்டோ தாக்குதல்தாரிகளில் ஒருவரான செரிஃப் குவாச்சி, இருவருக்குமே பிரெஞ்சு இஸ்லாமிய வட்டாரங்களில் முக்கிய பிரபலமாக உள்ள பரீத் மெலொக்கைத் தெரியும். மெலொக், 1990 களின் அல்ஜீரிய உள்நாட்டு போரின் போது இராணுவ ஆட்சிக்குழுவிற்காக சண்டையிட்ட அல் கொய்தா இணைப்பு கொண்ட ஒரு பயங்கரவாத அமைப்பான அல்ஜீரிய இஸ்லாமிய ஆயுதக் குழு (GIA) இல் ஒரு முன்னணி அங்கத்தவராக இருந்தவர்.

ஏப்ரல் 11, 2010 இல் மெலொக் உடனான செரீஃப் குவாச்சியின் சந்திப்பு, பிரெஞ்சு பயங்கரவாத-எதிர்ப்பு துணை பிரிவு (SDAT) புலனாய்வாளர்களால் தொலைதூர புகைப்பட லென்சைப் பிரயோகித்து புகைப்படம் எடுக்கப்பட்டது.

படுகொலை முயற்சி, ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் வைத்திருந்தமை மற்றும் அரசு ஆவணங்களைத் திரித்தமை ஆகியவற்றிற்காக 1998 இல் பெல்ஜியத்தில் ஏனைய அல் கொய்தா அங்கத்தவர்களுடன் கைது செய்யப்பட்ட மெலொக் 2004 வரையில் சிறையில் இருந்தார், அப்போது அவர் 2009 வரையில் பிரான்சில் இரண்டாவது சிறை தண்டனை அனுபவிக்க அங்கே அனுப்பப்பட்டார். விடுதலை ஆனதும், ISIS உடன் அமைதியாக நெருக்கமான உறவுகளை ஸ்தாபித்துக் கொண்டே, பிரான்சில் தங்கி இருந்தார். சார்லி ஹெப்டோ தாக்குதல்களுக்கு அடுத்த நாள் அவரால் சிரியாவிற்குத் தப்பிச் செல்ல முடிந்திருந்தது.

கடந்த ஆண்டு பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தின் ஜிஹாதிஸ்ட் வலையமைப்பு மீதான விசாரணைக்குழு முன் பயங்கரவாத-தடுப்பு புலனாய்வு நீதிபதி Marc Trévidic பேசுகையில், “பழையவர்கள் நடவடிக்கையில் இறங்க திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். சிரியாவில் இருந்த பரீத் மெலொக் குறித்து இப்போது எனக்கு தெரிய வந்துள்ளது… முதல் 'ஆப்கான்' வலையமைப்பை நான் கையாண்டு வந்த போது 2000 ஆம் ஆண்டு அவரை நான் சந்தித்தேன். ஜிஹாதிஸ்டுகளுக்குப் பாதை அமைத்து கொடுத்த ஒரு மிகப் பெரிய வலையமைப்பிற்கு அவர் தலைவராக இருந்தார்… இத்தகைய பழையவர்கள் பெல்ஜியம் மற்றும் பிரான்சில் குறிப்பிடத்தக்க அளவிற்கு தொடர்புகளைக் கொண்டுள்ளனர்,” என்றார்.

தசாப்த கால போக்கில், ஐரோப்பிய இரகசிய சேவைகள், நீதித்துறை மற்றும் பொலிஸ் முகமைகளால் மிகப் பெரியளவிலான விபரங்களுடன் ஜிஹாதிஸ்ட் வலையமைப்புகள் விசாரிணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன மற்றும் கண்டறியப்பட்டுள்ளன என்பதையே அதுபோன்ற செய்திகள் எடுத்துக்காட்டுகின்றன.

By Stéphane Hugues and Alex Lantier

ஹிட்லரின் ரகசிய கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட சில அதிநவீன எதிர்கால ஆயுதங்கள்

ஹிட்லரின் நாஸிப்படை போலாந்துக்குள் படையெடுக்கவும் (1939), ஆரம்பித்தது இரண்டாம் உலக யுத்தம். இந்த நிகழ்வு நடந்து கிட்டத்தட்ட 77 ஆண்டுகள் ஆகிவிட்டன, இருந்த போதிலும் இரண்டாம் உலகப்போர் மற்றும் ஹிட்லர் ஆகிய இரண்டு மாபெரும் வரலாறுகளும், அனுதினமும் அது சார்ந்து வெளிவந்துக் கொண்டே இருக்கும் ரகசியங்களும் முடிந்ததாய் இல்லை..! 

iHQxaqv.jpg

சுமார் 19.3 மில்லியன் பொது மக்கள் மற்றும் போர் கைதிகளை மட்டுமின்றி இரண்டாம் உலகப்போரில் 29 மில்லியன் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என காவு வாங்கிய ஜெர்மனி நாஸிப்படைக்கு பின்புலமாக ஏகப்பட்ட விபரீத வழிமுறைகள் வரிசைக் கட்டி நின்றன. 

அவைகளில், இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் 'மிகரகசிய' கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட சில அதிநவீன எதிர்கால ஆயுதங்கள் (Future Weapons)முக்கியமானவைகள் ஆகும். அவைகள் உருவாக்கப்பட்டதற்கும் பயன்படுத்தப் பட்டதற்குமான சான்றுகள் வெளியாகி உள்ளன. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் உருவாகி இருந்தாலும் கூட நிகழ்கால நிகழ்கால அதிநவீனத்துவத்தின் ஆரம்பம் என்பதை உணர்த்தும் கொலை இயந்திரங்கள் இதோ..! 

v2uH2KX.jpg

வெற்றி பங்கு : 

ஹிட்லரின் மாபெரும் வெற்றிகளுக்கு பின் அவரின் நாசி படையினருக்கு மட்டுமில்லை, ஹிட்லரின் நாஸி என்ஜினீயர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும், தொழில்நுட்ப விஞ்ஞானிகளுக்கும் பெரிய பங்கு உண்டு என்பதே நிதர்சனம்.

il0qN3m.jpg

ஜெர்மானிய வளர்ச்சி : 

அதிகப்படியான புகைப்பழக்கத்தின் மூலமாகத்தான் புற்றுநோய் உண்டாகிறது என்பதை முதன்முதலில் கண்டுபிடித்தது ஜெர்மானிய விஞ்ஞானிகள்தான் - என்பதில் இருந்து அவர்களின் அதிநவீன வளர்ச்சியை புரிந்து கொள்ள முடிகிறது. 

XtGJtXA.jpg

வருங்காலம் : 

அப்படியாக, இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்திலேயே நாஸி என்ஜினீயர்கள், வருங்காலத்தை மனதில் கொண்டு அதிநவீன ஆயுதங்களை உருவாக்க தொடங்கி விட்டனராம்.

1Vo2Fyh.jpg

பட்டியல் :

அந்த ஆயுதங்கள் அனைத்தும் ஹிட்லரின் ரகசிய வருங்கால ஆதிநவீன ஆயுதங்கள் (Secret Weapons of the future) என்ற பட்டியலில் அடங்கும். 

hKoTCqw.jpg

நாளிதழ் : 

உலகப்போர் தொடங்கி 67 ஆண்டுகள் ஆனதையோட்டி 'இரண்டாம் உலகப்போரின் ஆயுதங்கள்' (Weapons of WWII) என்ற பெயரில் வெளியான நாளிதழ் ஒன்று ஹிட்லரின் நாஸி ரகசிய ஆயுதங்களை ஆவணப்படுத்தியுள்ளது. 

0hlZLYg.jpg

தி ஃப்ரீட்ஸ் எக்ஸ் : 

அந்த தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்ட நாஸி ரகசிய ஆயுதங்களில் ஒன்று தான் - தி ஃப்ரீட்ஸ் எக்ஸ் (The Fritz X)..! 

Kg7ifHT.jpg

கொள்ளுத்தாத்தா : 

இக்கால நவீன வகை ஆயுதமாக கருதப்படும் 'ஸ்மார்ட் பாம்'களின் (Smart Bomb) கொள்ளுத்தாத்தா தான் இந்த - தி ஃப்ரீட்ஸ் எக்ஸ்..! 

zHoEs1m.jpg

ரகசியம் : 

அது மட்டுமின்றி இது தான் ஹிட்லரின் மிகவும் ரகசியமான ஆயுதங்களில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUesgIV.jpg

வயர்லெஸ் ரேடியோ : 

317.5 கிலோ வெடி பொருளை உள்ளடக்கிய இந்த ஆயுதமானது வயர்லெஸ் ரேடியோ மூலம் கட்டுப்படுத்தப்பட்ட ஆயுதமாகும். 

aJgBsNf.jpg

ஹோர்டன் ஹோ 229 பாமர் : 

ஹிட்லரின் ரகசிய வருங்கால ஆதிநவீன ஆயுதங்கள் (Secret Weapons of the future) பட்டியலில் அடுத்த இடத்தில் இருக்கும் ஆயுதம் தான் - ஹோர்டன் ஹோ 229 பாமர் (Horten Ho 229 bomber)..! 

C0C79bi.jpg

முன்மாதிரி : 

இவ்வகை "ஃப்ளையிங் விங்" பாமர் ("flying wing" bomber) தான் உலகின் முதல் முன்மாதிரி கள்ள விமானம் (world's premiere stealth aircraft) ஆகும்..! 

IkJxNku.jpg

வேகம் : 

அது மட்டுமின்றி, ஹோர்டன் ஹோ 229 பாமர் ஆனது சுமார் 907 கிலோ வெடிபொருளை உள்ளடக்கி, மணிக்கு 600 மைல் வேகத்தில் பயணிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

bxc4Rx5.jpg

முதன்முதலில் : 

1944-ஆம் ஆண்டு முதன்முதலில் விண்ணில் சீறிப் பாய்ந்த, இவ்வகை விமானம் 2 டர்போ என்ஜீன்கள், 2 பீரங்கிகள் மற்றும் ஆர்4எம் (R4M) ராக்கெட்களை உள்ளடக்கி இருந்ததாம். 

RUYEHUZ.jpg

அதிநவீனம் : 

நார்த்‌ரப் கிருமன் பி-2 பாம்‌பர் (Northrop Gruman B-2 bomber) போன்ற, இக்கால அதிநவீன ஸ்டீல்த் (Stealth) விமானங்களெல்லாம் பார்த்தே உருவாக்கப்பட்டனர் என்பது தான் ஹிட்லரின் நாஸி என்ஜினீயர்களின் அதிநவீனமாகும். 

bF7YkTY.jpg

பீட்டல் டேங்ஸ் :

'இரண்டாம் உலகப்போரின் ஆயுதங்கள்' என்ற தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள நாஸி படையினரின் மற்றொரு ரகசிய ஆயுதம் தான் - பீட்டல் டேங்ஸ் டு தி அல்லிஸ் (Beetle tanks to the Allies)..! 

cpsFU96.jpg

சிறிய வகை டாங்கி : 

பீட்டல் டேங்ஸ் என்பது ஜாய் ஸ்டிக் (Joystick) மற்றும் எலெக்ட்டிரிக் மோட்டார் (Electric motors) அல்லது கேஸ் பர்னர்ஸ் (Gas Burners) பயன்படுத்தி கட்டுப்படுத்தும்படி வடிவமைக்கப்பட்ட சிறிய வகை டாங்கிகள் ஆகும்.

htJoybz.jpg

ஜாய் ஸ்டிக் : 

60 முதல் 100 கிலோ எடை வரை வெடிபொருள் உள்ளடக்கப்பட்ட பீட்டல்கள், ஜாய் ஸ்டிக் கன்ட்ரோல் மூலம் எதிரிகளின் பெரிய வகை டாங்கிகளின் அடியில் செலுத்தப்பட்டு, வெடிக்க வைக்கப்படுமாம். 

jakR11G.jpg

டூடல் பக்ஸ் :

இவ்வகை ஆயுதத்தை நாஸி படையினர் "டூடல் பக்ஸ்" (Doodle Bugs - ஒரு வண்டு வகை) என்றும் அழைப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

RtlAczX.jpg

முன்னோடி :

இக்கால அதிநவீன ரேடியோ கன்ட்ரோல்டு (Radio-Controlled) ஆயுதங்களின் முன்னோடி தான் இந்த - 'பீட்டல் டேங்ஸ்', என்பதில் எந்த சந்தேகமுமில்லை..! 

6PjHqcb.jpg

முக்கியமானவை : 

ஹிட்லரின் 'மிகரகசிய' கண்காணிப்பில் உருவான அதிநவீன ரகசிய ஆயுதங்களில் - சோனிக் கேனான்கள் (Sonic Cannons), எக்ஸ்-ரே துப்பாக்கிகள் (X-Ray Guns), லேன்ட் க்ரூஸர்ஸ் (Land cruisers) ஆகியவைகளும் மிக முக்கியமானவைகளாகும்.

Sunday, 27 March 2016

தென்னாசியாவில் அதிவேக இண்டர்நெட் வசதி கொண்ட நாடு இலங்கை!

இண்டர்நெட் வேகம் குறித்த பிரபல சர்வதேச புள்ளிவிபரத்தின்படி "Fourth Quarter, 2015, State of the Internet Report" இன் தரவுகளின் பிரகாரம் இலங்கை தென்னாசியாவில் அதிகூடிய வேகம் கொண்ட இண்டர்நெட் வசதி கொண்ட நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த அகமை டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆண்டு தோறும் இந்த புள்ளிவிபர அறிக்கையை வெளியிடுவது வழக்கம். சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இண்டர்நெட் வேகம் எவ்வாறு உள்ளது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள இந்த புள்ளிவிபரம் முக்கியான ஒன்றாக கருதப்படுகிறது.

உலக அளவில் இண்டர்நெட்டின் சராசரி வேகம் 23 சதவீதம் அதாவது 5.6 எம்.பி.பி.எஸ். அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தென் கொரியா அதிகபட்சமாக 26.7 எம்.பி.பி.எஸ் வரை இண்டர்நெட் சேவையை வழங்கியிருக்கிறது. மிகக்குறைந்த சராசரி வேகத்தில் இண்டர்நெட் சேவையை கொண்டிருக்கும் நாடாக இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது.

மொபைல் இண்டர்நெட் சராசரி வேகத்தில் பிரிட்டன் 26.8 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது. ஸ்பெயின் 14 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. ஈரான் மற்றும் வியட்நாம் நாடுகள் மிகவும் குறைந்த வேகத்தில் மொபைல் இண்டர்நெட் சேவையை வழங்குகின்றன.

அதிகபட்ச இண்டர்நெட் வேகத்தின் சராசரியில் சிங்கப்பூர் (135.7 எம்.பி.பி.எஸ்) முதலிடத்திலும் இந்தியா (21.2 எம்.பி.பி.எஸ்) கடைசி இடத்திலும் உள்ளன. தென்னாசிய வலயத்தில் குறைந்த வேக இண்டர் நெட் சேவையை வழங்கும் நாடாக ஆப்கான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அலைக்கற்றை ஒழுங்கின் பிரகாரம் இந்தியாவை விட அந்நாட்டின் இணையத்தள வேகம் அதிகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போர் இரகசியங்கள்! இலக்கு வைக்கப்படும் தமிழர்கள்

இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சில தகவல்களை வௌயிட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில் இறுதிப்போர் பற்றிய பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியற்துறை பொறுப்பாளர் தமிழினியின் நூலும் வெளியாகியிருக்கிறது.

இந்த இரண்டு விவகாரங்களுமே இறுதிப்போர் பற்றிய பரபரப்பான கதைகளை மீண்டும் மக்கள் மத்தியில் பேச வைத்திருக்கின்றன. ஏழு ஆண்டுகளாகியும் இன்னமும் பல அவிழ்க்கப்படாத முடிச்சுக்களைக் கொண்டதாகவே இறுதிப்போர் இரகசியங்கள் இருக்கின்றன.

அந்தப் போருக்குத் தலைமை தாங்கிய இராணுவத்தளபதி என்ற வகையில் தனக்கு எல்லாமே தெரியும் என்பது போலவும், தான் சொல்வதெல்லாம் உண்மை என்பது போலவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆனாலும் அவருக்கே தெரியாத இரகசியங்களும் இருக்கின்றன என்பதை சரத் பொன்சேகாவின் ஒப்புதல் வாக்குமூலங்களே உணர்த்தியிருக்கின்றன.

அதாவது போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த நிலையில் தான் சீனாவுக்கு சென்றிருந்த போதும் அங்கிருந்தே படையினருக்கு கட்டளைகளை வழங்கியதாக அவர் கூறியிரக்கிறார்.
இதன்மூலம் போர் வெற்றியில் வேறு எவரும் பங்கிற்கு வரக்கூடாது என்று அவர் விரும்புகிறார். ஆனாலும் இறுதிப்போரின் சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் பற்றி அவர் எதையும் பேசவோ, வெளிப்படுத்தவோ தயாராக இல்லை. எனினும் அத்தகைய சர்ச்சைகளை இன்னமும் சந்தேகங்களாகவே அவர் படரவிட முனைந்திருக்கிறார்.

அதைவிட, போருக்குத் தாமே தலைமை தாங்கியதாக கூறியிருக்கும் சரத் பொன்சேகா, போரில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட அதிகாரிகளுடன் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தனியாகத் தொடர்புகளை வைததிருந்தார் என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இதன் மூலம் தனது கையையும் மீறி உத்தரவுகள் இராணுவஅதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்றே அவர் கூற வந்திருக்கிறார்.

இவை தவிர விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்ற சர்சசையை சரத் பொன்சேகா கிளப்பாது விடினும், அதனை முன்னிறுத்தி ஊடகங்களில் பலரும் பலவித கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சண்டையில் கொல்லப்பட்டார் என்றே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியிருந்தார்.

அதேவேளை, சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் ஒன்றில் அவரது மரணம் குறித்து வெளியிட்ட சர்வதேச தடயவியல் நிபுணர் ஒருவர் 50 கலிபர் துப்பாக்கிகளின் ரவை ஒன்றே பிரபாகரனின் தலையைத் துளைத்துச் சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறியிருந்தார்.

ஆனாலும் சரத் பொன்சேகாவின் பேட்டியின் பின்னர் பிரபாகரனின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து ஆராயப்பட வேண்டும், ஆராயப்படும் என்பது போன்று அமைச்சர்கள் பலரும் கூறிவருவதைக் காணமுடிகிறது.

இங்கு பிரச்சினை என்னவென்றால் போர்க்குற்றங்கள் என்று கூறப்பட்ட சம்பவங்களை மறக்கடிக்கச் செய்யும் முயற்சிகள் தான் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் ஒரு போர்க்குற்றம் என்று யாருமே கூறவில்லை. அதுபற்றி விசாரிக்கப் போகிறதாம் அரசாங்கம்.

ஆனால் போர்க்குற்றம் என்று கூறப்பட்ட நடேசன், புலித்தேவன் போன்றவர்களின் மரணங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என்ற உறுதிமொழி இதுவரை அரசதரப்பில் யாரிடம் இருந்தும் வரவில்லை.

அதைவிட படையினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் விடயத்தில் போர்க்குற்றங்கள் நடந்துள்ளதா? என்று ஆராயப்படும் என்றும் கூட யாரும் கூறவில்லை.

இந்தக்கட்டத்தில் பிரபாகரனின் மரணம் குறித்த விசாரணைகளை நடத்துவது பற்றி ஏன்? அரசாங்கம் மக்களின் கவனத்தை திருப்பப் பார்க்கிறது?

மக்களின் கவனத்தை ஈர்க்கும் விடயத்தில் இருந்து அவர்களை திசை திருப்ப வேண்டுமானால் அதைவிட அதிகம் ஈர்க்கக்கூடிய விடயத்தை நோக்கி அவர்களின் கவனத்தை நகர்த்த வேண்டும். அதுதான் இங்கு நடக்கிறது போலத் தெரிகிறது.

இறுதிப் போர்க்கால மீறல்கள் பற்றி கடந்த ஆறேழு ஆண்டுகளாகப் பேசப்பட்டு வரும் நிலையில் இதன் திசையை மாற்றும் முயற்சிகள் தான் இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அரசாங்கத் தரப்பு எவ்வாறு எதனைக் கூறினாலும் தமிழர்களில் பலருக்கே புலிகளினதும், பிரபாகரனினதும் செயற்பாடுகள் மீது விமர்சனங்கள் இருந்தாலும் புலிகளன் மீதும் பிரபாகரன் மீதும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் பெருமதிப்பு வைத்திருக்கின்றனர் என்பது உண்மை.

அந்த நம்பிக்கையை உடைப்பதும் கூட இப்போதைய பலமுனை நகர்வுகளின் உள்நோக்கங்களில் ஒன்றாக இருப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இறுதிப்போர் பற்றி வெளியிடும் கருத்துக்கள் பலரது கவனத்தை ஈர்த்தாலும் அவருக்குள் பழிவாங்கும் உணர்வு அதிகம் இருப்பதை மறக்க முடியாது.

தன்னைக் கொல்ல உதவியதாக கூறப்படும் புலிகள் இயக்க சந்தேக நபருக்கு கருணை காட்டுமாறு கோரும் அளவுக்கு அவர் பக்குவப்பட்டிருந்தாலும் முன்னைய ஆட்சியாளர்களை அவர் மன்னிக்கத் தயாராக இல்லை.

எனவே அவர்களை எந்தளவுக்கு சிக்கலுக்குள் தள்ளிச் செல்லவும் அவர் தயாராகவே இருப்பார் என்றே தெரிகிறது.

அதேவேளை, விடுதலைப் புலிகள் விடயத்தில் சரத் பொன்சேகாவின் நிலைப்பாடு ஒன்றும் தயவுதாட்சண்யம் கொண்டதாக இருக்கவும் வாய்ப்பில்லை.

பிரபாகரன் தொடர்பாக தமிழ்மக்கள் மத்தியில் உள்ள கருத்தை புலிகள் பற்றிய அபிப்பிராயத்தை உடைப்பது முக்கியமானது என்பதை சரத் பொன்சேகாவும் அறிவார். விடுதலைப் புலிகள் மற்றும் அதன் தலைமை தொடர்பானது மட்டுமன்றி அதன் இறுதிப் போர்க்காலச் செயற்பாடுகள் பல மர்மம் நிறைந்தவையாகவே இருப்பதால், இதுபோன்ற பரபரப்பான தகவல்களும் எழுத்துக்களும் மக்களிடையே கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

இதன் ஊடாக யாருக்கு என்ன லாபம்? நிச்சயமாக உள்ளது. விடுதலைப் புலிகளின் போராட்டம் தொடர்பாக ஒரு வெறுப்பூட்டக்கூடிய, மாற்றப்பட முடியாத கருத்தை விதைக்கலாம்.

தமிழ் மக்களின் உரிமைகள் இன்னமும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், மீண்டும் இதுபோன்ற போராட்டங்களில் அவர்களை ஈடுபடாமல் தடுப்பதற்கு இதுபோன்ற எண்ணப்பாடுகளை ஏற்படுத்துவது அவசியம்.

அதைவிட, போர்க்குற்றங்கள் தொடர்பாக எது முன்னிறுத்தப்பட வேண்டுமோ அதனை விடுத்து வேறொன்றின் மீது கவனத்தைக் குவிய வைப்பதன் ஊடாக போர்க்குற்ற விசாரணையை எதிர்நோக்கக் கூடியவர்களைப் பாதுகாக்கலாம்.

சரத் பொன்சேகா இப்போது சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார் என்றால், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்று அர்த்தமில்லை.

அவர் போர்க்குற்றச்சாட்டில் இருந்து இராணுவத்தைப் பாதுகாக்கவே அவ்வாறு கூறுகிறார். அதேவேளை தனது உத்தரவுக்குக் கட்டுப்படாதவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை.

ஆக, சரத் பொன்சேகாவின் எதிர்பார்ப்பு நிறைவேறினால், போர்க்குற்றங்களுக்கு நீதி கோரும் தமிழர்களின் எதிர்பார்ப்பு பொசுங்கிப் போய்விடும்.

போர்க்குற்றச்சாட்டுகளை முற்றாக வலுவிழக்கச் செய்வதற்கும் தமிழர் தரப்பை இந்த விவகாரத்தில் இருந்து திசை திருப்புவதற்கு இதுபோன்று எதைச் செய்வதற்கும் அரசாங்கமும் படைத்தரப்பும் தயாராகவே உள்ளதென்பதை மறந்து விடலாகாது.

இந்த விடயத்தில் அரச புலனாய்வுப் பிரிவை அவ்வளவு எளிதாக எவரும் மதிப்பிட்டு விட முடியாது.

தமிழினி எழுதிய நூலில் ஊடகவியலாளர் என்ற போர்வையில் புலிகளின் கண்ணுக்குள் மண்ணைத் தூவிவிட்டு வன்னிக்குள் நுழைந்த இராணுவ அதிகாரியை, தாம் சிறைப்பட்டிருந்த நிலையில் சந்தித்த போது திகைத்துப் போனதாக குறிப்பிட்டிருக்கிறார்.

அதுபோலத்தான் இறுதிப்போர் இரகசியங்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் பெரும்பாலும் இல்லாமல் போய்விட்ட நிலையில், தமிழ் மக்களின் கண்களில் மண்ணைத் தூவும் முயற்சிகளைத் தொடர்வது ஒன்றும் அரசதரப்புக்குக் கடினமான காரியமில்லை.
சுபத்ரா

Sunday, 13 March 2016

தமிழினியின் சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “இளம் வயதில் வெதரிங் ஹைட் ஒரே நாவலை தந்துவிட்டு இறந்த எமிலி புரண்டே ஆங்கில இலக்கியத்தில் முக்கியமான இடம் வகிக்கிறார் (Wuthering Heights - Emily Brontë’) அதுபோல் தமிழினியின் சுயசரிதையும் ஈழத் தமிழர்களால் பலகாலம் பேசப்படும். அரசியல் போராட்டத்தை இப்படி எடுத்துக் கொண்டு போகக்கூடாது என்பதோடு நமக்கு தவறுகளைப்புரிந்து கொள்ளும் பாலபாடமாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன்.

அரசியல்

முப்பது வருடகால தமிழ் விடுதலைப் போராட்டத்தை மகோன்னத போராட்டமாகவும் அதன் தலைவரை கடவுளுக்கு நிகராகவும் வைத்து எதுவித விமர்சனமற்ற போராட்டமாக எடுத்துச்;சென்றோம். ஆனால் போராட்டம் 2009 இல் முற்றாக ஆவியான பின்பு இயக்கத்தில் வெவ்வேறுகாலங்களில் இருந்தவர்கள் நாவல்களாக எழுதினார்கள்.

நமது சமூகத்தில் இலக்கியம் படிப்பவர்கள் எத்தனைபேர்?

தொடர்ந்தும் இந்த ஆயுதப்போராட்டம் பேசாப்பொருளாக இருக்கிறது. இதை பாவித்து சுயநலமிகள் தங்களது வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள்.

அரசியலில் உள்ளவர்கள் புலி எதிர் – புலி ஆதரவு என்று பேசி பதவிப்போட்டியில் இறங்கினார்கள். இலட்சக்கணக்கான மனிதர்கள் உயிர்கொடுத்த ஆயுதப்போராட்டம் பற்றிய அறிவுசார் தர்க்கங்களை மக்களிடம் அவர்கள் எடுத்து செல்லவில்லை..
தமிழ் ஊடகங்கள் கலாச்சார பண்பாட்டுத்தளத்திலோ அரசியலிலோ எதுவிதமான பங்களிப்பை செய்யாது அமெரிக்க கால்பந்தாட்டத்தின்போது நடனமாடும் இளம் பெண்கள் செயரிங் குழுவாக இருந்தது.

பல்கலைக்கழகங்களைப் பற்றி பேசிப்பயனில்லை அதைவிட எங்கள் காலத்தில் இருந்த பொண்ட் ரியூட்டரியின் சமூகபங்களிப்பு அதிகம்.

இந்த நிலையில் வெளிவந்திருக்கும் தமிழினியின் சுயசரிதை நூல் பல விடயங்களை நமக்குத் தெரிவிக்கிறது. எனது அறிவில் இருந்த சில வெற்றிடங்களை நிரப்புகிறது.
தமிழினியின் கூர்மையான எழுத்துக்கு அறிமுகம் தேவையில்லை. அவரது ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு தொடர்பு கொண்டு முகநூல் நண்பராகினேன்.

இலக்கியம்

பல பெண்கள் தங்களது தாம்பத்திய உறவை முறித்தபின் தங்களுக்கு கணவனால் நடந்த கொடுமையை மடைதிறந்தால்போல் கொட்டுவார்கள் இதை நான் எனது தொழிலில் பலமுறை கேட்டிருக்கிறேன். இப்படியான செய்கை அவர்களது பாரத்தை இறக்குவதுடன் மீண்டும் வேறுதிசையில் பயணத்திற்கு தயார்ப்படுத்துகிறது. நான் நினைக்கிறேன் பெண்களின் தாய்மையோடு இது சம்பந்தபட்டுள்ளது. அவர்களது இலட்சியங்கள் உடலுறவு தாம்பத்தியத்துடன் முடிவடைவதில்லை. இந்த தன்மையுடன் தனது மனப்பாரத்தை மிகவும் தெளிவான மனதுடன் தமிழினி இந்த நூலில் இறக்கி வைத்திருக்கிறார்..
எஸ்பொவின் வரலாற்றில் வாழ்தல் யாழ்ப்பாணத்து சாதியின்மேல் ஏற்பட்ட வெறுப்பால் தனது மனதில் உள்ளபாரத்தை வெளிக்காட்டும கத்தாசிஸ் இலக்கியமாக அடையாளப்படுத்தினேன். . எஸ்பொவின் சுயசரிதையில் சில இடங்களில் நம்பகத்தைன்மை தெளிவற்று இருந்தது.

கத்தாசில் இலக்கியத்தில் (Catharsis literature )முக்கியமாக சொல்லப்படுவது உண்மையாக இருக்கவேண்டும். அதன்படி தமிழினியின் புத்தகம் சத்தியமான வார்த்தைகளைக் கோர்த்து கத்தாசில் இலக்கியம் படைத்திருக்கிறார்..

இந்த புத்தகத்தில் உள்ள சில முக்கிய பந்திகளை இங்கு அடையாளப்படுத்தியுள்ளேன். இதுவரைகாலமும் நாலுகால் மிருகங்கள் எட்டுக்கால் நட்டுவக்காலிகள் போன்றவர்கள் எல்லாம் ஈழத்து அரசியல் என்னுடன் பேசுவார்கள். இவர்களுடன் பழகுவதற்கு 37 வருட மிருகவைத்திய அனுபவம் துணை செய்தது.. இனிமேல் அரசியல் பேசவருபவர்களிடம்   குறைந்தபட்சமாக தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் ‘ படித்துவிட்டுவா என சொல்வதற்கு தீர்மானித்திருக்கிறேன்.

புத்தகத்தின் சில பகுதிகள் 

தலைவரைப்பற்றியது :- 

“ஒருநாள் நானும் தளபதிகள் விதுஷாவும், துர்க்காவும் தலைவரை சந்திப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தோம். அது சமாதானம் தொடங்கிய ஆரம்ப கால கட்டம். அந்த சந்திப்பில் தலைவர் பல விடயங்கள் பற்றியும் எம்மோடு பேசிக்கொண்டிருந்தார். அதில் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்;

“மட்டக்களப்பு, அம்பாறைப் போராளிகள் போராட்டத்தில எவ்வளவோ கஷ்டங்களைப் பட்டிருக்கிறாங்கள் அவங்கட குடும்பங்களுக்கும் அந்த மக்களுக்கும் நிறைய வேலைகள் செய்யவேணும். நிதித்துறை மூலமா ஒரளவு பண உதவியையும் செய்து கருணாவுக்கும் சொல்லியிருக்கிறன், அந்தச் சனத்திற்கு நிறைய உதவிகள் செய்யச் சொல்லி. அவன் செய்யிறான், இவங்கள் பொட்டு ஆக்கள் என்னட்ட வந்து அங்க அது பிழை இது பிழை எண்டு சொல்லிக் கொண்டு நிக்கிறாங்கள், தளபதிமாருக்குள்ள முதலில ஒற்றுமை இருக்கவேணும்” என்று குறிப்பிட்டார்.” 

தமிழினியின் கருத்தாக:-

“இலங்கைப் படையினரை வலுச் சண்டைக்கு இழுத்து யுத்தத்தை ஆரம்பிப்பதன் மூலம் தலைவரால் திருகோணமலைப் படையணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஆட்லறிகளைப் பயன்படுத்தி வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேசங்களைக் கைப்பற்ற முடியும் என திருகோணமலையின் தளபதியாக இருந்த சொர்ணம் கருதினார். அவரது திட்டத்திற்கு தலைவருடைய அனுசரணையும் இருந்தது. இயக்கம் எதிர்பார்த்த படியே இறுதி யுத்தம் திருகோணமலை மாவிலாற்றங்கரையில் மூண்டது. 2006 ஆகஸ்ட் 15 இல் மாவிலாறு பகுதி முழுமையாக இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதுடன், மூதுார், சம்பூர், கட்டைப்பறிச்சான், தோப்பூர் எனப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை நோக்கி யுத்தம் விரிவடையத் தொடங்கியது. புலிகள் இயக்கம் எதிர்பார்த்தமைக்கு மாறாக திருகோணமலைத் தோல்விகள் அமைந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தின் மீது இருந்த அதீத நம்பிக்கை மாவிலாற்றில் பலத்த அடிவாங்கத் தொடங்கியது.” “

எதிர்பாரது சந்தித்த இராணுவ அதிகாரி பற்றி தமிழினி::-

“வணக்கம் தமிழினி” என சளரமான தமிழில் பேசினார். அவரைக் கண்டதும் எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது.. அந்த மனிதரை முன்னர் எங்கேயோ சந்தித்துப்பேசிய நினைவு பொறி தட்டியது. ஒரு கணம்தான். தலைக்குள் மின்னலடித்ததைப்போல சுதாகரித்துக் கொண்டேன். சமாதான காலத்தில் வன்னிக்கு வந்த ஊடகவியலாளர்களோடு ஏதோவொரு சிங்கள ஊடகத்தின் சார்பில் அதன் பிரதிநிதியாக இவரும் வந்திருந்தார். அரசியல் பொறுப்பாளர் உள்ளிட்ட பல இயக்க முக்கியஸ்தர்களைச் சந்தித்ததுடன் கிளிநொச்சியில் அமைந்திருந்த அரசியல்துறை மகளிர் செயலகத்தில் என்னையும் சந்தித்திருந்தார். 

சளரமாகத் தமிழில் பேசக்கூடிய அவர், பல போராளிகள், பொறுப்பாளர்களுடன் போராட்டத்திற்கு சார்பான ஒருவர் என்ற தோரணையுடன் மிக இலகுவாக நட்புரிமையுடன் பழகிய ஞாபகங்கள் வந்தது. அது மட்டுமல்லாமல், 2004ம் ஆண்டில் முதல் பெண் மாவீரரான 2ம் லெப் மாலதியின் நினைவு நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியாக கிளிநொச்சியில் நடத்தப்பட்டபோது இவரும் கலந்துகொண்டு அனைவரோடும் தன்னை ஊடகவியலாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டு மிக இயல்பாக பல விடயங்கள் பற்றியும் உரையாடியதும் நினைவுக்கு வந்தது. அந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி எவ்வளவு சாதுரியமாகப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் கண்களில் மண்ணைத் துாவிவிட்டு கிளிநொச்சியின் சந்து பொந்துகளில் உலவித் திரிந்தார் என்பதை பெரும் திகைப்போடு நினைத்துப் பார்த்தேன்.

யுத்த இறுதிநாட்களில் பொட்டம்மான்:-

மிகவும் சுருக்கமாக பின்வரும் விடயங்களைப் பொட்டம்மான் தெரிவித்தார்;

“ஒரு அதிசயம் நடந்தாலே தவிர இயக்கம் வெல்வது என்பது இனிச் சாத்தியமில்லை, இயக்கத்தின் ஆவணங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை முற்றாக அழித்து விடுங்கள், மக்கள் இராணுவத்திடம் செல்லத் தொடங்கி விட்டார்கள், இறுதிக் கட்டத்தில் போராளிகளும் அவர்களோடு சேர்ந்து செல்ல வேண்டி வரும்போது ’இதிலே புலி இருந்தால் எழும்பிவா’ என்று கூப்பிடுவான் அப்போது ’நான் புலி’ என எழுந்து போகும் போது சுட்டுக் கொல்லுவான், இதுதான் நடக்கப்போகுது, யுத்தத்தில ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துவதற்கு தலைமை முழு முயற்சிகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறது, ஆனாலும் திரும்பவும் ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள், அதிசயமொன்று நடந்தாலே தவிர நாங்கள் வெல்லுறது சாத்தியமில்லை, நான் உங்களை குழப்புவதற்காக இப்படி சொல்லவில்லை. உண்மையான நிலைப்பாட்டைச் சொல்லுகிறேன், முக்கியமாக உங்களை இன்றைக்கு கூப்பிட்ட விடயம் உங்களிடமிருக்கும் ஆவணங்களை அழித்துவிடுங்கள் என்பதை கூறுவதற்காகத்தான்”. 

அத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது. காயப்பட்டிருந்த போராளிகளைப் பற்றியோ அல்லது இயக்கத்தையே நம்பி பராமரிப்பு இல்லங்களில் இருந்தவர்களைப் பற்றியோ கூட ஒரு வார்த்தை கூறப்படவில்லை. பெண் போராளிகள் எதிர் நோக்கக் கூடிய இரட்டிப்பு ஆபத்து பற்றியோ எதுவுமே பேசப்படவில்லை. ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவும் தோன்றாத மனநிலையில், அனைவரும் கலைந்து சென்றோம். விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களுக்கு புதுக்குடியிருப்பில் நடைபெற்ற இறுதியான ஒன்றுகூடல் அதுவாகத்தான் இருந்தது.-

விதுஷா தமிழினியிடம்கூறியது :-

“சண்டைப் பயிற்சி உள்ள இருபத்தையாயிரம் பேரும் ஆட்லறிக்குரிய எறிகணைகளும் இருந்தால்தான் மீண்டும் கிளிநொச்சியை பிடிக்கலாம்,” என்று தலைவர் கூறியதாக சுரத்தேயில்லாமல் கூறினார் விதுஷா. ”பொட்டம்மான் கதைக்கிற கதைகளை நினைச்சா விசர்தான் பிடிக்கும். எனக்கென்டால் அவரில இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போட்டுது. நிலைமைகள் விளங்காமல் கதைச்சுக் கொண்டு நிற்கிறார்”

“எல்லாரும் என்னுடைய கையிலதான் எல்லாம் இருக்குது எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம். என்னட்ட ஒன்டுமில்லை என்ர கை வெறுங்கை” என்று தலைவர் தனது கையை விரித்துக் காட்டியதாக ஈழப்பிரியன் தனது கைகளை விரித்துக் காட்டினார். “அண்ணையே இப்பிடிச்சொன்னால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என மன வருத்தத்துடன் கூறிவிட்டுச்சென்ற அடுத்த சில நாட்களில், ஈழப்பிரியன் என்ற இளம் போராளி மகாபாரத்தில் வரும் அபிமன்யூவின் தீரத்துடன் கிளிநொச்சியில் தன்னைச் சுற்றி வளைத்த இராணுவத்துடன் மோதி வீர மரணத்தைத் தழுவினான்..:: “

உயிரோடு இருந்தால் ஏதோ அரசியல் லாபத்திற்காக தமிழினியால் எழுதப்பட்டது என்பார்கள். இறந்த பின்பு இதை எமக்கு தந்து விட்டதால் தமிழினி தனது மரணத்தை அர்த்தமுளளதாக செய்துவிட்டு போயிருக்கிறார். இவர் போல் எத்தனைபேர் யார் யாரோ கனவுகளுக்கு உயிர்கொடுக்க நினைத்து மாண்டார்கள் என்பது நினைப்பதற்கு கடினமானது.
தமிழினியின்ஆரம்ப வக்கீலாக இருந்த தமிழ்க் காங்கிரசின் தலைவர் விஞாயகமூர்த்தியால் கைவிடப்பட்ட பின்பு சிங்கள வக்கீலான மஞ்சுல பத்திராஜாவால் (Manjula Pathirajah)  மேல்கொண்டு தமிழினியின் கேஸ் எடுத்து செல்லப்பட்டது. தமிழினி மிகவும் குறைந்தகாலத்தில் சிறையில் இருந்து விடுதலையாகினார். தமிழினிக்காக ஆஜரானபோது எதுவித பணமும் வாங்காது மடடுமல்ல நோர்வேயில் இருந்து சில உறவினர் பணம்கொடுக்க முன்வந்தபோது மஞ்சுல பத்திராஜாவால் வாங்க மறுத்தார். தமிழினியை சந்திக்க சிறைக்கு செல்லும்போது உணவுப்பண்டங்களைக் கொண்டு செல்வது இவரது வழக்கம்.

இலங்கையில் போரில் இருசமூகங்கள் ஈடுபட்டபோதும் மனித விழுமியங்களை பலர் பாதுகாத்தனர் என்பது எதிர்காலத்ததை அடுத்த சந்ததியினருக்கு நம்பிக்கையுள்ளதாக்கும் என்பதால் இந்த விடயத்தைக் இங்கு குறிப்பிடுகிறேன்
ஒரு கூர்வாளின் நிழலில் – காலச்சுவட்டின் வெளியீடு

நடேசன்

மக்களின் நீள் துயரத்துக்கு முதலில் முடிவு கட்டுங்கள்

அல்லல்பட்டு  ஆற்றாது அழுத கண்ணீரன்றோ செல்வத்தை தேய்க்கும் படை என்றார் வள்ளுவர். 
படை என்றவுடன் ஆயுதம் ஏந்தியவர்களே நம் நினைவுக்கு வருவதுண்டு.  
ஆனால் வள்ளுவர் செல்வத்தை தேய்க்கும் ஒரு பெரும் படை எது? என்பதை இந்த உலகுக்கு காட்டி நிற்கிறார். 

அந்தப் பெரும் படைதான் எளியவர் அழுகின்ற கண்ணீர் என்பது வள்ளுவரின் முடிவு. ஆற்ற முடியாமல் அழுகின்ற கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் என்றால், யாருடைய செல்வம் என்ற கேள்வி எழும். 

இங்குதான் அந்த அழுகைக்கு யார் யார் கார ணமோ யார் யார் பின்னணியோ அவர்கள் அனை வரதும் செல்வம் தேயும் என்று பொருள்படும். இலங்கை அரசு தமிழர்களை வதைத்து அவர்களை துன்பப்படுத்தி ஆட்சி செய்ய நினைக்கிறது.  ஆனால் அந்த நினைப்பு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை. 

ஏனெனில் வதைபட்டவர்கள் விடுகின்ற கண்ணீ ரானது இருக்கக் கூடிய செல்வங்களை அழித்து விடும்.
அசோகவனத்தில் இருந்த சீதை அழுத கண்ணீர் இராவணனின் அனைத்துச் செல்வங்களையும் அழித்து, ஈற்றில் அவனையும் அழித்தது. 

எனவே நல்லாட்சி என்பது மக்களைக் காப்பாற்றுவது; மக்கள் விடுகின்ற கண்ணீரை துடைப்பது; மக்கள் படுகின்ற கஷ்டங்களை நீக்குவது இதைச் செய்யாத அரசை நல்லாட்சி என்று கூறுவது பெரும் பாவம். 
ஆக, நல்லாட்சியின் அழகு மக்களின் துன்பத்தைத் தீர்ப்பது என்ற வகையில் தமிழ் மக்களைப் பொறுத்தவரை தாம் வாழ்ந்த நிலத்தில் மீளவும் குடியிருப்பதற்காக அவர்கள் படுகின்றபாடு கொஞ்சமல்ல.
தமிழர்கள் என்பதால் அவர்களின் வாழ்விடங் களை கபளீகரம் செய்து அங்கு படையினரைக் குடியிருத்தி எந்த நேரமும் தமிழர்களை தாக்கத் தயாராக இருங்கள் என்பதுபோல நடந்து கொள்வது அரசுக்கு அழகன்று.
ஆகவே தமிழ் மக்களின் வாழ்விடங்களை உட னடியாக கையளிப்பது அரசின் கடமை. இதைச் செய்வதில் ஜனாதிபதி மைத்திரியின் அரசு கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியதாயினும் அதன் வேகம் போதுமானதன்று. 

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களின் வாழ்விடங்களில் குடியிருப்பதன் மூலம் தங்களின் சீவனோபாயத்துக்கான தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடு படுவர்.
சொந்தக் காணியைக் கைவிட்டு இரவல் காணியில் தற்காலிக கொட்டிலில் குடியிருக்கும் ஒரு குடு ம்பத்தின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை அறிந்து கொள்வது அரசின் கடமையாகும். 
இதைவிடுத்து நாங்கள் ஆள்பவர்கள். நீங்கள் தமிழர்கள். ஆகவே, நாங்கள் அனுமதித்தால்தான் நீங்கள் உங்கள் சொந்த மண்ணில் குடியிருக்க முடியும் என்றால் இது எந்த வகையில் நீதியாகும் என்பதை இனபேதம் கடந்து உணர்ந்து கொள்வது காலத்தின் உடனடித் தேவையாகும். 

நேற்றைய தினம் வலி வடக்கில் 700 ஏக்கர் நிலத்தை உத்தியோகபூர்வமாக விடுவிப்பு செய்து மக்களிடம் கையளித்த ஜனாதிபதி மைத்திரிக்கு தமிழ் மக்கள் நன்றி கூறிக்கொள்ளும் அதேநேரம், 
தமிழர் தாயகத்தில் இருக்கக்கூடிய அத்தனை ஆக்கிரமிப்பு நிலங்களையும் விடுவிப்பு செய்து அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதைச் செய்வதன் மூலம் பல்வேறு துன்பங்களில்  ஒன்றுக்கு முடிவு கட்டியதாக இருக்கும். 

Valampurii

மூதேவி யார்?

இது என்ன கேள்வி மூதேவி என்பது ஒரு  தீயூழ் (Bad luck  ) அல்லது ஒரு வசைச்சொல் என்பதே பலரின் கருத்தாகவிருக்கும், ஆனால் உண்மையில் மூத்த தேவியே ...