Friday 24 June 2016

சைவ சமயத்தைத் தாக்கினால் அது எம் தமிழைக் கொன்று விடும்

எமது தமிழ் மக்களின் வாழ்வில் காத்திரம் என்பது படிப்படியாகக் குறைந்து வருகிறது.
போர்க்காலச் சூழல் எம் இனத்தின் கட்டுமானத்தை மிகமோசமாகப் பாதித்துள்ளதால் எங்கள் பண்பாடுகள், கலாசார விழுமியங்கள் என்பன கட்டறுந்து சின்னாபின்னமாகிப் போனது என்ற வேதனை நம் அனைவரிடமும் இருக்கவே செய்கிறது. 

நிலைமை இதுவாக இருக்கையில், தமிழ்  மண்ணில் மதம் பரப்பும்  பயங்கரவாதமும் மதத்தின் பெயரால் ஆக்கிரமிப்புச்செய்கின்ற நாசகாரச் செயல்களும் மெல்லமெல்ல வளர்ச்சி கண்டு எங்களிடையே மோதலை ஏற்படுத்தி விடக்கூடியதான சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றது.

இத்தகையதொரு நிலைமைக்கு யார் சந்தர்ப்பம் அளித்தாலும் அது பேரழிவைத் தரும் என்பதே உண்மை.
மண் மீட்புப் போராட்டத்தை நடத்திய விடுதலைப் புலிகள் ஒருபோதும் மதவாதத்திற்கு இடம் கொடுக்கவில்லை. விடுதலைப் புலிகளின் எந்த முகாம்களிலும் கடவுள் படங்களோ சொரூபங்களோ அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதான வரலாறு எதுவும் இல்லை.

அவர்களின் முழு நினைப்பும் எம் தமிழ்மொழியாகிய  தமிழும் தமிழினமும்தான். 
ஆனால் தமிழர் தாயகத்தில் அமைக்கப்பட்ட இராணுவ முகாம்கள் அனைத்திலும் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டிருப்பதை நாம் கண்டிருக்கிறோம். 

இராணுவத்தில் பெளத்தர்கள் மட்டுமன்றி கத்தோலிக்கர்களும் ஏனைய கிறிஸ்தவ அமைப்புகளைச் சார்ந்தவர்களும் பணியாற்றுகின்ற  இலங்கையில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களிலும் புத்தர் சிலைகள் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும். 

இராணுவ முகாம்கள் எங்காவது யேசுபிரானின் சுருவம் அல்லது திருச்சிலுவை அமைக்கப்பட்டிருப்பதை காணவே முடியாது. எனினும் சிங்களக் கத்தோலிக்கர்கள் இதனை எதிர்க்கவில்லை ஏனெனில் தமது தாய்ச் சமயம் பெளத்தம் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்-இருக்கின்றனர்.

 இலங்கை ஒரு பெளத்த சிங்கள நாடு என்று சிங்களக் கத்தோலிக்கர்களும் சொல்லுகின்ற மனநிலையைக் கொண்டிருப்பதால்தான் இன்னமும் இலங்கையில் பெளத்த சிங்கள ஆட்சி என்ற உத்வேகம் தென்பகுதியில் உரம் பெற்றுள்ளது. 

ஆனால் தமிழர்கள் என்றாலே அவர்கள் சைவம் தான் என்றிருந்த நிலைமை அந்நியர் ஆட்சியில் குலைந்து கட்டாயத்தின் அடிப்படையிலும் கல்வி, உத்தியோகம் என்ற தேவையின் காரணமாகவும் மதமாற்றம் என்பது நடந்தேறியது. 

எனினும் எதனையும் ஏற்றுக் கொள்கின்ற சைவ சமயம், கத்தோலிக்கத்தை அனுசரித்தது. கத்தோலிக்க சமயம் சார்ந்தவர்களுக்கும் தாய்ச் சமயம் சைவம்  என்பதால் நம் முன்னவர்கள் சைவத்திற்கு எத்தீங்கும் இழைக்கலாகாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

ஏனெனில் சைவ சமயத்திற்கு தீங்கு இழைக்கப்படுமாயின் அதன் விளைவு தமிழ்மொழியை பாதிப்பதாக அமையும் என்ற உண்மையை அவர்கள் உறுதியாக அறிந்திருந்தனர். 

ஆனால் இன்றைய நிலைமை அதுவன்று. எனவே இந்நிலைமை தமிழை அழித்துவிடுமே என்ற அச்சத்தை தருகிறது. 

சைவ சமயத்தவர்களும்  கத்தோலிக்கர்களும் இதர கிறிஸ்தவ அமைப்புச் சார்ந்தவர்களும் உற வினர்களாக இருக்கின்ற எங்கள் தமிழர் தாயகத்தில் நம் எல்லோருக்கும் தாய்ச் சமயமாக இருக்கக் கூடிய சைவ சமயத்தைப் பாதுகாப்பது தமிழைப் பாதுகாப்பதற்கு ஒப்பானது என்பதால், எந்த விதமான மத பேதமும் இன்றி எம் தமிழை  வளர்க்கப் பாடுபடுவோம். அதுவே இன்றைய தேவை. 

valampuri

No comments:

Post a Comment