
ஒரு
முக்கியமான பிரச்சனை மக்களின் பார்வைக்கு வருகிறபோதெல்லாம், அதிலிருந்து
தப்பித்துக்கொள்ள வேறு ஏதாவது பிரச்சனையைக் கெளப்புவது அமெரிக்க
ஆட்சியாளர்களுக்கு கைவந்தகலை. அப்படியான திசைதிருப்பலை செய்வதற்கென்றே
சிறப்பு நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு “SpinDoctors” என்று பெயர். ஒவ்வொரு
முறையும் அமெரிக்காவில் தேர்தல் வருகிறபோதும், “தீவிர்வாதம்” என்கிற
வார்த்தை எதற்காக ஊடகங்களில் அதிகமுறை பயன்படுத்தப்படுகிறது?
1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த மோனிகா லீவின்ஸ்கி என்கிற
பெண்ணுடன் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தகாதமுறையில் உறவுகொண்டார்
என்று அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் மீது குற்றச்சாட்டு
எழுந்தது. அக்குற்றச்சாட்டுகளை அவர் தொடர்ந்து மருத்துவந்தார். கிளிண்டனின்
மனைவியான ஹிலாரி கிளிண்டனும் தன்னுடைய கணவனுக்கு ஆதரவாகவே பேசிவந்தார்.
ஒரு அப்பாவி மேல் இப்படி பழி சுமத்துகிறார்களே என்கிற அளவில் மக்களிடம்
பில் கிளிண்டன் செல்வாக்குடன்தான் இருந்தார். ஆனால் நாளாக நாளாக அவருக்கு
எதிரான சாட்சியங்களும் ஆதாரங்களும் கூடிக்கொண்டே போக, ஒரு கட்டத்திற்குமேல்
உண்மையை சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு பில் கிளிண்டன் தள்ளப்பட்டார்.
அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி நீதிபதியிடம், “நான் மோனிகா லீவின்ஸ்கியுடன் முறையற்ற உடலுறவு கொண்டிருந்தேன்”
என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அன்று மாலையே வானொலியிலும்
தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டார் பில் கிளிண்டன். ஆகஸ்ட் 17 முதல்
மக்களிடத்தில் கிளிண்டனின் செல்வாக்கு தடாலடியாக குறையத்துவங்கியது.
செய்த
தவறுக்கு அதிபராகவே இருந்தாலும் அதற்கேற்ற தண்டனையைப் பெறுவதுதானே
முறையானது. ஆனால் பில் கிளிண்டன் அதிபராக இருப்பது அமெரிக்காவிற்கு அல்லவா.
அதனால் சரிந்துகொண்டிருக்கும் தன்னுடைய மக்கள் செல்வாக்கை
உயர்த்திப்பிடிக்க ஒரு யுத்தி கையாளப்பட்டது. அதுதான் திசைதிருப்பல்.
ஆகஸ்ட் 17 ஆம் தேதியில் உண்மையை ஒப்புக்கொண்டதன் பின்னர், உடனடியாகவே
சூடான் என்கிற நாட்டில் அல்கொய்தா பதுங்கியிருப்பதாகவும், அந்நாட்டிலிருந்த
அல்-ஷிஃபா என்கிற மிகப்பெரிய மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் இரசாயன
வெடிகுண்டுகள் தயாரிப்பதாகவும் செயதிகள் பரப்பப்பட்டன. அல்-ஷிஃபா வை
விட்டுவைத்தால், இரசாயன குண்டுகள் வீசி உலகையே அல்கொய்தா அழித்துவிடும்
என்று அமெரிக்க ஊடகங்கள் அச்சுறுத்தின. சூடானுக்கோ இவையெல்லாம்
அதிர்ச்சிகரமான செயதியாக இருந்தது.
சூடானின் ஒட்டுமொத்த மருந்து தேவையின் 50%
அளவிற்கு அல்-ஷிஃபா தொழிற்சாலையிலிருந்துதான் தயாராகிறது. அங்கே இரசாயன
குண்டுகள் தயாரிக்கிறார்கள் என்பதை அமெரிக்கா எதை வைத்து முடிவுசெய்தது
என்று சூடான் அரசு கேட்டது. ஆனால், அமெரிக்காவோ அதற்கு சரியான
பதிலளிக்கவில்லை. அல்-ஷிஃபாநிறுவனத்திற்கு சற்று தொலைவில் மண்ணெடுத்து
பரிசோதித்ததாகவும் அதில் எம்ப்டா எனப்படுகிற “ஓ-ஈத்தைல்
மெத்தைல்போஸ்போனோதியோக்” என்கிற அமிலத்தின் கலப்பு இருப்பதாகவும், அது
தடைசெய்யப்பட்ட மருந்து எனவும் அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் உண்மையிலேயே
சர்வதேச சட்டங்களின்படி எம்ப்டா தடைசெய்யப்பட்ட அமிலமல்ல. அதோடு
அல்-ஷிஃபாவில் அது தயாரிக்கப்பட்டதாகவோ பயன்படுத்தப்பட்டதாகவோ எந்த
ஆதாரங்களும் இல்லை. இதனை எதையும் அமெரிக்கா செவிமடுக்கவில்லை. ஆகஸ்ட் மாதம்
20ஆம் தேதி (கிளிண்டன் தன்னுடைய தவறை ஒப்புக்கொண்ட மூன்றாவது நாளில்)
ஆளில்லாத ஏவுகணைகள் வீசி அல்-ஷிஃபா மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை தாக்கி
அழித்தது அமெரிக்கா.
அல்கொய்தாவின் திட்டத்தை
முறியடித்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தொடர்ந்து செயதிகள் சொல்லி,
அமெரிக்க அதிபரின் செல்வாக்கை உயர்த்த முயற்சித்தன. இறுதியில் வெற்றியும்
கண்டன. ஆனால் எவ்விதத் தொடர்புமே இல்லாத சூடான்தான் இதற்கு மிகப்பெரிய
விலையினை கொடுக்கவேண்டியிருந்தது. ஏவுகணைத் தாக்குதலில் முழுவதும்
சேதமடைந்த மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையை புனரமைக்காமல் அப்படியே
விட்டுவைத்தது சூடான் அரசு. அமெரிக்கா சொன்னபடி, இராசயன வெடிகுண்டு
தயாரித்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கிறதாவென பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று
வெளிப்படையாக அறிவித்தது சூடான் அரசு. ஆனால், அமெரிக்க அரசோ அதற்கெல்லாம்
தயாராக இல்லை. இத்தாக்குதலுக்கு அமெரிக்கா மன்னிப்பாவது கோரவேண்டுமென்று
சூடான் அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், தான் செய்தது சரிதான் என்றும்
மறுவிசாரணைக்கோ மன்னிப்பிற்கோ இடமில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது
அமெரிக்கா.
ஐ.நா.வோ அல்லது சர்வதேச விசாரணைக்கு
குழுவொன்றோ சூடான் வந்து விசாரிக்கவேண்டும் என்று மடியில் கனமில்லாத
சூடான், ஐ.நா.சபையின் பாதுகாப்புக்கு கவுன்சில் வரை சென்று முறையிட்டது
சூடான். ஆனால் எவ்வித விசாரணையும் இதில் நடத்தக்கூடாது என்றும் அமெரிக்கா
சொன்னால் சொன்னதுதான் என்றும் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி
எல்லாவற்றையும் தடுத்தது அமெரிக்கா. இன்னும் ஒரு படிமேலே போய்,
முற்றிலும்
சேதமடைந்திருக்கும் அல்-ஷிஃபா மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை சீரமைக்க
எந்த நாடும் உதவக்கூடாது என்றும் பல நாடுகளை நிர்ப்பந்தித்தது. அதனால்தான்
மருந்து நிறுவனத்தை சரிசெய்வதற்கு சூடான் விடுத்த வேண்டுகோளையும் பிரிட்டன்
நிராகரித்தது. ஏற்கனவே ஏழை நாடான சூடானுக்கு, தன்னுடைய உள்நாட்டு மருந்து
உற்பத்தியில் 50%த்திற்கும் மேற்பட்ட அளவிற்கு மருந்து தயாரித்துக்
கொண்டிருந்த அல்-ஷிஃபா நிறுவனம் அழிக்கப்பட்ட பின்னர் பெரியளவிற்கு
இழப்பினை சந்திக்கவேண்டியிருந்தது. அடுத்த சில ஆண்டுகளில்
இலட்சக்கணக்கானோர் மருந்து பற்றாக்குறையினால் மட்டுமே உயிரிழந்தனர்.
அவர்கள் வெறுமனே மரணித்தார்கள் என்று சொல்வதைவிட, ஆகஸ்ட் 20 ஆம் தேதி
அமெரிக்கா வீசிய ஏவுகணைகளால் மறைமுகமாகக் கொல்லப்பட்டார்கள் என்றுதான்
சொல்லவேண்டும்.

“Wag the dog” திரைப்படம்:
அமெரிக்க அதிபர் தேர்தல்
நெருங்கிக்கொண்டிருக்கிறது. அப்போதைய அதிபரே மீண்டும் இரண்டாவது முறையாக
போட்டியில் களமிறங்குகிறார். அவருக்கும் எதிர்க்கட்சி வேட்பாளருக்கும்
கடுமையான போட்டி நிலவுகிறது.
“பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் குதிரையைபாதியிலேயே நிறுத்தவேண்டாமே!தொடர்ந்து ஓடவைப்போமே!தற்போதைய அதிபருக்கவே வாக்களியுங்கள்”
என்பன போன்ற விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தன.

அதிபர் குறித்தே எதிர்க்கட்சிகளும்
ஊடகங்களும் மக்களும் பேசிக்கொண்டேயிருப்பதை, எப்படியாவது
திசைதிருப்பவேண்டும். அப்படிச்செய்வதை யாரும் கண்டுபிடித்துவிடவும் கூடாது
என்பதில் கவனமாகத் திட்டமிடுகிறார் பிரேன்.
“செயற்கையாக ஒரு போர்ப்பதற்றத்தை உருவாக்கினால், பயத்தில் அமெரிக்க மக்கள் உண்மையான பிரச்சனையை மறந்துவிடுவார்கள். இது போன்று திசை திருப்புவது நமக்கு ஒன்றும் புதிதில்லை. ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்தபோது, லெபனானில் நம்முடைய இராணுவ படையினர் தங்கியிருந்த வீடுகள் தாக்கப்பட்டு 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அமெரிக்க மக்களிடைய செல்வாக்கை இழந்துவிடக்கூடாது என்பதற்காக, அடுத்த இரண்டே நாளில் கிரானடா என்கிற நாட்டுடன் அமெரிக்கா தேவையேயில்லாமல் போருக்கு சென்றது. ஊடகங்கள் அனைத்தும் அந்த செய்திக்கு தாவியது. அதேபோலத்தான் இதுவும்”
என்கிறார் பிரேன்.
“தேவையே இல்லாமல் எதற்கு இப்போது ஒரு போர்? போரெல்லாம் நமக்கு இப்போது கட்டுப்படியாகாது”
என்கிறார் அதிபரின் உதவியாளர்.
“போருக்கெல்லாம் நாம் போகப்போவதில்லை. போர் வருவதைப்போன்ற தோற்றத்தைத்தான் உருவாக்கப்போகிறோம்”
என்கிறார் பிரேன்.
பிரேனும் அதிபரின் உதவியாளரான அமெசும் லாஸ் ஏஞ்சல்சுக்கு சென்று, ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான ஸ்டான்லி மோட்ஸை சந்திக்கின்றனர்.
அல்பேனியா என்கிற நாட்டில் தீவிரவாதிகள்
அட்டூழியம் செய்வதாகவும் அவர்கள் மீது போர்தொடுத்து அமெரிக்காதான்
அம்மக்களை காப்பாற்றவேண்டும் என்று அமெரிக்க மக்களை நம்பவைக்கும்படி ஒரு
வீடியோ தயாரித்துத் தரச்சொல்கிறார் பிரேன்.
ஹாலிவுட் தயாரிப்பாளர்: “ஏன் குறிப்பாக அல்பேனியா?”
பிரேன்: “ஏன் அல்பேனியாவாக இருக்கக்கூடாது?”
ஹாலிவுட் தயாரிப்பாளர்: “ஒரு நாட்டின் மீது குற்றம் சொல்கிறோமென்றால் ஏதாவது காரணம் இருக்கனுமில்லையா? கேள்வி கேட்கமாட்டார்களா?”
பிரேன்: “பொதுமக்கள்.”
ஹாலிவுட் தயாரிப்பாளர்:
“பொதுமக்களா? அவங்களுக்கு தெரியவாப் போகுது? நம்முடைய முன்னாள் அதிபர்
ஜான்.எஃப்.கென்னடியை யார் கொன்றார்கள்? யாரோ குடிகார ஓட்டுனரால்
கொல்லப்பட்டார்னு அடுத்தநாளே சொல்லப்பட்டது. இறுதியில் என்னாச்சு? யாரோ
ஒருத்தரை கைதுசெய்தார்கள். அவனையே இன்னொருத்தன் கொலை செய்திட்டான்.
கடைசிவரையும் கென்னடியைக் கொன்றவன் யாருன்னே நமக்கு தெரியாது.”
அல்பேனியா தயாரிப்பாளர் மோட்சை
சம்மதிக்கவைக்கிறார். தயாரிப்பாளர் உடனே திரைக்கதை குறித்து பல யோசனைகள்
தெரிவிக்கிறார். அல்பேனிய தீவிரவாதிகள் கனடா வழியாக சூட்கேஸ் வெடிகுண்டுகளை
அமெரிக்காவிற்கு கொண்டுவந்து வெடிக்கவைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்
என்று கற்பனையை விரித்துத் திரைக்கதையமைக்கிறார். அல்பேனிய தோற்றம் கொண்ட
ஒரு துணைநடிகையை அழைத்துவந்து ப்ளூ மேட்டின் முன்னே கையில் எதோ ஒரு பொருளை
வைத்துக்கொண்டு ஓடிவரும்படி சொல்கிறார் தயாரிப்பாளர். அக்காட்சியினை
படம்பிடித்து, அப்பெண் தன்னுடைய கையில் ஒரு பூனையை எடுத்துக்கொண்டு
ஓடிவருவதாக கிராபிக்சில் மாற்றியமைக்கின்றனர். அப்பெண்ணின் பின்னனியில்,
அல்பேனியாவின் குடிசை இருப்பது போலவும், அது எரிந்துகொண்டிருப்பது போலவும்,
தீவிரவாதிகள் குண்டுவீசியதாலேயே அவள் தப்பித்து ஓடுவதாகவும், பின்னனியில்
குண்டுவெடுப்பு சத்தம் மற்றும் அப்பெண்ணின் அழுகுரல் என எல்லாமுமாக
இணைத்து, ஒரு வீடியோவை தயாரித்துமுடிக்கின்றனர்.
அல்பேனிய தீவிரவாதம் குறித்து போலியாகத்
தயாரிக்கப்பட்ட வீடியோவினை அனைத்துத் தொலைக்காட்சிகளுக்கும் கிடைக்கும்படி
செய்கின்றனர். அதனைத் தொடர்ந்து அதிபரின் பாலியல் குற்றத்தைலிருந்து தாவி,
ஒட்டுமொத்த ஊடகங்களும் அல்பேனியத் தீவிரவாதம் குறித்தே பேச ஆரம்பித்தன.
அல்பேனியர்களின் பேட்டிகள், விவாத நிகழ்ச்சிகள், அதிபரின் அனுதாபப் பேச்சு
என்று அல்பேனியா தான் முக்கிய பேசுபொருளாக ஆனது. எல்லாம் திட்டமிட்டபடி
செல்வதாக நினைத்துக்கொண்டிருந்த பிரேனுக்கு, சிஐஏ மூலமாக பிரச்சனை வந்தது.
அல்பேனியாவில் போரே இல்லை என்று சிஐஏ வுக்கு தெரியாமலா இருக்கும். அவர்கள்
பிரேனை மடக்கி இதுகுறித்து கேட்கின்றனர்.
“போரே இல்லையென்றால் என்ன? 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் வியட்னாமிலும் மத்தியகிழக்கிலும் போரை நடத்தவில்லையா? அது உங்கள் வேலை, இது என்னுடைய வேலை”
என்கிறார் பிரேன். சிஐஏவோ, லாபியிஸ்டுகளோ,
பிரச்சார ஏஜென்டுகளோ எல்லோரும் ஒரே நோக்கத்திற்காகத்தானே வேலை
செய்கிறார்கள். அதனால் இதனை பெரிய பிரச்சனையாக்காமல் பிரேனை
விட்டுவிடுகிறது சிஐஏ. இதுவரை செய்த பிரச்சாரம் குறித்தெல்லாம் விசாரணை
நடத்தப்படமாட்டாது என்றாலும், அல்பேனியப் போர் குறித்த் பிரச்சாரத்தை
இத்தோடுமுடித்துவிட சிஐஏ தீர்மானித்தது. அதனால், அல்பேனியப் போரை சிஐஏ
தலையிட்டு முடித்துவிட்டதாக தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்பட்டது.
அல்பேனியத் தீவிரவாதம், போர் குறித்து
விவாதிப்பதை ஊடகங்கள் நிறுத்திக்கொண்டன. மீண்டும் அதிபரின் பாலியல்
குற்றத்தைக் கையிலெடுத்தன. அதிபர் தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள
நிலையில், அதிபரின் செல்வாக்கை மீட்டெடுப்பது எப்படி என்று
குழம்பிக்கொண்டிருந்தார் பிரேன். ஹாலிவுட் தயாரிப்பாளர் மொட்சுக்கோ இது
கௌரவப் பிரச்சனையாக மாறியது.
“நான் உருவாக்கிய போரை முடித்துவைக்க சிஐஏ வுக்கு என்ன அதிகாரம் இருக்கு? நான் தான் இந்த போரின் தயாரிப்பாளர். அதனால் இதனை இப்படியே முடியவிடமாட்டேன். முதலில் போரை உருவாக்கினோம். இப்போது அதற்கான நாயகனை உருவாக்குவோம். நாயகன் இல்லாத போரா?”
என்கிறார் தயாரிப்பாளர் மோட்ஸ்.
அல்பேனியத் தீவிரவாதிகள் கனடா வழியாக
சூட்கேஸ் பாமை அமெரிக்காவிற்குள் கொண்டுவந்து வெடிக்கவிருப்பதாக முன்னர்
கதை உருவாக்கியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக அமெரிக்க படையினர் சில கனடா
சென்று தீவிரவாதிகளுடன் சண்டையிட்டதாகவும், அவர்களில் ஒரு அமெரிக்க வீரரை
தீவிரவாதிகள் பிடித்துவிட்டதாகவும், அப்படிப்பட்ட நாயகனை மக்கள்
மறந்துவிட்டார்களே என்று சொல்லி மக்களின் உணர்வைத் தூண்டினால், எல்லாம்
மாறும் என்று கருதினார் மோட்ஸ்.
“பழைய ஷூவை தூக்கி எறிவதைப்போல தேசத்தை ஹீரோவை மக்கள் மறந்துவிட்டார்களே”
என்று ஒரு பாடலையும் இசையமைத்து
குறுந்தகடாகவும் தொலைக்காட்சிகளிலும் வெளியிடுகின்றனன். அது
மிகப்பெரியளவிற்கு மக்களிடம் வரவேற்பைப் பெறுகிறது. பாடலில் இடம்பெறும்
“ஷூ” என்கிற வார்த்தை முக்கியமான இடத்தை மக்கள் மனதில் பிடிக்கிறது. அதனால்
ஷூ என்று தொடங்கும் பெயரையுடைய பழைய இராணுவ வீரர் யாராவது கிடைப்பார்களா
என்று பென்டகனிடம் விசாரிக்கிறார் பிரேன். “வில்லியம் ஷூமன்”
என்கிற பெயரைத் தருகின்றது பென்டகன். பலத்த காயங்களோடு இருக்கும் ஷூமனின்
புகைப்படமும் ஊடகங்களுக்கு தரப்படுகிறது. நாடே ஷூமனை ஹீராவாக
ஏற்றுக்கொள்ளத்துவங்கிவிட்டது. எங்கு திரும்பினாலும், “ஷூமன்” “ஷூமன்”
என்று மக்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.
“ஷூமன்” என்கிற வார்த்தைக்கு
காப்புரிமை எல்லாம் வாங்கி, பெரும்தொகைக்கு பல பெரிய நிறுவனங்களுக்கு
வழங்கப்பட்டது. ஷூமனுக்கு ஆதரவாகவும் அல்பேனியாவுக்கு எதிராகவும்
வாசகங்களுடன் டீ-சர்ட்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனைக்குவந்துவிட்டன.
பழைய ஷூக்களை பொது இடங்களில் இருக்கும் மரங்களின் கிளைகளில் தொங்கவிடும்
பழக்கத்தையும் துவங்கிவிட்டனர். எந்த மரத்தைப்பார்த்தாலும் ஒன்றிரண்டு
ஷூக்களாவது தொங்கிக்கொண்டிருந்தன. தங்களது தேசப்பற்றை பல்வேறு விதங்களில்
அமெரிக்க மக்கள் வெளிக்காட்டத்துவங்கினர்.
ஷூமனை மீட்டுவரவேண்டும் என்று மக்கள்
மத்தியில் கோரிக்கை எழ ஆரம்பித்துவிட்டது. பென்டகனுடன் பேசி, ஷூமனை தயார்
செய்து ஒரு மறைமுகமான இடத்திற்கு அழைத்துவரச் சொல்கிறார் பிரேன்.
அங்கிருந்து தனிவிமானத்தில் ஷூமனை வாஷிங்க்டனுக்கு கொண்டுவந்து மக்கள்
மத்தியில் நிறுத்தினால், அது பெரியளவில் வரவேற்பைப் பெறும் என்பது பிரேனின்
கணிப்பு. அதன்படி, பென்டகனிடமிருந்து ஷூமனைப் பெறுகிறார்கள் பிரேமனும்,
மோட்சும், அமெசும். ஆனால், அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஷூமன்
என்பவர் ஒரு முன்னாள் இராணுவவீரரெல்லாம் இல்லை. ஒரு கிருத்துவ
கன்னியாஸ்திரியை பாலியல் வன்புணர்வு செய்ததால் கடந்த 12 ஆண்டுகளாக சிறையில்
இருந்துவரும் ஒரு சிறைக்கைதிதான் ஷூமன். ஒரு குற்றவாளியை தேசிய
நாயகனாக்கிவிட்டோம் என்பது அப்போதுதான் பிரேனுக்கு தெரிந்தது. இருப்பினும்
வாஷிங்க்டன் நோக்கி தனிவிமானம் புறப்பட்டது.
விமானம் வரும்வழியில் விபத்துக்குள்ளாகி
ஒரு தொலைதூர கிராமத்தில் விழகிறது. ஷூமன் உள்ளிட்ட அனைவரும்
உயிர்பிழைக்கின்றனர். தப்பித்து வரும்வழியில் அக்கிராமத்தின் ஒரு
விவசாயியின் மகளை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சிக்கிறான் ஷூமன். அதனைத்
தடுக்க அப்பெண்ணின் தந்தை, ஷூமனை துப்பாக்கியால் சுட்டுக்கொல்கிறார். ஷூமனை
இழந்துவிட்டோமே, இனி என்ன செய்வது என்று பிரேனும் அமெசும்
கவலைகொள்கின்றனர். ஆனால், ஹாலிவுட் தயாரிப்பாளர் மோட்சோ தன்னுடைய
திரைக்கதையை கொஞ்சம் மாற்றம் செய்கிறார். அல்பேனிய தீவிரவாதிகளால்
கடுமையாகத் தாக்கப்பட்டதால் ஷூமன் இறந்துவிட்டதாகச் சொன்னால், மக்களின்
தேசபக்தி உச்சிக்குப்போகும் என்கிறார். வெற்றியுடன் திரும்பிவரும் வரும்
போர்வீரனைவிட, உயிர்த்தியாகத்தை செய்பவனைத்தான் மக்கள் அதிகமாகக்
கொண்டாடுவார்கள்.
ஷூமனின் உடல் வாஷிங்க்டன்
கொண்டுவரப்படுகிறது. அதற்கு அரச மரியாதை கொடுக்கப்படுகிறது.
கருத்துக்கணிப்புகளில் அதிபருக்கு ஆதரவான நிலை ஏற்படுகிறது. 89% சதவிகித
மக்கள் தற்போதைய அதிபருக்கே வாக்களிப்போம் என்று கருத்துக்கணிப்பில்
தெரிவிக்கின்றனர். “அதிபரின் செல்வாக்கு உயர்ந்ததற்கு எது காரணம்?” என்று
தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. ஒரு விவாதத்தில், பல
அரசியல் வல்லுனர்களும், “தொலைக்காட்சிகளில் வந்த அதிபரின் விளம்பரங்கள்தான்
அவரின் செல்வாக்கு உயர்ந்ததற்குக் காரணம்” என்கின்றனர். தொலைக்காட்சி
விவாதத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் மோட்சுக்கு கடுமையாகக் கோபம்
வருகிறது.
“நான் எவ்வளவு முயற்சி செய்து இவ்வளவையும் செய்து அதிபரின் செல்வாக்கை உயர்த்தியிருக்கிறேன். ஆனால் ஒன்றுக்கும் உதவாத ‘பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் குதிரையை பாதியிலேயே மாற்றாதீர்கள்’ என்ற விளம்பரத்திற்கு அந்த பெருமையெல்லாம் போகிறதே. இதை நான்விடமாட்டேன்.”
என்கிறார் மோட்ஸ்.
நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியான அதற்கு
நேயர்களும் தொலைபேசியில் அழைக்கலாம் என்று சொல்லி ஒரு எண்ணை
தெரிவிக்கிறார்கள் தொலைக்காட்சியில். அந்த எண்ணுக்கு அழைத்து, தன்னுடைய
உழைப்பினால்தான் அதிபருக்கு மக்களின் செல்வாக்கு கிடைத்திருப்பதாக
சொல்லப்போவதாகச் சொல்கிறார் மோட்ஸ்.
“ஒட்டுமொத்த மக்களும் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றை நான்தான் உருவாக்கினேன் என்பதில் எனக்கு பெருமை இருக்காதா? அதற்கு நான் உரிமை கோரக்கூடாதா?”
என்று கேட்கிறார் மோட்ஸ்.
ஆனால் அப்படிச் செய்ய மோட்சுக்கு
உரிமையில்லை என்றும், இந்த ஒட்டுமொத்த திட்டமும் காலங்காலமாக மறைமுகமாகவே
வைக்கப்படவேண்டும் என்கிறார். இதனை மீறி எதையாவது செய்யமுற்பட்டால்,
உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று மோட்சை எச்சரிக்கிறார்.
பிரேன் சொல்வதைக் கேட்காமல், ஷூமனின் உடல்
வைக்கப்பட்டிருக்கும் இடத்தைநோக்கி வேகமாக நடக்கிறார் மோட்ஸ். அவரை
பாதியிலேயே மடக்கி ஒரு காரில் ஏற்றிக்கொண்டு செல்கின்றனர் காவல்துறையினர்.
தேசியநாயகனாக மாற்றப்பட்ட ஷூமனின் இறுதி ஊர்வலம், அமெரிக்க மக்களின் கண்ணீரோடு நடக்கிறது.
மறுநாள் தொலைக்காட்சிகளில் இரண்டு செய்திகள் சொல்லப்படுகின்றன:
ஒன்று: “பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரான
ஸ்டான்லி மோட்ஸ், கடற்கரையில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும்போது மாரடைப்பால்
மரணமடைந்தார். அவருக்கு வயது 62.”
இரண்டு: “ஷூமனின் கொலைக்கும்
அல்பேனியாவில் நடக்கும் தீவிரவாதச் செயலுக்கும் அல்பேனியாவிலிருந்து
இயங்கும் ‘அல்பேனிய ஒற்றுமை’ என்கிற தீவிரவாத அமைப்பு
பொருப்பேற்றிருக்கிறது. அமெரிக்காவின் படைகள் விரைவில் அல்பேனியாவுக்கு
செல்லும் என்று அமெரிக்காவின் அயல்துறை செயலாளர் அறிவித்திருக்கிறார்”
“Wag the dog” என்கிற இத்திரைப்படம் வெளியாகிய அடுத்த ஒரே மாதத்தில் அதிபர் பில் கிளிண்டன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வெளியானது. அதனை திசைதிருப்பும்விதமாகத்தான் சூடானின் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை குண்டு வைத்து தகர்த்தது அமெரிக்கா. பொய்ப்பிரச்சாரங்களால் தான் அமெரிக்காவின் அரசியலே ஓடிக்கொண்டிருக்கிறத என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும். அடுத்தமுறை அமெரிக்க அரசோ, சிஐஏவோ, பென்டகனோ, அமெரிக்க ஊடகங்களோ தீவிரவாதம் குறித்து எதைச்சொன்னாலும் உலகின் குடிமக்களாகிய நாம் கவனமாக இருக்கவேண்டும்.
No comments:
Post a Comment