Thursday 31 March 2016

மிஸ்டர் ஒபாமா, உங்க சங்காத்தமே வேணாம்! - ஃபிடல் காஸ்ரோ காட்டம்

கடந்த வாரம் க்யூபா சென்று, நேசக்கரம் நீட்டி வந்த அதிபர் ஒபாமாவுக்கு, முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ரோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பரிசுகள் க்யூபாவுக்கு தேவையில்லை என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு காலம் க்யூபாவை ஆட்சி செய்து வந்த ஃபிடல் காஸ்ரோ, உடல் நிலை காரணமாக தனது தம்பி ரவுல் காஸ்ரோவிடம் 2008 ஆம் ஆண்டு அதிகாரத்தை ஒப்படைத்தார். 
 
 
 
அவரது ஐம்பது ஆண்டுகால ஆட்சி முழுவதும், அமெரிக்காவைக் கடுமையாக எதிர்த்து வந்தார். அதிபர் ஜான் கென்னடி விதித்த பொருளாதாரத் தடையினால் ஏற்பட்ட இழப்புகளை, தன்னிறைவு திட்டங்கள் மூலம் முறியடித்து சாதனை படைத்தார். ரவுல் காஸ்ரோ பதவியேற்ற பிறகு, சற்று முதலாளித்துவப் பாதையில் க்யூபாவை திருப்ப முயல்கிறார். அதை உணர்ந்த ஒபாமா இதுதான் சரியான தருணம் என்று கடந்து மூன்று ஆண்டுகளாக திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளை பல்வேறு மட்டத்தில் நடத்தி வந்தார்.
 
உச்சகட்டமாக, க்யூபாவுக்கு சென்று ரவுல் காஸ்ரோவுடன் மிகவும் நெருக்கம் காட்டினார். மக்களுடன் உரையாடினார். 'பழையவற்றை மறப்போம், மாற்றம் காண்போம், நல்லுறுவு பேணுவோம்' என்று க்யூபா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பொருளாதார தடை நீக்க அறிவிப்பும் வெளியிட்டார். க்யூபா மக்களிடையே ஒபாமாவின் அழைப்புக்கு வரவேற்பு கிடைத்த்து. 
 
இந் நிலையில் 89 வயதான ஃபிடல் காஸ்ரோ ( நம்ம ஊர் நல்லகண்ணுவை விட 8 மாதங்கள் இளையவர்!), "ஒபாமாவின் பரிசுகள் தேவையில்லை. பழைய துரோகங்களையும், அவதிகளையும் அத்தனை சுலபத்தில் மறந்துவிட முடியுமா? 
 
1961-ல் அமெரிக்கா தொடுத்த கொடூரத் தாக்குதல் மிகப் பெரிய நம்பிக்கை துரோகம். அந்தத் தாக்குதலில் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான இழப்புகள், கொடூர பலிகளை எப்படி மறக்க முடியும்? இத்தனை ஆண்டுகள் கழித்து அமெரிக்கா அதற்கெல்லாம் என்ன இழப்பீட்டைத் தர முடியும்? 
 
க்யூப மக்களின் அளப்பரிய தியாகத்தின் மேல் எழுப்பப்பட்டதுதான் இன்றைய சமூக வளர்ச்சியும் கலாச்சாரமும். ஒபாமாவுக்கு 10 வயதிருக்கும்போதே அனைத்துக் க்யூப மக்களுக்கும் சம்பளமும் பென்ஷனும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. அந்த அளவு தன் பலத்தை மட்டுமே நம்பி வளர்ந்த நாடு இது. 
 
க்யூபா தன்னிசையாகவே தன் மக்களுக்குத் தேவையான பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வல்லமை உடையது. நீங்கள் தள்ளியே இருங்கள் ஒபாமா," என்று நாளிதழில் அறிக்கை விடுத்துள்ளார். 
 
 பதவியில் இல்லாவிட்டாலும் இன்னும் மக்கள் செல்வாக்குடன் விளங்கும் ஃபிடல் காஸ்ரோவின் இந்த அறிக்கை, இரு தரப்பிலும் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு முயற்சிகள் தொடரும் என்றே நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment