Sunday, 15 October 2017

ஓவியாவுக்கு ரொம்ப பிடித்தவர் யார்? பிடிக்காதவர் யார்?

பொதுவாக எந்த நடிகர், நடிகையிடம் பேட்டி எடுத்தாலும் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? நடிகை யார்? என்ற கேள்வி இருக்காமல் அந்த பேட்டி முழுமை அடையாது. அதேபோல் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஓவியாவின் பேட்டியிலும் இந்த கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு அவர் கூறிய பதில் ஓவியா உண்மையிலேயே வித்தியாசமானவர் தான் என்பதை உறுதி செய்தது. அவர் கூறிய பதில் இதுதான்:

https://tamil-cinemaz.blogspot.co.uk/2017/10/blog-post_10.html

வெவ்வேறு அளவீட்டுக் கருவிகளை பயன்படுத்த வேண்டும்

தமிழ் மக்களின் வாழ்வியலைப் பொறுத்த வரை அவர்களின் உரிமைக்கான அகிம்சைப் போராட்டம் என்பது ஒருபோதும் ஓயப்போவ தில்லை என்று அறுதியிட்டுக் கூறமுடியும்.

இவ்வாறு கூறுவதற்குக் காரணம் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கான உரிமை களை, அதிகாரங்களை மனப்பூர்வமாக வழங்க மாட்டார்கள் என்பதுதான்.
ஆகையால் இலங்கை அரசுகளிடம் இரு ந்து எதைப்பெறுவதாக இருந்தாலும் அதற் காக 

அகிம்சைப் போராட்டத்தை நடத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இதில் ஒன்றுதான் நேற்று முன்தினம் வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற பூரண ஹர்த்தாலாகும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசாங்கம் கொண்டிருக்கக்கூடிய மெத்தனப் போக்கு கைதிகளின் உயிருக்கும் வாழ்வுக்கும் ஆபத்தாகி வருகிறது.

எனவே இது விடயத்தில் தமிழ் மக்கள் தங்களின் மனநிலையை வெளிப்படுத்தியுள்ள னர். இதற்கு ஆட்சியாளர்கள் உரியமதிப்பை அளிப்பார்களா? என்பதற்கு காலம்தான் பதிலளிக்க வேண்டும்.

எனினும் உலக நாடுகளின் அவதானத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் முதன் மைப் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதை மட்டுமே நாம் இங்கு கூறிக்கொள்ளலாம்.

இவை ஒருபுறம் இருக்க, நாம் முன்னெடுக்கும் போராட்டம் என்பதும் பொருத்தப்பாடாகவும் ஏற்புடையதாகவும் அமைவதை உறுதிசெய்வதும் தமிழ் சமூகத்தின் தலையாய கடமையாகும்.

அவ்வாறான பொருத்தப்பாட்டுக்கு நாம் இடம்கொடுக்காவிட்டால், அதன்விளைவு எதி ரானதாக அமைவதுடன் அத்தகைய போராட்டங்களை மக்கள் நிராகரிக்கத் தொடங்குவர்.
அதேவேளை போராட்ட முறைமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவது கட்டாய மானதாகும். 

ஒரே அளவீட்டுக் கருவி கொண்டு எல்லாப் பொருட்களினதும் அளவீடுகளைச் செய்வது எந்தளவுக்கு பொருத்தம் இல்லையோ அதே போன்று ஒரு போராட்ட வழிமுறையை எல்லா வற்றுக்கும் பிரயோகிப்பதும் பொருத்தமற்றதாகும்.

எனவே நடைபெறும் நிகழ்வு, நிகழ்வின் ஏற் பாட்டாளர்கள், அதன் பற்றுநர்கள், விருந்தினர் களாகக் கலந்து கொள்பவர்கள், அந்த நிகழ்வால் நம் தமிழ் சமூகத்துக்கு கிடைக்கக்கூடிய சாதக பாதகத் தன்மைகள் எனப் பல விடயங்களையும் ஆய்ந்தறிந்து போராட்ட வழிமுறை களைத் தெரிவு செய்ய வேண்டும்.

சில இடங்களில் எதிர்ப்புக்குரியவரை வர வேற்று ஆதரவு தெரிவித்து நம் இலக்கை நிறைவேற்றுவது கூட ஒரு வகையான போரா ட்ட தந்திரோபாயம் எனலாம்.
இதுதவிர, ஒரு போராட்ட வழிமுறைகளை நாம் மேற்கொள்ளும்போது அது எதிரான விளைவைத் தந்துவிடாமல் பார்த்துக் கொள்வதும் கட்டாயமானதாகும்.

அதாவது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்­வுக்குக் காட்ட முடியாத போராட்டத்தை ஜனாதிபதி மைத்திரிக்கு காட்ட முற்படும்போது அது போராட்டம் நடத்தும் இனக் குழுமத்துக் குள்ளேயே விமர்சனத்தை ஏற்படுத்தும் என்பதுடன் சம்பந்தப்பட்ட தலைவரும் நமக்கு எதி ரான சில தீர்மானங்களை எடுத்துவிடலாம்.
எனவே இது விடயத்திலும் கவனம் செலு த்தி போராட்ட அடையாளங்களைச் சரிபார்த்து அதனை நமக்குச் சாதகமாக்குவது மிக மிக அவசியமாகும். 

valampurii

'மெர்சல்' கதை என்ன ?

'மெர்சல்' கதை என்ன ?https://tamil-cinemaz.blogspot.co.uk/2017/10/blog-post_15.html

‘’லிப் லாக் கிஸ் எல்லாம் எனக்கு சாதாரணம்’’ – ஆண்ட்ரியா ‘இச்’https://tamil-cinemaz.blogspot.co.uk/2017/10/blog-post.htmlMonday, 9 October 2017

இன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் கொள்வார்களா?

1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள். பலாலி இராணுவமுகாமில் இருந்து முன்னோக்கி நகர முயன்ற சிறிலங்கா படையினரைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் எதிர்த்தாக்குதலை விடுதலைப்புலிகள் செய்கின்றனர்.அவர்களில் ஒருவராக முன்னரங்கில் விடுதலைப் புலிகள் போராளிகளில் ஒருவராகத் திலீபன் நிற்கிறான். அப்போது அவன் விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட அரசியல் பொறுப்பாளனாக இருந்தான். அப்போது கிட்டு விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்டத் தளபதியாக இருந்தார். அக் காலகட்டத்தில் தமிழீழ அரசியற் பொறுப்பாளர் என்று தேசந்தழுவிய பொறுப்புநிலை விடுதலைப்புலிகள் அமைப்பில் உருவாக்கப்படவில்லை. ஒவ்வொரு துறைப் பொறுப்பாளர்களும் அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு கீழேயே செயற்பட வேண்டும். திலீபன் தளபதி கிட்டுவின் பொறுப்பின் கீழேயே இயங்கி வந்தான்.
பலாலியில் வெளியேறிய இராணுவத்துடனான சமரில் திலீபன் படுகாயமடைகிறான். வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறான். மருத்துவர்கள் அவனது உயிரைக் காப்பாற்றுவதற்கான அறுவைச் சிகிச்சை செய்கிறார்கள். அவனது குடற்பகுதி கடும் சேதமடைந்திருந்தமையால் குடலின் ஒருபகுதியை மருத்துவர்கள் அகற்றி விடுகிறார்கள். சிறிதுகால ஓய்வின் பின்னர் திலீபன் குணமடைந்து மீண்டும் தனது பணியை தொடர்கிறான்.
திலீபன் காயமடைந்தமையால் மிகவும் மனவேதனையடைந்திருந்த திலீபனின் நண்பர் ஒருவர் அவனிடம் மனந்திறந்து பேசுகிறார்.
«விடுதலைப்புலிகள் அமைப்பில் இராணுவ நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு திறமையுள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். அரசியல் நடவடிக்கைகளில் திறமையுள்ளவர்கள் குறைவு. நீ கட்டாயம் இராணுவ நடவடிக்கைளில் ஈடுபடுவதற்காக களமுனைக்கு போக வேண்டியது அவசியம்தானா? உனக்கு உயிராபத்து ஏற்பட்டால் அதனை ஈடு செய்வது இலகுவானதில்லையே!» நண்பர் தனது கவலையை வெளியிடுகிறார்.

«நான் உண்மையானவனாக இருக்க விரும்பிறேன். இயன்றளவு தூய்மையானவனாகவும் இருக்க விரும்புகிறேன். மனித மனம் இலகுவில் அலைபாயக்கூடியது. போர்க்களம் மனித வாழ்வின் நிலையாமையை எப்போதும் வெளிப்படுத்தும். ஒவ்வொரு முறையும் சமர்க்களத்துக்கு சென்று மீள்கையில் நான் பக்குவப்பட்டவனாக வளர்ந்து வருவதனை என்னால் உணர முடிகிறது. நான் மிக மனவிருப்பத்துடனேயே போர்க்களத்துக்குப் போகிறேன்.திலீபன் இதற்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை. தனது பாணியில் இயல்பான புன்முறுவல் செய்கிறான். தனது நண்பனின் முதுகில் செல்லத்தட்டுத் தட்டுகிறான். பின்னர் பேசுகிறான்.
விடுதலைப் புலிகள் அமைப்பு தன்னை அரசியல் இராணுவத் துறைகள் என இரு வேறுபட்ட துறைகளாக ஒழுங்கமைக்கவில்லை. இரண்டும் இணைந்த அமைப்பாகவே இயக்கம் இருக்கிறது. ஒவ்வொருவரும் வெவ்வேறு பணிகளைச் செய்தாலும் எல்லோரும் இராணுவ நடவடிக்கைகளுக்குத் தயாராக இருக்க வேண்டும். இன்னும் உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு வெற்றிகரமான அரசியல் பொறுப்பாளராக இருக்க வேண்டுமானால் இராணுவ நடவடிக்கைகளில் முன்னிற்பவனாக இருக்க வேண்டும்»
இது திலீபனின் தனது நண்பனிடம் வெளிப்படுத்திய கருத்து. உணர்வும் உண்மையும் நிரம்பிய வார்த்தைகள் இவை. இவற்றை பொதுவெளியில் திலீபன் பேசியதில்லை. ஒரு தனிப்பட்ட உரையாடலை பொதுவெளியில் பேசுவது அறம் சார்ந்ததுதானா என்ற கேள்விக்கும் இங்கு இடமுண்டு. இருந்தும் தற்போதய அரசியல் சூழலில் திலீபனிடம் இருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு உரிய சில விடயங்களையாவது உணர்ந்து கொள்வதற்கு இவ் உரையாடல் உதவும் என்ற நோக்குடன் உரிய அறநெறி சார்ந்து பொறுப்புணர்வுடன்தான் இது இங்கு பகிரப்படுகிறது. விடுதலை இயக்கங்களில் இருந்த போராளிகளுக்குத் தெரியும். பொதுவெளியில் பேசாத முக்கியமான பல்வேறு விடயங்கள் போராளிகளின் வீரச்சாவோடு மறைந்து போயிருக்கும். உயிரோடு இருப்பவர்கள் அவற்றை இப்போதும் அவர்கள் தம்முடன் சுமந்து திரிவார்கள்.
திலீபன் மக்களுடன் இயன்றளவு உண்மையைத்தான் பேசுவான். தனது மனச்சாட்சிக்கு ஒத்துவராத விடயங்களை செய்வதனை இயன்றளவு தவிர்ப்பான். ரெலோ போராளிகள் மீதான தாக்குதல் குறித்து விடுதலைப்புலிகள் அமைப்பு யாழ்ப்பாண மாவட்டம் பூராக நடாத்திய பரப்புரைக் கூட்டங்களை திலீபன் நடத்தவில்லை. அவன் அரசியற் பொறுப்பாளராக இருக்கும்போது நடைபெற்ற கூட்டங்களில் திலீபன் பங்குபற்றவும் இல்லை. மலரவனே இக் கூட்டங்களில் பிரதான பேச்சாளராக இருந்தார். யாழ் ஆயர் மாளிகையில் நடைபெற்ற கூட்டமொன்றில் இவ் விடயம் தொடர்பாக திலீபன் பங்குகொண்டு உரையாடியிருக்கிறான். அக் கூட்டத்திலும் அவன் இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்திப் பேசவில்லை. ரெலோ அமைப்புடன் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கான அரசியற் பரிமாணத்தை திலீபன் புரிந்து கொண்டாலும் இதனை இராணுவ வழிமுறை மூலம் கையாள்வதில் திலீபனுக்கு சம்மதம் இருக்கவில்லை எனக் கருத இடமுண்டு.
இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டு விடும் என்று திலீபன் கவலையுற்றான். மக்கள் ஒப்பந்தத்தின் ஆபத்தை உணராது இருக்கிறார்கள் என்று வேதனையுற்றான். அரசியல் வேலைகளின் போதாமையும் இதற்குக் காரணம் என்று மனம்நொந்து கூறியிருக்கிறான். இந்நிலை களைய தன்னையே அர்ப்பணிப்பேன். தனது தியாகத்தின் மூலம் மக்கள் உண்மையை உணர்வார்கள் என்று உறுதியாக நம்பியிருக்கிறான். தண்ணீர் அருந்தியவாறு உண்ணாவிரதம் இருக்குமாறு நண்பர்கள் பலர் விடுத்த வேண்டுகோளை அவன் நிராகரித்திருக்கிறான். தனது இலட்சியத்துக்காக அறப்போரில் தனது உயிரை ஈகம் செய்திருக்கிறான்
26.09.2017 அன்று திலீபன் ஈகைச்சாவு அடைந்து 30 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. இக்கட்டுரை திலீபன் நம்மை விட்டுப் பிரிந்த 30 ஆண்டு நிளைவுநாளில்தான் எழுதப்படுகிறது. எழுதிக் கொண்டிருக்கும்போது மனதில் கேள்வியொன்று எழுந்தது. திலீபனிடம் இருந்து இன்றைய தமிழ்த் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் குறித்து சிந்தனை ஏதும் நமது தலைவர்களிடம் உண்டா?
திலீபனைப் போன்று உயிர்த் தியாகம் எதுவும் செய்யத் தேவையில்லை. மக்களுக்கு உண்மையாகவும் கொண்ட இலட்சியத்துக்கு உறுதியாகவும் செயற்படவேண்டும் என்று திலீபனின் நினைவோடு நாம் இவர்களைக் கோருவது தவறுதானா?

Sunday, 17 September 2017

“நீட்”டாய் தெரியும் அசிங்கங்கள்…

“நீதி உயர்ந்த மதி கல்வி” என்று பாடியவனின் இறுதி யாத்திரையில் பத்து பேர் கூட கலந்து கொள்ளாத அளவு பக்குவம் பெற்ற பெருமைமிகு தமிழினம் இல்லையா நாம்? நமக்கு வாய்க்கும் கல்விக் கொள்கைகளின் லட்சணமும் அதற்குத் தகுந்தாற் போல் தான் இருக்கும். இதன் சமீபத்திய உதாரணம் தான் “நீட்” சம்பந்தப்பட்ட குளறுபடிகளும் அதைத் தொடர்ந்து நேர்ந்த மாணவியின் மரணமும்.
1176 மதிப்பெண்கள் என்பது அசாத்திய உழைப்பின் மூலம் மட்டுமே சாத்தியப்படுகின்ற ஒன்று. அதிலும் ஒரு வறுமையுற்ற குடும்பத்திலிருந்து ஒரு பெண் அதை சாதிக்கிறார் என்றால் அது வணக்கத்திற்குரியது. அத்தகைய உரம் படைத்த பெண் தற்கொலை செய்து கொள்கிறார் என்ற செய்தி மிகுந்த துயரம் அளிப்பது. சமூக பிரக்ஞை உள்ள எவரின் தூக்கத்தையும் தொலைக்கும் வலிமையுள்ளது. அவரின் பிரிவினால் வாடும் குடும்பத்தினருக்கு எந்தவித ஆறுதல் அளித்தாலும் மீட்க முடியா இழப்பு அது. ஆனால்…

பற்றியெரிந்த ஒரு தளிரின் நுனி மட்டுமே இது. ஒரு “காட்டை”யே கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளில் சத்தமின்றி எரித்து முடித்திருக்கிறோம் நாம் என்று நமக்குத் தெரியுமா? அக்காட்டில் பலவகை “சாதி” மலர்கள் மொக்கிலேயே கருகியது தெரியுமா? கருகுதல் பல வகை. வேண்டிய கல்வி மறுக்கப்படுவது அதிலொரு வகை…சமூகநீதியாம் சமூக நீதி…இது அரசியல்வாதிகள் தங்கள் ஆதாயத்திற்காக பயன்பாட்டில் கொண‌ர்ந்த சொல். மேடை பேச்சாலும் அலங்கார வார்த்தைகளாலும் அழிந்த மாநிலம் நமது தமிழ்நாடு. மக்களைச் சுற்றி ஒரு மாபெரும் சதிவலை பின்னப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று நாம் உணர வேண்டும். அனைத்து விதமான சுரண்டல்களையும் அள்ளிக் கொள்ள ஏதுவாக பின்னப்பட்ட சதிவலையில் கல்வியை வியாபாரம் ஆக்கும் வலையும் ஒன்று. இதற்கு தனிமனிதன் துவங்கி இம்மாநிலத்தின், இச்சமூகத்தின் ஒவ்வொரு ஒவ்வொரு அங்கமும் பொறுப்பு ஏற்க வேண்டும். கல்வி என்பதை அவரவர் லாபத்திற்கேற்ற கடைச்சரக்காக்கி விற்க முயன்ற அவலத்தின் அடுத்த கட்டமே இது. எத்தனை வீரியம் மிக்க விஷம் பாய்ந்த வேர் இது?

மாணவர்கள் எந்த தேர்வு எழுத வேண்டும், தேர்ச்சியின் விதிமுறைகள், அளவீடுகள் என்ன என்று அனைத்தையும் அரசியல்வாதிகள் முடிவு செய்வது என்பது சமூகத்திற்கு கிடைத்த சாபம். “எந்தத் தேர்வை எப்படி வைத்தாலும் எதிர்கொள்வேன் நான்” என்ற தன்னம்பிக்கையை ஊட்டும் கல்விக்குரிய அடிப்படை கட்டுமானங்களை செய்து தராத அரசுகளின் கையாலாகாதனத்தின் விளைவு தான் இது. கட்டமைப்பு பற்றிய கவலையின்றி, சிந்தனையின்றி, திட்டமின்றி, திடமின்றி கூச்சல் போட்டென்ன பயன்? உணர்ச்சிவசப்பட்டு உரக்கப் பேசும் தலைவர்கள் நமக்குத் தேவையில்லை. நம் கல்வி கற்பழிக்கப்பட்டு வெகுநாளாகி விட்டது. அந்தத் கொடூரத்தில் நம் பங்கும் உண்டு.

முதலில் நம்மிடமிருந்து துவங்குவோம். எல்கேஜிக்கு எதற்கு இத்தனை ஆயிரம் என்று கேள்வி கேட்டதுண்டா நாம்? விலை அதிகமென்றால் “விஷயமும்” நிறைய இருக்கும் என்ற முட்டாள்தனத்திற்கு விலைபோன நாம் எப்போது திருந்தப் போகிறோம்? “மாரல் சயின்ஸ்” என்றொரு வகுப்பு இருந்ததே…யாரைக் கேட்டு அது காணாமல் போனது? கண்டு கொண்டோமா நாம்? மதிகெட்டு திரியும் சமூகத்திற்கு மாரல் எதற்கு என்று விட்டு விட்டோமா? ஆறாம் வகுப்பிலேயே ஐஐடிக்கு கோச்சிங், ஒன்பதாம் வகுப்பு துவங்கி பன்னிரண்டுக்கான பயமுறுத்தல், பன்னிரண்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் பறிபோய்விடும் வாழ்வு என்றெல்லாம் சொல்லிச் சொல்லி மந்திரிக்கப்பட்ட கோழிகள் போல் நம் பிள்ளைகளை திரியவிட்டு அதைப்பார்த்து பெருமையும் மகிழ்வும் பொங்கி வழியும் பெற்றோர் ஒரு வகை. மாதத் தேர்வுக்கு கூட மகன் மகளுடன் தானும் லீவு போட்டு சீனி வெடியை சீனா போர் கணக்காய் பில்டப் கொடுக்கும் பெற்றோர்கள் இன்னோர் வகை. பணம் தான் செலவு செய்கிறோமே, நன்றாகத் தான் வருவார்கள் என்று தானுண்டு தன் “வேலை”யுண்டு என்றிருக்கும் பெற்றோர் மற்றோர் வகை. இவற்றில் எல்லாம் தப்பித்தாலும், பொறியியல் அல்லது மருத்துவம் இல்லையென்றால் இவ்வாழ்க்கையே வீண் என்ற பொறியில் வீழும் பெற்றோர் மீதமுள்ள வகை. வறுமையில் உழலும் குடும்பமோ, வசதியான குடும்பமோ…சிறார்கள் பற்றிய சீரிய சிந்தனை ஏதுமின்றி பால்யத்தை சூறையாடும் அரக்கர்கள் ஆகி விட்டோம் நாம்.

கல்வி என்பது பணம் ஈட்டும் கருவி என்பதையன்றி வேறொன்றும் அறியோம் பராபரமே…இது பெற்றோர்களுக்கும் பொருந்தும், கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். “இடையில்” இருப்போர்களுக்கும் பொருந்தும். எனவே தான் எத்தனை “கிடைக்கும்” என்பதை பொறுத்து எத்தனை “கொடுக்க” வேண்டும் என்ற சமன்பாடு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை அறியாமலோ அல்லது அறிந்தும் தட்டிக்கேட்கின்ற முதுகெலும்பு அற்ற சமுதாயமாகவோ மாறி விட்டோம் நாம். எனவே தான், கடிவாளம் போட்ட குதிரையாய் இன்ஜினியரிங், மருத்துவம் நோக்கி படையெடுப்பு நிகழ்கிறது. சரி இத்தனை கொடூரங்களுக்குப் பின்னும் இவற்றை படித்து வெளிவரும் கூட்டம் எத்தகையது? தான் நினைத்ததை ஆணித்தரமாக கோர்வையாக ஒரு நிமிடத்திற்கு கூட சுயசிந்தனையுடன் பேசத்தெரியாத பெரும்பான்மை கூட்டம் தான் இன்று “இன்ஜினியரிங் படிச்சும் வேலையில்லை” என்று நம்பிக்கை இழந்து கூவிக் கொண்டிருக்கிறது. இது யார் தவறு? மாளிகை போன்று கல்லூரி கட்டப்பட்டிருந்தால் போதுமா? உள்ளிருக்கும் ஆசிரியரின் தரம் யாதென்று ஊரறியுமே… போன வருட சீனியர் இந்த வருட ஆசிரியர். 
விளங்குமோ படிப்பும் சமூகமும்? “இந்த வார எலிமினேஷன் யார்” என்பதையே சமூகத்தின் முன் நிற்கும் முக்கிய விவாதப் பொருள் போல் ஆக்கி  வாழ்க்கையை ஓட்டும் விவேகமற்ற மாநிலத்தில் கல்வி என்ற பெயரில் நடக்கும் கூத்துக்கள் மூலம் விவேகானந்தர்களா உருவாவார்கள்?


ஜல்லிக் கட்டு போல் இதற்கும் போராட்டம் நடக்குமோ என்று எதிர்பார்க்கிறார்கள் பலர். நம் போன்ற முதிர்வற்ற சமூகத்தில் அது சாத்தியமல்ல. நம் ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒரு “catharsis”. அதாவது “சுமை நீக்கி”. ஊழல்களினாலும் சமூக அவலங்களினாலும் உள்ளேயே கொதித்துக் கொண்டிருந்த பலருக்கு ஒரு வடிகாலாக கிடைத்தது அப்போராட்டம்.

“இறக்கி” வைத்து “தீர்த்துக்” கொண்டார்கள். எனவே தான் அப்போராட்டம் ஏதோ உலகையே திருப்பிப் போட்டது போன்ற உவகையையும் பெருமிதத்தையும் பலருக்குத் தந்தது. அவ்வளவு தான்…. பழைய குருடி கதவைத் திறடி கதையாக நம் “வசதியான வளை”க்குள் திரும்பி வந்தாயிற்று. இனி மீண்டும் உதிரத்தில் உப்பு ஊறுவதற்கு பல மாமாங்கம் ஆகலாம் அதற்குள் பல சேதாரம் நேரலாம்…எதையும் கண்டுகொள்ள மாட்டோம் அதுவரையில் நாம். “எதுவும் கடந்து போகும்” என்பது நம் தாரக மந்திரமில்லையா?

1176 போன்ற‌ மதிப்பெண் பெற்ற ஒருவர் எத்தகைய சாதியென்றாலும் அவர் வேண்டிய கல்வி கிடைக்க வழி செய்வதே சமூக நீதி என்று எப்போது நாம் அனைவரும் உணர்கிறோமோ, அனைத்து வகை கல்விக்கூடங்களுக்கும் ஒரே தரம், ஒரே கட்டணம்  என்ற நிலையை எப்போது நாம் அடைகிறோமோ அதற்கான செயல் வழித் திட்டங்களை எப்போது நாம் அமைக்கிறோமோ அப்போது தான் நமக்கு விடிவு காலம். குமரன்

Saturday, 16 September 2017

3 முறை வடி கட்டிய சயனைட் குப்பி: பகலவனிடம் தயாரிக்குமாறு சொன்ன பிரபாகரன்

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் இடம்பெற முன்னர், ஆனந்தபுரம் சமர் நடந்துகொண்டு இருந்தவேளை. அங்கிருந்து ஒரு பஜீரோ வாகனத்தில் தலைவரின் மனைவி மதிவதனி அக்கா, மற்றும் துவாரகாவை ஏற்றிக்கொண்டு முள்ளிவாய்க்கால் பக்கமாக சென்றவர் தான் "நிலவன் தம்பி". இவரை பலருக்கு தெரிந்திருக்காது. "நிலவன் தம்பியே" மதிவதனி அக்கா மற்றும் மகள் துவாரகாவின் பாதுகாப்பை நெறிப்படுத்தும் தளபதியாக இருந்தவர். ஆனந்த புரத்தில் கடும் சண்டை மூண்டவேளை 3 காயப்பட்ட போராளிகள் சகிதம் இவர், மதிவதனி அக்கா மற்றும் துவாரகா ஆகியோரோடு அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் அவரை முள்ளிவாய்க்காலில் வைத்து நாம் பார்த்ததே இல்லை என்று அப்போது தொடர்பில் இருந்த குட்டி என்னும் மூத்த உறுப்பினர் எனக்கு தெரிவித்திருந்தார்.

இதேவேளை தலைவரின் பாதுகாப்பின் ஒரு பிரிவை கவனித்து வந்த ரட்ணம் மாஸ்டர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில், அவ்விடத்தில் முழு பொறுப்பில் "பகலவன்" இருந்து வந்தார். முள்ளிவாய்க்காலுக்கு செல்லும் முன்னர் பகலவனிடம் 3 சயனைட் குப்பிகளை தருமாறு தலைவர் கோரி இருந்தார். அவை சாதாரண சயனைட் குப்பிகள் அல்ல. 3 முறை வடி கட்டிய சயனைட் குப்பிகள். சாதாரண சயனைட் குப்பி ஒன்றை கடித்தாலே உடனே உயிர் போய்விடும். 3 முறை வடிகட்டியது என்றால் அது எவ்வளவு கடுமையான சயனைட் குப்பியாக இருக்கும் என்பதனை நாம் நினைத்துக் கூட பார்க முடியாது. தலைவரின் பாதுகாப்பை கவனித்த அதே பகலவன் தான், பாலச்சந்திரன் பாதுகாப்பையும் உறுதிசெய்து வந்துள்ளார்.

இன் நிலையில் தான் லண்டனில் இருக்கும் தன்னுடைய நண்பி ஒருவரோடு சாட்டலைட் டெலிபோன் மூலம் தொடர்புகொண்டு குகா அக்கா(கேணல் ஷங்கர் அண்ணாவின் மனைவி) நாம் திடமாக உள்ளோம் என்று கூறியதோடு மேற்கண்ட சயனைட் விடையத்தையும் கூறியுள்ளார். முடிந்தால் உடைத்துக்கொண்டு செல்வோம். இல்லையென்றால் அனைவரும் மாண்டு போவோம். எந்த ஒரு கால கட்டத்திலும் சரணடைவு என்பதற்கு இடமே இல்லை என திட்டவட்டமாக தலைவர் அறிவித்துவிட்டார். புலிகளின் அரசியல் துறையினர், மற்றும் ஆயுதம் ஏந்தாத அரசியல் போராளிகள் மட்டும் சரணடைய விரும்பினால் சரணடையலாம் என்பது தலைவரது கருத்தாக இருக்கிறது. எந்த ஒரு மன சஞ்சலமோ, கலக்கமோ இல்லை. அவர் தெளிவாக தெரிவித்த வார்தைகள் இவை என கண்ணிர் மல்க அவர் தெரிவித்துள்ளார். அன்று அவர் மதிவதனி அக்கா பற்றி பேசவில்லை.

30,000 ஆயிரம் ராணுவம் சூழ்ந்திருக்க, ரஷ்ய விமானங்கள் குண்டு போட உதவிசெய்ய , 30க்கும் மேற்பட்ட இந்திய கடல்படை கப்பல்கள் சூழ நிற்க்க, அதுபோக ஹிந்தி ராணுவம் களத்தில் நின்று திட்டங்கள் வகுத்து கொடுக்க... உலகமே ஒன்றினைந்து புலிகளை அழிக்க களத்தில் நின்றாலும், வீரத் தழிழனாய், மறவர் குலத்தவனாக மார் தட்டி நின்றவர் தலைவர் பிரபாகரன். இதனை கோட்டபாய அல்ல எவராலும் மறுக்கவோ இல்லை மறைக்கவோ முடியாது ! மாவீரனுக்கு ஏதுடா சாவு  !

ஆனால் பாலச்சந்திரன் பாதுகாப்பை இறுதியகா கையில் எடுத்த பகலவன் எங்கே ? அவர் இறக்கவில்லை என்றும் காணமல் போயுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதில் பல சந்தேகங்கள் உள்ளது. பகலவனுக்கு என்ன நடந்தது என்று தெரிந்தால் பல கேள்விகளுக்கு விடை உடனே கிடைத்துவிடும்.... அங்கே என்ன துரோகங்கள் நடந்தது ? தேடல்கள் தொடரும் இறுதிவிடை காணும் வரை  ..

Monday, 11 September 2017

இரட்டை வேடம் எப்போதும் பலன் தருமா?

பிரேசில் நாட்டுக்கான இலங்கைத்தூதுவர் ஜகத் ஜயசூரிய தமக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறிக் கொண்டு படுத்த பாய்க்குக் கூடத் தெரியாமல் திடுதிப்பென்று இலங்கைக்குத் திரும்பியிருந்தார்.அவரது அந்தத் தகவலைக் கேட்டு நாடே குழப்பமுற்றது. இன்றைய கூட்டு அரசைத் தேசத் துரோக அரசு என்று கூற வைக்கும் அளவுக்கு குறிப்பிட்ட அந்தச் செய்தி பாரதூரமான ஒன்றாக அமைந்தது.

‘உலகையே வென்று விட்டதாகக் கூறப்பட்டது. பன்னாட்டுச் சமூகம் தற்போது இலங்கையை நேசிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் போர் வீரர்களை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த ஆயத்தமாகியுள்ளனர்.
அந்த வகையில் போர் வீரர்களைப் பாதுகாக்க இயலாத இந்த அரசு துரோக அரசு’’ ஜகத் ஜயசூரியாவின் கதையைப் பற்றிப் பிடித்த மகிந்த தரப்பினர்கள் இவ்வாறு விமர்ச்சிக்கத் தலைப்பட்டனர்.

போர்க்குற்றம் தொடர்பாக முன்னாள் இராணுவத்தளபதி ஜெயனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக ஐந்து லத்தீன் அமெரிக்க நாடுகளது நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கப்படவிருப்பதாகவும் அந்த வழக்குகளில் முன்னிலையாக தாமும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்த பாய ராஜபக்சவும் அழைக்கப்பட இடமுண்டு எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அந்த வகையில் நாட்டைக் காக்கும் சிப்பாய்களுக்கு இன்றைய கூட்டு அரசு துரோகத்தனம் இழைக்கிறது. நாட்டின் முப்படையினரை யும் காட்டிக் கொடுக்கும் தரப்பு இன்றைய அரசைப் போன்று வேறு எதுவும் கிடையாது. மேற்கண்ட கருத்துக்களைக் கேட்கும் போது பொங்கி வரும் சிரிப்பைக் கட்டுப்படுத்த இயலாதுள்ளது.

மகிந்தவைத் தோற்கடிக்க சிப்பாய்களும் முன்னின்றனர்

இன்றைய கூட்டு அரசு உருவாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அரச ஊழியர்கள் மத்தியில் முன்னிலை வகித்தவர்கள் முப்படைகளைச் சேர்ந்தவர்களே.

முற்று முழுதாக படைத்தரப் பினர்கள் மகிந்தவைத் தோற்கடித்து மைத்திரிபாலவை வெற்றி பெற வைக்க ஒன்றிணைந்தமை தபால் மூலம் வாக்களிப்பு முடிவுகள் வெளியான போது உறுதியாகியிருந்தது.
போரை முடிவுக்குக் கொண்டு வந்த தீரமிக்க இராணுவத் தரப்பை காய்கறிகள் பயிரிட்டு விற்பனை செய்யவும் குப்பை கூளங்களைக் கூட்டிச் சேர்க்கவும் புல்லு வெட்டவும் பயன்படுத்தியது இன்றைய கூட்டு அரசல்ல.
கார்ப்பந்தயத்தில் ஈடுபடுவதற்காக அதற்குப் பொருத்தமான வீதிகளை உருவாக்க மண் பரவித் தயார் செய்வதற்கு இராணுவத்தினரைப் பயன்படுத்தியது இன்றைய கூட்டு அரசல்ல. பல ஆண்டுகள் காலமாக சம்பள ஏற்றங்கள் எதனையும் வழங்காது இராணுவத்தினர் சிரமமான வாழ்க்கை வாழ வைத்தது இன்றைய கூட்டு அரசல்ல.

விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தளபதி கருணாவை அழைத்து வந்து அமைச்சுப் பதவி வழங்கி வைத்தது இன்றைய கூட்டு அரசல்ல. அந்தக் கருணா செய்த குற்றங்களுக்காக அவருக்கு எதிரான விசாரணைகள் எங்கு நடத்தப்பட்டன என்பதை எவருமறியார்.
அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் கருணாவை சுதந்திரக் கட்சியின் உப தலைவராக்கி வைத்தது இன்றைய கூட்டு அரசோ அல்லது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவோ அல்ல.

சுதந்திரக் கட்சிக்காக கடுமையாக உழைத்தவர்களை மூத்த அமைச்சர்கள் என்ற பிரிவுக்குள் அடக்கி அரசியலில் இருந்து ஓய்வு பெற்று ஒதுங்க வைத்தவர் மைத்திரிபால சிறிசேன அல்லர்.


அவ்விதம் செயற்பட்ட அதேவேளை விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய பிள்ளையானுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி வழங்கியவர்கள் மகிந்த தரப்பினரேயன்றி மைத்திரிபால சிறிசேன அல்லர்.

தலையில் தூக்கி வைத்த சரத் பொன்சேகா துரோகி ஆக்கப்பட்டார்

போர் முடிவுக்கு வந்து மகிந்த தரப்பினர் போர் வெற்றியைக் கொண்டாடிய வேளை முதலாவது கேக் துண்டு வழங்கப்பட்டது அவ்வேளைய இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கே.

ஆனால் அதே வேகத்தில் அவர்கள் நடத்திய போர் வெற்றிக் கண்காட்சியின் போது எந்தவொரு இடத்திலும் சரத் பொன்சேகாவின் புகைப்பட ‘கட்அவுட்’ டைக் காண முடியவில்லை. கண்காட்சிக்கு கருணா அம்மானும் சென்றிருந்தார்.

சரத் பொன்சேகாவால் செல்ல இயலாது போயிற்று மகிந்தவுக்கு எதிராக அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்டமையே சரத் பொன்சேகா தமது பதவியை இழக்கக் காரணமாயிற்று. அந்த வகையில் போரை வென்றெடுத்துக் கொடுத்த சரத் பொன்சேகா சிறை வாசம் அனுபவிக்க அரச பிரதானிகள் வெற்றிவிழாக் கொண்டாடினர்.

இது இந்த நாடு நன்கறிந்த விடயம், தமக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளத்தக்க எந்தவொரு விடயத்தையும் தமக்குச் சாதகமான விதத்தில் ஆக்கிக் கொள்வதில் மகிந்த தரப்பினர்கள் பலே கில்லாடிகள்.

ஆனால் தற்போது ஜகத் ஜயசூரிய தொடர்பான பிரச்சினை வேறொரு ரூபம் எடுத்துள்ளது. இராணுவச் சீருடை அணிந்தவர்கள் இராணுவத்தில் சேவை ஆற்றியவர்கள் என்பதற்காக தவறு செய்பவரைத் தண்டனை பெறுவதிலிருந்து காப்பாற்றுவது நியாயமானதல்ல. சகல அரசியல்வாதிகளும் சகல அரச தலைவர்களும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

முன்னைய காலகட்டத்தில் பாலியல் வன்முறை கொலை என்பவற்றை மேற்கொண்ட இராணுவத்தினர் தண்டிக்கப்பட்டனர். முன்னைய அரச தலைவர்கள் பொது மக்கள் தரப்பாக நின்று தவறிழைத்தோருக்குத் தண்டனை வழங்கினர்.

சரத் பொன்சேகாவும் அதனைத்தான் கூறினார். அவர் ஜகத் ஜயசூரியாவுக்கு எதிராகச் காட்சியமளிக்க பன்னாட்டு நீதிமன்றுக்குச் செல்வாரானால் அது அவரது வைராக்கிய செயற்பாடே.

ஜகத் ஆனாலென்ன வேறு எந்த அதிகாரியானாலென்ன தவறிழைத்ததாக உறுதியாகத் தெரியுமானால் அதனை வெளிப்படுத்துவது எந்தவகையில் தவறாகும்?

புலம்பெயர் அமைப்புக்களை நலிவு படுத்திய கூட்டு அரசு

இலங்கைக்கு எதிராக உலகளாவிய ரீதியில் செயற்படும் புலம்பெயர் அமைப்புக்களது பலத்தை நலிவுபடுத்தியது இன்றைய அரசே. முன்னெல்லாம் பௌத்த பிக்குமாரால் வட பகுதிக்குச் சுதந்திரமாகச் செல்ல முடிந்ததில்லை.

ஒரு சமயம் சரத் பொன்சேகா அமெரிக்காவுக்குச் சென்றிருந்த போது அங்கு வைத்து அவரைக் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மகிந்தவால் எந்தவொரு வெளிநாட்டுக்கும் செல்ல இயலாத நிலை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

உலக நாடுகள் பலவற்றிலும் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு உருவாக்கப்பட்டிருந்தது. ஒரு சில வெளிநாடுகள் இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிப்பது குறித்தும் பரிசீலித்திருந்தன. மொத்தத்தில் உலக நாடுகளால் இலங்கை புறமொதுக்கப்படும் சூழல் உருவாக்கப்பட் டிருந்தது.

இலங்கையில் நடத்தப்பட்ட சோகம் பன்னாட்டு ரீதியிலான மாநாட்டுக்கு வந்த வெளிநாடுகளின் அரச தலைவர்கள் இலங்கையின் அரசியல் போக்குக் குறித்து வெளிப்படையாக விமர்சித்து விட்டுச் சென்றனர்.


பிரிட்டன் தலைமை அமைச்சர் கமரூன் இலங்கை அரசைக் கடுமையாக விமர்சித்துச் சென்றிருந்தார். இந்தியத் தலைமை அமைச்சர் தமது இலங்கைக்கான பயணத்தின் போது இலங்கைக்கு இந்தியா உதவத் தயாராகவுள்ளதாகக் கூறிய போது மகிந்த தரப்பினர் அதனைத் திரித்துக் கூறி இந்தியா இலங்கையைத் தனது கொலனியாக மாற்ற முனைவதாக விமர்சித்திருந்தனர்.

சுதந்திரக் கட்சி தனது வருடாந்த சம்மேளன விழாவைக் கொண்டாடத் தயாரான வேளையிலேயே ஜகத் ஜயசூரிய விடயமும் அரங்குக்கு வந்துள்ளது. என்னை பன்னாட்டு நீதிமன்றில் நிறுத்தத் தயாராகி வருகின்றனர். இது அரசின் தவறாலேயே ஏற்பட்டது எனக் கூறிக் கொண்டு ஜகத் ஜயசூரிய இலங்கையில் கால் பதித்திருந்தார்.

இந்தச் சம்பவத்தையடுத்து முழு நாடுமே குழப் பத்தில் அமிழ்ந்து போயிற்று.
கடவுளே! இந்த அரசு கவிழப் போகிறதே என ஒரு தரப்பினர் அச்சத்தில் ஆழ்ந்தனர். உருவாக்கியவர்கள் கூட ஓரளவு குழப்பமுற்றனர். ஆனால் நினைத்த அளவுக்குப் பூதம் கறுப்பாக இல்லை.

இதற்கான பதில் சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் அரச தலைவரால் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய மீதோ இந்த நாட்டின் வேறெந்த படைத் தரப்பினர் மீதோ கைவைக்க நான் வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த எவரொருவருக்கும் இடமளிக்கப் போவதில்லை.
சில அரசசார்பற்ற நிறுவனங்களது விருப்புக்கு ஏற்றவாறு நடனமாட நான் தயாரில்லை. என அவர் ஆக்ரோசமாகத் தெரிவித்துள்ளார். இந்த அரசின் நிலைப்பாடு அது.

அதற்கு மேலதிகமாக கேள்வி கேட்க எதுவுமில்லை. அதனை உறுதி செய்யும் விதத்தில் நாட்டின் தற்போதைய இராணுவத்தளபதியும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கமைய செயற்படுதல் நியாயமல்ல

முன்பொரு சமயம் நான் அடித்து விரட்டப்பட்ட வேளையில் கூட நான் இராணுவத்தினருக்கு எதிராக எதுவித கருத்தும் வெளியிட்டதில்லை. தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுடன் இராணுவத்தைத் தொடர்புபடுத்த வேண்டாமென நான் மீண்டும் மீண்டும் வேண்டிக் கொள்கிறேன்.

பிரேசில் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக ஜெனரல் ஜெயசூரிய கடமையாற்றித் தனது சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த வேளையில் போர்க் குற்றச்சாட்டு அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது. அதுவரை அத்தகைய குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டதில்லை.

எனவே தனிப்பட்ட நபர்களது பிரச் சினைகளுடன் மதிப்பு மிக்க இராணுவத்தைத் தொடர்புபடுத்த வேண்டாம் என வேண்டிக் கொள்கிறேன். ஜகத் ஜயசூரிய இராணுவத்தளபதியாக இருந்த வேளையில் எனக்குச் செய்த தீங்குகளுக்காக நான் அவரைக் குறை கூறியதில்லை.

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இராணுவம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கு இராணுவத்தளபதி என்ற ரீதியில் கண்டனம் தெரிவிக்கிறேன். பயங்கரவாதிகளுடன் மேற்கொண்ட போரில் 28 ஆயிரம் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கு இருமடங்கான தொகையினர் காயமுற்றும் ஊனமுற்றுமுள்ளனர். இவ்விதம் கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்ளவா இராணுவத்தினர் இந்த அளவுக்கு உயிர்த்தியாகம் செய்தனர்? இராணுவத்தினர் எவரும் தமது கடமையின் போது மனித உரிமைகளை மீறியதில்லை என அவர் கருத்து வெளியிட் டிருந்தார்.

ஜகத் ஜயசூரிய குற்றமிழைத்தாரா இல்லையா என்பதை உறுதியாகக் கூற இயலவில்லை. நாட்டுக்காகப் போராடிய இராணுவத்தினர் எவரையும் சிறைக்கு அனுப்ப எவர் முயன்றாலும் அரச தலைவர் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

ஜேர்மனிய சர்வாதிகாரி அடல்ப் ஹிட்லர் சிறுவர்களை நேசித்தவர், மிருகங்களை நேசித்தவர், புகைத்தல் பழக்கமற்றவர், புலால் உண்ணாதவர் ஆனாலும் அவர் குற்றமிழைத்தவர்.

யூத இனத்தவர்களை அழித்தொழிக்கக் கனவு கண்டவர். ஆதலால் தவறிழைத்த மனிதரொருவர் ஆயிரம் ஒளிவிளக்குகளை ஏற்றி ஆண்டவனைத் தொழுதாலும் தண்டனை பெற்றால் மட்டுமே விடுதலை அடைய இயலும்.

அந்த வகையில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய தரப்பினர் குற்ற மிழைக்காதவர்களாக இருக்கட்டும் என்று விரும்புவோம்.

Thursday, 7 September 2017

தமிழர்களுக்கு சலித்துப்போன இந்தியாவின் உறுதிமொழிகள்!

இலங்கைத் தமிழர்களை ஒருபோதுமே கைவிடப் போவதில்லை என்றும், வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கு நீதியும் நிரந்தரமுமான அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து பாடுபடப் போவதாகவும் இந்தியா இன்னமும் கூட கூறிக் கொண்டேயிருக்கின்றது.


இந்தியாவின் இந்த உறுதிமொழி புதியதொன்றல்ல... இலங்கையில் தோற்றம் பெற்ற இனமுரண்பாடானது 1983 ஜூலையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒழிப்புக் கலவரமாக உருவெடுத்த நாளில் இருந்து, இங்குள்ள தமிழர்களின் விவகாரம் தொடர்பாக இந்தியா இவ்வாறு தான் கூறிக்கொண்டிருக்கின்றது.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அதிகாரத்திலிருந்த காலப் பகுதியிலிருந்தே இலங்கை மீதான இந்திய கரிசனையும் தலையீடுகளும் தொடங்கி விட்டன. அதன் பின்னர் இந்திய மத்திய அரசாங்கத்தை காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாவும் மாறிமாறிக் கைப்பற்றி ஆட்சி செய்துள்ளன.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை தீவிரமடைந்த 1983 ஆம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து இன்று வரையான கடந்த 34 வருட காலப் பகுதியில் இந்தியாவில் பல்வேறு ஆளும் கட்சிகளையும், பிரதமர்களையும் பார்த்தாகி விட்டது.

இலங்கையில் உள்நாட்டு இன நெருக்கடியும், போரும், தமிழர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களும் 1983ற்குப் பின்னர் தீவிரமடைந்து சென்று கொண்டிருந்ததே தவிர அவற்றுக்கான நிரந்தரத் தீர்வுகள் இன்னுமே எட்டப்படவில்லை.

மதிப்பிடமுடியாத உயிரிழப்புகளும் உடைமை அழிவுகளும் ஏற்பட்டு தமிழினம் நிர்க்கதியாகி நிற்கின்ற இன்றைய வேளையிலும் கூட இலங்கைத் தமிழர்களைக் கைவிடப் போவதில்லையென்று இந்தியா கூறிக்கொண்டே இருக்கின்றது.

இந்திரா காந்தியில் ஆரம்பமாகி கடந்த 34 வருட காலத்தில் பதவியிலிருந்த அத்தனை பிரதமர்களும் இதனையே கூறினார்கள்.

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்திக்குப் பின்னர் பதவியிலிருந்த அரசாங்கங்களில் கூடுதல் அறுதிப் பெரும்பான்மைப் பலமுள்ள அரசாக விளங்குகின்ற இன்றைய அரசாங்கத்தின் ஆளுமை மிகுந்த பிரதமரான நரேந்திர மோடியும், இலங்கைத் தமிழர்கள் நலன் தொடர்பாக இவ்வாறான கருத்தையே அவ்வப்போது கூறி வருகின்றார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரான சுஷ்மா சுவராஜ் சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்திருந்த வேளையில், இவ்வாறான கருத்தை வெளியிட்டிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுடனான சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடப் போவதில்லையெனவும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா பாடுபடுமென்றும் கூறியிருக்கின்றார்.

சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்த கூற்று அவரது தனிப்பட்ட கருத்தென்று கொள்ள முடியாது. இந்திய அரசின் பிரதிநிதியாக இலங்கைக்கு வந்திருந்த அவர் தெரிவித்த கருத்தானது மத்திய அரசின் இன்றைய செய்தியாகும்.

அக்கூற்றை பிரதமர் நரேந்திர மோடியின் செய்தியாகவும் கொள்ள முடியும்.
இந்திய வெளியுறவு அமைச்சரின் கருத்து தொடர்பாக வடக்கு, கிழக்குத் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வகிபாகம் குறித்து இன்னுமே அசட்டுத்தனமான நம்பிக்கை கொண்டிருக்கின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் தமிழர் அரசியலில் ஊறித் திளைத்த மூத்த அரசியல்வாதியுமான வீ. ஆனந்தசங்கரியோ ஒருவேளை நம்பிக்கையும் புளகாங்கிதமும் அடையக் கூடும்.

ஏனெனில் தமிழர்களின் அரசியலானது கடந்த சுமார் அரை நூற்றாண்டுகளாக இவ்வாறு தான் கனவுகளுடன் நகர்ந்து கொண்டிருக்கின்றது. வீணான கற்பனாவாதங்களும் போலியான நம்பிக்கைகளும் கொண்ட பாதையிலேதான் தமிழர்களின் பிரதிநிதிகள் தங்களது அரசியலை இன்னமும் நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஊடாக இந்தியா இப்போது இறுதியாக வழங்கியிருக்கும் உறுதிமொழி வார்த்தையைக் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தனது பிரசாரத்துக்காக வடக்கு, கிழக்கு தமிழர் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லக் கூடும்.

ஆனாலும் அரசியல்வாதிகளைப் பார்க்கிலும் தமிழ் மக்கள் இப்போதெல்லாம் மிகவும் அறிவுக்கூர்மை அடைந்திருக்கின்றார்கள்.

வடக்கு, கிழக்குத் தமிழ் இனம் தனது ஏகோபித்த ஒற்றுமையை உலகுக்குக் காண்பிக்க வேண்டுமெனவும், அதன் வாயிலாக இனப்பிரச்சினைக்கான சாத்தியமான தீர்வொன்றுக்கு அடித்தளமிட முடியுமெனவுமே கடந்த தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வடக்கு, கிழக்குத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஆதரித்தார்களே தவிர, இந்தியா தமக்குத் தீர்வைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையினால் அல்ல!

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டுமென்ற தேவையெல்லாம் இந்தியாவுக்குக் கிடையாதென்ற யதார்த்தத்தை தமிழ் மக்கள் புரிந்து கொண்டதைப் போன்று தமிழ் அரசியல்வாதிகளும் புரிந்து கொள்வது முதலில் அவசியம்.

இந்தியா தனது பிராந்திய நலன்களுக்காக இலங்கை மீது செல்வாக்குச் செலுத்த வேண்டிய தேவையிருக்கின்றது. அவ்வாறு இலங்கை மீது செல்வாக்குச் செலுத்துவதற்காக தமிழர் விவகாரம் இந்தியாவுக்குத் தேவையாகவுள்ளது.

இல்லையேல், தமிழக அரசியலில் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் இலங்கைத் தமிழர் மீது அக்கறை கொள்ள வேண்டிய தேவை இந்திய அரசுக்கு உண்டு. 

ஆனால் பலமுள்ளதாக விளங்குகின்ற நரேந்திர மோடியின் அரசு தமிழகத்தைத் திருப்திப்படுத்த வேண்டிய அவசியத்தில் இன்றில்லை.
எனவே இலங்கைத் தமிழர் மீதான அக்கறை என்பதெல்லாம் இந்திய மத்திய அரசின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அப்பாற்பட்ட விடயங்களாகும்.

இவ்வாறிருக்கையில், இந்தியா இப்போதும் கூறுகின்ற உறுதிமொழிகள் இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை சலித்துப் போன வார்த்தைகள்!

Sunday, 3 September 2017

தாயில்லாத அனிதா கொலையா, தற்கொலையா? பின்னணியில் யார்?

இந்திய மாணவர்களுக்கு தரமான உலக கல்வியை தருகிறோம் என நீட் தேர்வை கொண்டு வந்த மத்திய அரசு இன்று தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி பயிலும் உரிமையை கண்கூடாக பறித்துள்ளது.

 

 

மத்திய, மாநில அரசாங்கங்களின் சுயநலமான அரசியலுக்கு மருத்துவக் கனவை 12 ஆண்டுகளாக சுமந்து வந்த அனிதா பலியாகியுள்ளார்.


ஒரு குடிமகன் இதைத்தான் சாப்பிட வேண்டும். ஒரு மாணவன் இந்த கல்வியைத் தான் படிக்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்தால் அது எப்படி ஜனநாயக அரசாக இருக்க முடியும்?


அரசாங்கம் வரையறை செய்த கல்வியை படித்து 1176 மதிப்பெண் எடுத்த மாணவிக்கு மருத்துவத் துறையில் இடம் இல்லை. கட் ஆஃபில் 196.5 மதிப்பெண்கள் பெற்றதற்கும் மதிப்பில்லை என்றால் வேறு யார் தான் தமிழகத்தில் மருத்துவத் துறையில் படிக்க வேண்டும்?

 

தாயார் இல்லாமல், கூலித் தொழிலாளியான தந்தையை கவனித்துக் கொண்டு கடுமையாக படித்த அனிதாவின் கனவு பொய்த்து உயிரை மாய்த்துக் கொண்டார் எனில் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு எந்த அரசு மீது நம்பிக்கை எழும்?

 

அனிதாவை தற்கொலைக்கு தூண்டி அவரது மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகள் மீது தமிழகம் மட்டுமின்றி உலகத் தமிழர்களும் இன்று கடுமையான வெறுப்பில் உள்ளனர்.

 

மத்திய, மாநில அரசுகள் தான் குற்றவாளிகள் என்றால் இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளும் குற்றவாளிகள் தான்.

Friday, 1 September 2017

மியன்மார் நடக்கும் இனப்படுகொலையின் நெஞ்சைப் பிழியும் காட்சிகள் - மௌனம் கலைக்காத முஸ்லிம் நாடுகள்

நாகரீகத்தின் உச்சத்தில் மனிதர்கள் வாழ்வதாக கருதப்படும் இக்கால கட்டத்தில் இப்படியொரு பயங்கரமும் நடைபெறுகின்றதா? என்று சிந்திக்கும் அளவு மியன்மார் – பர்மா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் உச்சத்தை அடைந்திருக்கின்றன.முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், கலவரங்கள் காரணமான ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பலர் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு கடல் வழியாக தப்பி ஓடுகின்றார்கள்.

இரும்புத் திரை நாடு – மியன்மார் ( மறுபிரசுரம் 2015 )

பௌத்த மதத்தை ஆட்சி மதமாகக் கொண்டுள்ள மியன்மார் உலக நாடுகளினால் “இரும்புத் திரை நாடு” என்று அழைக்கப்படுகின்றது.
பர்மா என்ற பெயரில் அழைக்கப்பட்ட நாடு 1989ம் ஆண்டு மியான்மார் (அல்லது Union of Myanmar) என்று மாற்றியமைக்கப்பட்டது.
சுமார் 130 இனங்கள் வாழுகின்ற மியன்மாரில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும் காணப்படுகின்றன. 

பல்லாயிரக்கணக்கான பௌத்த விகாரைகள் நாடு முழுவதும் பரவியிருப்பதால், இது ‘Land of Pagodas’ என்றும் அழைக்கப்படுகின்றது.
சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி மியன்மார் இராணுவத்திற்கு எதிராக போராடி, ஜனநாயத்தை வெளிப்படுத்த பாடுபட்டார்.

இதனை எதிர்த்து இராணுவம் மேற்கொண்ட செயல்பாடுகளை விபரிக்கும் விதமாகவே “இரும்புத் திரை நாடு” என்று மியன்மார் அழைக்கப்படுகின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான மியன்மார் அரசு

15ம் நூற்றாண்டுகளில் இருந்தே மியன்மாரில் வாழ்ந்து வரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த தர்மத்தை ஆட்சி மதமாக வைத்துள்ள மியன்மார் மேற்கொள்ளும் தாக்குதல்கள் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதவைகளாகும்.

மதக் கலவரங்கள், தனி மனித தாக்குதல்கள், வர்த்தக நிலையங்களுக்கு எதிரான தாக்குதல்கள், திட்டமிட்ட படுகொலைகள் என்று முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மாரில் நடைபெரும் தாக்குதல்கள் முடிவில்லாதவையாகும்.
உண்ண உணவின்றி, குடிப்பதற்கு நீராகாரமின்றி, தங்க இடமின்றி கடந்த பல வருடங்களாகவே மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்கள் பலவிதமான அவதிக்கும் உள்ளாகி வருகின்றார்கள்.

2012 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசுத் தலைவர் தெய்ன் செய்ன் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிட்ட “முஸ்லிம்களை மூன்றாம் நாடொன்றுக்கு அனுப்பும் திட்டம்” காரணமாக அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இன்னும் வீரியமடையத் தொடங்கின.

அரசுத் தலைவர் அறிவித்த சர்ச்சைக்குரிய திட்டத்தினை ஆதரித்து மியன்மாரின் சர்ச்சைக்குரிய 969 இயக்கத்தின் தலைவரும், பௌத்த மத குருவுமான அசின் விராது தலைமையில் நடத்தப்பட்ட பேரணியைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 43 பேர் கொலை செய்யப்பட்டார்கள்.

அசின் விராதுவின் 969

969 இயக்கம் (969 Movement) என்பது பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மியன்மாரில் இஸ்லாமிய பரம்பலை எதிர்க்க உருவாக்கப்பட்ட ஒரு தேசியவாத அமைப்பாகும்.

மியன்மாரின் சர்ச்சைக்குரிய பௌத்த மதகுரு அசின் விராது தேரர் இதன் தலைவராக இருந்து செயற்படுகிறார்.

இவ்வியக்கம் சர்வதேச மட்டத்தில் பலத்த விமர்சனத்திற்கு உள்ளானது. பன்னாட்டு ஊடகங்கள் இதன் தலைவர் அசின் விராது தொடர்பில் பலத்த விமர்சனைத்தை முன்வைத்தன.

அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை “பௌத்த பயங்கரவாதத்தின் முகம்” என்று இவரை விமர்சனம் செய்திருந்தது.

மியன்மாரில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளின் சூத்திரதாரியாக இருப்பது இவரும், இவருடைய 969 இயக்கமும் தான். மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை இவரே வழிநடத்தி வருகிறார்.

இவருடைய தூண்டுதலில் ஈவிரக்கமின்றி பெண்களும் குழந்தைகளும் கூட கொன்று குவிக்கப்படுகின்றனர்.

முஸ்லிம்களுக்கு எதிராக 969 அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் வன்முறைகளால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த அமைப்பை வழிநடத்தும் அஸின் விராது தேரரை “பர்மாவின் பின்லேடன்” என சர்வதேச ஊடகங்கள் வர்ணிக்கின்றன.

இன்றைய நிலையில், உலகில் பௌத்த தீவிரவாதத்தின் ஆணிவேராக கணிக்கப்படுபவரே அஸின் விராது தேரர். அகிம்சையையும், தர்மத்தையும் போதிப்பதாக கூறப்படும் பௌத்த மதத்தில் இத்தகையதொரு கடும் போக்குவாத அமைப்பு உருவாக்கப்பட்டு வழி நடத்தப்படுவது ஏவ்விதத்தில் சரியானதாக இருக்க முடியும்?

யார் இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள்.

மியன்மார் அரசு மற்றும் அசின் விராது தலைமையிலான 969 இயக்கத்தினால் தினமும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் ரோஹிங்யா முஸ்லிம்களின் வரலாறு தெளிவானது.

15 ம் நூற்றாண்டு முதல் ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மார் – பர்மாவில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இன்றும் காணக் கிடைக்கின்றன.

பௌத்த பேரினவாத கடும் போக்காளர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகி உள்நாட்டில் வாழ முடியாத நிலையினை எட்டியுள்ள இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் நாட்டை விடடும் வெளியேற முடிவெடுத்து கடல் வழி பயணத்தில் வேறு நாடுகளை அடைய முற்பட்ட வேலை ஆயிரக் கணக்கானவர்கள் கடலில் வீழ்ந்து மரணித்து விட்டார்கள்.

மௌனம் கலைக்காத முஸ்லிம் நாடுகள்

உயிர் பிழைப்பதற்காக உயிர்ப் பிச்சைக் கேட்கும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அண்டை நாடுகளான பங்களா தேசம், இந்தோனேஷியா, மலேசியா போன்ற முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் கூட அடைக்கலம் கொடுக்கத் தயங்குகின்றன.

சிலருக்காக கதவைத் திறந்தால் பலருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி வருமோ என்ற பயத்தின் காரணமாக இந்நாடுகள் மௌனம் காத்து வருகின்றன.

தாய்லாந்தைப் பொறுத்த வரையில் அதுவும் பௌத்தத்தை பெரும்பான்மையாக கொண்ட நாடு என்பதனால் மியன்மாரை பகைத்துக் கொள்ள தாய்லாந்து விரும்பவில்லை என்பதே நிதர்சனமாகும்.

மலேசியா முஸ்லிம் நாடு. அதுவும் செல்வந்த நாடாக இருப்பது தான் அவர்களுக்குரிய பெரும் பிரச்சினையாகும்.

ரோஹிங்யா அகதிகளை தமது நாட்டுக்குள் அனுமதித்தால் உள்நாட்டு மக்களின் வேலைவாய்ப்புக்கு சிக்கலாகி விடும் என்ற காரணத்தினால் மலேசியாவுக்குள் ரோஹிங்யா அகதிகள் உள்வாங்கப்படாமல் விடப்பட்டிருக்கின்றார்கள்.

அத்துடன் அனைத்து மக்களையும் ஏற்றத் தாழ்வின்றி பார்க்கும் இஸ்லாத்தை மதமாக கொண்ட மலேசியா முஸ்லிம்கள். ரோஹிங்யா முஸ்லிம்களை தாழ்த்தப்பட்டவர்களாக நினைப்பதும் இன்னொரு காரணமாக சொல்லப்படுகின்றது.

ஸக்காத், ஸதகா போன்ற ஏழைகளுக்கு வழங்க வேண்டிய உதவித் தொகை தொடர்பாக வலியுறுத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் மலேசிய மக்களின் இது போன்ற செயல்பாடுகள் இஸ்லாத்தின் பார்வையில் மிகவும் கண்டிக்கத் தக்கவையாகும்.

பங்களாதேச அரசும் ரோஹிங்யா முஸ்லிம்களை தமது நாட்டில் இணைத்துக் கொள்வதற்கு விரும்பவில்லை. நாட்டின் சனத்தொகை பெருக்கமாக இருக்கின்ற காரணத்தினால் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு பங்களாதேசத்தில் இடமளித்தால் பாரிய பிரச்சினைகள் தோன்றலாம் என்று கருதி அவர்களை ஏற்றுக் கொள்வதை பங்களாதேச அரசும் தவிர்த்து வருகின்றது.

தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான “ஆசியான்” ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல வேண்டும் என்று மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வந்தாலும் “ஆசியான்” இது தொடர்பில் மௌனமாகவே இருந்து வருகின்றது.
ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளைக் காப்பாற்றுவதை விட மியன்மாருடனான உறவைப் பேணுவதே “ஆசியான்” அமைப்பின் முக்கிய பணியாக அது நினைக்கின்றது.

சர்வதேச சமுத்திரவியல் சட்டம்

சர்வதேச சமுத்திரவியல் சட்டத்தின் பிரகாரம் கடலில் நிர்க்கதியான நிலையில் இருப்போரை மீண்டும் கடலுக்குள் துரத்தியடிப்பது என்பது சட்டவிரோதமான செயலாகும்.

சர்வதேச சமுத்திரவியல் சட்டத்தின்படி ரோஹிங்யா அகதிகளை காப்பாற்றுவது ஒருபுறமிருக்க, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கே பல காலங்கள் ஆகலாம் என்பதே உண்மையாகும்.

எது எப்படிப் போனாலும் சமுத்திரவியல் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கும் “ஆசியான்” அமைப்பின் ஒத்துழைப்பு அவசியமானதாகும்.
சர்வதேச சமுத்திரவியல் சட்டம், அதை நடைமுறைப் படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என அனைத்தையும் ஆராய்ந்து “ஆசியான்” போன்ற அமைப்புகள் முடிவெடுப்பதற்குள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு மரணத்தின் விளிம்பில் இருக்கும் ரோஹிங்யா முஸ்லிம்களின் நிலை என்னாகும்?

இலங்கை இறுதி யுத்தத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் தற்போது உயிருக்குப் போராடி வரும் மியன்மார் முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுப்பார்களா?

மியன்மார் முஸ்லிம்களின் வரலாறு

15 ம் நூற்றாண்டு - மியன்மாரில் இஸ்லாமிய எழுத்தோலைகள், நாணயங்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

1799 - மியன்மார் – பர்மா தொடர்பில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் ரோஹிங்யா எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

1871 - மியன்மார் – பர்மாவின் ராகின் மாநிலத்தில் 58000 முஸ்லிம்கள் வாழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

1911 - மியன்மார் – பர்மாவின் ராகின் மாநிலத்தில் 179000 முஸ்லிம்கள் வாழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

1977 - மியன்மார் – பர்மாவில் ஏற்பட்ட கலவரம் காரணமாக சுமார் இரண்டு லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்திற்கு இடம் பெயர்ந்தனர். இவர்களில் சுமார் 12000 பேர் பட்டினியால் பங்களாதேசத்தில் உயிரிழந்தனர். பின்னர் இவர்களில் மீதமிருந்தவர்கள் மீண்டும் மியன்மாருக்கு திரும்பி ராகின் மாநிலத்தில் குடியேறினார்கள்.

1982 - ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மார் – பர்மா குடியுரிமையில் இருந்து நீக்கப்பட்டார்கள்.

1989 - பர்மா என்றிருந்த நாட்டின் பெயர் மியன்மார் என்று மாற்றப் பட்டது.

1991 - கலவரம் காரணமாக 250000 க்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்திற்கு இடம் பெயர்ந்தார்கள்.

1992 – 1993 - இடம் பெயர்ந்தவர்களில் 50 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம்கள் பலவந்தமாக மீண்டும் மியன்மாருக்கு செல்ல நிர்பந்திக்கப்பட்டனர்.

2012 ஜனவரி மாதம் - பதிவு செய்யப்பட்ட 29000 ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்தில் வாழ்ந்தார்கள். இவர்கள் 1991ல் பங்களாதேசத்தில் குடியேறியவர்கள். எனினும் பதிவு செய்யப்படாத இரண்டு லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்தில் வாழ்ந்தனர்.

2012 - எட்டு லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மாரில் வாழ்வதாக தரவுகள் கூறுகின்றன.

2014 - கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

Tuesday, 15 August 2017

70 ஆண்டுகளில் இந்திய சமூகம்! வளர்ந்ததும்... இழந்ததும்..!

’70 வயது சுதந்திர இந்தியாவும் அதன் சமூகமும்'...என்றவுடன் ஒரு இந்தியச் சாமானியனுக்கு எழும் கேள்வி, சுதந்திரம் என்றால் என்ன? சமூகம் என்றால் என்ன? என்பதுதான். 
ஒரு பக்கம் மொபைல் போனை ஆராய்ந்து கொண்டும், அதே மொபைலில் உத்தரப்பிரதேசத்தில் இறந்த 63 குழந்தைகளுக்கு நொடிப்பொழுதில் முகநூலில் அஞ்சலி செய்துவிட்டும் கடக்கும் அவசர சமூகத்துக்கு இது போன்ற கேள்விகளும் விளக்கங்களும் உண்மையிலேயே தேவைப்படுமா?. . கார்ப்பரேட் என்னும் தனி உலகத்திற்கு இது தேவையற்ற ஒன்றுதான்.  ஆனால் 70 ஆண்டுகள் கடந்தும் முழுவதும் கட்டமைக்கப்படாத அதே சமயம் ஏதோ ஒன்றுக்காக இன்னும் கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கும் காஷ்மீர் முதல் கதிராமங்கலம் வரை  நாட்டில் விரவிக்கிடக்கும் பிரச்னைகளுக்கு எதிராக களத்தில் நிற்கும் அனைத்து உயிர்களுக்கும் இது முக்கியத் தேவையாக இருக்கிறது.

சமூகம் என்னும் கட்டமைப்பு ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என மூன்று பாலினமும் ஒரு சேரக் கட்டமைக்கப்படுவது. இந்த கட்டமைப்பில் ஒன்றன் இயங்குதலும் சார்ந்திருத்தலும் மற்றொன்றை பாதிக்காத வகையில் அமையும் சுய வளர்ச்சி நிலைதான் சுதந்திரம் என்பது. ’சிஸ்டம்’ சரி இல்லை என்று ரஜினி தொடங்கி சாமானியன் வரை புலம்புவதன் அடிப்படை இந்த சமூகக் கட்டமைப்பில் உள்ள விரிசல்தான். 

 பெண்களுக்கான பெருவெளி

“பாரத் மாதா கீ ஜே!” என மூச்சுக்கு முன்னூறு முறை உச்சரிக்கச் சொல்லும் நாட்டில் பெண்களுக்கு இந்த சமூகம் கடந்த காலங்களில் எப்படியாக இருந்துள்ளது?.. கல்வி, வேலைவாய்ப்பு என்று ஒருபக்கம் பெண்களின் வளர்ச்சி நிலை மெச்சப்பட்டாலும் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் அவர்களுக்கு எதிரான ஆயுதமாக பாலியல் வன்கொடுமை ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து வந்திருக்கிறது.  டெக்னாலஜி யுகத்திலும் 'சைபர் புல்லிங்' ரூபத்தில் வந்து சேருகிறது. அரசியலில் இருக்கும் தனிநபராக இருந்தாலும் சரி, நிறுவனப் பெரும்புள்ளியாக இருந்தாலும். 

களப்போராளியாக இருந்தாலும் ‘பெண்’ பாலியல் அடையாளமாகவே பார்க்கப்படுவதும் அதையே அவர்களது பலவீனமான பிம்பமாக்கி ஒடுக்குவதும் சாபம்தான். பெண்களைப் பொறுத்தவரை இந்த பாலியல் சார்ந்த அடையாளப்படுத்துதல்தான் விரிசலுக்கான அடிப்படைக் காரணமே. பாலியல் அடையாளம் கடந்த சுதந்திரம் நிச்சயம் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. அம்பேத்கர் சொன்னது போல  முன்னேற்றமடைந்த சமுதாயம் என்பது அதன் பெண்களின் வளர்ச்சிநிலை பொருத்துதான் இருக்கிறது.    

ஆண்களின் தேவையும்...செய்ய வேண்டியதும்...

குடும்பமா...வீட்டின் தலைவர்! நிறுவனமா..அதன் தலைவர்! கட்சியா.. அந்தக் கட்சியின் தலைவர்  என சுதந்திரம் அடைந்த காலம் தொடங்கி பெரும்பாலும் தலைமை பொறுப்புகளுக்கு ஆண்களே முன்னிறுத்தப்பட்ட சூழலில் தற்போது சமூகத்தின் விரிசல்களை ஒட்டவைப்பதன் பெரும்பங்கு அவர்களுடையதாகிறது. 

எனக்குத் தெரிந்த ஒரு குடும்ப நண்பர் வங்கி ஊழியராக பணியாற்றிவந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். திருமணம் ஆனதும் மற்ற எல்லாப் பெண்களையும் போல அந்தப் பெண்ணும் வேலையை விட வேண்டிய சூழல். ஹோம் மேக்கராக வலம் வந்தவர் தற்போது இரண்டு பிள்ளைகளுக்குத் தாய். குழந்தைகள் வளர்ந்து சற்று பெரியபிள்ளைகளாகிவிட்ட சூழலில் தற்போது அந்தப் பெண் வேலைக்குச் செல்ல விருப்பப்படுகிறார், ஆனால் அந்த நண்பரோ, ‘மனைவியை வேலைக்கு அனுப்ப விருப்பம்தான் ஆனால் குழந்தைகளை வேறு ஒருவரிடம் விட்டு வளர்க்க வேண்டுமே அதற்கு மனது ஒப்பவில்லை’ என்கிறார். 

குடும்பத்தின் தலைவர் அங்கே நண்பர்தான் என்கிற அடிப்படையில் இந்தச் சூழலை சரிசெய்ய வேண்டியது அவரது கடமையாகிறது. ஒன்று தன் மனைவி வேலைக்குச் செல்கிறாரோ இல்லையோ ஆனால் சுதந்திர வெளியை உறுதி செய்வது. மற்றொன்று, பொருளாதாரம் சார்ந்து இயங்கும் இந்தியக் குடும்பக் கட்டமைப்புகளில் ஒருவருடைய வருமானம் என்பது பற்றாக்குறை வாழ்க்கை என்பதை உணர்வது.

பொதுத் துறையில் தனியாரிலும் எண்ணிக்கை அடிப்படையில் ஊழியர்களில் ஆண்களே அதிகம். வேலைவாய்ப்பு கேட்டு காத்திருப்பவர்கள் எண்ணிக்கையிலும் அதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்கள் கூட்டமைப்பின் அறிக்கையின்படி 2017ன் இறுதியில் மட்டும் 17.8 மில்லியன் பேர் வேலைவாய்ப்பற்று இருப்பார்கள் என்று கணக்கிடப்படுகிறது. இவர்களில் சரிபாதிக்கும் அதிகமானோர் ஆண்கள். வேலைவாய்ப்பற்ற சூழல்தான் இங்கே பெரும்பாலான குற்றங்களுக்கும் காரணமாக அமைகிறது. இதற்கு ஒருபுறம் அதே ‘சிஸ்டம்’ காரணமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் 1200க்கு 800க்கு மேல் மார்க் வாங்கிவிட்டாலே அந்த நபர் பொறியியல்தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதும் காரணமாகிறது. இங்கேதான் கல்விச் சுதந்திரமும் அதன் வழி தனிநபர் வேலைவாய்ப்பை உறுதி செய்வதும் அவசியமாகிறது. சுதந்திர இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்களுக்கு பொருளாதாரச் சிக்கல் தீர்ந்தாலே பாதிச் சிக்கல் தீர்ந்தது என்பதே நிதர்சனம்.  


எதிர்கால சந்ததிகளின் எதிர்காலத்தை எப்படிக் கட்டமைக்கப் போகிறோம்?

உத்தரப்பிரதேசத்தில் 63 குழந்தைகளின் பரிதாப இறப்புடன்தான் 70 ம் ஆண்டு சுதந்திரத்தை, சமூகச் சூழலை நாடு கடந்திருக்கிறது. குழந்தைகளுக்கான பாதுகாப்பு இங்கே அந்த நிலையில்தான் இருக்கிறது. மற்றொரு பக்கம் பாலியல் அடையாளங்கள் சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பரிதாபமும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.தேசிய ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி 2014ல் மட்டும் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பாக இங்கே  6816 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. உண்மையில் இந்தியாவின் எதிர்காலங்களின் கழுத்தை நெறிக்கின்றோமா நாம்?. .  பாடத்திட்ட குளறுபடிகளாலும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறையாலும் கல்வி உரிமையும் குழந்தைகளுக்கு சரியாகச் சென்று சேர்வதில்லை. இதனால் இந்த சமூகக் கட்டமைப்பின் எதிர்கால முன்னேற்றம் என்பதும் ஒருவகையில் கேள்விக் குறியாகின்றது. கல்விச் சுதந்திரத்தைப் பற்றியும் குழந்தைகளுக்கான ’இரும்புச் சங்கிலி’ கட்டுப்பாடுகள் அற்ற சுதந்திரமான அதே சமயம் பாதுகாப்புத் தன்மையுடைய ஒரு வளர்ப்புச் சூழ்நிலை குறித்து விவாதிக்க வேண்டியது அவசியமாகிறது. 

377ம் சட்டமே சுதந்திரத்தைப் பறிப்பதும்.. 

ஆண், பெண் குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்து விவாதிக்கும் அதே சமயம் இங்கே மூன்றாம் பாலினமான திருநங்கைகளின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் குறித்தும் பேசவேண்டும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377, இயற்கைக்கு எதிராக நிகழும்  எந்த வித உடல்சார்ந்த இணக்கமும் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது என்று விவரிக்கிறது. அரசாங்கமே தண்டனைச் சட்டம் ஒன்றை உருவாக்கியிருப்பதுதான் சுதந்திரம் உண்மையிலேயே கிடைத்துவிட்டதா என்பதை மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்குகிறது.  பாலினங்களின் உரிமைகள் மற்றும் உடைமைகள் மீதான திணிப்புகள் ஒருபக்கம் இருந்தாலும், தன்னுடைய  பாலினத்தையே தேர்வு செய்வதற்கான சுதந்திரம் இந்த தண்டனைச் சட்டத்தால் பாதிப்படைகிறது. 

அண்மையில் சென்னை மின்சார ரயிலில் எதிர்கொண்ட உண்மைச் சம்பவம். திருநங்கை கௌதமி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். முதல் வகுப்பு கம்பார்ட்மென்டில் இருந்து இதைப் பார்த்த ஒரு போலீஸ்காரர், பிச்சை எடுக்கக் கூடாது என்று அவரைக் கூப்பிட்டு கண்டித்தார். அதற்கு அந்த திருநங்கை,“நாட்டுல கொலை, கொள்ளை கற்பழிப்புன்னு குத்தம் செய்யறவங்களை எல்லாம் விட்டுறுங்க. எங்க பொழப்பு இந்த பிச்சை எடுக்கறதுதான்னு எழுதி வைச்சிருக்கு. எங்கள போய் மிரட்டுறீங்க” என்று புலம்பியபடியே கண்ணீர் சிந்தினார். ரயிலில் பிச்சை எடுப்பது சட்டப்படிக் குற்றம் என்றாலும் அவர் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு சமூகக் கட்டமைப்பும் ஒரு வகையில் காரணம்தான். அவரின் அந்த நொடி நிமிடப் பேச்சு யோசிக்கச் செய்வதாய் இருந்தது. தன் பாலின அடையாளத்தால் பாதிப்படையாமல் இந்த சமூகத்தில் ஒரு பாதுகாப்பான சூழலில் அவர்கள் வாழ்ந்து வளர்ச்சியடைய என்று உறுதியேற்கப் போகிறது இந்த நாடு? 

ஆக, இங்கே முதலில் மதிக்கப்பட வேண்டியதும் உணரப்பட வேண்டியதும் தனிமனிதச் சுதந்திரம்தான். அதன் மீதான  தடைகளைக் கடந்துதான் ஆண்- பெண் - திருநங்கைகள் உள்ளடக்கிய பாலின சமத்துவம் பேசப்பட வேண்டும். அந்த சமத்துவத்திற்கு மேலும் இடையூறாக இருக்கும்  சாதிய அடையாளங்களும் அழித்தொழிக்கப்பட வேண்டும். அதன் பிறகு கொண்டாடப்படும் சுதந்திர தினமே நாட்டின் முதல் சுதந்திர தினமாகவும் இருக்க முடியும்

பூகோள புலனாய்வு அமைப்புகளின் விளையாட்டுக் களமாகும் சிறிலங்கா

இந்திய மாக்கடலில் சீனா தனது கடல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கும் ஆபிரிக்காவுடனான வளர்ந்து வரும் தனது வர்த்தகத்தை உறுதிப்படுத்தவும் தடங்கலுமற்ற பெற்றோலிய வழங்கலை உறுதிப்படுத்துவதற்கும் சீனாவிற்கு அம்பாந்தோட்டைத் துறைமுகம் தேவைப்படுகிறது.
எனினும் சிறிலங்காவைப் பொறுத்தளவில் இது அடுத்து வரும் தலைமுறையினர் வரை தொடரக்கூடிய பேரழிவாக உள்ளது.

சிறிலங்கா போன்ற நீண்ட கால யுத்தம் இடம்பெற்ற நாடொன்றில் அரசியல்வாதிகள் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதுடன் அதிகாரத்துவ ஊழலிலும் ஈடுபடுகின்றனர். அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டமானது பல பில்லியன் டொலர் கடனில் மேற்கொள்ளப்பட்டதுடன் இது அவசியமற்றதொரு திட்டமாகவும் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டமாகவும் காணப்படுகிறது.

1979 டிசம்பர் மாதம், அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலக நாடுகள் மத்திய கிழக்குடன் யுத்தம் புரிவதில் தீவிரம் காண்பித்தன. ஆபிரிக்க நாடுகளுடன் பல்வேறு உடன்படிக்கைகளை மேற்கொண்டதன் மூலமும் சீனா தனது உற்பத்திகளை விற்பதற்கான சந்தை வாய்ப்புக்களைத் தேடிக் கொண்டதற்கும் அப்பால் ஆபிரிக்காவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்ததன் மூலம் சீனாவானது ஆபிரிக்க நாடுகளுக்குள் நுழைய ஆரம்பித்த அதேவேளையில் பெரியதொரு இஸ்ரேலை உருவாக்குவதே இந்த யுத்ததின் நோக்காக இருந்தது.

இதன் விளைவாக, ஆபிரிக்காவுடனான இஸ்ரேலின் வர்த்தகம் 2002ல் பத்து பில்லியன் டொலர்கள் வரை அதிகரித்ததுடன் 2006ல் இந்தத் தொகை 200 பில்லியன் டொலர்களாக அதிகரித்தது. சீனாவின் நான்கு ரில்லியன் டொலர் வர்த்தகப் பொருட்கள் மற்றும் நாளாந்தம் ஏழு மில்லியன் பரல்கள் பெற்றோலியமும் இந்திய மாக்கடலின் ஊடாகவே கொண்டுசெல்லப்பட்டது. இதனால் இந்திய மாக்கடலானது சீனாவிற்கு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

எனினும், மலாக்கா நீரிணையை விரோத சக்திகள் தடைசெய்து விடுவார்களோ என்கின்ற அச்சம் சீனாவிற்கு உள்ளது. இதனால் சீனாவானது தனது நீண்ட கால விசுவாசத்திற்குரிய நட்பு நாடான பாகிஸ்தானுடனான உறவை மேலும் பலப்படுத்தியுள்ளதுடன் இந்திய மாக்கடலின் ஊடாக மாற்று வர்த்தகப் பாதையையும் உருவாக்கத் தொடங்கியுள்ளது. இதற்காக சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதைத் திட்டத்தின் கீழ் 46 பில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளது.

இத்திட்டமானது சீனா மற்றும் பாகிஸ்தானை விரைவான கடல் பாதையின் ஊடாகத் தொடர்புபடுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் சீனாவானது தெற்குப் பட்டுப்பாதை, மத்திய ஆசியப் பட்டுப்பாதை, 21ம் நூற்றாண்டிற்கான கடலோரப் பட்டுப்பாதை மற்றும் சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை போன்ற திட்டங்களை ஒன்றிணைத்து வலைப்பின்னல் நிகழ்ச்சித் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

இது சீனாவின் ஒரு அணை, ஒரு பாதை எண்ணக்கருவிற்கு முக்கியமானதாகவும் ஆசிய மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 60 நாடுகளை இணைக்கும் திட்டத்தையும் கொண்டுள்ளது.

இதில் சில திட்டங்கள் மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக பேர்சியன் வளைகுடாவில் பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தை பாரிய நெடுஞ்சாலை மற்றும் தொடருந்துப் பாதைகளின் வலைப்பின்னலின் ஊடாகத் தொடர்புபடுத்தும் மூலோபாய முக்கியத்துவத்தை சீனா கொண்டுள்ளது. இதன் மூலம் துறைமுகங்கள், கட்டுமானத் திட்டங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதுடன் பெற்றோலிய மற்றும் எரிவாயுக் குழாய்களை ஏற்றுமதி செய்வதும் சீனாவின் நோக்கமாகும்.

இது ஒரு தரைத் தொடர்புப் பாதையாகும். இதன் மூலம் விரைவான போக்குவரத்தையும் மேற்கொள்ள முடியும். குறிப்பாக 10,000 கிலோமீற்றர் தொலைவிலுள்ள வளைகுடாச் சந்தைக்கான போக்குவரத்து சீனாவிற்கு இலகுவாக்கப்படுவதுடன் இப்பிராந்தியத்தின் பூகோள – அரசியலிலும் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

சோவியத் யூனியன் ஏன் தனது படையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது என்பதற்கான முக்கிய காரணம் என்ன என்பதை எவரும் மறந்துவிட முடியாது. அதாவது பேர்சியன் வளைகுடாவில் தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதே சோவியத் யூனியனின் நோக்காக இருந்தது. இதேபோன்றே சீனாவும் தனது சொந்த மூலோபாயத்தை நிலைநிறுத்துவதற்காகவே இந்திய மாக்கடலில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தி வருகிறது.

இதற்காக இந்திய மாக்கடலில் அமைந்துள்ள பாகிஸ்தான், சிறிலங்கா மற்றும் பங்களாதேஸ் போன்ற தனது நட்பு நாடுகளின் துறைமுக அபிவிருத்தியில் சீனா பங்கெடுத்துள்ளது. இதற்காகவே சீனா, சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் தனது அதிகாரத்தைச் செலுத்த முற்படுகிறது. இதற்காக இலங்கையர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

தாய்லாந்தின் க்ராவிலுள்ள இஸ்த்மஸ்ஸிற்குக் குறுக்காக கால்வாய் ஒன்றை அமைப்பதற்கான திட்டத்தை சீனா கொண்டுள்ளது. இதன்மூலம் இந்திய மக்கடலுடன் சீனாவின் பசுபிக் கரையோரத்தை இணைத்து பனாமா கால்வாயுடன் இணைப்பை ஏற்படுத்த முடியும் என சீனா திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆசியா மீதான தனது இருப்பை சமப்படுத்திக் கொள்ள முடியும் என சீனா கருதுகிறது.

அத்துடன் சீனா தனது கடற்படையின் நடவடிக்கையை இந்திய மாக்கடலில் விரிவுபடுத்துவதுடன் கிழக்கு ஆபிரிக்கா தொடக்கம் யப்பான் மற்றும் கொரியக் குடாநாடு வரை தனது வர்த்தக நகர்வுகளையும் விரிவுபடுத்த முடியும் எனக் கருதுகிறது. இதேபோன்று இந்திய மாக்கடல் பிராந்திய நாடுகளுக்கு சீனா தொடர்ந்தும் பல்வேறு உதவிகளை வழங்குவதுடன் பல்வேறு வர்த்தக மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதுவும் சீனா தனது மூலோபாய இலக்குகளை அடைவதற்கான ஒரு வழியாகும்.

இந்திய மாக்கடல் மீதான இந்தியக் கடற்படையின் செல்வாக்கிற்கு இணையாகத் தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக சீனா பல மாற்றுப் பாதைகளை அமைத்து வருகிறது. இந்தியாவானது அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்ததாக உலகின் மிகப் பெரிய மூன்றாவது நாடாக வளர்ந்து வரும் இந்தியா, இந்திய மாக்கடல் மீதான சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்.

இதனால் இந்தியக் கடற்படையின் நடவடிக்கைகளை முறியடிக்கும் விதமாக சீனா பல மாற்றுப் போக்குவரத்துப் பாதைகளை அமைத்து வருகிறது.

பாகிஸ்தானின் ஒரேயொரு கரையோரப் பாதையானது இந்திய மாக்கடலில் அமைந்துள்ளது. இந்தப் பாதை வர்த்தக மற்றும் சக்தி வழங்கல்களுக்கு முக்கியமாக உள்ளது. பாகிஸ்தானிற்கு அருகிலுள்ள பிரதேசங்களில் இந்தியாவின் ஆதிக்கத்தைத் தடுக்க வேண்டிய தேவையும் பாகிஸ்தானுக்கு உள்ளது. ஈரான் தொடக்கம் தாய்லாந்து வரை கடல் மற்றும் தரைவழிகளின் ஊடாகா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதே இந்தியாவின் நோக்காகும்.
இந்நிலையில் சீன-பாகிஸ்தானிய பொருளாதாரத் திட்டத்தை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆப்கானிஸ்தான் தொடக்கம் தாய்லாந்து வரையான கரையோரத்தில் இந்தியா தனக்கென சொந்தமான இலக்கைக் கொண்டுள்ளதாக பா.ஜ.க தலைவர்கள் வெளிப்படையாக அறிவித்திருந்தனர்.

இந்தியா மற்றும் சீனா ஆகியன பாரிய கடல் சார் மற்றும் பொருளாதார சக்திகளாக வளர்ந்து வருவதால் இவ்விரு நாடுகளையும் இந்திய மாக்கடலில் எதிர்கொள்வதென்பது அமெரிக்காவிற்கு மிகப் பாரிய சவாலாக உள்ளது. தென்சீனக் கடல் மற்றும் கிழக்குச் சீனக் கடலில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதைத் தடுப்பதற்காக சீனாவிடமிருந்து அதன் நட்புநாடுகளை விலகச் செய்ய வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு உண்டு.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தை தனியொரு நாடு அதிகாரம் செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை. ஏனெனில் இது தனது நீண்ட கால பொருளாதார நலன்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எனவும் அதிகாரச் சமநிலையைப் பேணுவதிலும் குழப்பத்தை விளைவிக்கும் எனவும் அமெரிக்கா கருதுகிறது. இதனால் அமெரிக்கா தனது பொருளாதார மையத்தை மேற்கிலிருந்து கிழக்கிற்கு மாற்றி வருகிறது.
இந்திய மாக்கடலை எந்தவொரு ஆசிய நாடும் தனது தனித்துவமான அதிகாரத்திற்குள் வைத்திருந்தால் ஆசியாவுடனான வர்த்தகச் சமநிலையைப் பேணுவதில் குழப்பத்தை விளைவிக்கும் என்பது அமெரிக்காவின் எண்ணமாகும். குறிப்பாக மலாக்கா நீரிணை, ஹோர்மஸ் நீரிணை மற்றும் மண்டேப் நீரிணை ஆகியன உட்பட இந்திய மாக்கடலின் மீதான செல்வாக்கு தனியொரு நாட்டிற்குச் சொந்தமானதாக இருக்கக்கூடாது என அமெரிக்கா கருதுகிறது.

இந்திய மாக்கடல் பிராந்தியத்திலும் பஹ்ரெய்ன், டிஜிபோட்டி, டியாகோ கார்சியா போன்றவற்றிலும் அமெரிக்கக் கடற்படையின் பிரசன்னம் காணப்படுகிறது. அமெரிக்காவானது இந்திய மாக்கடல் கரையோரத்தின் வழியாக ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுடன் கடல்சார் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுகிறது.

டெல்அவிவ், புதுடில்லி அரசாங்கங்களுடன் அமெரிக்காவின் உறவுநிலை தற்போது வளர்ச்சியடைந்து வரும்நிலையில், இந்திய மாக்கடலில் இந்தியா தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என உந்துசக்தி வழங்குகிறது. இதை சீனா மற்றும் பாகிஸ்தானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் சீனா மற்றும் பாகிஸ்தான் தமக்கிடையிலான உறவை மேலும் பலப்படுத்தி வருகின்றன.

குவடாரில் மையப்படுத்தப்பட்டுள்ள சீன-பாகிஸ்தானிய மூலோபாய கடல்சார் கூட்டு நடவடிக்கையானது இந்திய மாக்கடலில் செல்வாக்குச் செலுத்த வேண்டும் என்கின்ற இந்திய-அமெரிக்காவின் குறிக்கோளுக்கு ஊறுவிளைவிக்கும்.

இந்திய மாக்கடல் மீது ஐரோப்பாவும் மிகப் பலமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களைக் கொண்டுள்ளது. இந்திய மாக்கடலில் காணப்படும் பெறுமதி மிக்க கடல்படுக்கைகளை அகழ்வதற்கான உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான பணிகளில் ஐரோப்பிய நாடுகள் ஈடுபடுகின்றன. மேலும் இந்திய மாக்கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தையும் சில ஐரோப்பிய நாடுகள் கொண்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இந்திய மாக்கடல் முக்கியத்துவம் மிக்கதாக அமைகின்றது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் தமது பொருளாதார மற்றும் இராணுவ வளங்கள், அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய-இஸ்ரேலிய யுத்தங்களால் சிதைவுறலாம் என அச்சமுறுகின்றன.  இவ்வாறான காரணங்களால் இந்திய மாக்கடலானது அரசியல், மூலோபாய மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையமாக மாறியுள்ளதாக ஆய்வாளர் சல்மான் றபி செய்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மாக்கடல் மீதான அதிகாரத்துவ நாடுகளின் மரபுசார் மற்றும் அணுவாயுதக் கப்பல்களின் பிரசன்னமானது அதிகரித்து வருவதே இதற்கான காரணமாகும். இந்திய மாக்கடலில் தமது பொருளாதார நலன்களை நிலைப்படுத்துவதற்கும் பாரிய வர்த்தகப் பங்காளிகளைத் தக்கவைத்திருப்பதற்கும் சீனா மற்றும் இந்தியா ஆகியன பாரிய அதிகாரத்துவப் போட்டிக்குள் நுழைவதற்கான நகர்வுகள் இடம்பெறுகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தை தனியொரு நாடு அதிகாரம் செய்வதற்கு முடியாது எனவும் இதனால் இவ்விரு நாடுகளும் தமது இலக்குகளை அடைவதற்கு பல்வேறு நகர்வுகளை முன்னெடுக்க வேண்டியிருக்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இதனால் இந்திய மாக்கடல் மீது செல்வாக்குச் செலுத்த விரும்பும் அதிகாரத்துவ நாடுகள் சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமானநிலையத்தை சீனா தனது சொந்தச் சொத்தாகப் பயன்படுத்துவதுடன் அங்கு தனது பிரசன்னத்தை நிலைப்படுத்தியுள்ளதை ஆராய வேண்டிய தேவையுள்ளது.
வழிமூலம்       – sunday times
ஆங்கிலத்தில் – Latheef Farook
மொழியாக்கம்- நித்தியபாரதி

Sunday, 6 August 2017

பாகிஸ்தான் பிரதமர் பதவியைக் காலிசெய்த Calibri எழுத்துரு (Font)

கணினியில் பயன்படுத்தும் Font எனப்படும் ஓர் எழுத்துரு, பிரதமர் பதவியிலிருந்து ஒருவரை நீக்கும் அளவுக்கு வலிமையுடையது எனச்சொன்னால் நம்பமுடிகிறதா? ஒரு நாட்டின் அரசியல் சூழ்நிலையையே புரட்டிப்போடக்கூடிய அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா? கொஞ்ச காலம் முன்புவரை யாரும் இதை நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிஃப் விஷயத்தில் இதுதான் தற்போது நடந்திருக்கிறது.தொடரும் சாபம் :

இலங்கையைப் போல், பாகிஸ்தான் நாட்டிலும் பிரதமரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரை, இதுவரை ஒருவர் கூட ஐந்து ஆண்டுகள் முழுமையாகப் பதவியில் நீடித்ததில்லை. பனாமா பேப்பர் ஊழல் விவகாரத்தில், சொத்துக்குவிப்பு செய்தது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், நவாஸ் ஷெரிஃப்பை பிரதமர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்தும், அவர் மீது வழக்குப்பதிவு விசாரணை செய்யவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியேற்ற நவாஸ் ஷெரிஃப், 4 ஆண்டுகள் 54 நாள்கள் பிரதமர் பதவியில் இருந்திருக்கிறார்.

பனாமா பேப்பர்ஸ் ஊழல்

மத்திய அமெரிக்க நாடான பனாமா என்றதும் பலருக்கும், அட்லாண்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் செயற்கையாக உருவாக்கப்பட்ட, 48 மைல் நீள 'பனாமா கால்வாய்' தான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது 'பனாமா பேப்பர்ஸ்' என்றழைக்கப்படும் ஊழல் விவகாரம், அந்நாட்டைப்பற்றி சர்வதேச அரங்கில் பேச வைத்திருக்கிறது. பனாமாவைச் சேர்ந்த மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் உதவியுடன், உலகின் பல பிரபலங்களும், நிறுவனங்களும் வெளிநாடுகளில் முறைகேடாக சொத்துக்குவித்திருப்பதாகக் கடந்த ஆண்டு தகவல்கள் வெளியானது. இதில், 360,000 தனி நபர் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. மொசாக் பொன்சேகா நிறுவனத்தின் தரவுத்தலத்தில் இருந்து, சுமார் 1.15 கோடி பக்கங்கள் ஆவணங்கள் வெளியே கசிந்தது. இதை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டபின், இந்தச் செய்தி உலகையே உலுக்கியது.

உலகின் மிகப்பெரிய தகவல் கசிவு என்று இது அழைக்கப்படுகிறது.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், வினோத் அதானி உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் இதில் அடிபட்டன. 90-களில் பிரதமராக இருந்தபோது, சட்டவிரோதமாக லண்டனில் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சொத்துகளை அவரது மகன்கள் மற்றும் மகள் ஆகியோர் நிர்வகிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து ஷெரிஃப்பை பதவிநீக்கம் செய்து, அவருக்கெதிரான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்கவேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன்பின் வாஜித் ஜியா தலைமையிலான கூட்டு விசாரணைக்குழுவை இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அம்பலமான ஊழல்

கூட்டு விசாரணைக் குழுவின் விசாரணையில், ஷெரீஃப் குடும்பத்தினரின் வருவாய் மற்றும் சொத்து குறித்த ஆவணங்களில் நிறைய குளறுபடிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்நிலையில், லண்டன் சொத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை நிரூபிக்கும்வகையில், நவாஸ் ஷெரீஃப்பின் மகள் மரியம் நவாஸ் இக்குழுவிடம் சில ஆவணங்களை சமர்ப்பித்தார்.

இந்த ஆவணங்கள்தான் இந்த வழக்கின் முக்கிய சாட்சியமாக மாறியது. 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேதியிட்ட இந்த ஆவணங்கள் அனைத்தும் 'கலிப்ரி' (Calibri) என்ற எழுத்துருவில் தயாரிக்கப்பட்டிருந்தன. விண்டோஸ் 2007 இயங்கு தளத்தின் இயல்புநிலை எழுத்துருவாக (Default Font) இதுதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எழுத்துரு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் 2007-ம் ஆண்டில் இருந்துதான் வர்த்தகரீதியாக வெளியிடப்பட்டது. லூகாஸ் டி க்ரூட் (Lucas De Groot) என்பவர்தான் இந்த எழுத்துருவை வடிவமைத்தவர். இந்த எழுத்துருவை வடிவமைக்கும் பணி 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2004-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதன்பின், 2006-ம் ஆண்டு மே மாதம்தான் முதல்முதலாக டெவலப்பர்களுக்கான பீட்டா வடிவமாக இது வெளியிடப்பட்டது. ஆனால், மரியம் நவாஸ் சமர்ப்பித்த ஆவணங்கள் பிப்ரவரி மாதம், 2006-ம் ஆண்டு தேதியிடப்பட்டிருந்தன. எனவே, இந்த ஆவணங்கள் போலியானவை என்ற முடிவுக்கு விசாரணைக்குழு வந்தது.
ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, நவாஸ் ஷெரிஃப்பை பிரதமர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்தும், அவர் அரசியல் தொடர்பான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் நேற்று அதிரடியாகத் தீர்ப்பளித்தது. மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து நவாஸ் ஷெரீஃப் பதவி விலகியுள்ளார்.

'எவ்வளவு சாமர்த்தியமான குற்றவாளியும் ஒரு தடயத்தையாவது விட்டுச்செல்வான்' என்பதை கிரைம் திரில்லர் படங்களில் புலனாய்வுக் கதாபாத்திரங்கள் பேசிக்கேட்டிருப்போம். ஆனால், எழுத்துருவால் ஊழல் அம்பலமாகி, பிரதமர் பதவியிழந்த கதையை இப்போதுதான் கண்முன்னே பார்க்கிறோம்.

ஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது?

கடந்த 30ம் திகதி தமிழ் மக்கள் பேரவை கூடியது. இதன்போது விக்னேஸ்வரனும் மருத்துவர் லக்ஸ்மனும் ஆற்றிய உரைகள் வெளியிடப்பட்டுள்ளன. விக்னேஸ்வரனின் உரை வழமையான அவருடைய சொற்பிரயோகங்களோடு அமைந்திருக்கிறது. ஒரு மாற்று அணிக்கு தான் இப்போதைக்கு தலைமை தாங்கப் போவதில்லை என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்த பின் நடந்த பேரவைச் சந்திப்பு அது. எனவே விக்னேஸ்வரனின் உரையில் ஏதும் தளம்பல்கள் அல்லது சமாளிப்புக்கள் அல்லது பின்வாங்கல்கள் இருக்கக்கூடுமா என்று ஒரு பகுதியினர் நுணுக்கமாகத் தேடினார்கள். ஆனால் பலரும் உற்றுக் கவனிக்கத் தவறியது லக்ஸ்மனின் உரையாகும். மிகத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை அந்த உரை முன்வைக்கிறது. நமது காலத்தில் அரசியல்வாதிகள் பலருடைய உரைகளிலும் காணப்படாத தெளிவு அந்த உரையில் உண்டு.

மேற்படி இருவருடைய உரைகளின் பிரகாரம் தமிழ் மக்கள் பேரவையானது தான் முன்வைத்த தீர்வுத்திட்ட முன்வரைவை மீள வலியுறுத்தி நிற்கிறது. அதன்படி ஒற்றையாட்சி முறை நீக்கப்பட்டு கூட்டாட்சி முறைமையைக் கொண்டதாக அரசியல் அமைப்பு மாற்றப்பட வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பைக் கைவிட முடியாது. கூட்டாட்சிக் கோரிக்கையையும் கைவிட முடியாது. வடக்கு கிழக்குத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கலாம். ஆனால் வடக்கு கிழக்கில் அவ்வாறு முன்னுரிமை வழங்கப்பட முடியாது. இதுதான் தீர்வு பொறுத்து தமிழ் மக்கள் பேரவையின் ஆகப்பிந்திய நிலைப்பாடு. அதன் இணைத் தலைவர் என்ற வகையில் விக்னேஸ்வரனின் நிலைப்பாடும் அதுவே.

ஆனால் சம்பந்தர், சுமந்திரன் நிலைப்பாடும் அதுதானா?

யாப்புருவாக்கத்திற்கான வழிநடத்தற் குழுவின் இடைக்கால இறுதியறிக்கை வரும் 8ம்திகதி சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அது சமர்ப்பிக்கப்படுமா இல்லையா என்பதை இப்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது. ஆனால் அந்த இடைக்கால அறிக்கையில் எப்படிப்பட்ட ஒரு தீர்வு இருக்கக்கூடும் என்று யாப்புருவாக்க உப குழுக்களின் தலைவராக உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்டேன். தனக்குப் பெரிதாக எதுவும் தெரியாது என்று கூறிய அவர், அமைச்சர் மனோ கணேசனிடம் அல்லது ஏனைய சிங்களத் தலைவர்களிடம் கேட்டுச் சொல்வதாகக் கூறினார்.

முதலில் இடைக்கால அறிக்கை 35 பக்கங்களைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டது. இப்பொழுது அது 25 பக்கங்களைக் கொண்டது என்று கூறப்படுகின்றது. அதில் எந்த எந்தப் பகுதிகள் நீக்கப்பட்டு பக்கங்கள் குறைக்கப்பட்டன, ஏன் அப்பகுதிகள் நீக்கப்பட்டன போன்ற கேள்விகளுக்கு தமிழ்த்தரப்பிலிருந்து வெளிப்படையான பதில்களைப் பெற முடியவில்லை. சில சமயம் சர்ச்சைக்குரிய உபகுழு அறிக்கைகளும் உட்பட பொதுக்கருத்தை எட்ட முடியாதுள்ள விவகாரங்கள் பின்னிணைப்பாக சேர்க்கப்படலாம் என்ற ஓர் ஊகமும் உண்டு.

எதுவாயினும் ஓர் இடைக்கால அறிக்கை முன்வைக்கப்படுமாக இருந்தால் அதில் முன்மொழியப்படவிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது நிச்சயமாக விக்னேஸ்வரனும், தமிழ் மக்கள் பேரவையும் கோரிநிற்கும் ஒரு தீர்வாக அமையப்போவதில்லை. அண்மை மாதங்களாக சம்பந்தரும், சுமந்திரனும் தெரிவித்து வரும் கருத்துக்களின்படியும், சித்தார்த்தனைப் போன்ற உபகுழுத் தலைவர்கள் தெரிவித்துவரும் கருத்துக்களின் படியும், மனோ கணேசன் தெரிவித்து வரும் கருத்துக்களின் படியும், நிமால் சிறீபால டி சில்வா, விமல் வீரவன்ச போன்றோர் தெரிவித்து வரும் கருத்துக்களின் படியும் முன்மொழியப்படும் தீர்வானது சிங்கள பௌத்த இனவாதிகளை அச்சுறுத்தும் ஒன்றாக அமையப்போவதில்லை. சம்பந்தரின் வழிவரைபடத்தின்படியும் அப்படி அமைய முடியாது. ஏனெனில் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தைப் பெற்ற ஒரு நாடாளுமன்றத்தில் அப்படி ஒரு தீர்வை எதிர்பார்க்கவும் முடியாது.

ஆயின் அப்படிப்பட்ட ஒரு தீர்வு முன்மொழியப்படுமிடத்து விக்னேஸ்வரனும், மக்கள் பேரவையும் எப்படிப்பட்ட முடிவை எடுப்பர்? கடைசியாக நடந்த பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதைப் போல பேரவையின் தீர்வு முன்மொழிவை மக்கள் மயப்படுத்தும் ஒரு நடவடிக்கையை அவர்கள் முன்னெடுக்கக்கூடும். அதன் மூலம் தமிழ் மக்களின் அபிப்பிராயத்தைத் திரட்டி உத்தேச தீர்வுத்திட்டத்திற்கு எதிராக தமிழ் மக்களை தயார்படுத்தப் போகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். அண்மை வாரங்களாக கஜேந்திரகுமார் அணியும் அதைத்தான் செய்து வருகிறது. இப்படியெல்லாம் மக்களைத் தயார்படுத்தினால் யாப்புருவாக்கத்திற்கான ஒரு மக்கள் வாக்கெடுப்பின் போது தமிழ் மக்களை அந்த யாப்புக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்க வேண்டியிருக்கும். பேரவையும், விக்னேஸ்வரனும் அப்படியொரு முடிவை எடுப்பார்களா?

அவ்வாறு அரசாங்கத்தின் தீர்வுத்திட்டத்தை நிராகரித்தால் அடுத்த கட்டம் என்ன? பேரவை முன்வைக்கும் ஒரு தீர்வுத்திட்டத்தை போராடிப் பெறுவதற்கான ஒரு மக்கள் மைய அரசியல் வேலைத் திட்டம் எதுவும் பேரவையிடம் உண்டா? விக்கினேஸ்வரனிடம் உண்டா?

இக்கேள்வியை இப்பொழுது மாற்று அணியை உருவாக்க விளையும் எல்லாத் தலைவர்களிடமும் கேட்கலாம். இக் கேள்விக்கான விடையைக் கண்டு பிடித்தால் ஒரு மாற்று அணிக்குரிய பிரயோகப் பொறிமுறை கிடைத்து விடும். அப்படியொரு பிரயோகப் பொறிமுறை கிடைத்து விட்டால் ஒரு மாற்று அணி எனப்படுவது வெறுமனே தேர்தல் கூட்டு அல்லவென்பது தெளிவாகி விடும். அது ஒரு தேர்தல் கூட்டு அல்ல என்பது தெளிவாகி விட்டால் ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்ட சின்னங்களை உடைத்துக் கொண்டு வெளியே வர தயங்கும் ஒரு நிலைமை இருக்காது. ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்ட ஆளுமைகளை நோக்கி காத்திருக்கும் நிலைமைகளும் இருக்காது.

ஒரு மாற்று அணிக்குரிய இலக்கு எதுவென்பதில் தமிழ் மக்கள் பேரவையும் உட்பட அதில் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பிடமும் ஒரு தெளிவாக விளக்கம் இருக்கிறது. இங்கு பிரச்சினை என்னவென்றால் அந்தக் கனவை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்குரிய பொறிமுறை எது என்பதுதான். ஒரு மாற்றுச்சிந்தனை எது என்பதுதான்.

மாக்ஸியம் ஒரு கோட்பாடாகவே முதலில் கருக்கொண்டது. கார்ல் மாக்ஸின் முதலாவது அகிலம் எனப்படுவது அக் கோட்பாட்டை ஒரு செய்முறையாக வளர்த்தெடுக்கும் நோக்கிலானது. எனினும் மாக்ஸியத்தை ஒரு கட்சித் தத்துவமாகவும் பிரயோக அரசியல் தத்துவமாகவும் வளர்த்தெடுத்த பெருமை லெனினுக்கே சேரும் என்று கூறப்படுவது உண்டு. ஒரு சித்தாந்தத்தை அல்லது உன்னதமான ஓர் இலட்சியத்தை செய்முறை அரசியலாக மாற்றுவதற்கு பேராளுமை மிக்க தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அகிம்சைக் கோட்பாடானது அதன் தொடக்கத்தில் புத்த பகவானிடம் ஓர் ஆன்மீகச் செயல்வழியாகவே காணப்பட்டது. மகாத்மா காந்திதான் அதை ஒரு போராட்ட வழிமுறையாக மாற்றினார்.அதை அவர் தென்னாபிரிக்காவிலேயே முதலில் பரிசோதித்தார். அப்பரிசோதனைகளின் போது அவருக்கும் ரஷ்ய எழுத்தாளரான ரோல்ஸ்ரோயிற்கும் இடையிலான இடையூடாட்டங்கள் முக்கியமானவை.
ரோல்ஸ்ரோய் ஒரு மங்கோலியப் பிக்குவிடமிருந்து அகிம்ஸா மார்க்கத்தை கற்றுக் கொண்டதாகத் தெரியவருகிறது. ரோல்ஸ்ரோயும் காந்தியைப் போல தனது வாழ்வின் பிற்பகுதியை ஒரு சுயசோதனையாக மாற்றிக் கொண்டவர். இப்பரிசோதனைகளில் கிறீஸ்தவத்தின் செல்வாக்கும் உண்டு.

பௌத்தத்தின் செல்வாக்கும் உண்டு. காந்தி தென்னாபிரிக்காவில் சிறுகளத்தில் சோதித்த அரசியல் செயல்வழியை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு பெருங்களத்தில் பெருந்திரள் அரசியல் செயல்வழியாகப் பரிசோதித்தார்.

காந்தி 20ம் நூற்றாண்டின் முன் அரைப்பகுதியில் பரிசோதித்தவற்றைத்தான் மண்டேலா தென்னாபிரிக்காவில் 20ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் பரிசோதித்தார். காந்தியைப் போல மண்டேலா தொடக்கத்தில் ஓர் அறநெறிக் கோட்பாட்டாளனாக இருக்கவில்லை. அதிகபட்சம் அவர் ஓர் ஆயுதப் போராளியாகவே காணப்பட்டார். அவரிடம் தொடக்க காலங்களில் இடதுசாரிச் சாய்வே காணப்பட்டது. எனினும் கால்நூற்றாண்டுகால சிறைவாழ்வின் ஊடாக அவர் காந்தியத்தின் அடுத்த கட்ட உதாரணமாக மேலெழுந்ததாக ஓர் அவதானிப்பு உண்டு. ஆயுதப் போராட்டத்திலிருந்து அகிம்சா மார்க்கத்தை நோக்கிச் செல்லும் மக்கள் கூட்டங்கள் மண்டேலாவிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய உண்டு. அதே சமயம் மண்டேலாவை அவருடைய காலத்தின் பூகோள அரசியல் மாற்றங்களின் விளைவாகவும் விளங்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக கெடுபிடிப் போரின் முடிவையடுத்து ஏற்பட்ட ஒரு புதிய உலக ஒழுங்கை நோக்கிய மாற்றங்களின் விளைவாகவும் அவரை விளங்கிக் கொள்ள வேண்டும்.


 
மேற்கண்ட உதாரணங்களின் பின்னணியில் வைத்துப் பார்த்தால் ஈழத்தமிழர்களுக்கான ஒரு மாற்று அரசியல் செயல்வழி எனப்படுவது பிரதானமாக மூன்று தளங்களில் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. முதலாவது நாடாளுமன்ற அரசியல் மற்றும் தேர்தல் அரசியலுக்கூடாக, இரண்டாவது மக்கள் மைய செயற்பாட்டு அரசியல், மூன்றாவது பிராந்திய மற்றும் பூகோள மட்டத்தில் செய்யப்பட வேண்டிய ராஜதந்திர அரசியல்.

இம்மூன்று தளங்களைக் குறித்தும் ஓர் ஒட்டுமொத்தத் தரிசனத்தைக் கொண்ட பேராளுமைகளால்தான் ஒரு மாற்று அரசியலை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும். மாற்று அரசியல் எனப்படுவது வெறுமனே ஒரு தேர்தல் கூட்டு அல்ல. எனினும் தேர்தல் மூலம் ஓர் அதிகார மூலத்தை (power source) ஸ்தாபிக்க முடியுமென்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது.

ஜனநாயகப் பரப்பில் ஒரு மாற்று ஓட்டம் எனப்படுவது ஒரு மக்கள் சமூகத்தின் ஜனநாயக இதயத்தை மேலும் பலப்படுத்துகிறது. ஒரு பிரதான நீரோட்டத்திற்கு எதிரானதாகவோ அல்லது பிரதான நீரோட்டத்தின் போதாமைகள் காரணமாகவோ மாற்று ஓட்டம் உற்பத்தியாகிறது.

பெரும்பாலான ஜனநாயகப் பரப்புக்களில் பிரதான நீரோட்டம் எனப்படுவது பெருந்திரள் மக்களுக்குரியதாகவும் மாற்று ஓட்டம் எனப்படுவது சிறுதிரள் மக்களுக்குரியதாகவும் காணப்படுகிறது. இலட்சியவாதிகளும் கோட்பாட்டாளர்களும், நீதிமான்களும், தூய்மைவாதிகளும் பெரும்பாலும் மாற்று அணியைச் சேர்ந்தவர்களே. ஊரோடு ஒத்தோட மறுப்பவர்களும் மாற்று அணிக்குரியவர்களே. 'ஜனரஞ்சகத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் பொதுவாகப் பொருந்தி வருவதில்லை' என்று நம்புவோரும் மாற்று ஓட்டத்திற்கு உரியவர்களே. கலை இலக்கிய சினிமாப் பரப்புக்களில் மாற்று ஓட்டம் எனப்படுவது பெரும்பாலும் சிற்றோட்டம்தான். அது ஜனரஞ்சகத்தோடு அதிகம் ஒத்துப்போவதில்லை. ஊடகப்பரப்பிலும் மாற்று ஊடகம் எனப்படுவது பிரதான நீரோட்டத்தோடு அதிகம் பொருந்தி வருவதில்லை. இப் பூமியிலே தோன்றிய பெரும்பாலான மகத்தான சிந்தனையாளர்களும், சிந்தனைகளும் படைப்பாளிகளும், புரட்சியாளர்களும் தொடக்கத்தில் மாற்று அணிக்குள்ளிருந்து வந்தவர்களே.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை மிதவாத அரசியலிலும் மாற்று அணிகள் இருந்ததுண்டு. ஆயுதப் போராட்டத்தின் போதும் மாற்று அணிகள் இருந்ததுண்டு. இப்பொழுது ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னராக ஒரு மிதவாத காலகட்டம். இங்கு மாற்று அணியைப் பற்றி சிந்திப்பவர்கள் சிறு குழாத்தினரே. அவர்களுடைய சந்திப்புக்களும் சில நூறு பேர்களுக்குள் நடப்பவைதான். வரலாற்றில் எல்லா மாற்று அணிகளும் இப்படித்தான் தொடங்குகின்றன. எல்லாப் பெரு நதிகளும் ஒரு துளி நீரிலிருந்தே தொடங்குகின்றன. கலீல் ஜிப்ரான் தனது 'முறிந்த சிறகுகள்' என்ற நூலில் குறிப்பிடுவது போல 'இந்தப் பூமியிலுள்ள எந்த ஓரழகும் எந்த ஓர் உன்னதமும் மனிதர்களின் ஒரு யோசனை அல்லது ஓருணர்ச்சியிலிருந்து படைக்கப்பட்டவைதான்'

எனவே ஈழத்தமிழர்கள் மத்தியில் ஒரு மாற்று அணியைப் பற்றி சிந்திப்பவர்கள் மத்தியிலுள்ள பிரதான சவால் அந்த மாற்று அணி கனவுகளை நோக்கி யதார்த்தத்தை எப்படி வளைக்கப் போகிறது என்பதே. அதை எப்படி மக்கள் மயப்படுத்தப்போகிறது என்பதே. அதை மக்கள் மயப்படுத்துவதன் மூலம் எப்படி ஓர் அதிகார மூலமாக மேலெழப்போகிறது என்பதே. அப்படியொரு அதிகார மூலம் மேலெழும் போது மேற்சொன்ன மூன்று தளங்களைக் குறித்தும் முழுமையான ஒட்டுமொத்தத் தரிசனத்தைக் கொண்ட தலைமைகள் மேலெழுவார்கள்.

சம்பந்தர் நம்புகிறார். கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைத்தெடுப்பதில் அடிப்படையான வரையறைகள் உண்டு என்று. பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கத்தைப் பெற்ற ஒரு நாடாளுமன்றத்திற்கூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதென்றால் அப்படித்தான் சிந்திக்க வேண்டியிருக்கும். மாறாக நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள் மைய அரசியலைக் குறித்தும், ராஜதந்திரப் போரைக் குறித்தும் சரியான தரிசனங்கள் இருக்குமானால் வேறு விதமாகச் சிந்திக்க முடியும். எனினும் இப்பொழுது அதிகார மூலமாகக் காணப்படுவது சம்பந்தர், சுமந்திரன் அணிதான். மாற்று அணி ஒரு சிற்றோட்டமாகவே காணப்படுகிறது. தமிழ் மக்கள் மத்தியிலுள்ள அதிகார மூலத்திற்கு எதிராக அதிகரித்து வரும் அதிருப்திகளையும், கோபத்தையும் ஒரு மக்கள் சக்தியாக திரட்டவல்ல பொறிமுறைகளை மாற்று அணியானது இனிமேல்தான் கண்டு பிடிக்கவேண்டியுள்ளது. ஸ்தாபிக்கப்பட்ட சின்னங்களை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் வரையிலும் ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்ட நபர்களுக்காக காத்திருக்கும் வரையிலும் ஒரு மாற்று அணியானது அதன் சரியான பொருளில் மேலெழப் போவதில்லை. மாறாக சம்பந்தர், சுமந்திரன் அணிக்கு எதிராக அழுத்தக் குழுக்களாக அவை சுருங்கிவிடும் ஆபத்துக்களே உண்டு.

கடந்த எட்டாண்டு காலம் எனப்படுவது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பேரத்தை இழந்து செல்லும் ஒரு காலகட்டமாக இருக்கலாம். அதே சமயம் போலிகளையும், பொய்த் தேசியவாதிகளையும் நடிப்புச் சுதேசிகளையும் தோலுரித்துக் காட்டிய ஒரு காலகட்டம் இதுவெனலாம். குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னரான ஒரு காலகட்டம் எனப்படுவது மிகவும் கலங்கலான ஒரு காலகட்டமாகும். இனவாதம் மனித முகமூடியோடு தனது நிகழ்ச்சி நிரலை இடையூறின்றி முன்னெடுத்துச் செல்லும் ஒரு காலகட்டமாகும். ஒரு புறம் இலட்சியவாதிகள் சிறுதிரள் அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருக்க இன்னொரு புறம் காரியவாதிகள் பெருந்திரள் அரசியலில் அதிகார மூலங்களை ஸ்தாபித்துக் கொண்டே போகிறார்கள். ஒரு பலஸ்தீன விமர்சகர் தனது மக்களைப் பற்றிக் கூறியது இங்கு தமிழ் மக்களுக்கும் பொருந்தும். 'நாங்கள் அப்பத்தை எப்படிப் பங்கிடுவது என்பதைக் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அவர்களோ (யூதர்கள்) அப்பத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்'.

Sunday, 23 July 2017

மாற்றுத்தலைமை சாத்தியமா? (சமகாலப் பார்வை)

கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழரசுக் கட்சி, தன்னை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டு காரியங்களை முன்னெடுப்பதே மாற்றுத் தலைமை குறித்த சிந்தனைக்கு அடிப்படை காரணமாகும். கூட்டமைப்பைப் பதிவு செய்தால், தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு இல்லாமல் போய்விடுமே என்ற அச்சத்தின் காரணமாகவே தமிழரசுக் கட்சியினர் பதிவு விடயத்தில் முரண்பட்டிருக்கின்றனர்.தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அடுத்த கட்ட நிலைமை என்ன? – இந்தக் கேள்வி குறித்து சிந்திக்க வேண்டிய நிலைமையொன்று இப்போது உருவாகியிருக்கின்றது.

தமிழ் மக்களின் அரசியலின், அரசியல் இயங்கு தளத்தில் ஒரு வெற்றிடம் காணப்படுகின்றது. இந்த வெற்றிடம் நல்லாட்சி அரசாங்கம் உருவாகிய சில மாதங்களிலேயே தென்படத் தொடங்கிவிட்டது. ஆயினும், இப்போது அது, பளிச்சென பிரகாசிக்கத் தொடங்கியிருக்கின்றது.

மிதவாத அரசியல் கட்சியாகிய தமிழரசுக் கட்சியும், ஆயுதமேந்திப் போராடி, பின்னர் ஜனநாயக வழிக்குத் திரும்பிய ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளும் இப்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக அங்கம் வகிக்கின்றன. தமிழ்காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய இரண்டு மிதவாத கட்சிகளும் இப்போது கூட்டமைப்பில் இல்லை. கூட்டமைப்புக்கு வெளியில் அந்தக் கட்சிகள் இரண்டும் செயற்பட்டு வருகின்றன.

எதிர்ப்பு அரசியலில் தீவிரமாகச் செயற்பட்டு வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, இப்போது நல்லாட்சி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் ஓர் அரசியல் அமைப்பாகச் செயற்பட்டு வருகின்றது. அதேநேரம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியை முதன்மைக் கட்சியாகவும், தலைமைக் கட்சியாகவும் கொண்டிருக்கின்றது. ஆயினும், ஏனைய கட்சிகளுடன் அந்தக் கட்சி உள்ளக ஜனநாயக வழிமுறைகளில் நெருங்கிச் செயற்படுவதாகத் தெரியவில்லை. இதனால், அந்தத் தலைமையிடம் வெளிப்படைத்தன்மை இல்லை. கூட்டமைப்புக்குள் அந்தக் கட்சி சர்வாதிகாரத்துடன் நடந்து கொள்கின்றது.. ஏனைய கட்சிகளை அது சமமாக நடத்துவதில்லை என்பது போன்ற அதிருப்திகளும், குற்றச்சாட்டுக்களும் தமிழரசுக் கட்சி மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.

அதிருப்தியான உணர்வுகளைக் கொண்டிருக்கின்ற போதிலும், ஈ.பி.ஆர்.எல்.எவ். தவிர்ந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய ஏனைய கட்சிகள் அதுபற்றி வெளிப்படையாக கூட்டமைப்புத் தலைவர்களின் கூட்டங்களிலோ அல்லது கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டங்களிலோ கருத்துக்களை முன் வைப்பதில்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி மாத்திரமே வெளிப்படையாக கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றது.
இதனால், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியே கூட்டமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற கட்சி என்ற கண்டனத்திற்கும் கடுமையான விமர்சனத்திற்கும் ஆளாகியிருக்கின்றது. இந்தக் கட்சியின் கருத்துக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைப்பதற்காக திட்டமிட்டு முன்வைக்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பை, தனியானதோர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டபோது, தமிழரசுக் கட்சி அந்தக் கோரிக்கையை உள்ளூர விரும்பியிருக்கவில்லை. எனவே, கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய அந்தக் கட்சி, பதிவு கோரிக்கையை பெரிதுபடுத்தாமல், அப்போதைக்கு அப்போது சில சாக்கு போக்குகளைக் கூறி வந்தது. காலம் கடந்து கொண்டிருந்த போதிலும், கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவிழந்து போகவில்லை. அது வேகம் பெறத் தொடங்கியதையடுத்து, இலைமறை காயைப் போல கூட்டமைப்பைப் பதிவு செய்வதில்லை என்ற தனது நிலைப்பாட்டை தமிழரசுக் கட்சி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருந்தது.

கூட்டமைப்பை ஒரு வலுவான அரசியல் கட்சியாக உறுதியான கட்டமைப்புக்களுடன் கட்டியெழுப்பி, அதனை தேர்தல்கள் செயலகத்தில் தனியானதொரு கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்ட போதிலும், அந்த கோரிக்கை, கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சியினால் உரிய முறையில் கையாளப்படவில்லை. அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

மாற்றுத்தலைமைக்கான சிந்தனை

கூட்டமைப்பை தனியானதோர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உரிய முறையில் கவனிக்கப்படாததையடுத்து, கூட்டமைப்புக்கான மாற்றுத் தலைமை குறித்த சிந்தனை முன்னைய ஆட்சிக் காலத்திலேயே உருவாகியிருந்தது.

அது மட்டுமல்லாமல், தேர்தல் காலத்தில் ஆசனப் பங்கீடுகளில் ஏற்பட்டிருந்த இழுபறி நிலைமை, கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளில் தமிழரசுக் கட்சியை முதன்மைப்படுத்திய போக்கு, பொதுப் பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் ஏனைய கட்சிகளுடன் உள்ளார்ந்த விடயங்களைப் பகிர்ந்து கொள்ளாத போக்கு என்பனவற்றினால் கூட்டமைப்புத் தலைமையின் மீது அதிருப்தி ஏற்பட்டிருந்தது. அந்த அதிருப்தியே மாற்றுத்தலைமை குறித்த சிந்தனைக்கு வித்திட்டிருந்தது. ஆனாலும், மாற்றுத் தலைமையை உருவாக்குகின்ற செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கும் பணியில், கூட்டமைப்பின் தலைமை நிபந்தனையற்ற ஆதரவை வழங்க உத்தேசித்திருந்தது. ஆனாலும், ஏனைய கட்சிகள் அதனை முழுமையாக விரும்பியிராத நிலையிலேயே புதிய அரசாங்கத்திற்கான நிபந்தனையற்ற ஆதரவளிக்கப்பட்டிருக்கின்றது. புதிய அரசாங்கத்தை உருவாக்கிய சிற்பிகளாகிய ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் அப்போதைய ஜனாதிபதி தேர்தலின் ஜனாதிபதி வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மீது நம்பிக்கை இருக்கின்றது.

அவர்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்கள். அதற்காக அவர்கள் உறுதியாகச் செயற்படுவார்கள் என்று தலைவர் இரா.சம்பந்தன் அப்போது ஏனைய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரவாதம் அளித்திருந்தார். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஓர் அரசியல் தீர்வு காணப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையையும் அவர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் அனைவரும் பொறுமையாகவும், ஒற்றுமையாகவும் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார்.

ஆனால் அவருடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அது அவருக்கு ஏமாற்றத்தை அளித்திருந்ததா இல்லையா என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை. ஆனால், அவருடைய உறுதியான எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லையே என ஏனைய தமிழ்க் கட்சியினரும், தமிழ் மக்களும் ஏமாற்றத்தில் மூழ்கியிருந்தனர்.

தொடர்ந்து, தேவைக்கு அதிகமான அளவில் இராணுவத்தினர், தொடர்ந்து வடக்கில் நிலைநிறுத்தப்பட்டிருந்தமை, இராணுவத்தின் பிடியில் இருக்கும் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை, இதனால், இடம்பெயர்ந்த நிலையில் நீண்ட காலமாக சொந்த இடங்களில் மீள் குடியேற முடியாமல் இருக்கும் இடம்பெயர்ந்த குடும்பங்கள் தவிக்க நேர்ந்துள்ளமை, உத்தரவாதம் அளித்தும்கூட, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய கோரிக்கைகளுக்கு பொறுப்புக் கூறாமை போன்ற எரியும் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் நல்லாட்சி அரசாங்கத்தில் தீர்வு காணப்படாமையும் கூட்டமைப்பின் தலைமை மீதான அதிருப்தியை அதிகரிக்கச் செய்திருந்தது.

பாதிக்கப்பட்ட மக்களின் அதிருப்தியும் ஏமாற்றமும்

முன்னைய அரசாங்கத்தைப் போலல்லாமல், நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் அவலங்களையும், அவர்களின் மன ஓட்டங்களையும் புரிந்து கொண்டு அவர்களுடைய பிரச்சினைகளைப் படிப்படியாகத் தீர்த்து வைக்கும் என்ற எதிர்பார்ப்பும் முறையாக நிறைவேற்றப்படவில்லை. புதிய அரசாங்கத்தினால் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்ட இராணுவத்திடமிருந்த காணிகளின் விடுவிப்பு, இடம்பெயர்ந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கால எல்லை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

அதேபோன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தல் களத்தில் வேட்பாளராக இருந்தபோது வெளியிடப்பட்ட தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரத்தில் காணப்பட்டிருந்த காணாமல் போயுள்ள சிறுமிகள் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால அளித்த வாக்குறுதிக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தொடர்ந்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து, காணாமல் போனவர்களின் உறவினர்கள், வீதியில் இறங்கி நடத்தி வருகின்ற போராட்டம், கேப்பாப்புலவில் இராணுவத்தின் பிடியில் உள்ள தமது காணிகளை விடுவிப்பதற்காக, படை முகாம் எதிரில் இடம்பெயர்ந்த மக்கள் நடத்தி வருகின்ற போராட்டம் என்பவற்றுக்கு உரிய அரசியல் தலைமைத்துவத்தை வழங்கத் தவறியமையும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியிலான அதிருப்தியை அதிகரிக்கச் செய்துவிட்டது. போராட்டத்திற்கான தலைமையை வழங்காத போதிலும், அந்தப் பிரச்சினை குறித்து ஆக்கபூர்வமான முறையில் நடவடிக்கை எடுப்பதற்கு, அரசாங்கத்துடன் நல்லிணக்க முறையில் செயற்பட்டு வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை தவறிவிட்டதே என்ற அந்த மக்கள் கொண்டிருக்கின்ற ஏமாற்றமும்கூட, மறைமுகமாக மாற்றுத்தலைமைக்கான சிந்தனையைத் தூண்டிவிட்டுள்ளது.

அதேவேளை, மதச்சார்பற்ற நிலையில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தில் பகிரப்பட்ட இறையாண்மையுடன் கூடிய சமஷ்டி ஆட்சி முறையை உள்ளடக்கியதோர் அரசியல் தீர்வு என்பதே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரகடனமாகும்.

ஆனால், இப்போது புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கே மேன்மையான இடமளிக்கப்படும். அதில் எந்தவிதமான மாற்றமும் இருக்க மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார். இவ்வாறு பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் வழங்கப்படுவதை எவரும் எதிர்க்கவில்லை என குறிப்பிட்டுள்ள பிரதமர், அத்தகைய முதன்மை இடத்தை தலைவர் சம்பந்தன் எதிர்க்கமாட்டார் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டிருக்கின்றார்.

ஒற்றையாட்சியும் பௌத்த மதத்திற்கு மேன்மையான இடமும் புதிய அரசியலமைப்பில் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றிருக்கும் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உறுதிபட கூறியிருக்கின்றார்.

இதனால், தேர்தல் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலைமை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதனைத் தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை இந்த அரசியல் யதார்த்தத்தை அவர்களின் முன்னால் ஏற்றுக்கொள்வதற்குப் பின்னடித்து வருகின்றது. புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள், அது தொடர்பான பேச்சுக்கள் – கலந்துரையாடல்கள் முன்னேற்றகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டிருப்பதான தோற்றத்தையே கூட்டமைப்பின் தலைமை வெளிப்படுத்தியிருந்தது.

வளர்ச்சியை நோக்கிய மாற்றம்

புதிய அரசியலமைப்புக்கு பௌத்த மகாநாயக்கர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு வெளியிட்டதையடுத்து, ஒற்றையாட்சி மற்றும் பௌத்த மதத்திற்கான முதலிடம் என்பன குறித்து, அரச தலைவர்கள் பௌத்த சிங்கள தீவிரவாதிகளுக்கு சார்பான ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இதுவும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீதான அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளதுடன், மாற்றுத் தலைமைக்கான சிந்தனைக்கு உரமேற்றியிருக்கின்றது.

இவ்வாறு பல கோணங்களிலும் பல விடயங்களிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீதான அதிருப்தி மேலோங்குவதற்கான நிலைமைகள் ஏற்பட்டிருந்த போதிலும், வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையே, மாற்றுத் தலைமை குறித்த சிந்தனைக்கான செயற்பாட்டை முதன்முறையாக வீதிக்கு இழுத்து வந்திருந்தது.

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தீவிரமாக முன்னெடுக்கப்படுமேயானால், தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் ஏனைய மூன்று பங்காளிக்கட்சிகளும் பாராளுமன்றத்தில் தனித்து இயங்க நேரிடும் என்று அந்த மூன்று கட்சிகளும் பகிரங்கமாக எச்சரிக்கை செய்வதற்கு மாற்றுத் தலைமை குறித்த சிந்தனை போக்கே அடிப்படையாக அமைந்திருந்தது என்றே கூற வேண்டும்.

அதேநேரம், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை, வடமாகாண சபை உறுப்பினர்களான தமிழரசுக் கட்சியினர், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆளுநரிடம் கையளித்ததையடுத்து, இளைஞர் சமூகம் தமிழரசுக்கட்சிக்கு எதிராகவும், முதலமைச்சருக்கு ஆதரவாகவும் கிளர்ந்தெழுந்து பேரணி நடத்தியிருந்தது. பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கோரிக்கையை ஏற்று யாழ்நகரம் முழுமையாகக் கடையடைப்பு செய்து நாளாந்த நடவடிக்கைகளைப் புறக்கணித்திருந்தது. இவ்வாறு தமிழரசுக் கட்சிக்கு எதிரான உணர்வைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவதற்கும் மாற்றுத் தலைமை பற்றிய சிந்தனையே தூண்டுகோலாக அமைந்திருந்தது என்று கருதுவதற்கும் இடமுண்டு. மாற்றுத்தலைமைக்கான சிந்தனை என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயல் அரசியல் ரீதியான வலு குறைந்த போக்கின் காரணமாகவே எழுந்துள்ளது. போருக்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் முன்னேற்றத்தைக் காணவில்லை. மாறாக பிரச்சினைகள் அதிகரிக்கின்ற ஒரு போக்கே தோற்றம் பெற்றிருக்கின்றது.

வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகம் பற்றி தேர்தலின்போது கொள்கை விளக்கப் பிரகடனம் செய்துள்ள போதிலும், போருக்குப் பின்னரான காலப்பகுதியில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் குறித்து கூட்டமைப்பு தீவிர கவனம் செலுத்தவில்லை.

நெடுங்கேணி, வவுனியா, செட்டிகுளம் ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றம் அல்லது சிங்களக் கிராமங்களின் உள்ளடக்கமானது, இந்தப் பிரதேச சபைகளில் சிங்களப் பிரதிநிதித்துவத்தை இலக்காகக் கொண்டு அரசாங்கத்தினால் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இது பிரதேச சபைகளில் சிங்களப் பிரதிநித்துவத்தை உட்புகுத்துவதற்கான முயற்சியாகும்.

வவுனியா மாவட்டத்தில் தமிழ்ப் பிரதேச செலயகப் பிரிவுகளில் சிங்களக் கிராமங்களை உள்ளடக்குவதன் ஊடாக, வன்னி தேர்தல் தொகுதியில் அல்லது, வவுனியா தேர்தல் தொகுதியில் வரும் பொதுத் தேர்தல்களில், சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.

இந்த மாவட்டத்தில் ஏற்கனவே சிங்கள மக்களுக்கென தனியானதொரு பிரதேச செயலகப் பிரிவு இருக்கின்றது. அது முழுக்க முழுக்க சிங்கள மக்களுக்கே உரியதாகும். அந்தப் பிரதேச சபையில் சிங்கள பிரதிநிதிகளே அங்கம் வகிக்கின்றார்கள். அவ்வாறு இருக்கத்தக்கதாக இந்த மாவட்டத்தின் ஏனைய மூன்று தமிழ் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காகவே, சிங்கள மக்கள் வாழ்கின்ற கிராமங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளில் செயற்படுகின்ற அதேவேளை, அரசாங்கத்துடன் நல்லிணக்க அடிப்படையில் இணைந்து செயற்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை, தமிழர் பிரதேசங்களில் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் புத்தர் சிலைகள், பௌத்த விகாரைகளை அமைப்பதன் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற மத ரீதியான ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் என்பவற்றில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழரசுக் கட்சி, தன்னை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டு காரியங்களை முன்னெடுப்பதே மாற்றுத் தலைமை குறித்த சிந்தனைக்கு அடிப்படை காரணமாகும். கூட்டமைப்பைப் பதிவு செய்தால், தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு இல்லாமல் போய்விடுமே என்ற அச்சத்தின் காரணமாகவே தமிழரசுக் கட்சியினர் பதிவு விடயத்தில் முரண்பட்டிருக்கின்றனர்.

கூட்டமைப்பின் தலைமை மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியும், அதன் விளைவாக எழுந்துள்ள மாற்றுத் தலைமை குறித்த சிந்தனையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கான ஆதங்கத்தின் வெளிப்பாடே அல்லாமல், கூட்டமைப்பை இல்லாமல் செய்வதை நோக்கமாகக் கொண்டதல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும், தமிழ் மக்களின் ஒன்றிணைந்த அரசியல் தலைமையையும் இல்லாமல் செய்வதை எவரும் இலக்காகக் கொள்ளவில்லை. கூட்டமைப்பும் கூட்டமைப்பின் தலைமயும் இறுக்கமான ஒரு கட்டமைப்பாக வினைத்திறன் மிக்க வகையில் செயலாற்ற வேண்டும் என்ற ஆதங்கத்தையே இ ்த திருப்தி உணர்வுகளும், மாற்றுத் தலைமைக்கான சிந்தனையும் வெளிப்படுத்தியிருக்கின்றன.

எனவேதான் தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அடுத்த கட்ட நிலைமை என்ன என்ற கேள்வியும், அதனையொட்டிய சிந்தனையும் இப்போது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.


செல்வரட்னம் சிறிதரன்