Thursday 1 September 2016

வீதிகளில் திரண்ட தீப்பொறிகள் – அழகன் ஆறுமுகம்

குஜராத் மாநிலத்தில், இறந்த பசுவின் தோலை உரித்ததற்காக தலித் இளைஞர்களை இரும்பு பைப், இரும்புக் கம்பிகள் கொண்டு காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினார்கள் சாதிவெறியர்கள். அதைக்கண்டு அங்கு, ஒட்டுமொத்த தலித் சமூகமும் வீதிக்கு வந்து கொந்தளித்தது.

மும்பையில் மிகமுக்கிய வரலாற்றுச் சின்னமாக விளங்கிய அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அம்பேத்கர் பவன் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்ட அக்கிரமம் அரங்கேறியது. அதைக்கண்டித்து நடைபெற்ற பேரணியில் லட்சம் பேர் ஆவேசத்துடன் திரண்டார்கள்.

பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் வீதிகளில் திரண்டு தங்களின் கோபாவேசத்தை வெளிப்படுத்தியதைக் கண்டு குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் மத்தியிலும் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அச்சத்தில் ஆடிப்போயிருக்கிறது.

குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா பிராந்தியத்தில் உனா என்ற இடத்தில்தான், இறந்த பசுவின் தோலை உரித்ததற்காக, கடந்த ஜூலை 11-ம் தேதி தலித் இளைஞர்கள் நான்கு பேரை பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு பொது இடத்தில் வைத்து காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய கொடூரத்தை பசு பாதுகாப்பு கமிட்டி என்ற போர்வையில் சாதிவெறியர்கள் அரங்கேற்றினார்கள். தலித் இளைஞர்களை அரை நிர்வாணமாக்கி கார் ஒன்றில் கட்டி வைத்துத் தாக்கியதுடன், அதை செல்போனில் படம் பிடித்து, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு இதுதான் கதி என்று எச்சரிக்கும் வகையில் சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். வைரலாகப் பரவிய அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்துவிட்டுத்தான் தலித் மக்கள் வெகுண்டு எழுந்தனர். உடனடியாக, தலித் அமைப்புகள் பந்த் போராட்டத்தை அறிவித்தன. அந்தப் பகுதி முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தலித் மக்கள் வீதிகளில் இறங்கி தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். நெடுஞ்சாலைகள் மறிக்கப்பட்டன. கூட்டத்தினரை கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். சௌராஷ்டிரா பிராந்தியமே போர்க்கலம் போல காட்சியளித்தது.

பாதிக்கப்பட்ட இளைஞர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவர்கள் உடனடியாகச் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் வாயைத் திறக்கவில்லை என்று பிருந்தா காரத் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களும் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்தனர். இந்த குஜராத் கொடூரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அரங்கேற்றி, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொடூரமாகக் கொன்றுகுவித்த மோடி அரசு, தன் கோரப்பற்களின் மீதான ரத்தக்கரையைக் ‘குஜராத் மாடல்’ என்ற ஜிகினாவின் மூலம் மறைக்க முயன்றது. ‘வளர்ச்சியின் நாயகன்’ என்று கார்ப்பரேட் ஊடகங்களால் மோடி முன்னிறுத்தப்பட்டார். மோடியின் ஆட்சியில் குஜராத்தின் முன்னேற்றத்தைப் பாருங்கள் என சில பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அறிவுஜீவிகள் புளகாங்கிதம் அடைந்தார்கள். அவர்கள் சொன்னது எந்தளவுக்கு ஹம்பக் என்பது ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான், தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் தலித் மக்கள் எந்தளவுக்கு இழிநிலையில் வாழ்கிறார்கள் என்பது அம்பலப்பட்டுள்ளது.

குஜராத்தில் தலித் மக்களின் நிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார், நவ்சர்ஜன் அறக்கட்டளை என்ற அமைப்பைச் சேர்ந்தவரும், குஜராத்தில் தலித் உரிமைகளுக்காக நீண்டகாலமாகச் செயல்பட்டு வருபவருமான மார்டின் மக்வான்.

“இப்போது நடந்திருப்பது முதல் சம்பவம் அல்ல. குஜராத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல்களும், தீண்டாமைக் கொடுமைகளும் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றன. ஆனால், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே இல்லை. தங்கத் என்ற இடத்தில் 2012-ம் ஆண்டு போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 4 தலித்துகள் கொல்லப்பட்டனர். அதற்குக் காரணமானவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. தலித் மக்கள் கொலை செய்யப்படுவது, தாக்கப்படுவது போன்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது வெறும் 4 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருந்தது. பல முயற்சிகளுக்குப் பிறகு அது தற்போது 28-29 சதவிகிதம் என்ற அளவுக்கு வந்திருக்கிறது. 1569 கிராமங்களில் கள ஆய்வு நடத்தினோம். கோவிலுக்குள் நுழையத்தடை, மதிய உணவுத் திட்டத்தில் தீண்டாமை உட்பட 98 வகையான தீண்டாமை அங்கு நிலவுவது கண்டுபிடிக்கப்பட்டது.

குஜராத்தில் 90 சதவிகித கோவில்களில் தலித் மக்கள் நுழைய அனுமதி கிடையாது. எல்லா இடங்களிலும் தலித்களுக்குத் தனிச்சுடுகாடுதான். 54 சதவிகிதப் பள்ளிகளில் தலித் குழந்தைகள் தனியாகவே அமரவைக்கப்படுகிறார்கள். 2010-ம் ஆண்டு, அகமதாபாத்தில் தலித் குழந்தைகள் 1500 பேர் கழிப்பறைகளை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர்.

அதுகுறித்து, ஓய்வுபெற்ற குஜராத் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பொதுவிசாரணையில் தெரிவித்தபோது, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், குஜராத் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளிக்கூடங்களில் நிலவும் சாதிப்பாகுபாடுகளால் தலித் குழந்தைகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

அரசுத் துறைகளில் தலித் மக்களுக்கான 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பபடாமலே உள்ளன. கல்வியும்,


cow
வேலைவாய்ப்பும் இல்லாததால் துப்புரவுப்பணி, இறந்த மனிதர்களின் மற்றும் விலங்குகளின் சடலங்களை அப்புறப்படுத்துதல் போன்ற சாதி அடிப்படையான தொழில்களையே தலித் மக்கள் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் கடந்தும் செத்த மாடுகளின் தோலை உரித்து உயிர்பிழைக்கும் நிலைதான் இருக்கிறது” என்று கவலையோடு சொல்கிறார் மார்டின் மக்வான். இதனால்தான், இவ்வளவு காலம் ஒடுக்கப்பட்டு வந்த தலித் சமூகம் ஒட்டுமொத்தமாக வீதியில் திரண்டு ஆவேசத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

மும்பை நகரின் சமீபகால வரலாற்றில் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் திரண்டது இப்போதுதான். மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் பவன் இடிக்கப்பட்டதைக் கண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வெகுண்டெழுந்தனர். 1940-களில் மும்பை தாதர் பகுதியில் அம்பேத்கரால் நிலம் வாங்கிக் கட்டப்பட்டதுதான் அம்பேத்கர் பவன். அந்த இடத்தில் இருந்துதான் அம்பேத்கர் நிறைய எழுதினார். அங்குதான், பாரத் பூஷன் என்ற அச்சகம் இயங்கியது. இந்து மதத்தை விமர்சித்து அம்பேத்கர் எழுதிய புத்தகங்களை அச்சிட பிற அச்சங்கள் மறுத்தபோது, இங்குதான் அந்தப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அம்பேத்கரால் கொண்டுவரப்பட்ட 2 பத்திரிகைகள் இங்கிருந்துதான் அச்சடிக்கப்பட்டு வெளியாகின. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கட்டடத்தை அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை ஒன்று நிர்வகித்து வந்தது. அங்குதான், அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சி அலுவலகமும் செயல்பட்டு வந்தது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இந்துத்துவா வெறியர்களால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாவின் தாயாரும் சகோதரும் அம்பேத்கர் பவனில்தான் கடந்த ஏப்ரலில் புத்த மதத்தைத் தழுவினர்.

protests-ambedkar-demonstration-demolition-ambedkar-supporters-bhavan_eb1fd72a-41c4-11e6-b0f4-7520104944f672 ஆண்டுகள் பழமையான, தலித் மற்றும் முற்போக்கு செயற்பாட்டாளர்களின் களமாக விளங்கிய அம்பேத்கர் பவன், கடந்த ஜூன் மாதம் ஒரு நள்ளிரவில், அந்த அறக்கட்டளையைச் சேர்ந்த சுயநலக்காரர்கள் சிலரின் சதியால் தரைமட்டமாக்கப்பட்டது. மும்பை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு 17 மாடியில் வர்த்தக நோக்கத்துடன் ஆடம்பரமான கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்குத் திட்டமிட்டனர். சர்ச்சைக்குரிய அந்த முடிவுக்கு ஆளும் பா.ஜ.க அரசும் துணைபோனது.

அம்பேத்கர் பவன் இடிக்கப்பட்டதற்கான கண்டனத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளும், தலித் இயக்கங்களும் ஒரே குரலில் வெளிப்படுத்தின. இதுதான், ஆளும் மாநில பா.ஜ.க அரசை மட்டுமின்றி, மத்திய மோடி அரசுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஜூலை 19-ம் தேதி அன்று, 5 கி.மீ. தொலைவுக்கு கடல் போல மக்கள் திரண்டனர். அந்தக் கண்டனப் பேரணியில் அண்ணல் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் கன்னையாகுமார் உட்பட பல தலைவர்கள் பங்கேற்றனர்.

அடக்குமுறைகளைக் கண்டு அஞ்சமாட்டோம், ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஓயமாட்டோம் என்ற செய்தியை குஜராத், மகாராஷ்டிரா போராட்டங்கள் உரக்கச் சொல்லி இருக்கின்றன.

No comments:

Post a Comment