Tuesday 29 March 2016

பெல்ஜிய அதிகாரிகளுக்கு புரூசெல்ஸ் குண்டுவெடிப்புகள் குறித்து "துல்லியமான உளவுத்தகவல் எச்சரிக்கைகள்" கிடைத்திருந்தன

புரூசெல்ஸில் 34 பேர் கொல்லப்பட்டு 230 பேர் காயமடைந்த பாரிய குண்டுவெடிப்புகளுக்கு அடுத்த நாள், அத்தாக்குதல்களை குறித்து பெல்ஜிய அதிகாரிகளுக்கு முன்கூட்டியே குறிப்பிட்ட எச்சரிக்கைகள் கிடைத்திருந்தன என்பதும், அத்தாக்குதலை நடத்தியவர்களை அவர்கள் ஏற்கனவே கடந்த ஆண்டே இஸ்லாமிய தீவிரவாதிகளாக அடையாளம் கண்டிருந்தனர் என்பதும் வெளியானது.

இஸ்ரேலிய பத்திரிகை Ha'aretz புதனன்று அறிவிக்கையில், அந்த திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஷாவென்டெம் விமான நிலையம் மற்றும் மெல்பேக் மெட்ரோ நிலையம் இலக்குகளாக ஆக்கப்பட இருந்ததும் தெரிந்தே இருந்ததாக குறிப்பிட்டது. “பெல்ஜியத்தில் செவ்வாய்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து பெல்ஜிய பாதுகாப்பு சேவைகளுக்கும், அத்துடன் ஏனைய மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகளுக்கும், முன்கூட்டியே துல்லியமான உளவுத்தகவல் எச்சரிக்கைகள் கிடைத்திருந்தது என்று Ha'aretz க்குத் தெரிய வந்துள்ளது. அந்த விமான நிலையத்தில் மற்றும், தெளிவாக, அந்த சுரங்க பாதையிலும் வரவிருந்த அண்மித்த நாட்களில் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டிருந்தன என்பதை, அதிகபட்ச நிச்சயத்தன்மையோடு, அந்த பாதுகாப்பு சேவைகள் அறிந்திருந்தன,” என்று அது எழுதியது.

சந்தேகத்திற்குரிய தாக்குதல்தாரிகளை பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்திருந்தது. தற்கொலை குண்டுதாரிகளில் இருவரான, மெட்ரோ நிலையத்தை தாக்கிய காலித் எல் பக்ரவ்வியும் மற்றும் விமான நிலையத்தில் ஒரு குண்டுவெடிக்க செய்த அவரது சகோதரர் இப்ராஹிம் எல் பக்ரவ்வியும் ஆயுதமேந்திய கொள்ளை நடவடிக்கைக்காக குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்கள், மேலும் ISIS ஆல் (ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு) நடத்தப்பட்ட நவம்பர் 13 பாரீஸ் தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களாக அறியப்பட்டவர்கள். இருவருமே பிரேத பரிசோதனையில் அவர்களது கைரேகைகளை கொண்டு அடையாளம் காணப்பட்டார்கள்.

துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கூறுகையில், இப்ராஹிம் எல் பக்ரவ்வி துருக்கியில் கைது செய்யப்பட்டு ஓர் இஸ்லாமிய போராளியாக அடையாளம் காணப்பட்டவர், பின்னர் கடந்த ஆண்டு நெதர்லாந்திற்கு நாடுகடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

“புரூசெல்ஸ் தாக்குதல் குற்றத்திற்கு உடந்தையாய் இருந்த ஒருவர், [தென்கிழக்கு மாகாணமான] Gaziantep இல் ஜூன் 2015 இல் கைது செய்யப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர் ஆவார்… அந்த தாக்குதல்தாரி வெளியேற்றப்பட்ட நடைமுறை குறித்து ஜூலை 14, 2015 இல் புரூசெல்ஸ் தூதரகத்திற்கு ஒரு குறிப்பு நாங்கள் அனுப்பி உள்ளோம். இருந்தும், நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அந்த தாக்குதல்தாரியை பெல்ஜியர்கள் விடுதலை செய்தனர்,” என்று எர்டோகன் தெரிவித்தனர்.

துருக்கியின் எச்சரிக்கைகளுக்கு இடையிலும், அவை "புறக்கணிக்கப்பட்டு", பெல்ஜிய அதிகாரிகளால் எல் பக்ரவ்விக்கும் பயங்கரவாத நடவடிக்கைக்கும் இடையிலான எந்தவித தொடர்புகளையும் நிறுவ முடியவில்லை என்பதையும் எர்டோகன் சேர்த்துக் கொண்டார்.

விமான நிலையத்தில் தன்னைத்தானே வெடித்து சிதறடித்துக் கொண்ட மற்றொரு குண்டுதாரியை அடையாளம் வேண்டியுள்ளது, நஜிம் லாச்ரவ்வி என்று அடையாளம் காணப்பட்ட விமான நிலையத்தின் மூன்றாவது குண்டுதாரி தலைமறைவாக உள்ளார். ஒரு பழைய கருப்பு நிற Audi A4 காரை ஓட்டி வந்த, துருக்கியில் பிறந்த 22 வயதான ஒருவரைத் தேடி வருவதாக பெல்ஜிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தகைய தகவல்கள், பெல்ஜிய மற்றும் அதன் கூட்டு உளவுத்துறை அமைப்புகளும் பெல்ஜியத்தில் குண்டுவெடிப்புகள் நடக்க ஏன், எவ்வாறு அனுமதித்தார்கள் என்ற மிகவும் முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. செப்டம்பர் 11, 2001 குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளால் அறிவிக்கப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" பதினைந்து ஆண்டுகளில், உளவுத்துறை அமைப்புகள் நடைமுறையளவில் எல்லா கைத்தொலைபேசிகள் மற்றும் இணைய நடவடிக்கைகளையும் கண்காணிக்க அவற்றின் மேற்பார்வையில் மிக நவீன உளவு நுட்பங்களை கொண்டுள்ளன. பெல்ஜிய மற்றும் அதனுடன் சேர்ந்த உளவுத்துறை அமைப்புகள் ஏதோவிதத்தில் "விடயங்களை இணைத்துபார்க்க" தவறியதால் தான் அந்த தாக்குதல் நடந்தது என்ற வாதங்கள் முற்றிலும் நம்பத்தகுந்தவையாக இல்லை.

பெல்ஜியம் உயர் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13 பாரிஸ் தாக்குதல்களை தொடர்ந்தும் மற்றும் நவம்பர் 13 தாக்குதல்தாரி சலாஹ் அப்தெஸ்லாம் கடந்த வாரம் அங்கே பிடிக்கப்பட்ட போது மீண்டும் அந்நகரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும், பெரும் எண்ணிக்கையிலான சிப்பாய்கள் மற்றும் பொலிஸ் புரூசெல்ஸில் குவிக்கப்பட்டனர். பெல்ஜிய படைகளுக்கு ஒரு தாக்குதலின் இலக்குகள் குறித்து முன்கூட்டியே தகவல் இருந்தும், தாக்குதல்தாரிகளது அடையாளங்களும் தெரிந்திருந்தும், ISIS குழுவால் தொந்தரவின்றி குண்டு தயாரிக்கும் பொருட்களின் மிகப்பெரிய கையிருப்பைச் சேர்த்து, திட்டமிட்டு, தயாரிப்பு செய்து அந்த நாசகரமான மற்றும் ஒருங்கிணைந்த பயங்கரவாத குண்டுவெடிப்புகளை நடத்த முடிந்திருந்தது.

பாரீஸ் தாக்குதல்களுக்குப் பின்னர் முதலில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட போது, அங்கு 16 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் 22 தேடல்கள் நடத்தப்பட்டன, அதில் எதுவுமே சிக்கவில்லை. அது எல்லாவற்றின் போதும், அப்தெஸ்லாம் அவர் பெற்றோரது வீட்டிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தூரத்தில் தான் இருந்து வந்தார்.

கடந்த வாரம் பொலிஸ் சோதனையில் அப்தெஸ்லாம் பிடிக்கப்பட்டமை, வெளிப்படையாக ISIS பயங்கரவாதிகள் அவர்களது திட்டங்களைச் செயல்படுத்தத் தள்ளியது. இப்ராஹிம் எல் பக்ரவ்வியின் மடிக்கணினி வீதியின் ஒரு குப்பத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது. அதில் பக்ரவ்வியின் ஒரு பதிவைப் பொலிஸ் கண்டிருந்தது, அவர் "எல்லாயிடத்திலும் தேடப்பட்டு, எங்கேயும் பாதுகாப்பாக இருக்க முடியாத" நிலையில், அவர் "அவசரமாக செயல்பட்டதாகவும்" மற்றும் "மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல்" இருந்ததாகவும் பொலிஸ் கூறியது. அவர் "சிக்கிக் கொண்ட" போது அவர் "ஒரு சிறைக்கூடத்தில் சிக்கியதைப்" போல இருந்தார்.

தாக்குதல்தாரிகளை ஷாவென்டம் விமான நிலையத்தில் விட்டுச் சென்ற டாக்சி ஓட்டுனருடன் பேசி எல் பக்ரவ்வியின் அடுக்குமாடி குடியிருப்பைப் பொலிஸ் கண்டறிந்தது. அவர் புரூசெல்ஸில் Schaerbeek பகுதியின் 4 ஆம் வீதி மேக்ஸ் ரூஸ் இல் இருந்து அவர்களை ஏற்றிவந்ததாக பொலிஸிற்குத் தெரிவித்தார். பொலிஸ் அந்த அடுக்குமாடி கட்டிடத்தைச் சோதனை இட்ட போது 15 கிலோ வெடிபொருட்கள், 150 லிட்டர் ஏஸ்டோன், 30 லிட்டர் ஹைட்ரஜன் பெராக்சைடு, வெடிபொருள் இரசாயனங்கள், ஒரு பெட்டி நிறைய ஆணிகள் மற்றும் திருகுஆணிகள் மற்றும் இன்னும் பல குண்டு செய்யும் பொருட்களைக் கைப்பற்றினர்.

இந்தளவிற்கு அதிர்ச்சியூட்டும் பாதுகாப்பு ஓட்டைகளுக்குப் பின்னரும் அங்கே பெல்ஜியத்தில் மற்றும் ஐரோப்பிய உளவுத்துறை வட்டாரங்களில் இதுவரையில் பாரிய வேலைநீக்கங்களுக்கான கோரிக்கை எதுவும் இல்லை. இதற்கு காரணம் ஆளும் உயரடுக்கு மற்றும் அரசுக்குள் இருக்கும் சக்தி வாய்ந்த கன்னைகள், இந்த தாக்குதல்களால் உண்மையில் குழப்பம் அடைவதற்குப் பதிலாக, அவற்றை ஒரு அரசியல் வரமாக பார்க்கின்றன. இத்தாக்குதல்கள் மத்தியக் கிழக்கில் இராணுவத் தலையீட்டை, ஐரோப்பாவில் பொலிஸ்-அரசு உளவுவேலை நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும் மற்றும் முஸ்லீம்-விரோத இனவாதத்தைத் தூண்டுவதற்கும் உரிய கொள்கைகளுக்கு ஆளும் வட்டாரங்களில் பரந்த உடன்பாடு நிலவுகின்ற நிலையில், அவற்றிற்கு அழுத்தமளிக்க அவர்களை அனுமதிக்கின்றன.

நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர்கள் தோமஸ் ஃப்ரெட்மென் மற்றும் ரோஜர் கோஹன் நேற்று பிரசுரித்த கட்டுரைகளில் தோற்றப்பாட்டளவில் ஒரேமாதிரியான வார்த்தைகளில் ISIS க்கு எதிராக சண்டையிடும் வேஷத்தில் சிரியா போரைத் தீவிரப்படுத்த வாதிட்டனர்.

“கலிபாவின் இந்த மரணகதியிலான வெறித்தனத்திற்கு மெதுவாக மேற்கின் அவர்களே வெளியேறும் வரை காத்திருப்போம் என்ற அணுகுமுறை சரணடைந்துவிட்டதைப் போல தெரிகிறது,” என்று கோஹன் அறிவித்தார், அதேவேளையில் ஃப்ரெட்மென் "ஒபாமா அவரது செயல்படாத தன்மையின் அபாயங்கள் மற்றும் அப்பிராந்தியத்தை நமது வழிக்குக் கொண்டு வர அமெரிக்காவின் சக்தியைப் பிரயோகிக்கும் சாத்தியப்பாட்டை கண்டுகொள்ளாமை ஆகிய இரண்டையும் அவர் குறைமதிப்பிடும் வகையில் சிரியா விடயத்தில் அவரது செயல்படாது இருக்கும் அணுகுமுறையை உறுதியாக பாதுகாப்பது தெரியவில்லையா" என்று கேள்வி எழுப்பினார்.

ஐரோப்பிய அதிகாரிகள் ஐரோப்பா எங்கிலும் பொலிஸ் நடவடிக்கைகளை பரந்தளவில் விரிவாக்குவதில் ஒருங்கிணைய இன்று ஒரு மாநாடு நடத்துகிறார்கள், அதேவேளையில் பிரான்சின் நவ-பாசிசவாத தேசிய முன்னணியின் தலைவர் மரீன் லு பென் பிரான்சில் முஸ்லீம் அண்டைஅயலார்களுக்கு எதிராக பெரியளவில் வேட்டையாட அழைப்புவிடுக்கிறார். “நமது குடியரசுக்கு வெளியே இருக்கும் இத்தகைய சகல மாவட்டங்களையும் ஆராய ஒரு பரந்த பொலிஸ் நடவடிக்கையை நாம் உடனடியாக தொடங்க வேண்டும்,” என்றவர் அறிவித்தார்.

இத்தகைய நிலைமைகளின் கீழ், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்காக ISIS சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்காக சண்டையிடும் ஒரு பினாமி சக்தியாக செயற்படுவது மட்டுமல்லாது, மாறாக உள்நாட்டில் ஜனநாயக-விரோத மற்றும் மக்கள்விரோத கொள்கைகளுக்கு அழுத்தம் அளிக்க ஒரு கருவியாகவும் சேவையாற்றுகிறது.

கடந்த ஜனவரியில் மற்றும் மீண்டும் நவம்பரில் பாரீஸில் ISIS தாக்குதல்கள் மற்றும் இந்த வாரம் புரூசெல்ஸில் தாக்குதல்கள் அனைத்தும் ஒரே பயங்கரவாத வலையமைப்பால் நடத்தப்பட்டன. இந்த வலையமைப்பைக் குறித்து பிரெஞ்சு உளவுத்துறை மற்றும் அதன் அமெரிக்க, ஐரோப்பிய சமதரப்புகளுக்கும் நன்கு தெரியும். இந்த சக்திகள் எல்லாமும் நிஜமான அல் கொய்தா வலையமைப்புடன் தொடர்புபட்டுள்ளன, இது 1980 களில் சோவியத் ஒன்றியத்திற்கும் மற்றும் சோவியத்-ஆதரவிலான ஆப்கான் ஆட்சிக்கும் எதிராக இஸ்லாமிய போராளிகளை ஒன்றுதிரட்ட சிஐஏ மற்றும் சவுதி மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பிலிருந்து எழுந்ததாகும்.

காலித் எல் பக்ரவ்வி, நவம்பர் 13 தாக்குதல்களுக்குத் திட்டம் தீட்டியவர்கள் பாரீஸிற்குச் செல்லும் வழியில் தங்குவதற்காக பெல்ஜியத்தின் சார்ல்ரோய் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை, ஒரு போலி அடையாளத்தை காட்டி, வாடகைக்கு அமர்த்தினார். இவர் புரூசெல்ஸின் ஃபாரஸ்ட் பகுதியிலும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தார், அங்கே தான் மார்ச் 15 இல் முதலில் சலாஹ் அப்தெஸ்லாம் கண்டறியப்பட்டார் மற்றும் ஆரம்ப பொலிஸ் சோதனையின் போது அப்தெஸ்லாம் தப்பித்து சென்ற ஒரு துப்பாக்கி சண்டையில் மொஹம்மத் பெல்கைய்ட் கொல்லப்பட்டார்.

பிரெஞ்சு செய்தி வலைத்தளம் Médiapart குறிப்பிடுகையில், நவம்பர் 13 தாக்குதல்களை ஒழுங்கமைத்த அப்தெல்ஹமீத் அபவூத் மற்றும் சார்லி ஹெப்டோ தாக்குதல்தாரிகளில் ஒருவரான செரிஃப் குவாச்சி, இருவருக்குமே பிரெஞ்சு இஸ்லாமிய வட்டாரங்களில் முக்கிய பிரபலமாக உள்ள பரீத் மெலொக்கைத் தெரியும். மெலொக், 1990 களின் அல்ஜீரிய உள்நாட்டு போரின் போது இராணுவ ஆட்சிக்குழுவிற்காக சண்டையிட்ட அல் கொய்தா இணைப்பு கொண்ட ஒரு பயங்கரவாத அமைப்பான அல்ஜீரிய இஸ்லாமிய ஆயுதக் குழு (GIA) இல் ஒரு முன்னணி அங்கத்தவராக இருந்தவர்.

ஏப்ரல் 11, 2010 இல் மெலொக் உடனான செரீஃப் குவாச்சியின் சந்திப்பு, பிரெஞ்சு பயங்கரவாத-எதிர்ப்பு துணை பிரிவு (SDAT) புலனாய்வாளர்களால் தொலைதூர புகைப்பட லென்சைப் பிரயோகித்து புகைப்படம் எடுக்கப்பட்டது.

படுகொலை முயற்சி, ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் வைத்திருந்தமை மற்றும் அரசு ஆவணங்களைத் திரித்தமை ஆகியவற்றிற்காக 1998 இல் பெல்ஜியத்தில் ஏனைய அல் கொய்தா அங்கத்தவர்களுடன் கைது செய்யப்பட்ட மெலொக் 2004 வரையில் சிறையில் இருந்தார், அப்போது அவர் 2009 வரையில் பிரான்சில் இரண்டாவது சிறை தண்டனை அனுபவிக்க அங்கே அனுப்பப்பட்டார். விடுதலை ஆனதும், ISIS உடன் அமைதியாக நெருக்கமான உறவுகளை ஸ்தாபித்துக் கொண்டே, பிரான்சில் தங்கி இருந்தார். சார்லி ஹெப்டோ தாக்குதல்களுக்கு அடுத்த நாள் அவரால் சிரியாவிற்குத் தப்பிச் செல்ல முடிந்திருந்தது.

கடந்த ஆண்டு பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தின் ஜிஹாதிஸ்ட் வலையமைப்பு மீதான விசாரணைக்குழு முன் பயங்கரவாத-தடுப்பு புலனாய்வு நீதிபதி Marc Trévidic பேசுகையில், “பழையவர்கள் நடவடிக்கையில் இறங்க திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். சிரியாவில் இருந்த பரீத் மெலொக் குறித்து இப்போது எனக்கு தெரிய வந்துள்ளது… முதல் 'ஆப்கான்' வலையமைப்பை நான் கையாண்டு வந்த போது 2000 ஆம் ஆண்டு அவரை நான் சந்தித்தேன். ஜிஹாதிஸ்டுகளுக்குப் பாதை அமைத்து கொடுத்த ஒரு மிகப் பெரிய வலையமைப்பிற்கு அவர் தலைவராக இருந்தார்… இத்தகைய பழையவர்கள் பெல்ஜியம் மற்றும் பிரான்சில் குறிப்பிடத்தக்க அளவிற்கு தொடர்புகளைக் கொண்டுள்ளனர்,” என்றார்.

தசாப்த கால போக்கில், ஐரோப்பிய இரகசிய சேவைகள், நீதித்துறை மற்றும் பொலிஸ் முகமைகளால் மிகப் பெரியளவிலான விபரங்களுடன் ஜிஹாதிஸ்ட் வலையமைப்புகள் விசாரிணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன மற்றும் கண்டறியப்பட்டுள்ளன என்பதையே அதுபோன்ற செய்திகள் எடுத்துக்காட்டுகின்றன.

By Stéphane Hugues and Alex Lantier

No comments:

Post a Comment