ஐந்து வருடத்துக்கு ஒரு முறை தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க
கொடுக்கும் வாய்ப்பை பெரும்பாலான தமிழக மக்கள் இலவசத்துக்கும் இருநூறு
ரூபாய்க்கும் போல விற்றுவிடுவதை சமீப காலமாக செய்து வருகிறார்கள்.
அப்படியிருந்தும் தமிழ்நாட்டில் தோசையை திருப்பி போடுவதை போல ஒரே திராவிட
கட்சியின் இரண்டு பக்கங்களை மாறி மாறி தங்களை சுட
அனுமதித்துகொண்டிருக்கிறார்கள். கிரிக்கெட் வெறியர்கள் போல தேர்தல்
செய்திகள் வெறியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது ஐந்து வருடத்துக்கு
ஒருமுறை வரும் கிரிக்கட் கோலாகலம் எனலாம்.

இந்த முறை ஐந்து முனையாகவோ ஆறுமுனையாகவோ தேர்தலை பல நூறு கட்சிகள்
சந்திக்கின்றன. அதிமுகவுடன் பல கட்சிகள், திமுகவுடன் காங்கிரஸ் சேர்த்து பல
கட்சிகள். விஜயகாந்த் வைகோ திருமா ஜி ஆர் .. சமீபத்தில் இணைந்த வாசன்
என்று ஐவரோடு சேர்ந்து அறுவரானோம் என்று மக்கள் நல கூட்டணி
சேர்ந்திருக்கிறார்கள். பாமக, பாஜக என்றும் இரண்டு கட்சிகள் தனியாக
நிற்கின்றன. இத்தனை கட்சிகள் இருக்கின்றன என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமே
பல கட்சி தலைவர்களுக்கு தெரியவரும். இதில் நடிகர் கார்த்திக் நடத்தும்
கட்சியும் தேர்தல் நேரத்தில் மட்டுமே பேசப்படும். தினமலரில் இவரது
செய்திகளை ரொம்ப சந்தோஷத்தோடு போடுகிறார்கள். அவர்களுக்கே சிரிப்பு தாங்க
முடிவதில்லை.
அதிமுகவுக்கு மிகவும் சந்தோஷம் தரும் பல்முனை போட்டி இவ்வாறாக
அமைந்திருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் தோற்றால் கூட அது
பிரம்மாண்டமான செய்தியாக இருக்க போகிறது என்று தோன்றுகிறது.
ஆனால் அவரவருக்கு விரும்பியதெல்லாம் நடந்துவிடுவதில்லை. பாஜகவை
விட்டுவிட்டு எல்லோரும் தன்னுடன் இணையவேண்டும் என்று திமுக நிச்சயம்
விரும்பியிருக்கிறது. சோனியா காங்கிரஸ், மதிமுக, வாசன்
காங்கிரஸ்,கம்யூனிஸ்டுகள், பாமக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், புதிய
தமிழகம் அனைத்தும் திமுகவின் தலைமையில் தேர்தலை சந்தித்திருந்தால், திமுக
நிச்சயம் வெற்றிபெற்றிருக்கும் என்று அடித்து சொல்லலாம். அப்படிப்பட்ட மெகா
கூட்டணி பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கும். ஆனால், முன்பு தேர்தலில்
அறுதி பெரும்பான்மை இல்லாமல் இருந்தபோதும் திமுக காங்கிரஸின் ஆதரவில் ஆட்சி
செய்தபோதும், ஆட்சியில் பங்கு அளித்ததில்லை. அதனால் காங்கிரஸ் கூட இந்த
முறை ஆரம்பத்தில் திமுக அணியில் சேர பிரியப்படவில்லை என்றுதான்
தோன்றுகிறது. ஆனால் காங்கிரஸுக்கு வேறு வழியில்லை என்பதால் திமுகவுடன் அணி
சேர்ந்துவிட்டது.
பாஜக அறுதிப்பெரும்பான்மை பெற்றாலும் மத்தியில் அனைத்து கூட்டணி
கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஆட்சியில் பங்கு கொடுத்து மோடி தலைமையில்
ஆட்சி செய்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் அறுதி பெரும்பான்மை இல்லாதபோதும்
ஆட்சியில் காங்கிரஸுக்கு பங்கு கொடுக்க திமுக மறுத்திருக்கிறது.
அப்படியிருக்கும்போது திமுக அமைக்கும் மெகா கூட்டணியில் பங்கெடுக்க எந்த
கட்சியும் தயாராக இருக்காது. இருந்தும், தேமுதிகவுடன் வெகுகாலம்
பேசினார்கள். அந்த ஒரே விஷயத்திலேயே அந்த கூட்டணி பேச்சுவார்த்தை
முறிந்திருக்கும் என்றே கருதுகிறேன்.
தினமலர் மக்கள் நல கூட்டணிக்கு 20 சதவீதம் வாக்குகள் என்று சொல்லி அது
திமுக அதிமுகவுக்கு புளியை கரைக்கும் என்று முதல் பக்க செய்தி
கொடுத்திருக்கிறது. அது உண்மை அல்ல.
வைகோ நடத்தும் மதிமுக கட்சி தனியாக நின்று பெற்ற வாக்கு சதவீதம் சுமார் 6
சதவீதம். அவ்வாறு தனியே நிற்கும்போது விஜயகாந்த் தனியே கட்சியை
ஆரம்பிக்கவில்லை. வைகோவுக்கு வாக்களித்தவர்களும் விஜயகாந்துக்கு
வாக்களித்தவர்களும் ஒரே டெமோகிராபிக்காக இருக்கலாம். இவர்களது வாக்கு
சதவீதத்தை கூட்டி எந்த முடிவுக்கும் வரமுடியாது.
ஏனெனில் பெரும்பாலும் இவர்கள் தனியாக நின்றதில்லை. பெரும்பாலும்
கூட்டணியில் ஒரு குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டுமே நிற்கிறார்கள். அதனால்,
அவர்கள்பெற்ற வாக்கு எண்ணிக்கையில் எது அதிமுக வாக்குகள் எது பாமக
வாக்குகள் என்று அறிவது கடினம்.
மேலும் பாஜக தனியாக நின்ற காலத்தில் சுமார் 2 சதவீத வாக்குக்களை
பெற்றிருக்கிறது. அது மோடியின் தலைமையில் பாராளுமன்ற தேர்தலில் நின்றபோது
நின்ற தொகுதிகளில் சுமார் 19 சதவீதத்தையும், மொத்த வாக்குக்களில் 5.5
சதவீதத்தையும் பெற்றது. அதே தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக மொத்த
வாக்குக்களில் 5.1 சதவீதத்தையும் நின்ற தொகுதிகளில் 15 சதவீதத்தையுமே
பெற்றது. இப்போதும் பாஜகவின் உண்மையான வாக்கு சதவீதத்தை கண்டறிவது கடினமே.
இப்போது பாஜகவும் பாமகவும் தனியாக நிற்பதால், அந்த கட்சிகளுக்கு எவ்வளவு
வாக்குகள் விழும் என்று தோராயமாக அறியலாம். ஆனால் மக்கள் நல கூட்டணிக்கு
விழும் வாக்குகளில் எவ்வளவு வாக்குகள் அந்தந்த கட்சிகளது வாக்குகள் என
அறிவது கடினம். ஆனால் திமுகவின் வாக்குகளையும் அதிமுகவின் வாக்குகளையும்
அறிவது கடினமல்ல. திமுக காங்கிரசுடன் கூட்டணி வைத்தாலும் அந்த வாக்குகள்
அனைத்துமே திமுகவின் வாக்குகளே என்கிறேன். சோனியா காங்கிரசுக்கு
தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்குக்களை விட குறைவாகவே இருக்கும்.
—
தற்போது இந்தியாவின் தேர்தல் அமைப்பு கொள்கைரீதியாகவும்,
ஜாதிரீதியாகவுமே பிளவு பட்டிருக்கிறது என்பது உண்மையென்றாலும், அதனை தாண்டி
மக்கள் சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள் என்பதை ஆம் ஆத்மி கட்சியின்
வளர்ச்சியின் மூலம் காண்கிறேன்.
அதுவும் முக்கியமாக எந்த மத பின்புலமோ, ஜாதி பின்புலமோ அல்லது கொள்கை
பின்புலமோ இல்லாமல், ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்திலும் டெல்லியிலும்
பிரம்மாண்டமான வளர்ச்சியை பெற்று வருகிறது. இது அன்றாட பிரச்னைகளை யார்
தீர்ப்பார்கள் என்ற மக்கள் எதிர்பார்ப்பின் விளைவே. இதன் அடிப்படையிலேயே
இனி அரசியல் அமையும் என்பதை முன்பே உணர்ந்து கொண்ட மோடி, பாஜகவை
இந்துத்துவா சட்டகத்திலிருந்து வெளியே கொணர்ந்து வளர்ச்சியை முன் வைத்தார்.
இதனை அடுத்த தளத்துக்கு ஆம் ஆத்மி கட்சி நகர்த்தியிருக்கிறது.
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வளர்வது அதன் மத அடையாள அரசியலிலிருந்தும்,
வரலாற்று பழிவாங்கல் அரசியலிலிருந்தும் வெளிகொணர்ந்து வளர்ச்சி, அன்றாட
பிரச்னை தீர்வு என்ற நடைமுறை அரசியலுக்கு கொண்டு வருவதன் அறிகுறியாக அதனை
வரவேற்கிறேன்.
தமிழகத்தில், திமுகவும் அதிமுகவும் ஒன்றை மற்றொன்று ஊழல்கட்சி என்று
பிரச்சாரம் செய்வதை போல நகைச்சுவை காட்சி எதுவும் இல்லை. ஈயத்தை பார்த்து
இளித்ததாம் பித்தளை என்பதாகத்தான் இருக்கிறது. பாமக, விடுதலை சிறுத்தைகள்,
புதிய தமிழகம் ஆகியவைகளால் ஒரு போதும் தங்களது ஜாதி அடையாளத்திலிருந்து
வெளியே வரமுடியாது, அப்படி வரவும் விரும்புவதில்லை. வைகோவும்,
விஜயகாந்தும் இதுவரை அதிமுகவுக்கும் திமுகவுக்கும் கூட்டணி கட்சியாக
இருந்ததும், அவர்கள் ஒரு மாற்று செயல்திட்டத்தை முன் வைக்காததும், அவர்களது
பலவீனங்களாக சொல்லலாம். வெறுமே தலைமை மாறுவது மட்டுமே செயல்திட்டம்
அல்ல. முதலமைச்சர் என்பது மாற்று செயல்திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. வைகோ
வந்தால் என்ன செய்வார் என்பதை பற்றி ஒரு தெளிவான கருத்து யாரிடமும் இல்லை.
அதே போல விஜயகாந்தை பற்றி அவர் கட்சியை ஆரம்பித்தபோது இருந்த
எதிர்பார்ப்பு, பல வருடங்களில் தேய்ந்திருக்கிறது.
ஆகவே இன்று, மாற்று செயல்திட்டத்தை தமிழ்நாட்டில் முன்வைக்க
இருக்கக்கூடிய ஒரே கட்சியாக பாஜகவை மட்டுமே பார்க்கமுடியும். ஆனால், அது
தீவிரமான அல்லது மென்மையான இந்துத்துவத்தின் சட்டகத்திலிருந்து தன்னை
வெளியேற்றிகொண்டு, வளர்ச்சிக்கான வாய்ப்பாக தன்னை முன்னிறுத்த முயற்சி
செய்யவில்லை. சமீபத்தில் இந்த தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும்,
விஜயகாந்துக்கும் கூட்டணி அழைப்பிதழை அனுப்பிவிட்டு உட்கார்ந்திருந்தபோதே
அதன் பலவீனம் நன்கு தெரிந்தது. மோடிக்கு தமிழகத்தில் நல்ல பெயர்
இருக்கிறது. அவர் சிறப்பான பிரதமராக இருக்கிறார் என்று பலர்
கருதுகிறார்கள். ஆனால், தமிழக தேர்தல் பிரதமருக்கான தேர்தல் இல்லை என்பது
அவர்களுக்கு தெரியாதா?
தமிழகத்தில் இன்று முக்கியமாக நான்கு முதலமைச்சர் வேட்பாளர்கள்
இருக்கிறார்கள். செல்வி ஜெயலலிதா, திரு மு கருணாநிதி, திரு விஜயகாந்த்,
திரு அன்புமணி ஆகியோர். பாஜக தேர்தலில் தனியாக நிற்கும் இந்த நேரத்திலும்
தனது முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. பிகாரில் தேர்தலில்
முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காததால் பாஜக தோற்றது என்று கருத்து
இருக்கிறது. அதனால் அஸ்ஸாமில் முதலமைச்சர் வேட்பாளராக திரு சபர்வால்
அவர்களை அறிவித்திருக்கிறார்கள். அங்கு பாஜக வெற்றி பெறும் என்று கருத்து
கணிப்பு கூறுகிறது.
தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி, பாஜக ஆகிய இரண்டு மட்டுமே ஓரளவுக்கு
வளர்ச்சியையும், ஊழல் ஒழிப்பையும் முன்னுக்கு வைத்தும், உண்மையான மக்கள்
பிரதிநிதியாகவும் அவர்களது குரலாகவும் செயல்பட கூடியவை. இதுவரை
தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற கட்சிகள் அந்த நம்பிக்கையை கொடுக்கவில்லை. ஜாதி
ஓட்டு, கொள்கை ஓட்டு ஆகியவை மூலம் பெறும் எம் எல் ஏ பதவிகள் துஷ்பிரயோகமே
செய்யப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் பாஜகவுக்கு ஓட்டே இல்லை. அப்படி
இருந்தால்தானே மத ஓட்டு? பாராளுமன்ற தேர்தலில் பாஜக நின்றபோதும் மத
ரீதியாக தன்னை அடையாளப்படுத்திகொள்ளாமல் வளர்ச்சியை முன்வைத்து மோடி
தேர்தலில் வாக்குக்களை கேட்டார். கணிசமான தமிழ்நாட்டினர் அந்த குரலை
செவிமடுத்தனர்.
அதனை தொடர்ந்து பாஜக தமிழகத்தில் ஒரு வளர்ச்சிக்கான
வாய்ப்பாக, மக்கள் குறைகளை கேட்கும் பிரதிநிதித்துவத்துக்கான வாய்ப்பாக
தன்னை முன்னிறுத்திகொண்டிருந்திருக்கலாம். இதுவரை இல்லை. இனியும் காலம்
கடந்துவிடவில்லை.
சின்னக்கருப்பன்