Sunday 17 April 2016

வண்ணத்துப்பூச்சி ஒன்று மயிர்க்கொட்டியாய் மாறியது

மிகப்பெரும் அச்சத்தையும் கூச்சத்தையும் தரக்கூடிய மயிர்க்கொட்டிதான் பின்னர் வண்ணத்துப் பூச்சியாக உருமாறும்.
 
 
அந்த வண்ணத்துப் பூச்சியை பார்க்கின்றவர்கள் அதன் அழகை இரசிப்பர். 
சிறுவர்கள் வண்ணத்துப் பூச்சியைப் பிடிக்க அங்கும் இங்கும் ஓடுவர். கவிஞர்கள் வண்ணத்துப் பூச்சி... வண்ணத்துப்பூச்சி... என்று பாடல் இயற்றுவர்.

ஆனால் யாருமே மயிர்க்கொட்டியை புகழ்ந்து பாடுவதில்லை. வண்ணத்துப் பூச்சியைப் பாடுகின்ற போது கூட மயிர்க்கொட்டியை நினைத்தும் பார்ப்பதில்லை. 
ஆக, மயிர்க்கொட்டியில் வண்ணத்துப்பூச்சியோ வண்ணத்துப்பூச்சியில் மயிர்க்கொட்டியோ தெரியாத அளவில் உருமாற்றங்கள் மிக அற்புதமாக நடந்தேறுகின்றன. 

எனினும் துரதிர்ஷ்டவசமாக ஒரு வண்ணத்துப்பூச்சி மயிர்க்கொட்டியாக உருமாறிக் கொண்டுள்ளது. 
ஆம், ஒரு காலத்தில் தமிழ் மக்களின் இரசனைக்குரிய தென்பகுதி வண்ணத்துப்பூச்சியாக இருந்தவர் வாசுதேவ நாணயக்கார. தமிழ் மக்களின் உரிமைசார் விடயத்தில் அவர் நியாயமான கருத்துக்களை முன்வைத்தார். இதனால் வாசுதேவ நாணயக்காரவைப் பார்க்க வேண்டும். அவரோடு பேச வேண்டும் என ஆவல்பட்ட தமிழர்கள் ஏராளம்.

இப்படியாக இருந்த வாசுதேவ நாணயக்காரவின் சமகாலப் போக்கும் தமிழ் மக்கள் தொடர்பில் அவர் முன்வைக்கும் கருத்துக்களும் அவர் மீது மிகப்பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஒரு வண்ணத்துப்பூச்சி மயிர்க் கொட்டியாக மாறிவிட்டது என்றே இப்போது தமிழ் மக்கள் கருதிக் கொள்கின்றனர்.

ஒரு மயிர்க்கொட்டி வண்ணத்துப் பூச்சியாக மாறுவது மகிழ்வுக்குரியது. மாறாக ஒரு வண்ணத்துப்பூச்சி மயிர் கொட்டியாக மாறுவது மன உளைச்சலுக்குரியது. 
ஒரு நல்ல மனிதர் என்று தமிழ் மக்கள் நம்பியிருந்த வாசுதேவ நாணயக்கார இன்று மிக மோசமான பேரினவாதியாக தன்னை அடையாளப்படுத்தி வருகின்றார்.

அதிலும் தென்பகுதியில் இருந்த பேரினவாதிகள், பேரினவாத கட்சிகள் தங்களை மாற்றி வருகின்ற நேரத்தில்; வாசுதேவ நாணயக்கார தன்னை ஒரு பேரினவாதியாகக் காட்டுவது எதற்கானது-யாருக்கு நன்றி செலுத்துவதற்கானது என்பது தெரிந்த உண்மை.

மக்களின் ஆதரவுடன் பாராளுமன்ற படியைக் கூட எட்டிப் பார்க்க முடியாமல் இருந்தவரை தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக-அமைச்சராக ஆக்கிவிட்டவருக்கு நன்றிக் கடனை எங்ஙனம் செலுத்துவது என்று தெரியாமல் இருந்த வாசுதேவ நாணயக்கார,

தமிழ் மக்களை கடுமையாக எதிர்ப்பது; தீர்வுத் திட்டங்களை வன்மையாகக் கண்டிப்பது என்பனவே தனது எஜமானுக்கு விருப்பமான செயலாக இருக்கும் என நினைத்து அவற்றை அரங்கேற்றி வருகின்றார்.
எனினும் தமிழ் மக்களைப் பற்றிக் கதைப்பதற்கோ பேசுவதற்கோ வாசுதேவநாணயக்காரவுக்கு எந்தத் தகுதியுமில்லை என்பதே உண்மை. 

தகுதியற்ற ஒருவர் எவ்வளவும் குரைத்துவிட்டுப் போகலாம். அதுபற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்ற கருத்து நியாயமானதாயினும் வாசுதேவநாணயக்காரவின் கடுமையான வார்த்தைகள் மீளவும் இனவாதத்தைத் தூண்டுவதாக இருப்பதால் அவருக்கு எதிராக, தமிழ்த் தரப்புக்கள் வழக்குத் தாக்கல் செய்து அவரின் கொட்டத்தை அடக்குவது கட்டாயமானதாகும்.       

No comments:

Post a Comment