Sunday 27 March 2016

இறுதிப்போர் இரகசியங்கள்! இலக்கு வைக்கப்படும் தமிழர்கள்

இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சில தகவல்களை வௌயிட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில் இறுதிப்போர் பற்றிய பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியற்துறை பொறுப்பாளர் தமிழினியின் நூலும் வெளியாகியிருக்கிறது.

இந்த இரண்டு விவகாரங்களுமே இறுதிப்போர் பற்றிய பரபரப்பான கதைகளை மீண்டும் மக்கள் மத்தியில் பேச வைத்திருக்கின்றன. ஏழு ஆண்டுகளாகியும் இன்னமும் பல அவிழ்க்கப்படாத முடிச்சுக்களைக் கொண்டதாகவே இறுதிப்போர் இரகசியங்கள் இருக்கின்றன.

அந்தப் போருக்குத் தலைமை தாங்கிய இராணுவத்தளபதி என்ற வகையில் தனக்கு எல்லாமே தெரியும் என்பது போலவும், தான் சொல்வதெல்லாம் உண்மை என்பது போலவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆனாலும் அவருக்கே தெரியாத இரகசியங்களும் இருக்கின்றன என்பதை சரத் பொன்சேகாவின் ஒப்புதல் வாக்குமூலங்களே உணர்த்தியிருக்கின்றன.

அதாவது போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த நிலையில் தான் சீனாவுக்கு சென்றிருந்த போதும் அங்கிருந்தே படையினருக்கு கட்டளைகளை வழங்கியதாக அவர் கூறியிரக்கிறார்.
இதன்மூலம் போர் வெற்றியில் வேறு எவரும் பங்கிற்கு வரக்கூடாது என்று அவர் விரும்புகிறார். ஆனாலும் இறுதிப்போரின் சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் பற்றி அவர் எதையும் பேசவோ, வெளிப்படுத்தவோ தயாராக இல்லை. எனினும் அத்தகைய சர்ச்சைகளை இன்னமும் சந்தேகங்களாகவே அவர் படரவிட முனைந்திருக்கிறார்.

அதைவிட, போருக்குத் தாமே தலைமை தாங்கியதாக கூறியிருக்கும் சரத் பொன்சேகா, போரில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட அதிகாரிகளுடன் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தனியாகத் தொடர்புகளை வைததிருந்தார் என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இதன் மூலம் தனது கையையும் மீறி உத்தரவுகள் இராணுவஅதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்றே அவர் கூற வந்திருக்கிறார்.

இவை தவிர விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்ற சர்சசையை சரத் பொன்சேகா கிளப்பாது விடினும், அதனை முன்னிறுத்தி ஊடகங்களில் பலரும் பலவித கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சண்டையில் கொல்லப்பட்டார் என்றே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியிருந்தார்.

அதேவேளை, சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் ஒன்றில் அவரது மரணம் குறித்து வெளியிட்ட சர்வதேச தடயவியல் நிபுணர் ஒருவர் 50 கலிபர் துப்பாக்கிகளின் ரவை ஒன்றே பிரபாகரனின் தலையைத் துளைத்துச் சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறியிருந்தார்.

ஆனாலும் சரத் பொன்சேகாவின் பேட்டியின் பின்னர் பிரபாகரனின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து ஆராயப்பட வேண்டும், ஆராயப்படும் என்பது போன்று அமைச்சர்கள் பலரும் கூறிவருவதைக் காணமுடிகிறது.

இங்கு பிரச்சினை என்னவென்றால் போர்க்குற்றங்கள் என்று கூறப்பட்ட சம்பவங்களை மறக்கடிக்கச் செய்யும் முயற்சிகள் தான் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் ஒரு போர்க்குற்றம் என்று யாருமே கூறவில்லை. அதுபற்றி விசாரிக்கப் போகிறதாம் அரசாங்கம்.

ஆனால் போர்க்குற்றம் என்று கூறப்பட்ட நடேசன், புலித்தேவன் போன்றவர்களின் மரணங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என்ற உறுதிமொழி இதுவரை அரசதரப்பில் யாரிடம் இருந்தும் வரவில்லை.

அதைவிட படையினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் விடயத்தில் போர்க்குற்றங்கள் நடந்துள்ளதா? என்று ஆராயப்படும் என்றும் கூட யாரும் கூறவில்லை.

இந்தக்கட்டத்தில் பிரபாகரனின் மரணம் குறித்த விசாரணைகளை நடத்துவது பற்றி ஏன்? அரசாங்கம் மக்களின் கவனத்தை திருப்பப் பார்க்கிறது?

மக்களின் கவனத்தை ஈர்க்கும் விடயத்தில் இருந்து அவர்களை திசை திருப்ப வேண்டுமானால் அதைவிட அதிகம் ஈர்க்கக்கூடிய விடயத்தை நோக்கி அவர்களின் கவனத்தை நகர்த்த வேண்டும். அதுதான் இங்கு நடக்கிறது போலத் தெரிகிறது.

இறுதிப் போர்க்கால மீறல்கள் பற்றி கடந்த ஆறேழு ஆண்டுகளாகப் பேசப்பட்டு வரும் நிலையில் இதன் திசையை மாற்றும் முயற்சிகள் தான் இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அரசாங்கத் தரப்பு எவ்வாறு எதனைக் கூறினாலும் தமிழர்களில் பலருக்கே புலிகளினதும், பிரபாகரனினதும் செயற்பாடுகள் மீது விமர்சனங்கள் இருந்தாலும் புலிகளன் மீதும் பிரபாகரன் மீதும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் பெருமதிப்பு வைத்திருக்கின்றனர் என்பது உண்மை.

அந்த நம்பிக்கையை உடைப்பதும் கூட இப்போதைய பலமுனை நகர்வுகளின் உள்நோக்கங்களில் ஒன்றாக இருப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இறுதிப்போர் பற்றி வெளியிடும் கருத்துக்கள் பலரது கவனத்தை ஈர்த்தாலும் அவருக்குள் பழிவாங்கும் உணர்வு அதிகம் இருப்பதை மறக்க முடியாது.

தன்னைக் கொல்ல உதவியதாக கூறப்படும் புலிகள் இயக்க சந்தேக நபருக்கு கருணை காட்டுமாறு கோரும் அளவுக்கு அவர் பக்குவப்பட்டிருந்தாலும் முன்னைய ஆட்சியாளர்களை அவர் மன்னிக்கத் தயாராக இல்லை.

எனவே அவர்களை எந்தளவுக்கு சிக்கலுக்குள் தள்ளிச் செல்லவும் அவர் தயாராகவே இருப்பார் என்றே தெரிகிறது.

அதேவேளை, விடுதலைப் புலிகள் விடயத்தில் சரத் பொன்சேகாவின் நிலைப்பாடு ஒன்றும் தயவுதாட்சண்யம் கொண்டதாக இருக்கவும் வாய்ப்பில்லை.

பிரபாகரன் தொடர்பாக தமிழ்மக்கள் மத்தியில் உள்ள கருத்தை புலிகள் பற்றிய அபிப்பிராயத்தை உடைப்பது முக்கியமானது என்பதை சரத் பொன்சேகாவும் அறிவார். விடுதலைப் புலிகள் மற்றும் அதன் தலைமை தொடர்பானது மட்டுமன்றி அதன் இறுதிப் போர்க்காலச் செயற்பாடுகள் பல மர்மம் நிறைந்தவையாகவே இருப்பதால், இதுபோன்ற பரபரப்பான தகவல்களும் எழுத்துக்களும் மக்களிடையே கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

இதன் ஊடாக யாருக்கு என்ன லாபம்? நிச்சயமாக உள்ளது. விடுதலைப் புலிகளின் போராட்டம் தொடர்பாக ஒரு வெறுப்பூட்டக்கூடிய, மாற்றப்பட முடியாத கருத்தை விதைக்கலாம்.

தமிழ் மக்களின் உரிமைகள் இன்னமும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், மீண்டும் இதுபோன்ற போராட்டங்களில் அவர்களை ஈடுபடாமல் தடுப்பதற்கு இதுபோன்ற எண்ணப்பாடுகளை ஏற்படுத்துவது அவசியம்.

அதைவிட, போர்க்குற்றங்கள் தொடர்பாக எது முன்னிறுத்தப்பட வேண்டுமோ அதனை விடுத்து வேறொன்றின் மீது கவனத்தைக் குவிய வைப்பதன் ஊடாக போர்க்குற்ற விசாரணையை எதிர்நோக்கக் கூடியவர்களைப் பாதுகாக்கலாம்.

சரத் பொன்சேகா இப்போது சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார் என்றால், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்று அர்த்தமில்லை.

அவர் போர்க்குற்றச்சாட்டில் இருந்து இராணுவத்தைப் பாதுகாக்கவே அவ்வாறு கூறுகிறார். அதேவேளை தனது உத்தரவுக்குக் கட்டுப்படாதவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை.

ஆக, சரத் பொன்சேகாவின் எதிர்பார்ப்பு நிறைவேறினால், போர்க்குற்றங்களுக்கு நீதி கோரும் தமிழர்களின் எதிர்பார்ப்பு பொசுங்கிப் போய்விடும்.

போர்க்குற்றச்சாட்டுகளை முற்றாக வலுவிழக்கச் செய்வதற்கும் தமிழர் தரப்பை இந்த விவகாரத்தில் இருந்து திசை திருப்புவதற்கு இதுபோன்று எதைச் செய்வதற்கும் அரசாங்கமும் படைத்தரப்பும் தயாராகவே உள்ளதென்பதை மறந்து விடலாகாது.

இந்த விடயத்தில் அரச புலனாய்வுப் பிரிவை அவ்வளவு எளிதாக எவரும் மதிப்பிட்டு விட முடியாது.

தமிழினி எழுதிய நூலில் ஊடகவியலாளர் என்ற போர்வையில் புலிகளின் கண்ணுக்குள் மண்ணைத் தூவிவிட்டு வன்னிக்குள் நுழைந்த இராணுவ அதிகாரியை, தாம் சிறைப்பட்டிருந்த நிலையில் சந்தித்த போது திகைத்துப் போனதாக குறிப்பிட்டிருக்கிறார்.

அதுபோலத்தான் இறுதிப்போர் இரகசியங்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் பெரும்பாலும் இல்லாமல் போய்விட்ட நிலையில், தமிழ் மக்களின் கண்களில் மண்ணைத் தூவும் முயற்சிகளைத் தொடர்வது ஒன்றும் அரசதரப்புக்குக் கடினமான காரியமில்லை.
சுபத்ரா

No comments:

Post a Comment